என் மலர்
சிறப்புக் கட்டுரைகள்
- பல்வேறு நிர்வாக அலகுகள் மூலம் நாடு முழுவதும் வசூலித்து நிர்வகிக்கிறது.
- வெளிநாடு வாழ் இந்தியர்களும் பெருமளவில் இதில் பங்களிக்கிறார்கள்.
இந்தியாவின் இறையாண்மையை காப்பதிலும் சர்வதேச எல்லைகள் மட்டுமல்லாது நம் நாட்டினுள்ளேயும் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை பேணிக் காப்பதிலும் முக்கிய பணியாற்றுவது பெருமைக்குரிய நம் இந்திய ஆயுதப் படைகள்.
இந்தியாவின் ராணுவப்படை உலகிலேயே இரண்டாவது பெரிய படையாகும். மிகப்பெரிய தன்னார்வப் படை கொண்ட நாடு என்ற பெருமையும் நமக்கு உண்டு.
முப்படைகளையும் சேர்ந்த 14 லட்சத்திற்கும் அதிகமான வீரர்கள் நேரடியாக களத்தில் நமக்காக, நம் தேச நலனுக்காக சேவையாற்றி கொண்டிருக்கிறார்கள்.
இத்தகைய பெருமை கொண்ட நம் நாட்டின் படைகளில் தேசப்பற்று கொண்டு, தங்களை தாய் மண்ணிற்காக அர்ப்பணித்து, உலகளவில் நம் தேசியக் கொடிக்கு புகழ் சேர்க்கும் நம் வீரர்களின் தியாகத்தை போற்றி அவர்களை நினைவு கூறும் நாள் டிசம்பர் 7.
நம் நாடு சுதந்திரம் அடைந்த பிறகு நம் தேசம் காக்கும் பணிக்கு தங்களை அர்ப்பணித்து கொண்ட ராணுவ வீரர்களின் மேம்பாட்டிற்காக, போரில் காயமுற்று உடல் உறுப்புகளை இழந்த நம் ராணுவச் சகோதரர்களின் மறுவாழ்விற்காக, நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த நம் வீரர்களின் குடும்பத்திற்காக இந்திய அரசு சிறப்பு கவனம் செலுத்த வேண்டிய நிலை உருவானது. அதன் அடிப்படையில் 1949 ஆம் ஆண்டு அன்றைய பாதுகாப்பு அமைச்சர் பல்தேவ் சிங் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. அந்த குழுவின் பரிந்துரையில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் ஏழாம் நாள் ஆயுத படைகளின் கொடி நாள் அனுசரிக்க முடிவு எடுக்கப்பட்டது.
இதன் முக்கிய நோக்கமே நாட்டைக் காக்க தம் பெற்றோரையும், உற்றோரையும், பாசமிகு பிள்ளைகளையும் பிரிந்து கடுமையான சூழலில் போராடும் நம் படை வீரர்களை போற்றவும், உயிர் தியாகம் செய்த வீரர்களின் குடும்பங்களை காக்கும் கடமை நம்முடையது என்ற உணர்வை வெளிப்படுத்துவதற்கும் தான்.
அன்றைய நாள் பொது மக்களிடம் சிறிய கொடிகளை கொடுத்து, அதற்கு பதிலாக நன்கொடைகளை பெறுவது வழக்கம். இப்படி பெறப்படும் நன்கொடையானது உயிரிழந்த படைவீரர்களின் மனைவி மற்றும் குழந்தைகளின் நலனுக்காகவும், போரில் காயமுற்று உடல் உறுப்புகளை இழந்த படை வீரர்களின் மறுவாழ்விற்காகவும், அவர் தம் குழந்தைகளின் கல்வி, மருத்துவம் உள்ளிட்டவற்றுக்கும் தொடர்ந்து செலவிடப்பட்டு வருகிறது.
பாதுகாப்பு அமைச்சகம் சார்பில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் முன்னாள் படை வீரர்களிடையே உரையாற்றிய போது நம் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இவ்வாறு கூறினார்,
"மக்களின் வரிப் பணம் படை வீரர்களை சென்றடைவது என்பது சட்டப்பூர்வ கடமை போல ஆகிவிடுகிறது. ஆனால், தன்னார்வங் கொண்டு செய்யும் பங்களிப்புகள் அப்படி அல்ல. வரியாக பெறப்படும் 100 ரூபாயை காட்டிலும், மக்கள் தாமாக மனமுவந்து வழங்கும் 5 ரூபாய் ஒரு படை வீரனின் மனதில் அதிக பிணைப்பை ஏற்படுத்தும்."
கொடி நாள் நிதி ஆண்டு தோறும் பெறப்படுவதன் முக்கிய காரணத்தை எளிதாக இப்படித்தான் விளக்க முடியும்.

தீபிகா சதீஷ்
நாட்டின் நிலப்பகுதி எல்லைகளை, பரந்த கடல்பரப்பை, நீண்ட நெடிய வான் பகுதிகளை பாதுகாக்கும் நம் முப்படை சகோதரர்களுக்கு, அவர்களின் நலனிலும், அவர்களின் குடும்ப நலனிலும் இந்திய மக்களாகிய நாம் அக்கறை கொண்டுள்ளோம் என்பதை உணர்த்தும் முக்கியமான நாள் இந்த கொடி நாள்.
இந்திய ராணுவம், இந்திய விமானப்படை மற்றும் இந்திய கடற்படை ஆகிய மூன்று பிரிவுகளும் தங்கள் திறனை வெளிப்படுத்தும் விதமாக இந்த நாளில் பொதுமக்களுக்கு பல்வேறு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்கின்றன.
1949-லிருந்து வெவ்வேறு பெயர்களில், பிரிவுகளில் இந்த கொடி நாள் நிதி முன்பு பெறப்பட்டு வந்தது. 1993-ஆம் ஆண்டு முதல் அவை அனைத்தையும் ஒன்றிணைத்து ஆயுதப் படைகளின் கொடி நாள் நிதியம் என்ற அமைப்பு நிறுவப்பட்டது.
இதில் பெறப்படும் நிதியை பாதுகாப்புத் துறையின் கீழ் இயங்கும் கேந்திரிய சைனிக் வாரியம் தனது பல்வேறு நிர்வாக அலகுகள் மூலம் நாடு முழுவதும் வசூலித்து நிர்வகிக்கிறது.
கொடி நாள் அன்று பெறப்படும் நன்கொடைகளுக்கு ஈடாக கேந்திரிய சைனிக் வாரியம் முப்படைகளின் சேவைகளைக் குறிக்கும் வகையில் கொடிகளை வழங்குகிறது. சிவப்பு, கடற்படை நீலம் மற்றும் வெளிர் நீல வண்ணங்கள் கொண்ட அந்த கொடி நமது ராணுவம், கடற்படை மற்றும் வான்படைகளின் பெருமையை பறைசாற்றும் வகையில் இருப்பது சிறப்பு.
ஆயுத படைகள் என்றதுமே நம் நினைவுக்கு வருவது நாட்டின் எல்லைகளில் பாதுகாப்பு பணியில் இருக்கும் வீரர்கள் மட்டுமே. உண்மையில் நம் ராணுவம் சர்வதேச எல்லைகளுக்கு அப்பாலும் திறன்பட செயல்பட்டு கொண்டிருக்கிறது. நம் முப்படைகள் எங்கெல்லாம் நிலை நிறுத்தப்பட்டிருக்கிறது தெரியுமா?
ஜம்மு காஷ்மீரில் இந்தியா பாகிஸ்தான் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டு பகுதி, இந்தியாவை சீனாவில் இருந்து பிரிக்கும் லடாக் பகுதி, இந்திய-வங்கதேச எல்லை, இந்திய-நேபாள எல்லை, இந்திய-மியான்மர் எல்லை போன்ற சர்வதேச எல்லைகளில் நிலைநிறுத்தப்படுகிறது.
எல்லை பாதுகாப்பு படை, மத்திய ரிசர்வ் போலீஸ் படை, ஜம்மு காஷ்மீர் காவல் படை, சஷாஸ்த்ரா சீமா பால், அசாம் ரைபிள்ஸ் போன்று பல்வேறு பிரிவுகளில் நம் படைகள் பயங்கரவாத எதிர்ப்பு, உள்நாட்டு பாதுகாப்பு, வடகிழக்கு மாநிலங்களில் கிளர்ச்சிக்கு எதிரான நடவடிக்கை, நக்சல் பாதித்த பகுதிகளை கட்டுப்படுத்தல் போன்ற பணிகளில் ஈடுபட்டு இருக்கிறார்கள்.
அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் மற்றும் லட்சத்தீவுகளில் இந்திய கடற்படை மற்றும் இந்திய கடலோர காவல்படை நிலை நிறுத்தப்பட்டுள்ளன.
நாட்டின் எந்த பகுதியிலும் வெள்ளம், நிலச்சரிவு, நிலநடுக்கம் ஏற்படும் போதும், மருந்து மற்றும் உணவு பொருட்களை கொண்டு சேர்ப்பதிலும் நம் விமான படையின் பங்கு அளப்பரியது.
ராணுவ படைகளின் ஆயுத பலம், இயற்கை வளங்கள், தளவாட உற்பத்தியில் தற்சார்பு, பாதுகாப்பு துறைக்கான நிதி மேலாண்மை மற்றும் அது சார்ந்த தொழிற்சாலைகள் போன்ற 50 காரணிகளை மதிப்பீடு செய்து வழங்கப்படுவது உலகளாவிய பயர்பவர் குறியீடு. இந்த குறியீட்டின்படி அமரிக்கா, ரஷ்யா மற்றும் சீனாவிற்கு அடுத்த படியாக நான்காவது இடத்தில் உள்ளது இந்தியா.
மலை சிகரங்களை எட்டும் சாலைகள், அவற்றை குடைந்து அமைக்கப்படும் சுரங்க பாதைகள், கடலுக்கு மேலே ரெயில்வே மேம்பாலம், அசாதாரண நிலப்பரப்புகளில் தொலை தொடர்பு சேவைகள் என நம் நாட்டை அடுத்த நிலைக்கு இட்டுச் செல்லும் அனைத்து உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டங்களும் நம் போர் படைகளின் துணை கொண்டே நிறைவேற்றப்படுகிறது.
அண்மையில் நாட்டையே உலுக்கிய கேரளா வயநாடு நிலச்சரிவில் நம் முப்படைகளின் பணிகள் நம் அனைவரையும் நெகிழச்செய்தது. மீட்பு, உணவு மற்றும் மருந்து பொருட்களை கொண்டு சேர்த்தல், கனமான மீட்பு எந்திரங்களை பாதித்த பகுதிகளுக்கு கொண்டு சேர்த்தல் போன்றவற்றில் ராணுவ பாணியில் துரித நடவடிக்கை மேற்கொண்டது சர்வதேச கவனத்தை ஈர்த்தது.
இதில் மிக முக்கியமாக நம் நினைவில் நிற்பது, வெறும் 31 மணி நேரத்தில், 140 இந்திய ராணுவ வீரர்கள் 120 அடி நீளம் கொண்ட பெய்லி பாலத்தை கட்டியமைத்து வெள்ளத்தால் துண்டிக்கப்பட்ட முண்டக்கை மற்றும் சூரல்மலா பகுதிகளை இணைத்தது தான். இயற்கையின் சீற்றத்தை எதிர்த்தும் களத்தில் நமக்காக நம் சகோதரர்கள் துணித்து நிற்பார்கள் என்பதற்கு இதுவே அண்மை சாட்சி.
கொடி நாள் நிதிக்காக பொது மக்கள் மட்டுமல்லாது, பொதுத் துறை நிறுவனங்கள், பெரும் தனியார் நிறுவனங்கள், வங்கிகள் என எல்லோரிடம் இருந்தும் பங்களிப்புகள் ஏற்கப்படுகின்றன. வெளிநாடு வாழ் இந்தியர்களும் பெருமளவில் இதில் பங்களிக்கிறார்கள்.
இதற்கான நன்கொடையை மக்கள் எளிதாக செலுத்துவதற்காக பல தளங்கள் இப்போது ஏற்படுத்தப் பட்டிருக்கிறன. வங்கி மூலமாகவோ, வரைவோலை, காசோலை, இணையம் வழியாகவோ இதற்கான நிதியை நாம் பரிவர்த்தனை செய்து கொள்ளலாம்.
கியூ.ஆர்.கோடு, ஏ.டி.எம். மூலமோ கூட நம்மால் இந்த நன்கொடையை செலுத்த முடியும். இதற்காக பிரத்யேகமான மொபைல் செயலியும் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. இதன் மூலம் சுலபமாக கைபேசியின் உதவி கொண்டே கொடி நாள் நிதியை செலுத்திவிட முடியும். இந்த செயலி மூலம் நன்கொடை அளித்ததற்கான சான்றிதழையும் பெற்று கொள்ளலாம்.
தேசிய விழாக்களின் போதும், சர்வதேச அரங்குகளிலும், விளையாட்டு நிகழ்வுகளிலும் நம் தேசிய கீதம் இசைக்க, நம் மூவர்ணக் கொடி மெல்ல மெல்ல உயர பறக்கவிடப்படும் போது சில நொடிகள், "பெருமை கொண்ட பாரதத்தின் குடிமகன் நான்" என்ற கர்வம் நம்மையும் அறியாமல் நம்மை தலை நிமிரச்செய்யும். அந்த சிலிர்ப்பை, வீறிட்டு எழும் அந்த தேசப்பற்றை சில நிமிடங்களில் இயல்பாய் கடந்து விடுகிறோம் நாம்.
ஆனால், அதே உணர்வை தம் மனதிலிருத்தி, வேறூன்றச் செய்து, உடலாலும் உள்ளத்தாலும் நம் தாய் மண்ணை காக்க வேண்டி கடைசி மூச்சையே அர்ப்பணிக்க துணிந்தவர்கள் நம் படை வீரர்கள். தியாகத்தின் சின்னங்களாய் விளங்கி, நம்மை காக்கும் படை வீரர்களை இந்த நாளில் நன்றியுடன் போற்றி வணங்குவோம்.
rightwrite1214@gmail.com
- அம்மாவின் குரல் ஒரு தேவதையின் குரல்போல், அவன் இதயத்தில் தொனித்தது.
- அன்பைப்போல் ஆற்றல் கொண்ட சக்தி வேறொன்று கிடையாது.
'நீங்கள் இந்த நாட்டை மாற்ற விரும்பினால், வீட்டிற்குச் சென்று உங்கள் குடும்பத்தை நேசியுங்கள்'.
-அன்னை தெரசா
பெற்றோர்க்கு அவன் ஒரே மகன்; செல்லப்பிள்ளை. நல்ல வளர்ப்பு. எல்லாவற்றிலும் ஓர் ஒழுங்கு அவனிடத்தில் உண்டு. கல்லூரிப் படிப்பை முடித்ததும், எவ்விதச் சிரமமுன்றி ஒரு நல்ல நிறுவனத்தில் அவனுக்கு வேலை கிடைத்தது.
சரியான நேரத்திற்கு அலுவலகத்தில் இருப்பான். மாலையில் அலுவலகத்திலிருந்து நேராக வீடுதான். அரட்டை அடித்தல், ஊர் சுற்றுதல், வீண் செலவு என எதுவும் கிடையாது. வேலையில் ரொம்ப 'சின்சியர்'.
அவனுக்குள் திடீரென்று ஒரு காதல் முளைத்தது. அவன் வேலை பார்க்கின்ற அலுவலகத்தில், புதிதாக ஒரு பெண் வேலைக்குச் சேர்ந்தாள். அவளைப் பார்த்த முதல்நொடியிலேயே, அவனுக்கு அவள்மீது அப்படி ஓர் ஈர்ப்பு. அவளின் சிரிப்பு, பேச்சு, நளினம், அறிவுத்திறன் - எல்லாவற்றிலும் ஓர் விசேஷித்த அழகை அவன் கண்டு ரசித்தான்.
இருவருக்குள்ளும் நல்ல நட்பின் புரிதல் ஏற்பட்டது. அவள் அவனிடத்தில் சகஜமாகப் பழகினாள். ஒவ்வொரு நாளும் தவித்துக் கொண்டிருந்த அவன், ஒருநாள் மாலையில் அவளுடன் 'காபி டே' சென்றிருந்தபோது, தன் காதலை அவளிடத்தில் சொல்லிவிட்டான்.
முதலில் திடுக்கிட்டாள். பின்னர் தயங்கினாள். ஓரிரு நாட்கள் கழித்து, அவளும் காதலுக்குச் சம்மதம் தெரிவித்தாள். அவர்களின் காதல் வெளியே யாருக்கும் தெரியாமல் ரகசியமாக வளர்ந்தது.
அவளின் திருமணத்திற்கான பேச்சு வீட்டில் எழவே, தயங்கித் தயங்கிப் பெற்றோரிடம் தன் காதலைப் பற்றி எப்படியோ சொல்லிவிட்டாள்.
'பையன் ஜாதகத்தை வாங்கிக் கொண்டுவா. நம்ம ஜோசியர்கிட்ட கொடுக்கிறேன். பொருத்தம் நல்லபடியா அமைஞ்சிருந்தா, அவங்க வீட்ல பேசி முடிச்சிடலாம்' என்று மிகமிக நிதானமாக அப்பா சொல்ல, அவள் மகிழ்ந்துபோனாள்.
அவனிடத்தில் விஷயத்தைச் சொன்னாள். அவனுக்கும் ஏக மகிழ்ச்சி. தன் பெற்றோரிடம் எதுவும் சொல்லாமல், தனது ஜாதகத்தை அவளிடம் கொடுத்தனுப்பினான்.
மறுநாள் ஆவலோடு காத்திருந்தான். ஆனால், அவள் அலுவலகத்திற்கு வரவில்லை. இரண்டு நாளாயிற்று. போன் செய்தான். அவள் எடுத்தாள்.
'சாரிங்க. நமக்கு ஜாதகப் பொருத்தம் இல்ல. மீறி கல்யாணம் பண்ணினா, உங்க உயிருக்கு ஆபத்து வரும்னு ஜோசியர் சொல்லிட்டாரு. தப்பா எடுத்துக்காதீங்க' என்று சொல்லிவிட்டு போனை வைத்துவிட்டாள்.
மீண்டும் போன் செய்தான். இப்போது போனை அவளின் அப்பா எடுத்தார்.
'தம்பி எம்பொண்ணு எல்லா விஷயத்தையும் எங்கிட்ட சொன்னா. எங்களுக்கும் ரொம்ப விருப்பம்தான். அதனாலதான் ஜாதகத்தை கேட்டு வாங்கினோம். ஆனா ஜாதகப் பொருத்தம் சரியில்ல. எம்பொண்ணுக்கு நாகதோஷம். அதனால, நாகதோஷம் இருக்கிற பையனுக்குக் கொடுத்தாதான், குடும்ப வாழ்க்கை நல்லா இருக்கும், புரிஞ்சிக்கோங்க' என்று சொல்லி முடித்துவிட்டார். அதன்பின், அலுவலகத்திற்கு அவள் வரவில்லை.
அவன் மனதிற்குள் நொறுங்கிப்போனான். யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் உள்ளுக்குள்ளேயே உருகினான். பெற்றோரிடமோ நண்பர்களிடமோ அவன் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை. ஆனால், விரக்தியின் எல்லைக்கு அவன் போய்க்கொண்டிருந்தான். தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்தான்.
'செய்வதை விரைவில் செய்' என்றொரு குரல் அவனுக்குள் ஒலித்துக்கொண்டே இருந்தது. ஆனால், எப்படி தற்கொலை செய்வது? பல வழிகள் இருக்கின்றன. எது சுலபமான வழி? பட்டென்று உயிர் போய்விட வேண்டும். என்ன செய்வது? இறுதியாக, ரெயிலின்முன் பாய்ந்து உயிரை மாய்த்துக்கொள்ள வேண்டும் என்று தீர்மானித்தான். 'இன்றே செய்துவிடு, இப்போதே செய்துவிடு' என்று ஏதோ ஒன்று அவனை வேகப்படுத்தியது. இரவு முழுவதும் தூக்கமில்லை.
மறுநாள் காலை, வழக்கம்போல் வீட்டிலிருந்து கிளம்பினான். முகத்தில் கலவர உணர்வு படர்ந்திருந்தது.
'ஏன் ஒருமாதிரி இருக்கிறே? உடம்புக்கு சரியில்லையா?' - அவன் நெற்றியைத் தொட்டுப் பார்த்தபடி அப்பா கேட்டார்.
'அதெல்லாம் ஒண்ணுமில்லப்பா'.
'ஆபீஸ்ல ஏதும் பிரச்சினையா?'
'இல்லியே' என்று செயற்கையான ஒரு புன்னகையுடன் சொல்லிவிட்டு நகர்ந்தான்.
அலுவலகத்திற்குச் செல்லவில்லை. ஒரு பூங்காவிற்குப் போய் பைத்தியம் பிடித்தவனைப்போல் அங்குமிங்கும் நடந்து கொண்டிருந்தான். ரெயில் நிலையத்தில், மாலை குறித்த நேரத்தில் வருகின்ற எக்ஸ்பிரஸ் ரெயிலின்முன் பாய்ந்து தற்கொலை செய்து கொள்ள வேண்டும். அதைத் தவிர வேறு எந்த சிந்தனையும் அவனிடத்தில் இல்லை. கடிகாரத்தை அடிக்கடி பார்த்தான். 'போ போ' என்று ஒரு சத்தம் அவனைத் துரத்திக்கொண்டே இருந்தது.
எக்ஸ்பிரஸ் ரெயில் வருவதற்கு அரைமணி நேரத்திற்கு முன்னதாக ரெயில் நிலையத்திற்கு வந்துவிட்டான். அந்த ரெயில் அங்கு நிற்காமல் வேகமாகக் கடந்து செல்லும். அதன்முன் விழுந்தால் அடுத்த நொடியிலேயே வாழ்க்கை முடிந்துவிடும்.
இன்னும் பத்து நிமிடத்தில் எக்ஸ்பிரஸ் ரெயில் வந்துவிடும். குதிப்பதற்கு வசதியாக, பிளாட்பாரத்தின் முனையில் தயாராக நின்று கொண்டிருந்தான். அந்நேரம் அவனுடைய மொபைல் போன் ஒலித்தது. எடுக்கவா வேண்டாமா என்ற குழப்பம். வேண்டா வெறுப்போடு எடுத்துப் பார்த்தான். 'அம்மா' என்று திரையில் வந்தது.
'அம்மாவா! இந்நேரம் எதுக்கு கூப்பிடுறாங்க. சரி, கடைசியா ஒரு வார்த்தை பேசி முடிச்சிலாம்' என்ற எண்ணத்தோடு மொபைல் ஆன் செய்தான்.
'ராஜா, எனக்கு ரொம்ப தலைவலிக்குது. நீ ஆபீஸ்லேருந்து வரும்போது ரெண்டு தலைவலி மாத்திரை வாங்கிட்டு வாடா. அப்புறம், இன்னிக்கு டின்னர் உனக்குப் புடிச்ச ஆப்பமும் வஞ்சிர மீன் குருமாவும். சீக்கிரம் வந்துடு கண்ணு' என்று சொல்லிவிட்டு அம்மா போனை வைத்துவிட்டாள்.
அம்மாவின் குரல் ஒரு தேவதையின் குரல்போல், அவன் இதயத்தில் தொனித்தது. டமார் டமார் என்று அவனுக்குள் ஏதோ தகர்ந்து விழுவதுபோல் தோன்றியது. கண்களிலிருந்து ஒரு கருப்புத் திரை விலகியது.
'அம்மா அம்மா' என்று அவனின் வாய் முணுமுணுக்க, அவனை அறியாமல் அவன் கால்கள் பிளாட்பாரத்திலிருந்து பின்னோக்கி நகர்ந்தன. ரெயில் நிலையத்திலிருந்து வெளியே வந்தான். அப்போது எக்ஸ்பிரஸ் ரெயில் அந்த நிலையத்தைப் படுவேகமாகக் கடந்து போய்க்கொண்டிருந்தது. ஒரு மாயைப் பிடியிலிருந்து பட்டென்று விடுபட்டவனாய், அம்மாவிற்குத் தலைவலி மாத்திரை வாங்க அங்கிருந்த மெடிக்கல் ஷாப்பை நோக்கிச் சென்றான் அவன்.
சட்டென்று ஒரு திருப்பம் எப்படி ஏற்பட்டது? அதை ஏற்படுத்தியது எது? அன்புதான். வேறென்ன! தெய்வத்தின் குரலாய் வந்த தாயின் அன்பு, மரணத்தின் விளிம்பில் நின்றவனைக் காப்பாற்றியது. அதுதான் அன்பின் வலிமை.
எல்லா உயிர்களுக்கும் பொதுவான ஒரு மொழி அன்புதானே. திமிங்கலங்கள், டால்பின் மற்றும் பிற மீன்கள் ஆயிரம் மைல்கள் தள்ளி இருந்தாலும், தனது இனம் அழைத்தவுடன் உதவிக்கு ஓடி வருமாம். அன்பின் வேகம் அபரிமிதமானது.
சொந்தங்கள், நண்பர்கள் என நம்மைச் சுற்றிப் பெருங்கூட்டம் இருக்கலாம். ஆனால், அன்பினால் பிணைக்கப்பட்டிருக்கின்றோமா என்பது முக்கியம். பேருக்கு உறவு கொண்டாடுதல், காகிதப் பூச்சரங்களின் அலங்காரத்தைப் போன்றது.
அன்பைப்போல் ஆற்றல் கொண்ட சக்தி வேறொன்று கிடையாது. உலர்ந்துபோன வேர்களுக்கு அது உயிரூட்டும். தடுமாறும் கால்களுக்கு அது வழிகாட்டும். அன்பு அற்புதமானது. ஆபத்து நேரத்தில் கைகொடுக்கும். அது வாழ்வளிக்கும்.
முதலில் நம்மை நாம் நேசிக்க வேண்டும். அப்படியானால்தான், மற்றவர்கள் மீது அன்பு செலுத்த முடியும். அந்த அன்பு பெருகிப் பெருகிப் பரவிச் சென்று உறவுகளை வலுப்படுத்தும்; வாழ்வை வளமாக்கும்.

