என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    • தமிழ் நாட்டில் தொழில் புரட்சியை ஏற்படுத்தினார்.
    • இலவசக் கல்வித் திட்டம் கொண்டுவந்து பள்ளிக் கூடம் பார்த்திராத ஏழை எளிய மக்களுக்கெல்லாம் கல்விக்கண் திறந்தார்.

    இன்றைய அரசியல் எப்படியெல்லாமோ நடைபோட்டுக்கொண்டிருக்கிறது. ஆட்சியில் இருப்பவர்களில் பெரும்பாலானோர் மனசாட்சியை உதறிவிட்டு, லஞ்சம், ஊழல், பித்தலாட்டம் என்று தைரியமாய் வலம் வந்துகொண்டிருக்கிறார்கள். இந்த மோசமான அரசியலுக்கிடையேதான் இந்த ஆண்டும் ஜூலை 15 என்ற புண்ணியதினம் வருகிறது.

    புண்ணியதினம் என்றால் பூமியில் யாராவது புண்ணியசீலர்கள் அவதரித்திருக்கவேண்டும் அல்லது அதிசயங்கள் நிகழ்ந்திருக்கவேண்டு மல்லவா...? ஆமாம்! 19௦3ஆம் ஆண்டுதான் அந்த அதிசயம் நிகழ்ந்தது!

    பூமியில் புண்ணிய சீலராகப் பெருந்தலைவர் காமராஜர்தான் அவதாரம் செய்தார்! அவர் பிறந்ததனால் தான் அந்த தினமான இந்தக் கல்வித் திருநாள் புண்ணிய தினமாக அமைகிறது!

    இன்னும் நூறு ஆண்டுகளுக்குப்பின் வரும் தலைமுறையிடம், கர்மவீரர் காமராஜர் என்ற ஒரு மகான் இந்தத் தமிழ்நாட்டில் இருந்தார்... இந்த நாட்டை ஒன்பது ஆண்டுகள் ஆண்டார்...பதினாரு அணைகளும், மேல்கட்டளை கலவையும், தோப்பியார் ஏரி, மீனக்கரை ஏரி மற்றும் பெரியாறு நீர்மின் திட்டங்களும் அந்த ஒன்பது ஆண்டுகால ஆட்சியில் செய்தார்...

    இலவசக் கல்வித் திட்டம் கொண்டுவந்து பள்ளிக் கூடம் பார்த்திராத ஏழை எளிய மக்களுக்கெல்லாம் கல்விக்கண் திறந்தார்...

    பட்டினிக் கொடுஞ் சிறைக்குள் கிடந்தப் பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவுத் திட்டம் கொண்டுவருவதற்குக் கஜானாவில் பணமில்லை என்ற போது, ஊர் ஊராக இறங்கிப் பிச்சை எடுத்தாவது மக்களிடம் செல்வேன் என்றவர்...சமூகநீதியை நிலைநாட்ட, கல்வி கற்கும் பள்ளிகளில், மாணவர்களிடையே, உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்றபாகுபாடு களைந்திட இலவசச் சீருடை தந்தார்...

    தமிழ் நாட்டில் தொழில் புரட்சியை ஏற்படுத்தினார்... "முடியாது... சட்டத்தில் இடமில்லை..." என்ற பேச்சுக்கே இடமில்லை... மக்களுக் காகத்தானே சட்டம்...? அப்புறம் முடியாதுன்னா என்ன அர்த்தம்...? சட்டத்தை மாற்றுவோம்..." என்று மக்களாட்சி நடத்திய மாமனிதர்... மாமேதை... கறை படாத கரங்களுக்குச் சொந்தக்காரர்... களங்கமே இல்லாத மனத்திற்குச் சொந்தக்காரர்... ஏழைகளுக்குச் சொந்தக்காரர்...

    வாழும்போதும், ஆளும்போதும் வங்கிக் கணக்கில் 9௦௦ ரூபாயும், சாகும்போது சட்டைப்பையில் 9௦ ரூபாயும் (15௦என்பாரும் உண்டு) வைத்து விட்டுப் போனவர்... தன்னைப் பெற்ற விதவைத் தாயைக்கூட தன்னோடு வைத்துக்கொள்வது நியாயமல்ல வென்று வாழ்ந்து மறைந்தவர்...

    இந்த மண்ணில்தான் பிறந்தார்... இந்த மண்ணில்தான் தன் கால்களால் நடந்தார்... இந்தத் தமிழ் நாட்டைத் தனக்கு முந்தியும்சரி... பிந்தியும்சரி... எவருமே செய்யாத புனித ஆட்சியால் காத்தார் என்று சொன்னால் "அப்படியா...? இது நடந்திருக்குமா...? இப்படி ஒரு மனிதரால் வாழமுடியுமா... அல்லது ஆளத்தான் முடியுமா...?!" என்று கேட்பார்கள் என்பது நிச்சயமான ஒன்றாகும்.

    காமராஜரைப் பற்றிக் கற்பனையாகச் சொல்லப்படும் ஒரு கதையைச் சொன்னால் இந்த இடத்திற்குச் சரியாக இருக்கும் என்பதால் இந்தக் கதையைச் சொல்கிறேன்.

    1975ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம், இரண்டாம் தேதி, எமலோகத்தில் தர்பார் நடந்துகொண்டிருக்கிறது. எமதர்மராஜன் தன் சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கிறான். சித்திரகுப்தன் ஏடெடுத்து ஒவ்வொரு பெயராகப் படிக்கிறான். பெயர் படிக்கப்படிக்க எமகிங்கரர்கள் பூலோகத்திலிருந்து பிடித்து வந்த மனிதர்களைக் கொண்டு வந்து எமனுக்குமுன் நிறுத்துகிறார்கள்.

    முதலாவதாக ஒரு பால்க்காரனைக் கொண்டுவந்து நிறுத்துகிறார்கள். எமதர்மராஜா தனது சிம்மா சனத்தைவிட்டு எழுந்து நிற்கிறார்... பூவுலகில் வாழ்வை முடித்துக்கொண்டு வரும் ஆத்மாக்களுக்கு எமன் வழக்கமாகச் செய்யும் சம்பிரதாய வரவேற்பு இது. எழுந்த எமதர்மராஜா, சித்திரகுப்தனைப் பார்க்கிறார்.

    கலைமாமணி தாமரை செந்தூர்பாண்டி

    கலைமாமணி தாமரை செந்தூர்பாண்டி


    சித்திரகுப்தன், "பிரபோ... இவன் மனசாட்சி இல்லாத ஒரு பாவி! இவன், பால் விற்கிறேன் என்று தண்ணீரில் பாலைக் கலந்து விற்றுக் கொள்ளையடித்தவன். கன்றுக்குப் பால்கொடுத்தால் காசு போய்விடும் என்று வைக்கோலில் கன்றுக்குட்டிப் பொம்மை செய்து, பசுவை ஏமாற்றிப் பாலைக்கறந்த பாவி. இவனை விட்டுவிடாதீர்கள் பிரபோ..." என்றான்.

    இதுவரை நின்றுகொண்டிருந்த எமதர்மராஜா தன் சிம்மாசனத்தில் அமர்ந்து மீசையைத் தடவியபடியே, "இவனை நரகத்தில் வைத்துக் கொடுமைப்படுத்துங்கள்...!" என்று கட்டளையிட்டார்.

    அடுத்தவன் வந்தான். அவனுக்கும் சம்பிரதாய மரியாதையும் தந்து, பாவக்கணக்குப் பார்த்துத் தண்டனையும் தந்தார். இப்படியே தர்பார்களை கட்டிக்கொண்டிருந்தபோது ஒருவன் கம்பீரமாகக் கொண்டு நிறுத்தப் பட்டான். சம்பிரதாய மரியாதைப்படி எழுந்துநின்ற எமதர்மராஜவிடம், "பிரபோ... இவன் தமிழ்நாட்டிலிருந்து தூக்கிவரப்பட்ட அரசியல்வாதி..." என்று சித்திரகுப்தன் சொன்னதுதான் தாமதம்... எழுந்துநின்ற எமதர்மன் அவசர அவசரமாகத் தன் சிம்மாசனத்தில் அமர்ந்து இருபுறக் கைப்பிடிகளையும் கெட்டியாகப் பிடித்துக் கொண்டார்.

    "பிரபோ, இவன் பதவியிலிருந்த போது லஞ்சம், ஊழல், பெண் கடத்தல், மண் கடத்தல், கள்ளச்சாராயம் காய்ச்சல், ஏழை எளியவர்கள் சொத்துக்களை அபகரித்தல் என என்னவெல்லாம் அயோக்கியத்தனம் பூலோகத்தில் உண்டோ... அத்தனையும் செய்தான். இவனைப் பிடித்து வருவதற்குள் மூச்சு வாங்கிவிட்டது!" என்று மூச்சிறைக்கச் சொன்னான் சித்திரகுப்பதன்.

    எமதர்ம ராஜா அவனுக்குக் கடுமையான நரகத்தைக் கொடுத்து விட்டு ஆசுவாசமானார்.

    உடனே சித்திரகுப்பதன் எமதர்மரைப் பார்த்து, "பிரபோ, இவனைப்பார்த்ததும் தாங்கள் எதற்காகத் தங்கள் சிம்மாசனத்தில் அவசர அவசரமாக அமர்ந்து, இருபக்கக் கைப்பிடிகளையும் இருக்கமாகப் பிடித்துக்கொண்டீர்கள்?" என்று கேட்டான்.

    "சித்திரகுப்தா அவன் அரசியல்வாதி...அதுவும் தமிழ்நாட்டு அரசியலில் மூழ்கித் திளைத்தவன். நான் சிம்மாசனத்தைவிட்டு எழுந்து நிற்பதைக் கண்டால் அவன் ஓடிவந்து என்னைத்தள்ளிவிட்டுவிட்டு சிம்மாசனத்தில் அமர்ந்துகொள்ள மாட்டான் என்பது என்ன நிச்சயம்...? அதனால்தான் அவசர அவசரமாக அமர்ந்து கொண்டேன்!" என்றார். சித்திரகுப்பதன் உள்ளிட்ட அவையோர்கள் விழுந்து விழுந்து சிரித்தார்கள்.

    தர்பார் தொடர்ந்தது. பலர் வந்தார்கள்... தண்டனையோ... சொர்க்கமோ... கிடைத்ததைப் பெற்றுக் கொண்டு சென்றார்கள். அப்பொழுதுதான் ஆறரை அடி உயரத்தில், கருப்பு நிறத்தில், கதர் வேட்டியும், சட்டையும் அணிந்து ஆஜானுபாகுவாய் கர்மவீரர் வந்து நிற்கிறார்! அவரைக்கண்டதும், எமதர்மராஜா முகம் மலர எழுந்து நிற்கிறார். முறைப்படி அவரது கணக்கு படிக்கப்படுகிறது. வழக்கமாக அமர்ந்துகொள்ளும் எமதர்மன் நின்றுகொண்டே காமராஜருக்கான சொர்க்க வாசலைத் திறந்து விடச்சொல்லி உத்தரவு பிறப்பித்து விட்டும், உட்காராமல் நின்று கொண்டிருக்கிறார்!

    அந்த அதிசயத்தைகண்ட சித்திர குப்பதன், "பிரபோ, இது என்ன அதிசயம்...? அரசியல்வாதியைக் கண்டதும் அவசர அவசர மாகத் தங்கள் இருக்கையில் அமர்ந்து கொள்ளும் தாங்கள்... காமராஜர் என்ற முன்னாள் தமிழக முதலமைச்சரின் கணக்கைப்படித்ததும், உட்காரவேண்டிய தாங்கள் உட்காராதது மட்டுமல்ல... அவர் சொர்க்கத்துக்குப் போய்விட்ட பின்னும் நின்றுகொண்டிருப்பதன் காரணத்தை இந்த சபைக்குச் சொல்வீர்களா...?" என்று பவ்வியமாகக் கேட்டான்.

    கண்கலங்கிப்போன

    எமதர்மன், "வந்து விட்டுப்போன காமராஜர் தமிழகத்தை ஒன்பது ஆண்டுகள் ஆண்டு, யாருமே செய்ய முடியாத காரியங்களைச் செய்துவிட்டு, இந்தப் பதவியும், நாற்காலியும் எனக்கு வேண்டாம் என்றுத் தூக்கி எறிந்துவிட்டுப்போன மாமனிதர், நான் நின்றுகொண்டிருந்தாலாவது எனது சிம்மாசனத்தில் வந்து உட்கார்ந்து எழுந்து விடமாட்டாரா... அப்படி உட்கார்ந்தால் இந்த எமதர்மனின் சிம்மாசனம் பெருமை பெற்றுவிடாதா என்ற நப்பாசையில்தான் நான் நின்றுகொண்டே இருந்தேன்.

    ஆசைகளைத் துறந்த அவதாரப் புருசர்கள்கூடத் தன் தாய்மார்களைத் துறக்கவில்லை. ஆனால் இந்தக் காமராஜர் ஒருவர்தானே கணவனை இழந்தத் தன் தாயைக்கூடத் தன்னோடு வைத்துக்கொண்டால் தவறாகிவிடும் என்று தனித்திருந்துத் தியாக வாழ்க்கை வாழ்ந்து வந்திருக்கிறார். அவர் என் இருக்கையில் இருக்க நான் கொடுத்து வைக்கவில்லையே என்று வருத்தப்படுகிறேன்...!" என கண்கலங்கினார் எமதர்மன்.

    இது கற்பனையில் எழுந்த கதைதான். ஆனால் காமராஜருக்கு அத்தனை தகுதிகளும் இருந்தன என்பதை இந்த உலகம் உவந்து ஏற்றுக் கொள்ளுமல்லவா...?

    அன்றைக்கு விருதுப்பட்டி என்றழைக்கப்பட்ட விருதுநகரில் பிள்ளைப் பருவத்தில் திண்ணைப் பள்ளியிலும், ஏனாதிநாயனார் வித்யாசாலையிலும், அதற்குப்பின் சத்திரிய வித்தியாசாலையிலும் என மூன்று பள்ளிகளில் சேர்ந்து படித்த காமராஜர் ஆறாம் வகுப்பில் பள்ளிக்குப் போகாமல் நின்றுவிட்டார்.

    ஆனால் 'பிடியரிசிப்பள்ளி' என்றழைக்கப்பட்ட சத்திரிய வித்யாசாலையில் பயின்றதால், அங்கு வீடுவீடாகத் தரும் பிடியரிசியைக் கொண்டு மாணவர்களுக்கெல்லாம் மதிய உணவு வழங்கப்பட்டது பசுமரத்தாணிபோல மனதில் பதிந்து விட்டிருந்ததும், பிற்காலத்தில் மதிய உணவுத் திட்டம் கொண்டு வருவதற்கு முன்னோடியாக அமைந்துவிட்டது.

    பள்ளியில் படிக்கும்போதே காமாச்சி என்ற காமராஜருக்கு அறிவுக் கூர்மையும், நகைச்சுவை உணர்வும் நிறைந்திருந்தது. அறிவும், ஆற்றலும் நிறைந்தத் தமிழாசிரியர் ஒருவர் அங்குப் பணியாற்றினார். தலையில் முண்டாசும், வெள்ளை நிற ஜிப்பாவும், தும்பைப்பூ நிறத்தில் வேட்டியும் கட்டி அவர் வகுப்புக்குள் நுழைகின்றபோதே மாணவர்கள் அனைவரும் எழுந்துநின்று வணக்கம் சொல்லி அமருவார்கள். வகுப்பறைக்குப்பதில் மரத்தடியில் மாணவர்கள் அமர்ந்து பாடம் கேட்டுக் கொண்டிருந்தார்கள்.

    தமிழாசிரியர் தீவிர நாத்திகராயிருந்ததால் அவ்வப்போது கடவுள் மறுப்புப்பற்றி மாணவர்களிடையே பரப்புரை செய்யும் ஆர்வத்தில் பேசுவார். ஒருநாள் பாடம் நடத்திக்கொண்டிருந்தத் தமிழாசிரியர், மாணவர்களிடம்,

    "உங்களுக்கு மேலே என்ன தெரிகிறது...?" எனக் கேட்டார்.

    "மரக்கிளை தெரிகிறது ஐய்யா..."

    "அதற்கு மேலே...?"

    "கொப்பும், குலையும் தெரிகிறது..."

    "அதற்கும் மேலே...?"

    "ஆகாயம் தெரிகிறதய்யா...?"

    "அதற்கும் மேலே...?"

    "ஒன்றும் தெரியவில்லை ஐயா..."

    "அங்கே கடவுள் தெரியவில்லையா...?"

    "தெரியவில்லை ஐயா..."

    "தெரியவில்லை என்றால் கடவுள் இல்லை என்றுதானே அர்த்தம்...?"

    சட்டென காமாச்சி எழுந்து நின்றார். "தமிழய்யா நானும் கொஞ்சம் கேள்வி கேட்கட்டுமாய்யா...?" என்றார்.

    "சரி... என்ன கேட்கிறாய் என்றுதான் பார்ப்போமே... கேள்..."

    "நமது தமிழய்யாவிற்குத் தலையில் என்ன தெரிகிறது...?" மாணவர்களிடம் கேட்டார் காமாச்சி என்ற காமாராஜர்.

    "தமிழய்யாத் தலையில் தலைப்பாகை தெரிகிறது...!" அனைத்து மாணவர்களும் கோரசாகச் சொன்னார்கள்.

    "தலைப்பாகைக்குள் என்ன தெரிகிறது...?"

    "ஆமாம்... தலையும், நெற்றியும் நன்றாகத் தெரிகிறது...!" மாணவர்கள்.

    "தமிழய்யா தலைக்குள் மூளை தெரிகிறதா...?"

    "தெரியவில்லை... தெரியவில்லை..."

    "தெரியவில்லை என்றால் தமிழய்யாதலையில் மூளை இல்லை என்று தானே அர்த்தம்...?" என்று கேட்டதும், அனைத்து மாணவர்களும் விழுந்து விழுந்து சிரித்தார்கள். தமிழாசிரியர் வெட்கிப்போனாலும், காமராஜரின் புத்திக்கூர்மையைப் பாராட்டினார். அதற்குப்பின் மாணவர்களிடம் குதர்க்கமான பரப்புரைகள் செய்வதை விட்டுவிடவும் செய்தார்.

    விருதுநகரையே ஆச்சரியப்பட வைத்த இளம் பயிராகத் திகழ்ந்தவர் சிறுவயது காமராஜர் என்றால், தனது பதினாறாவது வயதிலேயே... அதாவது 1919-ம் ஆண்டு நடந்த ரவுலட் சட்ட எதிர்ப்புக்கு காந்தியடிகள் விடுத்த அழைப்பை ஏற்று முழுநேர அரசியலில் தன்னை இணைத்துக்கொண்டு, ஒன்பதரை ஆண்டுகள் சிறைவாசம் செய்தவர் பெருந்தலைவர் காமராஜர்!

    நாட்டிற்குச் சுதந்திரம் வந்தபின்பு திருமணம் செய்து கொள்ளலாம் என்றவர், நாடு சுதந்திரம் அடைந்தபின் திருமணம் செய்துகொள்ளும் வயது கடந்துவிட்டது என்று சொல்லித் திருமணமே செய்துகொள்ளாமல் தனிமரமாய் வாழ்ந்த உத்தமர்.

    ஜவஹர்லால் நேரு மறைந்த 1964ஆம் ஆண்டு, நேருவுக்குப்பின் இந்தியப் பிரதமர் யார் என்ற இமாலயக்கேள்வி உலக நாடுகளிலெல்லாம் கேட்கப்பட்ட போது "இதோ...லால் பகதூர் சாஸ்திரி..." என்று இமாலயக் கேள்விக்கு விடை தந்தவர் நமது காலா காந்தி... கர்மவீரர் காமராஜர் ஒருவர்தான்!

    லால்பகதூர் சாஸ்திரி மறைந்ததும் நேருவின் மகள் இந்திராகாந்தியை 1966-ல் பிரதமராக்கியவரும் நமது கர்மவீரர்தான்! அதனால் நாடே அவரை 'கிங் மேக்கர்' என்று கொண்டாடியது!

    ஆனால் ஒன்று...எந்த இந்திராகாந்தியை பிரதமராக்கினாரோ அந்த இந்திராகாந்தி தான் அவருக்கு எதிரானார்! காங்கிரஸ் கட்சியை இரண்டாக உடைத்தார்! ஆனைக்கும் அடி சறுக்கும் என்பது போல் காமராஜர் நல்லது செய்கிறோம் என்று எண்ணிச் செய்த இந்தக் காரியம்தான் அவரின் உயிருக்கே உலையாகியது, மக்களுக்கெல்லாம் பெரும் இழப்பாக முடிந்தது என்பதே உண்மை! ஆனால்...காமராஜர் கடவுளாகிவிட்ட ஒரு மாமனிதர் என்பதுதான் நிஜம்!

    "ஒரு தீர்க்கத்தரிசியை நேசிப்பதைப் போல் உன்னை நேசிக்கிறேன்..

    உன்னால்தான் முடிந்தது தாயையும் பார்க்காமல் நாட்டைப் பார்ப்பதற்கு!

    உன் கையில் தராசு! இவர்கள் கையிலோ சூட்கேஸ்!

    ஆமாம்... நீ கல்விக்கண் திறந்தாய்! இவர்களோ கள்ளுக்கடை திறந்தார்கள்!

    நேரு குடும்பத்தின் மீது நீ பாசம் வைக்காதிருந்தால் இந்தியாவின் பரிமாணமே வேறு!

    காந்தியோ சிரிக்கும் நெருப்பு! நீ சிரிக்கத்தெரியாத நெருப்பு!

    பெரியாரின் பல்கலைக் கழகத்தில் பச்சைத் தமிழன் எனும் பட்டம் பெற்றவனே!

    இன்று நீ இங்கிருந்தால் இங்கிருக்கும் காய்ந்த தமிழர்களைக் கண்டித்திருப்பாய்!

    நீ நாடியிருந்தால் ஒரு தமிழன் பிரதமராகி இருக்க முடியும். நீதான் நாடாராயிற்றே!

