என் மலர்
2025 - ஒரு பார்வை

2025 REWIND... திருப்பரங்குன்றம் தீபத்தூண்: சமணத் தூணா, இந்து தீபத்தூணா?
- மலையில் சிக்கந்தர் தர்காவும், தீபத்தூணும் அருகருகே இருப்பதாகவும், அங்கு சென்றால் சட்டம், ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என அனுமதி மறுத்தனர்.
- மனுக்கள் மீதான விரிவான விசாரணை கடந்த 12ம் தேதி தொடங்கி 18-ம் தேதிவரை தொடர்ந்து நடைபெற்றது.
திருப்பரங்குன்றம் மலை, முருகனின் ஆறு படைவீடுகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. மலையின் உச்சியில் உச்சி பிள்ளையார் கோவில், சிக்கந்தர் பாதுஷா தர்கா மற்றும் இந்த சர்ச்சைக்குரிய கல் தூண் உள்ளன. இந்த தூணை "தீபத்தூண்" என்று சிலர் கூறுகின்றனர், ஆனால் அரசு தரப்பு இதை சமணர் காலத்திய தூண் என்று வாதிடுகிறது.
திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை தீப நாளன்று உச்சிப்பிள்ளையார் கோவில் மண்டபத்தில் தீபம் ஏற்றப்பட்டு வரும் நிலையில், வழக்கத்திற்கு மாறாக மலை உச்சியில் உள்ள விளக்கு தூணில் தீபம் ஏற்ற அனுமதி கோரி மதுரையை சேர்ந்த ராம ரவிக்குமார் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி சுவாமிநாதன் மலை உச்சியில் உள்ள விளக்குத் தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற உத்தரவிட்டிருந்தார். ஆனால் கார்த்திகை தீப திருநாள் அன்று (3-ந் தேதி) தீபத்தூணில் தீபம் ஏற்றப்படவில்லை. இதனால் அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
அப்போது அதே நீதிபதி, இந்த வழக்கை தாக்கல் செய்த ராம ரவிக்குமார் மற்றும் அவரது தரப்பினர், திருப்பரங்குன்றம் மலைக்கு சென்று தீபம் ஏற்ற வேண்டும் என்றும், அவர்களுக்கு மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார். ஆனால் திருப்பரங்குன்றம் மலை அடிவாரத்தில் மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் லோகநாதன் தலைமையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார், ராம ரவிக்குமார் தரப்பினரை மலை ஏற அனுமதிக்கவில்லை. மலையில் சிக்கந்தர் தர்காவும், தீபத்தூணும் அருகருகே இருப்பதாகவும், அங்கு சென்றால் சட்டம், ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என அனுமதி மறுத்தனர்.
எனவே மலைக்கு செல்ல தங்களை அனுமதிக்கவில்லை என்று கூறி மறுநாள் (4-ந் தேதி) ராம ரவிக்குமார் தரப்பினர் நீதிபதியிடம் தெரிவித்தனர். இதையடுத்து அன்றைய தினமே ராம ரவிக்குமார் தரப்பினர் மீண்டும் மலைக்குச் சென்று தீபம் ஏற்ற வேண்டும். அதற்கு மாநகர போலீஸ் அதிகாரிகள் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவும் நிறைவேற்றப்படவில்லை.

இந்த 2 உத்தரவுகளையும் நிறைவேற்றாதது குறித்து விசாரிப்பதற்காக தமிழக தலைமை செயலாளர், கூடுதல் டி.ஜி.பி. ஆகியோர் 17-ந்தேதி வீடியோ கான்பரன்சிங் (காணொலி) முறையிலும், மதுரை மாவட்ட கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகள் நேரிலும் ஆஜராகும்படி நீதிபதி உத்தரவிட்டு இருந்தார். அதன்படி இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.
அப்போது தலைமை செயலாளர் முருகானந்தம், சட்டம்-ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி. டேவிட்சன் தேவாசீர்வாதம் ஆகியோர் காணொலி முறையில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு ஆஜரானார்கள். அதேபோல மதுரை மாவட்ட கலெக்டர் பிரவீன் குமார், மாநகர போலீஸ் கமிஷனர் லோகநாதன், துணை போலீஸ் கமிஷனர் இனிகோ திவ்யன், திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோவில் செயல் அலுவலர் யக்ஞ நாராயணன் ஆகியோர் நேரில் ஆஜராகி இருந்தார்கள். அவர்களிடம் விசாரணை நடைபெற்றது.
இதன்படி இந்த மனுக்கள் மீதான விரிவான விசாரணை கடந்த 12ம் தேதி தொடங்கி 18-ம் தேதிவரை தொடர்ந்து நடைபெற்றது. இந்தநிலையில், திருப்பரங்குன்றம் வழக்கில் இரு நீதிபதிகள் ஜெயச்சந்திரன், ராமகிருஷ்ணன் அமர்வில் நடந்த மேல்முறையீட்டு வழக்கின் விசாரணை நிறைவு பெற்றது. தனி நீதிபதி விசாரிக்கும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கிற்கு எதிரான மேல்முறையீடு உள்ளிட்ட இது தொடர்பான அனைத்து வழக்குகளும் வரும் ஜனவரி மாதம் 7-ந்தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என நீதிபதிகள் தெரிவித்தனர். எழுத்துப்பூர்வமான வாதங்களை கடந்த 19-ம் தேதிக்குள் வழங்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டு தீர்ப்புக்காக தேதி குறிப்பிடாமல் வழக்கை ஒத்திவைத்தனர்.

