என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்
ஜெயிலில் ரவுடியிடம் செல்போன் பறிமுதல்
புதுவை ஜெயிலில் ரவுடியிடம் செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது.
புதுச்சேரி:
புதுவை காலாப்பட்டு மத்திய சிறைச்சாலையில் 200-க்கும் மேற்பட்ட தண்டனை மற்றும் விசாரணை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களிடம் செல்போன் நடமாட்டம் அதிகமாக இருப்பதாக குற்றச்சாட்டு அவ்வப்போது இருந்து வருகிறது.
இதனிடையே சிறையிலிருந்து ரவுடிகள் வெளியில் உள்ள தங்களது கூட்டாளிகள் மூலம் குற்றச்சம்பவங்களை அரங்கேற்றி வருகின்றனர். அதனை தடுக்க சிறைத்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மேலும் சிறையில் உள்ள ரவுடிகளுக்கு அங்குள்ள சிறை ஊழியர்கள் செல்போன், கஞ்சா உணவு பொருள்கள் உள்ளிட்டவற்றை வழங்குவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிறையில் செல்போன் பறிமுதல் செய்யப்பட்ட போது அங்குள்ள ஊழியர் ஒருவருக்கு தொடர்பு இருந்தது தெரியவந்தது. இந்த நிலையில் சிறையில் ஜெயில் சூப்பிரண்டு பாஸ்கரன் அதிரடி சோதனையில் ஈடுபட்டார். அப்போது இரட்டை கொலை வழக்கு குற்றவாளியான முதலியார்பேட்டையை சேர்ந்த பெருமாள் ராஜா என்பவரிடம் இருந்து செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது.
அவருக்கு அந்த செல்போன் எப்படி கிடைத்தது என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சிறை ஊழியர்கள் யாராவது அவருக்கு உதவி செய்தார்களா? என்பது குறித்து விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது.
Next Story