    மணிமுடி உன்முன் வைக்கப்பட்டது. ஆனால் நீ காளிக்குத் தலை வெட்டித்தந்த கபாலிகனாகவே காலத்தை முடித்தாய்!"

    என்று கவிஞர் மு.மேத்தாவும்,

    "பெருந்தலைவ! இன்றைக்கு உன் பிறந்தநாள் –

    கொள்கைக் குன்றுக்கு எங்கணும் திருவிழா!

    விருதையில் பிறந்த வீரனாய் வளர்ந்தாய்

    சரிதையில் நிறைந்த தலைவனாய் நின்றாய்!

    சிறையின் கொடுமையும், சித்திர வதையும் சிரித்தமுகத்துடன் ஏற்ற தியாகி!

    கதராடை மேனிதனை அலங்கரிக்கும்

    கதறுகின்ற ஏழைகளைக் கரம் அணைக்கும்.

    தனி மனிதன் வாழ்வல்ல உன் வாழ்வு...

    தன்மானச் சரித்திரத்தின் அத்தியாயம்!

    'குணாளா! குலக்கொழுந்தே!' என்று பண்பின்

    மணாளர் எங்கள் அண்ணன் உனை அழைத்தார்.

    'பச்சைத் தமிழன்' எனப் பகுத்தறிவுத் தந்தை

    இச்சையுடன் உன் உச்சி முகர்ந்தார்.

    'கறுப்புக் காந்தி'யென உன்னை – இந்தக்

    கடல்சூழ் நாடு கைகூப்பித் தொழுத தன்றோ!"

    என்று கலைஞர் கருணாநிதியும் கூறியிருக்கும் வார்த்தைகள் இந்த மண்ணில் உதித்த மாவீரர் காமராஜரின் வரலாற்றிற்குச் சிறு துளி மழை என்பேன் நான்!

    • 9 வகையான உடற்பயிற்சிகள் உள்ளது.
    • நாம் ஒரு நாள் கூட உடற்பயிற்சியை தவற விட மாட்டோம்.

    அன்பார்ந்த வாசகர்களே, உடற்பயிற்சி என்பது ஒரு கலை. இந்த கலையை ஒரு தவமாக செய்தால், நமது உடலில் வாதம், பித்தம், கபம் சமன்பட்டு, நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கி ஆரோக்கியத்தை கொடுக்கும்.

    நாம் எளிய முறை குண்டலினி யோக பயிற்சியை செய்யும் போது நம் உடலில் உள்ள உயிர் ஆற்றல் மையங்கள் அனைத்தும் சீராக இயங்கும். வேதாத்திரி மகரிஷி அவர்களால் உருவாக்கப்பட்ட இந்த உடற்பயிற்சியில் 9 வகையான உடற்பயிற்சிகள் உள்ளது. அவைகள் என்னென்ன, அவை எத்தனை உயிர் ஆற்றல் மையங்கள் என்றழைக்கப்படும் வர்ம புள்ளிகளோடு தொடர்பு உடையது என்பதை பார்த்தால், நாம் ஒரு நாள் கூட உடற்பயிற்சியை தவற விட மாட்டோம்.

    வ/எ பயிற்சியின் தொடர்பு கொள்ளும்

    பெயர் வர்ம புள்ளிகள்

    1 கை பயிற்சி 9

    2 கால் பயிற்சி 12

    3 நரம்பு தசை நார் 8

    மூச்சு பயிற்சி

    4 கண் பயிற்சி 5

    5 கபாலபதி 1

    6 மகராசனம் பாகம் 1,2 37

    7 மசாஜ் 30

    8 14 புள்ளி அக்கு பிரஷர் 6

    9 உடல் தளர்த்தல் 0

    108

    பயிற்சிகள் ஒன்று முதல் 8 வரை, வர்ம புள்ளிகள் அனைத்தும் இயக்கம் பெறும். பயிற்சி ஒன்பதில் வசியக் கலை இடம் பெற்றுள்ளது. இந்த பயிற்சிகளை நாம் தினமும் செய்தால் உடல் சார்ந்த பிரச்சனைகளை சரி செய்து கொள்ள முடியும்.

    ஆனால் நமக்குள் ஒரு வைராக்கியம் இருக்க வேண்டும். ஒரு நாள் நான் உடற்பயிற்சி செய்யவில்லை என்றால், ஒரு வேலை உணவு உண்ண மாட்டேன் என்று உறுதி மொழி எடுத்து கொள்ள வேண்டும். ஏனென்று சொன்னால் பட்டினத்தார் நோயை பற்றி நமக்கு தனது பாடலிலே எச்சரிக்கை கொடுக்கிறார்.

    "தாயாரும் மங்கையரும் கைவிட்டு தாழ்ந்தனபின்

    நான் யார் நீ யார் எனப்பகவர்

    அந்நேரம் ஒரு நோயாரும் வந்து குடி கொள்வர்

    கொண்ட நோயாரும், நீ யாரும், ஒரு பாயாரும் வேறேது நட்பாம் உடலே"

    நாம் உடல் ஆரோக்கியத்தோடு இருக்கும் வரை தான் உறவுகள் எல்லாம் நம்மோடு மகிழ்ச்சியாக இருக்கும். ஆனால் நமக்கு ஒரு நோய் வந்துவிட்டால், நமது உறவுகள் கூட சில மாதங்கள் தான் அன்பாக நமக்கு சிகிச்சை அளிப்பர். பிறகு அவர்களுக்கே ஒரு சலிப்பு வந்துவிடும். கடைசியில் நமக்கு உறவு என்னவேன்றால், வந்த நோய், நாம், நாம் படுக்கும் பாய் இந்த மூன்றுக்கும் தான் உறவு இருக்குமே தவிர வேறு யாரும் நம்மோடு இருக்க மாட்டார்கள்.

    ஏனென்றால் என்ன தான் பாசம் இருந்தாலும், பொருளாதார வசதி இருந்தாலும், நம்மை, நம் உறவுகள் நல்ல மருத்துவமனையில் சேர்ப்பார்கள், பணம் செலவு செய்வார்கள், கண் விழித்து உடன் இருந்து சேவை செய்வார்கள்.

    ஆனால் எந்த உறவுகளாக இருந்தாலும், நம் நோயை, அவர்களால் பங்கு எடுத்து கொள்ள முடியாது. இதை புரிந்து கொண்டு, நமது உடல் மீது அக்கறை எடுத்து கொள்ள வேண்டும். அதற்கான நல்ல உடல் ஆரோக்கியத்திற்காக இறைவனிடம் வேண்டிட வேண்டும். ஆனால் நாம் இதை விட்டுவிட்டு பொருள் சார்ந்த தேவைகளை பற்றி இறைவனிடம் வேண்டுகிறோம்.

    ஆனால் மகான்கள் கூறுவது, "வேண்டுதல் வேண்டாமை நன்று"என்கிறார்கள். இது நமக்கு புரிய வேண்டும் என்றால், ஒரு சிறு கதைக்கு செல்வோம். ஒரு நாட்டில் ஒரு ராஜா சிறப்பாக ஆட்சி செய்து வந்தார். ஒரு நாள் இரவு தனது ராஜ்யத்தில் உள்ள மக்கள் எல்லாம் எப்படி வாழ்கிறார்கள் என்பதை அறியமாறு வேடத்தில் நகர்வலம் சென்றார். தனது ராஜ்யம் அமைதியாகவும் மகிழ்ச்சியாகவும் உள்ளதை பார்த்து சந்தோஷம் அடைந்தார்.

    அரண்மனை அருகே வரும் சமயம், ஒரு வயதான முதியவர், குளிரில் நடுங்கி கொண்டே உறங்கி கொண்டு இருந்தார். இதை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த ராஜா அவர் அருகில் சென்று தனது அங்கியை அவர் மேல் போர்த்தினார். சிறிது நேரம்அந்த முதியவர் உறங்குவதை பார்த்த ராஜா மகிழ்ச்சி அடைந்தார். சிறிது உறக்கம் கலைந்தவுடன் முதியவர் எழுந்து, தன் மீது போர்வை இருப்பதையும், ஒருவர் நிற்பதையும் கண்டு மிரண்டு எழுந்தார்.

    உடனே ராஜா, தன்னை முதியவரிடம் அறிமுகம் செய்து கொண்டு, அவரின் ஏழ்மையை நினைத்து வருந்தி, அடுத்த நாள், தன்னை அரசவையில் சந்திக்க சொல்லி, அடையாளமாக தனது அந்த போர்வையை அவரிடமே கொடுத்து விட்டு சென்றார்.

    மறுநாள் முதியவர் அந்த போர்வையோடு அரசவைக்கு வந்தார். உடனே ராஜா உன்னுடைய ஏழ்மையை கண்டு மிகவும் வருத்தம் அடைந்தேன். எனவே நீ என்னிடம் கேட்பது ஒன்றாக இருக்க வேண்டும், எதை வேண்டுமானாலும் கேள் என்று கூறினார்.

    கி. சௌமித்ரன், பொன்னி சௌமித்ரன்

    கி. சௌமித்ரன், பொன்னி சௌமித்ரன்

    இந்த இடத்தில் நாமாக இருந்தால் ராஜாவிடம், வீடு, நகை, பணம், வேலை, நிலம் என்று கேட்போம். ஆனால், அந்த முதியவர், ராஜாவிடம், சாப்பிட்டு மூன்று நாட்கள் ஆகிறது. ஒரு பாத்திரத்தில் கஞ்சி கொடுங்கள் என்றார்.

    இந்த கதையில் உள்ள கதாபாத்திரங்கள் யார் என்றால், ராஜா என்பவர் இறைவன், அந்த வயதான முதியவர் தான் நாம். எல்லாவற்றையும் கொடுப்பதற்கு தயாராக உள்ள ராஜாவிடம் ஒரு பாத்திரம் கஞ்சி கேட்பது போல, நாமும் எல்லாவற்றையும் கொடுக்க தயாராக இருக்கும் இறைவனிடம், சிறுபிள்ளை தனமாக எனக்கு வேலை வேண்டும், நல்ல பள்ளியில் இடம் கிடைக்க வேண்டும், வீடு வேண்டும், வாகனம் வேண்டும் என்று கேட்கிறோம். எனவே நமக்கு இறைவனிடம் வேண்ட தெரியாது. அதனால் தான் வேண்டுதல் வேண்டாமை நன்று என்று சொன்னார்கள்.

    ஆனால், அதே சமயம் நாம் இறைவனிடம் இரண்டு விஷயங்களை மட்டும் தினமும் வேண்டிட வேண்டும் என்று சொல்கிறது வேதம். 1. நாயையேன ஜீவன் 2. அனாயஸேன முக்தி என்கிறது. நாயையேன ஜீவன் என்றால், என்னுடைய இறுதி மூச்சு வரை என் தேவைகளை நானே செய்து கொள்ள வேண்டும். வயதான காலத்திலே எந்த உறவுகள் இடத்தும், என்னை குளிப்பாட்டி விடு, உடலை துடைத்து விடு, உடையை மாற்றி விடு, உணவு ஊட்டி விடு என்று யாரிடமும் கையேந்த கூடாது. இது உறவுகளாக இருந்தாலும் பிச்சைக்கு சமம் ஆகும்.

    அனாயஸேன முக்தி என்றால், என் மரணம் ஆனது, என்னையோ என் உறவுகளையோ, உடல் சார்ந்து, பொருளாதாரம் சார்ந்து, மனம் சார்ந்து யாருக்கும் எந்த துன்பமும் கொடுக்க கூடாது. இரவு உணவு அருந்திவிட்டு படுத்தார். காலை எழுந்திருக்க வில்லை, தூக்கத்திலேயே உயிர் பிரிந்தது என்று இருக்க வேண்டும்.

    ஏனெனில் மரணத்தின் விளிம்பில் நாம் இருக்கும் போது, சுய நினைவை இழந்து அவசர சிகிச்சை பிரிவில் நாம் அனுமதிக்கப்பட்டு இருப்போம். வெளியே நம் உறவுகள், கண் உறங்காமல், நமக்காக விழித்து கொண்டு இரவு பகல் பாராமல் துயரத்தில் இருப்பர். அதே உறவுகள் மற்ற உறவுகளிடம் சொல்லும் போது, என் தந்தையை ஒரு ராஜா போல கம்பீரமான தோற்றத்துடன் பார்த்துவிட்டு, இப்போது உடல்முழுவதும் மருத்துவ உபகரணங்கள் பொருந்திய நிலையில், அவரை பார்பதற்கு மிகவும் துயரமாக உள்ளது. இப்படி நரக வேதனை அனுபவிப்பதை விட, அவர் இறைவனிடம் சென்று விடுவது மேல் என்று நாமே அவர்களுக்கு இறுதி தீர்ப்பு எழுதுவோம். இந்த நிலை நமக்கு வரக்கூடாது.

    எனவே இறைவனிடம் இந்த இரண்டை மட்டுமே வேண்ட வேண்டும். அதே நேரம் வேண்டினால் மட்டும் போதாது, அதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். அது தான், இறுதி மூச்சு வரை யாருடைய உதவியும் எதிர்பார்க்காமல் வாழ வேண்டும் என்றால், தினமும் உடற்பயிற்சி அவசியம் செய்ய வேண்டும். அதே போல மரணத்தை தைரியமாக எதிர்கொள்ள மனதிற்கு பக்குவம் வேண்டும். அது வந்துவிட்டால், மரணத்தின் மீது நாம் ஆதிக்கம் செலுத்த முடியும். எனவே மரண துன்பங்களில் இருந்து விடுதலை பெறுவதற்கு தினமும் தியானம் செய்ய வேண்டும். இந்த இரண்டும் நம்முடைய வாழ்வின் தினசரி கடமையாக செய்தால் பலன் கிடைக்கும்.

    நமக்கு "ஜென்மா முக்தி ஜரா வியாதி துக்க தோஷானு தர்சனம்" என்கிறது வேதம். ஜென்மா என்றால் பிறப்பு, முக்தி என்றால் இறப்பு ஆகும். இந்த பிறப்புக்கும் இறப்புக்கும் இடைப்பட்ட காலத்திலே ஜரா (முதுமை) வை சந்திக்க வேண்டும். முதுமை வந்து விட்டால் வியாதி (நோய்) வந்து விடும். இதை தான் பிறப்பு - முதுமை - நோய் - மரணம் என்கிறது வேதம். பிறப்பு என்று ஒன்று வந்துவிட்டால் மற்ற மூன்றையும் நாம் ஏற்று கொண்டு தான் ஆக வேண்டும். ஆனால் இந்த இரண்டு பயிற்சிகளையும் செய்யும் போது இவைகளை தள்ளி போடலாம். இதனால் மரணமும் தள்ளி போகிறது. இதை தான் விதியை மதியால் வெல்வது என்று பொருள்.

    எனவே மதியால் வெல்லக்கூடிய இந்த பயிற்சிகளை நாம் செய்து, நம்முடைய கர்மாவை நாமே கூடுமான வரை அனுபவித்துவிட்டு, நமது அடுத்த தலைமுறைக்கு செல்லாமல் நம்மால் தடுக்கவும் முடியும். எனவே குருவை பிடிப்போம். குரு கொடுத்த பயிற்சிகளை தினமும் செய்வோம்.

    வேதாத்திரி மகரிஷி அவர்களால் உருவாக்கப்பட்ட இந்த உடற்பயிற்சி உலக சமுதாய சேவா சங்கத்தில் ஆழியாறு (பொள்ளாச்சி), மற்றும் உலகம் எங்கிலும் உள்ள மனவளக்கலை மன்றம் அறிவு திருக்கோயில்கள், மற்றும் ஆன்மீக கல்வி நிலையங்களில் கற்று கொடுக்கப்படுகிறது.

    போன்: 9444234348

    • ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படத்தில் பாடல்கள் முதலில், கதை காட்சி பின்னால் உருவானது.
    • ஒரு பாடலை எப்படியெல்லாம் கம்போஸ் செய்யலாம் என்பதற்கு மாதிரியாக இந்தப் பாடலை இசைக்கல்லூரியில் பாடமாக வைக்கலாம், வைக்க வேண்டும்.

    "கவியரசர் கண்ணதாசன் எழுதிய "பூ முடிப்பாள் இந்த பூங்குழலி"- என்றப் பாடலைப் பற்றி பார்த்தோம். திருமண அழைப்பிதழ் மற்றும் திருமண நேரலைக்கு ஏற்ற வரிகளையும், டி.எம்.சவுந்திர ராஜன் அதனைப் பாந்தமாகப் பாடியதையும், எம்.எஸ்.வி.நாதஸ்வரம், தவிலுடன் இசையமைத்ததையும், ஒவ்வொரு வரிக்கேற்ற காட்சியைப் பொருத்தமாக இயக்குநர் ஸ்ரீதர் இயக்கியதையும் பார்த்தோம்.

    இன்னொரு சவாலான சூழலுக்கு கவியரசர் பாட்டெழுதியதையும் எம்.எஸ்.வி. இசையமைத்ததையும் நாம் பார்த்தே ஆகவேண்டும். 1978லும் கூட தனது இசை ஓயவில்லை என்று அவர் நிரூபித்த படம்"வருவான் வடிவேலன்"என்றப் படம்.

    மிகவும் சிக்கலான சூழல். மலேசியா சென்று பத்துமலை முருகன் கோவிலில் கதைக்கேற்ற படப்பிடிப்பு நடத்திய அதன் இயக்குநர் கே.சங்கர், அங்கு திருவிழாவின் போது, நடக்கும் ஒவ்வொரு நிகழ்வுகளையும் படம் பிடித்துக் கொண்டு வந்துவிட்டார்.

    வெட்டியும் ஒட்டியும் 10.02 நிமிடங்களுக்கு வரக்கூடியதாக தொகுத்தக் காட்சியை கவியரசரிடமும், எம்.எஸ்.வி.யிடமும் போட்டுக் காட்டினார். "கதையை தாண்டி கோவில் திருவிழாவையும், வழக்கமான சம்பிரதாயங்களையும் படம் பிடித்து விட்டேன். இந்தக் காட்சிகளைப் பார்த்து அதற்கேற்ற வரிகளை கவியரசர் எழுதி அதற்கு நீங்கள் மெட்டுப் போட்டு பாடல்தயார் செய்யணும்" என்று கே.சங்கர் சொன்னார்.


    கவியரசர் எழுதிவிடலாம் காட்சியைப் பார்த்து.. ஆனால் 10.02 நிமிடம் பாடல் இதுவரை வந்ததேயில்லை. ஒருவரோ இருவரோ பாடினால் ரசிகர்களுக்கு அலுப்புத் தட்டிவிடும், பார்க்க மாட்டார்கள். எம்.எஸ்.வி இதை சவாலாக எடுத்துக் கொள்கிறார்.

    பாடலை ராகமாலிகையில் அமைக்கிறார். டி.எம். சவுந்திரராஜன், சீர்காழி கோவிந்தராஜன், பி.சுசீலா, எல்.ஆர்.ஈஸ்வரி, பெங்களூர் ரமணியம்மாள், மற்றும் குழுவினருடன் தானும் சேர்ந்து பல வகை ராகங்களில் பாடவைத்து தெய்வீகமாக இசையமைத்து பாடலை சூப்பர் டூப்பர் ஹிட் ஆக்கிவிட்டார்.

    'உலகம் சுற்றும் வாலிபன்' படத்தில் பாடல்கள் முதலில், கதை காட்சி பின்னால் உருவானது. 'வருவான் வடிவேலன்' படத்தில் "பத்துமலை திருமுத்து குமரனை பார்த்துக் களித்திருப்போம்" - என்ற பாடலுக்கான காட்சிகள் முன்னால் எடுக்கப்பட்டு பாடல் பின்னர் உருவானது என்றால் வியப்பாகத் தானிருக்கும்!!

    'பத்தினி தெய்வம்' என்ற படம் 1957-ல் வந்தது. இந்த படத்தில், ஒரு பாடல் "மோகனப் புன்னகை ஏனோ அனுராகத்தின் இன்பமிதானோ" - என்ற தஞ்சை ராமையா தாஸ் எழுதியப் பாடல்!

    இந்தப் பாடலின் சூழல் ஒரு பாட்டு ஆசிரியர் தனது மாணவிக்கு இசை சொல்லித்தருவது போன்ற பாடல்! பாடலில் டி.எம்.சவுந்திர ராஜன் குரலில் நாயகன் சொல்லித் தருவதாகவும், அதையே நாயகி கற்றுக் கொண்டு திரும்பி பி.சுசீலாம்மா குரலில் பாடுவதாகவும் வரும். இந்த பாடலின் நடுவே தன் மனதில் உள்ள காதலையும் சொல்லி விடுவது போல வரும்.

    பாடலில் டி.எம்.எஸ். "சுரம் சொல்லம்மா" என்பார். பி. சுசீலா ஒவ்வொரு வரிக்கும் தகுந்த சுரங்களை சொல்லி பாடுவார். இது கொஞ்சம் புதுமை! பாடல் வரிகளுக்கு சுரம் சொல்வது புதுமை! இந்த பாணி எம்.எஸ்.வியின் பிற்கால பாடல்களில் நிறைய வந்தது.

    குறிப்பாக,"எங்கிருந்தோ வந்தாள்" என்றப் படத்தில், "சிரிப்பில் உண்டாகும் ராகத்திலே பிறக்கும் சங்கீதமே" என்றப் பாடலை நாம் கேட்டிருக்கிறோம். பாடலின் கட்டமைப்பே புதுவிதம்! பி. சுசீலா வித விதமான சிரிப்பு சிரிப்பார். அத்தனை சிரிப்புக்கும் சுரம் பாடுவார் டி.எம்.எஸ். சிரிப்பானாலும், வசனமானாலும் கூட தாளகதியில் மெட்டுக்குள் தான் அடங்க வேண்டும். இது கொஞ்சம் சிரமம். பி.சுசீலா இயல்பாக சிரமம் தெரியாமல் பாடியிருப்பார்.

