என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    ஆட்டோவில் லாட்டரி சீட்டு விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
    புதுச்சேரி:

    லாஸ்பேட்டை மடுவுபேட் சல்பனாசாவ்லா நகரில் கடை அருகே ஆட்டோவில் வைத்து 3  நம்பர் லாட்டரி சீட்டு விற்பனை செய்யப்படுவதாக லாஸ்பேட்டை போலீசாருக்கு தகவல் வந்தது.

    இதையடுத்து சப்-இன்ஸ் பெக்டர் திருமுருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று கண்காணித்தனர். அப்போது அங்கு சந்தேகப்படும் படியாக ஒரு ஆட்டோ மற்றும் மோட்டார் சைக்கிள் நிறுத்தப்பட்டிருந்தது.

    இதைத்தொடர்ந்து போலீசார் அங்கு நின்றுக் கொண்டிருந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் சாரம் வேலன் நகரை சேர்ந்த புருஷோத்தமன் (வயது45) மற்றும் லாஸ்பேட்டை கிருஷ்ணாநகரை சேர்ந்த புகழேந்தி (20) என்பதும், இவர்கள் வாடிக்கையாளர்களுக்கு ஆட்டோவில் வைத்து 3 நம்பர் லாட்டரி சீட்டு விற்று வந்தது தெரியவந்தது.

    இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ஆட்டோ, மோட்டார் சைக்கிள் மற்றும் லாட்டரி விற்பனை பணம் ரூ-.5 ஆயிரத்து 800 ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
    தமிழ் புத்தாண்டு முதல் கடற்கரை திருவிழா நடத்தப்படும் என்று அமைச்சர் லட்சுமிநாராயணன் தெரிவித்தார்.
    புதுச்சேரி:

    புதுச்சேரியின் சிறந்த கட்டிடக்கலையின் பாரம்பரியத்தை பாதுகாத்து அழகிய கடற்கரை, நீர்நிலைகள், குளங்கள், வளமான ஆன்மிக தலங்களின் அறிவுசார்ந்த வரலாற்று பெருமைகளை விரிவுபடுத்தும் நோக்கத்தோடு ஒவ்வொரு ஆண்டும் புதுச்சேரி பாரம்பரிய திருவிழா கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டுக்கான தொடக்க விழா நேற்று மாலை அலையன்ஸ் பிரான்சிஸ் ஆடிட்டோரியத்தில் நடந்தது.

    நிகழ்ச்சியில் அமைச்சர் லட்சுமிநாராயணன் தலைமை தாங்கி பாரம்பரிய விழாவை தொடங்கி வைத்தார். அப்போது பேசியதாவது:-

    புதுச்சேரியில் பாரம்பரிய கட்டிடங்களுக்கென தனி மதிப்புண்டு. இது அரசுக்கும் தெரியும். இதனால் பாரம்பரிய கட்டிடங்களை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. சமீபத்தில் கூட பாரம்பரிய கட்டிடங்களை பாதுகாக்கவும், சுற்றுலாவை மேம்படுத்தவும் எந்த மாதிரியான நடவடிக்கைகள் மேற்கொள்வது என்பது குறித்து ஆலோசித்தோம்.

    இங்குள்ள கடற்கரைகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. சர்வதேச அளவில் ‘ப்ளூ பிளாக் பீச்’ பட்டியலில் சின்ன வீராம்பட்டினம் ஈடன் கடற்கரை இடம் பிடித்துள்ளது. எனவே கடற்கரைகளை மேலும் மேம்படுத்த கடற்கரை திருவிழா நடத்த திட்டமிட்டுள்ளோம். வருகிற தமிழ் புத்தாண்டு அன்று இந்த திருவிழா தொடங்கி ஒவ்வொரு கடற்கரையிலும் நடத்த ஆலோசித்துள்ளோம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் அலையன்ஸ் பிரான்சிஸ் தலைவர் டாக்டர் சதீஷ், டாக்டர் நல்லாம் உள்பட பலர் கலந்துகொண்டனர். விழாவில் ஷோபனா ரமேசின் இசை நிகழ்ச்சி நடந்தது. விழாவில் வருகிற 27-ந் தேதி வரை பல்வேறு போட்டிகளும், நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளது.
    புதுச்சேரியில் ஒருவருக்கு மட்டுமே கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
    புதுச்சேரி:

