என் மலர்
சிறப்புக் கட்டுரைகள்

கனவுகள் மெய்ப்பட!
- கலாம் கூறுவார் “உறக்கத்தில் வருவதல்ல கனவு; உன்னை உறங்க விடாமல் செய்வதே கனவு!”.
- நமக்கு வருகிற கனவுகளும், நமது நியாயத் தேவைகளைப் பூர்த்திபண்ணி வைக்கிற வேலைகளைச் செய்யும்.
கனவுகள் குறித்த கருத்துக்களை அறிந்து கொள்ளக் கண்விழிப்போடு காத்திருக்கும் வாசகர்களே! வணக்கம்.
கனவு காணாத மனிதர்கள் இல்லை; குழந்தைகள் முதற்கொண்டு முதியவர்கள் வரை எல்லாருக்கும் கனவுகள் வருகின்றன. ஏழை, பணக்காரர், படித்தவர், படியாதவர், ஆண், பெண் என்று எந்த பேதமுமில்லாமல் எல்லாரும் கனவு காண்கின்றனர்; அவர்களுக்கு எல்லாவிதமான கனவுகளும் வருகின்றன; இவர் இந்த மாதிரிதான், இந்த ஊரில்தான், இந்த உடையில்தான் கனவு காண வேண்டும் என்று எந்தத் தடையுமில்லை. கனவுச் சுதந்திரம் எல்லா மனிதருக்கும் தாராளமாகவே வழங்கப்பட்டிருக்கிறது.
பெரும்பாலும் எல்லாருக்கும் கனவு காண்பது பிடித்தமானதாகவே இருக்கிறது. கற்பனைக் கெட்டாத அற்புத உலகம் அங்கே எந்த விதச் செலவும் இல்லாமல் சிருஷ்டிக்கப்படுகிறது. ஒரு நொடியில் நாம் ராஜாவாகிப் போகிறோம்; அடுத்த நொடியே குதிரைத் தேர்களில் ஏறி ராணிமார்களோடு டூயட் பாடி மகிழ்கிறோம்; எல்லாமே நமக்குப் பிடித்தவண்ணமே அமைந்திருக்கிறது. கனவுகள் பிடித்துப்போக இதைவிட நமக்கு வேறென்ன காரணம் வேண்டிக் கிடக்கிறது?
சில மனிதர்களுக்கு வருகிற சில மாதிரிக் கனவுகள் கொடுமையானவையாகவும் அமைந்து விடுகின்றன. மாடு துரத்துவது போலவும், நாய் விரட்டுவது போலவும், பாம்பு சீறுவது போலவும், விபத்துகளில் சிக்கிக் கொள்வது போலவும், பேய்களிடம் மாட்டிக் கொள்வது போலவும், ஆழக் கிணற்றுக்குள் விழுந்து கொண்டே இருப்பது போலவும் விதவிதமானக் கனவுகள் தூக்கத்தில் வந்து சங்கடப்படுத்தவும் செய்யும். இந்த மாதிரிக் கனவுகளில் அடிக்கடி சிக்கி அலறி அலறி எந்திரிப்பவர்கள், உறங்கப்போவதற்குமுன், தங்கள் தலைமாட்டிற்கு அருகில், விபூதிப் பொட்டலம், மந்திரித்த கயிறு, இரும்புத் துண்டு, எலுமிச்சைப்பழம் போன்ற ஆன்மீக ஆயுதங்களை வைத்துக் கொண்டு செல்வார்கள்; ஆனாலும் கனவுப் பயங்கரங்கள் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கும்.
பொதுவாகக் கனவுகள் ஏன் வருகின்றன? வருகின்ற கனவுகளில் எந்த மாதிரிக் கனவுகளுக்கு எந்த மாதிரி பலாபலன்கள் என்பவை பற்றிய நிரூபிக்கப்பட்ட உண்மைகள் இன்னும் கண்டு பிடிக்கப்படவில்லை. ஆனாலும் அதிக மன அழுத்தங்களோடு படுக்கச் செல்பவர்களுக்கு விபரீதக் கனவுகளும், ஆனந்த எண்ணங்களோடு படுக்கைக்குச் செல்பவர்களுக்கு மகிழ்ச்சிக் கனவுகளும் வருகின்றன என்கின்றனர். எது எப்படியாயினும் ஆழ்ந்த உறக்கம் நிகழும்போது கனவுகள் உருவாவதில்லை; அப்படியானால் நமது உறக்கத்தில் தொந்தரவுகள் உருவாகும்போதே கனவுகளும் அவற்றின் காட்சிகளை அரங்கேற்றிக் கொள்கின்றன.