இதனிடையே பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் திருப்பரங்குன்றம் விவகாரம் எதிரொலித்தது. இவ்விவகாரம் தொடர்பாக மக்களவையில் காரசார விவாதம் நடைபெற்றது.
திமுக எம்.பி. டி.ஆர்.பாலு பேசுகையில், "தமிழ்நாட்டில் நடைபெற்ற ஒரு சம்பவத்தால் சட்டத்தைப் பின்பற்றும் அனைத்து குடிமக்களும் கவலையில் உள்ளனர். திருப்பரங்குன்றம் மலையில் யார் தீபத்தை ஏற்றுவது என்பதுதான் பிரச்சனை. அங்கீகரிக்கப்பட்ட அதிகாரிகள் ஏற்றுவதா அல்லது பிரச்சனை ஏற்படுத்த வேண்டும் என்கிற ஒருவர் ஏற்றுவதா என்பதுதான்" என்றார்.
இதனைத் தொடர்த்து மத்திய இணை மந்திரி எல்.முருகன் இந்த விவகாரம் பற்றி பேசினார், "மதுரையில் திமுக அரசு மக்கள் வழிபடுவதை தடுத்துள்ளது. நீதிமன்றத்தின் உத்தரவை அமல்படுத்தாமல் அங்கு சென்றவர்களை கைது செய்து அராஜகப் போக்கில் திமுக அரசும், காவல்துறையும் மக்களின் வழிபடும் உரிமைமை தடுத்து வருகிறது. அங்கு சட்டம் ஒழுங்கு முழுமையாக சீர்குலைந்துள்ளது. காவல்துறை சட்டம் ஒழுங்கை காப்பாற்றாமல் வழிபட செய்பவர்களை கைது செய்து வருகிறது. திமுக அரசு அரசியலுக்காக இவ்வாறு செய்து வருகிறது" என்றார்.
பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கூறுகையில், "திருப்பரங்குன்றம் மக்கள் பல நூற்றாண்டுகளாக மத நல்லிணக்கத்தோடு வாழ்ந்து வருகிறார்கள். அதைச் சீர்குலைக்கும் வகையில் பாஜக செயல்படுகிறது" என்று தெரிவித்தார். மேலும் எல்.முருகன் பாராளுமன்றத்தில் திருப்பரங்குன்றம் தொடர்பாக பொய் பிரசாரத்தை முன்வைத்துள்ளதாகக் கூறிய கனிமொழி, "திமுக ஆளும் தமிழ்நாட்டில் பொது அமைதியும், சமூக நல்லிணக்கமும் நிலவுகிறது. பாஜக ஆளும் ஏதேனும் மாநிலத்தில் அத்தகைய நிலை உள்ளதா? தமிழ்நாட்டில் மதக் கலவரத்தை உருவாக்கி, திமுக அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்த வேண்டும் என்பதே பாஜகவின் நோக்கம் என்று கூறினார்.
இதனிடையே வளர்ச்சி அரசியலா? அல்லது *** அரசியலா? எது தேவை என்பதை மதுரை மக்களே முடிவு செய்வார்கள் என்று திருப்பரங்குன்றம் கோவில் விவகாரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்திருந்தார்.
இவ்விவகாரத்திற்கு நீதிமன்றத்தில் வெளியிடப்படும் தீர்ப்பின் மூலமாகவே முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்று கருதப்படுகிறது.