    புதுவையில் 497 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. புதிதாக ஒருவருக்கு மட்டும் தொற்று உறுதி செய்யப்பட்டது. புதுவையில் 4, காரைக்காலில் ஒருவர் என 5 பேர் தொற்றுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். புதுவையில் 12, காரைக்காலில் 9, ஏனாமில் 2 பேர் என 23 பேர் சிகிச்சையில் குண மடைந்தனர். 

    புதுவை மாநிலத்தில் ஒட்டு மொத்தமாக  இதுவரை ஒரு லட்சத்து 65 ஆயிரத்து 739 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். ஒரு லட்சத்து 63 ஆயிரத்து 725 பேர் சிகிச்சையில் குணமடைந்துள்ளனர். புதுவையில் 27, காரைக்காலில் 18, ஏனாமில் 2 பேர் என 47 பேர் வீட்டு தனிமையில் உள்ளனர். புதுவை மாநிலத்தில் இப்போது 52 பேர் கொரோனா தொற்றுடன் உள்ளனர். 

    மாநிலத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை ஆயிரத்து 962 ஆக உள்ளது. புதுவையில் 2-வது தவணை உள்பட 15 லட்சத்து 94 ஆயிரத்து 726 பேர் தடுப்பூசி போட் டுள்ளனர். 

    இத்தகவலை சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
    மத்திய அரசு மழை நிவாரணம் நியாயமற்றது என்று முன்னாள் எம்.பி. ராமதாஸ் வேதனை தெரிவித்துள்ளார்.
    புதுச்சேரி:

    புதுவை முன்னாள் எம்.பி . பேராசிரியர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    புதுவையில் பெய்த கனமழைக்கு மத்திய அரசு நிவாரணமாக ரூ.17.66 கோடி மட்டும் வழங்கியுள்ளது நியாயமற்றது. இது மிகப்பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது. புதுவையில் வரலாறு காணாத வெள்ளத்தால் கடும் பாதிப்பு ஏற்பட்டது.  மாநில அரசு இதை மதீப்பீடு செய்து முதல்கட்டமாக ரூ.300 கோடி கோரியது. மதிப்பீட்டுக்குழு இதை கணக்கில் கொள்ளாமல் வெறும் 5.9 சதவீத தொகையை அளித்துள்ளது. 

    பேரிடர் நிவாரணத்தைத் தீர்மானிக்க மத்திய அரசு பின்பற்றும் அணுகுமுறை தவறாக இருப்பதால்தான் இப்படிப்பட்ட அவலம் நிகழ்கிறது. புதுவை மாநில மக்களின் துயர் துடைக்க முதல்-அமைச்சர் ஒரு ரேசன் கார்டுக்கு ரூ.5 ஆயிரம் என 3 லட்சத்து 27 ஆயிரம் கார்டுகளுக்கு ரூ.156.40 கோடி நிவாரணம் கொடுத்துள்ளார். சேத மடைந்த சாலைகளை சீரமைக்க ரூ.186 கோடி ஒதுக்கப்பட்டு, முதல் கட்ட மாக ரூ.90 கோடி சாலை பணிகள் தொடங்கியுள்ளன. 

    இது தவிர, 223 சிறு பாலங்கள், 38 வாய்க்கால்கள் கடும் சேதமடைந்துள்ளன. செல்லிப்பட்டு அணையை சரி செய்ய ரூ.16 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது. பயிர்களின் சேத மதிப்பு ரூ.14 கோடி. கால்நடை, வீடு சேதம் ரூ.2 கோடி. ஒட்டுமொத்தமாக புதுவை மாநிலத்துக்கு ரூ.500 கோடி இழப்பீடு தேவைப்படும். 