கவிஞர் தியாரூ, 9940056332
மூர்க்க மனம் சட்டத்திற்கு அஞ்சாது; நீதியை எண்ணாது. முட்புதர்கள் மண்டிக்கிடக்கும் கரடுமுரடான மண்ணில் திராட்சைக் கொடிகள் எப்படி வளரும். ஆனால், அந்த மனதையும் மாற்றக்கூடிய வல்லமை அன்புக்கு உண்டு.
ஊரில் ஒருவன் ஊதாரியாகச் சுற்றிக் கொண்டிருந்தான். பரம்பரைச் சொத்து ஏராளம். எனவே, வருமானத்திற்குக் கவலை இல்லை. அவனை யாரும் கட்டுப்படுத்த முடியாது. முரட்டு சுபாவம். அவனுக்கு ஒரு பெண்ணைப் பார்த்துத் திருமணம் செய்து வைத்தார்கள்.
'இந்த முரடன்கிட்ட இவ என்ன பாடு படப்போறாளோ' என்றுதான் ஊருக்குள் எல்லாரும் பேசினார்கள்.
ஆனால், காலப்போக்கில் அவனிடத்தில் பெரிய மாற்றம் ஏற்பட்டது. தொழிலைக் கவனிக்கத் தொடங்கினான். குடும்ப காரியங்களில் அக்கறை செலுத்தினான். ஊதாரித்தனத்தினால் உண்டான நஷ்டங்களை உணர்ந்தான். விலக்க வேண்டியவைகளை விலக்கினான்.
அவன் வாழ்க்கை புதிதானது. எல்லாவற்றிற்கும் காரணம், அவனுடைய மனைவியின் பொறுமையும் அன்பும்தான்.
அன்பு அற்புதமான மாற்றங்களை ஏற்படுத்தும். இறுக்கமான மனதை நெகிழச் செய்யும். கற்சிலைபோல் இருப்பவனைக்கூட சிரிக்க வைக்கும். காட்டாறுபோல் இருப்பவனை, அமைதியான நீரோடைபோல் மாற்றிவிடும்.
சிலர் கையில் பணம் சேரச் சேர, அவர்களின் பண்பு மாறிவிடும். அன்பான பார்வை, கனிவான பேச்சு எல்லம் மாயமாகிவிடும். ஒட்டி உறவாடாமல் ஒதுங்கி இருப்பதே கவுரவம் என்று நினைப்பார்கள்.
ஆனால், செல்வந்தன் என்பவன் யார்? கோடி கோடியாய் வைத்திருப்பவன் அல்ல! நிலைமாறாத அன்பை நிறைவாய்க் கொண்டிருப்பவனே செல்வந்தன். அன்பில்லாதவன் ஒன்றுமில்லாதவன்.
அறிவால் எல்லாவற்றையும் சாதித்துவிட முடியாது. அறிவை மட்டுமே சார்ந்திருப்பவர்கள், வாழ்வில் தோற்றுப்போகிறார்கள்.
அன்புதான் சாதிக்கும். ஒருவருக்கொருவர் அன்பு செலுத்த வேண்டும். அன்பில் பூரணப்பட வேண்டும். அப்போதுதான் நம் வாழ்க்கைக்குப் பொருள் இருக்கும்.
இறைவனுக்கு நிவேதனம் செய்த பிறகுதான் சாப்பிட வேண்டும். அதற்குமுன் தொடக்கூடாது என்பது ஐதீகம். ஆனால், பூஜையின்போது நிவேதனம் படைக்கும் முன்பாக, அந்தப் படையலிலிருந்து கொஞ்சம் சுவைத்துப் பார்ப்பார் ராமகிருஷ்ண பரமஹம்சர். சிலருக்கு அதிர்ச்சி. அவரைக் கடிந்து கொண்டார்கள்.
'இப்படிச் செய்யலாமா? நிவேதனப் பொருட்களை எச்சில் பண்ணலாமா?' என்று முணுமுணுத்தனர். 'இது புனிதமான பூஜையாகுமா?' என்று கேட்டனர்.
அதற்கு ராமகிருஷ்ண பரமஹம்சர், 'என் தாய் எனக்கு உணவு ஊட்டுவதற்குமுன், கொஞ்சம் சுவைத்துப் பார்த்துவிட்டுதான் ஊட்டுவாள். தாயின் அன்பே இந்த அளவிற்கு அக்கறையுடன் இருக்கும்போது, கடவுளிடம் தாம் செலுத்தும் அன்பு எவ்வளவு பெரிதாக இருக்க வேண்டும்! சுவை பார்த்து ஆராயாமல், பகவானுக்கு நான் எப்படி நிவேதனம் செய்ய முடியும்' என்றார்.
ஆத்மார்த்த அன்புதான் அக்கறை கொள்ளும். குடும்பத்தின் மகிழ்ச்சி, சமூகத்தில் ஒருமைப்பாடு, அனைவருடனும் நல்லுறவு - எல்லாவற்றிற்கும் அன்புதான் ஆதாரம்.
- சிரித்தபடி ரோட்டை பார்த்து வண்டியை செலுத்தினான் டேவிட்.
- டேவிட் திரும்பி பார்க்கவும். அவனை ட்ரக் டிரைவர் பார்க்கவும் சரியாய் இருந்தது.
அன்று தேதி 22. மேலூரை நோக்கி அந்த சிவப்பு கார் விரைந்து கொண்டு இருந்தது. காரை டேவிட் ஓட்ட, பக்கத்தில் திவ்யா.
மேலூர் பக்கத்தில் உள்ள சின்னூர் கிராமத்தில் ரெண்டு நாள் கழித்து, அதாவது 25-ந் தேதி, நடைபெறப்போகும் அவர்களின் திவ்ய கானங்கள் குழுவின் முதல் கச்சேரிக்கான பயணம் அது!
"டேவிட்டு... பிராக்டிஸ் எல்லாம் சூப்பரா முடிஞ்சது... நீயும், திவ்யாவும் நாளைக்கு கிளம்புங்க. நான் நெல்சன், தியாகு, மூணு பேரும் மற்ற ட்ரூப்ஸ் மெம்பர்ஸ் கூட்டிட்டு ஒரு வேனை பிடிச்சு கச்சேரிக்கு முதல் நாள் வந்துடுறோம்!"
நேற்று செந்தில் சொன்னபோது டேவிட் மறுத்தான்.
"எல்லோரும் ஒண்ணா போவோம்டா... எதுக்கு நாங்க மட்டும் தனியா நாளைக்கு கிளம்பணும்..."
"டேய் லூசு டேவிட்டு... என் பிரண்ட்டுகிட்ட பேசி கார் ரெடி பண்ணிட்டேன். பெட்ரோல் புல் டேங்க் போட்டு தரேன். கிளம்பு!"
தியாகு சொல்ல, நெல்சன் தொடர்ந்தான்.
"கல்யாணம் முடிஞ்சு ஹனிமூன்னு எங்கேயாவது போனீங்களாடா?"
டேவிட், இல்லை என தலையாட்டினான்.
"அதுக்குதான் இது. மேலூர்ல ஓட்டல் ரூம் புக் பண்ணியிருக்கோம். ரெண்டு நாள் முன்னாடி போய் ஹனிமூன் கொண்டாடுங்க. பின்னாடியே ரெண்டு நாள் கழிச்சு ட்ரூப்போட வந்துடுறோம்."
அவர்கள் டேவிட்டை வற்புறுத்தியதை கேட்டவாறே, கிச்சனில் காபி போட்டு எடுத்து வந்த திவ்யா,
"உங்க டேவிட்டுக்கு என் கூட தனியா வர பயமா இருக்கா என்ன?"என கேட்கவும்,
குறுக்கே புகுந்த டேவிட் "பயமா? அதெல்லாம் இல்லை. ட்ரூப் கூட போனாஒரு குழுவா சேர்ந்து போலாமேன்னு..."
"ஒரு மண்ணும் வேணாம்... ட்ரூப் எல்லாரையும் நாங்க ஒண்ணா... அழகா கோர்த்து கூட்டிட்டு வாறோம்... நீங்க முதல்ல அண்ணியை கூட்டிட்டு கிளம்புங்கண்ணா?"
மூவரும் வற்புறுத்தி அனுப்பி வைத்தனர். கார் ஹைவேஸ்ல போய்க் கொண்டிருந்தது. டேவிட், திவ்யா பக்கம் திரும்பி கேட்டான்.
"இந்த தியாகு, நெல்சன், செந்தில் இருக்கானுகளே முடிவு பண்ணிட்டா விடமாட்டான்க. பாரு, இப்போ நாம ஹனிமூன் ட்ரிப்ல!"
அவன் கண்ணடித்து சொல்ல, வெட்கப்பட்ட திவ்யா, "உங்க பிரண்ட்ஸ் பண்ணலேனாலும், நானே இப்படி ஒரு ட்ரிப் ரெடி பண்ணி இருப்பேன்..."
"அடிப்பாவி என்னடி சொல்ற?" ரோட்டில் கவனம் வைத்தபடி அவளை சீண்டினான் டேவிட்.
"ஆமா... உங்களுக்குதான் ரொமான்ஸ் வரவே வராதே... எல்லாம் சொல்லிக் கொடுக்கணும்...!
"என்னது... சொல்லிக் கொடுக்கணுமா... இப்ப பாக்குறியா?"
காரை ஓட்டியபடியே டேவிட், அவளை நோக்கி உதட்டை குவித்தபடி, இடதுபுறமாய் சாய்ந்து நெருங்க...
"ரோட்டை பார்த்து வண்டியை ஓட்டுங்க!" அவனை செல்லமாய் தட்டி, கைகளால் மறுத்து, தள்ளிவிட்டாள் திவ்யா.
"ப்ப்பாங்!"
அப்போது காதைக் கிழிக்கும்படி ஒரு ஹாரன் சவுணட் கேட்க, சுதாரித்து பார்த்தான் டேவிட். அவன் காருக்கு பின்னாடி ஒரு பெரிய ட்ரக்தான் அப்படி ஹாரன் அடித்தபடி வந்தது.
"ப்ப்பாங்! ப்ப்பாங்!"
மறுபடி மறுபடி வழிகேட்டு, அந்த ட்ரக் டிரைவர் ஹாரன் அடித்தான்.
"வேணும்னே டார்ச்சர் பண்றான் பாரு"
டேவிட் கடுப்பாய் சொன்னான்.
"வழியைத்தான் விடுங்களேன். அவன் போய் தொலையட்டும்..."
திவ்யா சொல்லவும், வண்டியை இடதுபுறமாய் ஒதுக்க, ட்ரக்காரன் அவர்கள் காரை ஓவர்டேக் செய்து போகும்போது, அவன் சீட்டில் இருந்து குனிந்து இவர்களை பார்த்தான். அவனுக்கு ஒரு நாற்பது வயது தோற்றம். தலையில் தலைப்பாகை. நெற்றியில் பட்டையாய் விபூதி, குங்குமம். கூலிங்கிளாஸ் அணிந்து, வெற்றிலை போட்டு அதை மென்றபடியே அவன் இவர்களை பார்த்தபடி சென்றான்.
"எப்படி பாக்கிறான் பாரேன்!" - டேவிட் கூற, "ஒரு வேளை நீங்க ரொமான்ஸ் மூடுல என்கிட்ட நெருங்கினதை பார்த்துதான் ஹாரன் அடிச்சானோ?"
"இருக்கலாம்... கிளீனர் கூட இல்லாம இவ்வளவு பெரிய ட்ரக்ல தனியா போரான்ல. கடுப்பாகி இருப்பான்!"என கூறி, மீண்டும் உதடு குவித்து அவளை பார்த்து டேவிட் கண் சிமிட்டினான்.
"அடி விழும்! ஒழுங்கா வண்டியை ஓட்டுங்க..."

இயக்குநர் A. ெவங்கடேஷ்
சிரித்தபடி ரோட்டை பார்த்து வண்டியை செலுத்தினான் டேவிட்.
அந்த டோல்கேட்டுக்கு, பாஸ்ட் டேக் மூலமாய் தண்டமாய் பணத்தை கட்டிவிட்டு அதை தாண்டும்போது, டேவிட் கோபமாய் சொன்னான்.
"பஸ்சுல போற டிக்கட் காசை விட கூடுதலாய், மேலூர் போறதுக்குள்ள இந்த டோல்கேட் கட்டணம் ஆயிடும் போல..."
"பின்னே சொகுசா நாலு ரோடு டிராக் "வழுக்குற மாதிரி ரோடு" போட்டு குடுத்து இருக்காங்கள்ல... அதுக்குதான் இந்த மொய்...!"
-என சொல்லிக் கொண்டிருக்கும்போதே திவ்யா கவனித்தாள்.
"ஹைவேஸ் ஓட்டல்"
அந்த ஓட்டலின் அலங்கார விளக்குகள், வா... வா... என அழைப்பதுபோல மின்னின.
"இங்க சாப்பிட்ரலாமா?"
டேவிட் மணியை பார்த்தான். இரவு பத்தை நெருங்கிக் கொண்டிருந்தது.
"ஆமாமா... சாப்பிட்டு கிளம்பலாம்... சரியா இன்னும் ஒரு மணி நேரத்துல மேலூர் போயிடலாம்..."
அவர்கள் வண்டியை நிறுத்தி இறங்கி அந்த ஓட்டலுக்குள் நுழைந்தனர். பெரியதாக கூட்டம் இல்லை. "வார நாளின் மையப் பகுதி என்பதால்தான் இப்படி கூட்டம் கம்மியா இருக்கு... இதே வாரக் கடைசி சனி, ஞாயிறுனா இங்க கூட்டம் அள்ளும்."
"ஆமா மாப்ளே..." பார்த்துருக்கேன்.
-அவர்கள் அமர்ந்த டேபிளின் பக்கத்து டேபிளில் இருவரின் குரல்கள் இவர்களுக்கும் கேட்டது. அப்போதுதான் திவ்யா கவனித்தாள்.. இவர்களுக்கு சற்று தள்ளி, ஒரு டேபிளில் சாப்பிட்டுக் கொண்டு இருந்த அவனை! அவன் வேறு யாருமில்லை! இவர்களின் காரை முந்தி சென்ற, அதே ட்ரக் டிரைவர். தலைப்பாகை, விபூதி, குங்குமம், இந்த இரவிலும் கழட்டாத கூலிங்கிளாஸ்.
"டேவிட்... மெதுவா திரும்பி பாருங்க... இடதுபக்கம் ஐஞ்சாவது டேபிள்ல அந்த ட்ரக் டிரைவர் உட்கார்ந்து இருக்கான்!"
டேவிட் திரும்பி பார்க்கவும். அவனை ட்ரக் டிரைவர் பார்க்கவும் சரியாய் இருந்தது. டேவிட் பார்ப்பதை பார்த்ததும், அவன் அங்கிருந்த படியே லேசாய் சிரித்தான். அவன் சிரிப்பு ஏனோ திவ்யாவுக்கு அசூசையாய் இருந்தது. முகத்தை திருப்பிக் கொண்டாள்.
"ஏதோ... ஐஞ்சு வருஷம் பழக்கம் மாதிரி அப்படி சிரிக்கிறான்" - திவ்யா சொன்னாள்.
"அதானே... ப்பபாங்ன்னு ஹாரனை கடுப்பேத்திற மாதிரி அடிச்சு, ஓவர் டேக் பண்ணினான்... இங்க வந்து எதுக்கு இளிப்பு?"
டேவிட் பதில் கூறவும், வெயிட்டர் வரவும் சரியாய் இருந்தது. ஆர்டர் பண்ணி, சாப்பிட்டு இவர்கள் கிளம்பவே, அரைமணி நேரம் ஆனது. அதுவரைக்கும், அந்த ட்ரக் டிரைவர் அங்கேயே சாப்பிட்டு கொண்டு இருந்தான்.
வெளியே வந்து, காரை எடுத்து கிளம்பும் சமயம், எதேச்சையாய் டேவிட் அவனை பார்த்தான். சிக்கன் லெக் பீசை கடித்தபடி இவர்கள் போவதையே பார்த்தான் டிரக் டிரைவர்.
"அவனும்... அந்த கூலிங்கிளாசும்... மூஞ்சியும், எரிச்சலா வருது!"
டேவிட் சொல்ல சிரித்தாள் திவ்யா.
"எதுக்கு சிரிக்கிறே திவ்யா?"
"நமக்கு யாரை பிடிக்கலையோ, அவங்களையே மறுபடி மறுபடி சந்திப்போமாம்... யார் கூட பேசக்கூடாதுன்னு நெனைப்போமோ... அவங்க கிட்ட பேசுற சூழல் வருமாம்... எதிலேயோ படிச்சேன்..." - என திவ்யா சொல்ல, அப்போது! டேவிட்டின் போன் அடித்தது.
"ஹலோ செந்தில்... சொல்றா... (இடைவெளி விட்டு) இல்லடா.. இப்பத்தான் டின்னர் முடிச்சோம். இன்னும் ஒன் அவர்ல மேலூர் போயிடுவோம்... ஆங்... ஆங்... சரிடா.. போயிட்டு ரூம்ல இருந்து கூப்பிடுறேன்..."
போனை கட் பண்ணிவிட்டு திவ்யாவிடம் திரும்பி,
"இவனுங்க பாலோ அப் தாங்க முடியலை... எங்க இருக்க... போயிட்டியா... ஏன் லேட்டுனு... எவ்ளோ கேள்விகள்!"என கூறவும்,
"ஏங்க... இப்படி அக்கறையா விசாரிக்க ஆள் இல்லேன்னு உலகத்துல பல பேர் ஏங்குறாங்க. உங்களுக்கு இப்படி பிரண்ட்ஸ் கிடைக்க நீங்க கொடுத்து வெச்சிருக்கணும்...!"திவ்யா சொல்லவும்,
"அதுவும் வாஸ்தவம்தான்..." என டேவிட் ஆமோதிக்க, தடக்... தடக்... என்ற சத்தத்துடன் வண்டி ஒரு குலுங்கு குலுங்கி நின்றது.
"என்னாச்சு..." திவ்யா பதட்டமானாள்.
"தெரியலையே... திடீர்னு வண்டி நிக்குது..."
மறுபடியும் கார் இன்ஜினை ஸ்டார்ட் பண்ண, டேவிட் முயற்சிக்க, வண்டி ஏதோ செத்துப்போன மிருகம் மாதிரி அசையாமல் நின்றது.
அப்போதுதான் திவ்யா கவனித்தாள். வண்டிகள் வரத்தே இல்லாத அந்த ரோட்டில், தூரமாய் அந்த ட்ரக் வந்து கொண்டிருந்தது. இவர்கள் நிற்பதை பார்த்தபடியே, அதை ஓட்டியபடி வந்து கொண்டு இருந்தான். அந்த தலைப்பாகை அணிந்த கூலீங் கிளாஸ் டிரைவர்!
(தொடரும்)
Mail: director.a.venkatesh@gmail.com / 7299535353
- வாய்ப்பு கிடைக்கும்போது, இந்திய சாசனத்தை முழுமையாக வாசித்துப் பாருங்கள்; ஓர் உண்மை புரியும் - ‘இது நமக்கானது; இது நம் அனைவருக்கும் ஆனது.’
- ‘அரசுக் கொள்கைகளின் வழிகாட்டு நெறிமுறைகள்’ - அண்ணல் அம்பேத்கர் கொண்டிருந்த தொலைநோக்குப் பார்வைக்கு ஓர் அழியாத சாட்சியம்.
'இது என்னோட உரிமை... இதுல யாரும் தலையிட முடியாது.'
'நீ யாரு என்னை கேள்வி கேட்க...? உனக்கு என்ன உரிமை இருக்கு...?'
'இது ஒன்னும் நீ குடுத்தது இல்லை... சட்டம் சொல்லுது... சட்டம் குடுக்குது...'
இப்படி பல பேர் சொல்லி அடிக்கடி கேட்டு இருக்கிறோம். அல்லது, நாமே இப்படி, பலமுறை சொல்லி இருக்கிறோம்.
இந்த உரிமை...
இந்த சட்டம்...
இந்த சுதந்திரம்...
இந்தப் பெருமை...
யாரால் வந்தது?
எது நமக்குத் தந்தது...?
இந்தியாவின் அற்புத அடையாளம் எது...?
சாதி மதம் இனம் மொழி மண்டலம்... அனைத்தையும் தாண்டி நம்மை ஒன்றாய் இணைத்து வைத்திருப்பது எது?
நமது சாசனம்!
உலகின் மிகச் சிறந்த சாசனம் என்று புகழப்படுகிறதே... அதற்குக் காரணம் - இதனை வடிவமைத்த மகத்தான மனிதர்; உலகின் தலைசிறந்த சட்ட மாமேதை - பாபாசாகிப் டாக்டர் அம்பேத்கர்.
இந்தியர்கள் அனைவரின் நெஞ்சிலும் நீங்கா இடம் பெற்ற அண்ணல் அம்பேத்கர் ஆற்றிய அரும் பணிகளின் உச்சம் - இந்திய சாசனம்.
அந்நிய ஆதிக்கத்தில் இருந்து விடுபட்ட இந்தியா, ஒரு சுதந்திர நாடாகத் தன் எதிர்காலத்தை நிர்ணயித்துக் கொள்கிற தருணம்..
தனக்கான பாதையை தானே வகுத்துக்கொள்கிற, தன் மக்களுக்கு தேவையானதை பிழையின்றி தாமதம் இன்றி வழங்க உறுதி ஏற்றுக் கொள்கிற தருணம்.
ஏராளமான சவால்கள் சங்கடங்கள் பிரச்சினைகள் நெருக்கடிகள்... எதிரே நின்றன.
கல்லாமை, அறியாமை, வறுமை, பிணி...
இவற்றை எல்லாம் நாட்டு மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து எதிர்கொண்டு வெற்றி பெற வேண்டும்.
இதற்கு முதலில், இங்கே நிலவிய கொடுமையான வேற்றுமைகளைக் களைய வேண்டும். சற்றும் மனிதத் தன்மை அற்ற சமூகக் கொடுமைகள் மறைய வேண்டும்.
இதனை சாத்தியமாக்க, முதலில், மக்களை ஒன்றுபடுத்த வேண்டும். ஒரே நோக்கில், ஒரே சிந்தனையில், ஒரே திசையில் மக்களை முன் செலுத்த வேண்டும்.
இதற்கு ஒரே வழி - எல்லோருக்கும் நன்மை செய்கிற, எல்லோருக்கும் சம உரிமை வழங்குகிற, எல்லோருக்கும் பொதுவான சட்டம்.