    கி.பானுமதி கிருஷ்ணகுமார்

    கி.பானுமதி கிருஷ்ணகுமார்

    எம்.எஸ்.விஸ்வநாதன் சிறுவயதிலேயே தந்தையை இழந்தவர். தாத்தா, அம்மாவின் அரவணைப்பில் மட்டுமே வளர்ந்தவர். தான் வேலை செய்து வந்த கண்ணனூரில் பள்ளியில் பேரனை சேர்த்தார். ஆனால் பேரனோ படிக்க போகாமல் டிமிக்கிக் கொடுத்துவிட்டு பள்ளிக்கூடத்திற்கு பக்கத்தில் இருந்த ஒரு இசைப் பள்ளிக்கூடத்திற்குப் போய் வெளியே நின்றபடியே சங்கீத பாடங்களைக் கேட்டார் எம்.எஸ்.வி. இசைப் பள்ளியில் சேர கட்டணம் கட்ட வசதியில்லை.

    படித்து தன்னை போல ஒரு நல்ல வேலைக்குப் போக வேண்டும் என்பது அவரது தாத்தாவின் ஆசை! ஆனால் பேரனுக்கோ, "புத்தகம் பையிலே, புத்தியோ பாட்டிலே, பள்ளியைப் பார்த்ததும் ஒதுங்குவோம் மழையிலே" என்ற கவிஞர் வாலியின் வரிகள் தான் பொருந்தியது!

    நீலகண்ட பாகவதரிடம் கற்றுக் கொண்ட மாணவர்களிடம் கேட்ட கேள்விக்கு அவர்கள் யாரும் பதில் சொல்லவில்லை. பள்ளிக்கு வெளியே நின்று பாடங்களின் கருத்தாக உள்வாங்கிய எம்.எஸ்.வி சரியாக பதில் சொன்னார். அவரின் மேதமை நீலகண்ட பாகவதருக்கு பிடித்துவிட்டது. குருகுலம் போல குருவிற்கு பணிவிடைகள் செய்து இசையைக் கற்றுக் கொண்டார் எம்.எஸ்.வி! அந்த ஞானத்தை வைத்து நான்கே வருடங்களில் கண்ணனூர் டவுன் ஹால் அரங்கில் மூன்று மணி நேரம் மிக பிரமாதமான ஒரு கச்சேரியும் செய்து முடித்தார்.

    நீலகண்ட பாகவதருக்கு ஒரு பழக்கம் இருந்தது, தங்களுக்குள் சாதாரணமாக பேசிக்கொள்ளும் பேச்சுகளின் ஒலிகளைக் கேட்டு அதற்கான சுரங்களை சொல்லும் படி எம்.எஸ்.வியைக் கேட்பாராம்! இது எப்படிப்பட்ட ஒரு பயிற்சி! இந்த பயிற்சி பெற்றதனாலோ, சொற்களுக்கு சுரங்களால் உயிர் கொடுக்க முடிந்தது அவரால்!

    பாடல்களின் மெட்டுகள், வரிகளின் உணர்வுகள், பாவங்களை ஏந்தி நம்மை மயக்குவதை நாம் உணரலாம். இதற்கான அடித்தளம் குருவிடமிருந்து பயிற்சியால் வந்திருக்கலாம். அதனால்தான், அவரால், சிரிப்பையும் சுரம் பிரிக்க முடிந்தது என்றால் அதில் சந்தேகமேயில்லை!

    எதையெல்லாம் சுரங்களாக மாற்றலாம்? அதற்கு உதாரணம் "வறுமையின் நிறம் சிவப்பு" என்றப் படத்தில் வந்த "சிப்பியிருக்குது முத்துமிருக்குது திறந்துப் பார்க்க நேரமில்லடி ராஜாத்தி" என்றப் பாடல் தான் அது! இந்தப் பாடலைத் தெரியாதவர்களே இருக்க முடியாது.

    ஒரு நாடக நடிகை ஸ்ரீதேவி, ஒரு கவிஞனான நடிகர் கமலஹாசனுக்கு ஒரு சவால் விடுகிறார். நான் என்ன சொன்னாலும் நீங்க கவிதை எழுதுவீங்களா? அதற்கு சளைக்காமல் கவிஞன் கவிதை தொடுக்கும் விதம் தான் பாடல்!

    இந்தப் பாடலின் ஒரு வரியைக் கூட அலட்சியமாகக் கடந்து விட முடியாது. இந்த பாடலில் எம்.எஸ்.வியின் படைப்புத்திறன் மொத்தமும் ஒளிரும்!

    முதலில் ஸ்ரீதேவி "தந்தன்னா தத்தன்ன தைய்யன்ன தத்தத்தனா" என்று தத்தகரம் சொல்லுகிறார்.

    இதற்கு கமலஹாசன், ஆஹான், "சிப்பியிருக்குது முத்துமிருக்குது திறந்துப் பார்க்க நேரமில்லைடி ராஜாத்தி" என்கிறார். இது கொஞ்சம் கிராமிய மெட்டாக வருகிறது.

    அடுத்து "லல்லலல்ல" என்று ஸ்ரீதேவி தொடர்கிறார்.

    கமலஹாசன், செந்தமிழில், "சிந்தையிருக்குது சந்தமிருக்குது கவிதைப் பாட நேரமில்லைடி ராஜாத்தி" என்கிறார். பாடிவிட்டு "எப்படி?" என்கிறார்!

    ஸ்ரீதேவி, "ம்" என்று விசில் ஒலி தருகிறார். அதற்கு "சந்தங்கள்" என்று சொல் தருகிறார் கமலஹாசன்!

    பிறகு 'நிசரி' என்று சுரம் சொல்கிறார். 'ம்ஹீம் ஹீம்' இத்தனை விதமான வெற்று வார்த்தைகளுக்கும் கவிதை வரி வருகிறது!

    சரணத்தில் "னனனா னனன்னா" என்று ஸ்ரீதேவி சொல்ல, கமலஹாசன், "come on say it again" என்கிறார். ஆங்கில சொற்கள் பாட்டில் வந்துவிடுகிறது.

    ஒரு இடத்தில் "தானே தானே தான்னா" என்பதை இந்துஸ்தானி மெட்டில் ஸ்ரீதேவி பாட "தேவை பாவை பார்வை" என்ற வரியை தருகிறார் கவியரசர்.

    ரொம்பவும் எழுத கடினமான தத்தகரம் மெல்லிசை மாமன்னர் தர, கவியரசர் அழகான வரிகளை தந்துக் கொண்டே வருகிறார்!

    "இப்ப பார்க்கலாம்" என்று ஸ்ரீதேவி ரோலர் கோஸ்டர் போல தத்தகரம் சொல்ல "ரதியும் நாடும் அழகில் ஆடும் கண்கள்" என்றார். ஸ்ரீதேவியின் கண் அப்படித் தானே இருக்கும்?

    "சபாஷ்" என்று சக போட்டியாளரை மெச்சுகிறார் ஸ்ரீதேவி! இதற்கு பிறகு வருவது தான் செமசெம!

    "உன்னைக் கண்டால் கவிஞர் இதயம் கொஞ்சும்.. கொடுத்த சந்தங்களில் என் மனதை நீயறிய நானுரைத்தேன்" என்று பாடலின் நடுவே தன் காதலை சொல்லிவிடுகிறார், கமலஹாசன்!

    இப்போது இருவருக்கும் இடையே நிறைய இடைவெளி. ஸ்ரீதேவி நடந்து கமலஹாசனிடம் வந்து நிற்கும் வரை வெற்றொலி இருக்கிறது. அதுவும் 50 நொடிகளுக்கு மேல்! எம்.எஸ்.வியின் சில பாடல்களில் Pause வரும், ஆனால் அது மூன்று நான்கு நொடிகளுக்குத் தான் வரும். இந்த கோடிட்ட இடத்தை நிரப்பும் வேலையை கே. பாலசந்தர் எடுத்துக் கொள்கிறார். இருவரும் கைகோர்த்துக் கொண்டு சிப்பி இருக்குது முத்துமிருக்குது என்று பாடுகிறார்கள், ஹம்மிங்கில் முடிக்கிறார்கள். இந்தப் பாடலைப் பற்றி விளக்கமாக சொல்லக் காரணம் இருக்கிறது.

    கவியரசரும், மெல்லிசை மாமன்னரும் பாடல் எழுத உட்காரும் போது நடக்கும் காட்சிகள் கண்கொள்ளா காட்சியாக இருக்கும் என்பது திரையுலகில் அனைவரும் அறிந்த ஒன்றுதான். இதை ஆவணப்படுத்த ஆசைப்பட்ட இயக்குனர் சிகரம் கே. பாலசந்தரை இருதுருவங்களாக காட்டவே இந்தப் பாடலை அப்படி அமைத்தாராம்.

    ஸ்ரீதேவி இடத்தில் எம்.எஸ்.வி.யையும், கமலஹாசன் இடத்தில் கவியரசரையும் நாம் பொருத்திப் பார்த்தால் அவர்கள் இருவரின் மேதமையும் நமக்கு புரியும்!

    இந்தப் பாடலில் எம்.எஸ்.வி, தத்தகரம், விசில், ஹம்மிங், ம், ஹீம், எல்லா பந்துக்களையும் சுழற்றி சுழற்றி வீச, கவியரசர் அதையெல்லாவற்றையும் சிக்சராக அடிக்க என்னவொரு பாடல் அது!

    ஒரு பாடலை எப்படியெல்லாம் கம்போஸ் செய்யலாம் என்பதற்கு மாதிரியாக இந்தப் பாடலை இசைக்கல்லூரியில் பாடமாக வைக்கலாம், வைக்க வேண்டும். அப்படிப்பட்ட பாடல் இது!

    கே.பாலசந்தரின் பிறந்த நாள் ஜூலை-9ந் தேதி. இந்த வாரத்தில் அவரது ஆகச் சிறந்த படைப்பான இந்தப் பாடலை பார்த்ததில் மகிழ்ச்சி!!

    எம்.எஸ்.வி. கவியரசர் கூட்டணி பாடல்கள் திகட்டாத கற்கண்டு சுவை! மேலும் ருசிக்கலாம்..

    தொடர்ந்து புதையல் எடுப்போம்...

    இணைய முகவரி: banumathykrishnakumar6@gmail.com

    • நரம்பியல் மண்டலத்திற்கென்று சில சிறப்பு இயல்புகள் உள்ளன.
    • குடல், தசைகளின் செயல்பாடுகளை ஒருங்கிணைக்கிறது.

    குடல் நரம்பு மண்டலம் என்பதைத்தான் மனிதனின் இரண்டாவது மூளை என்று அழைக்கின்றோம். இந்த குடல் நரம்பியல் மண்டலம் நமது உணவுக்குழாய், இரைப்பை, சிறுகுடல், பெருங்குடல் மற்றும் ஆசனவாய் வரை சுமார் ஒன்பது மீட்டர் நீளம் உள்ளது.

    மூளையில் இருந்து வரும் செய்திகள் இதன் வழியாகத்தான் நம் குடல் பகுதியை வந்தடைகின்றன. இருப்பினும் மூளையின் தூண்டுதல் இல்லாமல் தன்னிச்சையாகவும் செயல்படக் கூடியது. இந்த நரம்பியல் மண்டலத்தை நம்மால் கட்டுப்படுத்த இயலாது.

    பொதுவாகவே நரம்பியல் மண்டலத்திற்கென்று சில சிறப்பு இயல்புகள் உள்ளன. மூளையில் உள்ள நியூரான்களில் சுரக்கப்படும் நரம்பியக்கடத்திகள் போலவே, குடல் நரம்பியல் மண்டலத்தில் சுரக்கப்படும் நரம்பியக்கடத்திகளும் உள்ளன. கிட்டத்தட்ட இரண்டும் ஒன்றுபோல் உள்ளதால்தான் இதை இரண்டாவது மூளை என்றழைக்கின்றோம்.

    டோபமின், அசிடைல்கோலின், செரடோனின் ஆகியவைகள் மூளையில் இருப்பதைக் காட்டிலும் குடல் நரம்பியல் மண்டலத்தில் அதிகமாக உள்ளன. எடுத்துக்காட்டுக்கு, 90 விழுக்காடு செரடோனின், உடலின் 50 விழுக்காடு டோபமின் இங்குதான் உள்ளது.

    மூளை நரம்பியல் தொடர்பான நோய்கள் நம்மைத் தாக்குவதற்கு வயிற்றுப் பகுதியில் ஏற்படும் சிக்கல்கள் காரணமாக உள்ளன. எடுத்துக்காட்டுக்கு வயிற்றுப்போக்கு வந்து போன சில நாட்களில், அதிவிரைவான நரம்புத்தளர்ச்சி வருவதற்கான வாய்ப்புகள் உள்ளது.

    மன அளவிளான பாதிப்புகளும் இதனால் ஏற்படுகிறது. இதற்கான காரணத்தை இப்பகுதியில் பார்க்கலாம்.

    இரண்டாவது மூளையின் பணிகள்:

    1. குடல், தசைகளின் செயல்பாடுகளை ஒருங்கிணைக்கிறது.

    2. உணவுக் குழாய்களுக்குச் செல்கின்ற ரத்த ஓட்டத்தைச் சீராக வைக்கிறது.

    3. குடலின் உள்பகுதியில் உள்ள சுரப்பிகளின் சுரப்புத்தன்மை, அதிகமாகச் சுரப்பதும் அல்லது சுரக்காமல் இருப்பதும் இந்த நரம்பியல் மண்டலத்தின் கட்டுப்பாட்டில்தான் உள்ளது.

    4. குடல் மண்டலத்தின் எதிர்ப்புசக்திக்கு முக்கியமானது.

    5. நம் குடலின் செரிமான சக்தியையும், சத்துகளை உறிஞ்சும் தன்மையை நிர்ணயிக்கிறது.

    6. குடலின் முக்கியப் பணியான உணவுகளை கீழ்நோக்கித் தள்ளும் Peristalsis நடைபெறுவதற்கு மிகவும் உதவுகிறது.

    7. குடலில் இருந்து ஹார்மோன்கள் (Gastrin, Secretion) சுரப்பதற்கான செய்திகளை அனுப்புகிறது.

    8. உணவு ஒரு பகுதியில் இருக்கும்போது அந்தப் பகுதியை மட்டுமே சுருங்கி விரியச் செய்கிறது. இதனால் குடலினுள் உள்ள உணவு ஒன்றோடு ஒன்று நன்கு கலக்கப்படுகிறது. இது செரிமானத் தன்மைக்கும், உணவில் உள்ள சத்துகளைப் பிரித்தெடுப்பதற்கும் மிகவும் அவசியமான ஒன்று.

    9. குடல்கள் மத்திய நரம்பு மண்டலத்திலிருந்து, துண்டிக்கப்பட்டாலும், குடல் நரம்பு மண்டலத்தின் உதவியோடு வழக்கமான பணிகளான செரித்தல், சத்துகளை உறிஞ்சுதல் போன்ற செயல்கள் எப்போ தும்போல் நடைபெறுகின்றன.

    இந்த குடல் நரம்பு மண்டலத்தைத் தொடர்ந்து நம் நலத்திற்கு மிகவும் முதன்மையானது நுண்ணுயிர் நரம்பு மண்டலம் (Microbial nervous system). அப்படி என்றால் என்ன என்றுதானே சிந்திக்கிறீர்கள்.

    நம் தோல், மூக்கு, வாய், இரைப்பை, குடல் ஆகிய பகுதிகளில் நன்மை பயக்கக்கூடிய பல பாக்டீரியாக்கள் உள்ளன. அவற்றில் குறிப்பிடத்தக்கவை லாக்டோபேசிலஸ், என்ட்ரோபாக்டர், பிஃபிடோ பாக்டீரியம் ஆகியவைகளாகும்.

    இந்த நுண்ணுயிரிகள் உணவுகளைச் செரிப்பதற்கும், சத்துகளை உறிஞ்சுவதற்கும் பெரிதும் துணைபுரிகின்றன. இந்த நுண்ணுயிரிகளின் நலத்தில்தான் நம் உடலின் முழுமையான நலம் அடங்கியுள்ளது.

    இந்த நுண்ணுயிரிகள் நம் உடலுக்குள் எப்படி வருகின்றன? சிசு வயிற்றில் இருக்கும்போதே வருவதாகவும், குழந்தை பிறந்து தாய்ப்பால் குடிக்கத் தொடங்கும் போது தாயிடம் இருந்து வருவதாகவும் ஆய்வுகளின் முடிவுகள் தெரிவிக்கின்றன.

    இந்த நுண்ணுயிரிகளின் நலன் பாதிக்கப்படும்போது மூளை, நரம்பு மற்றும் மனம் தொடர்பான நோய்கள் ஏற்படுகின்றன. இதில் மிகவும் குறிப்பிடத்தக்கது ஸ்கிசோஃப்ரினியா மற்றும் குழந்தைகளுக்கு வரும் ஆட்டிசம் ஆகும்.

    மாறிவிட்ட உணவு கலாச்சாரத்தினால் இந்த நுண்ணுயிரிகள் பெருமளவில் பாதிக்கப்படுகின்றன. வாழ்வியல் முறை மாற்றங்களினால் ஏற்படும் நோய்களுக்கு இதுவும் ஒரு முதன்மைக் காரணம்.

    இந்த நுண்ணுயிரிகளைப் பல்கிப்பெருக வைக்க நாம் சில உணவு முறைகளைப் பின்பற்ற வேண்டும். இவைகள் இரு வகைப்படும்.

    புரோ - பயோடிக் என்பது நன்மை பயக்கும் பாக்டீரியாக்கள்.

    ப்ரி - பயோடிக் என்பது இந்தப் பாக்டீரியாக்கள் பல்கிப் பெருகுவதற்கு உதவும் உணவு.

    நாம் அன்றாடம் உண்ணும் உணவில் இவைகள் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்வது நமது நலத்தை மேன்மையுறச் செய்யும்.

    நுண்ணுயிரிகள் அதிகம் உள்ள உணவுகள்:

    மோர், இட்லி, தோசை மற்றும் புளித்த மாவில் இருந்து செய்யும் உணவு வகைகள், நீராகாரம் / பழையசாதம், உப்பில் ஊறவைத்த 2-3 நாட்களுக்குப் பிறகு எடுத்துக்கொள்பவைகள். உதாரணத்திற்கு ஊறுகாய், பன்னீர், தேன், வாழைப்பழம், வெங்காயம் ஆகியவை நம் குடலின் ஆரோக்கியத்தை மேன்மையுறச் செய்கின்றன. எனவே தினமும் இவற்றில் ஏதாவது ஒன்றை எடுத்துக்கொள்ளுதல் நல்லது.

    நுண்ணுயிரிகளை பாதிப்பவை:

    இராசயன முறையில் பதப்படுத்தப்பட்ட உணவுகள், குளிர்பானங்கள், செயற்கை இனிப்பூட்டிகள் ஆகியவைகளை அதிகம் எடுத்துக்கொள்வது. குடல் அழற்சி, வயிற்றுப்போக்கு, ஆன்டிபயோடிக் மருந்துகளை எடுத்துக்கொள்வது ஆகியவைகள் நம் குடலில் உள்ள நுண்ணுயிரிகளைப் பாதிக்கின்றன. இந்த நுண்ணுயிரிகள் அளவு குறையும்போது மனஅழுத்தம், மனப்பதற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது.

    இந்த இரண்டாவது மூளையும் அதிலுள்ள நுண்ணுயிரிகளும்தாம் நம் உடலின் நலத்தை நிர்ணயிக்கின்றன. இவை பாதிக்கப்படும்போது வயிற்றில் பிரச்சினைகள் ஏற்படுகின்றன.

    வயிற்றில் பிரச்சனைகள் ஏற்படுவதாலும் இந்த நுண்ணுயிரிகள் பாதிக்கப்படுகின்றன. எனவே வயிற்றில் சிக்கல்கள் ஏற்படும்போது எளிதாகச் செரிக்கக் கூடிய மேற்கூறப்பட்ட உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும். தேவைப்பட்டால் வெந்நீர் மட்டும் எடுத்துக்கொண்டு குடலுக்கு ஓய்வு கொடுக்க வேண்டும்.

    குடல் நரம்பு மண்டலத்திற்கு இரவு வேளைகளில் ஓய்வு கொடுக்க வேண்டும். காலம் தாழ்த்தி உணவு அருந்தி விட்டு உடனே உறங்கச் செல்வதையும் தவிர்க்க வேண்டும்.

    அரைவயிறு உணவு, கால் வயிறு தண்ணீர், கால் வயிறு வெற்றிடம் என்று நம்முன்னோர்கள் கூறியிருப்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

    குளிர்சாதனப் பெட்டியில் உணவை வைத்து பிறகு அதை சூடுபடுத்தி உண்பதையும் தவிர்க்க வேண்டும்.

    நம் உடல் மற்றும் மூளை ஆரோக்கியமாக இருக்க இந்த இரண்டாவது மூளையின் ஆரோக்கியத்தை, மேற்கூறப்பட்ட வழிமுறைகளை பின்பற்றி பாதுகாக்கலாம்.

    • சுமார் 1300 ஆண்டுகள் பழமை வாய்ந்தது.
    • புகழ் சார்ந்த வாழ்வைத் தரவல்ல உன்னதமான திருத்தலம்

    ஒருவர் மரணம் அடைந்த பிறகுதான், அவர் செய்த மாபெரும் பணிகள், சேவைகள், தானங்கள் ஒவ்வொன்றாக வெளியில் வரும். இதற்கு சமீபத்திய உதாரணம் நடிகர் விஜயகாந்த்.

    இந்த உலகில் வாழும்போது தான் சம்பாதித்த நற்பெயரையும் புகழையும் எவர் விட்டுச் செல்கிறாரோ அவரே வாழ்வாங்கு வாழ்ந்தவராக மதிக்கப்படுவார்: துதிக்கப்படுவார். அத்தகைய புகழ் சார்ந்த வாழ்வைத் தரவல்ல உன்னதமான திருத்தலம் தான் கருவேலி சற்குணநாதர் திருக்கோவில்.

    கும்பகோணம் அருகே இருக்கும் வித்தியாசமான ஆலயங்களில் இந்த ஆலய மும் ஒன்று. கும்பகோணம் ஆன்மிக யாத்திரை செல்பவர்கள் தவிர்க்கக் கூடாத ஆலயமும் கூட.

    தமிழ்நாடு அரசு இந்துசமய அறநிலைய ஆட்சித்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் இவ்வாலயம் சுமார் 1300 ஆண்டுகள் பழமை வாய்ந்தது.