    புதுவை அரசுக்கு மத்திய அரசு அனைத்து உதவிகளையும் செய்யும் என சிலர் கூறுகின்றனர். இது உண்மையில்லை என்பதையே இந்த நிவாரணம் தெளிவுபடுத்துகிறது.  மத்திய அரசு, பிரதமருக்கு புதுவை மீது பரிவும், பாசமும் இருந்தால், கவர்னர் மத்திய அரசிடம் பேசி முதல்கட்ட நிவாரண தொகையில் விடுபட்ட ரூ.282.34 கோடியை பெற்றுத்தர வேண்டும். இதுதான் புதுவைக்கு செய்யக்கூடிய மிகப்பெரிய பங்களிப்பாக இருக்கும். 

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
    புதுவை ஜெயிலில் ரவுடியிடம் செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது.
    புதுச்சேரி:

    புதுவை காலாப்பட்டு மத்திய சிறைச்சாலையில் 200-க்கும் மேற்பட்ட தண்டனை மற்றும் விசாரணை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களிடம் செல்போன் நடமாட்டம் அதிகமாக இருப்பதாக குற்றச்சாட்டு அவ்வப்போது  இருந்து வருகிறது. 

    இதனிடையே சிறையிலிருந்து ரவுடிகள் வெளியில் உள்ள தங்களது கூட்டாளிகள் மூலம் குற்றச்சம்பவங்களை அரங்கேற்றி வருகின்றனர். அதனை  தடுக்க சிறைத்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மேலும் சிறையில் உள்ள ரவுடிகளுக்கு அங்குள்ள சிறை ஊழியர்கள் செல்போன், கஞ்சா உணவு பொருள்கள் உள்ளிட்டவற்றை வழங்குவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிறையில் செல்போன் பறிமுதல் செய்யப்பட்ட போது அங்குள்ள ஊழியர் ஒருவருக்கு தொடர்பு இருந்தது தெரியவந்தது. இந்த நிலையில் சிறையில் ஜெயில் சூப்பிரண்டு பாஸ்கரன் அதிரடி சோதனையில் ஈடுபட்டார். அப்போது இரட்டை கொலை வழக்கு குற்றவாளியான முதலியார்பேட்டையை சேர்ந்த பெருமாள் ராஜா என்பவரிடம் இருந்து செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. 

    அவருக்கு அந்த செல்போன் எப்படி கிடைத்தது என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சிறை ஊழியர்கள் யாராவது அவருக்கு உதவி செய்தார்களா? என்பது குறித்து விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது.
    மக்களின் உரிமைகளை தட்டிப்பறிக்க கூடாது என்று முன்னாள் எம்.எல்.ஏ. வையாபுரி மணிகண்டன் கூறியுள்ளார்.
    புதுச்சேரி:-

    புதுவை கிழக்கு மாநில அ.தி.மு.க. தேர்தல் பிரிவு செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான வையாபுரி மணிகண்டன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    மத்திய அரசின்  அன்ன யோஜானா இலவச அரிசி வழங்கும் திட்டத்தின்படி 2022 பிப்ரவரி, மார்ச் ஆகிய 2 மாத அரிசி சிவப்பு ரேசன் கார்டுதாரர்களுக்கு நபருக்கு தலா 5 கிலோ வீதம் வழங்கப்படுகிறது. 

    இந்த அரிசியை 20-ந்தேதிக்குள் பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும், இலவச அரிசி பெறாதவர்களின் சிவப்பு ரேசன் கார்டுகள் ரத்து செய்யப்படும் என புதுவை குடிமை பொருள் வழங்கல்துறை இயக்குனர்  உத்தரவில் குறிப்பிட்டுள்ளார். இதை புதுவை மாநில அ.தி.மு.க. சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம்.  

    அரிசி பெறாவிட்டால் சிவப்பு ரேசன் கார்டுகளை ரத்து செய்வோம் என ஏழை மக்களை மிரட்டும் தொனியில் உத்தர விட்டிருப்பது சரியானதல்ல. ரேஷன் கார்டு என்பது ஒரே ஒரு திட்டத்திற்காக வழங்கப்படுவது அல்ல. 

