என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    மூலக்குளத்தில் கழிவுநீர் தகராறில் டிரைவர் மீது தாக்குதல் நடத்தியவர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    புதுச்சேரி:

    புதுவை மூலக்குளம் ஜெ.ஜெ.நகர் 4-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் அய்யனார் (வயது46). டிரைவர்.  இவரது வீட்டுக்கும் அதே பகுதியை சேர்ந்த மீனாட்சி என்பவரின் வீட்டுக்கும் கழிவுநீர் வாய்க்கால் தகராறில் முன்விரோதம் இருந்து வந்தது.

    இந்தநிலையில் சம்பவத் தன்று மாலை அய்யனார் தனது வீட்டின் அருகே நின்றுக்கொண்டிருந்தார். அப்போது அவரை பார்த்து மீனாட்சி தகாத வார்த்தைகளால் திட்டினார். இதனை அய்யனார் தட்டிக்கேட்டார்.

    இதில் ஆத்திரமடைந்த மீனாட்சி மற்றும் அவரது உறவினர்கள் சித்ரா, அவரது கணவர் புண்ணியக்கோடி மற்றும் நிலா ஆகிய 4 பேரும் சேர்ந்து அய்யனாரை கல்லாலும், கையாலும் தாக்கினர்.

    இந்த தாக்குதலில் காயமடைந்த அய்யனார் புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.

    பின்னர் இதுகுறித்து ரெட்டியார்பாளையம் போலீசில் அய்யனார் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்
    லாஸ்பேட்டை காங். எம்.எல்.ஏ. அலுவலகத்தில் உலக மகளிர் தின விழா கொண்டாடப்படடது. இதில் முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி பங்கேற்றார்.
    புதுச்சேரி:

    லாஸ்பேட்டை கமலா அறக்கட்டளை சார்பில் மகளிர் தின விழா லாஸ்பேட்டை எம்.எல்.ஏ.  அலுவலகத்தில் கொண்டாடப்பட்டது. 

    காங்கிரஸ் சட்டமன்ற கட்சி தலைவர் வைத்தியநாதன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.

    மாநில காங்கிரஸ் தலைவர்  ஏ.வி.சுப்பிரமணியன், முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி,  வைத்திலிங்கம் எம்.பி, கமலா அறக்கட்டளை முதன்மை செயலர் ரமா வைத்தியநாதன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.  

    காங்கிரஸ் லாஸ்பேட்டை செயலாளர்  நந்தா கலைவாணன், காங்கிரஸ் கட்சி மாநில பிரதிநிதி அய்யப்பன், வட்டார காங்கிரஸ் தலைவர்கள் ராஜா, கோவிந்தராஜ் மற்றும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் ஊர் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
    நரம்பை மீனவ கிராமத்தில் வடிகால் வாய்க்கால் தூர்வாரும் பணியை லட்சுமிகாந்தன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
    புதுச்சேரி:

    அரியாங்குப்பம் வட்டார வளர்ச்சி அலுவலகம் சார்பில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின், கீழ் ஏம்பலம் தொகுதிக்குட்பட்ட நரம்பை மீனவ கிராமத்தில் வீரன் கோவில் வாய்க்கால் ரூ.3.10 லட்சம் செலவில் தூர்வார முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இதற்கான பூமி பூஜையில் ஏம்பலம் தொகுதி எம்.எல்.ஏ. லட்சுமிகாந்தன் கலந்து கொண்டு பணியை தொடங்கி வைத்தார். 

    இந்நிகழ்ச்சியில், வட்டார வளர்ச்சி அதிகாரி காசிநாதன், இளநிலை பொறியாளர் கிருஷ்ணமூர்த்தி, கிராம பஞ்சாயத்து நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து நரம்பை கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் பல அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க படவில்லை என பொது மக்கள் கோரிக்கைக்கு இணங்க லட்சுமிகாந்தன் எம்.எல்.ஏ. நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
    பெண்களுக்கு பாதுகாப்பாக அ.தி.மு.க.வினர் திகழ வேண்டும் என்று கிழக்கு மாநில அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன் பேசினார்.
    புதுச்சேரி:

    புதுவை கிழக்கு மாநில அ.தி.மு.க. சார்பில்  உப்பளம் தலைமை அலுவலகத்தில் மகளிர் தின விழா நடந்தது.