    சிவனின் தேவாரப் பாடல் பெற்ற 274 தலங்களில் 126-வது தலமாகவும் காவிரி தென்கரைத் தலங்களில் 3-வது தலமாகவும் திகழ்கின்றது.

    அரசலாற்றின் வடகரையிலும் காவிரி தென்கரையிலும் அமைந்துள்ள இத்தலம் அஷ்டதிக் பாலகர்கள் வழிபட்ட தலங்களில் ஒன்றாகத் திகழ்வதோடு, மூர்த்தி, தலம் தீர்த்தம் என முப்பெரும் சிறப்புகளுடன் இன்னும் பல்வேறு சிறப்புகளை பெற்றதொரு தலமாக விளங்குகிறது. இத்தலத்தைச் சுற்றி அஷ்டதிக் பாலகர்கள் வழிபட்ட தலங்களும் உள்ளன.

    இந்திரன் - நாகம்பாடி

    அக்னி - வன்னியூர்

    எமன் - கருவிலி.

    நிருதி - வயலூர்

    வருணன் - சிவநகரம்

    வாயு (-) அகாலங்கன்.

    குபேரன் - எஸ், புதூர்.

    ஈசானன் - நல்லாவூர்

    இந்த எட்டு தலங்களில் எமன் வழிபட்ட தலம்தான் கருவிலி.

    முற்பிறவியில் ஒரு தீயவனுக்கு மகளாகப் பிறந்த பாவத்திற்காக ஈசன் மனைவியே மறுபிறவி எடுக்கவேண்டி வந்தது. அவள் மறுபிறவியில் இறைவனை அடைந்ததால் பிறவாநிலை பெற்றாள்.

    அதுபோலவே இத் தலத்து இறைவனைக் காண்போருக்கு மறுபிறவியில்லை அதாவது அவர்கள் மீண்டும் ஒரு தாயின் கருவில் உதிக்கமாட்டார்கள். இதனால் தான் இவ்வூர் கருகில்லை. என்னும் பொருளில் கருவிலி எனப்படுகிறது. காலப்போக்கில் கருவேலி என மருவியது. கருவுக்கு வேலி என்றும் பொருள்கொள்ளலாம்.

    இத்தலத்தின் முக்கிய பெருமை நல்ல குணங்கள் உள்ளவ ருக்கு அந்த குணங்கள் என்றும் நிலைத்து நிற்கும் என்பதும், தீய குணங்கள் இருந்தால் அது மறைந்துவிடும் என்பதுவுமாகும். எனவே இவ்வூர் இறைவன் 'சற்குணேஸ்வரர்' என்று அழைக்கப்படுகிறார்.

    சற்குணன் என்னும் மன்னன் இக்கோவிலில் வழிபட்டு திருப்பணிகள் செய்து குறைகள் நீங்கப்பெற்று, பிறவிக்கடலைக் கடந்து மோட்சமும் பெற்றான் என்று கல்வெட்டு செய்திகள் கூறுகிறது.

    தட்சனின் யாகத்தின்போது நடந்த கோர நிகழ்வால் தாட்சாயிணியை இழந்த ஈசன் பித்துப் பிடித்தாற்போல ஊர் ஊராக சுற்றித் திரிந்து இறுதியில் அமர்ந்த இடம் கருவிலி என புராணம் கூறுகிறது.

    அப்போது ஈசனுடன் சேர்வதற்கு அன்னை பார்வதி அழகே உருவாக மீண்டும் தோன்றிய இடம், கருவிலி ஆலயத்தில் இருந்து அரைகிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் அம்பாச்சிபுரம் என்று சொல்கிறது புராணம்.

    இறைவனுடன் சேர அம்மை தங்கி அர்ச்சித்த இடமே அம்பாச்சிபுரம். முப்புரமும் எரித்த ஈசன் ஆனந்தக் களிப்பில் கொடுகொட்டி என்னும் ஆட்டத்தை இத்தலத்தில் நிக ழ்த்தினார். எனவே இத்தலம் கொட்டிடை என்றழைக்கப் படுகிறது.

    திருக்கடையூரில் எமன் மார்க்கண்டேய னுக்கு பாசக்கயிற்றை வீச. சிவபெருமான் தடுத்தார். இதனால் பயந்த எமதர்மனை, கருவிலி வந்து நீராடி தன்னை வணங்குமாறு ஈஸ்வரன் பணித்தார். எமன் இங்குவந்து நீராடி வணங்கி தன் பாவம் நீங்கப் பெற்றான் இக்குளத்தில் நீராடினாலும், தலையில் தெளித்துக்கொண்டாலும் எமபயம் போகும்.

    சிவன் கோவில்களில் மூன்றுவிதமாக அம்மன் சந்நிதிகளை. அமைக்கலாம் என்று ஆகம சாஸ்திரங்கள் கூறுகின்றன. அதாவது சமான வீஷணம், அனுக்கிரஹ வீஷணம், அபிமுக வீஷணம் என்பர்.

    சிவன் சந்நிதி (கிழக்கு அல்லது மேற்கு) எந்த திசை நோக்கி அமைக்கப்பட்டிருக்கி றதோ அந்த திசை நோக்கியே அம்மனையும் பிரதிஷ்டை செய்வது அதாவது சுவாமியும் அம்பாளும் ஒரே திசை நோக்கிக் காட்சி தருவதை 'சமான வீஷணம் என்பர் சில கோவில்களில் சுவாமிக்கு வலப்புறம் அம்மன் சந்நிதியும் சில கோவில்களில் சுவாமிக்கு இடப்புறம் அம்மன் சந்நிதியும் அமைந்திருக்கும். சுவாமிக்கு வலப்பக்கம் அம்மன் சந்நிதி இருப்பதை திருமணக் கோலம் என்றும், சுவாமிக்கு இடப்புறம் அம்மன் சந்நிதி இருப்பதை அர்த்தநாரீஸ்வர கோலம் என்றும் கூறுவர்.

    சிவன் சந்நிதி கிழக்கு அல்லது மேற்கு நோக்கி அமைந்திருக்கும். இருப் பினும் அம்மன் சந்நிதி தெற்கு நோக்கியே அமைந் திருக்கும். இதனை 'அனுக் கிரஹ வீஷணம்' என்பர்.

    இந்த முறையில் சுவாமியை தரிசிக்கும் ரீதியில் அம்மன் பிரதிஷ்டை செய்யப்பட்டி ருப்பாள். சுவாமியின் அனுக் கிரஹத்தைப் பெற்று அம்பாள் நமக்கு அருள் புரிவதாக ஐதீகம். பெரும்பாலான சிவாலயங் களில் இந்த முறையிலான அமைப்பே காணப் படுகின்றது.

    சுவாமி சந்நிதி மேற்கு நோக்கி அமைந்தி ருந்தால் அம்பாளின் சந்நிதி கிழக்கு நோக்கி அமைக்கப்பட்டிருக்கும். சுவாமியும் அம்பாளும் நேரெதிரே பார்த்துக் கொள்ளும் நிலையான இதனை 'அபிமுக வீஷ ணம்' என்பர். 'எதிர்காட்சி என்று சொல்லப்படும் இந்தநிலை மிகவும் அபூர்வமானது. திருக் கடையூர், காள ஹஸ்தி போன்ற தலங்களில் இந்த அமைப்பினை தரிசிக்கலாம்.

    மேற்கூறிய வகைகளில் 'சமான வீஷணம்' என்னும் சாஸ்திரப்படி சுவாமியும் அம்பாளும் ஒரே திசையான கிழக்கு நோக்கி, சுவாமிக்கு இடப்புறம் அம்மன் சந்நிதி அர்த்தநாரீஸ்வர கோலம் என்னும் அமைப்பில் கருவிலி தலத்தில் அமைந்துள்ளது சிறப்பம்சம் வாய்ந்த ஒன்று.

    இறைவனுடன் சேர்வதற்கு அம்பாள், அம்பாச்சிபுரம் என்னும் இடத்தில் சிலகாலம் தங்கி, பின் உலகத்து அழகையெல்லாம் ஒன்றுதிரட்டிய சர்வாங்க சுந்தரியாக இறைவனின்முன் நின்றாளாம்.

    அம்பாளை வர்ணிக்க வார்த்தைகள் போதாது. இவளை தரிசித்த இளம்பெண்களின் திருமணம் காலதாமதமின்றி, தடையின்றி நடப்பதோடு, குழந்தையில்லாதவர்களுக்கு குழந்தைப் பேறும் கிடைக்கிறதென்று பயனை டந்தவர்கள் கூறுகின்றனர்.

    இத்தலத்தில் குடிகொண்டுள்ள தெய்வங்களை வணங்கும் பேறுபெற்றவர்கள் இனி எந்தவொரு கருவிலும் பிறக்க வேண்டியதில்லை என்னும் வரம் கிடைக்கும்.

    * இந்திரனும், தேவர்களும் இத்தல இறைவனை வழிபட்டுப் பேறுபெற்றுள்ளனர்.

    * 'உய்யக்கொண்டான் வளநாட்டு, வெண்ணாட்டு, குலோத்துங்க சோழ நல்லூராகிய சுருவிலிக் கொட்டிடை என்னும் கல்வெட்டுச் செய்தி இரண்டாம் ராஜாதிராஜன், ராஜேந்திர சோழன் காலத்தில் கட்டப்பட்ட தற்குரிய ஆதார முள்ளது. இத்தல மூலவர் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

    * சிவாலயத்திற்குரிய அனைத்து விசேஷங்களும் முறைப்படி ஆலய நிர்வாகக் குழு, அற நிலையத் துறையின் கண்காணிப்பில் சிறப்பாக நடைபெறுகிறது.

    * தேய்பிறை அஷ்டமியில் பைர வருக்கும், பிரதோஷ வழிபாடும் விமரிசையாக நடக்கும்.

    * மூல நட்சத்திரம் மற்றும் சனிக் கிழமைகளில் சஞ்சீவி ஆஞ்சனே யருக்கு சிறப்புப் பூஜைகள் நடைபெறும்.

    * வெள்ளி, செவ்வாய், ஞாயிறு ராகுகால வேளையில் துர்க்கை, சிம்மவாகினிக்கு வழிபாடு நடைபெறும்.

    * எமதீர்த்தக் குளத்தில் கங்கையை சடையில்கொண்ட ஈசனின் சிற்பம் அமைந் துள்ளது சிறப்பான ஒன்று.

    கோவில்கள் நிறைந்த கும்ப கோணத்தில் உள்ள அனைத்து கோவில் களையும் தரிசித்த பலன் இந்த ஒரு கோவிலை தரிசித்தாலே கிடைத்துவிடும்' என்று பெருமிதத்துடன் கூறுகிறார் ஆலய அர்ச்சகரான குமார் குருக்கள்.

    அரசலாற்றின் வடகரையில் கருவிலி ஊரின் மையத்தில் வயல்வெளிகளுக்கு நடுவே இயற்கை எழில் சூழ அமைந்துள்ளது ஆலயம்.

    ஜாதகத்தில் குருவுடன் சர்ப்ப கிரகங்களான ராகு அல்லது கேது இணைந்தால் குரு சண்டாள யோகம் ஏற்படும். 7-ம் இடத்தில் ராகு - கேது இருந்தால் களத்திர தோஷம் ஏற்படும். அதனால் திருமணத்தடை, சிலருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட திருமணம், சுருத்து வேறுபாடு காரணமாக தம்பதியர் பிரிவு போன்ற பிரச்சினைகள் ஏற்படும்.

    அத்தகையவர்கள் கருவேலி தலத்திற்கு வந்து மூலவர், அம்பாளை தரிசனம் செய்து, சுவாமி சந்நிதியிலுள்ள தட்சிணாமூர்த்திக்கு புதுவஸ்திரம் சாற்றி அபிஷேக அர்ச்சனை செய்தால் நல்லதீர்வு கண்டு நலமுடன் வாழலாம்.

    காலை 6.30 மணிமுதல் பகல் 12.30 மணிவரையிலும்; மாலை 4 மணிமுதல் இரவு 8 மணிவரையிலும் ஆலயம் திறந்திருக்கும்.

    கும்பகோணம்- நாச்சியார் கோவில்- எரவாஞ்சேரி- பூந்தோட்டம் சாலை வழியில் கூந்தலூர் அடைந்தால், அங்கிருந்து அரசலாற்றின் வடகரையில் உள்ளது கருவேலியை எளிதாக சென்று அடையலாம்.

    • துறவியர் வரிசையில், வள்ளலாருக்கும் ஒரு தனி இடம் உண்டு.
    • வள்ளலாரின் உரைநடை நூல்களில் உடல்நலம் சார்ந்த பல குறிப்புகள் உண்டு.

    எழுத்தாளர்களாக இருந்த துறவியர் பலர் உண்டு. வால்மீகி, வியாசர் போன்றோர் சம்ஸ்கிருதத்தில் எழுதிய துறவியர். ஸ்ரீஅரவிந்தர் ஆங்கிலத்தில் எழுதிய துறவி. தாயுமானவர், பட்டினத்தார் போலத் தமிழில் எழுதிய துறவியர் வரிசையில் இணைபவர் வள்ளலார்.

    `துறவு என்றால் உடலை வருத்திக் கொள்வது அல்ல, மனிதர்கள் உடல் நலனை நன்கு பேணுவது அவசியம் என்ற கருத்துடைய துறவியர் சிலர் உண்டு. `உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே!` என்றார் திருமூலர். `கால்பந்து விளையாடி உடலை வலிமைப் படுத்தினால் கீதை நன்றாகப் புரியும்` என்றார் விவேகானந்தர்.

    உடல் நலன் பற்றி அக்கறை செலுத்திய இத்தகைய துறவியர் வரிசையில், வள்ளலாருக்கும் ஒரு தனி இடம் உண்டு.

    வள்ளலாரின் உரைநடை நூல்களில் உடல்நலம் சார்ந்த பல குறிப்புகள் உண்டு. அவரது உரைநடைத் தொகுப்பு நம் வாழ்வுக்குத் தேவையான எண்ணற்ற செய்திகளைச் சொல்கிறது.

    கழிவுப் பொருட்களை அகற்ற வேண்டும் என்ற உணர்ச்சி உடலில் தோன்றிய உடனேயே அவற்றை அகற்றி விட வேண்டும் என்றும், `ஒன்றடக்கல் இரண்டடக்கல்` போன்றவை உடல் நலத்தைப் பெரிதும் சிதைத்துவிடும் என்றும் வள்ளலார் குறிப்பிட்டுள்ளார். நம் பாரத தேசத்தில் பல பெண்களின் உடல்நலக் குறைவுக்கு காரணம், அவர்களுக்கு உடல் கழிவுகளை அப்புறப்படுத்த போதிய வசதிகள் பல இடங்களில் கிடைக்காமல் இருப்பதே.

    வள்ளலாரின் இயற்பெயர் ராமலிங்கம். இளம் வயதிலேயே தந்தை ராமையாவை இழந்தார். தாய் பெயர் சின்னம்மை. ராமலிங்கத்தையும் சேர்த்து அவருக்கு ஐந்து குழந்தைகள். சபாபதி, பரசுராமன், ராமலிங்கம் என மூன்று புதல்வர்கள். சுந்தரம்மாள், உண்ணாமுலை என இரண்டு புதல்விகள்.

    கணவர் காலமானபின் சின்னம்மை தன் மூத்த மகன் சபாபதி வீட்டிற்கு வந்துசேர்ந்தார். பின், நெடுநாட்கள் சின்னம்மை உயிர் வாழவில்லை. தாயின் மரணத்திற்குப்பின் ராமலிங்கத்திற்கு சபாபதியின் மனைவியான அவர் அண்ணியே தாயானார்.

    தன் மைத்துனன் ராமலிங்கத்தை அளவற்ற பாசத்தோடு பராமரித்த உன்னதமான அண்ணி அவர். தமிழ் இலக்கிய வரலாறு, அவருக்கு இணையான இன்னோர் அண்ணியைக் கண்டதில்லை.

    கடவுளை நேரில் கண்ட மகான் வள்ளலார். திருவொற்றியூர் வடிவுடையம்மன் ஆலயத்தில் நள்ளிரவு முடிய தியானத்தில் ஆழ்ந்திருந்தார். பின் விழிப்படைந்து நேரம் நள்ளிரவைத் தாண்டியிருப்பதை உணர்ந்து வீடுவந்து சேர்ந்தார்.

    அவருக்குச் சோறிடுவதற்காக நெடுநேரம் காத்திருந்த அண்ணி, ராமலிங்கம் வந்தால் கதவைத் தட்டட்டும் என எண்ணி கதவைத் தாளிட்டு உள்ளே உறங்கிக் கொண்டிருந்தார்.

    நள்ளிரவில் அண்ணியின் உறக்கத்தைக் கெடுக்க ராமலிங்கம் விரும்பவில்லை. திண்ணையில் சாப்பிடாமலே படுத்தார். அப்போது வடிவுடையம்மன், அண்ணியின் வடிவு உடைய அம்மனாக, அண்ணி வடிவில் அவர்முன் தோன்றினாள்.

    `பசியோடு உறங்கலாமா? சாப்பிடு` என இலைபோட்டு அன்னம் பரிமாறினாள்.

    `அம்பிகையைப் பார்க்க ஆலயத்திற்குப் போனேன். அங்கேயே தியானத்தில் நெடுநேரம் கழிந்துவிட்டது` எனத் தயக்கத்தோடு தெரிவித்தார் வள்ளலார்.

    `அம்பிகையைப் பார்க்கக் கோயிலுக்குப் போவானேன்? என்னைப் பாரேன்!` என்றாள் அம்பிகை. வள்ளலார் திகைத்தார்.

    `எல்லாப் பெண்களும் அம்பிகையின் வடிவம்தானே?` என்று சூசகமாகச் சொல்லிக் கலகலவென்று நகைத்தாள் அம்பிகை.

    அன்னத்தை வாயிலிட்ட வள்ளலார் அதன் ருசியில் மயங்கினார்.

    `அண்ணி! உங்கள் சமையல் இன்று தேவாமிர்தம்போல் இனிக்கிறதே!` என்றார்.

    `ஆமாம். தேவாமிர்தம்தான் போயேன். தேவலோக ஆட்கள்தான் இன்று சமைத்தார்கள்!` என்று சொல்லி மீண்டும் நகைத்த அம்பிகை, போவதுபோல் போக்குக் காட்டி மறைந்துவிட்டாள்.

    சிறிதுநேரம் சென்றதும் உண்மையான அண்ணி கதவைத் திறந்து வந்து வள்ளலாரைச் சாப்பிட அழைத்தாள். அப்போதுதான் வந்தது அம்பிகை என்பது வள்ளலாருக்குப் புரிந்தது. அம்பிகை வந்து சென்ற சாட்சியாக அவர் சாப்பிட்ட இலை அங்கே கிடந்தது.

    காளிதாசனுக்கு நாவில் வெற்றிலை துப்பியும், ஞானசம்பந்தருக்கு ஞானப்பால் கொடுத்தும் அறிவுபுகட்டிய அம்பிகை, வள்ளலாருக்கு அன்னமிட்டுத் தமிழை வழங்கிவிட்டாள். அதன்பின் வள்ளலார் நாவில், அவர் சொன்னதெல்லாம் கவிதையாக மலரத் தொடங்கியது.

    மணவாழ்வில் நாட்டமில்லாதிருந்த ராமலிங்கம், உறவினர்களும் குருநாதர்களும் வற்புறுத்தியதால், அவரது அக்கா உண்ணாமுலையின் மகளான தனக்கோடியை மணந்தார்.

    பள்ளியறையிலும் மாணிக்கவாசகர் எழுதிய திருவாசகத்தைப் படித்துக் கொண்டிருந்தார் வள்ளலார். `வான்கலந்த மாணிக்கவாசகரின் வாசகத்தைத் தான் கலந்து பாடும் போது திகட்டாமல் இனிக்கிறது` என்று பாடியவர் அல்லவா அவர்?

    தனக்கோடி, கணவரின் மனமெல்லாம் ஆன்மிகமே நிறைந்துள்ளதைத் தெளிவாகப் புரிந்து கொண்டார். அவரை வணங்கி, அவர் முழுமையாக ஆன்மிக நெறியில் வாழவேண்டும் என வேண்டி வழியனுப்பி வைத்த பக்குவம் தனக்கோடி அம்மாளுடையது. இந்தியத் துறவியரில் கணவர் துறவு பூண்டபோது அதை மனப்பூர்வமாக ஆதரித்த மனைவி என்ற பெருமை தனக்கோடி அம்மாளுக்கு மட்டுமே உரியது.

    அற்புதம் நிகழ்த்திய மகான்கள் வரிசையிலும் வள்ளலாருக்கு இடமுண்டு. ஆனால் அவர் அற்புதங்களை விரும்பவில்லை.

    தங்கத்தை வெறுத்த அவர், ஓர் இரும்புக் கம்பியைத் தங்கமாக்கி, பின் இந்தத் தங்கத்தால் என்ன பயன் எனக் கேட்டு அதை மீண்டும் இரும்பாக்கிக் கிணற்றில் வீசிவிட்டு நடந்தவர்.

    வள்ளலார் `கலையுரைத்த கற்பனையே நிலையெனக் கொண்டாடும் கண்மூடி வழக்கமெல்லாம் மண்மூடிப் போக!` என மூட நம்பிக்கைகளைச் சாடினார்.

    `வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்` என வள்ளலார் எழுதியுள்ள வரி, அவரின் வானளாவிய அன்பிற்கு அடையாளம். பக்தித் தமிழின் பெரிய பொக்கிஷம் அவர் பாடல்களின் தொகுப்பு.

    சீனிவாச வரதாச்சாரியார், ஞானசுந்தரமய்யர், வீராசாமி முதலியார், பொன்னேரி சுந்தரம் பிள்ளை, பண்டார ஆறுமுக ஐயா போன்ற பற்பலர் அடுத்தடுத்து வள்ளலாரின் அடியவர்களானார்கள்.

