என் மலர்
சிறப்புக் கட்டுரைகள்
- நிவேதிதா பெண்களுக்காக பணியாற்ற முன்வந்ததை வெகுவாக விவேகானந்தர் பாராட்டினார்.
- இந்தியக் கலைகளின் உன்னதத்தைக் கண்டு வியந்த நிவேதிதா அவை உரிய விதத்தில் போற்றப்படவில்லையே என்று எண்ணி வருந்தினார்.
இந்தியப் பெண்களுக்கு உத்வேகமூட்டி அவர்களை எழச் செய்ததோடு, இந்திய கலை, விஞ்ஞானம் ஆகியவற்றின் சிறப்பை உலகறியச் செய்து, இந்தியாவில் சுதந்திர விழிப்புணர்ச்சியை ஊட்டிய மகத்தான ஒரு பெண்மணி சகோதரி நிவேதிதை ஆவார்.
பிறப்பும் இளமையும்: மார்கரெட் எலிசபத் நோபிள் 1867-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 28-ந் தேதியன்று வட அயர்லாந்தில் டங்கனான் என்ற நகரில் மேரி இசபலுக்கும் சாமுவேல் ரிச்மாண்ட் நோபிளுக்கும் மகளாக ஒரு ஸ்காட் குடும்பத்தில் பிறந்தார். அவருக்கு ஒரு வயதாகும்போது குடும்பம் இங்கிலாந்தில் மான்செஸ்டருக்கு இடம் பெயர்ந்தது. அவருக்கு பத்து வயது ஆகும்போது அவரது தந்தை இறக்கவே அவர் தனது தாயாருடனும் கூடப்பிறந்த ஒரு சகோதரர் மற்றும் ஒரு சகோதரி ஆகிய இருவருடனும் அயர்லாந்திற்கு தனது தாத்தாவின் வீட்டிற்குத் திரும்பினார். பதினேழாம் வயதில் அவர் ஒரு பள்ளியில் ஆசிரியையாகப் பணி புரிய ஆரம்பித்தார். தனது 24ம் வயதில் அவர் லண்டனுக்கு வந்து ஒரு பள்ளியைத் துவக்கினார். அப்போதில் இருந்தே அவருக்குள் ஒரு ஆன்மீக தாகம் ஏற்பட்டது.
1895-ம் ஆண்டில் அவரது 28-ம் வயதில் சுவாமி விவேகானந்தரை அவர் சந்தித்தார்; அதில் இருந்து அவர் வாழ்க்கைப் போக்கே மாறிப் போனது.
விவேகானந்தருடன் சந்திப்பு: 1895-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் சுவாமி விவேகானந்தர் இங்கிலாந்திற்குப் பயணமானார். அங்கு 14 வாரங்கள் தங்கி இருந்தார். நவம்பர் மாதத்தில் ஒரு நாள் லேடி மாரிசன் என்பவரது வீட்டின் வரவேற்பறையில் முதல் முறையாக அவரைச் சந்தித்தார் மார்கரெட் எலிசபெத் நோபிள். முதல் சந்திப்பின்போதே சுவாமிஜியால் கவரப்பட்டார் நோபிள். அவர் சொற்பொழிவு ஆற்றும்போதே இடைமறித்துப் பல கேள்விகளைக் கேட்கத் தொடங்கினார். அவரை மறுத்துப் பேசினார். ஆனால் நோபிளின் போக்காலோ அல்லது கேள்விகளாலோ சுவாமிஜி கலங்கவில்லை.
"இப்படித்தான் கேள்விகள் கேட்டும் மறுத்துப் பேசியும் என் குருதேவருடன் ஆறு நீண்ட வருடங்கள் நான் போராடினேன். அதன் விளைவாகத்தான் பாதையின் ஒவ்வொரு பகுதியும் இன்று எனக்குத் தெரிந்திருக்கிறது" என்று கூறிய அவர் நோபிளின் ஆராயும் மனத்தைத் தூண்டினார். படிப்படியாக சுவாமிஜியின் கருத்துக்களால் கவரப்பட்டு முற்றிலுமாக அவரை ஏற்றுக்கொண்டு சிஷ்யையாக ஆனார் நோபிள்.
1898ம் ஆண்டு ஜனவரி மாதம் 28ம் நாளன்று அவர் கொல்கத்தாவை அடைந்தார். நிவேதிதா பெண்களுக்காக பணியாற்ற முன்வந்ததை வெகுவாக விவேகானந்தர் பாராட்டினார்.
அவர் நிவேதிதைக்கு எழுதினார் இப்படி: "உன்னிடம் மூட நம்பிக்கை இல்லை என்பது நிச்சயம். உலகையே அசைக்கவல்ல ஆற்றல் உன்னிடம் உள்ளது என்பது எனக்கு உறுதியாகத் தெரியும். வேறு ஆற்றல்களும் உன்னிடம் வந்து சேரும். தைரியமான சொற்கள், அவற்றை விட தைரியமிக்க செயல்கள் இவையே வேண்டியவை."
1898ம் ஆண்டு மார்ச் மாதம் சுவாமி விவேகானந்தர் மிஸ் நோபிளை அன்னை சாரதாமணி தேவியாரிடம் அழைத்துச் சென்று ஆசி பெறச் செய்தார். மார்ச் 25ம் நாள் அவருக்கு பிரம்மசரிய தீட்சை அளித்ததோடு சகோதரி நிவேதிதை என்ற பெயரையும் சூட்டினார். அன்றிலிருந்து நோபிள், சகோதரி நிவேதிதா தேவி ஆனார்.
1898 நவம்பர் 13-ம் நாள் அன்னை சாரதாமணி தேவியாராலேயே நிவேதிதை வீட்டிலேயே பள்ளி துவங்கப்பட்டது. பெண்கள் அந்தப் பள்ளியில் சேரத் துவங்கினர்.
1899 மார்ச்சில் கல்கத்தாவில் ஏற்பட்ட பிளேக் நோய் கடுமையாக மக்களைத் தாக்கியது. குடிசைப் பகுதியில் வாழ்ந்த மக்களிடம் நிவேதிதா சுத்தம் மிகவும் அவசியம் என்பதை வலியுறுத்தினார். யாரும் அவர் கூறியதைப் பொருட்படுத்தவில்லை. பார்த்தார் அவர், தானே ஒரு நாள் காலையில் கையில் துடைப்பத்தை எடுத்துக்கொண்டு குடிசைப் பகுதிகளில் தெருத்தெருவாக சுத்தம் செய்ய ஆரம்பித்தார். நோயாளிகளுக்கும் உதவினார். இதைப் பார்த்த மக்கள் மனதில் பெரும் மாறுதல் ஏற்பட்டது. ஏராளமான இளைஞர்கள் ஒன்று கூடி அவருடன் சேர்ந்து பணியாற்றத் துவங்கினர்.
1902 ஜூன் இறுதியில் விவேகானந்தர் கொல்கத்தா சென்று நிவேதிதா வாங்கி வைத்திருந்த வீட்டைச் சுற்றிப் பார்த்தார். பள்ளிக்காக நிவேதிதா வாங்கி வைத்திருந்த நுண்ணோக்கி, கேமரா ஆகியவற்றைப் பார்த்து மிகவும் மகிழ்ந்தார். பள்ளியை விட ஒரு பல்கலைக் கழகத்தையே தான் ஆரம்பிக்க விரும்புவதாக நிவேதிதா தெரிவிக்க, 'நல்லது' என்று அதை ஆமோதித்தார் சுவாமிஜி.
1902, ஜூலை 2ம் நாள் ஏகாதசி தினத்தன்று சுவாமிஜி விரதம் இருந்தார். அங்கு வந்த நிவேதிதைக்கு எல்லாவித உணவு வகைகளையும் தானே பரிமாறி உபசரித்தார். சாப்பிட்டு முடிந்தவுடன் நிவேதிதையின் கையைக் கழுவ அவரே நீர் வார்த்தார்.
இதனால் மனம் உருகிய நிவேதிதை, "சுவாமி! இதெல்லாம் நான் அல்லவா உங்களுக்குச் செய்யவேண்டும். நீங்கள் எனக்குச் செய்யலாமா?" என்று கேட்டபோது பதிலாக சுவாமிஜி கூறினார்: "ஏன், ஏசுநாதர் தம் சீடர்களின் கால்களையே கழுவினாரே!" "ஆனால் அது அவரது கடைசி நாளாயிற்றே" என்ற வார்த்தைகள் நிவேதிதையின் தொண்டையில் சுழன்றன.
இரு நாட்கள் கழித்து ஜூலை நான்காம் நாள் சுவாமிஜி சமாதியானார். செய்தி கேட்டு ஓடோடி வந்த நிவேதிதை சுவாமியின் உடல் அருகே அமர்ந்து அவருக்கு விசிறிக் கொண்டே இருந்தார். சுவாமிஜி தனக்கு காவி உடை தரவில்லையே என்ற ஏக்கம் நிவேதிதைக்கு இருந்தது. சுவாமிஜியின் திருமேனி சிதையில் எரிந்து கொண்டிருந்தபோது திடீரென்று சுவாமிஜியின் காவி உடையில் இருந்து ஒரு துண்டு காற்றில் மிதந்து வந்து நிவேதிதையின் மடியில் விழுந்தது. மனம் உருகி அழுதார் நிவேதிதை.
ஜகதீஷ் சந்திர போசுக்கு தந்த ஆதரவு: 1899-ம் ஆண்டில் பாரிசில் விவேகானந்தரும் நிவேதிதையும் இருந்தபோது ஜகதீஷ் சந்திர போஸ் அவர்களைச் சந்தித்தார். ஜகதீஷ் சந்திர போஸ் ஒரு சிறந்த விஞ்ஞானி என்பதை உணர்ந்து கொண்ட நிவேதிதா தேவி அவரை நன்கு ஊக்குவித்ததோடு அவருக்குப் பண உதவி செய்தார். தங்க இடம் தந்தார். ஆய்வு லாபரட்டரியை அமைக்கவும் உதவி செய்தார்.
போசும் அவரது மனைவி அபலாவும் விம்பிள்டனில் இருந்த நிவேதிதையின் வீட்டில் 1900-ம் ஆண்டு தங்கி இருந்தனர்; திடீரென்று அங்கு போஸ் நோய்வாய்ப்படவே நிவேதிதையின் தாயார் மேரி நோபிள் தான் அவருக்குத் தேவையான உதவிகளை ஒரு மாத காலம் அவர் நோயில் இருந்து குணமடையும் வரை செய்தார்.
பாரதியாருக்கு உத்வேகமூட்டல்: 1905ம் ஆண்டு அகில இந்திய காங்கிரஸ் மகாசபை காசியில் கூடியது. அதில் கலந்து கொண்ட மகாகவி பாரதியார் திரும்புங்கால் கல்கத்தாவிற்குச் சென்றார். அங்கு டம்டம் என்ற இடத்தில் வசித்து வந்த சகோதரி நிவேதிதாவைச் சந்தித்தார்.
அவரிடம் நிவேதிதா, "உன் மன பேதங்களைக் களைந்து விடு. சாதி மதம் பிறப்பு ஆகியவை காரணமாக ஏற்படும் வேற்றுமைகளை மறந்து விடு. உன் இதயத்தில் அன்பு குடி கொள்ளட்டும். வரலாற்றில் நீ ஒரு தெய்வப் பிறவியாக விளங்குவாய்" என்று ஆசி கூறினார்.
ஏன் மனைவியை அழைத்து வரவில்லை' என்று நிவேதிதா கேட்க, " எங்கள் குடும்பங்களில் பொது இடங்களுக்கு மனைவியரை அழைத்துச் செல்வதில்லை" என்றார் பாரதியார்.
இதனால் வெகுண்ட நிவேதிதா, "சமூகத்தில் ஒரு பாதியை அடிமைப்படுத்தி வைக்கும்போது மறு பாதி எப்படி சுதந்திரம் பெற முடியும்?" என்று கூறி பெண் விடுதலைக்கான வித்தை பாரதியார் மனதில் ஊன்றினார். அத்தோடு இமயமலைப் பகுதியில் மட்டுமே கிடைக்கும் கிடைத்தற்கரிய சருகு ஒன்றை பாரதியாரிடம் அளித்தார்.
அவர் கொடுத்த சருகை தன்னுடன் நெடுங்காலம் அவர் பத்திரமாகப் பாதுகாத்து வைத்திருந்தார். நிவேதிதையால் ஊக்கமூட்டப்பட்ட பாரதியார் பெண் விடுதலைக்கான எழுச்சி மிகும் பாடல்களைப் பாடியதோடு சமூகத்தில் தானே பெண்களுக்குச் சரிசமமாக உரிமைகளைத் தந்து வாழ்ந்து காண்பித்தார்.
நிவேதிதையைத் தன் ஞான குருவாக பாவித்த பாரதியார் அவரைப் பற்றி கீழ்க்கண்ட ஒரு கவிதையையே புனைந்துள்ளார்.
அருளுக்கு நிவேதனமாய் அன்பினுக்கோர்
கோயிலாய், அடியேன் நெஞ்சில்
இருளுக்கு ஞாயிறாய் எமதுயர்நா
டாம் பயிர்க்கு மழையாய், இங்கு
பொருளுக்கு வழியறியா வறிஞர்க்குப்
பெரும் பொருளாய்ப் புன்மைத் தாதச்
சுருளுக்கு நெருப்பாகி விளங்கியதாய்
நிவேதிதையைத் தொழுது நிற்பேன்
அத்துடன் மட்டுமல்லாது அவருக்கு 1909ம் ஆண்டு தனது ஜன்ம பூமி என்ற நூலை சமர்ப்பித்து "எனக்கு ஒரு கடிகையிலே, மாதாவினது மெய்த் தொண்டின் தன்மையையும், துறவுப் பெருமையையும் சொல்லாமலுணர்த்திய குருமணியும், பகவான் விவேகானந்தருடைய தர்ம புத்திரியும் ஆகிய ஸ்ரீமத் நிவேதிதா தேவிக்கு இந்நூலை சமர்ப்பிக்கிறேன்" என்று எழுதினார்...
பெண்களுக்குக் கல்வி: ஒரு வங்காளப் பெண்மணிக்கு பிரெஞ்சு மொழியையும் பியானோ வாசிக்கக் கற்றுக் கொடுப்பதும் என்ன பயனை இந்தியாவுக்குத் தரும் என்று வினவினார் அவர். அவர்கள் இந்திய சரித்திரத்தையும் இந்திய பிரதேசங்களையும் அல்லவா நன்கு தெரிந்து கொள்ள வேண்டும் என்று கூறிய அவர் நமது பாரம்பரியப் பழக்க வழக்கங்கள், தேசிய சரித்திரம், நமது மொழி, பண்பாடு ஆகியவற்றை பெண்களுக்கு உணர்த்தலானார். அவர் ஒரு சிறந்த ஆசிரியை என்பதால், "படங்கள், படங்கள், படங்கள் – இவையே ஒருவருக்கு எண்ணங்களை ஆழ்ந்து பதியச் செய்யும் என்றார் அவர். 'எந்த ஒரு பெண்மணிக்கு எல்லையற்ற தயை இருக்கிறதோ, எவளுக்கு தேச சரித்திரம் நன்கு தெரிந்திருக்கிறதோ, எந்தப் பெண்மணி நல்ல தீர்த்தங்களை உருவாக்குகிறாரோ அந்தப் பெண்மணிகள் வாழும் நாடே உண்மையான கல்வி அறிவைக் கொண்ட நாடாகும்' என்று கூறிய அவர் இந்திய சரித்திரத்தை நன்கு அனைத்துப் பெண்களுக்கும் கற்பிக்க ஆரம்பித்தார்.
இந்தியக் கலைகளுக்கு ஆதரவு: இந்தியக் கலைகளின் உன்னதத்தைக் கண்டு வியந்த நிவேதிதா அவை உரிய விதத்தில் போற்றப்படவில்லையே என்று எண்ணி வருந்தினார். அதைப் பற்றிய சிறப்புகளை எல்லாம் அவ்வப்பொழுது அனைவருக்கும் உணர்த்தலானார்.
அஜந்தா, எல்லோரா குகைகளுக்குச் சென்று அங்குள்ளவற்றைப் பார்க்க பல குழுக்களையும் அவர் அனுப்பினார். அது மட்டுமின்றி கலைகள் மற்றும் அதன் சிறப்புகளைத் தொகுத்து ஏராளமான கட்டுரைகளை எழுதலானார்.
மறைவு: 1911-ம் ஆண்டு சகோதரி நிவேதிதா ஜகதீஷ் சந்திர போசுடன் டார்ஜிலிங் சென்றார். அங்கு அவருக்கு ரத்த பேதி வரவே அக்டோபர் 13-ந் தேதி உயிர் துறந்தார். அவரது இறுதிச் சடங்குகள் இந்து முறைப்படி நடைபெற்றன. அவரது நினைவாக டார்ஜிலிங்கில் அவர் எரிக்கப்பட்ட இடத்தில் "இந்தியாவிற்காக அனைத்தையும் அளித்த சகோதரி நிவேதிதா இங்கு இளைப்பாறுகிறார்" என்ற அருமையான வாக்கியம் பொறிக்கப்பட்டுள்ளது.
- உத்திர என்றால் அடுத்த என்று பொருள்.
- அனுஷ நட்சத்திர நாளில் லட்சுமி நாராயணரை வழிபட வாழ்க்கை வளமாகும்.
உத்திரம் 12-வது நட்சத்திரமாகும். இந்த நட்சத்திரத்தின் முதல் பாதம் சிம்ம ராசியிலும் 2 3, 4-ம் பாதங்கள் கன்னி ராசியிலும் அமைந்துள்ளது. இதன் அதிபதி சூரியன் ஆகும். இது வானத்தில் தொட்டில் போலவும், ஊஞ்சல் போலவும், நீண்ட கோல் போலவும் காணப்படும். சிம்ம ராசியிலும் கன்னிராசியிலும் வியாபித்து இருப்பதால் உத்திரம் ஒரு உடைந்த நட்சத்திரமாகும். சூரியனின் சுயவீடான சிம்மத்தில் இருப்பதால் இது சிறப்பான நட்சத்திரமாக கருதப்படுகிறது. இந்த நட்சத்திரத்தின் வசிப்பிடம் நீர்நிலைகளாகும். உத்திரம் நட்சத்திரத்தின் முழுப் பெயர் உக்கிர பல்குணியாகும். உத்திர என்றால் அடுத்த என்று பொருள். பூர்வ பல்குணியின் மறுபகுதி அல்லது அடுத்த பகுதி உத்திர பல்குணியாகும். இதன் பொருள் சிறப்பானது என்பதாகும். இதன் வடிவம் தண்டம், கோல். உத்திரம் நட்சத்திரத்தின் முதல் பாதம் முதுகெலும்பு பகுதியையும், 2,3,4 பாதங்கள் குடல், சிறுநீர்ப்பை, கல்லீரல் ஆகிய பாகங்களையும் ஆளுமை செய்கிறது.
உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நட்சத்திர அதிபதி சூரியன் என்பதால் நல்ல மன வலிமையும் ஆன்ம பலமும் நிறைந்தவர்கள். கம்பீரமான உடல்வாகு உண்டு. நல்ல புத்திக் கூர்மை கொண்ட நபர்களாகவும் இருப்பார்கள். உண்மையை மட்டும் பேசுவார்கள். வசீகர தோற்றம் இருக்கும். அனைவரையும் எளிதில் கவரக் கூடிய பேச்சாற்றல் நிறைந்தவர்கள். எந்தவொரு இக்கட்டான சூழ்நிலையாக இருப்பினும் தன்னுடைய நிலைமையில் இருந்து சற்றும் தடம் மாறாமல் சமாளிப்பார்கள். அனுபவ அறிவு அதிகமிருக்கும். ஆன்மீகம் போன்ற தெய்வீக காரியங்களில் ஈடுபாடு அதிகமிருக்கும். யாரையும் அலட்சியம் செய்ய மாட்டார்கள். இவர்கள் மதப்பற்றும், தங்களது பண்பாடு, கலாசாரம் போன்றவற்றில் மிகுந்த ஈடுபாடும், நம்பிக்கையும் உடையவர்கள். பிறருடைய நிர்ப்பந்தங்களுக்காக எந்த ஒரு விரும்பாத செயலையும் செய்யமாட்டார்கள். இவர்களது பேச்சில் இறைவன், விதி, நியாயம் போன்ற வார்த்தைகள் அதிகம் காணப்படும்.
குறுக்குவழியில் வாழ்க்கையை உயர்த்திக் கொள்ளத் தயங்குவார்கள். எந்த ஒருசெயலிலும் கட்டுப்பாடும், ஒழுங்கும் இருக்க வேண்டும் என்பார்கள். சுதந்திர எண்ணங்களும், அடுத்தவர்களை விட மேலே இருக்க வேண்டும் என்ற எண்ணமும் அதிகம் உண்டு. தங்களது விடாமுயற்சியும், சலியாத உழைப்பினாலும் எப்படியும் முன்னேறி விடுவார்கள். தங்களுடைய இயல்புக்கும், தகுதிக்கும் அப்பாற்பட்ட பதவியை அடைய விரும்ப மாட்டார்கள். அந்தஸ்து, கவுரவம் பார்ப்பதால், மற்றவர்களுக்குக் கடின மனத்தினர்கள் போல் தோன்றுவார்கள். இவர்களுக்குச் சமூகத்தில் நல்லவர், வல்லவர் என்ற பெயர் கிடைக்கும். அதனால் பண விஷயக்ளில் லாபத்தை எதிர்பார்க்க மாட்டார்கள்.
பொதுவாகப் பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் படிப்பில் சிறந்து விளங்குவார்கள். இலக்கியங்களிலும் சாஸ்திரங்களிலும் தேர்ச்சி பெற்றிருப்பீர்கள். அடிக்கடி சிந்தித்துக் கொண்டே இருப்பார்கள். ஆன்மிகத்தில் நாட்டமுடையவர்களாக பொறியியல், இதயம், கண் சார்ந்த அறுவை சிகிச்சை மருத்துவம், சித்த மருத்துவம், சமூகவியல், நிர்வாகம் தொடர்பான கல்வி, மருத்துவம் தொடர்பான படிப்புகள், அரசியல், வனம் காடு இயற்கை தொடர்பான கல்விகள், பிபிஎம், பிபிஏ, எம்பிஏ, ஐ.ஏ.எஸ். போன்ற நிர்வாகம் தொடர்பான கல்வி கற்கலாம்.