மனித எண்ணங்களில் கற்பனைகளே ஏதோவொரு வகையில் கனவுகளாக உருவாகின்றன என்பார்கள். விழிப்பு நிலையில் நாம் எப்போதும் சிந்தித்துக் கொண்டிருக்கும் திட்டங்கள், கனவுகளில் உருவ அமைப்புப் பெறுகின்றன; பிறகு அவை செயல் வடிவம் பெற்றுச் சாதனைகளாகின்றன என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். அப்படியானால் வாழ்க்கையின் வெற்றிக்கு நாம் அன்றாடம் வகுக்கின்ற திட்டங்கள் செயல் வடிவம் பெறுவதற்குக் கனவுகளே உலைக்களங்களாக இடையில் நின்று உதவுகின்றன எனலாம். அதனால்தான் அறிஞர் அப்துல் கலாம் போன்றவர்கள், இளைஞர்களைப் பார்த்துக் "கனவு காணுங்கள்!" என்று உத்வேகப்படுத்துகிறார்கள்.
கனவு காண்பது என்பது, சோம்பேறித்தனமாக உறங்கிக்கொண்டு, எதற்கும் உதவாத கற்பனைக் கனவுகளில் மிதந்து கொண்டிருப்பதல்ல; கலாம் கூறுவார் "உறக்கத்தில் வருவதல்ல கனவு; உன்னை உறங்க விடாமல் செய்வதே கனவு!". அப்படிப் பார்க்கும்போது, நம்முடைடைய வாழ்க்கை குறித்த தொலைதூரப் பார்வைகளும், இலட்சியங்களுமே கனவுகளாக மாறி, அவற்றை வென்றெடுக்க நம்மை உறங்கவிடாமல் செய்யும் செயலூக்கத்தை நல்க வேண்டும்.
முனைவர் சுந்தர ஆவுடையப்பன்
பெரும்பாலும் நாம் காணும் கனவுகள் நம் எண்ணங்களின், ஆசைகளின் வடிகால்களாகவே அமைகின்றன. மனிதர்களின் அன்றாட வாழ்வியல் அவர்களை உணர்ச்சிகளின் குவியலாக மாற்றிவிடுகிறது; அன்றாடம் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் மற்றும் அனுபவங்கள் வாயிலாகத், துன்பத்தில் ஆழ்வது, மகிழ்ச்சியில் திளைப்பது, கோபத்தில் கொப்பளிப்பது, பரபரப்பில் வெடிப்பது, விரக்தியில் தளர்ந்து போவது, அச்சத்தில் உறைந்து போவது போன்ற நிலைகளுக்கு அவர்கள் ஆளாகின்றனர். நனவு வாழ்க்கையில் இவர்கள் அனுபவிக்கும் உணர்வுகளை ஒழுங்குபடுத்தி, நெறிப்படுத்துகிற செயல்களை இரவில் கனவுகள் செய்கின்றன. உணர்ச்சிகளைப் பதப்படுத்தவும் பக்குவப்படுத்தவுமான வேலைகளைக் கனவில் மனம் மேற்கொள்ளுவதன் மூலம், நனவு மனத்தின் தடுமாற்றங்கள் கனவு மனத்தால் சரி செய்யப்படுகின்றன. மனிதனுக்கான சாதனை வழிகள் புலப்படத் தொடங்கிவிடுகின்றன.
கனவுகள் என்பவை நமக்கு அப்பாற்பட்ட நிலையில் அமானுஷ்யமான நிலையில் நமக்குள் தோன்றி விடுவதில்லை. நமக்குள் நம்மையறியாமல் ஆழ்மனத்தில் அடங்கிக் கிடக்கும் ஆசைகளும் நிராசைகளும்கூடக் கனவுகளாக வெளிப்பட்டு, நம்மைச் செயலாற்றத் தூண்டலாம்.
