என் மலர்
2025 - ஒரு பார்வை

2025 REWIND: என்னப்பா போலாமா?.. இந்த ஆண்டு இந்தியர்கள் பயணித்த டாப் 10 நாடுகள் இவைதான்!
- குறைந்த செலவில் வெளிநாட்டுப் பயணம் செல்ல விரும்பும் இந்தியர்களின் சொர்க்கமாகத் தாய்லாந்து உள்ளது.
- சிங்கப்பூர் இந்தியர்களின் டாப் 5 பட்டியலில் இடம் பிடித்துள்ளது.
தினம் பின் தூங்கி முன் எழுந்து வாரம் முழுவதும் அலுவலகத்துக்கு வீட்டுக்கும் இடையில் பலரின் பயணம் முடிந்துவிடுகிறது.
வார விடுமுறை, பண்டிகை விடுமுறை, தொடர் விடுமுறை எப்போதும் வரும் என காத்திருப்பவர்களே அதிகம்.
கூண்டுக்குள் வாழ்ந்து பழகிய கிளிக்கு சுதந்திரம் என்பது தண்டனையாகவும் இருக்கலாம். ஆனால் மனித இனத்திற்கு பயணம் என்பது இன்றியமையாதது.
அதிலும் சுற்றுலா என்பது வெறும் பயணம் மட்டுமல்ல. அது புதிய கலாச்சாரங்களை கண்டறிவதும் புதிய மக்களைச் சந்திப்பதும் என்றென்றும் நிலைத்திருக்கும் நினைவுகளை உருவாக்குவதும் ஆகும். அது ஆன்மீக தேடலாகவும் உள்நோக்கிய பயணமாகவும் இருக்கலாம்.
இருப்பது ஒரு வாழ்க்கை, இதில் நாம் வாழும் இந்த அழகான உலகத்தின், இயற்கையின் பிரமிப்புகளை கண்ணுற்று காணும் வாய்ப்பு ஒவ்வொரு மனிதனுக்குமான உரிமை.
அந்த வகையில் சுற்றுலா செல்வதில் இந்தியர்களை அடித்துக் கொள்ள முடியாது. அது பக்கத்தில் ஊரில் உள்ள மொட்டைப் பாறையாக இருந்தாலும் சரி வெளிநாடாக இருந்தாலும் சரி அவரவர் சக்திக்கு ஏற்றவாறு சுற்றுலா சென்றவண்ணம் தான் உள்ளனர்.
சேரனின் தவமாய் தவமிருந்து படத்தில் மகனை டூருக்கு அனுப்ப காசில்லாத தந்தை ராஜ்கிரண் அவர்களை அதே ஊரிலேயே குளத்தில் குளிப்பது, நாடகம் பார்ப்பது என சிறு சிறு விஷயங்களில் உள்ள இன்பத்தை அனுபவிக்கச் செய்வார்.
அண்மையில் பேட்டி ஒன்றில் பேசிய அதன் இயக்குனர் சேரன், ஒரு ஊருக்குள்ளேயே இத்தனை சுவாரஸ்யமான விஷயங்கள் இருக்கிறது என்பதை உணர்த்தவே அந்த சீக்வன்ஸ் என்று கூறியிருப்பார்.
ஆனால் இப்போது நகர்வாசிகளாகிவிட்ட மனிதர்களுக்கு அதுவும் கிடைப்பது அரிதே. எனவே இந்த வெற்றிடத்தை சசுற்றுலா இட்டு நிரப்புகிறது என்றே கூறலாம்.
அந்த வகையில் 2025-ஆம் ஆண்டு முடிவடைய உள்ள நிலையில், இந்த ஆண்டில் இந்தியச் சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் விரும்பிச் சென்ற நாடுகளைப் பற்றிய தொகுப்பை பார்க்கலாம்.
2025-ஆம் ஆண்டில் இந்தியர்களின் வெளிநாட்டுப் பயண ஆர்வம் புதிய உச்சத்தை எட்டியுள்ளது.
வழக்கமான சுற்றுலாத் தலங்கள் மட்டுமின்றி, ஜப்பான், தென் கொரியா, ஜார்ஜியா போன்ற புதிய நாடுகளையும் இந்தியர்கள் தேடிச் சென்றுள்ளனர்.
இருப்பினும், இந்திய சுற்றுலாப் பயணிகளின் பட்டியலில் இப்போதும் முதலிடத்தில் இருப்பவை பாரம்பரியமான சில நாடுகளே.
மத்திய சுற்றுலா அமைச்சகத்தின் தரவுகளின் அடிப்படையில், இந்த ஆண்டு இந்தியர்கள் அதிகம் பயணித்த முதல் 10 நாடுகளின் இவைதான்...