மற்றவர்களை ஏமாற்றி, அதன் மூலம் வருமானம் பெற விரும்பமாட்டார்கள். ஆடிட்டர், கணக்காளர் போன்ற துறைகளில் சாதிப்பவர்கள். வங்கி அதிகாரி, பதிப்பகம், எழுத்துத் துறை, கணித மேதை, ஆராய்ச்சியாளர், விஞ்ஞானிகள், புதுவித மருந்துகளை கண்டுபிடித்தல், தூதரகப் பணி, தகவல் தொழில் நுட்பம், சங்கேத வார்த்தை நிபுணர், பண்டைய மொழி ஆராய்ச்சி, துப்பறிதல், பாரம்பரிய மருத்துவர், புதிய கண்டுபிடிப்புகள், கண்ணாடிகளில் புதுமை செய்தல், கதை கவிதை எழுதுதல், எவர் மனதையும் படிக்கும் ஹிப்னாடிசம், மனோதத்துவ மருத்துவர், பின்னணிப் பாடகர், டப்பிங் ஆர்டிஸ்ட், இசைக் கருவிகள் வாசித்தல், மிமிக்ரி, ஆண்பெண் என குரல்வளம், இயற்கை ஆர்வலர் போன்ற துறைகளில் இருப்பார்கள்.
நுணுக்கமான திறமைகளை உடையவர்கள். தனம், வாக்கு, குடும்ப ஸ்தானம் பொருளாதாரத்தில் முன்னேற்றம், அரசாங்க ஆதரவு, தொழில் முன்னேற்றம் நிச்சயம் ஏற்படும். இவர்களுக்குப் பெரிய சிரமங்களும், துன்பங்களும் வராது. அப்படி வந்தாலும், வெகு நாட்கள் இருக்காது. வந்த சுக, துக்கங்கள் அனைத்தையும் பொறுமையுடன் ஏற்றுக் கொள்வார்கள். காதல் விவகாரங்கள் இவருக்கு வெற்றியைத் தருவது இல்லை. தங்களது கலாச்சாரத்தை விட்டு வெளியே வரத் தயங்கு வார்கள். நல்ல வாழ்க்கைத் துணையை இயற்கையாகவே அமைத்து விடுவார்கள். நல்ல குடும்ப வாழ்க்கை அமையும். வீண் செலவுகள் அதிகமாகச் செய்யமாட்டார்கள்.
தன்னலத்தை விட பிறர் நலத்தை பேணிக் காப்பார்கள். சிக்கனத்தைக் கையாள்பவராகவும், சுயமரியாதையும் கண்ணியமும் உடையவராகவும் இருப்பார்கள். இவர்களின் 30 வயதில் இருந்து இவர்களுக்கு செல்வாக்கு, செல்வம் சேரக்கூடியதாகவும், பூர்வீக சொத்துக்கள் வீடு, மனை, வண்டி, வாகனம் அமைய வாய்ப்புள்ளது.
தசா பலன்கள்: சூரிய தசா இதன் தசா வருடம் 6. இது ஜென்ம தாரையின் தசாவாகும். பிறந்த கால நட்சத்திர பாதத்திற்கு ஏற்ப மீதமுள்ள தசா வருடம் இருக்கும். செல்வ வளத்திற்கு அதிபதியான ஸ்ரீமகாலட்சுமி தாயார் பிறந்த நட்சத்திரம் என்பதால் இந்த உத்திரம் நட்சத்திரக்காரர்களுக்கு இயல்பாகவே செல்வவளம் என்பது இருக்கும். பொருளாதாரக் கஷ்டம் என்பதே இருக்காது. இன்னும் சொல்லப்போனால் உத்திர நட்சத்திரத்தில் குழந்தை பிறந்தால் அந்தக் குடும்பமே செல்வ கடாட்சம் மிக்க குடும்பமாக மாறும்.
சந்திர தசா: இதன் தசா ஆண்டுகள் 10. இது தன தாரையின் தசாவாகும். இந்த தசா காலம் முழுவதும் பள்ளி படிப்பில் கடந்து போகும். பெற்றோர்களுக்கு நல்ல பொருளாதாரம் சேரும். குழந்தைகளுக்கு சிறு சிறு உடல் நல பாதிப்புகள் இருக்கும். உடல் நல பாதிப்பால் கல்வி ஆர்வம் சற்று குறையும்.
செவ்வாய் தசா: இதன் தசா ஆண்டுகள் 7 இது விபத்து தாரையின் தசாவாகும். இந்த காலகட்டத்தில் பெற்றோரை பிரிந்து படிக்கலாம். 20 வயதை கடந்தவர்கள் தொழில் உத்தியோகத்திற்காக குடும்பத்தை பிரியலாம். சிலருக்கு இளம் வயதில் திருமணம் நடக்கும். சிலருக்கு இந்த காலகட்டத்தில் சொத்துக்களால் உடன் பிறந்தவர்களால் மன உளைச்சல் இருக்கும்.

ஐ.ஆனந்தி
ராகு தசா: இதன் தசா வருடம் 18. இது சேம தாரையின் தசாவாகும். சுய ஜாதகத்தில் ராகு நன்றாக இருந்தால் வாழ்வில் அடைய வேண்டிய அனைத்து இன்பங்களையும் அனுபவிப்பார்கள். தொழில், உத்தியோகம், குடும்ப முன்னேற்றத்திற்காக பூர்வீகத்தை விட்டு வெளியேறுவார்கள். வீடு வாசல், திருமணம் என வாழ்வில் செட்டிலாகுவார்கள். பிரமாண்ட சுக போக வாழ்க்கை அமையும்.
செவ்வாய் தசாவில் திருமணம் நடந்த பலர் மறு விவாகத்தை சந்திப்பார்கள்.
குரு தசா: இதன் தசா வருடம் 16. இது பிரத்யக்தாரையின் தசாவாகும். இந்த காலகட்டத்தில் இவர்கள் முன்கோபத்தால் சின்ன சின்ன வாக்கு வாதங்களை எதிர்கொள்ள நேரிட்டாலும், குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாகவே இருக்கும். பூர்வீக சொத்துக்கள் அதிகமாக இருந்தாலும், தன்னுடைய சொந்த முயற்சியால் வண்டி வாகனங்கள், வீடு மனை போன்றவற்றைச் சேர்ப்பார்கள். ஆடம்பரமான பொருட்களை வாங்கி சேர்ப்பார்கள். சிறு சிறு நோய் தாக்கமும் மன நல பாதிப்பும் இருக்கும்.
சனி தசா: இதன் தசா ஆண்டுகள் 19. இது சாதக தாரையின் தசாவாகும். ஆனால் வயோதிகம் காரணமாக சிறப்பான பலன்களை அனுப விக்க முடியாது. இவர்களது உழைப்பினை எளிதான மற்றவர்கள் பயன்படுத்திக் கொண்டு, அவர்கள் நல்ல பெயர் பெறுவார்கள். தன்னம்பிக்கை குறையும். இதனால் தங்கள் ஆற்றலை வெளிப்படுத்தி, முன்னேற வகையறியாது பலர் முடங்கிக் கிடப்பார்கள்.
உத்திர நட்சத்திரத்தின் சிறப்புகள்
இந்த நட்சத்திரத்தில் வீட்டிற்கு தேவையான கட்டில், மேஜை, நாற்காலி, போன்ற சொகுசு பொருட்கள் வாங்கலாம். இது சாந்தி முகூர்த்தத்திற்கு ஏற்ற நட்சத்திரம். இந்த நட்சத்திரத்தில் விரதம் இருந்து மாலை நேரத்தில் சிவாலயங்களுக்கு சென்று வழிபட்டு வந்தால் ஆண்களுக்கு ஆண்மை குறைவு நீங்கும். வீட்டு விலங்கான நாய் வளர்க்க விரும்புபவர்கள் இந்த நட்சத்திர நாளில் நாய் வாங்கலாம். இந்த நட்சத்திர நாளில் ஆயுதம் பயிலலாம். காது குத்தலாம். இதன் வசிப்பிடம் நீர்நிலை என்பதால் கிணறு குளம் வெட்ட உகந்த நட்சத்திரமாகும். ஜாதகத்தில் சூரியனும் புதனும் இணைந்து லக்னத்திற்கு கேந்திரத்தில் இருந்தால் ஜாதகம் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்குவான்.
இதனை புத ஆதித்ய யோகம் எனலாம். ராசி சக்கரத்தில் சூரியனுடைய வீடான சிம்மத்தையும் புதனுடைய வீடான கன்னியையும் இணைக்கும் நட்சத்திரம் என்பதால் சுய ஜாதகத்தில் புத ஆதித்ய யோகம் இல்லாதவர்கள் உத்திர நட்சத்திரம் வரும் நாளில் சங்கரன்கோவில் சென்று சங்கரநாராயணரை தரிசித்தால் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கலாம். வித்யாரம்பம் சேர்வதற்கும் உகந்த நட்சத்திரமாகும். சூரியனின் அதி தேவதை சிவன். புதனின் அதி தேவதை விஷ்ணு. ஜென்ம நட்சத்திர நாளில் சிவனும் விஷ்ணுவும் இணைந்த அம்சம் சங்கர நாராயணர் என்பதால் சங்கர நாராயணர் வழிபாடு புத ஆதித்ய யோகத்தை வலுப்படுத்தும்.
நட்சத்திர பட்சி:கிளுவை
யோகம்:துருவம்
நவரத்தினம் : மாணிக்கம்
திசை : தெற்கு
பஞ்சபூதம் : நெருப்பு
அதிதேவதை: சூரியன்
நட்சத்திர மிருகம்: ஆண் எருது
நட்சத்திர வடிவம்: கம்பு, குச்சி
நன்மை தரும் நட்சத்திரங்கள் :
சம்பத்து தாரை: ரோகிணி, அஸ்தம், திருவோணம்
சேம தாரை : திருவாதிரை, சுவாதி, சதயம்
சாதக தாரை: பூசம், அனுஷம், உத்திரட்டாதி
பரம மிக்ர தாரை : பரணி, பூரம், பூராடம்
பொதுவான பரிகாரங்கள்
இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்
ஜென்ம நட்சத்திர நாளில் பள்ளி மாணவர்களுக்கு புத்தகம், பேனா வழங்கவும், கல்வி உதவித் தொகை வழங்குவதன் மூலமும் வாழ்வில் வெற்றி பெறலாம்.
சாதக தாரையான அனுஷ நட்சத்திர நாளில் லட்சுமி நாராயணரை வழிபட வாழ்க்கை வளமாகும்.
போன்: 98652 20406
- அன்பும் ஆசைகளும் எதிர்பார்ப்புகளை அதிகப்படுத்துகின்றன. ஏமாற்றம் மனதில் வலியை ஏற்படுத்துகின்றது.
- ‘வருவதும் போவதும் நம் கையில் இல்லை. இதைப் புரிந்து கொண்டால், எதிர்பார்ப்பும் ஏமாற்றமும் இல்லை’ என்று சொல்லிப் புன்னகைத்தார் துறவி.
'வாழ்க்கை ஒரு நொடியில் மாறலாம். எதிர்காலத்தைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம். இப்போது உங்களிடம் இருப்பதைக் கொண்டாடுங்கள்'.
- ஜோடி பிகோல்ட்
அவர்கள் முதிர்வயது தம்பதியர். என் தந்தையின் ஆத்மார்த்த நண்பர்கள். அவர்களிடம் நேரில் சென்று கொடுக்கும்படி, ஊரிலிருந்து என் தந்தையார் சில நூல்களை எனக்கு அனுப்பியிருந்தார்.
வார நாட்களில் அவர்களின் வீட்டிற்குச் செல்வதற்கு எனக்கு நேரம் வாய்க்கவில்லை. எனவே, அந்த வாரத்தின் இறுதி நாளில், நூல்களைக் கொடுத்துவரச் சென்றேன். பட்டணத்தின் ஓர் எல்லையில் அவர்களின் வீடு. இதற்குமுன் நான் அங்கு சென்றிருந்ததில்லை. முதல்தடவை என்பதால் சற்று சிரமப்பட்டுக் கண்டுபிடித்து, அவர்கள் வீட்டிற்கு நான் சென்றபோது மதிய வேளையாயிற்று.
என்னைப் பார்த்ததும் அந்த அங்கிளுக்கும் ஆண்ட்டிக்கும் ஏக மகிழ்ச்சி. என் கைகளைப் பற்றிப் பிடித்துக்கொண்டு வாஞ்சையுடன் வரவேற்றார்கள். அப்பா, அம்மா உட்பட எங்கள் குடும்பத்திலுள்ள அனைவரையும் மிகுந்த அன்புடன் விசாரித்த அவர்களின் மெல்லிய மனம் மிக இனிது. அப்பா அனுப்பியிருந்த நூல்களை அவர்களிடம் கொடுத்துவிட்டு எழுந்தேன்.
'அங்கிள், நான் கிளம்புறேன். எனக்கு அவசர வேலைகள் இருக்குது'.
'அதெல்லாம் முடியாது. இருந்து சாப்பிட்டுதான் போகணும். இன்னிக்கு எங்க கல்யாண நாள்'.
'அப்படியா! ரொம்ப சந்தோஷம். விஷ் யு மெனி மோர் ஹாப்பி ரிடர்ன்ஸ் ஆப் தி டே. இன்னொரு நாள் நான் வர்றேன். இன்னிக்கு நேரம் இல்லை' என்று நான் சொல்ல, என்னை அழுத்திப் பிடித்து அமர்த்தினார் அங்கிள்.
'விருந்து தயாராகுது. மகன், மருமக, பேரப்புள்ளைங்க வர்றாங்க. நீங்களும் வந்தது எங்களுக்கு ரெட்டிப்பு மகிழ்ச்சி' என்று வாய்நிறைய புன்சிரிப்புடன் சொன்னார்.
அவர்களை மீறி என்னால் எழுந்து செல்ல முடியவில்லை.
'அங்கிள், உங்க மகன் குடும்பம் வெளியூர்ல இருந்து வர்றாங்களா?'
'இல்ல, இதே ஊர்தான். கொஞ்சம் தூரத்துல இருக்காங்க. ஆனா, வர்றதே இல்ல. ரொம்ப பிசி. வருஷத்துக்கு ஒன்றிரண்டு தடவை வந்தாலே பெருசு. எங்களுக்கும் அலையறது கஷ்டம். ஆனா, மனசு கேட்காமல் எப்பவாது போய்ட்டு வருவோம்' என்றார்.
எனக்கு ஜூஸ் கொண்டுவந்து கொடுத்து விட்டு, பக்கத்தில் அமர்ந்தார் ஆண்ட்டி.
'தம்பி, இன்னும் கொஞ்ச நேரத்துல மட்டன் பிரியாணி, சிக்கன் பிரை, பிஷ் வறுவல், பாயாசம் எல்லாம் ரெடியாயிடும். பையன் குடும்பமும் வந்துடும். எல்லாரும் சேர்ந்து சாப்பிடலாம்' என்று சொல்லிவிட்டு சமையலறைக்கு விரைந்தார் ஆண்ட்டி.
'வயசான காலத்துல பேரப்புள்ளைங்களைத் தான் மனசு ரொம்ப தேடுது. அவங்களுக்கும் வந்து போறதுக்கு நேரம் இல்ல. பல மாசம் கழிச்சி இன்னிக்குதான் வர்றாங்க. அதனால் எங்க ரெண்டு பேருக்கும் மனசு ரெக்க கட்டிப் பறக்குது தம்பி' என்று மகிழ்ச்சி ததும்பத் ததும்ப அவர் சொல்லிக் கொண்டிருந்தபோது, அவருடைய மொபைல் போன் ஒலித்தது.
'பையன்தான் கூப்பிடுறான்' என்று சொல்லிக்கொண்டே ஆர்வத்துடன் போனை எடுத்தார்.
'ராஜா, நாங்க காத்திட்டிருக்கோம். பக்கத்துல வந்துட்டீங்களா?' என்று குதூகலமாய்க் கேட்ட அவரின் முகம் சட்டென்று வாடிச் சுருங்கியது.
'ஏன்டா ராஜா... உங்களுக்காக அம்மா இன்னிக்கு வகைவகையா விருந்து சமைச்சிருக்கிறா. உங்க எல்லாரையும் பார்க்கிறதுக்கு எங்க மனசு துடிக்குது. வரலேன்னா மனசு ரொம்ப கஷ்டப்படும்' என்று சொல்லும்போது அவரின் குரல் தழுதழுத்தது.
'சரி ராஜா, உங்களுக்கு வசதிப்படும்போது வாங்க' என்று சொல்லிவிட்டு, மனைவியைப் பார்த்தார். அவர் எதுவும் பேசாமல் அப்படியே உட்கார்ந்துவிட்டார்.
'மருமகளோட ஆபீஸ் பிரண்ட்ஸ் இன்னிக்கு வீட்டுக்கு வர்றாங்களாம். திடீர் புரோகிராம். அதனால் இங்க வரமுடியலைன்னு சொல்றான்' என்றார். அவரின் குரலில் ஏமாற்றத்தின் வலி தெரிந்தது.
அன்பும் ஆசைகளும் எதிர்பார்ப்புகளை அதிகப்படுத்துகின்றன. ஏமாற்றம் மனதில் வலியை ஏற்படுத்துகின்றது.
நம் ஒவ்வொருவரிடமும் ஏதோ ஓர் எதிர்பார்ப்பு இருந்துகொண்டேதான் இருக்கும். கைகூடுவதும் உண்டு; கனவாகிப் போவதும் உண்டு. இதுதான் வாழ்வின் எதார்த்தம்.
பிள்ளைகளின் வரவை எதிர்பார்த்துக் காத்திருக்கும் முதுமை; பேரப்பிள்ளைகளைக் காணத் துடிக்கின்ற பரிதவிப்பு; வர மாட்டார்களா என்கிற ஏக்கம். இன்று பல வீடுகளில் முதியவர்களின் நிலை இதுதான்.
ஒருவன் எவ்வளவுதான் சம்பாதிக்கட்டும்; எல்லா வசதிகளையும் பெற்றிருக்கட்டும். தன் பெற்றோரின் ஆத்மார்த்த எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் ஆசை அவனிடம் இல்லையெனில், அவன் நன்றி கெட்டவன் என்பதே உண்மை.
எத்தனை எத்தனை எதிர்பார்ப்புகள்! எத்தனை எத்தனை ஏமாற்றங்கள்! ஒன்றை விரும்புகின்றோம். அதையே நாடுகின்றோம். எதிர்பார்ப்பு எத்தனையோ கற்பனைகளை நமக்குள் விதைக்கின்றது. கனவு காண்கின்றோம். கைகூடவில்லை எனில் மனம் இளைத்துவிடுகின்றது. எனினும், எதிர்பார்ப்பு இல்லாமல் மனித வாழ்க்கை இல்லை.
விவசாயிகளின் எதிர்பார்ப்பு மண்ணைச் சார்ந்திருக்கின்றது; மழையை நம்பியிருக்கின்றது. அந்த மழையே அவர்களுக்குப் பாதகமாகிவிடுவதும் உண்டு.
அறுவடைக்குப்பின் விதைக்கான நெல்லைத் தங்கள் கைகளால் போரடிக்கிறார்கள். நன்கு உலர்த்தி, காற்றில் தூற்றுகிறார்கள். விதைகள் மீது பூச்சித் தாக்குதலைத் தடுக்க வேண்டுமே. அதற்காக, நொச்சி இலைகள் அல்லது வேப்பிலைகளைக் கலந்து வைக்கிறார்கள். விதைப்பதற்குமுன், விதைகளை நீரில் இடுகிறார்கள். மூழ்கும் விதைகளை மட்டுமே தேர்ந்தெடுக்கிறார்கள்.
கடின உழைப்பு. இராப்பகலாய்க் கண்விழிப்பு. எனினும், சில சமயங்களில் நீரின்றிப் பயிர்கள் கருகிச் சாகின்றன. சில சமயங்களில், மழை வெள்ளத்தில் மூழ்கி அழிகின்றன.