    உதவித்தொகை, மருத்துவ காப்பீடு, குழந்தைகளுக்கு சான்றிதழ் பெறுவது என அதிக முக்கியத்துவம் வாய்ந்த அரசின் முக்கிய ஆவணமாக பார்க்கப்படுகிறது. அரிசியை பெறுவதும், வீணாக்க வேண்டாம் என மறுப்பதும் மக்களின் உரிமை. இந்த உரிமையை தட்டிப்பறித்து எதேச்சதிகாரத்தை செலுத்த நினைப்பது, மக்களின் வரிப்பணத்தில் சம்பளம் பெறும் அதிகாரி களுக்கு அழகல்ல.
     
    ஒட்டு மொத்தமாக அரிசி பெறாவிட்டால் ரேசன் கார்டு ரத்து என்ற பொதுவான அறிவிப்பை அ.தி.மு.க. அனுமதிக்காது. கட்டாயம் அரிசி பெற வேண்டும் என சட்ட விதிகளை காட்டி, மக்களின் உரிமைகளை தட்டிப்பறிக்க நினைப்பதை அ.தி.மு.க. ஏற்காது.  எனவே அரிசி பெறாவிட்டால் ரேசன் கார்டை ரத்து செய்வோம் என்ற மிரட்டல் அறிவிப்பை துறை அதிகாரி வாபஸ் பெற வேண்டும். 

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
    அரியாங்குப்பத்தில் மதுக்கடை கேஷியரை பீர்பாட்டிலால் குத்திய 4 பேரை போலீசார் தேடிவருகிறார்கள்.
    புதுச்சேரி:

    அரியாங்குப்பம்- வீராம்பட்டினம் ரோட்டில் தனியார் மதுக்கடை உள்ளது.  இந்த மதுபான கடையின் உரிமையாளரின் மகன் விக்கி சம்பவத்தன்று  மதுக்கடையில் கேஷியராக  வேலை பார்க்கும் மணவெளி கிராமத்தை சேர்ந்த முத்துகிருஷ்ணன் (வயது 28) என்பவருடன் நோணாங்குப்பம் பகுதியில் உள்ள தனியார் ஓட்டல் அருகில் பேசிக்கொண்டு இருந்தார். 
    அப்போது அரியாங்குப்பம் பகுதியை சேர்ந்த முருகன் என்பவர் அங்கு வந்து அவர்களிடம் வீண் தகராறு செய்தார். இதனைத்தொடர்ந்து முத்துக்கிருஷ்ணனும், விக்கியும்  மதுக்கடைக்கு திரும்பினர். 

    இந்த நிலையில் ஆத்திரம் அடைந்த முருகன் மற்றும் அவரது கூட்டாளிகளான தாஸ் என்ற ராமதாஸ், சிவகுரு, அன்பு ஆகியோருடன் மதுக்கடைக்கு வந்து விக்கியை தாக்க முயன்றனர். இதனை தடுக்க முயன்ற கேஷியர் முத்துகிருஷ்ணனை அந்த கும்பல் சரமாரியாக தாக்கி அங்கிருந்த  பீர்பாட்டிலால் குத்திவிட்டு கடையை சூறையாடி தப்பி சென்றனர்.

    படுகாயமடைந்த முத்து கிருஷ்ணன் சம்பவ இடத்தில் மயங்கி போனார்.  இதனால் அவர்  இறந்துவிட்டார் என்று காட்டுத்தீ போல அப்பகுதியில் பரவியது. மேலும் அப்பகுதியில் பதட்டம் நிலவியது. தகவல் அறிந்தவுடன் அரியாங்குப்பம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். அங்கு படுகாயமடைந்து மயங்கிய நிலையில் கிடந்த முத்துகிருஷ்ணனை மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் தற்போது முத்துகிருஷ்ணன் சிகிச்சை பெற்று வருகிறார். 

