என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்
மக்களின் உரிமைகளை தட்டி பறிக்கக்கூடாது - முன்னாள் எம்.எல்.ஏ. வையாபுரி மணிகண்டன்
மக்களின் உரிமைகளை தட்டிப்பறிக்க கூடாது என்று முன்னாள் எம்.எல்.ஏ. வையாபுரி மணிகண்டன் கூறியுள்ளார்.
புதுச்சேரி:-
புதுவை கிழக்கு மாநில அ.தி.மு.க. தேர்தல் பிரிவு செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான வையாபுரி மணிகண்டன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மத்திய அரசின் அன்ன யோஜானா இலவச அரிசி வழங்கும் திட்டத்தின்படி 2022 பிப்ரவரி, மார்ச் ஆகிய 2 மாத அரிசி சிவப்பு ரேசன் கார்டுதாரர்களுக்கு நபருக்கு தலா 5 கிலோ வீதம் வழங்கப்படுகிறது.
இந்த அரிசியை 20-ந்தேதிக்குள் பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும், இலவச அரிசி பெறாதவர்களின் சிவப்பு ரேசன் கார்டுகள் ரத்து செய்யப்படும் என புதுவை குடிமை பொருள் வழங்கல்துறை இயக்குனர் உத்தரவில் குறிப்பிட்டுள்ளார். இதை புதுவை மாநில அ.தி.மு.க. சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம்.
அரிசி பெறாவிட்டால் சிவப்பு ரேசன் கார்டுகளை ரத்து செய்வோம் என ஏழை மக்களை மிரட்டும் தொனியில் உத்தர விட்டிருப்பது சரியானதல்ல. ரேஷன் கார்டு என்பது ஒரே ஒரு திட்டத்திற்காக வழங்கப்படுவது அல்ல.
உதவித்தொகை, மருத்துவ காப்பீடு, குழந்தைகளுக்கு சான்றிதழ் பெறுவது என அதிக முக்கியத்துவம் வாய்ந்த அரசின் முக்கிய ஆவணமாக பார்க்கப்படுகிறது. அரிசியை பெறுவதும், வீணாக்க வேண்டாம் என மறுப்பதும் மக்களின் உரிமை. இந்த உரிமையை தட்டிப்பறித்து எதேச்சதிகாரத்தை செலுத்த நினைப்பது, மக்களின் வரிப்பணத்தில் சம்பளம் பெறும் அதிகாரி களுக்கு அழகல்ல.
ஒட்டு மொத்தமாக அரிசி பெறாவிட்டால் ரேசன் கார்டு ரத்து என்ற பொதுவான அறிவிப்பை அ.தி.மு.க. அனுமதிக்காது. கட்டாயம் அரிசி பெற வேண்டும் என சட்ட விதிகளை காட்டி, மக்களின் உரிமைகளை தட்டிப்பறிக்க நினைப்பதை அ.தி.மு.க. ஏற்காது. எனவே அரிசி பெறாவிட்டால் ரேசன் கார்டை ரத்து செய்வோம் என்ற மிரட்டல் அறிவிப்பை துறை அதிகாரி வாபஸ் பெற வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Next Story