முல்லைப் பெரியாறு அணையின் தண்ணீர் மூலம் 14,707 ஏக்கர் நிலங்களில், ஆண்டுதோறும் இரு போக நெல் சாகுபடி செய்யப்படுகின்றது.
கடலூர் உட்பட சில பகுதிகளில் சுமார் 5000 ஏக்கர் பரப்பளவில் முதல்போக சாகுபடிக்கென, வயல்களை உழுது தயார் செய்யும் பணியில் விவசாயிகள் உற்சாகமாய் ஈடுபட்டனர்.
நெற்கதிர்கள் நன்கு விளைந்து அறுவடைக்குத் தயார் நிலையில் இருந்தன. விவசாயிகளின் மனதில் ஆயிரமாயிரம் கனவுகள். ஆனால் கடுமையான இயற்கைப் பேரிடர். அண்மையில் பெய்த பெருமழை வெள்ளத்தில் வயல்வெளிகள் மூழ்கின; நெற்கதிர்கள் சாய்ந்து கீழே சரிந்தன.
வியர்வை சிந்திய விவசாயிகளின் எதிர்பார்ப்புகள் கண்ணீரில் கரைந்தன. சந்தோஷமும் சஞ்சலமும் மாறி மாறி வருவதுதான், எதிர்பார்ப்புகளில் நாம் காண்கின்ற பலன்கள். அவை எல்லாவற்றிலும் இருந்து நாம் புதிய புதிய பாடங்களைக் கற்றுக்கொள்ள முடியும்.
வெளியூர்ப் பயணங்களில் எப்போதாவது பேருந்து 'பிரேக் டவுன்' ஆகிவிடலாம். குறித்த நேரத்தில் ஊர்போய்ச் சேர முடியாத சூழ்நிலை ஏற்படும். எனினும், அத்தருணங்களில் சக பயணிகளிடம் பேசுகின்ற வாய்ப்பு கிடைக்கும். அதன்மூலம் சில புதிய நண்பர்களையும் நாம் பெறக்கூடும்.
நல்லது கெட்டது எதுவுமே நாம் எடுத்துக் கொள்கின்ற விதத்தில்தான் இருக்கின்றது. கிடைத்தால் மகிழ்ச்சி. கிடைக்காவிட்டால் அதுவும் நன்மைக்கே என்று நினைக்கின்ற மனோபாவம் இருந்துவிட்டால், எதையுமே மிகச்சிறந்த அனுபவமாக எடுத்துக்கொள்ள முடியும்.
மருத்துவக் கல்லூரியில் சேர வேண்டும். அதுதான் லட்சியம். அதற்காகவே பிரத்யேகப் பயிற்சிகள். தூங்காமல் கொள்ளாமல் எப்போதும் படிப்பு. எனினும், அவனால் தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற முடியவில்லை. மனம்சோர்ந்து போகின்றான். எதிர்காலமே இல்லை என்பதுபோல் தோன்றுகிறது. அந்த விரக்தியிலேயே தன் எதிர்காலத்தை இருளாக்கிக் கொள்கின்றான்.

கவிஞர் தியாரூ, 9940056332
வாழ்க்கை என்பது நம் எதிர்பார்ப்புகளின் வெற்றியில்தான் இருக்கிறது என்னும் தவறான எண்ணத்தை நாம் தவிர்த்துவிட வேண்டும். நம்பிக்கைதான் நம்முடைய பலம். அதுதான் நம் வாழ்வை ஒளிபெறச் செய்யும்.
ஒரு விஷயம் நாம் எதிர்பார்த்தபடி நடக்காதபோது, அதைவிடச் சிறந்த எதிர்பாரப்புகளை ஏற்படுத்திக்கொண்டு பயணித்தால், வாழ்க்கை இன்னும் சுவாரஸ்யமாகும்.
தனது தோட்டத்தில் பயிர்செய்து ஒரு விவசாயி வாழ்க்கை நடத்தினான். ஒருநாள் அதிகாலையில், பக்கத்துக் காட்டிலிருந்து தப்பி வந்த ஒரு குதிரைக் குட்டி அவன் குடிசைமுன் வந்து நின்று கொண்டிருந்தது. அழகிய வெள்ளை நிறம். அதனைக் கண்ட விவசாயி, மகிழ்ச்சியுடன் அரவணைத்துக் கொண்டான்.

குதிரை வளர்ந்தது. பார்ப்பதற்குக் கம்பீரமாக இருந்தது. அந்த விவசாயி அதைப் பார்த்துப் பார்த்து மகிழ்ந்தான். ஒருநள் திடீரென்று, அந்த வெள்ளைக் குதிரை காணாமற் போய்விட்டது. பதறியடித்தபடி எல்லா இடங்களிலும் தேடினான். குதிரையைக் கண்டுபிடிக்க முடியவில்லை. வரும்வழியில் மரத்தடியில் ஒரு துறவியைக் கண்டான். விஷயத்தை வருத்தத்துடன் சொன்னான்.
'உன் வாழ்வில் அந்தக் குதிரை உன்னிடம் வருமென்று நீ எதிர்பார்த்ததுண்டா?' - கேட்டார் துறவி.
'இல்லை' என்றான்.
'பின்னர் ஏன் வருந்துகின்றாய்? வருவதும் போவதும் நம் கையில் இல்லை' என்று சொல்லிவிட்டு அந்தத் துறவி கடந்து சென்றார்.
சில மாதங்கள் ஓடின. ஓர் அதிகாலை வேளையில், அந்த வெள்ளைக் குதிரை தன்னுடன் இன்னொரு குதிரையையும் கூட்டிக்கொண்டு, அவன் குடிசைமுன் வந்து நின்றது. விவசாயி பூரித்துப்போனான்.
இரண்டு குதிரைகளையும் கூட்டிக்கொண்டு, தண்ணீர் காட்ட ஆற்றுக்குச் சென்றான். அந்நேரம், குளித்துக் கரையேறி வந்த அதே துறவியை அங்கு சந்தித்தான்.
'சாமி, காணாமற்போன என் குதிரை இன்னொரு குதிரையையும் கூட்டிக்கொண்டு வந்துவிட்டது' என்றான்.
'ஒன்று போய் இரண்டாக வருமென்று நீ எதிர்பார்த்தாயா?' என்று கேட்டார் துறவி.
'இல்லை' என்றான்.
'வருவதும் போவதும் நம் கையில் இல்லை. இதைப் புரிந்து கொண்டால், எதிர்பார்ப்பும் ஏமாற்றமும் இல்லை' என்று சொல்லிப் புன்னகைத்தார் துறவி.
நம் மனதின் கவலைகளும் காயங்களும் நம் எதிர்பார்ப்புகளால் ஏற்படுகின்றன. வாழ்வின் மகிழ்ச்சியும் முன்னேற்றங்களும், நம் மேல்நோக்குச் சிந்தனைகளால் உருவாகின்றன. இதை உணர்ந்து கொண்டால், வாழ்வே இனிமை! இனிமை!
- திவ்யாவுக்கு சற்று பயம் குறைந்து சகஜமானாள்.
- கார் எந்த சப்தமும் இல்லாமல் மௌனகீதம் வாசித்தது.
பதட்டமாய் காரைவிட்டு இறங்கினர் இருவரும். டேவிட், காரின் பானெட்டை திறந்து பார்க்க, எல்லாமே சரியாய் அவன் பார்வைக்கு தெரிந்தது. 'ஒருவேளை பேட்டரி டவுண் ஆகியிருக்குமோ?!
டேவிட் யோசிக்கும்போது, அவன் தோள் மீது கை வைத்தாள் திவ்யா. திரும்பி அவளிடம் 'என்ன' என டேவிட் புருவம் உசத்தி கேட்க, திவ்யா ரோட்டை நோக்கி கை நீட்ட, டேவிட் பார்க்கவும், அந்த 'டிரக்' வந்து நிற்கவும் சரியாய் இருந்தது.
அதே தலைப்பாகை, கூலிங் கிளாஸ், டிரைவர், டிரக்கில் இருந்து குதித்து இவர்களை நோக்கி வந்தான். பயத்தில் டேவிட்டின் கையை இறுகப்பற்றிக் கொண்டாள். பக்கத்தில் வந்த டிரைவர், இவர்களையும், காரையும் மாறி மாறி பார்த்தான்.
"எந்தா சாரே.. கார் பிராபலமா?" அவனது 'எந்தா சார்' அவனை மலையாளி என உணர்த்தியது.
"ஆமா… என்ன பிராப்ளம்னு தெரியலை.. நான் பார்த்துக்குறேன்…நீங்க போங்க.."
ஏறக்குறைய அவனை விரட்டுவது போல் பதில் சொன்னான் டேவிட்.
"எந்தா சார்.. ஹெல்ப் பண்ணலாம்னு வந்தா இப்படி விருட்டுரிங்க…"
நீங்க ஹெல்ப் பண்ண வந்ததுக்கு நன்றி.. நான் காரை சரி பண்ணிக்கிறேன். நீங்க போங்க.."
"பேடிக்க வேண்டாம்.. சாரி.. பயப்பட வேண்டாம் சாரே.. எண்ட பேரு மனோகர்.. சொந்த ஊரு கொல்லம்.. வாரம் ரெண்டு தடவை சென்னை - கொல்லம்னு லோடு ஏத்திட்டு போற ஆளு நான்.."
திவ்யாவுக்கு சற்று பயம் குறைந்து சகஜமானாள். அவன் தொடர்ந்தான்.

இயக்குநர் A. ெவங்கடேஷ்
'இப்ப கூட நான் கொல்லம்தான் போகுது. பசி பயங்கரமா எடுத்ததாலேயே நான் ஹார்ன் அடுச்சு உங்க கார ஓவர் டேக் பண்ணி போச்சு.."
அவன் பேச்சில் எதார்த்தம் தெரிந்தது. 'ஒரு நல்லவனை நாம சந்தேகப்பட்டோமோ' என யோசித்தான். தொடர்ந்தான் மனோகர்..
"அதன் பின்னே… நான் உங்களை ஓட்டல்ல வச்சு கண்டு சிரிச்சு… நீங்கள் பயந்து போய் சிரிக்க கூட இல்ல… இப்போ இவ்விட வண்டி ரிப்பேர் ஆகி நிக்குது. ஹெல்ப்புக்கு வந்தா இப்பவும் நம்பலை.. அதானே சாரே.."
அவன் அப்பாவியாய் கேட்டான்.
"அப்படி எல்லாம் இல்லை மனோகர். உங்க தோற்றமும், உருவமும் பயமுறுத்திடுச்சு. அதான்.. ஆங்.. அப்புறம் இவங்க என் மனைவி திவ்யா"
திவ்யாவை அறிமுகம் செய்தான் டேவிட்.
"நமஸ்காரம் மேடம்!" அவன் சிரித்தபடி கும்பிட, திவ்யா பதிலுக்கு கை கூப்பினாள்.
"அப்புறம் சாரே.. நான் காரை நோக்கட்டா… சாரி… என்ன ரிப்பேர்னு பாக்கட்டா" என அவன் கேட்கவும், டேவிட் "சரி.. பாருங்க.."
மனோகர் காரின் பானட் புல்லா துழாவினான். காரில் அமர்ந்து ஸ்டார்ட் செய்து பார்த்தான். கார் எந்த சப்தமும் இல்லாமல் மௌனகீதம் வாசித்தது.
"சாரே.. இ ரோட்டுல பெருசா வண்டிகள் ஏதும் வராது. இது குறுக்கு வழி. மெயின் ரோடுன்னாலும் வண்டிங்க வரும்.. நீங்க எப்படி இந்த குறுக்கு வழியில வந்துச்சு.."
மனோகர் வண்டியை ஆராய்ந்த படியே கேட்டான்.
"கூகுள் மேப் காட்டின வழிலதான் வந்தோம்.." டேவிட் சொன்னான்.
'கூகுள் மேப் சமயத்துல குறுக்கு வழின்னு இப்படி ஏதாவது ரூட்டை காண்பிச்சுடும்.. அப்பப்ப அங்க அங்க உள்ள கடைகளிலோ, டோல்கேட்டிலோ ரூட் செக் பண்ணிக்கணும் சாரே… இப்போ எந்த ஊருக்கு போறீங்க சாரே…" மனோகர் கேட்டான்.
"மேலூருக்கு… அங்க பக்கத்துல இருக்கிற சின்னூர்ல நாளைக்கு மறுநாள் ஒரு கச்சேரி.."
"ஓ… சார் சிங்கரோ!"
"ஆமா… என் மனைவியும் பாடுவா.." டேவிட் பெருமையாய் சொன்னான்.
"சூப்பர் சாரே… பெரிய பாடகரா, படகியா வாங்க.. குருவாயூரப்பன் அருள் கிடைக்கட்டும்.." கையை துடைத்து ஆசிர்வாதம் செய்தான்.
'வண்டியை செக் பண்ணிட்டீங்களா…? டேவிட் கேட்க,
"பண்ணியாச்சு சாரே… ஸ்டார்ட் ஆக மாட்டேங்குது… எனக்கு நேரம் ஆகுது… காலையில கொல்லம் போகலேன்னா மொதலாளி திட்டும். இந்த ரோட்டில் வேற வண்டி ஏதாவது வந்தா ஹெல்ப் கேட்டு பாருங்க.. என்னால சரி பண்ண முடியல சாரே.. நான் வரட்டா.."
மனோகர் கிளம்ப எத்தனிக்க, இவனையும் விட்டா வேற ஆள் இந்த ராத்திரியில ஹெல்ப்புக்கு கிடைக்கிறது கஷ்டம்!" - யோசித்த திவ்யா, டேவிட்டை தோளில் தட்டி
"இவர் கிட்ட வேற ஏதாவது மெக்கானிக் பக்கத்துல கிடைப்பாரான்னு கேளுங்க.."
அவள் டேவிட்டிடம் சொன்னதை கேட்ட மனோகர், "சிஸ்டர்.. மெக்கானிக் யாரும் பக்கத்தில் கிடையாது. இங்கிருந்து ஒரு 20 கிலோ மீட்டர் தள்ளி போனா, ஒரு சின்ன மெக்கானிக் கடை இருக்கு.. அங்க கேட்டு பாக்கலாம்… இல்லன்னா கார லாக் பண்ணிட்டு வாங்க.. அங்க ட்ராப் பண்ணிட்டு போறேன்… மெக்கானிக்கை கூட்டி வந்து, உங்க கார சரி பண்ணி எடுத்துட்டு போங்க…"
அவன் சொன்னது சரி என்று பட்டது இருவருக்கும். "நீங்க சொல்றதுதான் சரி மனோகர்.." டேவிட் ஆமோதித்தான். காரை பூட்டிவிட்டு, அவன் 'டிரக்'கில் இருவரும் ஏற, டிரக் கிளம்பியது.
முதன்முறையா, ஒரு டிரக்கில், அதன் கேரவனில் அமர்ந்து பயணிப்பது திவ்யாவுக்கு புதுசா இருந்தது. ஏதோ யானை மீது உட்கார்ந்து போவது போல் உயரமாய் இருந்தது.
கார் சீட் போல், டிரக் சீட் மெத்தென்று இல்லாமல், பலகை போட்டு அதன் மேல் ஒரு சிறு மெத்தையை போட்டு உட்கார்ந்து இருப்பது போல் இருந்தது. கண்ணாடி அருகே வைத்திருந்த, கிருஷ்ணன் சிலை மீது போடப்பட்டு இருந்த, மல்லிகை சரம் வாடி தொங்கியது. அதில் வாடி இருந்த மல்லிகை பூ, டிரக் போகும் ஸ்பீடில் வரும் காற்றுக்கு ஒவ்வொன்றாய் பறந்து கொண்டிருந்தது. கேரவன் முழுக்க ஒருவித சாம்பிராணி வாசம். கூடவே மழையில் நனைந்த துணியில் இருந்து வரும் வாசம் போல ஒரு நெடி.
டிரக் ஏறிய பிறகு, மனோகர் பேசவே இல்லை. அவன் கவனம் முழுவதும் ரோட்டிலேயே இருந்தது.
"இந்நேரம் மெக்கானிக் முழுச்சு இருப்பானா?" டேவிட் கேட்டான்.
"இந்த மாதிரி ரோடுங்கள்ல இருக்கிற மெக்கானிக் தூங்கினாலும் கதவை தட்டினதும் முழுச்சுடுவாங்க…"
பேசியபடியே தன் சீட்டுக்கு பக்கத்தில் இருந்து, ஒரு ஜூஸ் பாட்டிலை எடுத்து நீட்டினான். "ஓட்டல்ல வாங்கின ஜூஸ்.. குடிங்க சார்..." என்று நீட்டினான் மனோகர்.
"வேண்டாம் மனோகர்... தாகமில்லை..." என டேவிட் மறுத்தான். இவ்வளவு நேரம் அந்த ரோட்டில் நின்றதால், வியர்த்து போய் களைப்பாய் நின்ற திவ்யாவுக்கு அதை குடித்தால் தேவலை என்று தோன்றியது.
"எனக்கு தாங்க டேவிட்.." என ஜூஸ் பாட்டிலை வாங்கினாள். அதன் மூடி திறக்கப்படாமல், புதுசா வாங்கின பாட்டில் என தெளிவாய் தெரிந்தது. பாட்டில் மூடியை ஒரு திருகு திருகி திறந்து மடமடவென்று குடித்தால். தொண்டைக்கு இதமாய் இருந்தது. அரை பாட்டிலை குடித்து டேவிட்டிடம் நீட்டினாள்.
"நீங்க கொஞ்சம் குடிங்க டேவிட்.."
டேவிட் தலையாட்டி 'எனக்கு வேணாம்' என மறுத்து பாட்டிலை மூடி மனோகரிடம் கொடுத்தான். மனோகர் பாட்டிலை வண்டியை ஒட்டியபடியே, வாங்கி தன் சீட் அருகே வைத்தான்.
"இன்னும் எவ்வளவு நேரம் ஆகும் மெக்கானிக் கடை வர.."
"இதோ.. இன்னும் 20 நிமிசத்துல போயிடலாம்.."
அந்த 'டிரக்'கின் என்ஜின் ஓடும் சத்தம் தவிர, வேறு எந்த சத்தமும் இன்றி அந்த குறுக்கு ரோடு வெறிச்சென்று இருந்தது. டிரக் 70 கிலோ மீட்டர் வேகத்தில் செல்ல, திவ்யாவுக்கு தூக்கம் கண்ணை சுழற்றியது.
இருபது நிமிடத்துக்கு பின் டிரக் ஓர் இடத்தில் நின்றது. அதற்குள் திவ்யா நன்றாக தூங்கி இருந்தாள். அவள் தலை டேவிட்டின் தோள் மீது சாய்ந்து இருந்தது.
"அதோ.. தெரியுது பாருங்க.. மெக்கானிக் கடை.."
மனோகர் காட்டிய இடம், ரோட்டின் மறுபுறம், "5 ஸ்டார் மெக்கானிக் கடை" என்று போர்டு போட்டு டயர்கள் அடுக்கி வைக்கப்பட்ட சின்ன கடையாக இருந்தது. பக்கத்திலேயே மஞ்சள் கலர் பெயிண்ட் அடித்த ஒரு சின்ன வீடு இருந்தது. 40 வாட்ஸ் பல்ப்பு எரிந்து கொண்டு இருந்தது.
"தூங்கிட்டான் போல… சார்.. இறங்கி போய் அந்த மஞ்சள் வீட்டு கதவை தட்டி, மனோகர் வந்து இருக்கேன்னு சொல்லுங்க… மெக்கானிக் பேரு மணி.."
தோளில் சாய்ந்து தூங்கும் திவ்யாவை பார்த்தான் டேவிட்.
"அவங்களை அப்படியே சீட்ல சாச்சு விட்ருங்க. தூங்கட்டும்… நீங்க போய் மணிய கூட்டிட்டு வாங்க… ஏன்னா.. டிரக்கை நிப்பாட்டி நா இறங்கி போனா திரும்ப டைம் ஆகும்.." என மனோகர் கூறவும், டேவிட் திவ்யாவை சீட்டில் படுக்க வைத்துவிட்டு, இறங்கினான்.
டிரக்கை தாண்டி, ரோட்டை கிராஸ் பண்ணி, அந்த மெக்கானிக் வீட்டை நெருங்கும் சமயம்… டிரக் வேகமெடுத்து அந்த இடத்தை விட்டு பறந்தது. சுதாரித்து, டேவிட் டிரக் பின்னாடி ஓடி வந்து, முடியாமல் மூச்சுவாங்க நிற்க, திவ்யாவுடன் டிரக் கண்ணை விட்டு மறைந்தது.
(தொடரும்)
E-Mail: director.a.venkatesh@gmail.com வாட்ஸப்: 7299535353
- திருவண்ணாமலை தீபக் காட்சியை ஒவ்வோர் ஆண்டும் சிவ பக்தர்கள் கண்டு களிக்கிறார்கள்.
- பஞ்ச முக விளக்கு என 5 முகங்களைக் கொண்ட விளக்குகளும் உண்டு.
கார்த்திகைப் பண்டிகையின்போது நாம் தீபத்தை, அதாவது ஒளியை வழிபடுகிறோம். ஒளியை வழிபடுவதன் பின்னணி என்ன? நிலம் நீர் நெருப்பு காற்று ஆகாயம் என்பவை ஐம்பூதங்கள்.
இந்தப் பஞ்ச பூதங்களால் ஆனதே உலகம். இவற்றில் நீரும் நெருப்பும் ஒன்றுக்கொன்று முரண்பட்ட பண்பைக் கொண்டவை. நீர் எப்போதும் மேலிருந்து கீழ்நோக்கித்தான் பாயும். ஆனால் நெருப்பு அப்படியல்ல. நெருப்பு எப்போதும் கீழிருந்து மேல்நோக்கித்தான் எரியும்.
ஒரு தீப்பந்தத்தைத் தலைகீழாய்ப் பிடித்தாலும் கூட, அதன் சுடர் மேல்நோக்கித்தான் எரியுமேயன்றிக் கீழ்நோக்கி எரியாது. நம் மனமும் உயர்ந்த எண்ணங்களோடு மேல்நோக்கிச் செல்ல வேண்டும் என்பதால்தான் நாம் அந்தப் பண்பைக் கொண்ட நெருப்பை வழிபடுகிறோம்.
ஆண்டுக்கு ஒருமுறை கார்த்திகையைக் கொண்டாடி, அதன்மூலம் நம் மனம் மேலே மேலே உயர வேண்டும் என்பதை நமக்கு நாமே உறுதிப்படுத்திக் கொள்கிறோம். மனத்தின் தீய எண்ணங்களைக் கார்த்திகை நெருப்பில் தூசாக்கி எரித்து நம் மனத்தைப் புடம்போட்ட தங்கமாய் மாற்றிக் கொள்கிறோம். நெருப்பை வழிபடும் கார்த்திகை வழிபாடு, நம் மனத்தைக் கீழிருந்து மெல்ல முயன்று மேலே உயர்த்திச் செல்ல வேண்டும் என்ற நோ க்கத்தில் உண்டானதுதான்.
* கார்த்திகை நாள் பற்றிப் பழந்தமிழ் இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. கார்த்திகை நாள் பல்வேறு சொற்களால் சுட்டப்படுகிறது. அளக்கர், அளகு, அறுவாய், ஆரல் போன்றவை கார்த்திகை நாளைக் குறிக்கும் சொற்களில் சில.
* இல்லங்களில் கார்த்திகை யன்று வரிசை வரிசையாக விளக்குகளை ஏற்றி வைத்து, வழிபடுவது கார்த்திகைப் பண்டிகைக் கொண்டாட்டங்களில் முக்கியமான ஒன்று. நூற்றுக்கணக்கான விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஒவ்வொரு வீடும் தனிப்பொலிவுடன் திகழ்வது ஒரு கண்கொள்ளாக் காட்சி. கார்த்திகை இரவன்று தெருக்களில் நடந்து செல்லும்போது இரு பக்கத்து வீடுகளும் ஒளி வெள்ளத்தில் மிதக்கும் காட்சியைக் கண்டு களித்துக் கொண்டே செல்லலாம்.
* பொங்கல் காலை நேரப் பண்டிகை. சூரியனைக் காலையில் பொங்கல் வைத்து வழிபடுவார்கள். ஆனால் கார்த்திகையோ மாலை நேரப் பண்டிகை. கார்த்திகை வழிபாடு, கொண்டாட்டங்கள் அனைத்தும் மாலையில் தொடங்கி இரவு வரை நடைபெறுபவை.
ஐப்பசியில் நடைபெற்ற தீபாவளிக் கொண்டாட்டத்திற்குப் பிறகு கார்த்திகை மாதத்தில் கார்த்திகைப் பண்டிகை வருவதால், தீபாவளியன்று வெடிக்காமல் தேங்கிவிட்ட பட்டாசுகளை கார்த்திகையன்று வெடித்து குழந்தைகள் குதூகலம் அடைவார்கள்.
தீபாவளிக்கென்று வாங்கிய பட்டாசுகளில் சிலவற்றைக் கார்த்திகைக்கென்று தனியே கொஞ்சம் எடுத்து வைத்துக் கொள்ளும் புத்திசாலிக் குழந்தைகளும் உண்டு. ஐப்பசிபோல் கார்த்திகை மாதத்தில் பட்டாசுகள் கடைகளில் வாங்கக் கிடைக்காது.