உண்மையில் அது, சட்டம் அல்ல; சாசனம்!
இந்திய விடுதலைக்குப் பாடுபட்ட மாபெரும் தன்னலமற்ற தலைவர்கள் ஒன்று கூடி நமக்கே உரித்தான சாசனம் வகுக்கப்பட வேண்டும் என்று தீர்மானித்தனர்.
பல கோடி மக்களைக் கொண்ட இந்தியா போன்ற மிகப் பெரிய நாட்டுக்கு சாசனம் வரைதல் அத்தனை எளிதான காரியம் அல்ல.
இதனைச் சிரமேற்கொண்டு செய்து முடிக்க - ஒரு நல்ல, ஆக்கபூர்வ, ஆற்றல் மிக்க தலைமை தேவை.
இந்த நாடு பெற்ற பேறு - அப்படி ஒரு மாமனிதர் நம்மிடையே வாழ்ந்தார்; வழி காட்டினார்; வழி நடத்தினார். அவர்தான் - நல்லுலகம் போற்றும் அண்ணல் அம்பேத்கர்.
சட்ட அறிவு மட்டும் அன்று; சமூகத்தின் மீது மிகுந்த பற்று, மனித குலத்தின் மீது ஆழ்ந்த அக்கறை, ஏற்றத்தாழ்வுகளை அகற்றி சமதர்ம சமுதாயத்தை அமைப்பதில் அகலாத ஆர்வம், விளிம்பு நிலை மக்களை உயர்ந்த நிலைக்குக் கொண்டு வருவதில் கொண்டிருந்த தீவிர ஈடுபாடு...
அண்ணல் அம்பேத்கர் அவர்கள், இந்திய சாசனத்தை வடிவமைக்கும் வரைவுக் குழுவின் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டதில் வியப்பு ஏதும் இல்லை.
ஒவ்வொரு வாசகமும் ஒவ்வொரு வரியும், அவ்வளவு ஏன்... ஒவ்வொரு எழுத்தும், அண்ணலின் அடிமனதில் இருந்த உயரிய மனித நன்னெறிகளை சட்ட வடிவமாய்க் கொண்டு வந்து நிறுத்தியது.
உலக மக்களை, அனைத்து உயிர்களை, உளமார நேசிக்கிற அப்பழுக்கற்ற ஓர் உத்தமரால் மட்டுமே அனைவருக்கும் பொதுவான, அனைவரும் ஒருமனதாக ஏற்றுக் கொள்கிற ஒரு சாசனத்தை வழங்க முடியும். இதனைத் தமது ஒப்பற்ற செயலால் நிரூபித்துக் காட்டினார் அண்ணல் அம்பேத்கர் அவர்கள்.
வாய்ப்பு கிடைக்கும்போது, இந்திய சாசனத்தை முழுமையாக வாசித்துப் பாருங்கள்; ஓர் உண்மை புரியும் - 'இது நமக்கானது; இது நம் அனைவருக்கும் ஆனது.'
இதனை வெறுமனே, 'அரசியல்' என்கிற கூட்டுக்குள் அடைக்க விரும்பவில்லை. சமூகத்தின் அத்தனை மக்களுக்கும், வாழ்வின் அத்தனை அம்சங்களுக்கும் இந்த சாசனம் கச்சிதமாகப் பொருந்தும்.
பாபாசாகிப் டாக்டர் அம்பேத்கர் அவர்களே குறிப்பிடுகிறார் - "இது ஓர் அரசியல் ஆவணம் என்பதை விடவும், ஒரு சமூக ஆவணம்." (This is more social than a Political Document)
எனவேதான் இதனை 'அரசியல்' சாசனம் என்று குறிப்பிட சற்று அச்சம் ஏற்படுகிறது. இது உண்மையில் 'மக்கள் சாசனம்' என்று அழைக்கப்படுவதே இன்னமும் பொருத்தமாக இருக்கும்.
"நாம் ஆகிய இந்திய மக்கள், நமக்கு நாமே வழங்கிக் கொள்கிறோம்" என்றுதானே சாசனத்தின் முகப்புரை கூறுகிறது...?
மக்களால் மக்களுக்காக வழங்கப்பட்ட இந்த சாசனம், ஒரு சட்டம் என்பதற்கு அப்பால், இந்தியாவில் உள்ள அனைத்து சட்டங்களுக்கும் தாயாக மூலமாக ஆதாரமாக விளங்குகிற ஒரு அடிப்படை சாசனம்.
சட்டத்தின் முன் அனைவரும் சமம், யார் மீதும் எந்த விதத்திலும் பாகுபாடு காட்டாத அணுகுமுறை, அடக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளை மீட்டெடுக்க, பாதுகாக்கத் தேவையான அவசிய ஏற்பாடுகள்..
பேச, எழுத, வாழ, வணிகம் செய்ய அடிப்படை உரிமை, உயிர் வாழவும் அந்தரங்க வாழ்க்கைக்குமான உத்தரவாதம், சாசனத்தின் உரிமைகள் மறுக்கப்படும்போது ஒரு சாமானியனும் உச்ச நீதிமன்றத்தை அணுக முடிகிற உரிமை... இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்.

பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி எழுத்தாளர்-காந்திய சிந்தனையாளர்
இன்று நாம் எத்தனை 'பொது நல வழக்குகள்' பார்க்கிறோம்...? இதற்கெல்லாம் வழிகோலியது - சாசனத்தின் பிரிவு 32 தருகிற அடிப்படை உரிமை - அண்ணலின் சிந்தனையில் உதித்த அற்புத கருத்து. இதன் நற்பயனை இன்று நாம் ஒவ்வொருவரும் அனுபவிக்கிறோம்.
சாசனத்தின் பாகம் நான்கு - 'அரசுக் கொள்கைகளின் வழிகாட்டு நெறிமுறைகள்' - அண்ணல் அம்பேத்கர் கொண்டிருந்த தொலைநோக்குப் பார்வைக்கு ஓர் அழியாத சாட்சியம்.
மத்திய மாநில உறவுகள், பஞ்சாயத்துகளுக்கு அதிகாரம், சுதந்திரமாக தனித்து இயங்கும் நீதித்துறை, அரசியல் குறுக்கீடுகள் அற்ற அரசு நிர்வாகம், தேர்தல் ஆணையம் பணியாளர் தேர்வாணையம் உள்ளிட்ட சாசன அங்கீகாரம் பெற்று அமைப்புகள், காலத்துக்கு ஏற்றவாறு அவ்வப்போது தேவைப்படும் மாற்றங்களுக்கு இடம் தரும் திருத்தம் மேற்கொள்ள நடைமுறைகள்...
அண்ணல் அம்பேத்கர் அவர்களின் உள்ளுணர்வை, உள்ளக்கிடக்கையை முழுமையாக வெளிக்கொண்டு வருகிறது நமது சாசனம்.
தனது சிறு வயதில், பள்ளி நாட்களில், இளவயது கல்லூரி நாட்களில், பொது வாழ்க்கையில் ஒவ்வொரு நாளிலும் ஒவ்வொரு தருணத்திலும் பாபாசாகிப் அம்பேத்கர் சந்தித்த இடர்கள் எத்தனை! எத்தனை!
தனக்காக மட்டும் அல்லாது, ஆதிக்க சக்திகளின் கீழ் அவதியுற்று, ஆதரவற்றுக் கிடந்த அடித்தட்டு மக்கள் அனைவரின் குரலாகவும் ஓங்கி ஒலிக்கிற மாபெரும் சக்தியாக அண்ணல் அம்பேத்கர் உயர்ந்து நின்றார் என்றால், அதற்குப் பின்னால் அவருக்கு நேர்ந்த சோதனைகள் எத்தனை! சோகங்கள் எத்தனை!
அத்தனையும் முறியடித்து வென்று காட்டி உலகம் போற்றும் உரிமைப் போராளியாய் சாதனை புரிந்தார் என்றால்... இது மனித குலம் முழுமைக்குமான நற்செய்தி.
அண்ணல் அம்பேத்கர் அவர்கள் தன் வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து வலியுறுத்தி வந்த 'அறிவுப் புரட்சி', அண்ணல் வற்புறுத்திக் கூறிய 'கல்வியில் மேம்பாடு' - மனித குலத்தின் ஆகச்சிறந்த ஆக்கபூர்வ போராட்ட வழிமுறை.
அகன்ற கல்வி, ஆழ்ந்த அறிவு, அனைவரது உரிமைகளையும் சமமாக மதிக்கிற பேராண்மை, அடித்தட்டு மக்களுக்கு அதிகாரம் சென்று சேர்வதை உறுதி செய்யும் அரசியல் நேர்மை...
உலகின் வேறு எந்தத் தலைவரும் முன் நிறுத்தாத, முன் கொண்டு செல்லாத மனித மாண்புகளை வலுவாக வெளிப்படுத்தி ஆழமாக நிலை நிறுத்தியதில் வெற்றி கண்டவர் - பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் அவர்கள்.
நாளை டிசம்பர் 6 - அண்ணலின் நினைவு நாள்.
சக மனிதர்களை மதிக்கிற, சக மனிதர்களின் உரிமைகளுக்கு மதிப்பளிக்கிற, ஒட்டுமொத்த சமுதாயத்தின் வளர்ச்சிக்கு வழிகோலுகிற அமைதிப் புரட்சிக்கு வித்திட்ட அண்ணல் அம்பேத்கர் அவர்களின் நினைவைப் போற்றுவோம். அண்ணலின் வழியில் சமத்துவம் நிலைக்கப் பாடுபடுவோம்.
வாழ்க வளர்க அண்ணலின் புகழ்!
- எண்டோமெட்ரியோசியசால் பாதிக்கப்பட்ட பெண்களில் கிட்டத்தட்ட 14 சதவீதம் பேர் குழந்தையின்மையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
- இக்சி என்ற முறையில் குழந்தைபேறு பெற முடியும்.
டாக்டர் ஜெயராணி காமராஜ், குழந்தையின்மை சிகிச்சை நிபுணர், செல்: 72999 74701இன்றைய காலகட்டத்தில் குழந்தையின்மையால் பாதிக்கப்பட்ட பெண்கள் பலரும் எதிர்நோக்குகின்ற ஒரு முக்கியமான பிரச்சனை எண்டோ மெட்ரியோசிஸ் என்கிற நிலை. கர்ப்பப்பையின் உள்சுவர் எண்டோமெட்ரியம் என்று அழைக்கப்படுகிறது. பொதுவாக கர்ப்பப்பையின் உள்சுவர் கர்ப்பப்பைக்கு வெளியில் வளருவதை எண்டோ மெட்ரியோசிஸ் என்று சொல்கிறோம்.
கர்ப்பப்பை உள்சுவர் வெளி வளர்ச்சியால் ஏற்படும் பாதிப்புகள்:-
கர்ப்பைக்குள் உள்சுவர் ஒரு அடுக்கு போல இருக்கும். அந்த உள்சுவர் அடுக்கு திசுவானது கர்ப்பப்பைக்கு வெளிப்புறத்தில், அதாவது கர்ப்பப்பைக்கு பின் புறத்திலோ, கர்ப்பப்பையின் சினைப்பை மேலேயோ அல்லது பெல்விஸ் (அடி வயிற்றெலும்பு) பகுதியில் கர்ப்பப்பைக்கு வெளிப்புறத்தில் இருக்கிற குடல் மேலேயோ அல்லது கர்ப்பப்பைக்கு பின்னால் பிஓடி (பவுச் ஆப் டக்ளஸ்) பகுதியிலோ அல்லது மேற்கண்ட அனைத்து இடங்களிலோ, இந்த திசுக்கள் ஏதோ ஒரு காரணத்தினால் இருந்தால், ஒவ்வொரு மாதமும் அந்த கர்ப்பப்பையின் உள்சுவர், ஹார்மோன் சார்ந்த வளர்ச்சி ஏற்படும் போது, அதாவது ஹார்மோன் தூண்டுதலால் அந்த அடுக்கு திசுவானது வளரும்.
கர்ப்பப்பைக்குள் உள்சுவர் அடுக்கு திசு வளருவது போல், கர்ப்பப்பைக்கு வெளியில் உள்ள பகுதியிலும் இந்த மாற்றங்கள் ஏற்படும். இதனால் என்ன பிரச்சனை வரலாம் என்றால், அதுபோன்ற பெண்ணுக்கு ஒவ்வொரு மாதமும் மாதவிலக்கு வரும் போது அதே மாற்றத்தோடு வெளியில் செயல்படும் இந்த திசுக்களினால் எதிர்வினை உருவாகி, அதன் மூலமாக கர்ப்பப்பைக்கு வெளிப்பு றத்திலும் ரத்தப்போக்கு ஏற்பட்டு ஒரு ரத்த சேகரிப்பு ஏற்படும். இந்த ரத்தமானது சாக்லெட் நிறத்தில், அதாவது கருஞ்சிவப்பு நிறத்தில் வெளிவருவதால் இதை சாக்லேசிஸ்ட் என்று அழைப்பதுண்டு.
இந்த ரத்தத்தால் வெளிவர முடியாத நிலையில் ரத்தமானது ஆங்காங்கே குறுக்கிட்டு எரிச்சல் ஏற்படுத்தும். ரத்தத்தின் எதிர்வினையால் திசுக்கள் ஒன்றுடன் ஒன்று ஒட்டிக்கொள்ளும். எங்காவது ரத்தம் இருந்தால் அந்த இடத்தில் உள் வயிற்று இணைச்சவ்வான அடுக்கு திசுக்கள் போய் ஒட்டிக்கொள்ளும். கருக்குழாயும் அதில் போய் ஒட்டிக்கொள்ளும்.
இப்படி அனைத்து பாகங்களும் அங்கு ஒன்றாக ஒட்டிக்கொள்ளும் தன்மை உருவாகும். இதனால் அந்த பகுதியில் காயத்தின் ஆறிய வடு (ஸ்கார்) உருவாகும். இந்த ஸ்கார் திசுக்களால் ஆங்காங்கே சில மாற்றங்கள் ஏற்படும். இந்த மாற்றங்கள் பெண்களுக்கு முக்கியமான பிரச்சனைகளை உருவாக்குகிறது.

