என் மலர்
சிறப்புக் கட்டுரைகள்

ஒரே பாடலில் எம்.எஸ்.வி.யின் பலவித ஜாலங்கள்
- ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படத்தில் பாடல்கள் முதலில், கதை காட்சி பின்னால் உருவானது.
- ஒரு பாடலை எப்படியெல்லாம் கம்போஸ் செய்யலாம் என்பதற்கு மாதிரியாக இந்தப் பாடலை இசைக்கல்லூரியில் பாடமாக வைக்கலாம், வைக்க வேண்டும்.
"கவியரசர் கண்ணதாசன் எழுதிய "பூ முடிப்பாள் இந்த பூங்குழலி"- என்றப் பாடலைப் பற்றி பார்த்தோம். திருமண அழைப்பிதழ் மற்றும் திருமண நேரலைக்கு ஏற்ற வரிகளையும், டி.எம்.சவுந்திர ராஜன் அதனைப் பாந்தமாகப் பாடியதையும், எம்.எஸ்.வி.நாதஸ்வரம், தவிலுடன் இசையமைத்ததையும், ஒவ்வொரு வரிக்கேற்ற காட்சியைப் பொருத்தமாக இயக்குநர் ஸ்ரீதர் இயக்கியதையும் பார்த்தோம்.
இன்னொரு சவாலான சூழலுக்கு கவியரசர் பாட்டெழுதியதையும் எம்.எஸ்.வி. இசையமைத்ததையும் நாம் பார்த்தே ஆகவேண்டும். 1978லும் கூட தனது இசை ஓயவில்லை என்று அவர் நிரூபித்த படம்"வருவான் வடிவேலன்"என்றப் படம்.
மிகவும் சிக்கலான சூழல். மலேசியா சென்று பத்துமலை முருகன் கோவிலில் கதைக்கேற்ற படப்பிடிப்பு நடத்திய அதன் இயக்குநர் கே.சங்கர், அங்கு திருவிழாவின் போது, நடக்கும் ஒவ்வொரு நிகழ்வுகளையும் படம் பிடித்துக் கொண்டு வந்துவிட்டார்.
வெட்டியும் ஒட்டியும் 10.02 நிமிடங்களுக்கு வரக்கூடியதாக தொகுத்தக் காட்சியை கவியரசரிடமும், எம்.எஸ்.வி.யிடமும் போட்டுக் காட்டினார். "கதையை தாண்டி கோவில் திருவிழாவையும், வழக்கமான சம்பிரதாயங்களையும் படம் பிடித்து விட்டேன். இந்தக் காட்சிகளைப் பார்த்து அதற்கேற்ற வரிகளை கவியரசர் எழுதி அதற்கு நீங்கள் மெட்டுப் போட்டு பாடல்தயார் செய்யணும்" என்று கே.சங்கர் சொன்னார்.
கவியரசர் எழுதிவிடலாம் காட்சியைப் பார்த்து.. ஆனால் 10.02 நிமிடம் பாடல் இதுவரை வந்ததேயில்லை. ஒருவரோ இருவரோ பாடினால் ரசிகர்களுக்கு அலுப்புத் தட்டிவிடும், பார்க்க மாட்டார்கள். எம்.எஸ்.வி இதை சவாலாக எடுத்துக் கொள்கிறார்.
பாடலை ராகமாலிகையில் அமைக்கிறார். டி.எம். சவுந்திரராஜன், சீர்காழி கோவிந்தராஜன், பி.சுசீலா, எல்.ஆர்.ஈஸ்வரி, பெங்களூர் ரமணியம்மாள், மற்றும் குழுவினருடன் தானும் சேர்ந்து பல வகை ராகங்களில் பாடவைத்து தெய்வீகமாக இசையமைத்து பாடலை சூப்பர் டூப்பர் ஹிட் ஆக்கிவிட்டார்.
'உலகம் சுற்றும் வாலிபன்' படத்தில் பாடல்கள் முதலில், கதை காட்சி பின்னால் உருவானது. 'வருவான் வடிவேலன்' படத்தில் "பத்துமலை திருமுத்து குமரனை பார்த்துக் களித்திருப்போம்" - என்ற பாடலுக்கான காட்சிகள் முன்னால் எடுக்கப்பட்டு பாடல் பின்னர் உருவானது என்றால் வியப்பாகத் தானிருக்கும்!!