    இதுகுறித்த புகாரின் பேரில்  அரியாங்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து முருகன் மற்றும் அவரது கூட்டாளிகளை வலைவீசி தேடிவருகின்றனர்.
    பாகூரில் கணவன் - மனைவியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த போதை கும்பலை போலீசார் தேடி வருகிறார்கள்.
    புதுச்சேரி:

    பாகூர் தேச மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் உதயமணி (வயது 30). இவர் சென்னையில் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.தற்போது இவர் மனைவியுடன் குடியிருப்பு பாளையம் மெயின் ரோட்டில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார்.

    நேற்று முன்தினம் இரவு இவரது வீட்டின் முன்ப அதே பகுதியை சேர்ந்த அப்பு என்ற அர்ப்புதன், சவுந்தர், கோபால் மற்றும் பரதன் ஆகியோர் குடிபோதையில் ஆபாசமாக பேசிக்கொண்டு இருந்தனர். இதனை உதயமணி கண்டித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த அந்த போதை கும்பல் உதயமணியை தகாதவார்த்தைகளால் திட்டி கையாலும், கற்களாலும் சரமாரியாக தாக்கினர். 

    இதனை உதயமணியின் மனைவி தடுக்க முயன்றார். அவரையும் அந்த கும்பல் தாக்கியது. மேலும் இருவரையும் கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்து விட்டு அந்த கும்பல் அங்கிருந்து தப்பி சென்று விட்டது. இந்த தாக்குதலில் காயம் அடைந்த கணவன்- மனைவி இருவரும் அங்குள்ள அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர்.  பின்னர் இதுகுறித்து உதயமணி பாகூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து போதை கும்பலை தேடி வருகிறார்கள்.
    தோட்டக்கலை விவசாயிகளுக்கு ரூ.32 லட்சம் மானியத்துக்கான ஆணையை முதல்-அமைச்சர் ரங்கசாமி வழங்கினார்.
    புதுச்சேரி:

    ஒருங்கிணைந்த தோட்டக்கலை மேம் பாட்டு திட்டத்தின்கீழ் தோட்டக்கலை விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் உற்பத்திக்கு பிந்தைய மானியம் வழங்கப்பட்டு வருகிறது. 

    வெற்றிலை சாகுபடிக்கு பிந்தைய மானியமாக ஒரு சென்டுக்கு ரூ.ஆயிரத்து 500, ஹெக்டேருக்கு ரூ.50 ஆயிரத்துக்கு மிகாமல் வழங்கும் திட்டம், புதிய தோட்டம் நிறுவுதல், மலர், காய்கறி, பழ பயிர், வாசனை பயிர்களுக்கு மானியம் அனுமதிக்கப்பட்டுள்ளது. 

    இதன்படி 154.87 ஹெக்டேர் தோட்டக்கலை பயிர்கள் சாகுபடி செய்த 449 விவசாயிகளுக்கு ரூ.24 லட்சத்து 60 ஆயிரத்து 47, 544.82 சென்டில் வெற்றிலை சாகுபடி செய்த 37 விவசாயிகளுக்கு ரூ.8 லட்சத்து 17 ஆயிரத்து 230 என மொத்தம் ரூ.32 லட்சத்து 77 ஆயிரத்து 277 நிதி வங்கி கணக்கில் செலுத்தப்படுகிறது. 

    இதற்கான ஆணையை முதல்-அமைச்சர் ரங்கசாமி, அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் முன்னிலையில் வழங்கினார். நிகழ்ச்சியில் வேளாண்துறை அதிகாரிகள், பயனாளிகள்  கலந்து கொண்டனர்.
    மின்துறை அலுவலகம் முன்பு வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    புதுச்சேரி:

    இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் உழவர்கரை, நகர குழு சார்பில் மின்துறை தலைமை அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு நகர கமிட்டி தலைவர் ரஞ்சித், உழவர்கரை கமிட்டி தலைவர் நிலவழகன் தலைமை தாங்கினர். நகர செயலாளர் பிரதாப்,  உழவர்கரை செயலாளர் சஞ்சய் முன்னிலை வகித்த னர். பிரதேச தலைவர் பாஸ்கர்,  செயலாளர் ஆனந்த் ஆகியோர் கண்டன உரையாற்றினர். 