எண்டோமெட்ரியோசிஸ் பாதிப்புக்கான பொதுவான அறிகுறிகள்:-
எண்டோமெட்ரியோசிஸ் பாதிப்பு உள்ள பெண்களுக்கு மாதவிலக்கு வரும்போது கர்ப்பப்பைக்கு வெளியே ரத்தப்போக்கு ஏற்படுவதால் தீவிர வலி உருவாகும். பொதுவாக இந்த வலியானது மாதவிலக்கு வருவதற்கு முன்பு ஆரம்பிக்கும். மாதவிலக்கு வந்த முதல் நாள் மற்றும் இரண்டாவது நாளில் வலி அதிகரிக்கும். அதன் பிறகு ரத்தப்போக்கு நின்றவுடன் வலியும் குறைந்து விடும்.
எனவே ஆங்காங்கே கர்ப்பப்பைக்கு வெளியே வருகிற ரத்தப்போக்கு எல்லாமே அதனுடைய இடங்களை பொருத்து ஒன்றுடன் ஒன்று ஒட்டிக்கொள்ளும். உதாரணமாக கருக்குழாய் அருகில் இருந்தால் ஸ்கார் திசு குழாய் மேல் உருவாகும். கர்ப்பப்பைக்கு பின் புறத்தில் இருந்தால் பிஓடி என்கிற பவுச்சில் உருவாகும். கர்ப்பப்பையின் பின்புறத்தில் ஏற்பட்டால் கர்ப்பப்பையின் நிலை மாறுபடும். இவை உருவாகும் இடத்தில் திசுக்கள் ஒன்றுடன் ஒன்று ஒட்டிக்கொள்ளும்.
சினைப்பையின் மேல் ரத்தப்போக்கு ஏற்பட்டால் அது சாக்லேசிஸ்ட் ஆகலாம், கூடவே அந்த பகுதியும் ஒன்றுடன் ஒன்று ஒட்டிக்கொள்ளலாம். இந்த மாதிரியான பிரச்சனைகளின் முடிவாக மாதவிலக்கு நாட்களில் கடுமையான வயிற்று வலி ஏற்படும்.
மேலும் அதுபோன்ற பெண்களால் கருத்தரிக்க இயலாது. தாம்பத்திய உறவு கொள்ளும்போது வலிகள் ஏற்படும். இந்த மூன்றும் தான் எண்டோமெட்ரியோசிஸ் பாதிப்புக்கான பொதுவான அறிகுறிகள் ஆகும்.
எண்டோமெட்ரியோசிஸ் பாதிக்கப்பட்ட பெண்கள் குழந்தைபேறு பெறும் வழிமுறைகள்:-
எண்டோமெட்ரியோசிஸ் பாதிப்பு இருக்கும் பெண்கள் குழந்தைபேறு பெறுவதற்கான வழிமுறைகள் என்ன என்று பார்க்கலாம். எண்டோமெட்ரியோசிஸ் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு குழந்தைபேறு பெறுவதற்கான வழிமுறைகளை பலவிதமாக பிரிக்கலாம்.
அதாவது அவர்களுக்கு எண்டோமெட்ரியோசிஸ் பாதிப்பு எந்தெந்த அளவில் இருக்கிறது, கர்ப்பப்பை பகுதியில் எந்த அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது, அந்த நோயின் தீவிர பாதிப்பு என்பது எந்த அளவுக்கு இருக்கிறது என்பதை 1 முதல் 4 நிலைகளாக பிரிக்கிறோம். அதனுடைய பாதிப்புகளை பொருத்துதான் அதற்கு அளிக்கப்படும் சிகிச்சையின் வெற்றியும் இருக்கும்.
இன்றும் பொதுவாக எண்டோமெட்ரியோசியசால் பாதிக்கப்பட்ட பெண்களில் கிட்டத்தட்ட 14 சதவீதம் பேர் குழந்தையின்மையால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே எண்டோமெட்ரியோசிஸ் இருக்கிற பெண்களுக்கு 62 முதல் 70 சதவீத பெண்களுக்கு ஏதாவது ஒரு சிகிச்சை முறை கண்டிப்பாக தேவை. அந்த சிகிச்சையுடன் தான் அவர்கள் கருத்தரிக்கின்ற வாய்ப்புகளை பெற முடியும்.
பொதுவாக எண்டோமெட்ரியோசிஸ் பாதிப்பு உள்ள பெண்களுக்கு உடல் ரீதியான விஷயங்களில் முக்கியமாக அடிவயிறு வலி, இடுப்பு வலி, பல நேரங்களில் மாதவிலக்கு சுழற்சியின்போது தாங்க முடியாத வலி ஏற்படும். அதன் தொடர்ச்சியாக வாந்தியும் ஏற்படும். மேலும் இதனால் ஏற்படுகிற வலிகளால் முறையாக உறவு கொள்ள முடியாத நிலை உருவாகும். இவை அனைத்தும் தான் இதுபோன்ற பெண்களுக்கு குழந்தைபேறு பெறுவதற்கான வழிமுறைக்கு தடையாக இருக்கிறது.
இந்த விஷயங்களை சீராக்குவதற்கு பல நவீன சிகிச்சை முறைகள் உண்டு. ஆனால் அந்த சிகிச்சை முறைகளானது இந்த நோயின் பாதிப்பு, அதனுடைய தீவிரத்தன்மை ஆகியவற்றை பொருத்தது.
அதிக வருடங்களாக எண்டோமெட்ரியோசிஸ் பாதிப்பு ஏற்பட்டு, தற்போது அதன் பாதிப்பு தீவிரமாக இருந்தால், அந்த பெண்களால் இயற்கையாக குழந்தைபேறு பெறுவதற்கான வாய்ப்புகள் குறைவு.
என்னிடம் பெண் ஒருவர் குழந்தையின்மை சிகிச்சை பெறுவதற்காக வந்தார். அவர் என்னிடம் டாக்டர் எனது உடல்நலம் நார்மலாக இருக்கிறது. ஆனால் நான் இன்னும் கருத்தரிக்கவில்லை என்று கூறினார். அவர் எச்எஸ்சி எனப்படும் நோய் கண்டறியும் பரிசோதனை, ரத்த பரிசோதனை, ஸ்கேன் பரிசோதனை ஆகியவற்றை செய்திருந்தார். ஆனால் அவருக்கு அதில் எந்தவித அறிகுறியும் தெரியவில்லை. ஆனால் அவரிடம் கேட்டபோது மாதவிலக்கு வரும்போது பின்புற வலி ஏற்படுகிறது என்று சொன்னார்.
எனவே அந்த பெண்ணுக்கு அது தொடர்பான பரிசோதனை செய்து பார்த்தபோது கர்ப்பப்பை பின் பக்கமாக ஒட்டி இருந்தது. கர்ப்பப்பையின் பின் பக்கத்தை சுற்றிலும், சினைப்பையிலும் சாக்லேசிஸ்ட் இருந்தது. இவை அனைத்தும் இருந்தும் கூட இந்த பெண்ணுக்கு எந்தவித அறிகுறியும் இல்லை. ஆனால் இந்த பெண்ணுக்கு சாக்லேசிஸ்ட் மற்றும் ஒன்றையொன்று ஒட்டிக்கொண்ட திசுக்களை அகற்றுவதன் மூலம் தான் கருத்தரிப்பதற்கான சாத்தியக்கூறுகள் ஏற்படும்.

டாக்டர் ஜெயராணி காமராஜ், குழந்தையின்மை சிகிச்சை நிபுணர், செல்: 72999 74701
ஐ.வி.எப். மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட சிகிச்சை முறைகள்:-
இந்த பெண்ணுக்கு லேப்ராஸ்கோபி அல்லது இதற்கான முறையான சிகிச்சைகளை அளித்தால் இதனை முழுமையாக சரி செய்து குழந்தைபேறு பெற வைக்க முடியும். எனவே இந்த வகையில் தீவிரமாக பாதிப்பையும், சேதத்தையும் ஏற்படுத்தும் எண்டோமெட்ரியோசிசை நிலை 4 என்று சொல்கிறோம்.
இதுவே கர்ப்பப்பையை சுற்றியுள்ள பகுதிகளில் ஆங்காங்கே சிறிய அடைப்பு போலவோ அல்லது சிறிய ரத்தகட்டிகளோ இருந்தால் அதை நிலை 1 என்கிறோம். இந்த இரண்டுக்கும் நடுவில் பல வேறுபாடுகள் இருக்கலாம். பொதுவாக நிலை 1 மற்றும் 2 ஆக இருக்கும் பெண்கள் முயற்சி செய்தால் இயற்கையாக குழந்தை பேறு பெறலாம். அப்படி குழந்தைபேறு பெற முடியாவிட்டால் அவர்கள் எளிமையான வகையில் ஐஓயு முறையில் குழந்தை பேறு பெறலாம். இதற்கும் அடுத்த கட்டமாக தேவைப்பட்டால் ஐ.வி.எப். செயற்கை கருத்தரிப்பு மூலம் குழந்தைபேறு பெறலாம்.
மேலும் இக்சி என்ற முறையிலும் குழந்தைபேறு பெற முடியும். ஆனால் இக்சி முறையை இளம் வயதை தாண்டியவர்களுக்கு செய்வது தான் சரியாக இருக்கும். பொதுவாக ஐ.வி.எப். மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட சிகிச்சை முறைகளே இதுபோன்ற பெண்களுக்கு கருத்தரிப்பதற்கான வாய்ப்புகளை அதிகப்படுத்துகிறது.
மேலும் எண்டோமெட்ரியோசிஸ் தீவிரமாக பாதிக்கப்பட்ட பெண்கள், குழந்தைபேறு பெறுவதற்கு என்னென்ன வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்பதை பற்றி அடுத்த வாரம் பார்ப்போம்.
- சிவபெருமான் தனது நெற்றிக்கண்ணை ஆறு தீப்பொறிகளை உருவாக்கி அதை சரவணப் பொய்கையில் மிதக்க செய்தார்.
- திருச்செந்தூர் ஆலயம் முதலில் குகை ஆலயமாக இருந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.
சங்க காலத்துக்கும் முன்பிருந்தே திருச்செந்தூர் புகழ் பெற்று இருந்ததை கடந்த வாரம் பார்த்தோம். திருச்செந்தூரில் முருகப்பெருமானுக்கு ஆலயம் உருவானது எப்படி என்பதை இந்த வாரம் பார்க்கலாம்.
திருச்செந்தூருக்கு முருகப்பெருமான் எதற்காக வந்தார்?
சூரபத்மனை அழிப்பதற்கு. அதுதானே அவரது அவதார நோக்கம்.
சிவபெருமான் தனது நெற்றிக்கண்ணை ஆறு தீப்பொறிகளை உருவாக்கி அதை சரவணப் பொய்கையில் மிதக்க செய்தார். அந்த 6 தீப்பொறிகளும் 6 குழந்தைகளாக மாறின.
பார்வதி தேவி அந்த 6 குழந்தைகளையும் ஒன்றாக சேர்த்து அணைத்தாள். இதன் மூலம் 6 குழந்தைகளும் ஒன்றாகி முருகப் பெருமான் அவதரித்தார்.
வளர்ந்து உரிய பருவம் வந்ததும் முருகன் கையில் ஆயுதங்களை கொடுத்து சிவபெருமானும், பார்வதி தேவியும் திருச்செந்தூருக்கு அனுப்பி வைத்தனர். முருகனும் தனது படை வீரர்களுடன் திருச்செந்தூருக்கு வந்து படை வீடு அமைத்து தங்கினார்.
சூரபத்மனை அழிப்பது அவரது விருப்பம் அல்ல. சம்காரம் செய்து சூரனை ஆட்கொள்ள வேண்டும் என்பதே முருகப்பெருமானின் விருப்பம் ஆகும்.
இதற்கு என்ன செய்வது? என்று குருபகவானிடம் முருகர் யோசனை கேட்டார். சூரபத்மன் பற்றிய பல்வேறு தகவல்களை முருகப்பெருமானுக்கு குருபகவான் தெரிவித்தார். அதன் அடிப்படையில்தான் சூரபத்மனை திருச்செந்தூரில் முருகப்பெருமான் சம்காரம் செய்து ஆட்கொண்டார் என்பது புராண வரலாறு.
அதன் பிறகு முருகப்பெருமான் திருச்செந்தூர் கடற்கரையில் லிங்க பிரதிஷ்டை செய்து சிவபெருமானை வழிபட்டார். அப்போது அவரிடம் குருபகவான் ஒரு வேண்டுகோளை விடுத்தார்.
"சூரன் மீது அருள் காட்டி அவனை ஆட்கொண்ட நீங்கள் இந்த தலத்திலேயே அமர்ந்து பக்தர்களுக்கு வழிகாட்ட வேண்டும். உங்களை தேடி வரும் மக்களுக்கு அருள் புரிய வேண்டும்" என்று கேட்டுக் கொண்டார்.
அதை முருகப்பெருமான் ஏற்று திருச்செந்தூரிலேயே தங்கினார். இதையடுத்து குருபகவான் விஸ்வகர்மாவை அழைத்து திருச்செந்தூர் கடலோரத்தில் முருகப்பெருமானுக்கு ஆலயம் எழுப்பினார் என்பது புராண வரலாறு. தேவதச்சர்களால் உருவாக்கப்பட்டதால் சங்க காலத்தில் திருச்செந்தூர் தலத்தை "சந்தன சைலம்" என்றே குறிப்பிட்டனர்.
அந்த ஆலயம் உருவானபோது திருச்செந்தூரில் முருகப்பெருமான் தனது அவதாரத்தை பூர்த்தி செய்து விட்டு இருந்த கோலத்திலேயே மூலவர் சிலையையும் உருவாக்கியதாக சொல்கிறார்கள். அதாவது முருகப்பெருமான் சூரனை ஆட்கொண்ட பிறகு தனது வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் சிவபூஜை செய்தார்.
அந்த கோலத்திலேயே முருகப்பெருமான் வலது கையில் தாமரை மலருடன் காட்சி அளிக்கிறார். அவரை சுற்றிலும் மண்டபங்கள் உருவாக்கி பிரமாண்டமான கோவில் கட்டப்பட்டது.
ஆனால் திருச்செந்தூர் கோவில் ஒரே சமயத்தில் ஒரு நபரால் கட்டப்பட்டது அல்ல. சங்க காலத்தில் தொடங்கி இன்று வரை (2024-ம் ஆண்டு) திருச்செந்தூர் ஆலயம் கட்டப்பட்டு கொண்டுதான் இருக்கிறது.
திருச்செந்தூர் முருகனை சங்க காலத்தில் எத்தனையோ புலவர்கள் பாடி புகழ்ந்துள்ளனர். முருகப்பெருமானின் அழகை பல புலவர்கள் வர்ணித்து இருக்கிறார்கள்.
முருகப்பெருமானின் அருளையும், ஆற்றலையும் சங்க காலத்துக்கு முன்பும், சங்க காலத்துக்கு பின்பும் புகழ்ந்து பாடிய புலவர்கள் ஏராளம்... ஏராளம். ஆனால் எந்த ஒரு புலவரும் திருச்செந்தூர் முருகன் ஆலய அமைப்பு பற்றி விரிவாக பாடி வைக்கவில்லை.
இதன் காரணமாக திருச்செந்தூர் முருகன் ஆலயம் எந்த கால கட்டத்தில் எப்படி உருவானது என்பதை துல்லியமாகக் கணித்து சொல்ல முடியாத நிலைதான் உள்ளது. சங்க கால நூல்கள் மற்றும் அகழ்வராய்ச்சிகள் மூலம் திருச்செந்தூர் ஆலயம் எப்படி? எந்த காலத்தில் உருவாகி இருக்கலாம் என்பதை சில அறிஞர்கள் தெளிவுப்படுத்தி இருக்கிறார்கள்.
அதன்படி திருச்செந்தூரில் முருகப் பெருமான் ஆலயம் மலை மீது அமைக்கப்பட்டு இருக்கலாம் என்பது ஒரு சாரார் கருத்து.
மலையின் சரிவான பகுதியில் ஆலயம் கட்டப்பட்டு இருக்கலாம் என்பது மற்றொரு சாரார் கருத்து.
திருச்செந்தூர் கடற்கரையில் இருந்த சிறிய சந்தன மலையை குடைந்து குகைக் கோவிலாக முருகப்பெருமான் ஆலயம் உருவாக்கப்பட்டு இருக்கலாம் என்பது பலரது கருத்து.
இந்த 3 விதமான கருத்துக்களும் ஒருமித்த அளவில் ஏற்றுக் கொள்ளப்படுகிறது. பொதுவாகவே "குன்று தோறும் ஆடி வரும் குமரன்" என்றுதான் தமிழ்க்கடவுள் முருகன் அன்று முதல் இன்று வரை போற்றப்படுகிறார். மலை மீதுதான் முருகனுக்கு ஆலயம் அமைந்து இருக்கும்.
அறுபடை வீடுகளில் திருப்பரங்குன்றம், பழனி, திருத்தணி, சுவாமிமலை, பழமுதிர்ச்சோலை ஆகிய ஐந்தும் மலை மீதுதான் அமைந்துள்ளன. திருச்செந்தூர் மட்டும் ஏன் கடற்கரையில் அமைந்து இருக்கிறது என்று பெரும்பாலானவர்கள் சந்தேகத்துடன் கேட்பது உண்டு.
திருச்செந்தூரிலும் முருகப்பெருமான் அலை மீதல்ல, மலை மீதுதான் கோவில் கொண்டுள்ளார். அந்த மலைக்கு "சந்தன மலை" என்று பெயர். சங்க காலத்தில் எழுதப்பட்ட நூல்களில் திருச்செந்தூர் முருகப்பெருமான் சந்தன மலையில் வீற்றிருந்ததாக கூறப்பட்டுள்ளது.
சங்க காலத்துக்கு பிறகு நாட்டுப்புற பாடல்கள் புகழ் பெற்றன. அதில் ஒரு பாடல், "சந்தன காட்டுக்குள்ளே கந்தனை நான் கண்டு கொண்டேன்" என்று தொடங்கும் வகையில் அமைந்துள்ளது. கந்தபுராணத்திலும் திருச்செந்தூர் முருகனை குறிப்பிடும் போது கந்த மாதனப்பர் வதம் என்றுதான் குறிப்பிடப்பட்டுள்ளது.
8-ம் நூற்றாண்டில் அதாவது சுமார் 1,200 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஆதிசங்கரர் திருச்செந்தூர் தலத்துக்கு வந்தபோது, 'மலை மீதுள்ள முருகனே' என்று பாடினார். பிறகு அது 'செந்தின் மாமலை' என்றும் அழைக்கப்பட்டது.
அருணகிரி நாதர் திருச்செந்தூர் பற்றி எழுதும்போது சந்தன மரங்கள் நிறைந்த பகுதி என்று குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் திருச்செந்தூரில் மிகப்பெரிய சந்தன வனமும் கடலோரத்தில் சந்தன மலையும் இருந்தது உறுதியாகிறது.
திருச்செந்தூர் பகுதியில் கடல் அரிப்பு ஏற்பட்டு சந்தன மலை சேதம் அடைந்து இருக்கலாம். அந்த மலையின் ஒரு பகுதிதான் தற்போது கோவில் அமைந்து இருக்கும் ஒரு பகுதியாக இருக்கலாம் என்பது வரலாற்று ஆராய்ச்சிகளின் கருத்து ஆகும்.
அதாவது இடைச்சங்க காலத்தில் மிகப்பெரிய கடல்கோள் (சுனாமி) ஏற்பட்டு கபாடபுரம் அழிந்தது. அந்த கபாடபுரத்தின் ஒரு பகுதியாக திருச்செந்தூர் இருந்திருக்க லாம் என்றும் ஆய்வாளர்களில் சிலர் சொல்கிறார்கள். ஆனால் கபாடபுரத்தில் இருந்த திருச்செந்தூர் அழிந்துவிட்டது என்றும், தற்போது இருப்பது இரண்டாவது திருச்செந்தூர் என்றும் சொல்கிறார்கள்.
இப்போதும் திருச்செந்தூர் கோவில் அமைப்பை சற்று உன்னிப்பாக பார்த்தால் சந்தன மலை இருப்பதை பார்க்க முடியும்.
கோவிலுக்கு செல்லும்போது குறிப்பிட்ட இடத்தில் இருந்து கடற்கரையை நோக்கி சாய்வாக கோவில் பாதை இறங்குவது நீங்கள் பார்த்தீப்பீர்கள். அந்த சாய்வான பகுதிதான் சந்தன மலையின் சாய்வான பகுதி ஆகும்.
அந்த சாய்வான மலையை குடைந்து சீரமைத்துதான் திருச்செந்தூர் கோவிலை உருவாக்கி இருக்கிறார்கள். திருச்செந்தூர் கோவில் உள்ளே பிரகாரங்களை சுற்றி வரும்போது பள்ளி கொண்ட பெருமாள் சன்னதி உள்ளே சென்று பார்த்தால் அங்கு மலை குடைந்து உருவாக்கப்பட்டதை இப்போதும் நீங்கள் பார்க்கலாம்.
அந்த பெருமாள் சன்னதியின் ஓரத்தில் சந்தன மலையை பிரதிபலிக்கும் வகையில் சந்தன நிறத்தில் மலை புடைத்து கொண்டிருப்பதை உன்னிப்பாக பார்த்தால் தெரியும். திருச்செந்தூர் ஆலயம் சந்தன சரிவில்தான் இருக்கிறது என்பதற்கு இந்த சன்னதி மிகப்பெரிய ஆதாரம் ஆகும்.
அடுத்து வள்ளி குகையை சொல்லலாம். வள்ளி ஒளிந்த இடமாக கருதப்படும் அந்த இடம் மலை சரிவில்தான் இருக்கிறது. அந்த மலையையும் குடைந்துதான் வள்ளி குகையை உருவாக்கி இருக்கிறார்கள்.
பல்லவ மன்னர்களும், பாண்டிய மன்னர்களும் இந்த குகை சன்னதிகளை உருவாக்கி இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். இந்த கோவில் பல நூற்றாண்டு களாக பல்வேறு வகைகளில் வளர்ச்சி பெற்று வந்துள்ளது.
சங்க காலத்தில் திருச்செந்தூர் கடலோரத்தில் சந்தன மலை இருந்தது உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் கோவில் மலை மீது உச்சியில் இருந்ததா? அல்லது மலைச்சரிவில் இருந்ததா? என்பதற்கு இதுவரை யாராலும் விடை காண இயலவில்லை.
கி.பி.3 முதல் 6-ம் நூற்றாண்டு வரை தமிழகம் பற்றி எந்த தகவலும் எந்த வரலாற்று நூல்களிலும் இல்லை என்பதால் அந்த 300 ஆண்டுகளில் திருச்செந்தூர் ஆலயம் எப்படி வளர்ச்சி பெற்றது என்பது யாருக்கும் தெரியாது. 7-ம் நூற்றாண்டில் பாண்டிய மன்னர்கள் குகை கோவில்கள் அமைத்ததற்கான ஆதாரங்கள் உள்ளன.
திருநாவுக்கரசர் உள்பட நால்வர் பெருமக்களும் இதை கோடிட்டு காட்டி இருக்கிறார்கள். எனவே திருச்செந்தூர் ஆலயம் முதலில் குகை ஆலயமாக இருந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.
8-ம் நூற்றாண்டில் வாழ்ந்த ஆதி சங்கரர் திருச்செந்தூர் முருகன் பற்றி பாடுகையில், 'கந்த மாதன மலையில் அருட்பெரும் ஜோதியாக குகப் பெருமான் ஒரு குகையில் அமர்ந்து ஆதரவளிக்கிறார்' என்று பாடியிருக்கிறார். இதன்மூலமாகவும் திருச்செந்தூர் ஆலயம் முதலில் மலை குகையை குடைந்துதான் அமைக்கப்பட்டது என்பது உறுதியாகிறது.
9-ம் நூற்றாண்டில் பாண்டிய மன்னன் வரகுண பாண்டியன் திருச்செந்தூர் ஆலயத்துக்கு 1,400 பொற்காசுகள் வழங்கியது கல்வெட்டுகள் மூலம் தெரிய வந்துள்ளது. அதுபோல 10, 11, 12, 13, 14, 15-ம் நூற்றாண்டு திருச்செந்தூர் ஆலயத்துக்கு பலர் திருப்பணிகள் செய்ததுதான் கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆலய அமைப்பு பற்றி எதுவும் தெரியவில்லை.
17-ம் நூற்றாண்டுக்கு பிறகுதான் மேல கோபுரம் மற்றும் பிரகாரங்கள் கட்டிய மூவர் பற்றிய தகவல்கள் சொல்லப்பட்டுள்ளது. எனவே திருச்செந்தூர் ஆலயம் உருவானதும், வளர்ந்ததும் முருகப்பெருமான் அருளால் மட்டுமே நடந்ததாகும். இப்போதும் திருப்பணிகள் தொடர்ந்து நடக்கிறது.
இத்தகைய சிறப்புடைய திருச்செந்தூர் தலம் அறுபடை வீடுகளில் முதன்மை பெற்றது எப்படி என்பதை அடுத்த வாரம் காணலாம்.
-தொடரும்
- கலாம் கூறுவார் “உறக்கத்தில் வருவதல்ல கனவு; உன்னை உறங்க விடாமல் செய்வதே கனவு!”.
- நமக்கு வருகிற கனவுகளும், நமது நியாயத் தேவைகளைப் பூர்த்திபண்ணி வைக்கிற வேலைகளைச் செய்யும்.
கனவுகள் குறித்த கருத்துக்களை அறிந்து கொள்ளக் கண்விழிப்போடு காத்திருக்கும் வாசகர்களே! வணக்கம்.
கனவு காணாத மனிதர்கள் இல்லை; குழந்தைகள் முதற்கொண்டு முதியவர்கள் வரை எல்லாருக்கும் கனவுகள் வருகின்றன. ஏழை, பணக்காரர், படித்தவர், படியாதவர், ஆண், பெண் என்று எந்த பேதமுமில்லாமல் எல்லாரும் கனவு காண்கின்றனர்; அவர்களுக்கு எல்லாவிதமான கனவுகளும் வருகின்றன; இவர் இந்த மாதிரிதான், இந்த ஊரில்தான், இந்த உடையில்தான் கனவு காண வேண்டும் என்று எந்தத் தடையுமில்லை. கனவுச் சுதந்திரம் எல்லா மனிதருக்கும் தாராளமாகவே வழங்கப்பட்டிருக்கிறது.
பெரும்பாலும் எல்லாருக்கும் கனவு காண்பது பிடித்தமானதாகவே இருக்கிறது. கற்பனைக் கெட்டாத அற்புத உலகம் அங்கே எந்த விதச் செலவும் இல்லாமல் சிருஷ்டிக்கப்படுகிறது. ஒரு நொடியில் நாம் ராஜாவாகிப் போகிறோம்; அடுத்த நொடியே குதிரைத் தேர்களில் ஏறி ராணிமார்களோடு டூயட் பாடி மகிழ்கிறோம்; எல்லாமே நமக்குப் பிடித்தவண்ணமே அமைந்திருக்கிறது. கனவுகள் பிடித்துப்போக இதைவிட நமக்கு வேறென்ன காரணம் வேண்டிக் கிடக்கிறது?
சில மனிதர்களுக்கு வருகிற சில மாதிரிக் கனவுகள் கொடுமையானவையாகவும் அமைந்து விடுகின்றன. மாடு துரத்துவது போலவும், நாய் விரட்டுவது போலவும், பாம்பு சீறுவது போலவும், விபத்துகளில் சிக்கிக் கொள்வது போலவும், பேய்களிடம் மாட்டிக் கொள்வது போலவும், ஆழக் கிணற்றுக்குள் விழுந்து கொண்டே இருப்பது போலவும் விதவிதமானக் கனவுகள் தூக்கத்தில் வந்து சங்கடப்படுத்தவும் செய்யும். இந்த மாதிரிக் கனவுகளில் அடிக்கடி சிக்கி அலறி அலறி எந்திரிப்பவர்கள், உறங்கப்போவதற்குமுன், தங்கள் தலைமாட்டிற்கு அருகில், விபூதிப் பொட்டலம், மந்திரித்த கயிறு, இரும்புத் துண்டு, எலுமிச்சைப்பழம் போன்ற ஆன்மீக ஆயுதங்களை வைத்துக் கொண்டு செல்வார்கள்; ஆனாலும் கனவுப் பயங்கரங்கள் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கும்.
பொதுவாகக் கனவுகள் ஏன் வருகின்றன? வருகின்ற கனவுகளில் எந்த மாதிரிக் கனவுகளுக்கு எந்த மாதிரி பலாபலன்கள் என்பவை பற்றிய நிரூபிக்கப்பட்ட உண்மைகள் இன்னும் கண்டு பிடிக்கப்படவில்லை. ஆனாலும் அதிக மன அழுத்தங்களோடு படுக்கச் செல்பவர்களுக்கு விபரீதக் கனவுகளும், ஆனந்த எண்ணங்களோடு படுக்கைக்குச் செல்பவர்களுக்கு மகிழ்ச்சிக் கனவுகளும் வருகின்றன என்கின்றனர். எது எப்படியாயினும் ஆழ்ந்த உறக்கம் நிகழும்போது கனவுகள் உருவாவதில்லை; அப்படியானால் நமது உறக்கத்தில் தொந்தரவுகள் உருவாகும்போதே கனவுகளும் அவற்றின் காட்சிகளை அரங்கேற்றிக் கொள்கின்றன.
மனித எண்ணங்களில் கற்பனைகளே ஏதோவொரு வகையில் கனவுகளாக உருவாகின்றன என்பார்கள். விழிப்பு நிலையில் நாம் எப்போதும் சிந்தித்துக் கொண்டிருக்கும் திட்டங்கள், கனவுகளில் உருவ அமைப்புப் பெறுகின்றன; பிறகு அவை செயல் வடிவம் பெற்றுச் சாதனைகளாகின்றன என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். அப்படியானால் வாழ்க்கையின் வெற்றிக்கு நாம் அன்றாடம் வகுக்கின்ற திட்டங்கள் செயல் வடிவம் பெறுவதற்குக் கனவுகளே உலைக்களங்களாக இடையில் நின்று உதவுகின்றன எனலாம். அதனால்தான் அறிஞர் அப்துல் கலாம் போன்றவர்கள், இளைஞர்களைப் பார்த்துக் "கனவு காணுங்கள்!" என்று உத்வேகப்படுத்துகிறார்கள்.
கனவு காண்பது என்பது, சோம்பேறித்தனமாக உறங்கிக்கொண்டு, எதற்கும் உதவாத கற்பனைக் கனவுகளில் மிதந்து கொண்டிருப்பதல்ல; கலாம் கூறுவார் "உறக்கத்தில் வருவதல்ல கனவு; உன்னை உறங்க விடாமல் செய்வதே கனவு!". அப்படிப் பார்க்கும்போது, நம்முடைடைய வாழ்க்கை குறித்த தொலைதூரப் பார்வைகளும், இலட்சியங்களுமே கனவுகளாக மாறி, அவற்றை வென்றெடுக்க நம்மை உறங்கவிடாமல் செய்யும் செயலூக்கத்தை நல்க வேண்டும்.