'பத்தினி தெய்வம்' என்ற படம் 1957-ல் வந்தது. இந்த படத்தில், ஒரு பாடல் "மோகனப் புன்னகை ஏனோ அனுராகத்தின் இன்பமிதானோ" - என்ற தஞ்சை ராமையா தாஸ் எழுதியப் பாடல்!
இந்தப் பாடலின் சூழல் ஒரு பாட்டு ஆசிரியர் தனது மாணவிக்கு இசை சொல்லித்தருவது போன்ற பாடல்! பாடலில் டி.எம்.சவுந்திர ராஜன் குரலில் நாயகன் சொல்லித் தருவதாகவும், அதையே நாயகி கற்றுக் கொண்டு திரும்பி பி.சுசீலாம்மா குரலில் பாடுவதாகவும் வரும். இந்த பாடலின் நடுவே தன் மனதில் உள்ள காதலையும் சொல்லி விடுவது போல வரும்.
பாடலில் டி.எம்.எஸ். "சுரம் சொல்லம்மா" என்பார். பி. சுசீலா ஒவ்வொரு வரிக்கும் தகுந்த சுரங்களை சொல்லி பாடுவார். இது கொஞ்சம் புதுமை! பாடல் வரிகளுக்கு சுரம் சொல்வது புதுமை! இந்த பாணி எம்.எஸ்.வியின் பிற்கால பாடல்களில் நிறைய வந்தது.
குறிப்பாக,"எங்கிருந்தோ வந்தாள்" என்றப் படத்தில், "சிரிப்பில் உண்டாகும் ராகத்திலே பிறக்கும் சங்கீதமே" என்றப் பாடலை நாம் கேட்டிருக்கிறோம். பாடலின் கட்டமைப்பே புதுவிதம்! பி. சுசீலா வித விதமான சிரிப்பு சிரிப்பார். அத்தனை சிரிப்புக்கும் சுரம் பாடுவார் டி.எம்.எஸ். சிரிப்பானாலும், வசனமானாலும் கூட தாளகதியில் மெட்டுக்குள் தான் அடங்க வேண்டும். இது கொஞ்சம் சிரமம். பி.சுசீலா இயல்பாக சிரமம் தெரியாமல் பாடியிருப்பார்.
கி.பானுமதி கிருஷ்ணகுமார்
எம்.எஸ்.விஸ்வநாதன் சிறுவயதிலேயே தந்தையை இழந்தவர். தாத்தா, அம்மாவின் அரவணைப்பில் மட்டுமே வளர்ந்தவர். தான் வேலை செய்து வந்த கண்ணனூரில் பள்ளியில் பேரனை சேர்த்தார். ஆனால் பேரனோ படிக்க போகாமல் டிமிக்கிக் கொடுத்துவிட்டு பள்ளிக்கூடத்திற்கு பக்கத்தில் இருந்த ஒரு இசைப் பள்ளிக்கூடத்திற்குப் போய் வெளியே நின்றபடியே சங்கீத பாடங்களைக் கேட்டார் எம்.எஸ்.வி. இசைப் பள்ளியில் சேர கட்டணம் கட்ட வசதியில்லை.
படித்து தன்னை போல ஒரு நல்ல வேலைக்குப் போக வேண்டும் என்பது அவரது தாத்தாவின் ஆசை! ஆனால் பேரனுக்கோ, "புத்தகம் பையிலே, புத்தியோ பாட்டிலே, பள்ளியைப் பார்த்ததும் ஒதுங்குவோம் மழையிலே" என்ற கவிஞர் வாலியின் வரிகள் தான் பொருந்தியது!
நீலகண்ட பாகவதரிடம் கற்றுக் கொண்ட மாணவர்களிடம் கேட்ட கேள்விக்கு அவர்கள் யாரும் பதில் சொல்லவில்லை. பள்ளிக்கு வெளியே நின்று பாடங்களின் கருத்தாக உள்வாங்கிய எம்.எஸ்.வி சரியாக பதில் சொன்னார். அவரின் மேதமை நீலகண்ட பாகவதருக்கு பிடித்துவிட்டது. குருகுலம் போல குருவிற்கு பணிவிடைகள் செய்து இசையைக் கற்றுக் கொண்டார் எம்.எஸ்.வி! அந்த ஞானத்தை வைத்து நான்கே வருடங்களில் கண்ணனூர் டவுன் ஹால் அரங்கில் மூன்று மணி நேரம் மிக பிரமாதமான ஒரு கச்சேரியும் செய்து முடித்தார்.