    போராட்டத்தில் நவீன், சத்யா, மாணவர் சங்க செயலாளர் பிரவீன் ஆகியோர் பங்கேற்றனர். புதுவை மின்துறையில் ஓய்வு பெற்ற இளநிலை, உதவி பணியாளரை பணிய மர்த்துவதை கண்டித்தும், படித்த இளைஞர்களுக்கு வேலை வழங்கக்கோரியும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
    இலவச அரிசி பெறாத சிவப்பு ரேசன் அட்டை ரத்து அறிவிப்பை உடனே திரும்ப பெற வேண்டும் என முன்னாள் எம்.எல்.ஏ. அனந்தராமன் வலியுறுத்தி உள்ளார்.
    புதுச்சேரி:

    புதுவை மாநில காங்கிரஸ் துணை தலைவரும், முன்னாள் அரசு கொறடாவுமான அனந்தராமன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    புதுவை மாநிலத்தில் மத்திய அரசு திட்டத்தின் கீழ் 5 கிலோ இலவச அரிசியை ஒவ்வொரு சிவப்பு அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் என்று குடிமைப்பொருள் இயக்குனர்  ஒரு சுற்றறிக்கையை அனுப்பி இருந்தார். 
    இந்த சுற்றறிக்கை மூலம் சிவப்பு அட்டை வைத்திருக்கக்கூடிய நபர்கள் வசிக்கக்கூடிய பகுதியில் உள்ள ரேஷன் கடையில் பெற்றுக் கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது. அப்படி அவர்கள் பெறவில்லை என்றால் அவருடைய குடும்ப அட்டையை ரத்து செய்துவிடுவேன் என்று இயக்குனர் அறிவித்துள்ளார். இது கண்டனத்துக்குரியது இப்படிப்பட்ட செயலை குடிமைப்பொருள் இயக்குனரகம் மாற்றிக்கொள்ளவேண்டும்.

    உடனடியாக சம்பந்தப்பட்ட அமைச்சர் இதில் தலையிட வேண்டும் இந்த நாடு மிகப்பெரிய ஜனநாயக நாடு. அவர்கள் தங்களுடைய தகுதிக்கு ஏற்ப வாழ்வதற்கும் தாங்கள் எதை விரும்பி உண்ண வேண்டும் என்று கூறுவதற்கும் சுதந்திரமாக முடிவு எடுப்பதற்கும் எல்லாவிதமான அதிகாரமும் அரசியல் சாசனம் ஒவ்வொரு குடிமகனுக்கும் கொடுத்திருக்கிறது.

    அந்த வகையில் மிகப்பெரிய பொறுப்பில் இருக்க கூடிய ஒருவர் இப்படிப்பட்ட அறிவிப்பை தான்தோன்றித்தனமாக விடுவது மக்களை அடிமைப்படுத்த ஒரு செயலாக  உள்ளது. உடனடியாக இந்த அறிவிப்பை திரும்பப் பெற வேண்டும். 

    இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.
    தந்தை பெரியார் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவிகளுக்கு தற்காப்பு கலைப் பயிற்சி நடைபெற்றது.
    புதுச்சேரி:

    அரியாங்குப்பம் தந்தை பெரியார் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தற்காப்புக் கலைப்பயிற்சி தொடக்க விழா நடைப்பெற்றது. இவ்விழாவில் பள்ளியின் துணை முதல்வர் சுபாஷ் சந்திரன் தலைமை தாங்கி பயிற்சி வகுப்பினை தொடங்கி வைத்தார்.

    காராத்தே பயிற்சியாளர் ஞானசேகரன் கராத்தே கலையின் பயன்களை பற்றியும், அதன் சிறப்பை பற்றியும் மாணவிகளிடம் உரையாற்றினார். மேலும் 8-ஆம் வகுப்பு மாணவிகளுக்கு பயிற்சியளித்தார்.  தலைமை ஆசிரியை விஜயராணி சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பள்ளியின் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் செய்தனர். முடிவில் சிவக்குமார் நன்றி கூறினார்.
    ×