முனைவர் சுந்தர ஆவுடையப்பன்
பெரும்பாலும் நாம் காணும் கனவுகள் நம் எண்ணங்களின், ஆசைகளின் வடிகால்களாகவே அமைகின்றன. மனிதர்களின் அன்றாட வாழ்வியல் அவர்களை உணர்ச்சிகளின் குவியலாக மாற்றிவிடுகிறது; அன்றாடம் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் மற்றும் அனுபவங்கள் வாயிலாகத், துன்பத்தில் ஆழ்வது, மகிழ்ச்சியில் திளைப்பது, கோபத்தில் கொப்பளிப்பது, பரபரப்பில் வெடிப்பது, விரக்தியில் தளர்ந்து போவது, அச்சத்தில் உறைந்து போவது போன்ற நிலைகளுக்கு அவர்கள் ஆளாகின்றனர். நனவு வாழ்க்கையில் இவர்கள் அனுபவிக்கும் உணர்வுகளை ஒழுங்குபடுத்தி, நெறிப்படுத்துகிற செயல்களை இரவில் கனவுகள் செய்கின்றன. உணர்ச்சிகளைப் பதப்படுத்தவும் பக்குவப்படுத்தவுமான வேலைகளைக் கனவில் மனம் மேற்கொள்ளுவதன் மூலம், நனவு மனத்தின் தடுமாற்றங்கள் கனவு மனத்தால் சரி செய்யப்படுகின்றன. மனிதனுக்கான சாதனை வழிகள் புலப்படத் தொடங்கிவிடுகின்றன.
கனவுகள் என்பவை நமக்கு அப்பாற்பட்ட நிலையில் அமானுஷ்யமான நிலையில் நமக்குள் தோன்றி விடுவதில்லை. நமக்குள் நம்மையறியாமல் ஆழ்மனத்தில் அடங்கிக் கிடக்கும் ஆசைகளும் நிராசைகளும்கூடக் கனவுகளாக வெளிப்பட்டு, நம்மைச் செயலாற்றத் தூண்டலாம்.
உறக்கத்தில் உடம்பு ஓய்வெடுத்துக் கொண்டிருந்தாலும், மூளை எந்த நேரத்திலும் ஓய்ந்துபோவதேயில்லை; பகலில் அது தொடர்ந்து சிந்தித்துக் கொண்டிருப்பது போலவே, ஓய்வில் கனவு காணும்போதும் அது இயங்கிகொண்டே இருக்கிறது. ஆக, நமது நினைவுகளையும் சிந்தனைகளையும் சீரமைக்கவும் ஒழுங்கமைக்கவுமான வேலைகளைக் கனவுகள் செய்து நம்மை வழிப்படுத்துகின்றன. நாம் அன்றாட வாழ்வியலில் பல சவாலான பிரச்சனைகளை எதிர்கொள்ளலாம்; அவற்றைத் தீர்ப்பதற்கான முயற்சிகளில் மூளையைப் போட்டுக் கசக்கிக் கொண்டிருக்கலாம். ஆனால் ஆழ்ந்த சிந்தனை வாயிலாக அந்தச் சிக்கல்களை மனத்திடம் ஒப்படைத்துவிட்டு உறங்கச் சென்றுவிட்டால், மனம் உருவாக்குகிற கனவுகள் நமக்கான தீர்வுகளைத் தெளிவாக உணர்த்திடவும் தயங்குவதில்லை. ஒரு வகையில் நம்முடைய கனவுகளே நாம் எப்படிப்பட்டவர்கள் என்பதை எடுத்துரைக்கும் அடையாளங்களாகவும் திகழ்கின்றன.
ஒரு நகரத்தின் முதன்மைச் சாலையில் ஒரு கடிகார விற்பனை அங்காடி இருந்தது. அந்த வழியாக ஒவ்வொரு நாளும் செல்லும் போதும், ஓர் இளைஞன் சற்று நேரம் கடை வாசலில் நின்று அந்தக் கடையையும், கடைக்குள் கடிகாரங்களைப் பழுதுபார்த்துக் கொண்டிருக்கும் உரிமையாளரையும் உற்றுக் கவனித்து விட்டுச் செல்வான். இதைப் பார்த்த கடிகாரக்கடை உரிமையாளர் அந்த இளைஞனிடம், "உனக்கு என்ன வேண்டும்?. ஏன் கடையைக் கடந்து செல்லும்போதெல்லாம் இப்படி நின்று கவனித்துவிட்டுச் செல்கிறாய்?" என்று கேட்டார். அதற்கு அந்த இளைஞன், "எனக்கும் உங்களைப்போல் ஆக வேண்டுமென்று ஆசை. உங்களைப்போலவே கடிகாரக்கடை வைக்க வேண்டும்; உங்களைப்போலவே கடிகாரங்களை ரிப்பேரும் பார்க்க வேண்டும்" என்று பதில் அளித்தான்.
கடிகாரக்கடைக்காரர் புன்னகைத்துக் கொண்டே அந்த இளைஞனைப் பார்த்து, "அண்மையில் நீ என்ன கனவு கண்டாய்?" என்று கேட்டார். உடனே இளைஞனும், "போனவாரம் லாட்டரியில் எனக்கு ஒரு கோடி ரூபாய் பரிசு விழுவதுபோலக் கனவு கண்டேன்!" என்றான். "நீ கடை வைப்பதற்கான காலம் இன்னும் கனியவில்லை; இன்னும் கொஞ்ச நாள் கழித்து வா!" என்று கடிகாரக் கடைக்காரர் இளைஞனை அனுப்பி வைத்தார்.
சிறிது காலம் கழித்து அந்த இளைஞன் கடிகாரக்கடை வாசலுக்கு வந்து கடை முதலாளியைப் பார்த்தான். கடைக்காரர், "சமீபத்தில் நீ என்ன கனவு கண்டாய்?" என்கிற பழைய கேள்வியையே கேட்டார். இளைஞன், "என் தாத்தா இறந்து போவது போலவும், அவர்வழிச் சொத்தெல்லாம் எனக்கே வந்து விடுவது போலவும் கனவு கண்டேன்!" என்றான். கடைக்காரர், இப்போதும் காலம் கனிந்திருக்கவில்லை; நீ போய் ஐந்தாறு மாதங்கள் கழித்து வா!" என்று அனுப்பி வைத்தார்.
ஐந்தாறு மாதங்கள் கழித்து கடிகாரக்கடைக்கு வந்த இளைஞன் நேராகக் கடை முதலாளியிடம் சென்று, "எனக்குச் சொந்தமான ஒரு பெரிய கடிகாரக்கடைக்கு நடுவில் அமர்ந்திருப்பது போலவும், என் செவிகளைச் சுற்றி எப்போதும் டிக் டிக் கடிகார ஓசை ஒலித்துக்கொண்டிருப்பது போலவும், தங்கமும், வைரமும் கொண்ட கடிகார முட்கள் சுழன்றுகொண்டிருக்க, நான் எந்தவிதமான கவனச் சிதறலுமின்றி கடிகாரங்களைப் பழுதுநீக்கும் வேலையில் ஈடுபட்டிருப்பது போலவும் கனவு கண்டேன்!" என்றான். "சபாஷ்! உனக்கு இப்போதுதான் காலம் கனிந்திருக்கிறது. இப்போதே கடையில் வேலைக்குச் சேர்ந்து கொள்! கடிகாரம் தொடர்பான எல்லாத் தொழில் நுட்பங்களையும் நான் உனக்குக் கற்றுத் தருகிறேன். விரைவில் நீ கடிகாரக்கடை அதிபராக மனமார்ந்த வாழ்த்துகள்!" என்று வாழ்த்துச் சொல்லி வேலைக்குச் சேர்த்துக் கொண்டார் கடை முதலாளி.
'ஒருபொழுதும் வாழ்க்கையை வாழத் தெரியாதவர்கள் கோடிகள் குறித்த கனவிலேயே உழன்று கொண்டிருப்பதால் என்ன பயன்?' என்று வள்ளுவப் பெருந்தகை கேள்வி கேட்பார். நம்மில் பலர் ஆரம்பத்தில் இருந்த அந்த இளைஞனைப் போலத்தான் கற்பனைக் கனவுகளில் உறக்கத்தையும் நேரத்தையையும் வீணடித்து வாழ்நாளை வீழ்நாளாகக் கழித்துக் கொண்டிருக்கிறோம். பணம் லாட்டரியில் வருமென்பதும், மூதாதையர் வழிச் சொத்தாகக் கிட்டுமென்பதும் சோம்பேறிகளின் கற்பனாவாதமாக மட்டுமே இருக்கும். நம்முடைய எண்ணங்களும் சிந்தனைகளும், நம்முடைய லட்சியங்களை மையமிட்டதாகவும், நம்முடையை சொந்த உழைப்பை நம்பியிருப்பதாகவும் இருந்தால், நமக்கு வருகிற கனவுகளும், நமது நியாயத் தேவைகளைப் பூர்த்திபண்ணி வைக்கிற வேலைகளைச் செய்யும்.
கனவு காண்பதை தியானத்திற்கு இணையானதாகக் கொள்ள வேண்டும். தியானம் என்பது ஒரு பொருண்மை குறித்த சிந்தையிலேயே ஒருமித்த கருத்தைச் செலுத்தி நிற்பதாகும். சிந்தனைக்கூர்மை நேராகக் கூராக நமது மூளையின் கவனம் சிறப்பான செயலில் இறங்கி விடுகிறது. மூளைக்குப் புலப்படாத தர்க்க விவாதங்களை, அறிவுக்கும் மேம்பட்ட தளங்களில் கனவுகள் உருவாக்கித், தீர்வான முடிவுகளை நமக்குப் புலப்படுத்திக் காட்டி விடுகின்றன. அதனால் கனவுகள் காட்டுகிற வழிகள் வெற்றிவழிகளாக மாறி, நம்மைச் சாதனை மனிதர்கள் ஆக்கிவிடுகின்றன.
காணுகிற கனவுகள் எல்லாம் மெய்ப்பட வேண்டுமென்றால், கொண்டிருக்கிற நோக்கங்களும் லட்சியங்களும் மெய்யானவை யாக இருக்க வேண்டும். கடுமையான உழைப்பும் நேர்முறையான சிந்தனை நோக்கங்களும் கனவுகளைத் தோல்வி தருவனவாக ஆகாமல் காத்து விடுகின்றன.
யார் வேண்டுமானாலும் கனவு காணலாம்; லட்சியங்கள் எட்ட முடியாத உயரம் உடையன வாகவும் இருக்கலாம்; உன்னுடைய தகுதிக்கு இப்படிப்பட்ட லட்சியங்களை நீ அடையவே முடியாது என்று அடுத்தவர்கள் கேலிபேசவும் செய்யலாம். அயராதீர்கள். கடவுள்மீது பக்தன் வைத்திருக்கும் நம்பிக்கையைப் போல உங்கள் லட்சியங்கள்மீது நம்பிக்கை வையுங்கள்!; தொடர்ந்து திட்டங்களைப் பிரார்த்தனை செய்யுங்கள்! நிச்சயம் கனவுகள் வெற்றிகளைப் பிரசாதங்களாகக் கொண்டுவந்து ஆசீர்வதிக்கும்.
கனவுகள் மெய்ப்படட்டும்; அதற்கு அடிப்படையாக நமது நனவுகளை மெய்யானவை ஆக்குவோம்!
தொடர்புக்கு - 9443190098
- கருவில் இருக்கும் குழந்தை, நான்கு மாதம் கடந்தபின் கேட்கும் திறனைப் பெற்றுவிடுகிறது.
- ஒரு நல்ல குழந்தை வளர்ப்பு என்பது அன்பு, அக்கறை, கனிவு, கண்டிப்பு ஆகிய அனைத்தும் கலந்ததாக அமைய வேண்டும்.
16 பிள்ளைகளுக்கு மேல் பெற்று வளர்த்த நம் பாட்டிகள் எங்கே? ஒன்று அல்லது இரண்டு குழந்தைகளைக் கூட வளர்க்க முடியாமல், அவர்கள் இல்லாமல் 1 மணிநேரம் கிடைத்தால் அதுவே பெரிய ஓய்வு, மனத்திற்கு அமைதி என்று நினைக்கும் இன்றைய பெற்றோர்கள் எங்கே?
குழந்தை பிறக்கும்போதுதான், பெற்றோர்களும் பிறக்கிறார்கள். உங்களிடம் உள்ள செல்வங்களில் மிக உயர்ந்த செல்வம் எது? என்று கேட்கும்போது, நிறைய பேர் கூறும் பதில் என் குழந்தை என்பதுதான்.
குழலினிது யாழினிது என்பர் தம்மக்கள்
மழலைச் சொல் கேளாதவர். – (திருக்குறள்)
குழந்தைகளின் மழலைப் பேச்சும், அதன் ஒவ்வொரு பருவமும், அவர்களுக்குள் ஏற்படும் ஒவ்வொரு மாற்றங்களும், நமக்கு மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுக்கக்கூடிய ஒன்று. இத்தகைய குழந்தைவளர்ப்புப் பற்றியே இப்பகுதியில் நாம் பார்க்கப்போகிறோம்.
கருவில் இருக்கும் குழந்தை, நான்கு மாதம் கடந்தபின் கேட்கும் திறனைப் பெற்றுவிடுகிறது. தாய் என்ன பேசுகிறார்? என்ன மனநிலையில் இருக்கிறார்? என்பதை உள்வாங்கிக் கொண்டே உள்ளது. குழந்தை வளர்ப்பு என்பது கருவுற்ற காலத்திலிருந்தே தொடங்கி விடுகிறது என்பது இப்போது உங்களுக்குப் புரிந்திருக்கும். வாய் திறந்து பேசும்வரை, குழந்தையின் அழுகுரலை மட்டுமே வைத்து, அதன் உணர்வைப் புரிந்து கொள்வது தாய்மையின் சிறப்பு.
ஆனால் இன்றோ, வீடு மற்றும் சமூகத்துக்குள் ஏற்பட்டிருக்கும் அறிவியல் வளர்ச்சி நம்மிடமும், குழந்தைகளிடமும் ஏதோ ஒரு வகையில் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. சுமார் 30 ஆண்டுகளுக்கு முன் தொலைக்காட்சியின் வருகையால், குழந்தைகள் வளரும் போக்கில் பெரிய மாறுதலைக் காணமுடிந்தது. தற்போது, கணினி, மடிக்கணினி மற்றும் அலைபேசி (ஃபேஸ் புக், யுடியூப், வாட்ஸ் அப்) உள்ளிட்டவைகள் குழந்தைகளிடம் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கின்றன. குழந்தை வளர்ப்பு என்பது இன்றைய நவீன காலப் பெற்றோர்களுக்கு மிகவும் கடினமாத்தான் தோன்றுகிறது. எனவே குழந்தை வளர்ப்புப் பற்றிப் பாடம் எடுக்க வேண்டியுள்ள கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளோம்.
குழந்தை வளர்க்கும் முறைகள்:
ஒரு நல்ல குழந்தை வளர்ப்பு என்பது அன்பு, அக்கறை, கனிவு, கண்டிப்பு ஆகிய அனைத்தும் கலந்ததாக அமைய வேண்டும். அன்புதான் பெற்றோர்கள் எடுக்க வேண்டிய மிகப் பெரிய ஆயுதம் என்பதை மனத்தில் நிறுத்த வேண்டும். அனைத்துப் பெற்றோர்களிடமும் அன்பு இயல்பாகவே இருக்கிற ஒன்றுதான், ஆனால் அதை நாம் வெளிப்படுத்தப் பழகிக் கொள்ள வேண்டும். குழந்தை வளர்க்கும் முறைகளை நான்கு வகையாகப் பிரிக்கலாம் அவையாவன,அடக்கு முறை, நேர்மறையான முறை, ஒப்புதலான முறை, ஈடுபாடற்ற முறை.
அனைத்துப் பெற்றோர்களும் தங்கள் குழந்தைகளை நன்முறையில் வளர்க்கவே விரும்புகிறார்கள், அதற்காக அவர்கள் தேர்ந்தெடுக்கும் முறையில்தான் சிலமாற்றங்கள் உள்ளன. குழந்தைகளின் எதிர்காலம் நீங்கள் தேர்ந்தெடுக்கும் முறையில்தான் உள்ளது. இந்த நான்கு வகைக் குழந்தை வளர்ப்பு முறையில் நீங்கள் எதைப் பின்பற்றுகிறீர்கள் என்பதை நீங்களே புரிந்து கொள்ளுங்கள்.