    மாநில மகளிரணி செயலாளர் விஜயலட்சுமி முன்னிலை வகித்தார். கிழக்கு மாநில செயலாளர் அன்பழகன் தலைமை தாங்கி இலவச சேலை, தையல் எந்திரம்,  குழந்தைகளுக்கு மோதிரம் வழங்கி பேசியதாவது:-

    ஜெயலலிதா தனது ஆட்சிக்காலத்தில் கருவறையில் இருந்து வாழ்நாள் முழுவதும் பெண்கள் பயன் பெறும் வகையில் பல்வேறு நலத்திட்ட   உதவிகள் மூலம்   பெண்ணினத்தை பாதுகாத்தவர். 

    ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு ஆட்சியை வழிநடத்திய முன்னாள் முதல்-அமைச்சர்கள்  எடப்பாடி  பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம்  ஆகியோர்  ஜெயலலிதாவின் பல்வேறு நலத்திட்ட உதவிகளை தொடர்ந்து செயல்படுத்தினர். 

    கல்வி பயிலும் கல்லூரி மாணவிகளுக்கும், பணிக்கு செல்லும் பெண்களுக்கு இலவச இருசக்கர வாகனத்தை  வழங்கினார்கள். அரசு பணியில் பெண்களுக்கு தனி இடஒதுக்கீட்டை வழங்கிய பெருமை அ.தி.மு.க. ஆட்சியையே சாரும்.

    மறைந்த  தலைவர்கள் வழியிலும், தற்போது அ.தி.மு.க.வை வழி நடத்தும் ஒருங்கிணைப்பாளர்களின் எண்ணப்படியும், பெண் களுக்கு பாதுகாப்பாக என்றென்றும் நாம் திகழ வேண்டும்.

    இவ்வாறு அன்பழகன் பேசினார்.


    இந்த நிகழ்ச்சியில் மாநில ஜெயலலிதா பேரவை செயலாளர் பாஸ்கர், மாநில துணைத்தலைவர் ராஜாராமன், மாநில இணை   செயலாளர்கள் திருநாவுக்கரசு, கணேசன், அன்பானந்தம் மாநில பொருளாளர் ரவி பாண்டுரங்கன், மாநில துணைச் செயலாளர்கள் அன்பழக உடையார், காந்தி, சேரன்  மாநில எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் பாண்டு ரங்கன்.
    மாநில அண்ணா தொழிற்சங்க   பேரவை செயலாளர் பாப்புசாமி, மாநில தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் தினேஷ்,  ஜெ. பேரவை முன்னாள் துணை செயலாளர்  சித்தானந்தம், மாநில மகளிர் அணி தலைவி மகேஸ்வரி, மாநில மகளிர் அணி துணை தலைவிகள் செல்வராணி, மாலதி, இணை செயலாளர்கள் மச்சகந்தி, தேன்மொழி, மாநில மகளிர் அணி துணை செயலாளர் பவானி, சாரந்தா,  அஜீத்தா பார்வதி, ராஜேஸ்வரி, ஜானகி, மீனாட்சி, சித்ரா, மாநில பொருளாளர் செந்திலரசி, செயற்குழு உறுப்பினர் இந்திரா முனுசாமி, பொதுக்குழு உறுப்பினர்கள் வீரம்மாள்,  கமலா, சூர்யா மற்றும் வனஜா, கலைச்செல்வி, உமா, சிவகங்கை, சங்கரி. உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    மருத்துவ படிப்புக்கான 2-வது கட்ட கலந்தாய்வில் கலந்துகொள்ள தகுதியானவர்களின் பட்டியலை சென்டாக் தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.
    புதுச்சேரி:

    மருத்துவம், ஆயுர்வேத மருத்துவம், பல் மருத்துவம் உள்ளிட்ட படிப்புகளுக்கு நீட் தேர்வு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. இந்த மாணவர் சேர்க்கையை சென்டாக் நடத்தி வருகிறது. ஏற்கனவே நீட் தேர்வு அடிப்படையிலான படிப்புகளுக்கு முதல் கட்ட கலந்தாய்வு நடத்தப்பட்டுள்ளது.

    இந்தநிலையில் 2-வது கட்ட கலந்தாய்வில் கலந்துகொள்ள தகுதியானவர்களின் பட்டியலை சென்டாக் தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. இதன்படி அரசு, நிர்வாகம், சிறுபான்மையினர் இடஒதுக்கீடுகளுக்கான மாணவர்களின் தகுதி பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் ஏதேனும் ஆட்சேபனை இருந்தால் தெரிவிக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக மாணவர்களுக்கும் தனித்தனியே குறுஞ்செய்திகள் அனுப்பப்பட்டுள்ளது.