நீலகண்ட பாகவதருக்கு ஒரு பழக்கம் இருந்தது, தங்களுக்குள் சாதாரணமாக பேசிக்கொள்ளும் பேச்சுகளின் ஒலிகளைக் கேட்டு அதற்கான சுரங்களை சொல்லும் படி எம்.எஸ்.வியைக் கேட்பாராம்! இது எப்படிப்பட்ட ஒரு பயிற்சி! இந்த பயிற்சி பெற்றதனாலோ, சொற்களுக்கு சுரங்களால் உயிர் கொடுக்க முடிந்தது அவரால்!
பாடல்களின் மெட்டுகள், வரிகளின் உணர்வுகள், பாவங்களை ஏந்தி நம்மை மயக்குவதை நாம் உணரலாம். இதற்கான அடித்தளம் குருவிடமிருந்து பயிற்சியால் வந்திருக்கலாம். அதனால்தான், அவரால், சிரிப்பையும் சுரம் பிரிக்க முடிந்தது என்றால் அதில் சந்தேகமேயில்லை!
எதையெல்லாம் சுரங்களாக மாற்றலாம்? அதற்கு உதாரணம் "வறுமையின் நிறம் சிவப்பு" என்றப் படத்தில் வந்த "சிப்பியிருக்குது முத்துமிருக்குது திறந்துப் பார்க்க நேரமில்லடி ராஜாத்தி" என்றப் பாடல் தான் அது! இந்தப் பாடலைத் தெரியாதவர்களே இருக்க முடியாது.
ஒரு நாடக நடிகை ஸ்ரீதேவி, ஒரு கவிஞனான நடிகர் கமலஹாசனுக்கு ஒரு சவால் விடுகிறார். நான் என்ன சொன்னாலும் நீங்க கவிதை எழுதுவீங்களா? அதற்கு சளைக்காமல் கவிஞன் கவிதை தொடுக்கும் விதம் தான் பாடல்!
இந்தப் பாடலின் ஒரு வரியைக் கூட அலட்சியமாகக் கடந்து விட முடியாது. இந்த பாடலில் எம்.எஸ்.வியின் படைப்புத்திறன் மொத்தமும் ஒளிரும்!
முதலில் ஸ்ரீதேவி "தந்தன்னா தத்தன்ன தைய்யன்ன தத்தத்தனா" என்று தத்தகரம் சொல்லுகிறார்.
இதற்கு கமலஹாசன், ஆஹான், "சிப்பியிருக்குது முத்துமிருக்குது திறந்துப் பார்க்க நேரமில்லைடி ராஜாத்தி" என்கிறார். இது கொஞ்சம் கிராமிய மெட்டாக வருகிறது.
அடுத்து "லல்லலல்ல" என்று ஸ்ரீதேவி தொடர்கிறார்.
கமலஹாசன், செந்தமிழில், "சிந்தையிருக்குது சந்தமிருக்குது கவிதைப் பாட நேரமில்லைடி ராஜாத்தி" என்கிறார். பாடிவிட்டு "எப்படி?" என்கிறார்!
ஸ்ரீதேவி, "ம்" என்று விசில் ஒலி தருகிறார். அதற்கு "சந்தங்கள்" என்று சொல் தருகிறார் கமலஹாசன்!
பிறகு 'நிசரி' என்று சுரம் சொல்கிறார். 'ம்ஹீம் ஹீம்' இத்தனை விதமான வெற்று வார்த்தைகளுக்கும் கவிதை வரி வருகிறது!
சரணத்தில் "னனனா னனன்னா" என்று ஸ்ரீதேவி சொல்ல, கமலஹாசன், "come on say it again" என்கிறார். ஆங்கில சொற்கள் பாட்டில் வந்துவிடுகிறது.