உறக்கத்தில் உடம்பு ஓய்வெடுத்துக் கொண்டிருந்தாலும், மூளை எந்த நேரத்திலும் ஓய்ந்துபோவதேயில்லை; பகலில் அது தொடர்ந்து சிந்தித்துக் கொண்டிருப்பது போலவே, ஓய்வில் கனவு காணும்போதும் அது இயங்கிகொண்டே இருக்கிறது. ஆக, நமது நினைவுகளையும் சிந்தனைகளையும் சீரமைக்கவும் ஒழுங்கமைக்கவுமான வேலைகளைக் கனவுகள் செய்து நம்மை வழிப்படுத்துகின்றன. நாம் அன்றாட வாழ்வியலில் பல சவாலான பிரச்சனைகளை எதிர்கொள்ளலாம்; அவற்றைத் தீர்ப்பதற்கான முயற்சிகளில் மூளையைப் போட்டுக் கசக்கிக் கொண்டிருக்கலாம். ஆனால் ஆழ்ந்த சிந்தனை வாயிலாக அந்தச் சிக்கல்களை மனத்திடம் ஒப்படைத்துவிட்டு உறங்கச் சென்றுவிட்டால், மனம் உருவாக்குகிற கனவுகள் நமக்கான தீர்வுகளைத் தெளிவாக உணர்த்திடவும் தயங்குவதில்லை. ஒரு வகையில் நம்முடைய கனவுகளே நாம் எப்படிப்பட்டவர்கள் என்பதை எடுத்துரைக்கும் அடையாளங்களாகவும் திகழ்கின்றன.
ஒரு நகரத்தின் முதன்மைச் சாலையில் ஒரு கடிகார விற்பனை அங்காடி இருந்தது. அந்த வழியாக ஒவ்வொரு நாளும் செல்லும் போதும், ஓர் இளைஞன் சற்று நேரம் கடை வாசலில் நின்று அந்தக் கடையையும், கடைக்குள் கடிகாரங்களைப் பழுதுபார்த்துக் கொண்டிருக்கும் உரிமையாளரையும் உற்றுக் கவனித்து விட்டுச் செல்வான். இதைப் பார்த்த கடிகாரக்கடை உரிமையாளர் அந்த இளைஞனிடம், "உனக்கு என்ன வேண்டும்?. ஏன் கடையைக் கடந்து செல்லும்போதெல்லாம் இப்படி நின்று கவனித்துவிட்டுச் செல்கிறாய்?" என்று கேட்டார். அதற்கு அந்த இளைஞன், "எனக்கும் உங்களைப்போல் ஆக வேண்டுமென்று ஆசை. உங்களைப்போலவே கடிகாரக்கடை வைக்க வேண்டும்; உங்களைப்போலவே கடிகாரங்களை ரிப்பேரும் பார்க்க வேண்டும்" என்று பதில் அளித்தான்.
கடிகாரக்கடைக்காரர் புன்னகைத்துக் கொண்டே அந்த இளைஞனைப் பார்த்து, "அண்மையில் நீ என்ன கனவு கண்டாய்?" என்று கேட்டார். உடனே இளைஞனும், "போனவாரம் லாட்டரியில் எனக்கு ஒரு கோடி ரூபாய் பரிசு விழுவதுபோலக் கனவு கண்டேன்!" என்றான். "நீ கடை வைப்பதற்கான காலம் இன்னும் கனியவில்லை; இன்னும் கொஞ்ச நாள் கழித்து வா!" என்று கடிகாரக் கடைக்காரர் இளைஞனை அனுப்பி வைத்தார்.
சிறிது காலம் கழித்து அந்த இளைஞன் கடிகாரக்கடை வாசலுக்கு வந்து கடை முதலாளியைப் பார்த்தான். கடைக்காரர், "சமீபத்தில் நீ என்ன கனவு கண்டாய்?" என்கிற பழைய கேள்வியையே கேட்டார். இளைஞன், "என் தாத்தா இறந்து போவது போலவும், அவர்வழிச் சொத்தெல்லாம் எனக்கே வந்து விடுவது போலவும் கனவு கண்டேன்!" என்றான். கடைக்காரர், இப்போதும் காலம் கனிந்திருக்கவில்லை; நீ போய் ஐந்தாறு மாதங்கள் கழித்து வா!" என்று அனுப்பி வைத்தார்.
ஐந்தாறு மாதங்கள் கழித்து கடிகாரக்கடைக்கு வந்த இளைஞன் நேராகக் கடை முதலாளியிடம் சென்று, "எனக்குச் சொந்தமான ஒரு பெரிய கடிகாரக்கடைக்கு நடுவில் அமர்ந்திருப்பது போலவும், என் செவிகளைச் சுற்றி எப்போதும் டிக் டிக் கடிகார ஓசை ஒலித்துக்கொண்டிருப்பது போலவும், தங்கமும், வைரமும் கொண்ட கடிகார முட்கள் சுழன்றுகொண்டிருக்க, நான் எந்தவிதமான கவனச் சிதறலுமின்றி கடிகாரங்களைப் பழுதுநீக்கும் வேலையில் ஈடுபட்டிருப்பது போலவும் கனவு கண்டேன்!" என்றான். "சபாஷ்! உனக்கு இப்போதுதான் காலம் கனிந்திருக்கிறது. இப்போதே கடையில் வேலைக்குச் சேர்ந்து கொள்! கடிகாரம் தொடர்பான எல்லாத் தொழில் நுட்பங்களையும் நான் உனக்குக் கற்றுத் தருகிறேன். விரைவில் நீ கடிகாரக்கடை அதிபராக மனமார்ந்த வாழ்த்துகள்!" என்று வாழ்த்துச் சொல்லி வேலைக்குச் சேர்த்துக் கொண்டார் கடை முதலாளி.