    உலக மகளிர் தினத்தை முன்னிட்டு புதுவை போலீசின் புதிய முயற்சி அனைத்து தரப்பு மக்களிடமும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
    புதுச்சேரி:

    புதுவை முத்தியால்பேட்டை பொன்னம்பல முதலியார் வீதியை சேர்ந்தவர் வைத்தியநாதன். டிரைவர். இவரது மகள் நிவேதா.

    இவர் பாரதிதாசன் பெண்கள் கல்லூரியில் கம்ப்யூட்டர் சயின்ஸ் 3-ஆம் ஆண்டு படித்து வருகிறார். இவர் தேசிய மாணவர் படை ஏர்போர்ஸ் பிரிவில் கேடர் சார்ஜென்டாக உள்ளார்.

    உலக மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்களை கவுரவிக்கும் வகையில் அவரை ஒருநாள் முத்தியால்பேட்டை சப்- இன்ஸ்பெக்டராக கிழக்கு சூப்பிரண்டு தீபிகா நியமித்தார்.

    மாணவி நிவேதா இன்று காலை போலீஸ் நிலையம் சென்று போலீஸ் நிலைய பணிகளை சரிபார்த்தார். பின்னர் போக்குவரத்தை சரி செய்த மாணவி மாநில எல்லையான கோட்டக்குப்பம் வரை ரோந்து சென்று சட்டம்-ஒழுங்கு, போக்குவரத்து பணிகளை ஆய்வு செய்தார்.

    பின்னர் பொதுமக்களின் குறைகளை கேட்டு அதை தீர்க்க நடவடிக்கை எடுத்தார். ஒரு நாள் சப்-இன்ஸ்பெக்டராக நியமிக்கப்பட்ட நிவேதாவுக்கு, அ.தி.மு.க. கிழக்கு மாநில தேர்தல் பிரிவு செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான வையாபுரி மணிகண்டன் சால்வை அணிவித்து பூங்கொத்து அளித்து வாழ்த்து தெரிவித்தார்.

    இதேபோல ஏ.டி.ஜி.பி. ஆனந்தமோகன், கிழக்கு போலீஸ் சூப்பிரண்டு தீபிகா ஆகியோரும் மாணவிக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

    ஒருநாள் அதிகாரியாக நியமிக்கப்பட்ட நிவேதா கூறியதாவது:-

    போலீசாருக்கு வீட்டில் பல பிரச்சினைகள் இருந்தாலும் அவைகளை மறந்து மக்கள் பணிகளை செய்கிறார்கள். ராணுவம் போல தங்கள் கடமைகளை அவர்கள் செய்கின்றனர். பல்வேறு இன்னல்கள் இருந்தாலும் அவற்றை புறந்தள்ளிவிட்டு பணியில் ஈடுபடுகின்றனர்.

    பொது மக்களிடம் புகார்களை பெற்று எவ்வாறு நடவடிக்கை எடுக்கின்றனர் என்பதை ஒரு நாள் சப்-இன்ஸ்பெக்டராக இருந்து தெரிந்து கொண்டேன். இது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. காலையில் காவல்துறை வாகனத்தில் ரோந்து சென்றது மறக்க முடியாத நிகழ்ச்சியாக உள்ளது.

    வரும்காலத்தில் ஒரு நேர்மையான அரசு அதிகாரியாக பணியாற்ற வேண்டும் என்பதே என் எண்ணம்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    உலக மகளிர் தினத்தை முன்னிட்டு புதுவை போலீசின் இந்த புதிய முயற்சி அனைத்து தரப்பு மக்களிடமும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
    புதிதாக பணிநிரந்தரம் செய்யப்பட்ட அங்கன்வாடி ஊழியர்களுக்கு 2 நாளில் சம்பளம் கிடைக்கும் என்று ரங்கசாமி அறிவித்துள்ளார்.
    புதுச்சேரி:

    புதுவை கம்பன் கலையரங்கில் நடந்த மகளிர் தின விழாவில் முதல்-அமைச்சர் ரங்கசாமி பேசியதாவது:-

    ஒரு குடும்பத்தின் முன்னேற்றமே பெண்களைத் தான் சாரும். ஒரு குடும்பத்தை பற்றி அறிந்து கொள்ள தாய் பற்றி தெரிந்தாலே போதும். சக்தியில்லையேல் சிவம் இல்லை என்பார்கள். சிவனே தன்னில் பாதியை சக்திக்கு கொடுத்துள்ளார். 