* சிவாலயங்களில் சொக்கப்பனை கொளுத்துவது கார்த்திகைப் பண்டிகை அன்றுதான். கோயிலின் முன்புறத்தில் பனையோலைகளால் கோபுரம் போல் கட்டி கார்த்திகை அன்று மாலை நேரத்தில் அதைக் கொளுத்துவது வழக்கம். சிவபெருமான் நெற்றிக் கண்ணால் மன்மதனை எரித்ததன் அடையாளமாக சொக்கப்பனை கொளுத்தப்படுவதாகவும் சொல்வதுண்டு.
சிவபெருமான் மன்மதனை எரித்த சம்பவம் காம தகனம் என்றே சொல்லப்படுகிறது. மானிடர்கள் தங்கள் மனத்தில் தோன்றும் காம உணர்வை முழுமையாகச் சுட்டெரிக்க வேண்டும் என்பதை உணர்த்தும் உருவகச் சடங்கே சொக்கப்பனை கொளுத்தும் சடங்கு.
சொக்கப்பனையின் சாம்பல் புனிதமானது, சக்தி நிறைந்தது என்று மக்களிடையே நம்பிக்கை உள்ளது. அதனால் குழந்தைகள் நெற்றியில் அவர்களின் ஆரோக்கியத்தை வேண்டியும் கர்ப்பிணிப் பெண்கள் நெற்றியில் சுகப் பிரசவத்தை வேண்டியும் இந்தச் சாம்பல் திருநீறாக இடப்படுவதுண்டு. சொக்கப்பனைச் சாம்பலை விளைநிலங்களில் தூவினால் பயிர்கள் நன்கு வளரும் என்றும் ஒரு நம்பிக்கை கிராம மக்களிடையே உண்டு.
* திருவண்ணாமலை என்ற புனிதத் திருத்தலத்தில், சிவபெருமானின் முடியைக் காணவேண்டி, படைத்தல் தொழிலைச் செய்யும் பிரம்மன் அன்னப்பறவையாகப் பறந்து மேலே மேலே சென்றார். சிவனின் அடியைக் காணும் எண்ணத்தில் வராக அவதாரமெடுத்து காத்தல் தொழிலைச் செய்யும் திருமால் பூமியைக் குடைந்து கீழே கீழே சென்றார்.
ஆனால் என்ன முயன்றும் இருவராலும் முழுமுதல் கடவுளான சிவபெருமானின் அடியையோ முடியையோ காண இயலவில்லை. அவர்கள் தங்கள் தோல்வியை உணர்ந்து சோர்ந்திருந்த வேளையில், சிவபெருமான் ஆகாயம் அளாவிய ஜோதி வடிவாக அவர்களுக்குக் காட்சி கொடுத்தார். மாலறியா நான்முகனும் காணா மலை என்று இச்சம்பவத்தைத் திருவெம்பாவையில் போற்றுகிறார் மாணிக்கவாசகர். இந்த நிகழ்வை நினைவுபடுத்தும் வகையில், ஒவ்வோர் ஆண்டும் கார்த்திகையன்று திருவண்ணாமலையில் மலைமேல் தீபம் ஏற்றி வழிபடும் வழக்கம் தோன்றியது.

திருவண்ணாமலை தீபக் காட்சியை ஒவ்வோர் ஆண்டும் சிவ பக்தர்கள் கண்டு களிக்கிறார்கள். ஒரு மாபெரும் இரும்புக் கொப்பரையில் இந்த அண்ணாமலை தீபம் ஏற்றப்படும். பதினேழாம் நூற்றாண்டில் பிரதானி வேங்கடபதி ஐயர் என்பவர் திருவண்ணாமலை தீபத்திற்கு ஒரு மிகப் பெரிய வெண்கலக் கொப்பரை செய்துகொடுத்தார். பல்லாண்டுகள் அந்தக் கொப்பரையில்தான் தீபம் ஏற்றப்பட்டு வந்தது. இருபதாம் நூற்றாண்டில் பற்பல பக்தர்கள் தந்த காணிக்கைகளால் ஒரு பெரும் இரும்புக் கொப்பரை செய்யப்பட்டது. அந்த இரும்புக் கொப்பரையில்தான் தற்போது தீபம் ஏற்றப்படுகிறது. பர்வத அரச குலத்தில் வழிவழி வருபவர்களே இந்தக் கொப்பரையை மலைமீது கொண்டு வைக்கும் உரிமை பெற்றவர்கள். மூவாயிரம் கிலோ நெய்யும் திரியாக ஆயிரம் மீட்டர் காடா துணியும் அண்ணாமலையில் தீபம் ஏற்றப் பயன்படுத்தப்படுவதாகச் சொல்கிறார்கள்.
ஒவ்வோர் ஆண்டும் அண்ணாமலை தீப தரிசனத்திற்குக் கூடும் பக்தர்கள் கூட்டம் பிரமிக்க வைப்பது. லட்சக்கணக்கான பக்தர்களின் மனம்கவர்ந்த விழாவாக அண்ணாமலை கார்த்திகை தீப விழா விளங்குகிறது.
* கார்த்திகை அன்று ஏற்றப்படும் விளக்குகளில் பற்பல வகை உண்டு. மண்ணால் ஆன அகல் விளக்குகள் தவிர வெண்கலம், வெள்ளி போன்ற உலோகங்களால் ஆன விளக்குகளும் ஏராளம் உண்டு. அன்னவிளக்கு, மயில் விளக்கு, கிளி விளக்கு எனப் பறவைகளை முகப்பில் தாங்கி ஒளிவீசும் விளக்குகள் உண்டு. காமாட்சி அம்மனின் திருமுகத்தைத் தாங்கிய காமாட்சி விளக்குகள், ஒரு பெண் கையில் விளக்கேந்தி நிற்பதைப் போன்ற தோற்றத்தில் அமைந்த பாவை விளக்குகள் என்றிப்படி விளக்குகள் பல வகை. பாவை விளக்குகளில் உண்மையாக ஒரு பெண்ணே கையில் விளக்கு வைத்திருப்பதைப் போன்ற தோற்றத்தில் மாபெரும் விளக்குகள் சில ஆலயங்களில் உள்ளன. பஞ்ச முக விளக்கு என 5 முகங்களைக் கொண்ட விளக்குகளும் உண்டு.

மெய், வாய், கண், மூக்கு, செவி என்ற ஐம்புலன்களும் இறைச் சிந்தனையால் தூண்டப்பட்டு ஆற்றல் பெற வேண்டும் என்பதே பஞ்சமுக விளக்குகளின் தத்துவம். ஆலயங்களிலோ வீட்டின் பூஜை அறையிலோ இடைவிடாமல் எரியும் விளக்குகள் வைப்பதுண்டு. குறிப்பிட்ட தினங்களில் இரவும் பகலும் இந்த விளக்கின் தீபம் ஒளிவீசிக் கொண்டே இருக்கும். அந்த தீபம் அணையாதவாறு அடுத்தடுத்து எண்ணெய் ஊற்றிக் கொண்டிருப்பார்கள்.
ஆலயங்களில் ஏற்றப்படும் இத்தகைய அணையா விளக்குகளை நந்தா விளக்கு என்பார்கள்.
பண்டிகைக் காலங்களில் ஏற்றப்படும் இத்தகைய நிகழ்வு அகண்ட தீபம் ஏற்றல் என வழங்கப்படுகிறது. விளக்குகளில் சிறப்பான ஒரு வகை குத்துவிளக்கு. கீழே ஆசனம், நடுப்பகுதியில் தண்டு, மேலே எண்ணெய் ஊற்ற அகல் என மூன்று பகுதிகளைக் கொண்டு அமைவதே குத்து விளக்கு. இந்தப் பகுதிகள் முறையே பிரம்மா, திருமால், சிவன் மூவரையும் குறிப்பதாகச் சொல்வார்கள்.

மும்மூர்த்திகளையும் ஒரே வடிவில் தாங்கியிருப்பதால் குத்துவிளக்கு சிறப்பான விளக்காக மதிக்கப்படுகிறது. மாவினால் விளக்கு போலச் செய்து அதில் நெய்யூற்றித் திரியிட்டு விளக்கேற்றுவதை மாவிளக்கு ஏற்றுதுல் எனச் சொல்கிறார்கள்.
இல்லங்களில் மங்கல நிகழ்வுகள் நடப்பதற்கு முன் குல தெய்வத்தை மாவிளக்கு ஏற்றி வழிபடும் மரபு பல குடும்பங்களில் இன்றும் இருக்கிறது. ஆலயங்களிலும் இல்லங்களிலும் தெய்வத்தின்முன் விளக்கேற்றி வழிபடுவது ஒருபுறம் இருக்க, விளக்கையே தெய்வமாகக் கருதி வழிபடும் வழக்கமும் இருக்கிறது. விளக்கையே மலர்களால் அர்ச்சனை செய்து, விளக்கிற்கே கற்பூர ஆரத்தி காட்டி வழிபடும் வழக்கமும் அன்பர்களிடையே உண்டு. சில துறவியர் துனி என்று வழங்கப்படும் நெருப்பைக் கொண்டு ஒரு சடங்கை மேற்கொள்கிறார்கள்.

திருப்பூர் கிருஷ்ணன்
விவேகானந்தர் போன்றோர் கூட இந்தச் சடங்கை நிகழ்த்தியதாக அவர் வரலாறு தெரிவிக்கிறது. நெருப்பை மூட்டி அதில் மனத்தின் தீய உணர்வுகளை பாவனையாக அர்ப்பணித்து மனத்தை முற்றிலும் தூய்மையானதாக ஆக்கிக் கொள்வதே இந்தச் சடங்கின் நிகழ்வு. கார்த்திகையில் சிறப்பாக நெருப்பை நாம் வழிபட்டாலும், எல்லாக் காலத்திலும் நம் ஆன்மிக மரபில் நாம் நெருப்பையே வழிபடுகிறோம். வேள்விச் சடங்குகள் முழுவதும் நெருப்பை ஆதாரமாகக் கொண்டவையே. ஒவ்வொரு சடங்கிலும் நாம் நிகழ்த்தும் ஹோமம் எனப்படும் புனித வேள்வி, அக்கினி இல்லாமல் நடைபெறாது. கார்த்திகைப் பண்டிகையில் இறைச் சக்தியை ஒளி வடிவில் வழிபடுவோம். நம் மனத்தின் தீய உணர்வுகளை நெருப்பில் எரித்து மனத்தைத் தூய்மையானதாக மாற்றிக் கொள்வோம். ஒளியை வழிபடு வதன் மூலம் நம் வாழ்க்கை ஒளி பொருந்தியதாக ஆகட்டும்.
தொடர்புக்கு:
thiruppurkrishnan@gmail.com.
- ஒவ்வொரு மனிதனும் தன்னளவில் தானே சிறந்து விளங்க வேண்டும்; அப்போதுதான் ஒட்டுமொத்த சமுதாயம் தலைநிமிரும்.
- பாரதியார் எழுதிய புதிய ஆத்திசூடி - ஒவ்வோர் இளைஞன், இளைஞிக்கும் அன்றாட வாழ்க்கைக்கு மிகவும் உதவுகிற எளிய வழிமுறைகளின் கையேடு.
ஒரு கேள்வியுடன் தொடங்கலாம். பாரதியாரும் அதைத்தான் விரும்புவார்.
ஒரு 'படைப்பாளி' எப்படி இருக்க வேண்டும்..? 'கவிஞன்' அல்லது 'கலைஞன்' என்றால், அவரிடம் இருக்க வேண்டிய முக்கியமான தகுதி என்ன..?
ஒன்றே ஒன்றுதான் - தன்னை 'மறந்து' பிறரை நேசிக்க வேண்டும். தனக்கு அப்பால் உள்ள உலகத்தில் வாழ வேண்டும்.
அப்போதுதான், 'இந்த உலகம்' ஏற்படுத்திய விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டு சுயமாக, பொதுவாகச் சிந்திக்க முடியும்; செயல்பட முடியும். இத்தகைய ஒருவரின் படைப்பு, மனித குலம் முழுமைக்கும் சொந்தம் ஆகிறது.
உதாரணத்துக்கு, உலகத்துக்கு தமிழ் தந்த கொடை - திருக்குறள். தன்னையும் தன் குடும்பத்தையும் தன்னை சுற்றி இருப்போரையும் தாண்டி உலகம் முழுமைக்குமாக தெய்வப்புலவர் திருவள்ளுவர் சிந்தித்தார். அதனால் விளைந்தது - உலகப் பொதுமறை.
இப்படித்தான் ஒவ்வொரு படைப்பாளியும் இருக்க வேண்டும். இதற்கான ஒரு சிறந்த, நல்ல உதாரணம் - மகாகவி பாரதியார்.
அவர் காலத்தில், இந்தியாவின் விடுதலைப் போராட்டம், தீவிரம் பெற்றது. அதை ஒட்டியே, இந்திய மக்களின் குரலாய் இந்திய சுதந்திரத்துக்குக் குரல் கொடுத்தார் பாரதி. ஆனால் உண்மையில் பாரதி என்கிற கவிஞனின் ஆழ்மனம், இந்த அரசியல் விடுதலைக்கு அப்பால், சமூகம் பற்றி சிந்தித்தது.
சமூகக் கொடுமைகளுக்கு, சமூகத் தீமைகளுக்கு, சமூகப் பாகுபாடுகளுக்கு எதிராக வலிமையாகக் குரல் கொடுத்தார் பாரதியார்.
"சாதிகள் இல்லையடி பாப்பா",
"சாதிக் கொடுமைகள் வேண்டாம் - அன்புதனில் செழித்திடும் மையம்";
"வயிற்றுக்குச் சோறிட வேண்டும் இங்கு வாழும் மனிதருக்கு எல்லாம்; பயிற்றுப் பலகல்வி தந்து இந்தப் பாரை உயர்த்திடல் வேண்டும்".
மக்களுக்கு நல்லறிவு, யாரும் தந்து வர வேண்டும் என்பது இல்லை. ஆனால் அவ்வப்போது சரியான கருத்துகளை, சரியான விகிதத்தில் அவர்களுக்குத் தந்தாக வேண்டும். இந்தப் பணியை ஒரு படைப்பாளி தான் செய்ய முடியும்.
"உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்; வீணில் உண்டு களித்து இருப்போரை நிந்தனை செய்வோம்".
உறுதியான மனம், கலக்கம் இல்லாத சிந்தனை - இருந்து விட்டால் போதும்; ஒரு மனிதனால் வாழ்க்கையில் வெற்றி கண்டு விட முடியும். இதை உணர்ந்தே மகாகவி பாரதி சொல்கிறார்:
"திண்ணிய நெஞ்சம் வேண்டும்; தெளிந்த நல்லறிவு வேண்டும்."
அநேகமாக தமிழ்நாட்டு இளைஞர்கள் அனைவருக்கும் தெரிந்ததுதான் - "தேடிச் சோறு நிதம் தின்று பல சின்னஞ்சிறு கதைகள் பேசி..' நேரத்தை வீணடித்து, சோம்பேறிகளாய் வாழும் வேடிக்கை மனிதர்களில் ஒருவராய்த் தானும் இருக்கக் கூடாது; யாரும் இருத்தல் கூடாது என்பதில் பாரதி தெளிவாக இருந்தார்.
இன்னும் எத்தனை நாளுக்குத்தான் வெறுமனே வயிற்றுப் பிழைப்புக்கே போராடுவது...?
இதை இன்னும் எத்தனை நாட்களுக்கு நாம் சகித்துக்கொண்டு இருக்கப் போகிறோம்..? எங்கே யார் உணவு கொடுத்தாலும், கும்பலாய் ஓடிச்சென்று வாங்கும் நிலைமை இன்னும் நீடிக்கலாமா..? நெஞ்சம் வெடித்துச் சீறுகிறான் பாரதி -
"சொல்லக் கொதிக்குதடா நெஞ்சம்; வெறும் சோற்றுக்கோ வந்ததிந்தப் பஞ்சம்...?"
இந்தியாவின் முன்னேறிய மாநிலம் என்று நாம் சொல்லிக் கொள்கிறோம். இது உண்மைதான். ஆனாலும், இன்னமும் இலவச உணவு என்றால் மக்கள் விழுந்தடித்து ஓடுகிறார்களே... இது சரியா..? இந்த நிலை நீங்க என்ன செய்ய வேண்டும்..?
"இரும்பைக் காய்ச்சி உருக்கிடுவீரே... இயந்திரங்கள் வகுத்திடுவீரே..." என்று வகைவகையாய்ப் பல தொழில்களை வரிசைப்படுத்தி, 'இதில் ஏதாவது செய்யுங்கள்..' 'உங்கள் வளர்ச்சி உங்கள் உழைப்பால் இருக்கட்டும்' என்று ஓர் அற்புதமான செய்தி சொல்கிறார் பாரதியார்.
ஒவ்வொரு மனிதனும் தன்னளவில் தானே சிறந்து விளங்க வேண்டும்; அப்போதுதான் ஒட்டுமொத்த சமுதாயம் தலைநிமிரும். இதுவே பாரதியின் வழிமுறையாக இருந்தது.
குறிப்பாக இளைஞர்கள்...
பாரதியின் ஒவ்வொரு வரியும் செயல் புரியத் தூண்டுகிறது; இளைஞர்களை நல்வழிப்படுத்துகிறது:
"அச்சம் தவிர்",
"குன்றென நிமிர்ந்து நில்",
"பணத்தினைப் பெருக்கு",
"பொருள் தனைப் போற்று"
"வையத் தலைமை கொள்"...
கவனித்தீர்களா...?
பொதுவாக எல்லாரும் 'பணத்தின் மீது ஆசை வைக்காதே' என்றுதானே சொல்வார்கள்..? ஆனால், மகாகவி பாரதி தான் முதன்முறையாக, "பணத்தினைப் பெருக்கு", "பொருள்தனைப் போற்று என்று முழங்கினான். நமது நாட்டுக்கு நமது மக்களுக்கு, 'பொருள்' மீது நாட்டம் வர வேண்டும்; அப்போதுதான் மென்மேலும் உழைக்க வேண்டும் என்கிற எண்ணம் பெருகும். இதன் மூலம் தான் ஒட்டுமொத்த சமுதாயம் வளர்ச்சி பெற முடியும். இதுதான் உண்மையில் ஆக்கபூர்வ சிந்தனையின் உச்சம்.
பாரதியார் எழுதிய புதிய ஆத்திசூடி - ஒவ்வோர் இளைஞன், இளைஞிக்கும் அன்றாட வாழ்க்கைக்கு மிகவும் உதவுகிற எளிய வழிமுறைகளின் கையேடு.
கவலைகளுக்கு இடம் தராதீர்கள்; சோர்வு வேண்டாம்; அச்சம் - கூடவே கூடாது; துன்பம் - நம்மை முடக்கி விடக்கூடாது.
வாழ்க்கையின் ஒவ்வொரு நாளையும் ஒவ்வொரு மணியையும் ஒவ்வொரு நொடியையும் தன்னம்பிக்கையுடன் எதிர்கொள்ள, ஒவ்வொரு மனிதனும் தலை நிமிர்ந்து நன்னெறியில் வாழ மகாகவி பாரதி - ஓர் உந்துசக்தியாகத் திகழ்கிறான்.

பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி, எழுத்தாளர்-காந்திய சிந்தனையாளர்
உண்மைதான். நாட்டு விடுதலை, நாட்டுப்பற்று, தமிழ் மீது தீராக் காதல், தமிழ் உணர்வு... எல்லாம் பாரதியின் பாடல்களில் இருக்கின்றன. மறுக்கவில்லை. ஆனால் இவற்றை எல்லாம் மிஞ்சி, பாரதியின் குரல் எங்கே ஓங்கி ஒலிக்கிறது...?
ஒவ்வொரு தனி மனிதனும் நிமிர்ந்து நிற்க வேண்டும்; சிறந்து வாழ வேண்டும்.
இதுதான் மகாகவி பாரதியின் ஆகச் சிறந்த செய்தி.
மனதில் நிறுத்துவோம் - நாம் ஒவ்வொரு வரும் இந்த சமுதாயத்தின், இந்த உலகத்தின் பிரிக்கப்பட முடியாத ஓர் அங்கம்.
இந்த சமுதாயத்தை நம்பி நான் இருக்கிறேன் என்பது எந்த அளவுக்குச் சரியோ, இந்தச் சமுதாயம் என்னை நம்பி இருக்கிறது என்பதும் அதே அளவுக்குச் சரியே.
தன்னலம் மறந்து பிறர் நலனுக்காக உழைக்கும் மனத் தெளிவு பெறுவதே - மகாகவி பாரதியின் பாடல் வரிகளுக்கு நாம் செலுத்தும் சரியான மரியாதையாக இருக்கும்.
நினைவில் கொள்வோம் -
நமது செயல் திறத்தாலே இந்த வையகம் உயர்ந்திட வேண்டும்!
- 1948-ல் பன்னாட்டு மனித உரிமை சாசனம் வரையப்பட்டது.
- மனிதன் தான் உலகின் சிறந்த ஆளுமை.
உணவின் அருமை பசியில் தெரியும். ஆமா, நிசந்தான்.
அப்படித்தான்... 'மனித உரிமைகளின் மகத்துவம், அது மறுக்கப்படும் போது தான் தெரியும்.
உலகின் பல நாடுகளில் இன்னமும் பல கோடி மக்கள் அடிப்படை உரிமைகள் ஏதும் இல்லாமல், அச்சத்துடன் கலவரத்துடன் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்.
இந்தியாவில் நாம் அனுபவிக்கும் சுதந்திரம், பல முன்னேறிய நாடுகளில் வாழும் மக்களுக்குக் கூடக் கிடைக்கவில்லை.
இன்று டிசம்பர் 10 - உலக மனித உரிமைகள் தினம்.
'யாரா இருந்தா எனக்கு என்ன.. இது என்னோட உரிமை... இதை யாரும் எனக்குத் தர வேண்டியது இல்லை... யாரும் என்கிட்ட இருந்து எடுக்கவும் முடியாது.. அப்படின்னு அடிக்கவே வந்தாலும் அசராம நிற்கிற நிறைய பேரை பார்த்திருப்போம்...
அவர்கள் தமது உரிமையை, சுதந்திரத்தை நல்லாத் தெரிஞ்சு வச்சுருக்குறது தான் அதுக்குக் காரணம்...
மனித உரிமைகள் தினம், உலகின் மிக அற்புதமான உலகளாவிய உறுதிமொழிகளில் ஒன்றான மனித உரிமைகளின் உலகளாவிய பிரகடனத்தின் (UDHR) ஆண்டு நிறைவைக் கொண்டாடுகிறது.
இனம், நிறம், மதம், பாலினம், மொழி, அரசியல் அல்லது பிற கருத்து, தேசிய அல்லது சமூக தோற்றம், சொத்து, பிறப்பு அல்லது பிற அந்தஸ்து ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல்- இந்த முக்கிய ஆவணம் ஒரு மனிதனாக அனைவருக்கும் உள்ள, பிரிக்க முடியாத உரிமைகளை உள்ளடக்கியது.
விலங்கிலிருந்து மனிதனைப் பிரிப்பது ஆறாவது அறிவு மட்டுமல்ல; "அடிப்படை உரிமைகளும்" தான். யாருக்கு எப்படியோ, ஏழைகளுக்கான உரிமை இன்னும் சட்டப் புத்தகத்தில் மட்டுமேஇருக்கிறது! ஏழைகளின் வீட்டு வாசலுக்கு வரவே இல்லை என்பதே பலரின் ஏக்கமும், வருத்தமும்.
மனிதனாகப் பிறந்ததாலேயே கிடைக்கப் பெறும் நுட்பமான உரிமைகள் தான் மனித உரிமை.
இதை யாரும் யாருக்கும் தர வேண்டியது இல்லை;யாரும் யாரிடமும் கெஞ்சி மண்டியிட்டுப் பெறுவதும் இல்லை.
இது எல்லா மனிதருக்குமான நிபந்தனையற்ற, மாற்ற முடியாத மறுக்க முடியாத உரிமை.
மனித உரிமைகள் - நாட்டுக்கு நாடு வேறுபடுவது கிடையாது. ஓட்டுக்கு விற்கப்படுவதும் கிடையாது.