'ஒருபொழுதும் வாழ்க்கையை வாழத் தெரியாதவர்கள் கோடிகள் குறித்த கனவிலேயே உழன்று கொண்டிருப்பதால் என்ன பயன்?' என்று வள்ளுவப் பெருந்தகை கேள்வி கேட்பார். நம்மில் பலர் ஆரம்பத்தில் இருந்த அந்த இளைஞனைப் போலத்தான் கற்பனைக் கனவுகளில் உறக்கத்தையும் நேரத்தையையும் வீணடித்து வாழ்நாளை வீழ்நாளாகக் கழித்துக் கொண்டிருக்கிறோம். பணம் லாட்டரியில் வருமென்பதும், மூதாதையர் வழிச் சொத்தாகக் கிட்டுமென்பதும் சோம்பேறிகளின் கற்பனாவாதமாக மட்டுமே இருக்கும். நம்முடைய எண்ணங்களும் சிந்தனைகளும், நம்முடைய லட்சியங்களை மையமிட்டதாகவும், நம்முடையை சொந்த உழைப்பை நம்பியிருப்பதாகவும் இருந்தால், நமக்கு வருகிற கனவுகளும், நமது நியாயத் தேவைகளைப் பூர்த்திபண்ணி வைக்கிற வேலைகளைச் செய்யும்.
கனவு காண்பதை தியானத்திற்கு இணையானதாகக் கொள்ள வேண்டும். தியானம் என்பது ஒரு பொருண்மை குறித்த சிந்தையிலேயே ஒருமித்த கருத்தைச் செலுத்தி நிற்பதாகும். சிந்தனைக்கூர்மை நேராகக் கூராக நமது மூளையின் கவனம் சிறப்பான செயலில் இறங்கி விடுகிறது. மூளைக்குப் புலப்படாத தர்க்க விவாதங்களை, அறிவுக்கும் மேம்பட்ட தளங்களில் கனவுகள் உருவாக்கித், தீர்வான முடிவுகளை நமக்குப் புலப்படுத்திக் காட்டி விடுகின்றன. அதனால் கனவுகள் காட்டுகிற வழிகள் வெற்றிவழிகளாக மாறி, நம்மைச் சாதனை மனிதர்கள் ஆக்கிவிடுகின்றன.
காணுகிற கனவுகள் எல்லாம் மெய்ப்பட வேண்டுமென்றால், கொண்டிருக்கிற நோக்கங்களும் லட்சியங்களும் மெய்யானவை யாக இருக்க வேண்டும். கடுமையான உழைப்பும் நேர்முறையான சிந்தனை நோக்கங்களும் கனவுகளைத் தோல்வி தருவனவாக ஆகாமல் காத்து விடுகின்றன.
யார் வேண்டுமானாலும் கனவு காணலாம்; லட்சியங்கள் எட்ட முடியாத உயரம் உடையன வாகவும் இருக்கலாம்; உன்னுடைய தகுதிக்கு இப்படிப்பட்ட லட்சியங்களை நீ அடையவே முடியாது என்று அடுத்தவர்கள் கேலிபேசவும் செய்யலாம். அயராதீர்கள். கடவுள்மீது பக்தன் வைத்திருக்கும் நம்பிக்கையைப் போல உங்கள் லட்சியங்கள்மீது நம்பிக்கை வையுங்கள்!; தொடர்ந்து திட்டங்களைப் பிரார்த்தனை செய்யுங்கள்! நிச்சயம் கனவுகள் வெற்றிகளைப் பிரசாதங்களாகக் கொண்டுவந்து ஆசீர்வதிக்கும்.
கனவுகள் மெய்ப்படட்டும்; அதற்கு அடிப்படையாக நமது நனவுகளை மெய்யானவை ஆக்குவோம்!
தொடர்புக்கு - 9443190098