    சட்டமன்ற தேர்தலில் பெண்கள் போட்டியிட வாய்ப்பளித்தோம், பெண்ணுக்கு அமைச்சர் பதவியும் வழங்கியுள்ளோம். கடந்த காலங்களில் வீரமான பெண்கள் இருந்துள்ளனர். அரசருக்கே ஆலோசனை அளித்த பெண் புலவர்களும் இருந்துள்ளனர். 

    ஆனால் பெண் புத்தி பின்புத்தி என்பார்கள். அதை பெண்களுக்கு பின்னால் வரக்கூடியதை அறிந்து கொள்ளும் புத்தி உள்ளது என எடுத்துக் கொள்ள வேண்டும். ஆக்கலும், அழித்தலும் பெண்கள் என்பார்கள். 

    புராணகாலத்தில் கெட்டவனை அழிப்பது பெண் கடவுள்கள்தான். இன்று உலகளவில் பெண்கள் சிறப்பான முன்னேற்றம் அடைந்து வருகின்றனர். பெண் கல்வியை புரட்சிக்கவி பாரதி வலியுறுத்தியுள்ளார். 

    பெண்களுக்கு உரிமை கிடைக்க புதுவையில் சொத்துக்களை பெண்கள் பெயரில் சொத்துக்களை பதிந்தால் 50சதவீத கட்டண தள்ளுபடி அளித்தோம். இதனால் சொத்துக்கள் பெண்கள் பெயரில் பதியப்பட்டு அவர்களுக்கு பாதுகாப்பு கிடைத்துள்ளது. பெண்கள் பெயரில் தொழில் தொடங்கினால் மானியம் வழங்கப்படும் என அறிவித்துள்ளோம். 

    பெண்கள் பலர் தொழில் தொடங்கி நிர்வகித்து வருகின்றனர். அங்கன்வாடி ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என நான் முடிவெடுத்தபோது அப்போதைய தலைமை செயலாளர் பல்நோக்கு ஊழியர்கள் என்ற தலைப் பில் பணி நிரந்தரம் செய்யலாம் என்றார். எந்த பெயர் வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளுங்கள், பணி நிரந்தரம் செய்யுங்கள் என்றேன். பெண்கள் எந்த வேலையையும் திறம்பட செய்வார்கள் என முடிவெடுத்தேன். அவர்கள் பணிநிரந்தரம் செய்யப்பட்ட 3 மாதத்தில் கனமழை பெய்தது. 

    அப்போது நிவாரணமாக அரிசி வழங்கும் நிலை உருவானது. 2 நாளில் அங்கன்வாடி ஊழியர்கள் வீடுகளுக்கு சென்று அதனை சேர்த்தனர். நிவாரண நிதியையும் கொண்டுசென்று சேர்த்தனர். 

    புதிதாக அங்கன்வாடி ஊழியர்கள் பணி நிரந்தரம் செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு சம்பளம் கிடைக்கவில்லை என கேட்டு வருகின்றனர். இன்னும் 2 நாளில் பணிநிரந்தரம் செய்யப்பட்ட அங்கன்வாடி ஊழியர்களுக்கு முழுமை யான சம்பளம் கிடைக்கும். பெண்கள் மீது அரசு அதிக அக்கறை கொண்டுள்ளது. அவர்களுக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். புதிதாக பல திட்டங்களையும் அரசு அறிவிக்க உள்ளது. 

    இவ்வாறு அவர் பேசினார். 
    சட்டமன்றத்தில் உரையாற்ற அழைக்காவிட்டாலும் தெலுங்கானா மாநில பட்ஜெட்டுக்கு அனுமதி வழங்கி உள்ளதாக கவர்னர் தமிழிசை கூறினார்.
    புதுச்சேரி:

    புதுவை மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை சார்பில் கம்பன் கலையரங்கத்தில் சர்வதேச மகளிர் தின விழா இன்று நடந்தது. விழாவை கவர்னர் தமிழிசை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். முதல்-அமைச்சர் ரங்கசாமி தலைமை வகித்தார். சபாநாயகர் ஏம்பலம் செல்வம்,  வேளாண் அமைச்சர் தேனீ. ஜெயக்குமார், அன்பால் கென்னடி எம்.எல்.ஏ., அரசு செயலர் உதயகுமார் உள்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். 