அடக்குமுறை:
இந்த வகைப் பெற்றோர்கள் கட்டுப்பாடாக வளர்க்கிறேன் என்று மிரட்டி, வதைத்துக் குழந்தைப்பருவத்தில் கிடைக்க வேண்டிய ஒருசில மகிழ்வுகளைத் தட்டிப் பறிக்கிறார்கள். குழந்தைகளின் உணர்வுகளை மதிக்காமல், அவர்களுக்கு ஆறுதல் கொடுக்க வேண்டிய இடங்களில் கை கொடுக்காமல், ஒன்னு, இரண்டு, மூணு..... என்று எண்ணி முடிப்பதற்குள் வேலைகளைச் செய்து முடிக்க வேண்டும் என்று ஆணையிடுவார்கள். கண்டிப்பும், தண்டனையுமாக வளர்க்கப்படும் இக்குழந்தைகள் பயந்த இயல்பு உள்ளவர்களாகவும், தன்னம்பிக்கை இல்லாதவர்களாகவும் வளர்வார்கள். எப்போதும் திட்டிக்கொண்டும், அடித்துக்கொண்டும் இருக்கும் பெற்றோரிடம் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்த இயலாமல், மனதிற்குள்ளேயே புழுங்கிப் புழுங்கி மனச்சிக்கலுக்கு ஆளாகிவிடுகிறார்கள்.
நேர்மறையான முறை:
குழந்தைகளுக்கு என்ன வேண்டும் என்பதை இவர்கள் தெளிவாகப் புரிந்து வைத்திருப்பார்கள், அதேநேரத்தில் அன்பு, கண்டிப்பு, ஆறுதல், அக்கறை மிகுந்தவர்களாகவும் இருப்பார்கள். தேவையான இடத்தில் தேவையான உணர்வுகளைப் வெளிப்படுத்தி, சற்று முதிர்ச்சியுடனும், தொலைநோக்குப் பார்வையுடனும் குழந்தைகளை வளர்க்கும் பெற்றோர்கள் இவர்கள். குழந்தைகளிடம் எதையும் திணிக்காமல் அவர்களுக்குப் புரியவைத்து, அவர்களைச் செய்ய வைப்பார்கள். இவர்களின் குழந்தைகளும் ஒரு புரிதலுடன் வாழ்க்கையை எதிர்கொள்வார்கள்.
ஒப்புதலான முறை:
பெரும்பாலும், ஒரு குழந்தை மட்டுமே உள்ள குடும்பத்தில், தங்கள் குழந்தைக்கு அதிகச் செல்லம் கொடுத்து, அவர்களின் தவறுகளைக் கண்டிக்காமல் வளர்க்கிறார்கள். என் குழந்தை அழுதா என்னால தாங்க முடியாது என்று கேட்டவைகள் அனைத்தையும் கொடுத்து வளர்க்கப்படும் குழந்தைகள் பொறுப்பற்றவர்களாகவும், நான், எனது என்று தன்னலம் மிகுந்தவர்களாகவும் வளர்வார்கள். ஒரு குழுவாக இணைந்து செயல்பட இவர்களால் முடியவே முடியாது. கேட்பதெல்லாம் கிடைத்தே இவர்கள் வளர்வதால், தோல்விகளை எதிர்கொள்ளத் தெரியாதவர்களாகவும் இருப்பார்கள். இதுவே பிற்காலத்தில் தற்கொலை முயற்சிக்குக் காரணமாகிறது.

மரு.அ.வேணி MD., DM(Neuro), 75980-01010, 80564-01010.
ஈடுபாடற்ற முறை:
குழந்தைகள் என்ன செய்கிறார்கள்? அவர்களுக்கு என்ன வேண்டும்? என்பது பற்றிய புரிதல் இல்லாத, அவர்களுடன் நேரம் செலவழிக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லாத பெற்றோர்கள் இவர்கள். பள்ளி செல்வதற்குப் பணம் கட்டிவிட்டேன், சாப்பிடுவதற்கு பொருட்களை வாங்கிக் கொடுத்துவிட்டேன், இனி உங்கள் வேலையை நீங்களே பார்த்துகொள்ளுங்கள் என்பதோடு நிறுத்திக் கொள்வார்கள். தம் கடமை என்ன? என்பதை உணராத பெற்றோர்கள் இவர்கள். இவர்களின் குழந்தைகள் பொறுப்பற்றவர்களாக வளர்வதற்கான வாய்ப்புகள் அதிகம்.
குழந்தை வளர்ப்புக்கான சில குறிப்புகள்:
வீட்டில் உள்ள வேலைகளைச் செய்வது தவறானது அல்ல. வீட்டைத் தூய்மை செய்வது, பாத்திரம் துலக்குவது, துணிகளை மடித்துவைப்பது மற்றும் அம்மா சமைக்கும்போது உதவியாக இருப்பது போன்றவை பெண்களுக்கு மட்டுமே எனவிடாமல் இருவருக்கும் பொதுவானது என்பதைப் புரியவைக்க வேண்டும். மற்றவர்களின் உதவி இல்லாமல் தனக்குத் தேவையான உணவை ஆக்கிக் கொள்ளப் பழகிக் கொள்வது மிகவும் நன்று என்று உணர்த்த வேண்டும்.
தாய் தந்தையரிடம் நல்ல புரிதலும், பாகுபாடற்ற உரையாடல்களும் இருக்கும்போதில், அவர்களைக் கண்டு வளரும் குழந்தைகளும் பாலினப் பாகுபாடற்றுப் பழகுவார்கள்.
பாலினப் பாகுபாடு இல்லாமல் பழகுவது. மூன்றாம் பாலினம் என்ற ஒன்று இருக்கிறது. அவர்களும் நம்மைப் போன்றவர்கள்தாம் அவர்களை மனத்தால் காயப்படுத்தக் கூடாது என்பதையும் சொல்லிக் கொடுக்க வேண்டும்.
குழந்தை ஏதாவது தவறு செய்கிறது என்று வைத்துக்கொள்வோம்... நீங்கள் என்ன செய்வீர்கள்? ஒன்று, குழந்தையை அடிப்பீர்கள். அல்லது குரலை உயர்த்திக் கத்துவீர்கள். இந்த இரண்டுமே சரியான குழந்தை வளர்ப்பு அல்ல. குழந்தை ஒருவேளை தவறு செய்தால் உங்கள் குரலை உயர்த்தாமல், அதே சமயம் கண்டிப்புடன் உங்கள் கருத்துகளைக் குழந்தையிடம் எடுத்துக் கூறுங்கள்.

பெண் குழந்தை கீழானது, ஆண் குழந்தை உயர்வானது என்றும், பெண் குழந்தைகள் மட்டுமே சமையலறைப் பணிகளைச் செய்யப் பிறந்தவர்கள் என்றும், வளர்க்கப்படும் வீடுகளில் இரு குழந்தைகளுமே தவறாகத்தான் வளர்க்கப்படுகிறார்கள் என்பதைக் காலம் பெற்றோருக்கு கண்டிப்பாக உணர்த்தும். ஆணும் பெண்ணும் நிகர் என்பதை வாய்வார்த்தையாக இல்லாமல் குழந்தைகளுக்குப் புரியவைத்து, ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து வாழ்வதைச் சிறுவயதிலிருந்தே கற்பித்தல் வேண்டும்.
குழந்தை வளர்ப்பு என்ற உன்னதக் கலையை உணர்ந்து, புரிந்து, அதை நாம் திறம்படச் செய்தால்தான் அடுத்த தலைமுறையின் வாழ்க்கைப் பயணம் சரிவர அமையும் என்பதில் சிறிதும் ஐயமில்லை.
- குடிகாரத் தாய்மாமனை ஊரே தூக்கிவைத்துக் கொண்டாடியது.
- யாரொருவரின் வார்த்தைகளையும் உதாசீனப்படுத்திவிடக் கூடாது.
'உள்ளுணர்வு என்பது மனிதனுடைய மனம் அமைதியாக இருக்கும் தருணங்களின்போது, அவனில் இயல்பாகவே தோன்றும் ஆன்ம வழிகாட்டல் ஆகும்'.
-ஸ்ரீஸ்ரீபரமஹம்ச யோகானந்தர்
அந்த வீட்டின்முன் துக்க முகத்துடன் ஒரு கூட்டம் உட்கார்ந்திருந்தது. வீட்டிற்குள் ஒரே அழுகைக் கூப்பாடு. அந்தச் சத்தம் தெருமுனைவரையில் கேட்டது.
மூன்று மாத ஆண் குழந்தை இறந்துவிட்டது. அதனைத் தன் மடியில் கிடத்திவைத்து அழுது கொண்டிருந்தாள் அந்தத் தாய். அவளைச் சுற்றிலும் சில பெண்கள் ஒப்பாரி வைத்துக் கொண்டிருந்தனர்.
நான்கைந்து நாட்களாகக் குழந்தைக்குக் காய்ச்சல். பட்டணத்து டாக்டரிடம் காண்பித்திருக்கிறார்கள். அவர் ஊசி போட்டு அனுப்பியுள்ளார். மருந்து எதையும் உடம்பு ஏற்கவில்லை.
மறுநாள் காலை, குழந்தை நன்றாகத் தூங்கிக் கொண்டிருப்பதாக நினைத்துக் கொண்டார்கள். பின்னர், அது அசைவற்றுக் கிடப்பதைப் பார்த்துப் பதறியடித்து, நாட்டு வைத்தியரிடம் தூக்கிக்கொண்டு ஓடினார்கள். அவர் நாடி பிடித்துப் பார்த்துவிட்டுக் குழந்தை இறந்துவிட்டது என்று சொல்லிவிட்டார்.
பச்சிளம் குழந்தை என்பதால், அன்று மாலையிலே அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றன. உறவினர்கள் எல்லோரும் வந்துவிட்டார்கள். காலையில் வெளியே சென்றிருந்த குடிகாரத் தாய்மாமன் மட்டும் வரவில்லை. அவனுக்காகக் காத்திருந்தார்கள்.
இருட்டத் தொடங்கிவிட்டது. லேசாக மழைத்தூறல் விழுந்து கொண்டிருந்தது. மேற்கொண்டு காத்திருக்க முடியாது என்ற நிலையில், குழந்தையை அடக்கம் செய்வதற்காகப் புறப்பட்டனர்.
பட்டுத்துணியால் அலங்கரிக்கப்பட்ட சிறிய சவப்பெட்டியில் குழந்தையின் உடல் கிடத்தப்பட்டு, அமரர் ஊர்தியில் ஏற்றப்பட்டது. கல்லறைத் தோட்டத்தை அடைந்தபோது நன்றாகவே இருட்டிவிட்டது. மத ஒழுங்கு
முறைமைகளுக்குப்பின், அங்கே வெட்டப் பட்டிருந்த குழியில் சவப்பெட்டி இறக்கப்பட்டு, அதன்பின் மண்ணைத் தள்ளி மூடினார்கள்.
குழந்தையை அடக்கம் செய்துவிட்டுக் கல்லறையில் இருந்து புறப்படும்போது, நல்ல குடிபோதையில் குழந்தையின் தாய்மாமன் அங்கு வந்து நின்றான்.

கவிஞர் தியாரூ
'எல்லாரும் எங்க கிளம்பிட்டீங்க?'
'குழந்தையை அடக்கம் பண்ணியாச்சி. அப்புறம் இங்க என்ன வேலை?'
'என்னது... அடக்கம் பண்ணிட்டீங்களா? நான்தான் தாய்மாமன். நான் இல்லாம நீங்க எப்படி அடக்கம் பண்ணலாம்?'
'மாப்ள, உனக்காக காத்திருந்தோம். மேற்கொண்டு வச்சிருக்க முடியாதுங்குறதுனால அடக்கம் பண்ணிட்டோம்'.
'அதெல்லாம் ஏத்துக்க முடியாது. நான் குழந்தையோட முகத்தை பார்த்தே ஆகணும். இல்லேன்னா, இங்கேயே தீக்குளிப்பேன்' என்று பயங்கர ரகளையில் இறங்கினான் தாய்மாமன்.
வேறு வழியின்றி, மூடிய குழியின் மண்ணை எடுத்துவிட்டு, சவப்பெட்டியை வெளியே தூக்கினர். பெட்டியின் மூடி திறக்கப்பட்டது. இருட்டிவிட்டதால் முகம் சரியாகத் தெரியவில்லை. ஒருவரின் கையிலிருந்த டார்ச் லைட்டை வாங்கி, அந்த வெளிச்சத்தில் குழந்தையின் முகத்தை உற்று நோக்கினான் தாய்மாமன். குழந்தையின் கருவிழிகள் இமைகளுக்குள் லேசாக அசைவதுபோல் அவனுக்குத் தோன்றியது. இன்னும் குனிந்து குழந்தையைப் பார்த்தான். ஆம், விழிகளின் அசைவு தெரிகிறது. குடிபோதையிலும் தெளிவாகக் கத்தினான்.
'குழந்தை சாகல... உயிர் இருக்கு... பாருங்க, கண் அசையுது அசையுது' என்று குழத்தையைத் தூக்கிக்கொண்டு துள்ளிக் குதித்தான். எல்லோருக்கும் ஒரே ஆச்சரியம்!
உடனடியாக மருத்துவமனைக்கு விரைந்தனர். குழந்தையைப் பரிசோதித்த டாக்டர், 'குழந்தை உயிருடன்தான் இருக்கிறது' என்பதை உறுதிப்படுத்தி, அவசர சிகிச்சை அளித்தார். குழந்தை கண்விழித்துப் பார்த்தது. குடிகாரத் தாய்மாமனை ஊரே தூக்கிவைத்துக் கொண்டாடியது.
'கல்லறைக்குப்போன எம்புள்ளைய கடவுளா வந்து காப்பாத்திட்டே அண்ணே' என்று குழந்தையின் தாய், அவனது கால்களைக் கட்டிக்கொண்டு அழுதாள்.
ஆச்சரியம்! அதிசயம்! அந்தக் குழந்தை வளர்ந்து பெரியவனாகி, சென்னையில் ஒரு நிறுவனத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த போது, அதே அலுவலகத்தில் நானும் பணியாற்றினேன். அப்போது ஒருநாள், அலுவலக சிறப்பு நிகழ்ச்சி ஒன்றில், அவன் இந்த அற்புத விஷயத்தை எங்களுடன் பகிர்ந்து கொண்டான்.
ஒரு குடிகாரனின் பிடிவாதம், கல்லறைக் குழியிலிருந்து ஒரு குழந்தையைக் காப்பாற்றியது.
எப்படி? அது ஓர் உள்ளுணர்வு. ஒருவர் தன் அகத்தே கொண்டிருக்கும் ஓர் இயல்பான உணர்வு.
அதனை 'இயல்பூக்கம்' என்று சொல்கிறார்கள்.
எனவே, யாரொருவரின் வார்த்தைகளையும் உதாசீனப்படுத்திவிடக் கூடாது. அவற்றில் ஏதோ ஒரு விஷயம் இருக்கும்.
நம் பெரும்பாலான முடிவுகள், நம் உள்ளுணர்வின் அடிப்படையில்தான் எடுக்கப்படுகின்றன. அதற்குக் காரணம் இன்னதென்று நம்மால் கூற முடியாது.
கண்ணகியின் சிலம்பை விற்றுப் பொருளீட்டும் எண்ணத்துடன்தான், கோவலன் மதுரைக்குச் சென்றான். ஆனால், அவன் சென்றதிலிருந்தே கண்ணகிக்கு இருப்புக் கொள்ளவில்லை. கோவலனுக்கு ஏதோ நடக்கப்போகிறது என முன்கூட்டியே உள்ளுணர்வாக உணர்ந்தாள். அதனால்தான், அங்குள்ள ஆயர்குலப் பெண்களுடன் ஆய்ச்சியர் குரவை நிகழ்த்தித் திருமாலை வழிபட்டாள் என்று இளங்கோவடிகள் கூறுகிறார்.
உள்ளுணர்வு ஒன்றைச் சொல்லும். அதில் அர்த்தம் இருக்கும். அதைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிடக் கூடாது.
'இப்போது இதைச் செய்ய வேண்டாம். கொஞ்சம் பொறுத்திருப்பது நல்லது' என்று உள்ளுக்குள் ஓர் உணர்வு ஏற்பட்டால், அது ஓர் எச்சரிக்கை என்பதே உண்மை.
'இந்த வாய்ப்பை நழுவவிட வேண்டாம். உடனே ஏற்றுக்கொள்' என்று ஒரு குரல் உள்ளுக்குள் ஒலித்தால், அது சரியானதாகத்தான் இருக்கும்.
உள்ளுணர்வுகளை ஒருபோதும் புறந்தள்ளிவிடக் கூடாது. நமக்குத் தெரியாமல் நம் மனம் சேமித்து வைத்திருக்கும் தகவல்களைக் கொண்டுதான் உள்ளுணர்வுகள் வெளிப்படுகின்றன.
திடீரென வெளியூர்ப் பயணம். அவசரமாகப் புறப்பட்டு வீட்டிலிருந்து வெளியே வரும்போது, மனதில் ஏதோ ஒரு சத்தம். ரயிலைப் பிடிக்கிற அவசரத்தில், அந்தச் சத்தத்தைப் பொருட்படுத்தாமல் ஆட்டோவில் ஏறிவிடுவோம். பாதி தூரம் சென்ற பிறகுதான், செல்போனை சார்ஜரோடு வைத்துவிட்டு வந்தது நினைவிற்கு வரும்.
உள்ளுணர்வு நமக்கு உணர்த்துவதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். பல பிரச்சனைகள் அல்லது ஆபத்துகளிலிருந்து நம்மை விலக்கிக் கொள்ள அது நமக்கு அறிவுறுத்தும். சிலர் தங்கள் மனதின் குரலுக்கும் செவிகொடுக்க மாட்டார்கள்; மற்றவர்கள் உணர்ந்து சொல்வதையும் கேட்க மாட்டார்கள். முட்டி மோதி விழுவதும், நெற்றியைத் தடவிக்கொண்டு எழுவதும் அவர்களுக்கு சகஜமான விஷயம்தான்.
'இப்படித்தான் நடக்கும்னு எனக்கு அப்பவே தெரியும்' என்று சிலர் சொல்வார்கள். இப்படியேதான் ஒவ்வொரு முறையும் சொல்வார்கள். எந்த ஒன்று நடந்து முடிந்த பின்னும், 'அப்பவே தெரியும்' என்று சொல்வதன் பொருள் என்ன? உள்ளுணர்வு ஏதோ ஒன்றை அவர்களுக்கு உணர்த்தியிருக்கின்றது. ஆனால், பொறுமையாக நின்று யோசிக்க வேண்டுமே. இல்லை என்றால், என்ன பிரயோஜனம்!
உள்ளுணர்வு பல தகவல்களை நமக்குத் தருவதுண்டு. மோசமான விஷயமாகவோ மகிழ்ச்சியான ஒன்றாகவோ இருக்கலாம். அவற்றிற்கான காரண காரியங்களை அது சொல்வதில்லை.
இந்த உள்ளுணர்வு நம் ஆழ்மனத்தின் அறிவாற்றலா? இல்லை, நுண்ணறிவா? தெரியவில்லை. உளவியல் ஆய்வாளர்கள்தான் பதில் சொல்ல வேண்டும்.
பறவைகளுக்கு ஒரு விசேஷித்த ஞானம் இருக்கிறது. இல்லையெனில், 'இடம்பெயர்தல்' சாத்தியமாகாது. அது ஓர் அற்புதம்! ஒரு வருடத்திற்கு இரண்டுமுறை ஏற்படும் பருவகால இயக்கம். பறவைகளின் இனப்பெருக்கம் மற்றும் குளிர்காலம் ஆகியவற்றிற்கு இடையே அது நிகழ்கின்றது.
ஒவ்வொரு ஆண்டும் ஒரு குறிப்பிட்ட காலப்பகுதியில் அவை வலசை போகின்றன. சில பறவைகள் எவ்வழியில் சென்று தங்களின் இலக்கை அடைகின்றதோ, அதே வழியிலேயே மீண்டும் தங்கள் இடங்களுக்குத் தடம் மாறாமல் வந்து சேர்கின்றன. தெளிவான ஓர் உள்ளுணர்வுதானே, இச்செயல்பாட்டை அவற்றிற்கு எளிதாக்குகின்றது!
விவேகமற்ற வார்த்தைகளுக்கு நாம் செவிமடுக்கின்றோம். தேவையற்ற விஷயங்களில் கவனம் செலுத்துகின்றோம். நம் மனம் சொல்வதைக் கவனிக்கத் தவறிவிடுகின்றோம்.
ஆசைகள் நம்மை இழுக்கின்றன. அங்குமிங்கும் நம்மை அலைக்கழிக்கின்றன. ஆசைகளின் வழியில் அறிவு மயங்குகின்றது. எனவேதான், உள்ளுணர்வின் எச்சரிப்புகளை பல தருணங்களில் தவறவிட்டுவிடுகின்றோம்.
இதைச் செய்வதா அதைச் செய்வதா, இது சரியா அது சரியா என்று நாம் தடுமாறுகின்ற நேரங்களில் - ஒரு மெல்லிய குரல் நமக்குள் கேட்கக்கூடும். அது ஞானத்தின் ஒலியாகவோ தெய்வத்தின் குரலாகவோ இருக்கலாம். நிதானமாக கவனிக்க வேண்டும். ஒரு தெளிவு நமக்குள் பிறக்கும்.
ஓர் இளைஞனுக்குத் தனது பெற்றோரின் கண்டிப்பு அறவே பிடிக்கவில்லை. அவர்களின் அறிவுரைகள் அவனுக்குக் கசப்பாக இருந்தன. வாழ்க்கையே வெறுமையாகத் தோன்றியது. எனவே, வீட்டை விட்டு வெளியேறி ஒரு குருவிடம் வந்தான்.
'குருவே, என் மனதில் எதுவுமே இல்லை என்றால் என்ன செய்வது?' என்று கேட்டான்.
'அதைத் தூக்கி எறி' என்றார் குரு.
மீண்டும் குருவிடம், 'என்னிடம்தான் எதுவும் இல்லையே, எப்படி தூக்கி எறிவது?' என்று கேட்டான்.
'சரி, அப்படியானால் நீயே வைத்துக்கொள்' என்றார் குரு.
இப்படித்தான், இல்லாத ஒன்றை இருப்பதாக நினைக்கின்றோம். இருப்பதை இல்லாததுபோல் கருதிக்கொண்டு, குழப்பத்திலேயே வாழ்கின்றோம். எவர் ஒருவரின் வீழ்ச்சியாயினும் குழப்பமான மனநிலைதான் காரணமாக இருக்க முடியும்.
கல்வியறிவு மட்டுமே ஒருவனைக் கரைசேர்த்து விடாது. பணமும் புகழும் ஒருவனுக்குப் பாதுகாப்பைத் தந்துவிடாது. தெளிந்த சிந்தை வேண்டும். உள்ளுணர்வைப் புரிந்து கொண்டு செயல்படுகின்ற ஞானம் வேண்டும்.
அப்படியானால்தான், வாழ்க்கை சுலபமாகவும் இனிமையாகவும் இருக்கும். ஒருமுறைதானே வாழ்க்கை. இந்த வாழ்க்கையை நன்றாக வாழ்வதுதானே நமக்குப் பெருமை!
போன்- 9940056332
- ராவணன் இமயமலையில் கடுந்தவம் புரிந்து அங்கிருந்து ஈசனிடம் ஆத்ம லிங்கம் பெற்றுக்கொண்டு தன்னுடைய நாடான இலங்கை சென்றார்.
- கோவிலின் முன்பகுதியில் இரண்டு பெரிய யானை சிலைகள் நம்மை கம்பீரமாக வரவேற்பதை காணலாம்.
கர்நாடகத்தில் உள்ள பல அழகான மாவட்டங்களில் உத்தர கர்நாடகா என்று அழைக்கப்படுகின்ற கடற்கரையையொட்டி அமைந்துள்ள மாவட்டம் ஒரு அழகான இயற்கை சூழலில் மேற்கு திசையில் அரபிக்கடலும் கிழக்கு திசையில் மலை பாங்கான பகுதிகளும் கொண்ட மங்களூரில் இருந்து கோவா செல்கின்ற பாதையில் அமைந்துள்ளது.
கொங்கன் ரெயில்வே கோட்டத்துக்குள் உள்ள இந்த இடத்தை மங்களூரில் இருந்து ரெயில் மூலமாக நான்கு மணி நேரத்தில் அடையலாம். சில ரெயில்கள் பட்கல் ரெயில் நிலையத்தில் நிற்கும். சில ரெயில்கள் முருடேஷ்வர் நிலையத்திலும் நிற்கும். அங்கிருந்து ஆட்டோக்கள் மூலமாக இந்த சுற்றுலாத் தலத்தை அடையலாம். பெங்களூரிலிருந்து வேறு பாதையில் ரெயில் அல்லது பேருந்து மூலம் அடையலாம்.
முருடேஷ்வர் என்ற இந்த ஊர் பெயரை பார்க்கும்போதே இது ஒரு சிவத்தலம் என்று உங்களுக்கு தோன்றலாம். ஆம் நீங்கள் நினைப்பது முற்றிலும் சரி. ராமாயண காலத்திற்கு முன்பே தொடர்புடைய இந்தத் தலத்தின் பெருமையை அறிவோம் வாருங்கள்...
ராவணன் இமயமலையில் கடுந்தவம் புரிந்து அங்கிருந்து ஈசனிடம் ஆத்ம லிங்கம் பெற்றுக்கொண்டு தன்னுடைய நாடான இலங்கைக்கு செல்லும்போது வழியில் மாலை நேரத்தில் சந்தியா வந்தனம் செய்ய வேண்டும் என்ற ஒரு நிலையில், அவர் கையில் வைத்திருந்த ஆத்ம லிங்கத்தை கொடுத்து அருளிய ஈசனின் வரத்திற்கேற்ப "லிங்கத்தை தரையில் வைத்து விட்டால் அங்கேயே நிலைத்து விடும். அதை மீண்டும் எடுக்க இயலாது" என்பதை நினைவுகூர்ந்து என்ன செய்வது என யோசித்தான்.