    இவர்களின் வேண்டுகோளின் பேரில்தான் வள்ளலார் `நெஞ்சறிவித்தல், மகாதேவ மாலை, சிவநேச வெண்பா` போன்ற கவிதை நூல்களை எழுதினார். வள்ளலார் தம் வாழ்நாள் முழுவதும் ஒருபோதும் மனிதர்கள் மேல் பாட்டுப் பாடியதில்லை.

    புதுவை வேலு முதலியார், சிவானந்தபுரம் செல்வராய முதலியார் போன்றோர் வள்ளலாரின் பாடல்களைத் தொகுத்துப் புத்தகமாக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். தொழுவூர் வேலாயுத முதலியார் அளித்த பொருளுதவியோடு வள்ளலார் பாடல்களைத் திருமுறைகளாக வகுத்து வெளியிட்டனர்.

    தமிழ்த் தாத்தாவின் குருவான மீனாட்சிசுந்தரம் பிள்ளை போன்றோர் வள்ளலாரின் அருட் பாடல்களைக் கொண்டாடினர்.

    அப்போதுதான் ஆன்மீக வரலாற்றில் பரபரப்பை ஏற்படுத்திய அந்த விந்தையான வழக்கு நீதிமன்றத்திற்கு வந்தது. ஆறுமுக நாவலர் என்ற தமிழறிஞர் வள்ளலாரின் பாடல்களை அருட்பாக்கள் என அழைப்பது தவறு என வழக்குத் தொடர்ந்தார். அவ்விதம் அழைப்பது மிகையான கூற்று என்பது நாவலர் கருத்து.

    மஞ்சக் குப்பம் டிஸ்டிரிக்ட் முன்சீப் நீதிமன்றத்தில் வழக்கு நடந்தது. அப்போது அங்கு டிஸ்ட்ரிக்ட் முன்சீபாகப் பணியாற்றியவர் நேர்மைக்குப் புகழ்பெற்ற முத்துசாமி ஐயர்.

    வள்ளலார் ஒளிவீசும் முகத்துடன் நீதிமன்றத்தின் உள்ளே தென்றல்போல் நுழைந்தார். அங்கே ஏற்கெனவே வழக்குத் தொடுத்த ஆறுமுக நாவலர் வந்து அமர்ந்திருந்தார்.

    வள்ளலார் நீதிமன்றத்தில் நுழைந்ததும் அங்கு இன்னதென்றறியாத தெய்வ சான்னித்தியம் உணரப்பட்டது. அனைத்து மக்களும் நீதிபதி முத்துசாமி ஐயரும் அந்தத் தூய துறவிக்கு மரியாதை தெரிவிக்கும் வகையில் எழுந்து நின்றார்கள். வள்ளலாருக்கு எதிராக வழக்குத் தொடுத்த ஆறுமுக நாவலரும் தம்மையறியாமல் எழுந்து நின்றார்.

    அதையே சான்றாதாரமாகக் கொண்ட முத்துசாமி ஐயர், வழக்குத் தொடுத்தவராலும் மதிக்கப்படும் உயர்நிலையில் உள்ள வள்ளலார் எழுதியவற்றை அருட்பா என்று அழைப்பதில் தவறேதும் இல்லை என்று தீர்ப்பளித்தார்.

    (இந்தப் புகழ்பெற்ற வழக்கில் தீர்ப்பு வழங்கிய டிஸ்டிரிக்ட் முன்சீப் முத்துசாமி ஐயர், காலப்போக்கில் நீதிபதியாகப் பதவி உயர்வு பெற்றார். சென்னை உயர்நீதி மன்றத்தில் நீதிபதி முத்துசாமி ஐயரின் உருவச் சிலை வைக்கப்பட்டுள்ளது.)

    வள்ளலார் போதித்த நெறிகளில் முக்கியமானது ஜீவகாருண்யம். புலால் உணவை வெறுத்தார் அவர். `கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி எல்லா உயிரும் தொழும்` என்ற வள்ளுவர் நெறியே வள்ளலார் நெறி. தனியொருவனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம் என்ற பாரதியாரின் சிந்தனை மரபு வள்ளலாரிடமிருந்து வந்தது. அணையா அடுப்பேற்றி வந்தவர்க்கெல்லாம் அன்னம் வழங்க ஏற்பாடு செய்த மகான் வள்ளலார்.

    வள்ளலார் ஐம்பது ஆண்டுகளும் ஐந்து மாதங்களும் இவ்வுலகில் தன் உருக்காட்டி எல்லா மானிடர் போலவும் வாழ்ந்து வந்தார். சொற்பொழிவுகள் மூலம் ஆன்மீகத்தைப் பிரசாரம் செய்துவந்த அவர் தம் இறுதிக் கட்டச் சொற்பொழிவுகளை நிகழ்த்தி முடித்தார். தம் வாழ்வின் கடைசி மூன்று மாதங்கள் மவுனத்தில் ஆழ்ந்தார்.

    1874 ஜனவரி முடிவில் மூன்று மாத மவுனத்தை விடுத்து, மீண்டும் பேசத் தொடங்கினார். பல முக்கியமான அறிவுரைகளை அடியவர்களுக்கு வழங்கினார். பின் படுக்கையில் சாய்ந்துகொண்டார்.

    தமது உருவம் எவருக்கும் புலப்படாதிருந்து சில காலத்திற்குப் பிறகு பிரணவ தேகமாக குருநிலை பெற்று சித்துகள் புரியும் என்று குறிப்பிட்டார்.

    அவர் உத்தரவிட்டபடி, கதவுகள் மூடப்பட்டன. சிறிதுகாலம் சென்றபின் கதவைத் திறக்கவே அங்கு வெறும் வெளிதான் இருந்தது. வள்ளலார் பஞ்ச பூதங்களால் ஆன உடலைப் பஞ்ச பூதங்களிலேயே கரைத்துக் கொண்டு உலகெங்கும் நிறைந்துவிட்டார்.

    `அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை` என்ற சொற்றொடர்கள் வள்ளலார் நமக்கு ஆக்கி அளித்த மந்திரங்கள். வள்ளலார் இப்போதும் தம்மை நாடும் அடியவர்களின் உள்ளங்களில் தோன்றி அருளாசி வழங்கி வருகிறார்.

    தொடர்புக்கு-thiruppurkrishnan@gmail.com

    • கருத்து பரிமாற்றம் என்ற அளவில் இருந்தவரை டேட்டிங்களில் பிரச்சனை இல்லை.
    • ஆன்லைன் டேட்டிங் மோசடி கும்பல், சம்பந்தப்பட்ட நபரிடம் உருக்கமாக பேசி முதலில் அவர்களை நம்ப வைப்பார்கள்.

    காதல்...

    உலகில் தோன்றிய அனைத்து உயிர்களுக்கும், இயற்கையாய் இருக்கும் உணர்வு.

    இன்று நேற்றல்ல மனிதன் தோன்றிய காலத்திலேயே காதல் உணர்வு அவனுக்கு இருந்தது.

    சங்க இலக்கியங்களில் கூட காதல் குறித்து பல பாடல்கள் உள்ளன.

    மனித குலத்துக்கு எப்படி வாழ வேண்டும் என்று வழிகாட்டிய அய்யன் வள்ளுவன் கூட அறத்துப்பால், பொருட்பாலுடன் இன்பத்துப்பாலையும் நமக்கு கொடுத்துள்ளார்.

    வாழ்தல் உயிர்க்கன்னள் ஆயிழை சாதல்

    அதற்கன்னள் நீங்குதல் இடத்து

    என்ற குறளில் காதலின் வேகம் குறித்து வள்ளுவர் குறிப்பிட்டுள்ளார்.

    அதாவது தனிமையில் சந்திக்க வரும் காதலி தன்னுடன் இருக்கும்போது, உடலோடு உயிர் இருப்பது போல் உள்ளது. அவர் பிரிந்து செல்லும்போது உயிரே பிரிவதுபோல் உள்ளது என்று காதலன் கூறுவதாக தெரிவித்துள்ளார்.

    எனவே... காதல் வயப்பட்ட இருவர் சந்தித்துக்கொள்வது ஒன்றும் புதிது அல்ல. அது ஆதிகாலம் தொட்டே இருந்து வருகிறது.

    டேட்டிங்

    காதல் சரி...

    அது என்ன... 'டேட்டிங்'

    ஆங்கிலத்தில் டேட்டிங் என்று கூறுவதற்கு தமிழில் பொருத்தம் பார்த்தல் என்று குறிப்பிடலாம்.

    பொதுவாக டேட்டிங் என்பது குறிப்பிட்ட தேதி மற்றும் பொது இடத்தில் ஒருவர் தனக்கு ஏற்ற துணையை தானே பொருத்தம் பார்த்து தேர்வு செய்வதற்கான ஒரு வாய்ப்பாக இந்த டேட்டிங் பார்க்கப்படுகிறது.

    முன்பெல்லாம் தாங்கள் விரும்புவரை தங்களது தோழன், தோழி மூலமாகவே தொடர்பு கொண்டார்கள். பிற்காலத்தில் கடிதங்கள் வாயிலாகவும், தொலைபேசி மற்றும் செல்போன்கள் மூலம் தொடர்பு கொண்டு பேசினர்.

    ஆனால் இப்போது அப்படி அல்ல... நமக்கான தேர்வை நாமே தேர்ந்து எடுத்துக்கொள்வோம் என்று தங்களின் மனம் கவர்ந்தவரை குறிப்பிட்ட ஒரு இடத்துக்கு வரச்சொல்லி, இருவரும் மனம் விட்டு பேசி... விருப்பங்களை அறிந்து, பிடித்து இருந்தால் தங்கள் துணையாக தேர்ந்து எடுப்பதை டேட்டிங் என்ற பெயரில் செய்கிறார்கள்.

    தடம் மாறும் நிலை

    கருத்து பரிமாற்றம் என்ற அளவில் இருந்தவரை டேட்டிங்களில் பிரச்சனை இல்லை.

    தனிமை சந்திப்புகள் எல்லை மீறி... உடல் ரீதியாக செல்லும் போதுதான் பிரச்சனையே ஏற்படுகிறது.

    இந்த சந்திப்புகள் திருமணத்தில் முடிந்தால், எந்த விவகாரமும் ஏற்படாது. அது நடக்காத சூழல் வந்தால்...?

    இன்றைய நிலையில் டேட்டிங் கலாசாரம் தடம் மாறும் சூழலில் இருப்பதால் பாதிக்கப்படுவர்கள் பலர் போலீஸ்நிலைய படிக்கட்டுகளில் ஏறவேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.

    செயலிகளால் வரும் ஆபத்துகள்

    அறிவியல் வளர்ச்சியின் குழந்தையான செல்போனுக்கு, தம்பி-தங்கைகளாக பல்வேறு செயலிகள் வந்துவிட்டன. அவைகளில் பல நல்லவை. ஒரு சில செயலிகள் தீங்கானவை.

    இன்று பல்வேறு செயலிகள் இணையத்தில் கொட்டிக்கிடக்கின்றன. அவற்றில் டேட்டிங்கிற்கும் செயலிகள் வந்துவிட்டன. அதில் சில செயலிகள் பாதுகாப்பானவை. சில மிகவும் ஆபத்து நிறைந்தவை.

    இந்த செயலி மூலம் ஒருவர் தனது விருப்பங்களை பதிவிட்டு, தேவையானவர்கள் தங்களை தொடர்பு கொள்ளலாம் என்று அறிவித்து விடுவார்கள். இதனை நம்பி தொடர்பு கொள்ளும் அப்பாவிகள் மோசம் போவதும் உண்டு.

    சமீபத்தில் சென்னை வடபழனி பகுதியில், டேட்டிங் செயலி மூலம் தான் தொடர்பு கொண்ட பெண்ணை சந்திக்கச் சென்றவரை, ஒரு கும்பல் சுற்றி வளைத்தது. அவர்கள் அந்த பெண்ணுடன் அவரை படம் எடுத்து மிரட்டி பணம் பறித்துள்ளனர்.

    இதுபோன்று பல சம்பவங்கள் நடந்துள்ளன. இதில் ஏமாந்தவர்களில் பலர் போலீசில் புகார் கொடுப்பது இல்லை. இது மோசடி கும்பலுக்கு நல்ல வாய்ப்பாக அமைந்து விடுகிறது.

    செயற்கை நுண்ணறிவு

    இதுபோன்ற மோசடி செய்பவர்கள், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்கிறார்கள். அவர்களது குறியே நடுத்தர வயதுக்காரர்கள்தான்.

    குடும்ப சுமை, பொருளாதார சிக்கல் போன்றவற்றில் சிக்கித்தவிக்கும் நடுத்தர வயதுக்காரர்கள் சிலர் இதுபோன்ற மோசடி கும்பலின் பிடியில் சிக்கி விடுகிறார்கள்.

    டேட்டிங் செயலியில் அழகான பெண் பேசுவதுபோல் தொடர்பு கொண்டு தனிமையான இடத்துக்கு அழைத்து, அவர்களை மிரட்டி பணம் பறிப்பது, அழகிகளுடன் உல்லாசமாக இருக்க வைத்து, அதன் மூலம் மிரட்டி பணம் பறிப்பது போன்ற சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.

    மேலும் ஆன்லைன் டேட்டிங் மோசடி கும்பல், சம்பந்தப்பட்ட நபரிடம் உருக்கமாக பேசி முதலில் அவர்களை நம்ப வைப்பார்கள். பின்னர் மருத்துவச் செலவு, கல்விக்கட்டணம் என்று ஏதாவது ஒரு கதையை கூறி சம்பந்தப்பட்டவர்களிடம் பணத்தை கறந்துவிடுவார்கள்.

    பொதுவாக இதுபோன்ற ஆன்லைன் டேட்டிங் மோசடிகள் டெல்லி, மும்பை, ஐதராபாத் போன்ற நகரங்களில் அதிகம் நடைபெற்று வருகின்றன. தற்போது சென்னையிலும் இந்த மோசடி அதிகரித்து வருகிறது.

    2022-ம் ஆண்டு வெளியான தேசிய குற்ற ஆவணக்காப்பக தரவுகளின்படி டேட்டிங் மோசடிகள் நாடு முழுவதும் 24 சதவீதம் அதிகரித்துள்ளது.

    கடந்த ஆண்டில் இந்த மோசடி மூலம் ரூ.200 கோடிக்கும் அதிகமாக பணப்பரிமாற்றம் நடைபெற்றுள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    டேட்டிங் செயலிகளின் பெருக்கத்தால், இதுபோன்ற மோசடிகளும் அதிகரிப்பதாக, சைபர் கிரைம் போலீசார் தெரிவிக்கிறார்கள்.

    இதுபோன்ற மோசடிகளில் ஈடுபடும் கும்பல்கள், பெரும்பாலும் தங்களது ஐ.டி.களை கண்டுபிடிக்க முடியாத அளவில் குறிப்பிட்ட சில செயலிகளை பயன்படுத்துவதால் அவர்களை அடையாளம் காண்பதில் போலீசாருக்கும் சிரமம் ஏற்படுகிறது.

    இதற்கெல்லாம் என்ன தீர்வு...

    பாதுகாப்பற்ற செயலிகளை தங்களது செல்போன்களில் பதிவிறக்கம் செய்யக்கூடாது.

    வெளியே தெரிந்தால் எங்கே பெயர் கெட்டுவிடுமோ என்ற அச்சமே மோசடி பேர்வழிகளின் மூலதனம். அதை உடைக்க வேண்டும்.

    பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக போலீசில் புகார் செய்ய வேண்டும்.

    • பொதுவாக 40 வயது என்பது ஒவ்வொரு பெண்களின் வாழ்க்கையிலும் நடுத்தர வயதுதான்.
    • அனைத்துக்கும் முக்கிய காரணம் உடல் ரீதியாக சில ஹார்மோன்களில் மாற்றங்கள் ஏற்படுவதால் தான்.

    ஒரு பெண்ணுக்கு 40 வயது பிறக்கும்போது கூடவே சில பிரச்சனைகளும், கேள்விகளும் சேர்ந்தே பிறக்கிறது. அதுபோன்று 40 வயது பெண்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சனைகளை பற்றி பார்க்கலாம்.

    பொதுவாக 40 வயது என்பது ஒவ்வொரு பெண்களின் வாழ்க்கையிலும் நடுத்தர வயதுதான். இந்த 40 வயது என்பது ஒரு அருமையான பருவ காலம். இந்த காலகட்டத்தில் நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை.

    உடல் ரீதியாக ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களால் சில பிரச்சனைகளை இந்த காலகட்டத்தில் பெண்கள் எதிர்நோக்குகிறார்கள். அதைத்தான் பெரி மெனோபாஸ் காலகட்டம் என்று சொல்கிறோம். பெரி மெனோபாஸ் காலகட்டம் என்பது பொதுவாக பெண்களுக்கு மாத விலக்கு நிற்க தொடங்குவதற்கான காலம் ஆகும். 43 வயதில் இருந்து 46 வயதுக்குள் பெண்களுக்கு மாதவிலக்கு நின்று விடும். அதற்கான ஆரம்ப நிலை மாற்றங்கள் 40 வயது காலகட்டத்தில் பெண்களுக்கு ஏற்படுகிறது. அதாவது உடல் ஆரோக்கியம் மற்றும் மன நிலைகளில் மாற்றங்கள் ஏற்படுகிறது. உறவு முறைகளிலும் சில மாற்றங்கள் ஏற்படும். குடும்ப ரீதியாகவும் மாற்றங்கள் ஏற்படலாம். பெரும்பாலும் உடல் ரீதியிலான விஷயங்களில் தான் முக்கிய மாற்றங்கள் இந்த கால கட்டத்தில் பெண்களுக்கு ஏற்படுகிறது. மெனோபாஸ் வருவதற்கு முன்பு ஏற்படும் பெரி மெனோபாசில் என்னென்ன பிரச்சனைகள் வரலாம் என்பதை பார்ப்போம்.

    இந்த காலகட்டத்தில் மெனோபாஸ் வந்துவிடுமா, மெனோபாஸ் வருவதற்கான பிரச்சனைகள் வந்து விடுமோ என்கிற சந்தேகம் பலருக்கும் ஏற்படுகிறது. ஏனென்றால் அதுவரையான காலகட்டத்தில் குழந்தைபேறு, குழந்தை பிறப்பு, பிரசவம் என்று இருந்த பெண்ணுக்கு இந்த காலகட்டத்தில் உடலிலும், மனதிலும் பலவிதமான மாற்றங்கள் ஏற்படுகிறது. இதற்கு பல அடிப்படையான காரணங்கள் உள்ளன. எனவே ஒரு பெண்ணுக்கு 40 வயது என்பதை அவரது வாழ்க்கையில் ஒரு முக்கியமான காலகட்டமாக கருதுகிறோம்.


    இந்த காலகட்டம் வயதான காலம் அல்ல. அதே நேரத்தில் இளம் வயதும் அல்ல. இது ஒரு நடுத்தர வயது. நிறைய பேருக்கு இந்த காலகட்டத்தில் ஒருவித பயம் வரத் தொடங்கும். இனி நமக்கு மெனோபாஸ் வந்துவிடும், வயதாவதற்கான மாற்றங்கள் வந்துவிடும், இதனால் பிரச்சனைகளும் வரும் என்கிற கவலைகள் அவர்களுக்கு ஏற்படும். ஆனால் இந்த கால கட்டம் என்பது அப்படி இல்லை. இன்னும் அவர்களுடைய வாழ்க்கையில் எதிர்பார்ப்புகள் நிறைய இருக்கும். அது நிறைவேற வேண்டி ஆசையும் இருக்கும். மனிதர்கள் சராசரியாக 65 வயதுக்கு மேல் உயிர்வாழும் காலகட்டத்தில் ஒரு பெண்ணின் வாழ்க்கையின் பாதி காலத்திற்கு தான் நீங்கள் வந்திருக்கிறீர்கள். இன்னும் ஒரு பாதி காலம் உங்கள் வாழ்க்கையில் இருக்கிறது என்பதை நீங்கள் உணர வேண்டும்.

    இது நடுத்தர வயது என்பதால் இந்த காலகட்டத்தில் சில மாற்றங்கள் பெண்களின் உடலில் ஏற்படுகிறது.

    பெண்கள் 40 வயதை கடக்கும் போது உடல் பருமன் அதிகமாகலாம். ஒல்லியாக இருப்பவர்களுக்கு கூட உடல் எடை அதிகரிக்கும். ஆடைகள் இறுக்கமாக மாறும். பல நேரங்களில் சோர்வு இருக்கும். அதுவரை சுறுசுறுப்பாக இருந்த வாழ்க்கை முறைகளில் மாற்றங்கள் வரும். உணவு வகைகளிலும் மாற்றங்கள் வரும். இனிப்பு சாப்பிட ஆசையாக இருக்கிறது என்பார்கள். அதுவரை பிடிக்காத உணவுகளை ஆர்வத்துடன் சாப்பிடுவதற்கான எண்ணங்கள் வரும். உணவு பழக்க வழக்க முறைகளில் மாற்றங்கள் ஏற்படும். அதுவரை உடற்பயிற்சி செய்து வந்தவர்களுக்கு இந்த காலகட்டத்தில் உடற்பயிற்சி செய்வதற்கு சோம்பல் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உண்டு.

    இவை அனைத்துக்கும் முக்கிய காரணம் உடல் ரீதியாக சில ஹார்மோன்களில் மாற்றங்கள் ஏற்படுவதால் தான். இந்த காலகட்டத்தில் பெரி மெனோபாஸ் வரும்போது சிலருக்கு தூக்கம் இல்லாமல் போவது முக்கியமான பிரச்சனையாக கருதப்படுகிறது. மேலும் இவர்களுக்கு மன சோர்வுகள் வரலாம். அதுவரை சுறுசுறுப்பான மனநிலையில் இருந்தவர்களுக்கு சோர்வு, தடுமாற்றம், மனக்கவலை ஆகியவை வரும். பல நேரங்களில் தலைவலி வரும். கண்களில் எரிச்சல் வரும். முக்கியமாக பெண்ணின் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் குறைவதால் பெண் உறுப்பில் உலர்வு தன்மை ஏற்படும்.