ஆர்.கலைச்செல்வி
இயற்கை உரிமைகள் (natural rights)
பிறப்புரிமைகள் - (Birth rights)
உள்ளார்ந்த உரிமைகள் (inherent rights)
அடிப்படை உரிமைகள் - (fundemental rights) ஆதார உரிமைகள் (basic rights)
என்று, பல பெயர்களில் வழங்கப்படும் மனித உரிமைகள், ஒவ்வொரு மனிதனின் தனித்தன்மைக்கான முகப்புரை. அரசியல் சாசனத்தின் காப்புரை.
மனிதனை மனிதன் விற்கவும் தடை...எந்த மனிதனையும் வதைக்கவும் சித்தரவதை செய்யவும் தடை...
சுதந்திரம் சமத்துவம், சகோதரத்துவம்..என்பதே இதன் தாரக மந்திரம்.
எந்த நபரையும் நியாயமற்ற முறையில் கைது செய்யவோ, நாடு கடத்தவோ, காவலில் வைக்கவோ முடியாது.
வேலை செய்யவும், கல்வி பெறவும் உரிமை. இன்னும் பலவாழ்வியல் உரிமைகளும் இதில் அடக்கம்.
அது என்ன வாழ்வியல் உரிமை?!
வாழணும்அதுவும் எல்லாரும் சமமாக வாழணும். அது மட்டும் போதுமா?சுதந்திரமா வாழணும்.
கருத்து சுதந்திரம்,சமயச் சுதந்திரம்..
இந்த உரிமை சாசன திறவுக் கோலால், மனிதன் தன்மானத் தோடும் சுதந்திரத்தோடும் வாழ முடியும் என்ற நிலை வந்தது.
இது ஒரு நாடு கொடுத்தது அல்ல.. இது பன்னாட்டு அமைப்பின் உரிமை சாசனம்.
யாரும் யாரிடம் இருந்தும் பறிக்க முடியாது; பிரிக்க முடியாது.
ஒன்றோடொன்று தொடர்புடைய உரிமைகள் இது.
அரசாங்கத்திடம் மனு போட்டு கேட்டுப் பெறுகிற விஷயம் இல்லை.
காற்றைப் போல, வெளிச்சத்தைப் போல, மனிதக் குடும்பத்தின் அங்கமாக இருக்கும் எந்த மனிதனுக்கும் தானாகக் கிடைக்க வேண்டிய உரிமைகள் இவை.
இத்தனை உத்திரவாதம் உள்ள மனித உரிமையை கொடுப்பதற்கு யாருக்கும் எந்த அதிகாரமும் இல்லை.
ஆனால் இந்த மனித உரிமைகளைக் காப்பதற்காகவே..சட்டங்களும் ஆணையங்களும் இருக்கின்றன.
1948-ல் பன்னாட்டு மனித உரிமை சாசனம் வரையப்பட்டது. எல்லா நாடுகளாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட இந்த நாளை தான் (டிசம்பர் 10) மனித உரிமை தினமாக அனுசரித்தும் வருகிறோம்.
இந்தியத் திருநாட்டில் 1993-ம் ஆண்டு மனித உரிமைகள் பாதுகாப்புச் சட்டம் உருவாக்கப்பட்டது. அதன் வழியே, தேசிய மனித உரிமைகள் ஆணையம், மாநில மனித உரிமைகள் ஆணையம் அமைக்கப்பட்டு மனித உரிமைகள் பாதுகாக்கப் படுகின்றன.
உரிமை மீறல், தட்டிக் கேட்கப்படுகிறது. எவரும் எந்நேரமும் மனித உரிமை சாசனத்திடம் எட்ட, ஏற்படுத்தப்பட்ட ஏணி இந்த மனித உரிமைகள் ஆணையம்.
அரசு அதிகாரிகள், காவல் துறையினரால் மனித உரிமை மீறல்கள் ஏற்பட்டால் மனித உரிமை ஆணையத்தில் புகார் அளித்து பொதுமக்கள் தங்களின் உரிமைகளை மீட்டெடுக்கலாம். அல்லது செய்தித்தாளில் அல்லது ஊடகத்தில் வெளியாகும் மனித உரிமை மீறல்கள் குறித்த செய்திகளை கவனத்தில் எடுத்து மனித உரிமைகள் ஆணையம் தானாக முன்வந்தும் உரிமைகளை மீட்டுத் தரலாம்.
பொதுமக்கள் புகார் மனு கொடுத்தால்... விசாரணை நடத்தித் தீர்ப்பு வழங்கப்படும். மேலும் இழப்பீடு மற்றும் துறை ரீதியான நடவடிக்கையும் எடுக்கப்படும்.
எதெல்லாம் மனித உரிமை மீறல்?
மருத்துவமனையில் சரியான சிகிச்சை கொடுக்காமல் இருப்பது...
சிகிச்சை பெற வருபவரைத் திட்டுவது...
போன் பேசிக் கொண்டே சிகிச்சை அளிக்க முற்படுவது... மனித உரிமை மீறல்தான்.
காவல் துறையைப் பொருத்தவரை... புகார் அளிக்கவோ அல்லது விசாரணைக்காகவோ வருபவர்களிடம் சட்டம் குறிப்பிடும் எல்லையைத் தாண்டி, முறைகேடாக நடத்துவது...
பேருந்தில் இருந்து பாதி வழியில் இறக்கி விடுவது... பயணிகளைத் தகாத வார்த்தையால் திட்டுவது...
காவல் நிலையத்தில் புகார் மனுவை வாங்காமல் பொதுமக்களை அலைக்கழிப்பது...
ரேஷன் கடையில் பொருட்களைத் தர மறுப்பது...
சிறைகளில் கைதிகளை மனிதாபிமானமற்ற முறையில் நடத்துவது...
இலவச சட்ட உதவிகளை வழங்க மறுப்பதும்...
அரசு அலுவலகங்களாக இருக்கட்டும்...ஒரு குறிப்பிட்ட வேலைக்காக அல்லது சான்றிதழை பெறுவதற்காக ஒரு நபரை திரும்ப திரும்ப வரச் சொல்லுவதும்...
குறிப்பாக மாற்றுத் திறனாளிகளையும் வயதானவர்களையும் அதிகமான நேரம் காத்திருக்க செய்வதும் அலைக்கழிப்பதும் மனித உரிமை மீறலே!!
குறைவான ஊதியத்துக்கு அதிகமான வேலை வாங்குவதும் ...மனிதக் கழிவுகளை மனிதனே அகற்றும் கொடுமையும் மனித உரிமை மீறலே!
2024 மனித உரிமைகள் தினத்தின் கருப்பொருள் "எங்கள் உரிமைகள், எங்கள் எதிர்காலம், இப்போ இருந்தே...'' என்று தொலைந்து போன புதைந்து போன உரிமைகளை மீண்டும் உயிரோட்டம் கொடுத்து கையில் எடுப்பதாக இந்த கருத்து அமைந்துள்ளதால்... ஏதோ ஒரு ஆறுதல் அனைவரின் மனதிலும் பற்றுகிறது.
மனித உரிமை ஆணையம் தலைநகரில் இருந்தாலும் அதன் நீதிபதிகள் மாநிலம் முழுவதும் சென்று குறைகளை நிவர்த்தி செய்து வருவதும் குறிப்பிடத்தக்கது.!
எப்படி புகார் அளிப்பது என்றால்...
இன்றைய சூழலில் ஒரு சாமானியனுக்கும் தெரியும், நேரடியாகவோ, பதிவுத் தபாலிலோ, அல்லது ஆன்லைன்' மூலமாகவோ கூட புகார் மனுவை ஆணையத்திடம் நேரடியாகதெரிவிக்க முடியும்.
வழக்கறிஞரே தேவையில்லை: ஆதாரங்களின் அடிப்படையில் புகார் மனுவை கொடுத்து தாமாகவே அந்த வழக்கை நேரடியாக நடத்திக் கொள்ளலாம்...
ஏன் இவ்வளவு வீரியம்?
மனிதன் தான் உலகின் சிறந்த ஆளுமை.
தனி ஒரு மனிதனுக்கு உரிமைகள் இல்லை என்றால்... இந்த ஜகமே அழிந்து விடும் அல்லவா...
ஆங்கிலேயர்களின் காலத்தில் உரிமைகள் இருந்தது. சுதந்திரம் இல்லை...இன்றைக்கு சுதந்திரம் இருக்கிறது. உரிமைகள் தான் இல்லை... என்பதும் பலரின் வருத்தமும் ஏக்கமுமாக இருக்கிறது என்பதும் உண்மைதான்...
அதற்குக் காரணம்... மனிதனுக்கு ஏற்ற உணவுகளைப் பற்றி சொன்ன அளவுக்கு எந்தத் தொலைக்காட்சியும் மனித உரிமைகளைப் பற்றி சொல்லவில்லையே...!!!
ஒரு நாய்க்கு அடிபட்டால் அதை பார்க்கும் நாய் இன்னொரு நாயை உதவிக்கு அழைக்கிறது...
ஒரு காக்கைக்கு சோறு வைத்தால் அந்த காகம் இன்னொரு காகத்தை பகிர்வுக்கு அழைக்கிறது...
ஆனால் ஒரு மனிதனுக்கு அடிபட்டால், ஒரு மனிதனின் உரிமைகள் மீறப்பட்டால், இன்னொரு மனிதர் facebook-ல் வாட்ஸ் அப்பில் பரப்புகிற காலம் இது...
காமக் கொடூரர்களும் பண முதலைகளும்மனித உரிமை என்ற போர்வைக்குள் புகுந்து கொள்ளுவதும் பெரும் கவலையே...
அகிலம் தழுவிய சாசனம் இருக்கிற போதிலும்... நாடு தழுவிய மனித உரிமை சட்டங்கள் இருக்கின்ற பொழுதிலும்..மாநிலம் தழுவிய ஆணையங்கள் செயல்படுகிற போதிலும்...
மனித உரிமைகளைக் காப்பதும் மீட்டெடுப்பதும் வளர்கிறதா அல்லது நசுக்கப்படுகிறதா... என்பது முற்போக்காளர்களின் வருத்தமே!
உலகமே எதிர்த்தாலும் உரிமைக்காக போராடுவோம்...!
உயிரைத் தந்தேனும், உரிமையைப் பெறுவோம்...!!!
- கால வெள்ளத்தில் சேயோன் என்ற முருகனின் பெயர் சேந்தனாக மாறி திருச்செந்தூருக்கு சேந்திபுரம் என்ற பெயர் உருவானது.
- முருகப்பெருமானின் அருளைப் பெற உதவும் முதன்மையான ஆறு தலங்களாகக் கருதப்பட்டன.
சங்க காலத்துக்கும் முன்பிருந்தே திருச்செந்தூர் பல்வேறு பெயர்களில் அழைக்கப்பட்டது. பல நூற்றாண்டுகள் அலைவாய் என்ற பெயரில் அழைத்தனர். பிறகு சிந்துபுரம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. திருச்செந்தூர் மானியம் என்ற தல வரலாற்று சுவடியில் திருச்செந்தூரை சிந்து புரம் என்றே குறிப்பிட்டுள்ளனர்.
முருகன் சூரபத்மனை சம்காரம் செய்வதற்கு புறப்பட்டு வந்தபோது திருச்செந்தூர் கடலோரத்தில் படை வீடு அமைத்து தங்கினார். அந்த படை வீட்டை அவரது தளபதியான வீரபாகு அமைத்தார். இதனால் அந்த பகுதிக்கு வீரபாகு புரம் என்ற பெயரும் சில ஆண்டுகளாக பயன்படுத்தப்பட்டது.
கால வெள்ளத்தில் சேயோன் என்ற முருகனின் பெயர் சேந்தனாக மாறி திருச்செந்தூருக்கு சேந்திபுரம் என்ற பெயர் உருவானது. சூரன் சம்காரம் செய்யப்பட்ட பிறகு முருகனது வெற்றியை குறிப்பிடும் வகையில் ஜெயந்திபுரம் என்ற பெயர் ஏற்பட்டது.
அதன் பிறகு முருகனின் சிவந்திமேனி தோற்றத்தைக் கொண்டு செந்திபுரம் என்று பெயர் சூட்டப்பட்டது. ஆன்மாக்களின் உறைவிடம் என்பதையும் இந்த பெயர் குறிப்பதாக சொல்கிறார்கள். இதுதான் பிற்காலத்தில் செந்தில்ஊர் என்று மாறியது.
நாளடைவில் அது செந்தூர் என்று பேச்சு வழக்கில் நடைமுறைக்கு வந்தது. அதைத் தொடர்ந்து வந்த நூற்றாண்டுகளில் இறைவன் வீற்றிருக்கும் ஊர்களுக்கு முன்பு திரு என்ற அடைமொழி சேர்க்கப்பட்டதால் திருச்செந்தூர் என்று ஊரின் பெயர் மாறியது.
முருகன் அவதார நோக்கத்தை நிறைவேற்றிய இந்த ஊரை சங்க கால மக்கள் போற்றினார்கள். புலவர்கள் தங்களது பாடல்களில் இந்த தலத்தை பதிவு செய்தனர். இதன் மூலமாகத்தான் திருச்செந்தூர் அறுபடை வீடுகளில் ஒன்றாக மாறியது.
சங்க காலத்தில் வறுமையில் வாழ்பவர்கள் வள்ளல்களின் வீடுகளை தேடிச்சென்று உதவி பெறுவது வழக்கத்தில் இருந்தது.
ஏழ்மையில் இருப்பவர்களை வள்ளல்களின் வீடுகளுக்கு செல்லும் பாதையை சுட்டிக்காட்டி அவர்களை ஆற்றுப்படுத்தும் பழக்கம் சங்க கால மக்களிடம் இருந்தது.
ஆற்றுப்படுத்துதல் என்பது ஆறுதல் சொல்வதாகவும், வழிகாட்டுவதாகவும் அமைந்து இருந்தது. இதன் அடிப்படையில் சங்க காலத்தில் எழுதப்பட்ட நூல்களுக்கு "ஆற்றுப்படை" என்றே பெயர் சூட்டப்பட்டது.
கடை தமிழ் சங்கத்துக்கு தலைவராக வீற்றிருந்த நக்கீரர் இதை அப்படியே பின்பற்றினார். முருகப்பெருமானின் அருள் பெற வேண்டுமானால் தமிழகத்தில் முருகப்பெருமான் எந்தெந்த ஊர்களில் சிறப்பாக வீற்றிருந்து அருள்பாலிக்கிறார் என்பதை அவர் பக்தர்களுக்கும், மக்களுக்கும் பட்டியலிட்டு வழிகாட்டினார்.
அதை அவர் பாடலாகவே எழுதினார். முருகப்பெருமானின் பக்தர்களுக்கு அது ஆற்றுப்படுத்தும் விதமாக அமைந்திருந்ததால் அந்த நூலுக்கு "திருமுருகாற்றுப்படை" என்ற பெயர் ஏற்பட்டது. அந்த நூலில் அவர் முருகனின் முக்கியமான தலங்களை வரிசைப்படுத்தி இருந்தார்.
அதன் அடிப்படையில் திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்ச்சோலை ஆகிய ஆறு தலங்கள் போற்றப்பட்டன. இந்த தலங்களில் நிகழ்ந்த முருகப்பெருமானின் திருவிளையாடல்கள் மக்களிடையே பிரபலமானது.
இந்த ஆறு ஆலயங்களும் ஆற்றுப்படை வீடுகள் என்று புகழ்பெற்றன. அதாவது முருகப்பெருமானின் அருளைப் பெற உதவும் முதன்மையான ஆறு தலங்களாகக் கருதப்பட்டன. நாளடைவில் அவை தமிழக மக்களின் பண்பாட்டு கோட்பாடுகளின் அடிப்படையில் 'அறுபடை வீடு' என்று மாறி போனது. நக்கீரர் திருமுருகாற்றுப்படையில் எந்த இடத்திலும் அறுபடை வீடு என்று முருகனின் தலங்களை வரையறுத்து குறிப்பிடவில்லை.
திருமுருகாற்றுப்படையில் அவர் முருகனின் சிறப்புகளையும், முருகனின் தோற்றத்தையும், முருகனின் திருவிளையாடல்களையும் வகைப்படுத்தி உள்ளார். திருமுருகாற்றுப் படையில் ஒன்று முதல் 77 வரை உள்ள வரிகளில் திருப்பரங்குன்றத்தின் அழகையும் முருகனின் தோற்றத்தையும் சொல்லி உள்ளார்.
78 முதல் 125 வரையுள்ள வரிகளில் திருச்செந்தூரில் முருகன் போர் கடவுளாக இருந்ததை வாழ்த்தி உள்ளார். அதோடு சண்முகபெருமானின் ஆறுமுகங்கள் மற்றும் 12 கரங்கள் பற்றி புகழ்ந்துள்ளார்.
125 முதல் 176 வரையுள்ள வரிகளில் பழனியில் மும்மூர்த்திகளும் வந்து முருகனை வேண்டுவதாக தெரிவித்துள்ளார். 177 முதல் 189-வரை உள்ள வரிகளில் சுவாமி மலையில் காணப்பட்ட வழிபாடுகள் பற்றி சுட்டிக்காட்டி உள்ளார்.
190 முதல் 217 வரையுள்ள வரிகளில் திருத்தணியில் முருகனின் குணம் பற்றி வரையறுத்துள்ளார். முருகன் ஆடிய ஆட்டங்கள் பற்றியும் அந்த வரிகளில் கூறப்பட்டுள்ளது.
218 முதல் 317 வரையுள்ள பாடல்களில் முருகனுக்காக நடத்தப்படும் சடங்குகள், அருள்கள் கூறப்பட்டுள்ளன. அதோடு பழமுதிர்சோலையின் சிறப்புகளையும் நக்கீரர் அந்த பாடல் வரிகளில் அழகாக விளக்கி கூறியுள்ளார்.
இவ்வாறு முருகன் வழிபாட்டுடன் அந்த காலத்தில் சிறப்பு பெற்ற இடங்களின் தன்மைகள் அங்கு நடக்கும் வழிபாடுகள் நக்கீரரால் தெள்ளத் தெளிவாக தெரிவிக்கப்பட்டன. இப்படி அவர் வரிசைப்படுத்தியதன் அடிப்படையில்தான் அறுபடை வீடு என்பது உருவானது.
திருச்செந்தூர் தலத்தில்தான் சூரபத்மன் சம்காரம் செய்யப்பட்டதால் அதை நக்கீரர் மிகச்சிறப்பாக போற்றி புகழ்ந்துள்ளார். எனவே திருச்செந்தூர் முருகப்பெருமான் ஆலயம் ஆற்றுப்படை வீடுகளில் முதன்மை பெற்று திகழ்ந்தது.
நக்கீரரை குருவாக ஏற்றுக்கொண்டு முருகப்பெருமான் ஆலயங்களுக்கு சென்று சேவை புரிந்த அருணகிரிநாதர் முருகர் மீது 1,311 திருப்புகழ் பாடல்களை பாடினார். அவரது பாடல்களை ஆய்வு செய்தால் அவரும் அறுபடை வீடு என்று எந்த இடத்திலும் குறிப்பிடவில்லை என்று தெரிய வரும்.
6-ம் நூற்றாண்டு முதல் 9-ம் நூற்றாண்டு வரை வாழ்ந்த நாயன்மார்களும், ஆழ்வார்களும் தாங்கள் பாடிய பாடல்களில் முருகனை குறிப்பிட்டு இருக்கிறார்கள். ஆனால் எந்தஒரு இடத்திலும் அவர்களும் அறுபடை வீடு என்பதை குறிப்பிடவில்லை.
இதன் மூலம் நக்கீரர் உருவாக்கிய திருமுருகாற்றுப்படை நூலின் அடிப்படையில் கூறப்பட்ட ஆற்றுபடை வீடுகள் என்பதுதான் அறுபடை வீடுகளாக வரையறுக்கப்பட்டது என்பது உறுதியாகிறது. திருச்செந்தூர் தலம் முருகப்பெருமான் படை வீடு அமைத்த ஒரே தலம் என்பதால் அது அறுபடை வீடுகளில் மிகுந்த சிறப்பை பெற்று தாமாகவே முதன்மை இடத்துக்கு வந்தது.
முருகப்பெருமான் வீற்றிருக்கும் இடங்கள் அறுபடை வீடுகளாக புகழ் பெற்ற பிறகுதான் தமிழகத்தில் சிவாலயங்களும், வைணவ ஆலயங்களும் பாடல் பெற்ற தலங்கள், 198 திவ்ய தேசங்கள், நவக்கிரக தலங்கள் என்றெல்லாம் பல்வேறு விதமாக வகைப்படுத்தப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது பரிகார தலங்கள், பிரார்த்தனை தலங்கள் என்றெல்லாம் ஆலயங்கள் வகைப்படுத்தப்படுகின்றன. இதற்கு முன்னோடியாக அமைந்தது முருகனின் புகழ் பாடும் நக்கீரர் எழுதிய திருமுருகாற்றுப்படை நூல் ஆகும்.
திருமுருகாற்றுப்படையை அடிப்படையாக கொண்டு அதன் பிறகு வந்த சான்றோர்கள் அறுபடை வீடுகளின் சிறப்புகளை மேலும் மேம்படுத்தினார்கள். குறிப்பாக அறுபடை வீடுகளுக்கு சென்றால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பது பற்றியெல்லாம் பல்வேறு சான்றுகளுடன் ஆதாரப்பூர்வமாக தகவல்களை வெளியிட்டனர்.
இதன் மூலம் ஒவ்வொரு படை வீட்டின் வழிபாட்டிலும் ஒவ்வொரு பலனை பெறலாம் என்ற கோட்பாடுகள் உருவானது. முதல் படை வீடான திருப்பரங்குன்றத்தில் வழிபட்டால் திருமண தோஷங்கள் நீங்கும் என்பது ஐதீகம்.
இரண்டாம் படை வீடான திருச்செந்தூரில் வழிபட்டால் எல்லா தோஷங்களும் விலகி நினைத்தது நடக்கும். தொடங்கும் செயல்களில் வெற்றி உண்டாகும். முருகன் குருவாக இருந்து வழிகாட்டுவார் என்பது ஐதீகம்.
மூன்றாவது படை வீடான பழனியில் வழிபட்டால் செல்வம் சேரும், நோய்கள் விலகும். நான்காம் படை வீடான சுவாமிமலையில் வழிபட்டால் கல்வியும், ஞானமும் மேம்படும். ஐந்தாம் படை வீடான திருத்தணியில் வழிபட்டால் திருமணம், குழந்தைபேறு கிடைக்கும்.
ஆறாம் படை வீடான பழமுதிர்சோலையில் வழிபட்டால் அறிவாற்றல் உண்டாகும். இப்படி அறுபடை வீடுகளின் சிறப்புகள் வரையறுக்கப்பட்டுள்ளன. இதில் பெரும்பாலான மக்களின் சிந்தனையை கவருவதாக திருச்செந்தூர் படை வீடு அமைந்து இருக்கிறது.
அதற்கு முக்கிய காரணம் திருச்செந்தூர் தலத்தில் காலடி எடுத்து வைத்தால் தோஷங்கள் விலகும், வெற்றிகள் தேடி வரும் என்ற அபாரமான நம்பிக்கைதான். அதனால்தான் திருச்செந்தூர் நோக்கி உலகம் முழுவதும் உள்ள பக்தர்கள் அலை அலையாக வந்து கொண்டிருக்கிறார்கள்.
இந்த தலம் என்று உருவானதோ அன்று முதல் இன்று வரை பக்தர்கள் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே இருக்கிறது. திருச்செந்தூருக்கு வரும் ஒவ்வொரு பக்தருக்கும் முருகப்பெருமான் அற்புதங்கள் நிகழ்த்துகிறார்.
ஆதிகாலத்திலும் திருச்செந்தூர் முருகன் நிகழ்த்திய அற்புதங்கள் ஏராளம். அந்த அற்புதங்களை அடுத்த வாரம் செவ்வாய்க்கிழமை பார்க்கலாம்.
- உங்கள் உடலே உங்கள் கட்டுப்பாட்டில் இல்லையே!
- சிறிது காலம் பித்ருக்கள் உலகில் தங்கி இளைப்பாறி மனநிறைவு பெற்ற அந்த ஜீவன் மீண்டும் தன் பயணத்தினை தொடர்கின்றது.
வாழ்வின் யதார்த்தம்! பற்றி காஞ்சி மகா பெரியவர் இப்படி கூறுகிறார்....
* நிம்மதியாக இருங்கள் எதுவும் உங்கள் கையில் இல்லை.
* உலகில் உள்ள அனைவருக்கும் ஏதோ ஒரு கடமை இருக்கும். ஏதோ ஒரு பொறுப்பும் இருக்கும்.
* அது அவர்கள் அறியாமையைத் தவிர வேறில்லை.
* எது உங்கள் கட்டுப்பாட்டில் உள்ளது என்று சற்றே சிந்தியுங்கள்.
* உங்கள் உடலே உங்கள் கட்டுப்பாட்டில் இல்லையே!
* உங்கள் உடலே உங்கள் பேச்சை கேட்காத போது உலகில் வேறு யார் கேட்பார்?
உடலை விடுங்கள்...
உங்கள் தலை முடி கூட உங்களது கட்டுப்பாட்டில் இல்லை.
* முடி உதிர்வதும், நரைப்பதும், வழுக்கை விழுவதும் யாருக்குத் தான் பிடிக்கும்?
* முடி நரைப்பதையோ, உதிர்வதையோ உங்களால் தடுக்க முடியவில்லையே!
* உங்கள் உடலுக்குள் என்ன நடக்கின்றது என்று உங்களுக்குத் தெரியுமா? தெரியாது.
* உண்ட உணவை நீங்கள் ஜீரணம் செய்கின்றீர்களா? அதுவாகவே ஜீரணமாகின்றது.
* இருதயத்தையும், குடல்களையும், கணையத்தையும், சிறுநீரகத்தையும் நீங்களா இயக்குகின்றீர்கள்? இல்லையே?
* இப்படி உங்களுக்குச் சொந்தமான உங்கள் உடம்பே உங்கள் கட்டுப்பாட்டிலும், பொறுப்பிலும் இல்லாதபோது
* உலகில் பலவற்றையும் உங்கள் பொறுப்பு என்று நீங்கள் சிந்திப்பது அறியாமை.
* மழை உங்களைக் கேட்டா வானில் இருந்து பொழிகிறது?
* மரம் உங்களைக் கேட்டா முளைக்கின்றது?
* உலகம் உங்களுடைய பொறுப்பிலா சுழலுகிறது?
* நட்சத்திரங்கள் உங்களது பொறுப்பிலா ஜொலிக்கின்றது.
* நீங்கள்தான் வானில் உள்ள கோள்களை தாங்கிப் பிடிப்பவரோ?
* உங்கள் பொறுப்புணர்ச்சியும், கடமை உணர்ச்சியும் எவ்வளவு அறியாமை. எதுவுமே உங்கள் பொறுப்பில் இல்லை.
* அனைத்தும் அவன் கட்டுப்பாட்டில் இருக்கின்றது.
* எதுவும் உங்கள் கையில் இல்லை. அமைதியாய் இருங்கள்.
* நான் என எண்ணி ஒரு போதும் பயன் இல்லை.
படித்தேன் பகிர நினைத்தேன் நம்ப வேண்டும் என்றோ நம்ப வேண்டாம் என்றோ நிர்பந்தங்கள் இல்லை.
மறு பிறவிகள் எடுத்தாலும் அல்லது முக்தியை அடைந்தாலும் அல்லது பித்ரு லோகத்திலேயே இருக்கும் காலத்திலும் நம் பித்ரு பூஜைகள் எவ்வாறு நம் முன்னோர்களை சென்று அடைகின்றன. சரீரத்தை விட்டு விட்ட ஜீவன் மரணம் அடைந்த தினத்தில் இருந்து 9 நாட்கள் சரீரம் இல்லாமல் இப்பூஉலகத்திலேயே வாசம் செய்கின்றது. இந்த ஒன்பது நாட்களும் அந்த ஜீவனின் பசி, தாகம் ஆகியவற்றினைப் போக்குவதற்காகத்தான் விசேஷ பூஜைகளை செய்கின்றோம்.
பத்தாவது நாளன்று அந்த ஆத்மாவிற்கு கட்டை விரல் போன்ற அளவும், அமைப்பும் கொண்ட சூட்சும சரீரம் ஏற்பட்டு விடுகின்றது. அந்த சூட்சும சரீரம் மூலம் அந்த ஆத்மாவின் மேல் உலகப் பயணம் தொடங்குகின்றது. அன்று தான் அந்த ஜீவனுக்கு நாம் விடை கொடுத்து அனுப்புகின்றோம். பிளவு சந்திரன், செவ்வாய் போன்ற பல கிரகங்களைக் கடந்து ஆறாவது மாதம் அந்த ஜீவன் அழகான நீரூற்றுகளும், சோலைகளும், அட்சய வடம் என்ற விருட்சங்களும், குன்றுகளும் நிறைந்த பித்ருக்களின் உலகை அடைகின்றது.
ஆறு மாத காலம் இடைவிடாது இருந்த பயணத்தால் ஏற்பட்ட களைப்பு நீங்க அந்த ஜீவன் தனது பிள்ளைகளின் திதி மூலம் அளிக்கும் உணவினை உண்டு அதனால் மனநிறைவு பெற்று தங்களுக்கு பக்தியுடன் உணவளித்த தற்காக தனது குழந்தைகளை ஆசிர்வதிக்கின்றது.
சிறிது காலம் பித்ருக்கள் உலகில் தங்கி இளைப்பாறி மனநிறைவு பெற்ற அந்த ஜீவன் மீண்டும் தன் பயணத்தினை தொடர்கின்றது. தான் உலகைத் துறந்து ஓராண்டு முடிவில் அதே திதியன்று தர்ம தேவதையின் வைவஸ்வதம் என்ற தலை நகரத்தை அடைகிறது.
மிகப்பெரிய புண்ணிய நகரமாகிய இதன் அழகையும், ஒளியையும், புனிதத்தினையும் புண்ணிய நூல்கள் விவரிக்கின்றன.
பூவுலகில் வாழ்ந்த பொழுது தெய்வத்திடம் பக்தி, சத்தியத்தை தரிசிப்பது, புனர் நிர்மாணம் செய்வது புண்ணிய காரியங்களை செய்துள்ள உத்தம ஜீசர்களை தர்மராஜன் தங்க மயமான தன் சிம்மாசனத்தில் இருந்து இறங்கி வந்து கைபிடித்து அன்புடன் வரவேற்று சம ஆசனம் அளித்து மரியாதை செய்து அவரவரது புண்ணிய காரியங்களுக்கு ஏற்ப பிற புண்ணிய உலகங்களுக்கு அனுப்பி வைக்கிறார்.
அந்த புண்ணிய உலகங்களில் தாங்கள் செய்துள்ள நற்செயல்களுக்கு ஏற்ற காலம் வரை சுகங்களை அனுபவித்து அந்த உத்தம ஜீவன்கள் மீண்டும் பூமிக்கு திரும்பி முற்பிறவியைவிட உயர்ந்த பிறவியை எடுக்கிறார்கள்.
இதற்கு மாறாக உலகில் வாழ்ந்த போது மமதையினால் பாவம் செய்த வர்கள் புண்ணிய உலகிற்கு செல்லாமல் வேறு சில உலகங்களுக்கு சென்று விட்டு மீண்டும் உலகில் மனிதர்களாகவோ அல்லது பிராணிகளாகவோ அல்லது புழு பூச்சிகளாகவோ பிறவி எடுக்கிறார்கள்.
இவ்விதம் பிறவி, மரணம், மறுபிறவி என்ற பயணத்தின்போது அவரவர்களுடைய பிள்ளைகள், பெண்கள், பேரன்கள், பேத்திகள் செய்யும் பித்ரு பூஜையின் பலன்கள் சூரிய பகவானால் நம்மிடம் இருந்து ஏற்றுக் கொள்ளப்பட்டு இதற்காக என்றே படைக்கப்பட்டுள்ள பித்ரு தேவதைகளின் திருக்கரங்களில் ஒப்படைக்கப்படுகின்றன.
அவ்விதம் ஒப்படைக்கப்பட்ட பித்ரு பூஜைகளின் பலன்கள் பித்ரு தேவதைகள் எடுத்துச் சென்று நமது மறைந்த மூதாதையர்கள் எங்கு இருக்கின்றார்களோ, எப்பிறவி எடுக்கின்றார்களோ, அதற்கேற்ப உணவாகவும், நீராகவும் மாற்றிக் கொடுத்து விடுகின்றனர்.
இதனால் பசி, தாகம் நீங்கி நமது முன்னோர்கள் மன நிறைவு அடையும்போது அந்த பலனை பித்ருதேவதைகள் ஏற்று சூரிய பகவானிடம் அளித்து விடுகின்றனர். சூரியன் அந்த பலனை நமக்கு திரும்ப தந்து விடுகின்றார்.
நம் முன்னோர்களில் சிலர் மகத்தான புண்ணியத்தை செய்து அதன் பலனாக பிறப்பு இறப்பு அல்லாத முக்தி நிலையை அடைந்திருந்தால் அத்தகைய பித்ருக்களுக்கு நாம் செய்யும் பூஜா பலன்களை இறைவனே ஏற்றுக்கொண்டு அதற்கு பிரதிபலனாக நமக்கு நன்மைகளை அளிக்கின்றார்.
நமது முன்னோர்களில் எவரெவர் முக்தி நிலையை அடைந்துள்ளனர் என்பதனை நம்மால்அறிய முடியாது. ஆகவேதான் பித்ரு பூஜைகளை தொடர்ந்து செய்ய வேண்டும் என சப்த ரிஷிகளும் உறுதியாக கூறியுள்ளனர். நாம் செய்யும் எந்த பித்ரு பூஜையும் வீணாகுவதில்லை. நம் பித்ருக்கள் நம்மை ஆசிர்வாதம் செய்வதால் ஏராளமான துன்பங்களில் இருந்து நாம் காப்பாற்றப்படுகின்றோம்.