அப்போது பிள்ளையாரை ஒரு மாடு மேய்க்கும் சிறுவன் உருவத்தில் நாரதர் (இராவணன் லிங்கத்தை இலங்கைக்கு எடுத்து செல்லக்கூடாது என்ற நோக்கத்துடன்) அங்கு அனுப்பி விட அந்த சிறுவனிடம் ஆத்ம லிங்கத்தை கொடுத்து விட்டு தான் கடலில் குளித்துவிட்டு வரும்வரை "கீழே வைக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்" என்று ராவணன் கேட்டுக்கொண்டான்.
அந்த சிறுவனும் "நான் மூன்று முறை உங்களை அழைப்பேன். நீங்கள் வராவிட்டால் இந்த லிங்கத்தை கீழே வைத்து விடுவேன்" என்று கூற, "சரி அப்படியே செய்" என்று சொல்லிவிட்டு ராவணன் கடலில் நீராட சென்றான். மூன்று முறை தலை மூழ்கி குளிக்கும் பொழுது பிள்ளையார் வடிவில் வந்த சிறுவன் அவரை அழைத்தான்... ராவணன் வராததால் லிங்கத்தை கீழே வைத்துவிட்டு காத்திருக்க... சந்தியா வந்தனம் முடிந்து வந்த ராவணன் ஆத்ம லிங்கத்தை கையில் எடுக்க முடியாமல் போனதால் கோபத்துடன் அந்த சிறுவனின் தலையில் குட்ட, அந்த சிறுவனுக்கு தலையில் ஒரு குழி விழுந்ததாக சொல்லப்படுகிறது (அந்த வரலாற்றை சார்ந்த கோவிலை நாம் பின்பு காண்போம்).
கோபத்தில் இருந்த ராவணன் அந்த லிங்கத்தை பிடுங்க முயற்சிக்க, அது மூன்று துண்டுகளாக உடைந்திட பொறுமையிழந்து அவற்றை வெவ்வேறு இடத்தில் தூக்கி எறிந்திட அந்த இடங்களில் கோவில் கட்டப்பட்டு புண்ணிய தலமாக வழிபாடு நடத்தப்படுகிறது.
முருடேஸ்வராவும் ஆத்ம லிங்கத்தின் ஒரு பகுதியாகும். இந்த கோவில் சற்றே உயரமான குன்றின் மேல் கட்டப்பட்டு இருக்கிறது. ஒரு அருமையான கடலும் மலையும் இணைந்த சூழலில் நம் கண்களை கவரும் வண்ணம் இந்த கோவில் அமைந்துள்ளது. இங்குள்ள கோபுரம் ஆசியாவிலேயே மிக உயரமான கோபுரமாகும். அதை பார்க்கும்போது நமக்கு வியப்பு ஏற்படும்.
நாம் சிவபெருமானையும் சுற்றியுள்ள சன்னதிகளையும் வணங்கி வெளியே வந்து கொடிமரத்தின் அருகிலிருந்து ஒருபுறம் கடல் சூழ்ந்த பகுதியில் மீன்பிடி படகுகள் கரையில் நிறுத்தப்பட்டுள்ளதை பார்த்து ரசிக்கலாம்.

குன்றின் மேல்பகுதிக்குச் செல்ல படிக்கட்டுகள் உள்ளன. அங்கு தவ கோலத்தில் அமர்ந்திருக்கும் பிரம்மாண்டமான சிவபெருமான் சிலையின் அழகை காண கண்கோடி வேண்டும்.
கோவிலின் பின்புறத்தில் பாறைகளை ஒட்டி அரபிக் கடல் அலைகள் தொட்டு தொட்டு விளையாடி செல்வதை காணும்போது மனம் இயற்கையுடன் லயித்து விடுவதையும் நாம் அனுபவிக்க முடியும்.
சிவனை பார்க்க செல்லும் வழியில் இந்தத் தல வரலாற்றுக்கு காரணமான ஆத்ம லிங்கத்தை ராவணன் பிள்ளையாரிடம் கொடுப்பதைப் போன்ற காட்சி அமைப்பும் மற்றும் "பகிரதப் பிரயத்னம்" எனப்படுகின்ற சிவனின் தலையில் குடிகொண்டிருந்த கங்கையை இந்த பூமிக்கு தருவதற்காக பகிரத முனி எடுத்துக்கொண்ட விடாமுயற்சியை காட்டும் நிகழ்ச்சியையும் வெகு அழகாக கம்பீரமாக சிவன் நின்ற கோலத்திலும்... அவருக்கு அருகே பகிரத முனி கைகூப்பி வணங்கிய நிலையில் காமதேனு சிலையுடனும் வெகு அழகான சிற்பங்களை வடிவமைத்து பக்தியும் கலையும் இணைத்து இழைத்திருக்கிறார்கள்.
அதை பார்த்து ரசித்துக்கொண்டே மேலே போவதற்கு மனம் இல்லாமல் அங்கிருக்கின்ற படிகளில் ஏறி செல்லும்போது அடடா... அப்படி ஒரு அழகான காட்சி... யோக நிலையில் அமர்ந்த சிவபெருமானை பிரம்மாண்டமான பீடத்தில் அமைத்து அதன் கீழே இரண்டு சந்நிதிகளையும் பீடத்தினுள் சுற்றி வெகு அழகாக புராணக் காட்சிகளையும் அமைத்துள்ளனர்.
உள்ளே நாம் நுழையும்போது தேவலோகத்தில் இருப்பதைப் போன்ற உணர்வையும் அவற்றை யெல்லாம் அருகில் இருந்தே பார்ப்பதைப் போன்ற மனநிலையும் நமக்கு தோன்றினால் வியப்படைவதற்கு இல்லை.
அமர்ந்த கோலத்தில் இருக்கும் சிவனை சுற்றி வருகையில் பின்புறம் கண்ணுக்கெட்டிய தூரம் வரை அரபிக் கடல் அமைதியாக எந்தவித இடையூறும் தராமல் அங்கு வரும் பக்தர்களுக்கு ஒரு அமைதியான சூழலை ஏற்படுத்திக் கொடுப்பதை போன்று தோன்றும்.
அதே சமயத்தில் நாம் இறங்கி வரக்கூடிய பக்கத்தில் கடற்கரையில் குழந்தைகளுடன் பெரியவர்கள்... பெண்கள் என அனைவரும் குழந்தைகளாகி விளையாடுவதை காணலாம். மேலும் சில கடல் விளையாட்டுகளை விளையாடுவதற்கான பொழுதுபோக்கு இடமாகவும் சுற்றுலாத்தலமாகவும் கருதி அனைத்து தரப்பு மக்களும் வருகை புரிவதை காணலாம். பயணிகள் கடலில் ஒரு சுற்று சுற்றி வரக்கூடிய அளவில் மோட்டார் படகு சவாரியும் உள்ளது.

இரா.தேன்மொழி, பெங்களூர்
அந்த மலைப் பாங்கான பகுதியில் பச்சை பசேல் என்ற புல்வெளி செதுக்கப்பட்ட இடங்களில் கீதா உபதேசம் செய்யக்கூடிய கிருஷ்ணரின் சிலையும் சற்று மேலே அமைக்கப் பட்டிருக்கின்ற சூரியனார் சிலையும் உள்ளன.
அங்கு கடற்கரையையொட்டி கடலுக்குள்ளேயே உணவகங்கள் இருக்கின்றன. அங்கு அமர்ந்து ஒரு தேநீர் குடித்தாலும் கூட கடலும் தேநீரும் நம் மனம் விட்டு மறையாமல் பல்லாண்டு காலம் நங்கூரம் போட்டு தங்கி விடக் கூடிய அளவில் அமைந்துவிடும்.
அங்கு தங்க கூடிய அளவில் விடுதிகளும் இருக்கின்றன. அவையெல்லாம் முறையே முன்பதிவு செய்து போய் ஒரு நாள் தங்கியிருந்தால் இவை அனைத்தையும் முழுமையாக அனுபவித்து வர இயலும்.
இந்தக் கோவிலின் முன்பகுதியில் இரண்டு பெரிய யானை சிலைகள் நம்மை கம்பீரமாக வரவேற்பதை காணலாம். அதை தாண்டி உள் நுழையக்கூடிய கோபுரம் கிட்டத்தட்ட 237 அடிகளையும் 20 அடுக்கு களையும் கொண்டதாக இருக்கிறது. இந்த கோபுரத்திற்கு நாம் பணம் கொடுத்து சீட்டு வாங்கிக்கொண்டு மின்விசை மூலம் மேலே சென்று அங்கிருந்து கோவிலும் அங்கு சுற்றியுள்ள சூழலையும் காணக்கூடிய அளவில் அமைத்திருப்பது மிகவும் சிறப்பானதொரு வாய்ப்பு. இதனை தவறவிடாமல் அங்கு செல்லக்கூடிய பக்தர்களானாலும் சரி சுற்றுலா பயணிகள் ஆனாலும் சரி பயன்படுத்திக் கொள்ளுதல் நலம்.
- உன் உலகியல் கடமைகளைச் சரிவரச் செய்ய வேண்டும்.
- கடவுளான நானும் கூட, நானே படைத்த இயற்கை விதிகளுக்குக் கட்டுப்பட்டவன்தான்.
பகவான் கிருஷ்ணர் மேல் மிகுந்த பக்தி செலுத்தும் ஒரு பெண் துவாரகையில் வசித்து வந்தாள். உலகியல் கடமைகளைக் கூட மறந்து கிருஷ்ண பக்தியிலேயே காலத்தைக் கழித்தாள் அவள்.
ஆனால் பொருளாதாரப் பிரச்சனை உள்படப் பல்வேறு பிரச்சனைகள் அவள் வாழ்வில் இருந்தன. கண்ணன்மேல் பக்தி செலுத்தும் தனக்கு ஏன் இத்தனை பிரச்சனைகள் என அவள் வியந்தாள்.
இதைக் கண்ணனிடமே நேரில் கேட்போம் என ஒருநாள் துவாரகை அரண்மனைக்குச் சென்றாள்.
கண்ணன் அவளைப் பரிவோடு பார்த்தான். `சொல் பெண்ணே! என்ன சிக்கல் உனக்கு?` என்று வினவினான்.
கண்ணக் கடவுளை தரிசித்த பரவசத்தில் அவள் விழிகளில் ஆனந்தக் கண்ணீர் வழிந்தது. விழிநீரைத் துடைத்துக் கொண்ட அவள் தழதழப்போடு பேசலானாள்:
`உன்னையே பக்தி செய்து வாழ்கிறேன்! ஆனால் என் வாழ்வில் பொருளாதாரப் பிரச்சனை உள்படப் பல பிரச்சனைகள் இருப்பது ஏன்? பல கவலைகள் என்னைத் தின்கின்றன. இவற்றிலிருந்தெல்லாம் என்னைக் கடைத்தேற்றக் கூடாதா?`
அவளையே கூர்மையாகப் பார்த்த கண்ணன், `அதெல்லாம் இருக்கட்டும். நான் ஒன்று சொல்வேன். எனக்காக அதைச் செய்வாயா?` எனக் கேட்டான்.
"உன் விருப்பப்படி நடப்பதில்தானே எனக்கு ஆனந்தம்? நீ சொல்வதைச் செய்யத் தயாராய் இருக்கிறேன்.`` என்றாள் அவள்.
``என் விருப்பப்படி நடப்பதாகச் சொல்கிறாய். என் விருப்பமே நீ நடக்க வேண்டும் என்பதுதான்!`` என்று சிரித்த கண்ணன், அவளிடம் ஒரு கோணிப்பையை எடுத்துவந்து கொடுத்தான்.
முடிச்சுப் போட்டு இறுகக் கட்டப்பட்டிருந்தது அந்தப் பை.
"பெண்ணே! நான் சிறிது காலார நடக்கப் போகிறேன். நான் நடக்கும்போது இந்தக் கோணிப்பை உடன்வர வேண்டியது மிக அவசியம். என்னால் இதைச் சுமக்க முடியாது. இதை நீ சுமந்துகொண்டு என்னுடன் நடந்து வரவேண்டும்.
நான் எங்கெங்கே போகிறேனோ அங்கெல்லாம் இந்தப் பையை நீ சுமந்து வரவேண்டும். ஆனால் இதைக் கீழே இறக்கி வைக்கக் கூடாது. சொல். நீ அப்படி என்னுடன் சற்றுநேரம் வரச் சம்மதமா?"