    குறிப்பாக பாலியல் உறவுகளில் ஏற்படக்கூடிய பிரச்சனைகள், கணவன், மனைவி உறவுகளில் ஏற்படக்கூடிய சில குறைபாடுகள் ஆகியவை இந்த காலகட்டத்தில் அதிகமாக எதிர்நோக்கும் விஷயங்கள் ஆகும். ஹார்மோன்களில் மாற்றங்கள் ஏற்படுவதாலும், குறிப்பாக ஈஸ்ட்ரோஜன் அளவு குறைவதாலும் பெண்ணுக்கு உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பிரச்சனைகள் அதிகமாக ஏற்படுகிறது.

    உடல் ரீதியாக ஏற்படக்கூடிய பிரச்சனை என்று எடுத்துக்கொண்டால் பெண் உறுப்புகளில் ஏற்படக்கூடிய உலர்வு தன்மை என்பது மிகவும் முக்கியமானது. இதுகுறித்த கேள்விகளை டாக்டர்களிடம் பலரும் கேட்பதுண்டு. டாக்டர் என்னுடைய பெண் உறுப்பு ரொம்ப உலர்வாக இருக்கிறது. உடலுறவின் போது லூப்ரிகேஷன்ஸ் இல்லை. இதனால் எங்கள் உறவுகளில் பிரச்சனை வருகிறது. கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படுகிறது. எனது கணவருக்கு ஆர்வம் இருந்தாலும் என்னால் ஒத்துழைப்பு கொடுக்க முடியவில்லை என்பார்கள். இந்த மாதிரியான பிரச்சனைகள் சாதாரணமாகவே பெண்களுக்கு இந்த காலகட்டத்தில் ஏற்படுகிறது.

    இந்த காலகட்டத்தில் முகத்தில் நிறைய சுருக்கங்கள் விழும். கண்களுக்கு கீழே வீக்கம் ஏற்படும். முடி கொட்டும். உடல் பருமன் ஏற்பட்டு இடுப்பு பகுதி அதிகரிக்கும். மார்பு பகுதி தொய்வாக ஆரம்பிக்கும். கை, கால்களில் ஆங்காங்கே வலி ஏற்படும். இவை அனைத்துமே ஹார்மோன் மாற்றங்களின் வெளிப்பாடு தான். மேலும் உலர்வு தன்மையால் சிறுநீர் பிரச்சனை வரும். சிறுநீரை அடக்குகிற தன்மை குறையும். சிறுநீர் கசிவு அதிகமாகும். கழிவறைக்கு செல்லும் முன்பே கட்டுப்படுத்த முடியாமல் சிறுநீர் போகும். இருமல், தும்மல் வரும்போது வியர்க்கும். கருப்பை இறக்கம் ஏற்படும். பல நேரங்களில் தொடர்ச்சியாக சிறுநீர் தொற்று ஏற்படலாம்.

    உலர்வுத்தன்மை காரணமாக உடலுறவில் ஆர்வம் இல்லாமல் போகலாம். உடலுறவின் போது வலிகள் ஏற்படலாம். உடலுறவின் போதும் அடிக்கடி சிறுநீர் தொற்று ஏற்படலாம். இவை இந்த காலகட்டத்தில் பெண்களை பாதிக்கிற முக்கியமான விஷயங்கள் ஆகும். இது தவிர ஈஸ்ட்ரோஜன் குறைவதாலும், ஹார்மோன் மாற்றங்களாலும் உடல் பருமன் ஏற்படும். கை கால்களில் ஒரு சில இடங்களில் வீக்கம் இருப்பது போல் தோன்றும். மார்பகங்கள் கனமாக இருப்பது போல் தோன்றும். பல நேரங்களில் நடந்தால் மூச்சு வாங்கும். தோலில் உலர்ந்த தன்மை ஏற்படலாம்.

    இதில் முக்கியமான தீவிர பாதிப்பு தான் ஹார்ட் பிளக்சஸ். இந்த காலகட்டத்தில் பெண்களுக்கு ஹார்மோன் குறைபாடு காரணமாக காலையில் எழுந்தவுடன் காபி குடிப்பார்கள். உடனே உடம்பு படபடவென்று வரும். தலைசுற்றல் வரும். மயக்கம் வரும். உடல் வியர்த்து போகும். இதுதான் ஹார்ட் பிளக்சஸ். இதுபோன்ற பாதிப்பு உடையவர்களுக்கு மனக்குழப்பம், தலைவலி, சரியான தூக்கமின்மை ஏற்படும். இதனால் சிலர் கோபப்படுவார்கள். சிலர் எதற்கெடுத்தாலும் அழுவார்கள், சண்டை போடுவார்கள். சிலர் எதற்கெடுத்தாலும் பயப்படுவார்கள். பல நேரங்களில் ரொம்ப சுறுசுறுப்பாக இருக்கும் சிலர் ஒரு மூலையில் போய் சோர்வாக அமர்ந்து விடுவார்கள்.

    இதுபோன்ற முக்கியமான உணர்வு ரீதியான அறிகுறிகள் தான் பெண்களுக்கு குடும்ப உறவில் பெரிய பிரச்சனைகளை உருவாக்குகிறது. இன்று குடும்பங்களில் ஏற்படுகிற பிரச்சனைகளுக்கு இது ஒரு முக்கிய காரணம். ஒரே நேரத்தில் பல வேலைகளில் ஈடுபடும் ஆர்வம் அவார்களிடம் குறைய ஆரம்பிக்கும்.


    இதற்கு முன்பு குழந்தைகளை பள்ளியில் கொண்டு போய் விடுவார்கள், சமைப்பார்கள், வீடுகளில் இருக்கும் பல வேலைகளை இழுத்து போட்டு செய்வார்கள். ஆனால் 40 வயதை தொட்ட பிறகு சோர்வு ஏற்படுவதால் எல்லா வேலைகளையும் முன்பு போல அவர்களால் செய்ய முடியாது. சில நேரங்களில் இந்த காலகட்டத்தில் அவர்களின் சிந்தனை திறன் குறைய தொடங்கும். ஞாபக சக்தி குறைவதன் மூலம் மன குழப்பங்கள் அதிகமாகும். இவை அனைத்துமே ஹான்மோன்களின் மாற்றங்களால் தான் ஏற்படுகிறது.

    அவர்களால் முழு கவனத்தை செலுத்தி ஒரு வேலையை உருப்படியாக செய்ய முடியாது. இதற்கு முன்பு 10 நிமிடத்தில் படித்து முடித்த ஒரு விஷயத்தை ஒன்றரை மணி நேரமாக படிப்பார்கள். இந்த விஷயங்கள் எல்லாமே பெரி மெனோபாஸ் காலகட்டத்தில் பெண்களை அதிகமாக பாதிக்கிறது. இந்த மெனோபாஸ் வரும் காலகட்டத்துக்கு முந்தைய காலகட்டத்தை எப்படி நாம் ஆரோக்கியமாக கொண்டு போவது என்பது ரொம்ப ரொம்ப முக்கியம்.

    இந்த கால கட்டத்தில் பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான விஷயங்கள் உண்டு. இதெல்லாம் இயற்கையாக நடக்கிற விஷயம். இதனை நீங்கள் நல்ல ஒரு புரிதலுடன் எதிர்கொண்டால் தேவையற்ற மனக் குழப்பங்கள், கணவன், மனைவி இடையே ஏற்படும் உறவுப் பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். பெண்களுக்கான சிறுநீர் தொற்று அறிகுறிகள், சோர்வுகள் இவற்றை சரியான முறையில் அணுகுவதற்கு இதனை பற்றி தெளிவாக தெரிந்து கொள்ளுதல் மிக மிக முக்கியம். இது ஏன் வருகிறது? எதனால் வருகிறது? எனக்கு என்ன பிரச்சனை என்று கவலைப்படாமல் இது இயற்கையாக நடக்கிற ஒரு விஷயம், ஒரு பெண் பருவமடைகிறாள், அதன் பிறகு மாதவிலக்கு வருகிறது. குறிப்பிட்ட வயதை அடைந்ததும் திருமணம் நடக்கிறது, குழந்தை பேறு வருகிறது. குழந்தை பேறு அடைந்த பிறகு மாத விலக்கு நிற்கிறது. இது இயற்கையான விஷயம். இதை எப்படி அணுகுவது என்பதை தெரிந்து கொண்டு இதை எதிர்நோக்கும் திறன் உங்களுக்கு இருந்தால் கண்டிப்பாக இந்த காலகட்டத்தை அருமையாக கடந்து நல்ல ஒரு மாற்றத்திற்குள் உங்களால் செல்ல முடியும்.

    இந்த காலகட்டத்தில் பெண்கள் செய்ய வேண்டிய முக்கியமான விஷயங்கள் என்னென்ன? ஒவ்வொரு பிரச்சனைகளையும் எதிர்கொண்டு கடந்து செல்வது எப்படி? பெரிமெனோ பாஸ் காலகட்டத்தில் பெண்கள் சந்திக்கும் பிரச்சனைகளுக்கு என்ன தீர்வு என்பதை தெளிவாக சொல்கிறேன்.

    அதை அடுத்த வாரம் பார்ப்போம்.

    செல்: 72999 74701 / 95000 11696

    • சாதனைக்கு வழி தைரியம் என்ற தன்னம்பிக்கை தான்.
    • தன்னம்பிக்கையும் மன உறுதியும் இன்றி எந்த ஒன்றையும் செய்ய முடியாது.

    உடல் குறையெல்லாம் இருந்தாலும் உலகம் புகழும் அளவு வெற்றி பெற்றதோடு அனைவருக்கும் எடுத்துக்காட்டான ஒரு வாழ்வை வாழ்ந்து காட்டலாம் என்று வாழ்ந்து காட்டிய பெண்மணி யார் தெரியுமா? ஹெலன் கெல்லர் என்ற அபூர்வமான பெண்மணிதான் அவர்.

    பிறப்பும் இளமையும்: அமெரிக்காவில் அலபாமாவில் உள்ள ஒரு சிறு நகரான டுஸ்கும்பியாவில் 1880-ம் ஆண்டு ஜூன் மாதம் 27-ம் தேதி பிறந்தார் ஹெலன் கெல்லர். பிறந்த 19வது மாதத்தில் குழந்தையாக இருந்தபோது அவர் கண் பார்வையை இழந்தார். காதால் கேட்கும் செவிப்புலன் சக்தியையும் இழந்தார்.

    அவரால் பேசவும் முடியவில்லை. புலன்களில் இயக்கம் பற்றிய சிக்கல் ஏராளமாக அவரிடம் இருந்தது.

    ஹெலனுடைய தாயார் தன் குழந்தைக்கு உதவி செய்வதற்கான தகுந்த நபரைத் தேட ஆரம்பித்தார். காது கேட்காத குழந்தைகளுக்காக உதவி புரிந்து வந்த அலெக்சாண்டர் கிரஹாம் பெல்லை அவர் நாடினார். பெல் அவரை மசாசூசெட்சில் இருந்த பெர்கின்ஸ் 'ஸ்கூல் பார் தி பிளைண்ட்' என்ற கண்பார்வையற்றோருக்கான பள்ளியை நாடுமாறு ஆலோசனை கூறினார்.

    ஹெலனின் தாயார் அந்தப் பள்ளியை நாடினார். பள்ளி ஹெலனுக்கு உதவி புரிய ஆன்னி சல்லிவன் என்ற ஒரு இளம் ஆசிரியையை அனுப்பியது. அவரே அந்தப் பள்ளியில் மாணவியாக இருந்தவர் தான். அவரும் பார்வை இழந்த ஒருவர்தான்.

    அவர் ஒரு மாதம் ஹெலனுடன் பழகி வந்து, பின்னர் பல பொருள்களின் பெயரைக் கற்றுத் தர ஆரம்பித்தார். பல பொருள்களை ஒவ்வொன்றாக ஹெலன் கையில் வைப்பார். அந்தப் பொருளின் பெயரைத் தன் விரல்களினால் கூறுவார். விரல்கள் மூலம் அந்தப் பொருளின் பெயருக்கான எழுத்தை உணர வைப்பார்.

    ஆனால் ஹெலனுக்கோ அவர் என்ன செய்கிறார் என்பதே முதலில் புரியவில்லை. அவரோ குருடு, செவிடு! தனது விரல்களில் ஏதோ ஒரு அசைவு ஏற்படுவதையும் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு அந்த அசைவு நகர்வதையும் மட்டும் அவரால் புரிந்து கொள்ள முடிந்தது.

    ஒரு நாள் ஹெலனின் கையில் ஆன்னி ஒரு கோப்பையைக் கொடுத்தார். விரல்களில் அசைவு ஏற்பட்டது. அவை கப் என்பதற்கான அசைவுகள்! அடுத்து அந்தக் கோப்பையில் நீரை ஊற்றினார். இப்போது வாட்டர் என்பதற்கான எழுத்துக்களுக்கான அசைவுகள் ஏற்பட்டன.

    ஹெலனுக்கோ ஒன்றுமே புரியவில்லை. முதலில் கப்க்கும் வாட்டருக்கும் வித்தியாசம் தெரியாமல் மாற்றி மாற்றிச் சொன்னார். அவருக்கு கோபம் கோபமாக வந்தது.

    ஆன்னி விடவில்லை. அவரை பம்ப் ஹவுசுக்குக் கூட்டிக் கொண்டு சென்றார். அங்கு அவர் நீரை பம்ப் செய்ய கோப்பையை ஹெலன் பிடிக்குமாறு செய்தார். இன்னொரு கையால் வாட்டர் என்பதற்கான ஸ்பெல்லிங்கை விரல் அசைவுகள் செய்து காட்டினார். ஹெலன் அசைவற்று நின்றார். அவரது முழுக் கவனமும் அந்த அசைவுகளின் மீது இருந்தது. இப்போது அவருக்குச் சற்று புரிய ஆரம்பித்தது.

    நீர் அவர் கையில் பாய ஆரம்பித்தபோது இனம் தெரியாத உணர்வு அவருக்குள் ஏற்பட்டது. அது சாவிலிருந்து மீண்டும் உயிர் பிழைத்தது போல அவருக்கு இருந்தது.

    இப்படித்தான் ஆரம்பித்தது அவரது படிப்பு!

    ஆன்னி தன் பணியில் தன்னை முழுவதுமாக அர்ப்பணித்துக் கொண்ட ஒரு அபூர்வமான ஆசிரியை! அவரால் தான் ஹெலன் கெல்லர் பேச முடிந்தது, எழுதப் படிக்க முடிந்தது. ஏன், பாடவும் கூட முடிந்தது!

    பல வருடங்கள் அவரிடம் படித்த பின்னர் ஹெலன் பெர்கின்ஸ் பள்ளிக்குச் சென்றார். ஆங்கிலத்தைத் தவிர பிரெஞ்சு மொழி, ஜெர்மானிய மொழி, கிரேக்கம், லத்தீன், ப்ரெய்லி ஆகிய மொழிகளையும் அவர் கற்றுத் தேர்ந்தார்.

    கடுமையாக உழைத்த பின்னர் 1900-ம் ஆண்டில் ரெட்கிளிப் கல்லூரிக்குச் செல்ல அவர் தயாரானார். 1904-ம் ஆண்டில் அவர் பட்டதாரியானார். செவிடாகவும் கண்பார்வையற்றவராகவும் இருந்து பட்டம் பெற்ற முதல் பெண்மணி என்ற பெருமையைப் பெற்றவர் அவர் தான்!

    1902-ம் ஆண்டு அந்தக் கல்லூரியில் படிக்கும்போதே அவர், 'தி ஸ்டோரி ஆப் மை லைஃப்" என்ற தனது சுய சரிதையை எழுதினார். ஜான் ஆல்பர் மேசி என்பவர் அவருக்கு உதவினார். தனது வாழ்நாளில் அவர் 14 புத்தகங்களையும் 475-க்கும் மேற்பட்ட கட்டுரைகளையும் எழுதினார்; உரைகளை நிகழ்த்தினார்.

    1939-ம் ஆண்டு தொடங்கி 1959-ம் ஆண்டு முடிய ஐந்து கண்டங்களில் உள்ள 39 நாடுகளுக்கு பயணம் செய்து அனைவருக்கும் அவர் உத்வேகம் ஊட்டினார். உலகப் பெண்மணி ஆனார்.

    சமுதாயத்தில் உடல் ஊனமுற்றோருக்காக அவர் குரல் கொடுத்தார். அத்துடன் பெண்களின் உரிமைகளுக்காகவும் அவர் பாடுபடலானார். குறிப்பாக அவர்களது ஓட்டுரிமைக்காக அவர் போராடினார். 1920-ல் அமெரிக்க சிவில் லிபர்டீஸ் யூனியனை நிறுவிய ஸ்தாபகர்களில் அவரும் ஒருவராக இருந்தார், ஒவ்வொரு மனிதரின் தனி மனித உரிமையை வலியுறுத்தும் சங்கமாக இது அமைந்தது.

    இரண்டாம் உலகப்போரில் காயமடைந்த ராணுவ வீரர்கள் இருந்த மருத்துவமனை

    களுக்குச் சென்று அவர்களுக்கு ஹெலன் ஆறுதல் கூறினார். அமெரிக்காவில் உள்ள கண் பார்வையற்றோருக்காக ஒரு நிறுவனம் தனியாக அமைந்தது. அதற்கென 20 லட்சம் டாலர் நிதியை அவர் திரட்டி உதவினார்.

    உயரிய விருதும் மறைவும்:

    அமெரிக்க ஜனாதிபதி லிண்டன் பி. ஜான்ஸன் 1964, செப்டம்பர் 14-ம் தேதியன்று அவருக்கு 'பிரெசிடென்ஷியல் மெடல் ஆப் பிரீடம்; என்ற அமெரிக்காவின் உயரிய சிவிலியன் ஹானர் விருதை அளித்தார்.

    ஹெலனின் குடும்பம்:

    ஹார்வர்ட் பயிற்றுவிப்பாளரான ஜான் மேசி என்பவரை 1905-ம் ஆண்டு ஹெலன் மணந்தார்.

    1936-ல் வருந்தத்தக்க ஒரு சம்பவமாக அவருக்கு கல்வி கற்பித்த ஆசிரியையான அன்னி சல்லிவன் மறைந்தார்.

    ஹெலன் தனது ஆசிரியையான ஆன்னி சல்லிவனைச் சந்தித்ததைப் பற்றி உளமார தனது சுய சரிதையில் குறிப்பிடுகிறார் இப்படி: "எனது வாழ்க்கையில் மிகக் குறிப்பிடத்தகுந்த ஒரு நாள் என்பது எனது ஆசிரியையான ஆன்னி மேன்ஸ்ஃபீல்ட் சல்லிவன் என்னிடம் வந்த நாள் தான். "ஆன்னி சல்லிவனின் பரிவும் ஹெலனின் விடாமுயற்சியுமே அவரது வெற்றிக்குக் காரணம்.

    ஹெலன் கெல்லரைப் பற்றிய படங்கள்:

    ஹெலனைப் பற்றி 'டெலிவரன்ஸ்' என்ற ஒரு படம் அவரது வாழ்கை வரலாற்றைச் சித்தரித்து 1919-ல் எடுக்கப்பட்டது.1959-ல் அவரைப் பற்றி 'தி மிராகிள் வொர்கர்' என்ற நாடகம் அரங்கேறியது. 1960-ல் இது புலிட்சர் விருதைப் பெற்றது. இதுவே அன்னி சல்லிவனை மையமாகக் கொண்ட திரைப்படமாகவும் எடுக்கப்பட்டது.

    மறைவு: 1968-ம் ஆண்டு ஜூன் முதல் தேதி தனது 87-ம் வயதில் கனெக்டிகட்டில் ஈஸ்டனில் அவர் மறைந்தார். வாஷிங்டனில் உள்ள செயின்ட் ஜோசப் சப்பலில் அவர் நல்லடக்கம் செய்யப்பட்டார்.

    "உலகில் சில மனிதர்களே இறக்காமல் இருக்கப் பிறக்கிறார்கள். அவர்களுள் ஹெலன்கெல்லரும் ஒருவர்" என்று அமெரிக்க செனேடர் லிஸ்டர் ஹில் அவரைப் போற்றிப் புகழாரம் சூட்டினார்.

    கண்பார்வையற்றோரின் சாதனைகள்: இந்து மகான்களில் சூர்தாஸ் கண்பார்வை இல்லாமலிருந்தும் கிருஷ்ண தரிசனத்தைப் பெற்ற வரலாற்றை நமது அறநூல்கள் எடுத்துக் கூறுகின்றன.

    செங்கல்பட்டுக்கு அருகில் உள்ள பூதூரில் பிறந்த அந்தகக்கவி வீரராகவ முதலியார் பிறவியிலேயே கண்ணொளியை இழந்தவர். அற்புதமான தமிழ்ப் பாடல்களை இயற்றிய இவர் இலங்கை சென்று பரராஜசேகர மன்னனைப் பாடி ஒரு யானை, பொற்பந்தம், ஒரு ஊர் ஆகியவற்றைப் பரிசிலாகப் பெற்று வந்தார்.

    பிறர் மனதில் இருப்பதை அறிந்து அதற்குத் தகுந்த பாடல் பாடுவதில் இவர் வல்லவர். இலங்கை மன்னன் நினைத்த சந்தேகத்திற்கு இவர் தக்க விடையைப் பாடலில் அளித்து அவரை பிரமிக்க வைத்தார்.

    கண் பார்வையற்றோருக்காக பிரெய்லி எழுத்து முறையை அறிமுகப்படுத்தியவர் கண்பார்வையற்ற லூயிஸ் ப்ரெய்லி (பிறப்பு 4-1-1809 மறைவு 6-1-1852) பிரபல ஆங்கில கவிஞரான 'பாரடைஸ் லாஸ்டைப்' படைத்த ஜான் மில்டன் கண் பார்வையற்றவரே. 1667-ல் இவர் படைத்த இந்த நூல் உலகப் புகழ்ப் பெற்றது.

    1907-ம் ஆண்டு அமெரிக்காவில் ஓக்லஹாமாவில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட செனேட்டரான தாமஸ் கோர் கண் பார்வையை இழந்தவர் தான்.

    ஆண்ட்ரியா பொசெல்லி, நார்மன் ஜெஃப்ரி, கேசி ஹாரிஸ், ரே சார்லஸ் உள்ளிட்ட இருபதுக்கும் மேற்பட்ட உலகப் புகழ் பெற்ற பாடகர்கள் கண்பார்வையற்றவர்களே.