கமலி ஸ்ரீபால்
ஆதலால் தான், பித்ரு பூஜைகளில் மகத்தான புண்ணிய பலன் அளவற்றது என்பதனையும், அதனை விட்டுவிடக்கூடாது என்பதனையும் வலியுறுத்துகின்றோம். இதனை படித்தேன், அப்படியே வரி தவறாமல் பகிர்ந்து உள்ளேன்.
கவலைப்படுவது என்பது பிரச்சினை வரும் என பயந்து முன் கூட்டியே வட்டி செலுத்தி விடாப்பிடியாக பிரச்சினையை வரவழைத்துக் கொள்வதுதான்.
மனிதத் தன்மை இல்லாமையில் மோசமான ஒன்று 'நம் மீது மிக அக்கறை, அன்பு செலுத்துபவர்களை துச்சமாக, கீழ்தரமாக நடத்துவதுதான். அநேகர் தன் பெற்றோர்களை இப்படித்தான் நடத்துகின்றனர்.
பல பெண்கள் அவர்களது கணவரால் இவ்வாறு நடத்தப்படுகின்றனர்.
பல நேரங்களில் மவுனம் உங்கள் கருத்துகளை வலுவாகச் சொல்லும். கடை பிடிப்போமே.
* யார் என்ன சொன்னாலும் உடனே காயப்பட்டுவிடக் கூடாது. பிறரது தேவையற்ற வார்த்தைகளும், கருத்துகளும் நமக்கு மன அழுத்தத்தினை ஏற்படுத்த வேண்டுமா என்ன?
* நாம் தான் தலை சிறந்தவர் என்ற எண்ணம் தோன்றி விட்டால் அது அவரின் அழிவுகாலம் என்று தெளிவாக சொல்லி விடலாம்.
* ஜெயிப்பது மட்டுமே எல்லாமாகிவிட்டது. உங்களது சுய மதிப்பினை அடுத்தவர்கள் உணர வேண்டும்.
* நம்மால் நம் கட்டுப்பாட்டில் அனைத்தினையும் கொண்டு வர முடியாது என்பதனை உணர வேண்டும்.
- பாராட்டு என்பது மனித வாழ்வியலின் தலைமையான பண்பாடு ஆகும்.
- பல்வேறு துறைகளில் நம்பணி தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றது.
ஒரு செயலை ஈடுபாட்டோடு செய்கிற எவருமே அச்செயலை அடுத்தவர்கள் பாராட்ட வேண்டும் என எதிர்பார்ப்பதில் எந்தத் தவறுமில்லை. பாராட்டு என்பது வளர்கிற பயிருக்கு வார்க்கிற மழைநீர் போன்றது. கிணற்றுநீர் பாய்வதைவிட மழைநீர்த் தெளியல் ஒவ்வொரு பயிரையும் செழித்து வளர்வதற்கான ஊக்கச் சாரல் ஆகும், அதைப்போலக் கடமையாற்றுகிற ஒவ்வொருவரும், அந்தக் கடமை செம்மையாகச் செய்யப்பட்டிருக்கிறது என்று முதலில் வருகிற பாராட்டையே அடிப்படையானதாக விரும்புகின்றனர். பலனை எதிர்பார்ப்பது என்பது இரண்டாவது நிலையிலேயே வைத்து எண்ணப்படுகிறது.
பாராட்டு என்பது மனித வாழ்வியலின் தலைமையான பண்பாடு ஆகும். எந்தவொரு செயலிலும் நன்மையும் இருக்கும்; தீமையும் இருக்கும். அதேபோல எந்தவொரு மனிதரிலும் நல்ல குணங்களும் இருக்கும்; தீய குணங்களும் இருக்கும். அவற்றில் தீயவற்றைப் புறந்தள்ளி விட்டு, நன்மையானவற்றையே கருதத் தொடங்கி விட்டால், எல்லாரையும் பாராட்டுகிற நற்குணம் நம்மையறியாமலேயே நம்மிடம் வந்து ஒட்டிக்கொள்ளும்.
பாராட்டு என்பது ஒரு செயலை ஏற்றுக்கொள்வது; ஏற்றுக்கொண்ட செயலின் மதிப்பை உணர்ந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்துவது ஆகும். எந்தவொரு செயலும் சிறப்பாகச் செய்யப்பட்டிருந்தால் அதனை உளமார அங்கீகரிப்பதுதான் பாராட்டு ஆகும். பாராட்டுவதன் மூலம் அந்தச் செயலோடு நாம் ஒத்துப்போகிறோம் என்பதும், செயலைச் செய்தவருக்கு நன்றியுணர்வோடு இருக்கிறோம் என்பதும் வெளிப்படுத்தப்படுகிறது.
பாராட்டை இந்த உலகமே எதிர்பார்த்துக் காத்திருக்கிறது. அதனை முதலில் நாம் நமது வீட்டிலிருந்து தொடங்குவோம். நாள்தோறும் சமைத்து வேளாவேளைக்கு உணவு பரிமாறுகிற தாய்க்கும் மனைவிக்கும் நாம் எப்படி நன்றியுள்ளவர்களாக இருக்கப்போகிறோம். அதுதான் வேலைக்குப் போய்ச் சம்பாதித்து வந்து, பணத்தையும் பொருள்களையும் வீட்டில்வந்து கொட்டத்தானே செய்கிறோம்; இதில் சமைப்பதற்கு எதற்கு நன்றியுணர்வு? என்று சிலர் கேட்கலாம். ஆனால் வேலைக்குப் போவதும், கடுமையாக உழைத்துச் சம்பாதிப்பதும் 'உடல் சார்ந்த கடமை' என்றாலும், வீட்டிலேயே அடைபட்டு, சதா குடும்ப உறுப்பினர்கள் நினைவாகவே சமைப்பதும் வீட்டு வேலைகள் பார்ப்பதும் 'இதயம் சார்ந்த சேவை' ஆகும். அதிலும் தற்காலத்தில் பெண்களும் வெளியில் வேலைக்குச் செல்லத் தொடங்கிவிட்டனர்; ஆனாலும் வீட்டுவேலைகள் இன்னமும் அவர்கள் வசம்தான் இருக்கிறது. எனவே வீட்டில் உணவருந்தும்போது, இயந்திரத்தைப்போல அமர்ந்து உணவை வயிற்றுக்குள் நிரப்பிக் கொள்ளாமல், உணவுச் சுவையைக் கொஞ்சம் கூடுதலாகவே பாராட்டிப் பாருங்கள்!; பிறகு நாளடைவில், பாராட்டுப் பெருகப் பெருக, சாதாரணச் சமையல்கூட ராஜவிருந்தாகச் சுவை கூடிப்போகும். பாராட்டு என்பது அன்பையும் ஈடுபாட்டையும் பெருகச் செய்கிற மந்திரச் சொல்லாகும்.
வீட்டில் வளருகிற மழலையின் ஒவ்வொரு சொல்லையும் பாராட்டிப் பாருங்கள்; அவர்கள் பேசுவதெல்லாம் விரைவில் திருவாசகமாக மாறிப்போகும். பிள்ளைகள் மதிப்பெண் குறைவாக எடுத்திருந்தாலும், அடுத்தமுறை அதிகம் எடுக்க வாழ்த்துகள்! என்று வாழ்த்திப் பாருங்கள்! மகிழ்ந்து போவார்கள்; அடுத்தமுறை அவர்களாகவே முயன்று மதிப்பெண்களை அள்ளிக்கொண்டு வருவார்கள். எந்தச் சூழ்நிலையிலும்,'நீ எங்கே படிக்கப் போகிறாய்! மாடுமேய்க்கத்தான் லாயக்கு!" என்று நீங்கள் பெற்ற குழந்தைகளை நீங்களே சபிப்பதுபோல் திட்டிவிடாதீர்கள்; அவர்கள் சோர்ந்து போவார்கள்.