    விழாவில்  பல்வேறு சாதனைகள் படைத்த பெண்களுக்கு பரிசுகளை வழங்கி கவர்னர் தமிழிசை பேசியதாவது:-

    பெண் விடுதலை, பெண் உரிமை பற்றி பேசுகிறோம். நேற்று தெலுங்கானா மாநிலத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், கவர்னர் உரை இல்லாமல் பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளனர். இதற்கு சட்டசபையை ஒத்தி தான் வைத்துள்ளோம். முடித்து வைக்கவில்லை என காரணம் கூறுகின்றனர். கவர்னர் உரையில்லாமல் பட்ஜெட்டை தாக்கல் செய்யலாம். ஆனால், கவர்னர் கையெழுத்து இல்லாமல் அரசியலமைப்பு சட்டப்படி பட்ஜெட் செயலுக்கு வராது. 

    இந்த விவகாரம் நாடு முழுவதும் பேசப்பட்டது. இதனால் கவர்னர் கையெழுத்து போடுவாரா? இல்லையா? என்ற கேள்வியும் எழுந்தது. மக்கள் நலன் மட்டும்தான் முக்கியம். அன்று மாலையே பட்ஜெட்டில் கையெழுத்திட்டேன். இன்னா செய்தாரை ஒருத்தர், அவர் நாண நன்னயம் செய்து விடல் என்றும், பகைவனுக்கும் அருள்வாய் என முன்னோர்கள் கூறியுள்ளனர். 

    அதுபோல புதுவை முதல்-அமைச்சர் அனுப்பும் கோப்புகளிலும் மக்கள் நலனை மட்டுமே முன்னிறுத்தி பார்க்கிறேன். பெண்களுக்கு முழு உரிமை கிடைத்துவிட்டதா? என்றால் இன்னும் சில பிரச்சினைகள் இருக்கத்தான் செய்கிறது. பெண்கள் இன்னும் தங்கள் நிலையில் இருந்து உயர வேண்டும். சொத்துரிமை கொடுத்துள்ளதுபோல, தொழில் தொடங்கவும் முன்னுரிமை அளித்துள்ள னர். 

    இதனால் பெண்கள் தொழில் தொடங்க முன்வர வேண்டும்.  முன்னேற் றத்துக்கு முன்பாக பொருளாதாரத்தில் பெண்கள் முன்னேற வேண்டும். அதற்கான அதிகாரத்தை பெற பெண்கள் முயற்சிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
    எலக்ட்ரீசியன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    புதுச்சேரி:

    புதுவை சாரம் கவிக்குயில் நகர் 5-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் மாரியப்பன். இவரது மனைவி பஞ்சாட்சரம். இவர்களது மகன் அருண் பிரகாஷ் (வயது 19). எலக்ட்ரீசியன். அருண் பிரகாசத்திற்கு குடிபழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. அவர் வேலை செய்யும் பணத்தை வீட்டில் கொடுக்காமல் மது குடித்ததாக தெரிகிறது. இதனை அவரது தாயார் பஞ்சாட்சரம் கண்டித்துள்ளார். 

    இதனால் மனமுடைந்த அருண் பிரகாஷ்  வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த புகாரின் பேரில் கோரிமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    புதுவையில் 3 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
    புதுச்சேரி:
    புதுவையில் 547 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. புதிதாக 3 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. புதுவையில் 2, மாகியில் தலா ஒருவர் என 3 பேர் தொற்றுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  

    புதுவையில் 3, காரைக்காலில் ஒருவர் என 3 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். புதுவையில் 3, காரைக்காலில் 2 பேர் என 5 பேர் சிகிச்சையில் குணமடைந்தனர். புதுவை மாநிலத்தில் ஒட்டு மொத்தமாக  இதுவரை ஒரு லட்சத்து 65 ஆயிரத்து 748 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். ஒரு லட்சத்து 63 ஆயிரத்து 760 பேர் சிகிச்சையில் குண மடைந்துள்ளனர். 

    புதுவையில் 11, காரைக்காலில் 9, மாகியில் 2 பேர் என 22 பேர் வீட்டு தனிமையில் உள்ளனர். புதுவை மாநிலத்தில் இப்போது 26 பேர் கொரோனா தொற்றுடன் உள்ளனர். 

    மாநிலத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை ஆயிரத்து 962 ஆக உள்ளது. புதுவையில் 2&வது தவணை உள்பட 15 லட்சத்து 98 ஆயிரத்து 282 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர். இத்தகவலை சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
    கள்ள நோட்டு கொடுத்து மதுபானம் வாங்கிய 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
    புதுச்சேரி:

    புதுச்சேரி திருவள்ளுவர் சாலையில் தனியார் மதுபான கடை  உள்ளது. இந்த கடைக்கு 2 வாலிபர்கள் வந்து மதுபானங்கள் கேட்டனர். 