    மவுண்ட் எவரெஸ்டின் மீது 25-5-2001இல் ஏறிய முதல் கண்பார்வையற்ற வீரர் என்ற புகழைப் பெற்றவர் எரிக் வெய்ஹென்மேயர் உலகப் புகழ் பெற்ற இசைக் கலைஞரான பீத்தோவனுக்கும், விஞ்ஞானியான தாமஸ் ஆல்வா எடிசனுக்கும் காது கேட்காது.

    உலகெங்கும் இது போன்ற உதாரணங்களைப் பரக்கக் காணலாம்.

    கண்பார்வை யற்றிருந்தாலும், காது கேட்காமலிருந்தாலும் சாதனைகள் புரிந்த பலரால் ஹெலன் உத்வேகம் ஊட்டப்பட்டார். அதே போல அவராலும் ஏராளமானோர் உத்வேகமூட்டப்பட்டனர்.

    பொன்மொழிகள்:

    ஹெலன் கெல்லரது பொன்மொழிகளில் சில: எனது வாழ்க்கை மிக சந்தோஷமான ஒரு வாழ்க்கை. ஏனெனில் எனக்கு அற்புதமான நண்பர்கள் இருந்தனர். செய்யவேண்டிய நல்ல விஷயங்கள் ஏராளம் இருந்தன. எனது குறைகளைப் பற்றி நான் நினைப்பதே இல்லை.

    அந்த குறைகள் என்னை ஒரு போதும் வருத்தமுறச் செய்ததும் இல்லை. ஒருவேளை ஒரு ஏக்கம் சில சமயம் இருந்திருக்கலாம், ஆனால் அது கூட மலர்க்கூட்டத்தின் இடையே புகுந்து செல்லும் தென்றலைப் போலத்தான் என்று சொல்லலாம். காற்று கடந்து செல்கிறது. மலர்கள் திருப்தியுடன் இருக்கின்றன.

    உலகில் மிக பிரமாதமான அழகிய விஷயங்களைப் பார்க்கவோ தொடவோ முடியாது. அவற்றை இதயத்தால் அனுபவித்து உணர மட்டுமே முடியும். உங்கள் முகத்தை பிரகாசத்தின் பக்கம் திருப்புங்கள், நிழலை நீங்கள் பார்க்க முடியாது.

    சாதனைக்கு வழி தைரியம் என்ற தன்னம்பிக்கை தான். தன்னம்பிக்கையும் மன உறுதியும் இன்றி எந்த ஒன்றையும் செய்ய முடியாது.

    ஜூன் 27:ஹெலன் கெல்லர் தினம்

    எவ்வளவு மோசமான சூழ்நிலையில் ஒருவர் இருந்தாலும் அவற்றையெல்லாம் மீறி வெற்றி காண முடியும் என்பதை மனித சரித்திரத்திற்கு உணர்த்தியவருள் முக்கியமான இடத்தைப் பெறுபவர் ஹெலன் கெல்லர்.

    ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 27 ஹெலன் கெல்லர் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அபாரமான சாதனை புரிந்த ஹெலன் கெல்லரை நினைவு கூரும் நாள் மட்டுமல்ல இது. துரதிர்ஷ்டவசமாக உடல் ஊனம் கொண்டோரை அவமதிக்காமல், ஒதுக்காமல் அவர்களை சமுதாயத்துடன் இணைக்க நம்மால் ஆன உதவியைச் செய்ய உறுதி பூண வேண்டிய நாளும் கூட இது தான்!

    • ஞாயிற்றுக் கிழமைகளில் மாரியம்மனுக்கு கூழ் ஊற்றி வீடுகளில் சிறப்பு பூஜைகள் செய்வார்கள்.
    • ஆடி மாதம் என்பது விவசாயிகளுக்கும் உகந்த மாதமாகும்.

    ஆடி மாதத்தில்தான் தட்சிணாயன புண்ணிய காலம் ஆரம்பிக்கிறது. அதாவது சூரியன் வடக்கில் இருந்து தெற்கு நோக்கி தனது பயணத்தை துவக்குகிறது. இந்த காலக்கட்டத்தில் பகல் பொழுது குறைவாகவும், இரவு நேரம் நீண்டும் காணப்படும். காற்றும் மழையும் அதிகமாக இருக்கும்.

    ஆடி மாதத்தில் வரும் வெள்ளிக்கிழமையும், செவ்வாய்க்கிழமையும் மிகவும் சிறப்பு வாய்ந்தது. ஆடி செவ்வாய் தேடிக் குளி என்பது பழமொழி. அதாவது செவ்வாய்க்கிழமை எண்ணெய் தேய்த்து தலை குளித்து, அம்மனை வழிபட்டு வந்தால் பெண்களின் மாங்கல்ய பலம் கூடும் என்பது நம்பிக்கை.

    ஆடி மாதம் என்றாலே அம்மன் கோவில்களில் திருவிழாவும், கூழ் ஊற்றுதலும், தீ மிதித்தலும் என்று களை கட்டும். ஆடி மாதம் என்பது அம்மனுக்கு உகந்தது என்றாலும், குறிப்பாக மாரியம்மன் வழிபாடு இன்னும் சிறப்பாகும். ஞாயிற்றுக் கிழமைகளில் மாரியம்மனுக்கு கூழ் ஊற்றி வீடுகளில் சிறப்பு பூஜைகள் செய்வார்கள்.

    ஆடி அமாவாசையில் குடும்பத்தின் முன்னோர்களுக்கு திதி கொடுப்பதும் புண்ணியத்தை அளிக்கும்.

    ஆடி மாதம் 18-ந் தேதி ஆடிப் பெருக்கு விழாவாகக் கொண்டாடப்படும். இந்த நாளில் நதிகளில் நீர்ப் பெருக்கு அதிகரிக்கும் என்பது நம்பிக்கை. அந்த நாளில், நதிக்கரை மற்றும் கடற்கரைகளில் குடும்பத்தினருடன் அமர்ந்து இரவு உணவு உண்பதும் மரபாக இருந்து வந்துள்ளது. புதிதாக திருமணமான புதுமணத் தம்பதிகள் நதிக்கரையில் நிலாச் சோறு சாப்பிடுவார்கள்.

    அன்றைய தினம் தாலி மாற்றிப் புதுத் தாலி அணிவதும் வழக்கம். திருமணமாகாத பெண்கள், விரைவில் திருமணமாக வேண்டும் என்று அம்மனை வேண்டிக் கொண்டு மஞ்சள் கயிற்றை கழுத்தில் கட்டிக் கொள்வார்கள். ஆடி மாதம் என்பது விவசாயிகளுக்கும் உகந்த மாதமாகும். விவசாயிகள் தங்கள் பணிகளை இந்த மாதத்தில்தான் துவக்குவார்கள். ஆடிப்பட்டம் தேடி விதை என்ற பழமொழியும் இதனால் தான் உருவாயிற்று.


    தமிழர்களுக்கு, ஆடி மாதம் வந்தாலே பண்டிகைகளின் அணிவகுப்பு ஆரம்பமாகி விடும். ஆடி மாதப் பிறப்பு முதல், தை மாதம் பொங்கல் வரை பலவித வழிபாடுகளிலும், கொண்டாட்டங்களிலும் மக்கள் தங்களை ஈடுபடுத்திக் கொள்வது தொன்றுதொட்டு இருந்து வரும் வழக்கமாகும்.

    ஆடி மாதத்தை பல தெய்வங்களுடன் தொடர்புபடுத்தி நம் முன்னோர்கள் பல விரதங்களை மேற்கொண்டு வழிபட்டு வந்தனர்.

    ஒரு வருடத்தை இரண்டு அயனங்களாக நம் முன்னோர்கள் வகுத்திருக்கிறார்கள். ஆடி மாதம் முதல் மார்கழி மாதம் முடிய தட்சிணாயனம். இது தேவர்களுக்கு இரவாகும். தை மாதம் முதல் ஆனி மாதம் முடிய உத்தராயண காலமாகும். இது தேவர்களுக்கு பகலாகும்.

    அதாவது ஆடிமாதமே, தேவர்களின் மாலைக்காலம் (6 மணி முதல்–8 மணி வரை) இந்த மாலை நேரத்தில் அனைத்து உயிருக்கும் அன்னையான அம்பிகையைத் துதித்து, அவள் அருளை வேண்டுதல் வேண்டும். ஆடி மாதத்தில் தான் பூமாதேவி அவதரித்தாள். பூமியில் வாழும் நமக்கு, மழை இல்லா விட்டால் எதுவும் நடக்காது! மழையே நீ பொழிவாய்!" என்று வேண்டு தல் செய்ய வேண்டும். உலகிற்கெல்லாம் தாயான அன்னை பராசக்திக்கு எம்மைக் காத்திட வேண்டி அவள் அருள் பெற ஆடி மாதம் பிறந்ததும் கூழ் காய்ச்சி கொழுக்கட்டை பிடித்து அவித்து அம்மனுக்கு படைப்பார்கள். அம்மன் கோவில்கள் எங்கும் கூழ்காய்ச்சி ஊற்றுவார்கள்.

    காற்றாலும் வெப்பத்தாலும் ஏற்படும் நோய்களை குணப்படுத்த அந்த முத்துமாரி அம்மன் மனது வைக்க வேண்டும் என்று வேண்டுதல் பண்ணுவர். வேப்பிலை மாலை சாற்றுதலும் எலுமிச்சைக்கனி மாலை சாற்றி வெப்பு நோய் தீர்க்க வழிபடுவதும் கால காலமாய் நடைபெற்று வரும் வழக்கமாகும். எலுமிச்சைசாறு, கரும்பு, இளநீர், பால், தயிர், சந்தனம், குங்குமம் ஆகியவற்றால் அபிஷேகம் செய்து அம்மனை குளிரச்செய்வர். பட்டுப்பாவாடை உடுத்தி பூமாலை சூட்டி அழகுபடுத்துவர். அம்மனுக்கு பிடித்தது வேப்பிலை மாலை அதை அழகுற அணிவித்து அழகாக்குவர். தயிர்சாதம், எலுமிச்சைசாதம், கூழ் கஞ்சி போன்றவைகள் படையல் இட்டு அன்னபூரணி எமக்கு என்றும் குறைவில்லாத வாழ்வை வளமுடன் தந்திட நிவேதனம் செய்து பழங்கள், வெற்றிலை, பாக்கு, தேங்காய், மஞ்சள், குங்குமம் ஆகியவற்றையும் சேர்த்து படைத்து தூபம் தீபம் காட்டி பூச்சொரிந்து பூமலர்களால் அர்ச்சித்து வழிபட வேண்டும்.

    ஆடி மாத சிறப்புகள் தொடர்பான 30 குறிப்புகள் வருமாறு:-

    1. ஆடி மாதத்தில் சிவனின் சக்தியை விட பார்வதியின் சக்தி அதிகமாக இருக்கும் என்பது ஐதீகம்.

    2. ஆடி அமாவாசை அன்று மறைந்த முன்னோர்களுக்கு பிதுர் கடமைகளை செய்தால், ஆண்டு முழுவதும் பித்ருக்களுக்கு கடன் கொடுத்த பலன் கிடைக்கும்.

    3. ஆடி பவுர்ணமி தினத்தன்று தான் ஹயக்ரீவர் அவதாரம் நிகழ்ந்தது. எனவே ஆடி பவுர்ணமி தினத்தன்று வைணவ தலங்களில் சிறப்பு வழிபாடு நடைபெறும்.

    4. ஆடி மாதம் சுக்ல தசமியில் "திக் தேவதா விரதம்" இருக்க வேண்டும். அன்று திக் தேவதைகளை அந்தந்த திக்குகளில் வணங்கி பூஜித்தால் நினைத்தது நடக்கும்.

    5. ஆடி மாதம் சுக்லபட்ச ஏகாதசி முதல் கார்த்திகை மாத சுக்லபட்ச ஏகாதசி வரை மாத உபவாசம் இருப்பது குடும்பத்தில் அமைதி ஏற்படுத்தும்.

    6. ஆடி செவ்வாய்க்கிழமைகளில் கோவிலில் எலுமிச்சம் பழ விளக்கு ஏற்றினால் கூடுதல் பலன்கள் கிடைக்கும். ஆனால் எலு மிச்சம் பழ விளக்குகளை ஒரு போதும் வீட்டில் ஏற்றக் கூடாது.

    7. ஆடி மாதம் வளர்பிறை துவாதசி நாளில் தொடங்கி கார்த்திகை மாதம் வளர்பிறை துவா தசி நாள் வரை பெண்கள் துளசி பூஜை செய்து வந்தால், நினைத்தது நடைபெறும். வீட்டில் சகல செல்வங்களும் குவியும்.

    8. கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை என்ற ஊரில் முருகன் கோவில் உள்ளது. ஆடி மாதம் கடைசி வெள்ளிக்கிழமை அங்குள்ள முருகனுக்கு கூடை, கூடையாக மலர்களை கொட்டி மலர் அபிஷேகம் செய்வார்கள். இதை அந்த பகுதி மக்கள் "ஆடியில் மலர் முழுக்கு, அழகு வேல்முருகனுக்கு" என்று சொல்வார்கள்.

    9. ஆடிப்பெருக்கு திருவிழா ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் விமரிசையாக நடைபெறும். அப்போது பெருமாள் மண்டபத்துக்கு எழுந்தருள்வார்.

    10. ஆடி மாதம் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் காமாட்சியை வணங்கினால் திருமண தடைகள் விலகி சுபம் உண்டாகும்.


    11. ஆடி மாதம் முழுவதும் மீனாட்சியை வழிபட்டால் குடும்பத்தில் அமைதி ஏற்படும்.

    12. ஆடி மாதம் முத்து மாரியம்மனை மனம் உருக வழிபட்டால் திருஷ்டிகள் விலகி விடும்.

    13. ஆடி மாதம் சுக்ல துவாதசியில் மகா விஷ்ணுவை நினைத்து விரதம் இருந்தால் செல்வம் பெருகும்.

    14. ஆடி மாதம் சுக்ல பட்ச ஏகாதசி தினத்தன்று அன்னதானம் செய்தால் சகல பாக்கியங்களும் கிடைக்கும்.

    15. ஆடி மாதம் சுக்லபட்ச திரயோதசியில் பார்வதி தேவியை நினைத்து விரதம் இருந்தால் நினைத்தது நடக்கும்.

    16. கஜேந்திரன் என்ற யானையை முதலை கவ்வியபோது அந்த யானை "ஆதிமூலமே" என்ற கதற உடனே திருமால் சக்ராயுதத்தை ஏவி யானையை காப்பாற்றினார். இதனை நினைவுப்படுத்தும் வகையில் ஆடி மாதம் எல்லா திருமால் தலங்களிலும் "கஜேந்திர மோட்ச வைபவம்" நடத்தப்படுகிறது.

    17. ஆடி மாதம் ஏகாதசி, துவாதசி நாட்களில் அரச மரத்தை சுற்றி வந்து வழிபட்டால் வாழ்வில் மகிழ்ச்சி உண்டாகும்.

    18. தஞ்சாவூரில் நிசும் சூதனி உக்கிர காளியம்மன் கோவில் உள்ளது. ஆடி பதினெட்டாம் பெருக்கு தினத்தன்று தஞ்சை மாவட்ட கிறிஸ்தவர்கள் அங்கு ரொட்டி, ஆட்டுக்கறி படையலிட்டு வழிபடுவதை வழக்கத்தில் வைத்துள்ளனர்.

    19. ஆடி மாத வெள்ளிக்கிழமைகளில் மகா லட்சுமியை வழிபட்டால் வீட்டில் செல்வம் சேரும்.

    20. ஆடி மாதம் ஏதாவது ஒரு வெள்ளிக்கிழமை அம்மனை ஆவாகனம் செய்து வீட்டுக்கு வரவழைத்து வழிபடுவது சிறப்பே தரும்.

    21. ஆடி மாதம் குத்துவிளக்கை லட்சுமியாக பாவித்து அலங்கரித்து வழிபடுதல் வேண்டும்.

    22. ஆடி மாதம் அம்மனுக்கு பால் பாயாசம், சர்க்கரைப் பொங்கல் வைத்து வணங்குதல் வேண்டும்.

    23. அம்மனை வழிபடும் போது மறக்காமல் லலிதாசகஸ்ர நாமம் சொல்ல வேண்டும்.

    24. ஆடி மாதம் வீட்டில் சிறப்பு பூஜைகள் செய்யும் போது சிறு பெண் குழந்தைகளை அம்மனாக பாவித்து, உணவு கொடுத்து, ரவிக்கை, சீப்பு, குங்குமச்சிமிழ், கண்ணாடி, வளையல், தாம்பூலம் கொடுக்க வேண்டும்.

    25. ஆடிப்பூரத்தன்று ஆண்டாள் பிறந்தாள் என்பது உங்களுக்குத் தெரிந்து இருக்கும். ஸ்ரீவில்லிப்புத்தூர் கோவிலில் ஆடிப்பூரத்தன்று ஆண்டாளை நந்தவனத்துக்கு எழுந்தருள செய்வார்கள். அப்போது திருப்பாவை, நாச்சியார் திருமொழி, திருப்பல்லாண்டு பாசு ரங்கள் பாடப்படும். இதனால் ஆண்டாள் மனம் குளிர்ந்து இருப்பாள். அந்த சமயத்தில் ஆண்டாளை வழிபட்டால், உங்களது எல்லா பிரார்த்தனைகளும் நிறைவேறும்.

    26. ஆடி மாதம் அம்மனுக்கு சாற்றப்படும் வளையல் களைப் பெண்கள் அணிந்து கொண்டால் திருமண பாக்கியம், குழந்தை பாக்கியம், சகல நலன்களையும், நீங்காத செல்வத்தையும் பெறலாம் என்பது ஐதீகம்.

    27. ஆடி மாத வெள்ளிக்கிழமைகளில் அதிகாலையில் எழுந்து குளித்து, தூய ஆடை அணிந்து, சாணத்தைப் பிள்ளையாராகப் பிடித்து, செவ்வரளி, செம்பருத்தி, அறுகு கொண்டு சூர்யோதயத்திற்கு முன்னர் விநாயகரை பூஜிக்க வேண்டும். வாழையிலை மீது நெல்லைப்பரப்பி அதன் மீது கொழுக்கட்டை வைத்து விநாயகரை வழிபட செல்வம் கொழிக்கும்.

    28. ஆடி மாதத்தை "பீடை மாதம்" என்று ஒதுக்குவது, அறியாமையால் வந்த பழக்கம். உண்மையில், "பீட மாதம்" என்றுதான் பெயர். அதாவது மனமாகிய பீடத்தில் இறைவனை வைத்து வழிபடவேண்டிய மாதம் என்பதே சரியானது.

    29. ஆடி பவுர்ணமியன்று சிவபெருமானுக்கு திரட்டுப்பால் அபிஷேகம் செய்து, கருப்புப் பட்டாடை, நூறு முத்துக்கள் கோர்த்த மணி மாலை, கருஊமத்தம் பூமாலை அணி வித்து, மூங்கில் அரிசிப் பாயாசம் படைத்து வழிபட்டால் எப்பேர்ப்பட்ட பகையும் விலகும்.

    30. பொதுவாகவே வெள்ளிக்கிழமைகள் அம்பாளுக்குரிய சிறந்த நாட்களாகும். இதனோடு அயனத்துக்குரிய சிறப்பும் சேருவதால் ஆடி மாதத்தில் வரும் வெள்ளிக்கிழமைகள் அம்பாளுக்குத் தனிச்சிறப்பு கொண்டவையாகக் கருதப்படுகின்றன.

    • கர்ம வினைப் பதிவை முழுமையாக அனுபவிக்க வைப்பவர்கள் ராகு-கேதுக்கள்.
    • ராகு தான் அமர்ந்த பாவகத்தின் செயலையே பிரம்மாண்டப்படுத்தும்.

    மனித குலத்தையே அச்சுறுத்தலோடு, பதட்டத்தோடு வைத்திருக்கும் ஒரு தோஷம் உள்ளது எனில் அது ராகு-கேது தோஷமாகும்.ஒரு ஜாதகத்தில் உள்ள பன்னிரெண்டு கட்டங்களில் ஏதேனும் இரண்டு கட்டங்களை தன் கட்டுக்குள் வைத்துக் கர்ம வினைப் பதிவை முழுமையாக அனுபவிக்க வைப்பவர்கள் ராகு-கேதுக்கள். ராகு தான் அமர்ந்த பாவகத்தின் செயலையே பிரம்மாண்டப்படுத்தும்.

    கேது சுருக்கும். ராகு-கேதுவினால் தான் ஒருவர் மிகப் பெரிய யோகத்தையோ அல்லது அவயோகத்தையோ சந்திக்கின்றார்கள். 12 பாவகங்களில் 8 பாவகங்களில் ராகு, கேதுகள் அமர்ந்த கர்ம வினைப் பதிவுக ளுக்கான விளக்கங்களை கடந்த வாரம் பார்த்திருந்தோம். மீதம் உள்ள பாவகங்களை இப்போது பார்ப்போம். இதில் கொடுக்கப்பட்ட பலன்கள் அனைத்தும் அவரவர் ஜென்ம லக்னத்திற்கே உரியது. ராசிக்கு அல்ல.

    9-ல் ராகு 3-ல் கேது

    தந்தை மகனை பிரித்தல், ஒருவரை ஆதரவிலக்கச் செய்தல், ஒருவரின் உயர் கல்விக்கு தடை செய்தவர்கள், குரு துரோகம், குரு தட்சனையில் குறை வைப்பது , பிற மதத்தை இழிவு படுத்துவது போன்ற குற்றம் செய்தவர்களுக்கு இந்த கிரக அமைப்பு ஏற்படும்.