சுந்தர ஆவுடையப்பன்
பொதுவாகவே இல்லமாயினும் அலுவலகமாயினும் கோபமாகத் திட்டிக்கொண்டே இருந்தால்தான், வேலை நடைபெறும்; எல்லாரும் அச்சத்தோடு காரியத்தைக் கச்சிதமாகச் செய்வார்கள் என்று சிலர் எண்ணிக் கொண்டிருக்கிறோம். உண்மையில் அது தவறு. பாராட்டும் செயலே இனிய சொற்களை மூலதனமாகக் கொண்டு, நேர்முறை அதிர்வுகளைச் சொல்லிலும் செயலிலும் இருதரப்பிலும் ஏற்படுத்தும் வல்லமை வாய்ந்தது.
சரியாகச் செய்திருந்தால் பாராட்டுவதும், குறையாகச் செய்திருந்தால் திருத்திக்கொள்ள உதவும் வண்ணம் அறிவுரை கூறுவதும் நல்ல முறைமைதான். ஆனால் எதுவுமே செய்யாமல் சோம்பேறியாகவே அமர்ந்திருப்பவரை எப்படிப் பாராட்டி ஊக்குவிப்பது?. இது நல்ல கேள்விதான். வெறுமனே அமர்ந்திருந்தால் எதுவுமே கிடைக்கப்போவதில்லை என்பதை அவர்கள் உணரும்வண்ணம் உணர்த்தி ஊக்குவிக்க வேண்டும். எதைச் செய்தாலும் அது செம்மையாக முடிவதில்லை; தவறாகவே நடந்துவிடுகிறது! என்று விரக்தியில் மனம் தளர்ந்து போய் நிற்பவர்களிடம், 'முதலில் நீங்கள் செயலில் ஈடுபடுங்கள்! அது செம்மையானதா? சீரற்றதா? என்பதைப் பிறகு பார்த்துக் கொள்வோம்!' என்று செயல்பட ஆற்றுப்படுத்துங்கள். செயலாற்றத் தொடங்கத் துணிச்சல் வந்துவிட்டால், பிறகு எந்தக் காரியமும் தோல்வியில் முடிவதில்லை; நிறைவில் அது பாராட்டையே நல்கிநிற்கும்.
பாராட்டு சக மனிதர்களைத் தன்னம்பிக்கை உள்ளவர்களாக உயர்த்தும். தம்முடைய சிந்தனையிலும் செயலிலும் ஒரு பூரணத்துவம் நிறைந்திருப்பதாகப் பாராட்டுப் பெறுபவர் நினைக்கும்போது, அவரது அடுத்தடுத்த செயல்களும் நிச்சயம் பாராட்டும்படியாகவே சிறக்கும். அந்த வகையில் நிறுவனம் சார்ந்த உற்பத்திகளும் வெற்றிச் சாதனைகளைக் குவிக்கும்.
எல்லாரும் பணியாற்றுகிறோம். இல்லங்களில், அலுவலகங்களில், நிறுவனங்களில், தொழிற்சாலைகளில், கலை, இலக்கியம், கல்வி, அரசியல் என்று பல்வேறு துறைகளில் நம்பணி தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றது.
கடமைக்காகப் பணியாற்றுகிறோம் என்று பெரும்பாலோர் கருதி உழைக்க, ஒரு சிலரே ஆத்ம திருப்திக்காகப் பணியாற்றுகிறோம் என்று கூறுகிறார்கள். கடமைக்காக உழைப்பது என்பது வேறு; ஆத்ம திருப்திக்காகப் பணியாற்றுவது என்பது வேறு. கடமைக்காகப் பணியாற்றுபவர்கள் சம்பளத்திற்காக மட்டுமே உழைப்பவர்கள்; கொடுத்த வேலைக்குமேல் ஓர் இம்மியளவிகூடக் கூடுதலாக உழைப்பதற்கு இவர்கள் சம்மதிப்பதில்லை; ஆத்ம திருப்திக்காக உழைப்பவர்களும் ஒருவகையில் சம்பளத்திற்காக வேலை செய்பவர்கள்தாம்; என்றாலும் அவர்கள் நிச்சயம் பாராட்டை எதிர்பார்ப்பவர்களாக இருப்பார்கள்; அதற்கேற்ற வண்ணம் செய்நேர்த்தியுடன் அழகியலோடு பணிகளைச் செய்து முடித்திருப்பர்.
பாராட்டுக் கிடைக்கும் என்னும் எதிர்பார்ப்பு எந்தக் கடினப் பணியையும் இலகுவாக்கிவிடுகிறது. ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் மறைந்திருக்கும் தாழ்வு மனப்பான்மைகளை அகற்றித் தன்னம்பிக்கையில் தளும்பி நிற்கும் மனிதர்களாகப் பாராட்டு மாற்றிவிடுகிறது.
எல்லைப்பகுதியில் நடந்த ஒரு சண்டையில் ஒரு ராணுவ வீரன் வீரமரணம் அடைந்து விடுகிறான். சொந்த ஊரில் நல்லடக்கம் செய்யப்படுவதற்காக அவனது உடல் ஊருக்குக் கொண்டு வரப்படுகிறது. உற்றார், உறவினர், உடன்படித்தோர், ஆசிரியர்கள், ஊர்மக்கள் என அந்தப்பகுதியே திரண்டுவந்து உயிர்நீத்த ராணுவ வீரனுக்கு அஞ்சலி செலுத்திக் கொண்டிருக்கின்றனர். வீரனின் பெற்றோர் அந்தக் கூட்டத்தில் நின்றிருந்த செல்வி டீச்சரைத் தனியே அழைத்துப், பலமுறை கிழிந்து ஒட்டுப் போடப்பட்டிருந்த ஒரு தாளினை வழங்குகிறார்கள்.
அந்தத் தாள் பலமுறை மடித்து விரித்துப் பயன்படுத்தப்பட்டிருப்பதால், கிழிந்த மடிப்புகளில் செலபோன் டேப்புகள் ஒட்டப்பட்டிருக்கின்றன. தன் மகன் எல்லையில் கொல்லப்படும்போது, அவனது கால்சட்டைப் பையில் இருந்த பர்ஸில் இந்தக் காகிதம் பத்திரப்படுத்தப்பட்டு இருந்ததாகப் பெற்றோர் கூறினர். செல்வி டீச்சர் பிரித்துப் பார்த்த தாளில் அவரது கையெழுத்தில் பக்கம் முழுவதும் நிறைய எழுதப்பட்டிருக்கிறது.
செல்வி டீச்சர், இறந்த வீரனின் ஐந்தாம் வகுப்பு ஆசிரியை. வகுப்பில் நாற்பது குழந்தைகள். வகுப்பிற்கு வந்த முதல்நாள் நாற்பது வெள்ளைத் தாள்களை ஒவ்வொரு மாணவர் கையிலும் கொடுத்து, உங்கள் வகுப்பில் உங்களோடு பயிலும் உங்கள் நண்பர்கள் பெயர்களை ஒருகோடு இடைவெளி விட்டு ஒவ்வொருவரும் எழுதிக்கொள்ளுங்கள் என்றார். எழுதிய பிறகு, ஒவ்வொரு நண்பன் பெயருக்கும் நேராக அவனிடம் உங்களுக்குப் பிடித்த அவனது ஒரு நல்ல குணத்தை மட்டும் எழுதுங்கள் என்றார். எல்லாரும் எழுதிக் கொடுத்த பிறகு, அந்தத் தாள்களை வீட்டிற்கு எடுத்துச் சென்ற செல்வி டீச்சர், ஒவ்வொரு மாணவனுக்கும் தனித்தனித் தாள்களைப் போட்டு, அவனைப்பற்றிய நல்ல குணங்களாக மற்ற மாணவர்கள் கருதுவனவற்றையெல்லாம் தொகுத்துப் பட்டியலிட்டு எழுதிக் கொண்டு வந்து அவரவருக்குத் தந்துவிட்டார். வாங்கிப் பார்த்த ஒவ்வொரு மாணவனுக்கும் ஆச்சரியம். நாம் உண்மையிலேயே இவ்வளவு நல்லவர்களா? என்று புளகாங்கிதம் அடையத் தொடங்கிவிட்டனர். இதுவரை எப்படியோ, இனிமேலாவது சக நண்பர்கள் பாராட்டியபடி நாம் நிச்சயம் நல்லவர்களாக வாழவேண்டும் என மனதார உறுதியுடன் செயல்படத் தொடங்கிவிட்டனர். அன்று ஐந்தாம் வகுப்பில், செல்வி டீச்சர் கைப்பட எழுதித் தந்த அந்தப் பாராட்டுக் காகிதம்தான், இன்றுவரை அந்த வீரனை உத்வேகப்படுத்தி, இந்த நாட்டிற்காக உயிர்த் தியாகம் செய்யுமளவிற்குத் தூண்டியிருக்கிறது.
பாராட்டுவது என்பது எதையாவது பாராட்டுவது; எல்லாவற்றையும் பாராட்டுவது என்பது கிடையாது. கண்ணை மூடிக்கொண்டு பாராட்டுவது பாராட்டிலேயே வராது; கருத்தில் நிறைந்தவற்றை மட்டுமே பாராட்ட வேண்டும். ஒரு கவிதையைப் பாராட்டுகிறோம் என்றால் கருத்து, வடிவமைப்பு, உத்தி போன்றவற்றில் கவிஞர் கையாண்டுள்ள புதுமைகளைப் பாராட்டலாம். இதுவரை வெளிவந்துள்ள கவிதைகளைவிட அந்தக் கவிதை எந்த விதங்களிலெல்லாம் மாறுபட்டு நிற்கிறது என்பதைச் சொல்லிப் பாராட்டலாம்.
உழைப்பு என்பது எல்லாருக்கும் ஒரே தரமானவை என்றாலும் கடின உழைப்பு, நளின உழைப்பு என இருவகைகள் உள்ளன. கடினமாகச் செய்யவேண்டியதை நளினமாகச் செய்ய முடியாது; அதேபோல நளினமாக ஆற்ற வேண்டியதைக் கடினமாகக் கையாளவும் கூடாது. இவற்றின் திறமறிந்து பாராட்டவேண்டும். சந்தித் தெருப்பெருக்குவதற்கும் சாத்திரங்கள் உருவாக்கப்படவேண்டும் என்ற தனது பேரவாவை வெளிப்படுத்தும் மகாகவி பாரதி, அத்தொழிலையும் கற்றுத் தேர்ந்தவரே கையாளவேண்டும் என்று வலியுறுத்துகிறார். தெருப்பெருக்கும் தொழிலின் தரமுயர்த்திப் பாராட்டுகிறார். கணினித் தொழிலும் கற்கப்பட வேண்டும்; கைத்தொழில்களும் கற்கப்பட வேண்டும்; அப்போதுதான் அவ்வத் தொழில்களில் உள்ள நுட்பங்கள் வெளிப்பட்டு நல்ல பலன்களை அளிக்கும்.
நாம் செய்ய முடியாத செயல்களையும் பொருள்களையும் அடுத்தவர் செய்து முடிக்கும்போது நம்மையறியாமலேயே நாம் பாராட்டியே ஆக வேண்டும். பாராட்டு என்பது நாம் அடுத்தவர்க்குச் செலுத்துகிற நன்றியுணர்வு. நன்றியுணர்வோடு நாம் இருக்கிறோம் என்றால், நமக்குப் பயன்படுகிற செயல்களை, நம்மால் செய்ய முடியாத செயல்களை அடுத்தவர் செய்யும்போது மனமுவந்து பாராட்டவேண்டும். பாராட்டுவதால் நமது எண்ணங்களில் ஒட்டியிருக்கும் பொறாமை போன்ற தீய எண்ணங்கள் கழுவப்பட்டு மனத்தில் மகிழ்ச்சி எண்ணங்கள் குடியேறுகின்றன. பாராட்டுப்பெறுபவரும், இந்தப் பாராட்டின்மூலம் தன்னுடைய அரிய பணிக்குக் கிடைத்துள்ள அங்கீகாரத்தை எண்ணி மகிழ்வார்; புதிய ஊக்கத்தை அடைவார்.
பாராட்டு மதிப்பு மிக்கது; அது மதிப்பிற்குரியோரின் மதிப்புமிக்க செயல்களை, மதிக்கத் தெரிந்தவர்கள் அங்கீகரிக்கக் கையாளும் ஆனந்தமயமான உத்தி.
பாராட்டுவோம்! பாராட்டுப் பெறுவோம்!.
தொடர்புக்கு - 94431 90098
- மன்னனின் நிபந்தனையை சுவாமிகள் நிராகரித்தார்.
- வைகுண்ட சுவாமிகள் தன்னுடைய எஞ்சிய காலம் முழுவதையும் மக்களின் நல்வாழ்விற்காகவே அர்ப்பணித்தார்.
பல்லவனின் சோதனைகளை அப்பர்பெருமான் வென்றருளியது போன்று, அனைத்துச் சோதனைகளையும் சுவாமிகள் புறம் கண்டார். எனவே அவரைக் கொன்று விட சதித்திட்டம் தீட்டப்பட்டது. அதன்படி பாலில் விஷம் கலந்து, அருந்திடச் செய்தனர். உண்மை அறிந்தும், ஒன்றும் தெரியாதவர் போல் விஷம் கலந்த பாலை இயல்பாகக் குடித்தார். விஷம் அமுதமாக சுவாமிகளுக்கிருந்தது. ஆனால் கொடியவர்கள், சுவாமிகள் இறந்தொழிந்தார் என எக்காளத்துடன் மகிழ்ச்சி கொள்ள, நஞ்சருந்திய சுவாமிகள் புதிய தெம்புடன் காணப்பட்டார்.
"பச்சை நாவியைப் போட்டு
பாலென்று கொண்டுதர
பாலாய் இருந்தது"
எனவே சுவாமிகள் எண்ணினார். முயற்சிகள் யாவும் பலன் தராத நிலையில், மன்னன் சுவாமிகளை சுண்ணாம்பு நீற்றறையில் போட்டு நீற்றிவிடுமாறு ஆணையிட்டான். ஆனால் அக்கொடிய செயலும் சுவாமிகளை ஒன்றும் செய்யவில்லை.
"நீற்றுக்கல் கொண்டு வந்து
நீற்றிப்போட வேணுமென்று
நீசனும் செய்தானே
பூ சொரிகின்றான் என்றெண்ணி
நினைத்துக் கொண்டேன்"
என்று சுவாமிகள் அதனை பற்றிக் குறிப்பிடுகின்றார்.
வைகுண்ட சுவாமிகளின் மீது ஏவப்பட்ட கொடிய பாணங்கள் யாவும் எண்ணியவாறு அமையாததால் காட்டிலிருந்து கொடிய புலி ஒன்றைப் பிடித்து வந்து, நன்கு பட்டினி போட்டு வெறியுண்டாக்கி, அதன் கூண்டிற்குள் சுவாமிகளைத் தள்ளிவிட்டனர். ஆனால் அப்புலி அவரை கண்டு தலை குனிந்து மண்டியிட்டது.
"வதை செய்யவிட்ட புலி அதிசயப்பட்டு
என்னை வணங்கியும் நின்றதையோ"
என்று அய்யா இதுபற்றி கூறுகின்றார்.
புலி அடங்கி கிடந்த நிலையைப் பார்த்த பணியாள் ஒருவன் ஈட்டியால் அதனை குத்தினான். ஆனால் எவரும் எதிர்பாராவண்ணம் புலி ஈட்டியைப் பிடித்து இடறிவிடவே, ஈட்டி அருகில் நின்ற பிராமணன் ஒருவன் வயிற்றில் பாய்ந்து அவன் உயிரை மாய்த்தது. இதனைக் கண்ணுற்ற மன்னன் ஆயிரம் பசுவை அடித்துக் கொன்ற தோசம் இதுவல்லோ ஒரு பிராமணனைக் கொன்றது' எனப் பதறினான். அவையில் நடந்ததைக் கண்ட மக்கள் வியப்புற்றுச் சென்றனர்.
இவ்வாறு மன்னன் கொடுத்த சோதனைகள் எல்லாவற்றையும் எவ்வித பயமோ கலக்கமோ இன்றி சுவாமிகள் அமைதியுடன் மனமகிழ்வோடு ஏற்றுச் சோதனையில் ஜோதி உருவாக ஒளி வீசினார். வைகுண்டரின் சிறைவாசத்தை அகிலம்,
"ஏழைகளுக்காக ஈரொன்றொரு நாளாய்
மீளாச் சிலுவையிலே முள்ளில் அறைபட்டு
மரித்துப் பிறந்தது போல மாயக் குருநாதன்
ஏழைச் சான்றோர்க் கிரங்கியிருந்தார் சிறையினிலே"
என்று, ஏழைகளின் துயர்துடைக்க இயேசு பிரான் சிலுவையில் அறையப்பட்டது போன்று, ஏழைகளுக்காக சிறை வாழ்க்கையை ஏற்றுக் கொண்ட செம்மல் வைகுண்டநாதர் என்று சிறப்பிக்கின்றது.
மன்னனின் சோதனைகளில் நாட்கள் நடைபயிலலாயின. சுவாமிகளும் தன்னை நாடி வரும் மக்களின் அச்சம் தவிர்த்து, நோய் தீர்த்து, போதனைகளை புகட்டி வரலானார். அது கண்ட மன்னன் கலக்கமுற்றிருக்கையில், மன்னனிடத்து சுவாமிகளின் நற்குணங்களை பூவண்டனார்,
"நல்ல தன்மை மிகு மானமுள்ளோன்
கோணா மனதுடையோன் குணமுடைய நல்லவன்காண்
நேர்மை ஒழுங்குள்ளோன் நேர் சொல்லொருவர்காண்
ஓர்மையுடையோன் உபகாரன் இவன்"
என்று எடுத்துரைத்தார். மேலும் மன்னனிடம் வைகுண்ட சுவாமிகளை விடுதலை செய்திடுமாறு வேண்டி நின்றார். பூவண்டரின் வேண்டுகோளுக்கு செவி சாய்த்த மன்னன்,
"இப்போது இவன் இனத்தில் எத்தனைப் பேர்க்கானாலும்
ஒப்போடுறவாய் ஒத்திருந்து வாழ்வதல்லால்
சர்ப்பம் போலொத்த சகல சாதி தனக்கும்
உத்திரவென்று உபாயமாய் ஏதும் சொல்லாமல்
மற்றபிற சாதிகளை வாவென்று உரையாமல்
தன்னொரு சாதி தன்னோடு இருப்பதல்லால்
பின்னொரு சாதி பிதனம் வைத்துப் பாராமல்
இனத்துடன் சேர்ந்திருப்பேன்"
என எழுதிக் கையொப்பமிட்டுக் கொடுத்தால், வைகுண்ட சுவாமிகளைச் சிறையிலிருந்து விடுதலை செய்வதாக மன்னன் கூறினான். பூவண்டரும் அவ்வண்ணமே எழுதி, சுவாமிகளிடம் ஒப்பமிடக் கொடுத்தபோது அவர் அதை வாங்கிக் கைநகத்தால் கீறித் தரையில் எறிந்தார். ஒடுக்கப்பட்ட பிரிவைச் சார்ந்த சாதியினர் இணைந்திட, ஆளும் வர்க்கம் என்றும் அனுமதித்ததில்லை. கீழ்த்தட்டு மக்களின் ஐக்கியத்தில் மேட்டுக்குடியினரின் வீழ்ச்சி எழுதப்படுகிறது என்பதை நன்கு அறிந்திருந்ததால் இத்தகையதோர் உறுதிமொழியினை, சுவாமிகளிடம் அரசாங்கம் எதிர்பார்த்தது. மன்னனின் நிபந்தனையை சுவாமிகள் நிராகரித்தார். எனினும் வேறு வழியின்றி மன்னன் வைகுண்ட சுவாமிகளை விடுதலை செய்தான்.
தனது நூற்றுப் பத்து நாட்கள் சிறை வாழ்வினை முடித்து விட்டு, சுவாமிகள் 1838-ம் ஆண்டு மார்ச் திங்களில் விடுதலையாகி வெளி வந்தார். அவருடைய அன்பர்கள் அவரை தொட்டிலில் வைத்து மகிழ்ச்சி ஆரவாரங்களுடன் அழைத்து வந்தனர். வரும் வழியில் பழவாறு எனும் கிராமத்தில் இரவு தங்கினார். அவ்வூரில் சிறு தெய்வங்களுக்கு பலியிடுவதற்காக 21 ஆட்டுக்கடாக்கள் நிறுத்தப்பட்டிருந்தன. சுவாமிகள் இதனை அறிந்து, கோவில் பொறுப்பு வகித்த சீதப்பன் நாடாரிடம், இறைவனுக்கு உயிர்ப் பலியிடுவது ஏற்புடையதல்ல என்பதை எடுத்துரைத்தார். கிராம மக்கள் 'பலியிடுவதை நிறுத்தினால் வாதைகள் (பேய் தெய்வங்கள்) தங்கள் குடும்பங்களைத் துன்புறுத்தும்' என்று அச்சம் கொண்டபோது, சுவாமிகள் அவர்களைச் சாந்தப்படுத்தி, 21 வாழை இலைகளில் 21 மா உருண்டைகளை அன்புடன் வழங்கி வழிபடுங்கள். வாதைகள் ஏற்றுக்கொள்ளும்' என்று உறுதி கூறினார்.
சுவாமிகளின் அருளுரையினை ஏற்று, கிராம மக்கள் ஆட்டுக்கடாக்களை அவிழ்த்துவிட்டனர். மாவுருண்டைகள் தெய்வங்களுக்கு வழங்கப்பட்டன. சுவாமிகளின் உயிர்ப்பலி எதிர்ப்புக்கணைகள், தம் இலக்கை அடைந்து உரிய பலனை தந்தன. வைகுண்ட சுவாமிகள் தன்னுடைய எஞ்சிய காலம் முழுவதையும் மக்களின் நல்வாழ்விற்காகவே அர்ப்பணித்தார். மக்களின் வாழ்வு ஏற்றம் பெற்றிட, பல்வேறான சீர்திருத்தங்களை புகுத்தினார். மக்களை தூய வாழ்வில் இட்டுச் செல்லத் துவையல் பந்தி கண்டார். ஒன்றே குலம் என்று முத்திரிகிணறு மூலம் தெளிவுறுத்தினார். தர்மமிட்டு ஏழையின் சிரிப்பிலே இறைவனைக் காணுமாறு அறிவுறுத்தினார். அச்சமில்லா வாழ்விற்குத் தலைப்பாகை அணியும் பழக்கத்தை அருளினார். சமத்துவம் ஏற்படுத்திட, சமத்துவச் சங்கம் கண்டார், பெண்ணின் பெருமையை காக்க, தோள்சேலை அணிந்திடச் செய்தார். தீண்டாமை ஒழிய சமபந்தி போஜனம் செய்தார், நோய் தீர்த்தார், ஆறுதல் அளித்தார். பேய் வழிபாட்டினை வன்மையாக கண்டித்தார், பலியிடும் பழக்கத்தை நீக்கிடச் செய்தார், சிறு தெய்வவழிபாட்டைப் புறத்தே ஓட்டிடச் செய்தார். அன்பே உலகாளும் என அகில அமைதி வாழ்வுக்கு அன்புக் கொடி ஏற்றினார்.
இவ்வாறாக, சீர்திருத்தம் பல கண்ட வைகுண்ட சுவாமிகள் மிகக்குறைந்த நாட்களே இவ்வவணியில் வாழ்ந்திட முடிந்தது. கொல்லம் வருடம் 1026-ம் ஆண்டு வைகாசி திங்கள் 21-ம் நாள் (1851 ஜூன் 2) திங்கள் அன்று நண்பகல் 12 மணியளவில் சுவாமிகள் வைகுண்டமேக வழிகொண்டார். தனது இறுதி மூச்சில் கூடத் தன்னை சுற்றியிருந்த மக்களிடம்
"பதறாமல் நீங்கள்
பண்பாய் ஒருப் போலே
சிதறாமல் நீங்கள்
செய்யவனு கூலமுமாய்
இருந்து மிக வாழும்" ...
என்று ஆசி கூறி விடை பெற்றார்.
சமுதாயம் பல பிரிவுகளாகப் பிளவு பட்டுக் கிடந்த வேளையில், எல்லாப் பிரிவு மக்களும் 'சமத்துவம்' என்ற போதிமரத்தின் கீழ் ஒன்றுபட்டு இளைப்பாறிடச் சங்கம் ஒன்றினை வைகுண்ட சுவாமிகள் ஏற்படுத்தினார். அதனை அடுத்த தொடரில் பார்க்கலாம்.
- துறவு மேற்கொண்டால் அது மறுபிறவிக்கு சமானம் என்கிறது ஆன்மிகம்.
- ஸ்ரீதீர்த்தரின் தலையில் கைவைத்து ஆசி வழங்கிய மாயக் கண்ணன் மறுகணம் மாயமாய் மறைந்தே போனான்.
கிருஷ்ண லீலா தரங்கிணி என்ற தமது சமஸ்கிருத நூல் மூலம் பெரும் புகழ் பெற்றவர் கிருஷ்ண பக்தரான நாராயண தீர்த்தர். பதினைந்துக்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியவர். `பாரிஜாத அபகர்ணம், ஹரிபக்தி கண்டர்ணவம்` ஆகிய இரு நாடகங்களையும் கூட எழுதியுள்ளார். அவரது வரலாறு சுவாரஸ்யமானது.
ஆந்திர மாநிலமான குண்டூரைச் சேர்ந்த வில்லத்தூர் கிராமம்தான் அவரது சொந்த ஊர். பின்னர் அவர் குடும்பத்தினர் தஞ்சாவூரை நோக்கி இடம் பெயர்ந்தனர்.
வேதங்களைக் கற்ற பண்டிதர் நாராயண தீர்த்தர். பற்பல மொழிகளைக் கற்றறிந்தவர். சங்கீதப் பயிற்சியும் உடையவர். அன்பான மனைவியோடு அவரது இல்லறம் சிறப்பாகச் சென்று கொண்டிருந்தது.
ஒருநாள் ஒரு பணியின் பொருட்டாக ஆற்றைக் கடந்து வெளியூர் செல்ல வேண்டியிருந்தது. ஆற்றில் முழங்காலளவு கூட வெள்ளம் இல்லை. நடந்தே கடந்து விடலாம் என ஆற்றில் இறங்கி நடக்கலானார்.
ஆற்றின் நடுப்பகுதியில் நடந்து வரும்போது திடீரென காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்தது. விறுவிறுவென்று வெள்ளம் தலைக்குமேல் உயரத் தொடங்கியது.
நடுவழியில் அவரால் திரும்பவும் முடியவில்லை. எதிர்க்கரைக்குச் செல்லவும் முடியவில்லை. ஆற்றில் மூழ்கித் தம் உயிர் பிரியப் போகிறது என்று நினைத்தார்.
இந்த இக்கட்டிலிருந்து எப்படித் தப்பிப்பது?
அவருக்கு ஓர் எண்ணம் தோன்றியது. துறவு மேற்கொண்டால் அது மறுபிறவிக்கு சமானம் என்கிறது ஆன்மிகம். நாமும் துறவு மேற்கொள்வதாகச் சபதம் ஏற்போம். அப்போது அது மறுபிறவி என்பதால் இந்த பிறவி இக்கட்டு மறைய வாய்ப்பிருக்கிறது என நினைத்தார்.
`இப்போது உயிர் பிழைத்தால் துறவு மேற்கொள்வேன், இது சத்தியம்` என மனத்தில் உறுதி எடுத்துக் கொண்டார்.
என்ன ஆச்சரியம்! காட்டாற்று வெள்ளம் கிடுகிடுவென வந்தது போலவே கிடுகிடுவெனக் குறையத் தொடங்கியது. மறுபடியும் நதிநீர் முழங்கால் அளவே உள்ளதாக மாறியது.
அவர் பயணத் திட்டத்தைக் கைவிட்டு இல்லம் திரும்பினார். தான் துறவு மேற்கொள்ளச் சபதம் செய்து கொண்டதையும் இனி மனைவியோடு வாழ இயலாது என்பதையும் எப்படி மனைவியிடம் சொல்லி அவளை சமாதானப்படுத்துவது என அவருக்குத் தெரியவில்லை.
சற்று முன்னர்தான் ஒரு பணியின் பொருட்டாக அக்கரைக்குப் போகிறேன் என்றவர். சிறிது நேரத்திலேயே திரும்பி வந்து `இனி உன்னை நிரந்தரமாகப் பிரிந்து துறவு பூணப் போகிறேன்` என்றால் அந்த அதிர்ச்சியை அவள் எப்படித் தாங்குவாள்?
ஆனால் அவர் எதுவும் சொல்லாமலேயே அவரைக் கண்ட மனைவி திகைத்தாள். கண்ணீர் விட்டு அழலானாள். ஏன் அழுகிறாய் எனக் கேட்டார் தீர்த்தர்.
''சுவாமி! அழாமல் என்ன செய்வேன்? இப்படிக் காவி ஆடை, கையில் தண்டம், மொட்டைத் தலை என்று துறவுக் கோலத்தில் வந்திருக்கிறீர்களே?'' என்றாள் அவள்.
உயர்ந்த பத்தினி அவள். அவரின் இன்றைய தோற்றத்திலேயே அவரது நாளைய தோற்றத்தை அவளால் கண்டுணர முடிந்து விட்டது.
திகைப்படைந்த நாராயண தீர்த்தர், அவளை மெச்சினார்.
''நீ உயர்ந்த பெண்மணி என்பதற்கு என்னைப் பற்றி நீ முன்கூட்டியே பார்த்த அளவில் அறிந்துகொண்டதே உதாரணம். நான் இனித்தான் காவி ஆடை உடுத்தித் துறவு பூண வேண்டும். இதை எப்படி உனக்குத் தெரிவிப்பது என்ற குழப்பத்தில் இருந்தேன்.
தெய்வ சக்தி என்னைத் துறவியாகவே உன் கண்களுக்குக் காட்டி விட்டது. உன்மேல் கொண்ட வெறுப்போ கோபமோ அல்ல என் துறவுக்குக் காரணம். நான் இப்போதும் உன்னை நேசிக்கிறேன்.
வெள்ளத்திலிருந்து தப்பிப்பதற்காக இப்படி முடிவெடுத்தேன். இறைச் சக்தி என்னைத் தப்பிக்கச் செய்துவிட்டது. வெள்ளம் என் பிரதிக்ஞைக்குக் கட்டுப்பட்டே குறைந்தது என்பதில் எனக்கு சந்தேகமில்லை.
எனவே என் பிரதிக்ஞைப்படி நான் துறவு பூணாவிட்டால் கட்டாயம் எவ்விதத்திலாவது மரணம் என்னைத் தழுவும். நான் இறப்பதை விட துறவியாக உயிருடன் இருப்பது உனக்கு மகிழ்ச்சி தரும் அல்லவா? கண்ணீரைத் துடைத்துக் கொண்டு என்னைத் துறவு நெறிக்கு வழியனுப்பி வை.
மனிதர்கள் ஒவ்வொருவரும் பிரம்மச்சரியம், கிரகஸ்தம், வானப் பிரஸ்தம், சன்யாசம் என்ற நான்கு படி நிலைகளை வாழ்வில் கடந்தாக வேண்டும். அதுவே தர்ம நெறி.
எனக்கு கிரகஸ்தாசிரமத்தில் அதிக காலம் இருப்பது விதிக்கப்படவில்லை. ஆகையால் விரைவிலேயே சன்யாச ஆசிரமத்திற்குச் செல்கிறேன்.
நான் அடையப் போகும் புண்ணியத்தில் எல்லாம் உனக்கும் சம பங்கு உண்டு. மனைவியை வெறுத்துத் துறவு பூணுபவர்களே அதிகம். நான் உன்னை வெறுக்காமல் உன் அனுமதியோடு துறவு பூணுகிறேன் எனத் தன் நிலைப்பாட்டை விளக்கிச் சொன்னார் தீர்த்தர்.
வேறு வழியின்றி அவர் துறவு மேற்கொள்ளக் கண்ணீரோடு அனுமதி அளித்தாள் அவர் மனைவி.
அதன்பின் துறவியான நாராயண தீர்த்தர் பல திருத்தலங்களை தரிசித்தவாறே திருப்பதி வந்துசேர்ந்தார். அங்கேயே சிறிது காலம் தியானத்தில் ஆழ்ந்தார்.
அப்போது ஒருநாள் ஒரு சிறுவன் அவர்முன் தோன்றினான். அவன் கையில் ஏராளமான தின்பண்டங்கள். அவற்றை அள்ளி அள்ளிச் சாப்பிட்டவாறே அவரையே பார்த்துக் கொண்டிருந்தான்.
`யாரப்பா நீ?` என விசாரித்தார் தீர்த்தர்.
`என்னை மறந்துவிட்டாயே? நான்தான் உன் கூடப் படித்த கோபாலன்!` என்றான் சிறுவன். அதோடு விட்டானா? அவரது பள்ளிப் பருவ சம்பவங்கள் பலவற்றைக் கூறி நினைவு படுத்தினான்.
அவன் சொல்லும் சம்பவங்கள் எல்லாம் சரியாகவே இருந்தன. ஆனால் அவனோடு தான் படித்ததாக அவருக்கு ஞாபகமே இல்லை. திடீரென்று அவருக்கு ஒரு சந்தேகம் வந்தது.
`நீ என்னோடு படித்தாய் என்றால் உனக்கு இப்போது என் வயதல்லவா இருக்க வேண்டும்? நீ சிறுவனாக இருக்கிறாயே?` என்று கேட்டார்.
`நான் எப்போதும் இப்படியேதான் இருக்கிறேன்!` என்று புன்முறுவலுடன் பதில் சொன்னான் அவன். சிறுவனின் பேரழகும் அந்தப் புன்முறுவலின் பிரகாசமும் அவரை மயக்கின.
அவன்மேல் இன்னதென்றறியாத பாசம் தோன்றியது அவருக்கு.
"அதெல்லாம் இருக்கட்டும். இப்படி நிறையப் பலகாரம் தின்கிறாயே? வயிறு வலிக்காதா குழந்தாய்?'' என்று பாசம் பொங்கக் கேட்டார்.
அவனோ ''நான் நிறையச் சாப்பிட்டால் உனக்கு வயிறு வலிக்கும்!'' என்றான்.
''ஏன் அப்படி? '' என வியப்போடு கேட்டார்.
''ஏனென்றால் நான்தான் நீ. நீதான் நான்!' என்றான் அவன்! அவருக்குப் புரியவில்லை. `இப்போது பார். உனக்கு வயிற்றுவலி வந்திருக்குமே?` என்றான். அந்தக் கணமே அவருக்கு வயிறு வலிக்கத் தொடங்கிவிட்டது.
''உன் வயிற்றில் நான் கைவைத்தால் உன் வலி போய்விடும்!'' என்ற சிறுவன் அவர் வயிற்றில் கைவைக்க வந்தான். வந்திருப்பது கடவுள் கிருஷ்ணனே என்பது தீர்த்தருக்குப் புரிந்துவிட்டது.
''வலி இருந்தால் இருக்கட்டும். எனக்கு உன் ஆசி வேண்டும்!'' என சிறுவனின் வலக்கரத்தை இழுத்துப் பிடித்துத் தன் தலையில் வைத்துக் கொண்டார்.
ஸ்ரீதீர்த்தரின் தலையில் கைவைத்து ஆசி வழங்கிய மாயக் கண்ணன் மறுகணம் மாயமாய் மறைந்தே போனான்.
கிருஷ்ண தரிசனம் பெற்ற பரவசத்தில் தீர்த்தர் மனம் குளிர்ந்திருந்தது. ஆனால் அவர் வயிற்றுவலி அவரை விட்டபாடில்லை. அதுபற்றி அவர் வருந்தவும் இல்லை.
பின்னரும் பல இடங்களுக்கு யாத்திரை சென்றார். ஒருநாள் இரவில் கண்டியூர் - திருக்காட்டுப்பள்ளி சாலையில் ஸ்ரீதீர்த்தர் சென்ற நேரம், வயிற்றுவலி பொறுக்க முடியாததாக ஆகிவிட்டது.

திருப்பூர் கிருஷ்ணன்
அருகில் ஆளரவமற்ற ஒரு கோயிலில் விநாயகர் மட்டும் தனிமையில் இருந்தார். விநாயகரின் தனிமையைப் போக்குபவர் போல, கோயிலின் உள்ளே சென்று அமர்ந்தவர், களைத்து உறங்கிவிட்டார்.
இப்போது கனவில் வந்தான் மாயக் கண்ணன்.
''நாளை காலை கண் விழித்தவுடன் முதலில் யாரைப் பார்த்தாலும் விடாமல் அவரைத் தொடர்ந்து செல். உன் தீராத வயிற்று வலி தீரும்!" என்று சொல்லி மறைந்துவிட்டான்.
அதிகாலையில் கண்விழித்த ஸ்ரீதீர்த்தர் கனவைப் பற்றியே நினைத்துக் கொண்டிருந்தார். திடீரென அவர்முன் ஒரு பன்றி செல்வது தெரிந்தது. அப்படியானால் இப்போது பன்றியையா தொடரவேண்டும்?
தீர்த்தர் அந்தப் பன்றியைப் பின்தொடரலானார். பன்றி சுமார் நான்கு கிலோமீட்டர் தொலைவு சென்று அருகே இருந்த பூபதிராஜபுரம் என்ற ஊரிலுள்ள வெங்கடேசப் பெருமாள் கோயிலில் நுழைந்தது.
இதென்ன, ஆலயத்திற்குள் பன்றி சர்வ சுதந்திரமாக உள்ளே நுழைகிறதே? வியப்போடு பின்தொடர்ந்து சென்றார். திடீரென வராகம் மறைந்துவிட்டது.
"வராக அவதார வடிவில் உன்னை இங்கே அழைத்து வந்தது நான்தான்!'' என்று அசரீரி ஒலித்தது. (வராகமாக - பன்றியாக - வந்து அருள் புரிந்ததால், பூபதிராஜபுரம் அதன்பின் வரகூர் என்றே வழங்கப் படலாயிற்று.
வரகூர் வெங்கடேசப் பெருமாள் கோயிலில் தீர்த்தரின் வயிற்று வலி முழுமையாக மறைந்தது.

கிருஷ்ணரின் லீலைகளைப் பாடல்களாகப் பாடலானார் தீர்த்தர். கண்ணனும் ராதையும் அவர் முன் தோன்றி அவரது பாடல்களுக்கு ஜல்ஜல் எனக் காலில் சலங்கைகள் கொஞ்ச நடனமாடினார்கள்.
அந்தப் பாடல்கள் தொகுக்கப்பட்டு 'கிருஷ்ண லீலா தரங்கிணி' எனப் பெயர் பெற்றன. வரகூரிலேயே வாழ்ந்து சித்தி அடைந்தார் மகான் ஸ்ரீநாராயண தீர்த்தர்.
தொடர்புக்கு:
thiruppurkrishnan@gmail.com