    அந்த மதுபானங்களுக்குரிய பணத்தை வாலிபர்கள் கொடுத்தனர். அதனைப் பெற்றுக் கொண்ட கடை ஊழியர் குமார் அது கள்ள நோட்டு என்பதை கண்டுபிடித்தார். உடனே அந்த வாலிபர்கள் 2 பேரையும் பிடித்து உருளையன்பேட்டை போலீசில் ஒப்படைத்தார்.

    அவர்களிடம் இன்ஸ்பெக்டர் பாபுஜி மற்றும் போலீசார் விசாரணை நடத்தினார்கள். இதில் அவர்கள் முதலியார் பேட்டை நைனார் மண்டபம் 2-வது குறுக்குத் தெருவைச் சேர்ந்த  குமார் என்பவரின் மகன் மனோஜ் குமார் (வயது 29), பிள்ளை தோட்டத்தை சேர்ந்த விஜய குமார் என்பவரின் மகன் ஜெயபால் (21) என்பது தெரியவந்தது. 

    அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர். மனோஜ் குமார், ஜெயபால் ஆகியோருக்கு கள்ளநோட்டு எப்படி கிடைத்தது? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    அம்மன் வேடத்தில் தோன்றும் அமைச்சர் சந்திர பிரியங்கா வீடியோ வைரலாக பரவி வருகிறது
    புதுச்சேரி:

    புதுவையில் 40 ஆண்டுக்கு பின் 2-வது பெண் அமைச்சராக என்ஆர்.காங்கிரசை சேர்ந்த சந்திரபிரியங்கா பதவி வகித்து வருகிறார்.

    காரைக்கால் மாவட்டம் நெடுங்காடு தொகுதியை சேர்ந்த சந்திரபிரியங்கா போக்குவரத்து துறை அமைச்சராக உள்ளார். இவர் சில மாதங்களுக்கு முன்பு வளைகாப்பு நிகழ்ச்சியில் சினிமா பாடலுக்கு நடனமாடிய வீடியோ பரவியது. 

    இந்நிலையில் உலக மகளிர் தினத்தையொட்டி அமைச்சர் சந்திர பிரியங்கா அம்மனாக தோன்றும் வீடியோ வெளியிட்டுள்ளார். பெண்ணின் பெருமையை போற்றி பின்னணியில் வாழ்த்துசெய்தி ஓட, அந்த வீடியோவில் மேக்கப் போட்டு, நகைகள் அணிந்து அம்மனாக சந்திரபிரியங்கா தோன்றுகிறார். 

    பின்னணி ஒலியில், ஆன்மிகம் முதல் அறிவியல் வரை தடம் பதிக்கும் இடமெல்லாம் தரணி போற்ற வாழ்பவள் பெண். பெண் என்பவள் பிரம்மசக்தியானவள். உலகின் ஆன்மாவாய், உண்மையின் உறைவிடமாய், உன்னத பிறப்பாய், உற்றாரை காக்கும் அம்மன் அவள். தாயாக, சகோதரியாக, தோழியாக, தாரமாக, மகளாக அவதரிக்கும் வடிவங்கள் எல்லாம் தன்னை சார்ந்தோரை தாங்கும் எல்லை தெய்வம். 

    வீட்டின் செழிப்பினை, நாட்டின் உயர்வினை தர்மத்தின் வாழ்வினை தலை நிமிர்த்தும் தாரகைகள் மனித வாழ்வின் வரங்கள். பெண்தான் தெய்வம். 

    ஜீவனை காத்திடும் நதிகளுக்கும், உலகை தாங்கும் பூமிக்கும், உயிர்ப்பினை அழிக்கும் மொழிகளுக்கும் அவளே அடையாளம். இல்லம் தோறும் இறைவடிவமாய், அன்னையின் திருவுருவமாய் பெண்ணை படைத்தான் இறைவன். அவள் சக்தியின் வடிவம். ஆதியின் ஆன்மா. அன்பின் அடையாளம், பெண்மையே சக்தி, சக்தியே ஆதி. சக்தியே அன்பு. சக்தியே அகிலம். அம்மன் வடிவாய் அனுதினமும் நம்மை காத்திடும் பெண்களை சர்வதேச மகளிர் தின நாளில் போற்றி வணங்குவோம் என பேசுகின்றனர். 

    இந்த வீடியோ புதுச்சேரியில் இப்போது வைரலாக பரவி வருகிறது.
    ×