    அதனால் இந்த ஜென்மத்தில் கற்ற வித்தை பலனில்லாமல் போவது , படிப்பிற்கு தொடர்பில்லாத வேலை யின் மை, முறையான அங்கீகார மின்மை, மரியாதை குறைவு ஆகியவை ஏற்படும். கோச்சாரத்தில் 9-ல் ராகு 3-ல் கேது வரும் போது தந்தை, தந்தை வழி உறவினர்களுட ன்கருத்து வேறுபாடு, பூர்வீகத்தை விட்டு வெளியேறும் நிலை, பதவி இழப்பு ஏற்படும்

    பரிகாரம்

    சித்தர்கள் ஜீவ சமாதியை வழிபாடு செய்வது நல்ல பலன் தரும் . காசி, கயா, ராமேஸ்வரம், தேவிபட்டினம் போன்ற புனித தலங்களில் நீத்தார் கடன் தீர்க்க வேண்டும். அமாவாசை நாட்களில் உணவு, தண்ணீர் தானம் செய்து வரவேண்டும்.

    10-ல் ராகு 4-ல் கேது

    நில மோசடி, தவறான முறையில் அபகரித்த பொருள், தவறான நடத்தை,ஒருவரின் தவறான நடத்தைக் காரணமாக இருப்பவர், தவறான கர்ம வினைப் பரிகாரம் செய்து வைத்தல், நம்பிக்கை மோசடி ஆகிய வற்றுக்கான வினைப் பதிவு.

    இந்த அமைப்பு உடையவ ருக்கு ஆரம்பக் கல்வி தடை, உடல் நலக் கோளாறு , சரி செய்ய முடியாத வாஸ்த்து குறைபாடு உள்ள வீட்டில் வாழும் நிலை அல்லது விருத்தி இல்லாத வீடு, மனை வாங்கும் நிலை ஏற்படும். கோச்சாரத்தில் 10-ல் ராகு, 4-ல் கேது வரும் போது ஒருவர் தனது தந்தைக்கு கர்ம காரியம் செய்ய முடியாத நிலை, தவறான நில முதலீடு , பூர்வீக சொத்து அரசால் அபகரிக்கப்படுதல் போன்ற நிலை உருவாகும்.

    பரிகாரம்

    முறையான பட்டா இல்லாத நிலத்தை பட்டா செய்து கொள்ள வேண்டும். வாஸ்து குறைவான இடத்திற்கு வாஸ்து சாந்தி பூஜை செய்ய வேண்டும். ஆரம்ப கல்வி பயிலும் குழந்தைகளுக்கு புத்தகம், நோட்டு தானம் செய்ய வேண்டும். ஊரின் மேற்கு பகுதியில் உள்ள புற்றை வழிபாடு செய்ய வேண்டும்.

    11-ல் ராகு 5-ல் கேது

    கருச்சிதைவு செய்தவர்கள், அதற்கு காரணமாக இருந்தவர்கள், கோவில் சிலையை திருடியவர்கள், புற்றை இடித்தவர், ஒருவரை மனநோயாளியாகச் செய்து அதன் மூலம் பொருள் ஈட்டியவர்களுக்கு, நல்ல காதலை பிரித்தவர்களுக்கு இந்த அமைப்பு ஏற்படும்.

    இதன் பலனாக இந்த பிறவியில் ஆசைப் பட்டதை அடைய முடியாமை, குழந்தையின்மை, குழந்தைகளை பிரியும் நிலை , பூர்வீகத்தை விட்டு வெளியேறுதல், உழைப்பிற்குரிய ஊதியமின்மை ஏற்படும். கோச்சாரத்தில் 11-ல் ராகு 5-ல் கேது வரும் போது குழந்தைகளால் அவமானம், பூர்வீகத்தை விட்டு வெளியேறும் நிலை ,தியாகியாக வாழ வேண்டிய நிலை உருவாகும்.

    பரிகாரம்

    குலதெய்வ வழிபாட்டை வலிமைப்ப டுத்துவதுடன், சர்ப்பம் உள்ள புற்றை வழிபாடு செய்து வர வேண்டும்.

    12-ல் ராகு 6-ல் கேது

    தனது முரட்டு பிடிவாதத்தால் ஒருவரை அடிமைப்படுத்துவது, காயம் ஏற்படுத்துவது , நோய் ஏற்படக் காரணமான உணவுப் பொருள் விற்பவர் , நோய் பரவக் காரணமாக இருந்தவர்களுக்கு இந்த கிரக அமைவு ஏற்படும்.

    அதன் பலனாக இந்த பிறவியில் இனம் புரியாத நோய்கள், இனம் புரியாத பிரச்சினைகள் உரிமையை நிலை நாட்ட முடியாமை ஏற்படும். கோச்சாரத்தில் 6 ல் கேது 12ல் ராகு வரும் போது நோய் தாக்கம், கடன் தொல்லை, வம்பு வழக்கு,ஈடு செய்ய முடியாத இழப்பு இருக்கும்.

    பரிகாரம்

    விநாயகர், லட்சுமி நரசிம்மர் வழிபாடு நல்ல பலன் தரும். ஆசைக்கு அளவு கோல் வைத்திருப்பவருக்கு இந்த கிரக அமைப்பு பாதிப்பை ஏற்படுத்தாது. மேலே கூறிய அனைத்தும் தசா காலங்களில் அதிகமான பலனையும் புத்திகாலங்களில் மிதமான சுப, அசுப பலனைத் தருகின்றன. மற்ற நேரங்களில் எந்த பாதிப்பும் நேராது. கோச்சார கிரகங்கள்

    தசா புத்தியுடன் தொடர்பு பெறும் போது மட்டுமே சம்பவம் நடக்கும். அத்துடன் 9ம் அதிபதி பெற்ற வலிமைக்கு ஏற்ப சுப, அசுப தன்மையில் மாற்றம் இருக்கும். உரிய பரிகாரங்களை கடைபிடிக்க மேன்மையான பலன் உண்டு.

    மரபியலும் ராகு-கேதுவும்

    ஒருவரின் தந்தை மற்றும் தாய்வழி முன்னோர்களின் பாவம் மற்றும் புண்ணியத்தின் அடிப்படையிலேயே ஜாதகத்தில் ராகு/கேதுக்களின் நிலைப்பாடு இருக்கும்.மனிதர்களின் மரபியல் தன்மையான பாவ புண்ணியங்களை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்பவர்கள். இவர்கள் தான்.

    ஒரு ஆன்மா பல்வேறு பிறப்புகளில் செய்த வினைப் பதிவுகள் அனைத்தையும் சேமித்து வைக்கும் பெட்டகமாக விளங்குவதும், ஒவ்வொரு பிறப்பிலும் வேறு வேறு உடலில் இருக்கும் ஆன்மாவிற்கு அதன் அலைவரிசைக் கேற்ப வினைகளின் நன்மை தீமைகளை அனுப்பி அவ்வுடலை அனுபவிக்க செய்பவர்கள்.இவர்கள்.

    நெருப்பு

    மேஷம், சிம்மம், தனுசு ஆகிய மூன்று நெருப்பு ராசியில் உள்ள ராகுவினால் ஏற்படும் சுப அசுப பலன்கள் ஜாதகரை வேகமாக சென்றடையும். அதனால் ஏற்படும் பாதிப்பு வாழ்நாளில் சில குறிப்பிட்ட காலத்தை மட்டும் வழி நடத்தும். சுப, அசுபத்தின் சுவடை ஜாதகர் உணரும் முன்பே நீங்கி விடும்.வருவதும் தெரியாது. போவதும் தெரியாது.

    பரிகாரம்

    நெருப்பு ராசியில் உள்ள ராகு கேதுவின் பாதிப்பைக் குறைக்க மலை மலை சார்ந்த இடங்கள், நெருப்பு தத்துவத்தை உணர்த்தும் கோவில்களுக்கு செல்ல வேண்டும். திருவண்ணா மலை செல்லலாம். அல்லது குல இஷ்ட தெய்வத்திற்கு தீபம் போடுதல், விளக்கேற்றுதல் , ஹோமங்கள் நடத்துதல் , தீச்சட்டி எடுத்தல் , அக்னி குண்டம் இறங்குதல் போன்றவை கள் மூலம் பாதிப்பைக் குறைக்க முடியும்.

    நிலம்

    ரிஷபம், கன்னி, மகரம் ஆகிய மூன்று நில ராசியில் உள்ள ராகு கேதுவினால் ஏற்படும் அனைத்து இன்ப துன்பங்களும் நிதானமாக ஜாதகரை வழிநடத்தும். நீண்ட காலத்திற்கு நிலையாக இருக்கும். ஏன், வாழ்நாள் முழுவதும் கூட வழி நடத்தும்.

    பரிகாரம்:

    காடு, காடு சார்ந்த இடங்களில் உள்ள கோவில்களுக்கு பாதயாத்திரை செல்லலாம். சபரி மலை ஸ்ரீ அய்யப்பன் வழிபாடு. நிலத் தத்துவ கோவிலான காஞ்சீபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோவில் சென்று வழிபடலாம். அல்லது கோவில் உலவாரப்பணி, பொதுப் பணிகள், மரம் வளர்த்தல், முளைப்பாரி கட்டி வழிபடுதல் போன்றவற்றில் ஈடுபடலாம்.

    காற்று

    மிதுனம், துலாம், கும்பம் ஆகிய காற்று ராசியில் உள்ள ராகுவினால் ஏற்படும் அனைத்து நேர்மறை, எதிர்மறை பலன்க ளும் விருந்தினர் போல் வரும் போகும். மீண்டும் வரும். மீண்டும் போகும். இந்த ராசிகளில் நிற்கும் ராகு, கேது வினால் உருவாகும் பலன்களை எப்பொழுது வரும் எப்படி வரும் என்று யூகிக்க முடியாது.

    பரிகாரம்

    காற்று ராசி தத்துவத்தை உணர்த்தும் வாயு தலமான ஸ்ரீ காளஹஸ்தி சென்று வரலாம் அல்லது காரியசித்தி ஸ்தோத்திர பாராயணம் செய்தல் , ராம நாம பாராயணம் அல்லது எழுதுதல், வாசனை திரவியங்கள், சாம்பி ராணி, ஊதுபத்தி வழிபாட்டிற்கு பயன்படுத்துதல் போன்ற வற்றால் பயன் பெறலாம்.

    நீர்

    கடகம் ,விருச்சிகம், மீனம் ராசியில் உள்ள ராகு, கேதுவினால் ஏற்படும் அனைத்து நன்மை தீமைகளும் எதிர்பாராத விதத்தில் வந்தடையும். வந்தால் ஜாதகரை நன்கு உயர்த்தும் அல்லது பாதாளத்திற்கு கொண்டு சென்று விடும்.

    பரிகாரம்:

    நீர் ஸ்தலமான திருவானைக்காவல் கோவில் சென்று வழிபடலாம். அல்லது நீர் நிலைகள், கடல். நதி, ஆறு, குளங்களுக்கு சென்று நீராடலாம். அல்லது இஷ்ட குல தெய்வத்திற்கு, பால், பன்னீர், மஞ்சள் நீர் போன்றவற்றால் அபிசேகம் செய்யலாம்.

    ஜாதகட்டத்தில் தனக்கென்று சொந்த வீடு இல்லாத ராகு கேதுக்கள் தாம் நின்ற பாவகத்தினை சொந்த வீடாக்கி தனது பலன்களை வெளிப்படுத்துகிறது.

    ஒருவரின் ஜாதகத்தில் உள்ள தோஷங்களின் பாதிப்பு ஜாதகரின் உயிர் அல்லது பொருள் காரகத்து வதை பாதிக்கும். வீரியமான பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய கிரகம் ராகு கேது எந்த பாவகத்தில் உள்ளதோ அந்த பாவக ரீதியான உயிர் காரகத்துவம் மற்றும் பொருள் காரகத்துவத்தையும் சிதைக்கும் வல்லமை உண்டு. அதே நேரத்தில் அஷ்டம பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறாத தோஷம் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது.

    அஷ்டமபாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறும் தோஷம் ஜாதகரின் வாழ்க்கையை கேள்விக்குறியாக்கும். சர்ப்ப தோஷத்தால் ஏதேனும் அதிகப்படியான பாதிப்புகள் . இருந்தால் திருநெல்வேலி மாவட்டம் சங்கரன் கோவிலில் சென்று வர வேண்டும். சங்கரநயினார் கோவில். இக்கோயிலின் இறைவன் சங்கரலிங்கசுவாமி; இறைவி கோமதி அம்மன்.

    வாழ்வில் ஒருமுறையேனும் தரிசித்துப் பிறவிப் பயனை அடையவேண்டிய அற்புத திருத்தலம் சங்கரன் கோவில் சிவன் சன்னதி எதிரில் உள்ள பஞ்சநாக சிலைகள் மீது பால் அபிஷேகம் செய்தால் நாகதோஷம் விலகும்.

    இத்தலத்தில் சர்ப்ப விநாயகருக்கு ஞாயிற்றுக்கிழமை மாலை (4.30 முதல் 6.00) ராகு காலத்தில் பால் அபிஷேகம் செய்தால் ராகு,கேது தோஷம் நீங்கும். வீடுகளில் பூச்சி, பல்லி, பாம்புத் தொல்லை இருந்தால், சங்கரலிங்கனாருக்கு வேண்டிக் கொண்டு, அதன் வெள்ளி உருவங்களை வாங்கி காணிக்கையாக அளித்தால் தொல்லை நீங்கும் என்பது நம்பிக்கை.

    • சில நேரங்களில் சில கருத்துக்களை நான் சொல்வேன்.
    • கோவில் சில இடங்களில் சிதிலம் அடைந்து தோற்றம் அளித்தது.

    சிலரை பார்த்து சிலரோடு ஒப்பிட்டு அவர்கள் இருவருக்கும் 7-ம் பொருத்தம் என்பார்கள். அதேபோலத்தான் தெலுங்கு திரையுலகில் எனக்கும், ஒரு டைரக்டருக்கும் 7-ம் பொருத்தமா கத்தான் இருந்தது. சூரிய வம்சம் தெலுங்கில் தயாரிக்கப்பட்டது. தமிழில் அந்த படத்தில் தேவயானி நடித்து இருந்தார்கள்.

    அந்த படத்தின் டைரக்டர் பீமலேனி சீனிவாசராவ். அவருக்கும், எனக்கும் தான் அப்படி ஒரு 7-ம் பொருத்தம்.

    நான் எதைச்சொன்னாலும் அதற்கு நேர் மாறாகத்தான் அவர் பேசுவார். நான் சொல்வதைத்தான் டைரக்டர் கேட்க வேண்டும் என்று நான் நினைப்பதில்லை. ஆனாலும் சில நேரங்களில் சில கருத்துக்களை நான் சொல்வேன். இந்த காஸ்டியூம் இந்த காட்சிக்கு போட்டால் நன்றாக இருக்கும் என்பேன்.

    ஆனால் அதற்கு அவரோ அது ஒத்துவராது என்பார். இப்படி எந்த விஷயத்தை நான் சொன்னாலும் அவர் ஏற்க மாட்டார். அதற்கு எதிராக தான் சொல்வார். அதனால் எங்கள் இருவருக்கும் எப்போதுமே படப்பிடிப்பு தளத்தில் 7-ம் பொருத்தமாக தான் இருக்கும்.


    அவர் டைரக்டர் என்றதும் சரி தான் போச்சு... என்று நினைத்துக் கொண்டேன். திட்டமிட்டப்படி கேரளாவில் சாலக்குடியில் படப்பிடிப்பிற்காக புறப்பட்டு சென்றோம்.

    மலையாளத்தில் ஏற்கனவே நான் புகழ்பெற்று இருந்ததால் படப்பிடிப்பிற்கு மீனா வந்திருக்கிறார் என்று கேள்விப்பட்டு ஏராளமான ரசிகர்கள் கூடிவிட்டார்கள். அந்த கூட்டத்தை சமாளித்து படப்பிடிப்பை நடத்துவதோ சிரமமாக இருந்தது. எந்த பக்கம் சென்றாலும் பின்னாடியே ஒரு கூட்டம் ஓடி வரும். அதை பார்த்ததும் இவர்களிடம் இருந்து எப்படி தப்பித்து செல்லப்போகிறோம் என்று எனக்கு பயமாக இருக்கும்.

    ஆனால் வெங்கடேஷ் ஒரு இடத்தில் படப்பிடிப்பு முடிந்து பக்கத்தில் இன்னொரு இடத்திற்கு செல்வதாக இருந்தால் விறு விறுவென்று வேகமாக நடந்து செல்வார். அவருக்கு துணையாக கூடவே சிலர் செல்வார்கள். எனக்கும் துணையாக ஒன்றிரண்டு உதவியாளர்கள் இருந்தார்கள். இந்த காலத்தை போல் பாதுகாப்பிற்கு பவுன்சர்கள் அப்போதெல்லாம் கிடையாது.

    இப்படி நம்மை தனிமையாக விட்டு விட்டு வெங்கடேஷ் மட்டும் செல்கிறாரே என்று கோபமும் வந்தது. இப்படி நான் கூட்டத்துக்குள் சிக்கி சிரமப்பட்டதை அவரது உதவியாளர் அவரிடம் சொல்லியிருக்கிறார். அதை கேட்டதும் அய்யய்யோ நான் கவனிக்காமல் விட்டு விட்டேனே என்றவர் மறு நாளில் இருந்து அவருடன் தான் என்னையும் அழைத்துச்செல்வார். எனக்கு முன்பாக அவருக்கு காட்சி முடிந்து விட்டாலும் எனக்காக காத்திருப்பார். அதிலும் படப்பிடிக்கு தேர்வு செய்த இடங்கள் ரொம்ப கொடுமையானவை. சில இடங்களுக்கு பாதை கூட கிடையாது.


    கயிற்றில் தான் ஏறிச்செல்ல வேண்டும். ஆண்கள் எளிதாக ஏறிச்சென்று விடுவார்கள். நான் சேலை கட்டிக்கொண்டு கயிற்றில் ஏறும் போது கால்கள் தெரியும். இடுப்பு தெரியும். வெளியே நூற்றுக்கணக்கானோர்கள் நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டு இருப்பார்கள். அது எனக்கு மிகவும் அசவுகரியமாக இருந்தது. கூச்சத்தில் நெளிவேன். வேறு வழியில்லை. படத்திற்காக இப்படி எல்லாம் கஷ்டப்பட வேண்டி இருக்கிறதே என்று மனதுக்குள் நினைத்ததும் உண்டு. ஆனால் அந்த படம் வெளிவந்த போது அந்த காட்சிகள் அருமையாக அமைந்திருந்து. அது பட்ட கஷ்டங்களை மறக்க வைத்தது.

    மைசூர் என்றால் எல்லாருக்கும் உடனடியாக நினைவுக்கு வருவது சாமுண்டீஸ்வரி கோவில் மட்டும் தான். அதே மைசூரில் ஹோய்ச லேஸ்வரர் கோவில் என்றொரு கோவிலும் இருக்கிறது. அங்கு படப்பிடிப்புக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள்.

    அங்கு ஒரே ஒரு நட்சத்திர ஓட்டல் தான் உண்டு. அதிலும் சூட் அறைகள் இரண்டு மட்டும் தான். ஒன்று மெகா அறை, இன்னொன்று மின் அறை. ஓட்டல் மனேஜர் அதை சொன்னதும் சரி ஹீரோவுக்குதான் மெகா அறையை கொடுப்பார்கள் என்று நினைத்துக் கொண்டு நான் மினி அறையை கேட்டு வாங்கிக் கொண்டேன்.

    அதன் பிறகு வெங்கடேஷ் வந்திருக்கிறார். அவரும் மினி அறையை தான் கேட்டு இருக்கிறார். ஆனால் ஓட்டல் மானேஜர் ஹீரோயின் அந்த அறையை வாங்கி விட்டார் என்றதும் சரி பரவாயில்லை என்று சொல்லி இருக்கிறார். அவருக்கு முதுகு வலி உண்டு. மெகா அறையில் இரண்டு மெத்தைகள் தனித்தனியே போடப்பட்டு இருக்கும். அதில் படுப்பது அவருக்கு சிரமமாக இருந்து இருக்கிறது. இது மறுநாள் ஷூட்டிங் நடந்த போது தான் உதவியாளர்கள் மூலம் தெரிந்து கொண்டேன்.

    நான் அவரிடம் சென்று நீங்கள் மினி அறைக்கு சென்று விடுங்கள். நான் அந்த அறைக்கு செல்கிறேன் என்று சொன்னேன். ஆனால் அவர் பரவாயில்லை இன்னும் 2 நாட்கள் தான் சமாளித்துக் கொள்கிறேன் என்று அவர் சொன்னார். அவர் எனக்காக அந்த அறையிலேயே அவஸ்தை பட்டார் பாவம். கோவில் சில இடங்களில் சிதிலம் அடைந்து தோற்றம் அளித்தது.

    பெரிய அளவில் புகழ்பெற்ற கோவிலாக இல்லையே என்று நினைத்தேன். ஆனாலும் அந்த கோவிலின் வரலாறு பல நூற்றாண்டுகளை கடந்தது. மிகப்பெரிய பேரரசாக ஹொய்சாலா பேரரசே ஆட்சி செய்யும் போது தலைநகராக அந்த பகுதி இருந்ததாகவும், ஹொய்சாலர்கள் மூலம் கட்டமைக்கப்பட்ட கோவில் என்றும் இதன் வரலாற்று பின்னணி மிக பழமையானது என்றும் கூறினார்கள்.

    மிகப்பெரிய கோட்டைகளுடன், காட்சி அளித்த அந்த அரண்மனை கோவில் திரைப்படத்தில் வந்த போது மிக பிரமாண்டமாக தெரிந்தது. அந்த கோவிலில் வைத்து தான் சூரியவம்சம் படத்தில் பிரபலமான பாடலான 'கில கில நவே'என்ற பாடல் காட்சி படமாக்கப்பட்டது. இதில் நானும் வெங்கடேசும் டூயட் பாடுவோம். நூற்றுக்கும் மேற்பட்ட துணை கலைஞர்களும் ஆடுவார்கள். ஒரு பெரிய மன்னர் பரம்பரை ஆண்ட கோட்டையில் நாமும் அடி நமது வலாற்றை பதிவு செய்கிறோம் என்ற ஆனந்தம் மனதுக்குள்...

    அடுத்த வாரம் ஆனந்தமான தகவல்களுடன் வருகிறேன்..

    (தொடரும்...)

    ×