ஒரு இடத்தில் "தானே தானே தான்னா" என்பதை இந்துஸ்தானி மெட்டில் ஸ்ரீதேவி பாட "தேவை பாவை பார்வை" என்ற வரியை தருகிறார் கவியரசர்.
ரொம்பவும் எழுத கடினமான தத்தகரம் மெல்லிசை மாமன்னர் தர, கவியரசர் அழகான வரிகளை தந்துக் கொண்டே வருகிறார்!
"இப்ப பார்க்கலாம்" என்று ஸ்ரீதேவி ரோலர் கோஸ்டர் போல தத்தகரம் சொல்ல "ரதியும் நாடும் அழகில் ஆடும் கண்கள்" என்றார். ஸ்ரீதேவியின் கண் அப்படித் தானே இருக்கும்?
"சபாஷ்" என்று சக போட்டியாளரை மெச்சுகிறார் ஸ்ரீதேவி! இதற்கு பிறகு வருவது தான் செமசெம!
"உன்னைக் கண்டால் கவிஞர் இதயம் கொஞ்சும்.. கொடுத்த சந்தங்களில் என் மனதை நீயறிய நானுரைத்தேன்" என்று பாடலின் நடுவே தன் காதலை சொல்லிவிடுகிறார், கமலஹாசன்!
இப்போது இருவருக்கும் இடையே நிறைய இடைவெளி. ஸ்ரீதேவி நடந்து கமலஹாசனிடம் வந்து நிற்கும் வரை வெற்றொலி இருக்கிறது. அதுவும் 50 நொடிகளுக்கு மேல்! எம்.எஸ்.வியின் சில பாடல்களில் Pause வரும், ஆனால் அது மூன்று நான்கு நொடிகளுக்குத் தான் வரும். இந்த கோடிட்ட இடத்தை நிரப்பும் வேலையை கே. பாலசந்தர் எடுத்துக் கொள்கிறார். இருவரும் கைகோர்த்துக் கொண்டு சிப்பி இருக்குது முத்துமிருக்குது என்று பாடுகிறார்கள், ஹம்மிங்கில் முடிக்கிறார்கள். இந்தப் பாடலைப் பற்றி விளக்கமாக சொல்லக் காரணம் இருக்கிறது.
கவியரசரும், மெல்லிசை மாமன்னரும் பாடல் எழுத உட்காரும் போது நடக்கும் காட்சிகள் கண்கொள்ளா காட்சியாக இருக்கும் என்பது திரையுலகில் அனைவரும் அறிந்த ஒன்றுதான். இதை ஆவணப்படுத்த ஆசைப்பட்ட இயக்குனர் சிகரம் கே. பாலசந்தரை இருதுருவங்களாக காட்டவே இந்தப் பாடலை அப்படி அமைத்தாராம்.
ஸ்ரீதேவி இடத்தில் எம்.எஸ்.வி.யையும், கமலஹாசன் இடத்தில் கவியரசரையும் நாம் பொருத்திப் பார்த்தால் அவர்கள் இருவரின் மேதமையும் நமக்கு புரியும்!
இந்தப் பாடலில் எம்.எஸ்.வி, தத்தகரம், விசில், ஹம்மிங், ம், ஹீம், எல்லா பந்துக்களையும் சுழற்றி சுழற்றி வீச, கவியரசர் அதையெல்லாவற்றையும் சிக்சராக அடிக்க என்னவொரு பாடல் அது!
ஒரு பாடலை எப்படியெல்லாம் கம்போஸ் செய்யலாம் என்பதற்கு மாதிரியாக இந்தப் பாடலை இசைக்கல்லூரியில் பாடமாக வைக்கலாம், வைக்க வேண்டும். அப்படிப்பட்ட பாடல் இது!
கே.பாலசந்தரின் பிறந்த நாள் ஜூலை-9ந் தேதி. இந்த வாரத்தில் அவரது ஆகச் சிறந்த படைப்பான இந்தப் பாடலை பார்த்ததில் மகிழ்ச்சி!!
எம்.எஸ்.வி. கவியரசர் கூட்டணி பாடல்கள் திகட்டாத கற்கண்டு சுவை! மேலும் ருசிக்கலாம்..
தொடர்ந்து புதையல் எடுப்போம்...
இணைய முகவரி: banumathykrishnakumar6@gmail.com