பட்டியலில் முதலிடத்தில் இருப்பது ஐக்கிய அரபு அமீரகம். சுற்றுலா, தொழில் நிமித்தமான பயணங்கள் மற்றும் அங்கு வசிக்கும் உறவினர்களைக் காணச் செல்வது என சுமார் 7.78 மில்லியன்(77 லட்சம்) இந்தியர்கள் இந்த ஆண்டு அமீரகத்திற்குப் பயணம் செய்துள்ளனர்.
துபாய் மற்றும் அபுதாபி ஆகியவை இந்தியர்களின் விருப்பமான இடங்களாகத் தொடர்கின்றன.
இரண்டாவது இடத்தில் சவுதி அரேபியா உள்ளது. ஹஜ் மற்றும் உம்ரா உள்ளிட்ட புனிதப் பயணங்கள் மட்டுமின்றி, தொழில் மற்றும் குடும்பப் பயணங்களுக்காகவும் சுமார் 3.42 மில்லியன் இந்தியர்கள் இந்தாண்டு இங்கு சென்றுள்ளனர்.
சுற்றுலா, கல்வி மற்றும் குடும்ப உறவுகளை இந்தியர்கள் சந்திக்கச் செல்வதில் அமெரிக்கா மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது.
டிரம்ப் அரசின் கடுமையான கட்டுப்பாடுகள் இருந்தபோதும், அதை இம்மியளவும் சட்டை செய்யாமல் இந்த ஆண்டில் சுமார் 2.14 மில்லியன் இந்தியர்கள் அமெரிக்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளனர்.
நான்காவது தாய்லாந்து. குறைந்த செலவில் வெளிநாட்டுப் பயணம் செல்ல விரும்பும் இந்தியர்களின் சொர்க்கமாகத் தாய்லாந்து உள்ளது.
தாய்லாந்து
ஆன்மிகச் சுற்றுலா மற்றும் பொழுதுபோக்கு என சுமார் 1.91 மில்லியன் இந்தியர்கள் இவ்வாண்டு தாய்லாந்தை கண்டு ரசித்துள்ளனர்.
ஐந்தாவது சிங்கப்பூர். பாதுகாப்பு, எளிதான போக்குவரத்து மற்றும் குடும்பத்துடன் கண்டு ரசிக்கக்கூடிய இடங்கள் அதிகம் இருப்பதால், சிங்கப்பூர் இந்தியர்களின் டாப் 5 பட்டியலில் இடம் பிடித்துள்ளது.
ஆறாவது பிரிட்டன். லண்டன் உள்ளிட்ட முக்கிய நகரங்களைக் காணவும், கல்வி மற்றும் வணிக ரீதியாகவும் இந்தியர்கள் பிரிட்டனை அதிக அளவில் தேர்ந்தெடுத்துள்ளனர்.
ஏழாவது கத்தார். கத்தாரின் எளிமையாக்கப்பட்ட விசா நடைமுறைகள் மற்றும் தோஹா வழியாகச் செல்லும் சர்வதேச விமான இணைப்புகள் காரணமாக, இந்தியப் பயணிகளின் எண்ணிக்கை இங்கு அதிகரித்துள்ளது.
எட்டாம் இடத்தில் கனடா. சுற்றுலா மற்றும் அங்கு குடியேறியுள்ள உறவினர்களைச் சந்திக்கச் செல்வதற்காகக் கனடா இப்போதும் இந்தியர்களின் விருப்பமான நாடாகவே நீடிக்கிறது.
ஒன்பதில் ஓமன்.. இயற்கை எழில் கொஞ்சும் இடங்கள் மற்றும் கலாச்சார அனுபவங்களுக்காக இந்தியர்கள் ஓமனைத் தேர்ந்தெடுத்துள்ளனர். விசா விதிமுறைகள் தளர்த்தப்பட்டது இதற்கு முக்கியக் காரணமாகும்.
பட்டியலில் 10 ஆம் இடத்தை பிடிக்கிறது மலேசியா. பட்ஜெட் பயணங்கள் மற்றும் குடும்பச் சுற்றுலாவுக்குஉகந்த நாடாக மலேசியா பத்தாவது இடத்தைப் பிடித்துள்ளது.
இந்தியர்களுக்கான விசா விலக்கு மற்றும் சிறந்த விமான போக்குவரத்து வசதிகள் மலேசியாவை இந்தியர்களின் விருப்பமான இடமாக தொடர்ச் செய்துள்ளது.
மொத்தத்தில் 2025 ஆம் ஆண்டை இனிதே இந்தியர்கள் கழித்துள்ளனர். விசா நடைமுறைகள் எளிதாக்கப்படுவதும், நேரடி விமான சேவைகள் அதிகரிப்பதும் வரும் ஆண்டுகளில் இந்தப் பட்டியலை இன்னும் மாற்றியமைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.