திருப்பூர் கிருஷ்ணன்
மலர்மாலை கட்டச் சொல்வான், முத்துக் கோக்கச் சொல்வான் என்றெல்லாம் எதிர்பார்த்தால், ஓர் அழுக்கு மூட்டையைத் தூக்கிக் கொண்டு பின்னால் வரச் சொல்கிறானே?
ஆனால் கண்ணன் சொன்னால் செய்ய வேண்டியதுதான். அதில் மாற்றுச் சிந்தனைக்கு இடமில்லை.
அவள் மூட்டையைத் தூக்கிப் பார்த்தாள். சற்று கனமாகத்தான் இருந்தது. அதனால் என்ன?
`கண்ணா! கட்டாயம் சுமந்து வருகிறேன்.` என்றாள் அவள்.
`பெண்ணே! நான் சில நிபந்தனைகளைச் சொல்ல விரும்புகிறேன். இந்த மூட்டையை நீ கீழே வைக்காமல் தூக்கி வரவேண்டும்.
கீழே வைத்தாலோ, நான் சொல்லும்முன் திறந்து பார்த்தாலோ உன் உயிருக்கே ஆபத்து நேரும். என் நிபந்தனைக்கு உள்பட்டு இதைத் தூக்கிக் கொண்டு என் பின்னால் வர முடியுமா என்று யோசித்துச் சொல்!``
கண்ணன் சொன்னதைக் கேட்டு அவள் பதறிப் போனாள்:
`கண்ணா! என்ன பேச்சுப் பேசுகிறாய் நீ? இதில் யோசிக்க என்ன இருக்கிறது? நீ எதைச் சொன்னாலும் நான் செய்வேன். கட்டாயம் மூட்டையைச் சுமந்து உன் பின்னால் வருவேன். நீ உத்தரவிட்டால் அன்றி இதைத் திறந்து பார்க்கவும் மாட்டேன்!`
கண்ணன், மன நிறைவோடு, `சரி, அப்படியானால் என் பின்னால் வா` எனச் சொல்லி நடக்கலானான். அவள் மூட்டையைக் கையில் தூக்கியவாறு அவன் பின்னால் நடந்தாள்.
இது யாருக்கானது? யாரிடம் கண்ணன் இதைக் கொடுக்கப் போகிறான்? இதில் உள்ளே என்ன இருக்கிறது? எங்கே செல்கிறோம்?
ஒன்றும் தெரியவில்லை. ஆனால் மூட்டையின் கனத்தைச் சுமந்து கொண்டு நடக்க முடியவில்லையே? கண்ணா! இதைச் சுமக்கவும் நீதான் உடல்வலுவைத் தர வேண்டும்.
இப்படி நினைத்தவாறே நடந்தாள். மூச்சு வாங்கியது அவளுக்கு. பயணம் முடியாதா என்றிருந்தது.
பல இடங்களில் சுற்றிவிட்டு ஓர் இடத்தில் வந்து நின்றார்கள் அவர்கள். நம் நடைபயணம் இதோடு நிறைவடைகிறது என்று நகைத்தான் கண்ணன்.
`இப்போது மூட்டையை நீ கீழே இறக்கி வைக்கலாம், கேள்விகளையும் கேட்கலாம்!` என்றான்.
அவள் அப்பாடா எனக் கோணிப்பையைக் கீழே வைத்துவிட்டு, முகத்தில் வழிந்த வியர்வையை முந்தானையால் துடைத்துக் கொண்டாள். தாங்கள் எங்கு வந்திருக்கிறோம் என ஏறெடுத்துப் பார்த்தாள்.
என்ன இது? புறப்பட்ட இடத்திற்கே அல்லவா திரும்ப வந்திருக்கிறார்கள்? கண்ணனின் அதே துவாரகை அரண்மனையில் நின்று கொண்டிருந்தாள் அவள்!
இதென்ன ஜாலம்! மாயக் கண்ணனல்லவா அவன்? உண்மையில் அவள் நடந்தாளா, நடக்கவில்லையா? நடந்ததெல்லாம் சொப்பனமா?
அது கனவல்ல என்று நடந்ததால் வலிக்கும் கால்களும் சுமந்ததால் வலிக்கும் கைகளும் சொல்லின.
`கண்ணா! எதற்கு நடந்தோம்? ஏன் இங்கேயே திரும்பினோம்?` எனக் கேட்டாள் அவள்.
கண்ணன் வலக்கரத்தில் இருந்த புல்லாங்குழலை இடக் கரத்தின் உள்ளங்கையில் தட்டியவாறே மெல்லிய முறுவலுடன் பேசலானான்:
`மூட்டையைத் திறந்து பார்!`
மூட்டையின் முடிச்சை மெல்ல அவிழ்த்து உள்ளே இருந்தவற்றை வெளியே கொட்டினாள். வியப்பால் அவள் விழிகள் அகல விரிந்தன.
என்ன இது? அழுக்கு மூட்டை என்று நினைத்தோம். இது செல்வக் களஞ்சியமாக அல்லவா இருக்கிறது?
மூட்டைக்குள்ளிருந்து தங்கம் வெள்ளி வைரம் போன்றவற்றால் செய்த விலையுயர்ந்த ஆபரணங்கள் பொலபொலவென்று கீழே கொட்டின.
அவள் பிரமிப்போடு, `அழுக்கு மூட்டைக்குள்ளே இத்தனை செல்வங்களா!` என ஆச்சரியப்பட்டாள்.
`இவை அனைத்தும் உனக்குத்தான்!` என்றான் கண்ணன்.
`கண்ணா! என்னே என் பாக்கியம்! குசேலருக்கு அருளியதுபோல் அல்லவா எனக்கும் அருளியிருக்கிறாய்!` என அவள் நெகிழ்ந்தாள்.
`பெண்ணே! இந்த மூட்டையை நீ சுமந்துகொண்டு வந்தபோதும் இதே செல்வம்தான் மூட்டைக்குள் இருந்தது. ஆனால் அதை அறியாததால் அதைச் சுமப்பது உனக்குச் சங்கடமாக இருந்தது. இப்போது அறிந்த பிறகு பிரமிப்பாக இருக்கிறது. உனக்கு ஒரு ரகசியம் சொல்லட்டுமா?
இந்த மூட்டையில் உள்ளதை விடவும் உயர்வான பொக்கிஷங்களை ஏற்கெனவே உனக்குத் தந்திருக்கிறேன். அந்தப் பொக்கிஷங்கள் பற்றியும் நீ அறிந்துகொள்ளவில்லை! அதனால் வாழ்க்கைப் பாதையில் வருத்தத்தோடு பயணப் படுகிறாய்!`
உனக்கு மெய் வாய் கண் மூக்கு செவி என்ற ஐம்புலன்களைக் கொடுத்திருக்கிறேனே? உடல் இயங்க அதில் உயிரையும் இணைத்திருக்கிறேன்.
நீ கீழே கொட்டிய இந்தப் பொக்கிஷங்களில் ஒன்று கூட நான் ஏற்கெனவே உனக்குக் கொடுத்துள்ள பொக்கிஷத்திற்கு இணையாகாது. கீழே கொட்டிய பொக்கிஷங்களை நீ அனுபவிக்க வேண்டுமானால் நான் ஏற்கெனவே உனக்குக் கொடுத்துள்ள பொக்கிஷம் இருந்தால்தான் முடியும். யோசித்துப் பார்! அற்புதமான பொக்கிஷத்தை நான் ஏற்கெனவே உனக்குக் கொடுத்திருந்தும் நீ வருத்தத்தில் ஆழ்ந்தது சரிதானா?`
நீ என்மேல் பக்தி வைத்திருக்கிறாய். அது நல்லதுதான். உன் மனக் கவலைகளுக்கு பக்தி சிறந்த மருந்து. தொடர்ந்து பக்தி செய்.
ஆனால் அது மட்டும் போதாது. நான் உனக்கு ஏற்கெனவே அளித்துள்ள பொக்கிஷத்தின் மதிப்பை உணர்ந்து அதை நீ பயன்படுத்த வேண்டும். உன் உலகியல் கடமைகளைச் சரிவரச் செய்ய வேண்டும். கடின உழைப்பை மேற்கொள்ள வேண்டும். நான் உன் எசமானன் என்றும் நீ என் பணியாள் என்றும் சொன்னால் அதை ஒப்புக் கொள்வாயா?`
கேட்டான் கண்ணன். `கட்டாயம் ஒப்புக் கொள்வேன்!` என்றாள் அவள்.
`அப்படியானால் ஒன்றை யோசித்துப் பார். ஓர் எசமான் தன் பணியாள் தன்னைப் புகழ்ந்து கொண்டே இருப்பதை விரும்புவானா அல்லது தான் இட்ட பணிகளை அவன் செய்ய வேண்டும் என்று விரும்புவானா?`
அவள் சிந்தனையில் ஆழ்ந்தாள்.
`நீ பக்தியோடு வாழ்க்கை நடத்து. உன் மனக் கவலைகளை என்னிடம் விட்டுவிடு. தனக்குவமை இல்லாதவனின் தாள் சேர்ந்தவர்க்குத் தானே மனக்கவலையை மாற்ற முடியும்?
ஆனால் உனக்கு ஏற்கெனவே நான் கொடுத்த பொக்கிஷத்தின் மதிப்பை மறக்காதே! நாள்தோறும் கடின உழைப்பில் ஈடுபடுவாயானால் நீ விரும்பும் மேன்மைகள் தானே வந்து சேரும்.
மேட்டிலிருந்து பள்ளத்திற்குத் தண்ணீர் பாய்கிறதல்லவா? அது ஓர் இயற்கை விதி. அதுபோலவே உழைத்தால் கட்டாயம் முன்னேறலாம் என்பதும் கூட இன்னோர் இயற்கை விதிதான். பக்தி முக்கியம்தான். கூடவே உழைப்பும் மிக முக்கியம் என்பதை உணர்ந்துகொள்.
கடவுளான நானும் கூட, நானே படைத்த இயற்கை விதிகளுக்குக் கட்டுப்பட்டவன்தான். அதை நான்கூட மீற முடியாது. நல்லது. இந்தச் செல்வங்களையெல்லாம் எடுத்துக் கொண்டு சென்றுவா.`
அவள் பரவசத்துடன் கைகூப்பினாள்.
`கண்ணா! அர்ச்சுனனுக்குக் கீதோபதேசம் செய்த நீ இன்று இந்த அடியவளுக்கும் ஓர் உபதேசம் செய்திருக்கிறாய். நீ ஏற்கெனவே எனக்குத் தந்த பொக்கிஷங்களான மெய் வாய் கண் மூக்கு செவி என்ற ஐம்புலன்களும் என் உயிரும் எனக்குப் போதும். விலைமதிப்பற்ற அந்தப் பொக்கிஷங்களின் முன் இதோ கீழே கொட்டிக் கிடக்கும் இவை மதிப்பில்லாதவை. இவையெல்லாம் துவாரகை அரண்மனையில் உன்னிடமே இருக்கட்டும்.
நான் பக்தி யோகத்தில் ஈடுபட்டு பக்தி செய்வேன். கூடவே கர்ம யோகத்தில் ஈடுபட்டுக் கடினமாய் உழைக்கவும் செய்வேன். இதுதான் இன்று நான் பெற்ற ஞானம்!`
அவள் கண்ணனை வணங்கி விடைபெற்றுத் தன் இல்லம் நோக்கி கம்பீரமாக நடந்தபோது கண்ணனின் வலக்கரம் உயர்ந்து அவளுக்கு ஆசி வழங்கியது.
தொடர்புக்கு-thiruppurkrishnan@gmail.com
- மார்பக புற்றுநோய் வருவதற்கான முக்கியமான வாழ்க்கை முறை காரணங்கள் உடல் பருமன் மற்றும் பழக்க வழக்கம் தான்.
- மார்பக புற்றுநோயை கண்டறிய எல்லா பெண்களும் 30 வயது ஆனவுடன் ஒரு பரிசோதனை செய்து கொள்வது நல்லது.
பெண்களை அதிகமாக பாதிக்கின்ற புற்றுநோய் மார்பக புற்றுநோய். மரபு வழி மற்றும் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் அதிகமாக சுரப்பது ஆகிய காரணங்களால் மார்பக புற்றுநோய் வருவது பற்றி கடந்த வாரம் பார்த்தோம். மேலும் என்னென்ன காரணங்களால் மார்பக புற்று நோய் வருகிறது, அதை தடுப்பதற்கு என்ன வழி என்பதை பற்றி இந்த வாரம் பார்ப்போம்.
சில பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் அதிகமாக சுரக்கிறது. இது மார்பக புற்றுநோய்க்கு காரணம். இது தவிர இந்த ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனை ஏதாவது ஒரு காரணத்துக்காக பெண்கள் எடுத்துக்கொள்கிறார்கள். மாதவிடாய் தொடர்பான பிரச்சினைகளுக்காக பெண்கள் எடுக்கும் ஹார்மோன் மாற்று சிகிச்சை (எச்.ஆர்.டி.) மற்றும் கருத்தடை மாத்திரைகளை அளவுக்கு அதிகமாக பயன்படுத்துதல் ஆகியவை எல்லாம் மார்பக புற்றுநோய் வருவதற்கான ஆபத்து காரணிகளில் முக்கியமான விஷயமாக கருதப்படுகிறது.
மார்பக புற்றுநோய்க்கான வாழ்க்கை முறை காரணிகள்:
இதற்கு அடுத்து மார்பக புற்றுநோய் வருவதற்கு வாழ்க்கை முறை காரணிகளும் ஒரு காரணமாக அமைகிறது. வாழ்க்கை முறை காரணிகளில் மிக முக்கியமான ஒன்று உடல் பருமன். உடல் பருமனாக இருக்கும் பெண்களுக்கு கொழுப்பில் இருந்து வரக்கூடிய ஈஸ்ட்ரோஜன் அதிகமாகி அதனால் மார்பக புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். எனவே உடல் பருமன் என்பது கண்டிப்பாக ஆபத்து காரணியாகும். அதுவும் இளம் வயதில் உடல் பருமனாக இருப்பவர்களுக்கு ஆபத்து காரணி அதிகமாக உள்ளது.
இரண்டாவது முக்கியமான வாழ்க்கை முறை காரணி, புகைப்பழக்கம் மற்றும் மதுப்பழக்கம். இன்றைய இளம் பெண்களிடையே புகை பிடிக்கும் பழக்கமும், மதுகுடிக்கும் பழக்கமும் அதிகரித்து வருகிறது. இது வருந்தத்தக்க விஷயம். இந்த புகைப்பழக்கம், மதுப்பழக்கம் ஆகியவை கண்டிப்பாக மார்பக புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகளை அதிகப்படுத்துகிறது.
இவை தவிர சில பெண்களுக்கு மார்பகத்தில் ஏற்படுகிற தீங்கற்ற கட்டிகள், பைப்ரோடெனோசிஸ் ஆகிய அனைத்தும் சில நேரங்களில் பிரச்சினைகளை உருவாக்கலாம். மேலும் கதிர்வீச்சு மூலமாகவும் கூட சில சமயங்களில் புற்றுநோய் வரலாம். பல நேரங்களில் இந்த மார்பக புற்றுநோய், மற்ற புற்றுநோய்களுடைய துணை புற்று நோயாகவும் ஏற்படலாம்.

இந்த வகையில் மார்பக புற்றுநோய் வருவதற்கான முக்கியமான வாழ்க்கை முறை காரணங்கள் உடல் பருமன் மற்றும் பழக்க வழக்கம் தான். இவற்றை கண்டிப்பாக நம்மால் சரி செய்ய முடியும். அதாவது நமது உடல் எடையை நம்மால் குறைக்க முடியும், நமது பழக்கத்தில் உள்ள புகைப்பழக்கம், மதுப்பழக்கம் ஆகியவற்றை நிறுத்த முடியும். மேலும் உடலுக்கு ஆரோக்கியமான உணவு வகைகளை உட்கொள்ள முடியும். இவை அனைத்தும் மார்பக புற்றுநோயை வராமல் தடுக்கும் முக்கியமான தடுப்பு முறைகளாக கருதப்படுகிறது.
பிரா அணிவதால் மார்பக புற்றுநோய் வருமா?
இதற்கு அடுத்த படியாக பலரும் கேட்கும் ஒரு முக்கியமான விஷயம் பிரா (உள்ளாடை) அணிவதால் மார்பக புற்றுநோய் ஏற்படுமா என்கிறார்கள். பொதுவாகவே உள்ளாடை பயன்படுத்துவதால் பிரச்சினைகள் வருமோ என்று நிறைய பேருக்கு சந்தேகங்கள் இருக்கிறது. இன்னும் சிலர் வயரிங் பிரா அணிந்தால் புற்றுநோய் வரும் என்று சொல்கிறார்களே என்கிறார்கள்.
இது தவறான கருத்து. வயரிங் பிரா அணிவது, தொடர்ச்சியாக பிரா பயன்ப டுத்துவது மற்றும் இறுக்கமாக பிரா அணிவது ஆகியவை எந்த விதத்திலும் பாதிப்பை ஏற்படுத்தாது. இதனால் ரத்த ஓட்டம் குறைவாகும், திசுக்களில் ஆக்சிஜன் குறைவாகும் என்பதெல்லாம் தவறான விஷயம். அப்படி எதுவுமே கிடையாது.
இந்த வயரிங் பிராவில் ஒரு விஷயம் என்னவென்றால் அது சில நேரங்களில் எரிச்சலை உருவாக்கலாம். இதன் காரணமாக தோலில் தொடர்ச்சியாக எரிச்சல் ஏற்பட்டு, தோல் புற்றுநோய் வரலாமே தவிர, மார்பக புற்றுநோய் வயரிங் பிரா பயன்படுத்துவதால் வராது.
ஆனால் சில பெண்களுக்கு மார்பக அளவை பெரிதாக்குவதற்கு சிலிகான் பிராஸ்திசிஸ் (செயற்கை உறுப்பு) வைக்கப்படுவதுண்டு. இந்த பிராஸ்தி சிஸ் காரணமாக எரிச்சல் ஏற்பட்டு நீண்ட நாட்கள் கழித்து புற்றுநோய் வரலாம். இவை மட்டும் தான் மார்பகத்துக்கு பயன்படுத்துகிற சில பொருளால் வரக்கூடியது.
எனவே பிரா தொடர்ந்து பயன்படுத்துவது, இறுக்கமாக அணிவது அல்லது பிரா அணியாமல் இருப்பது ஆகியவை எந்தவித பாதிப்பு காரணிகளும் கிடையாது. அந்த காலத்தில் பிரா அணியாதவர்களுக்கு புற்றுநோய் வரவில்லை என்று சொல்வது தவறான விஷயம். இதில் நிறைய ஆய்வுகள் செய்துள்ளனர். அந்த ஆய்வின் அடிப்படையில் பிரா அணிவதால் புற்றுநோய் வருவதில்லை என்பதை உறுதி செய்துள்ளனர்.

டாக்டர் ஜெயராணி காமராஜ், குழந்தையின்மை சிகிச்சை நிபுணர் செல்: 72999 74701
மார்பக புற்றுநோய்க்கான ஆரம்ப அறிகுறி:
மார்பக புற்றுநோய்க்கான ஆரம்ப அறிகுறி என்ன என்று பார்த்தால், சில நேரங்களில் வலி இல்லாத சிறிய கட்டி காணப்படும். அதுவே நாள்பட புற்றுநோய் கட்டியாக மாறும். இதற்காகத் தான் பருவமடைந்த பெண்கள் ஒவ்வொரு மாதமும் மாதவிலக்கு நின்ற பிறகு ஒருமுறை மார்பக சுய பரிசோதனை செய்ய வேண்டும் என்று சொல்கிறோம்.
கண்ணாடி முன்பு நின்று தங்களின் மார்பகத்தை பார்த்து நிப்பிள் பகுதி சரியாக இருக்கிறதா என்று சுய பரிசோதனை செய்ய வேண்டும். இதை வழக்கமாக செய்து கொண்டே வந்தால், கட்டி ஏற்படுவது போன்ற ஒரு சின்ன மாற்றம் வரும் போது சந்தேகம் அடைந்து மருத்துவரிடம் போய் பரிசோதனை செய்யலாம். இதனால் மார்பக புற்றுநோயை தடுக்க கண்டிப்பாக சுய பரிசோதனை முக்கியம்.
இரண்டாவதாக, கட்டிகள் இருப்பது போன்று சந்தேகம் எழுந்தால் அதை நிவர்த்தி செய்ய ஒரு மெமோகிராம் பரிசோதனை செய்யலாம். அதிலும் சந்தேகம் இருப்பது உறுதியானால் மூன்றாவதாக ஒரு மார்பக அல்ட்ரா சவுண்ட் பரிசோதனை செய்யலாம். தேவையென்றால் ஒரு எம்.ஆர்.ஐ. பரிசோதனையும் செய்யலாம். இவை அனைத்துமே மார்பக புற்றுநோயை கண்டறியும் முக்கியமான பரிசோதனை முறைகள் ஆகும்.
மார்பக புற்றுநோயை கண்டறிய எல்லா பெண்களும் 30 வயது ஆனவுடன் ஒரு பரிசோதனை செய்து கொள்வது நல்லது. 35 வயதில் இருந்து 2 வருடத்துக்கு ஒருமுறை மெமோகிராம் பரிசோதனை செய்வது நல்லது. கிட்டத்தட்ட 55 வயது வரை இதை செய்தால் கண்டிப்பாக ஆரம்ப நிலையில் எந்த மாற்றம் இருந்தாலும் கண்டுபிடித்து விடலாம்.
அடுத்ததாக சில பெண்களுக்கு மார்பகத்தில் இருந்து சில சுரப்புகள் ஏற்படும். சில நேரம் பால் சுரப்பு ஆக இருக்கலாம், தோலில் வெடிப்பு ஏற்பட்டு ஏதாவது நீர் வரலாம், சில நேரங்களில் பசை போன்ற அழுக்கு வரலாம். இவை அனைத்தும் மார்பக டக்ட் பகுதியில் ஏற்படக்கூடிய புற்றுநோயின் அறிகுறிகளாக இருக்கும்.
மார்பக புற்றுநோயை தடுத்து ஆரோக்கியமான வாழ்க்கை:
பல நேரங்களில் இந்த புற்று நோய் பெரிதானால் மார்பகத்தை சுற்றியுள்ள தோல் பகுதி சுருங்கிவிடும். மார்பகத்தின் அளவில் மாற்றம் ஏற்படும். சில நேரங்களில் புற்று நோய் கட்டி பெரிதாகவே தெரியும்.
எனவே இந்த மாதிரியான ஏதாவது ஒரு அறிகுறி இருந்தால் உடனே மருத்துவரை அணுகி இதனை முழுமையாக பரிசோதிக்க வேண்டும். எல்லா பெண்களுக்குமே பரிசோதனை என்பது முக்கியம். அதனால் தான் 35 வயதானால் வழக்கமாக மெமோகிராம் செய்து கொள்ளுங்கள் என்கிறோம். இவற்றின் மூலமாக மார்பக புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டுபிடிக்கலாம்.
ஏனென்றால் எந்தவித காரணமும் இல்லாமல் கூட மார்பக புற்றுநோய் வருவது மிகமிக அதிகம். எனவே ஆபத்து காரணிகள் இல்லை என்பதால் மார்பக புற்றுநோய் வராது என்று அர்த்தம் இல்லை. எனவே பரிசோதனை என்பது மிகவும் அவசியம்.
குறிப்பாக குடும்பங்களில் ஏற்கனவே யாருக்காவது புற்றுநோய் வந்திருந்தால் சிறிய வயதில் இருந்தே மெமோகிராம் பரிசோதனை செய்து கொள்வது நல்லது. உங்களுக்கு மார்பக புற்றுநோய் வருவதற்கான மரபணு ப்ராக்கா 1 மற்றும் ப்ராக்கா 2 ஆகியவை பாசிட்டிவ் என்றால் விரைவில் குழந்தை பேறு பெற்று தேவைப்பட்டால் முழுமையான பரிசோதனை செய்து சிகிச்சை பெறுவது பிற்காலத்தில் புற்றுநோய் வருவதற்கான தடுப்பு முறையாக கருதப்படுகிறது.

மேலும் எளிமையான வழிமுறைகளான உடற்பயிற்சி செய்யுங்கள், உணவு கட்டுப்பாடை கடைபிடியுங்கள், உடல் எடையை குறையுங்கள், நல்ல உணவை சாப்பிடுங்கள். தேவையில்லாமல் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் எடுக்காதீர்கள். இவற்றை சீராக கவனத்தில் கொண்டு வருடம் ஒரு முறையோ அல்லது 2 வருடத்துக்கு ஒருமுறையோ பரிசோதனை செய்தால் கண்டிப்பாக மார்பக புற்றுநோய் வருவதை தடுக்க முடியும். ஒருவேளை மார்பக புற்றுநோய் வந்தால் ஆரம்ப நிலை யிலேயே கண்டு பிடித்து அதை முழு மையாக சரிசெய்து ஆரோக்கியமாக வாழ முடியும்.






