என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    • புதுவை வி.வி.பி.நகரில் டாக்டர் வீட்டில் கதவை உடைத்து மர்ம நபர்கள் நகைகளை கொள்ளையடித்து சென்று விட்டனர்.
    • இவர் புதுவை பாரதி வீதியில் கிளினிக் நடத்தி வருகிறார்.

    புதுச்சேரி:

    புதுவை தட்டாஞ்சாவடி வி.வி.பி.நகரை சேர்ந்த பிரபாகர் (வயது38). டாக்டரான இவர் புதுவை பாரதி வீதியில் கிளினிக் நடத்தி வருகிறார்.

    இவரது மனைவியின் தாயாருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதால் அவரை பார்க்க பிரபாகரன் தனது மனைவி குழந்தையுடன் வீட்டை பூட்டி விட்டு தூத்துக்குடிக்கு சென்றார்.

    வீட்டை அவ்வப்போது வந்து பார்த்துக்கொள்ளும் படி வீட்டில் வேலை செய்யும் தேன்மொழி மற்றும் பிரபாகரனின் நண்பரான கோவிந்தசாலையை சேர்ந்த பாலமுருகன் ஆகியோரிடம் கூறி சென்றார்.

    இந்த நிலையில் பிரபாகரன் வீடு திரும்பினார். அப்போது வீட்டின் முன் பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடப்பதை கண்டு பிரபாகரன் அதிர்ச்சி யடைந்தார்.

    பின்னர் உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறி கிடந்தன. பீரோவில் வைத்திருந்த மனைவியின் நகைகள் மற்றும் குழந்தைகளின் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டி ருந்தன. சுமார் 7 பவுன் நகைகள் கொள்ளைய டிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

    யாரோ மர்ம நபர்கள் டாக்டர் பிரபாகரன் வீட்டை பூட்டி விட்டு வெளியூர் செல்வதை நோட்டமிட்டு வீட்டின் கதவை உடைத்து நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர். நகைகளின் மதிப்பு ரூ.2½ லட்சம் ஆகும்.

    இதுகுறித்து டாக்டர் பிபாகரன் கோரிமேடு போலீசில் புகார் செய்தார். போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

    மேலும் அங்குள்ள சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்து கொள்ளையர்களை அடையாளம் காணும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

    எந்நேரமும் மக்கள் நடமாட்டமுள்ள வி.வி.பி.நகரில் மர்ம நபர்கள் துணிகரமாக வீட்டின் கதவை உடைத்து நகைகளை கொள்ளையடித்து சென்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

    சட்டசபையில் அனிபால் கென்னடி அலுவலகத்தில் தீ விபத்து ஏற்பட்டதால் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.

    புதுச்சேரி:

    புதுவை சட்டசபையில் உப்பளம் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ.அணிபால் கென்னடியின் அலுவலக இயங்கி வருகிறது.

    இந்த அலுவலகத்தில் கடந்த சில நாட்களாக ஏ.சி. சரிவர செயல்படாமல் இருந்துள்ளது.இந்த நிலையில் இன்று மதியம் ஏ.சி.யில் இருந்து கரும்புகை வெளியேறியது.இதனால் அதிர்ச்சி அடைந்த அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. மற்றும் ஊழியர்கள் இதுகுறித்து தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

    உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு படை வீரர்கள் அலுவலத்தில் பின் பகுதியில் இருந்த ஏ.சி.யின் இணைப்பு பெட்டியில் மின் கசிவால் ஏற்பட்ட தீயை அணைத்தனர்.இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

    இந்த தீ விபத்து சம்பவம் காரணமாக சட்டசபை வளாகம் முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது.

    • பாகூர் பகுதியில் தொழில் நிறுவனங்கள் பழமையான மரங்களை பட்டுபோக செய்வதாக தன்னார்வு அமைப்பு புகார் செய்தனர்.
    • அதற்காக மரங்களை வளர்த்து பராமரித்து வருகின்றனர்.

    புதுச்சேரி:

    புதுவை வனத்துறை, பொதுப் பணித்துறை, உள்ளாட்சித்துறை ஆகியவை புதுவையை பசுமையாக மாற்ற பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதற்காக மரங்களை வளர்த்து பராமரித்து வருகின்றனர்.மேலும் பல இடங்களில் சமூக மற்றும் தன்னார்வ நிறுவனங்களின் உதவியுடன் மரங்களை நடப்பட்டு வருகின்றனர்.

    ஆனால் அதையும் மீறி சமூக விரோதிகள் இரவு நேரங்களில் மரத்தை வெட்டுவது அல்லது நன்கு பசுமையாக இருந்த மரத்தை வேர்களில் மருந்து தெளித்து பட்டு போக செய்கின்றனர்.

    இதுபோல் கிருமாம்பாக்கம் அருகே கந்தன்பேட் கடலூர்-புதுவை மெயின் ரோடு, பாகூர்-கன்னியர் கோயில் ரோட்டில் உள்ள பெட்ரோல் பங்க் எதிரில் உள்ள பல ஆண்டுகள் பழமைவாய்ந்த மரங்களை பட்டுபோக செய்திருப்பது அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.

    இது சம்பந்தமாக வனத்துறையோ அல்லது பராமரித்து வரும் துறைகளும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    இந்த நிலையில் பாகூர் பகுதியை சேர்ந்த தன்னார்வு அமைப்பு வனத்துறை மற்றும் கொம்யூன் பஞ்சாயத்துக்கு புகார் தெரிவித்துள்ளனர்.

    மேலும் வருங்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் தடுக்க தொடர்ந்து கண்காணிக்க வலியுறுத்தி உள்ளனர்.

    • யோகா கலை வாழ்வியலாக மாற வேண்டும் என்று கவர்னர் தமிழிசை பேசினார்.
    • கவர்னர் தமிழிசை நிகழ்ச்சியை தொடங்கி வைத்து யோகக்கலை வல்லுநர்கள் பயிற்சியா ளர்கள், பழகுநர்கள் ஆகியோருடன் இணைந்து யோகா பயிற்சியில் ஈடுபட்டார்.

    புதுச்சேரி:

    பாலாஜி வித்யாபீடத்தின், யோகா சிகிச்சைக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் மத்திய ஆயுஷ் அமைச்சகத்தின் மொரார்ஜி தேசாய் தேசிய யோகா நிறுவனம் ஆகியவை இணைந்து நடத்தும் சர்வதேச யோகா தின விழாவிற்கான முன்னோட்ட நிகழ்ச்சி புதுவை கடற்கரை சாலையில் இன்று நடைபெற்றது.

    கவர்னர் தமிழிசை நிகழ்ச்சியை தொடங்கி வைத்து யோகக்கலை வல்லுநர்கள் பயிற்சியா ளர்கள், பழகுநர்கள் ஆகியோருடன் இணைந்து யோகா பயிற்சியில் ஈடுபட்டார். அமைச்சர் சாய் சரவணன் குமார், பாலாஜி வித்யா பீடத்தின் துணைவேந்தர் பேராசிரியர் பரிஜா, இயக்குனர் பேராசிரியர் ஆனந்த பாலயோகி, பதிவாளர் ஸ்ரீனிவாசன், யோகக்கலை வல்லுநர்கள், பயிற்சியாளர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் கவர்னர் தமிழிசை பேசியதாவது:-

    பிரதமர் ஜூன் 21-ந் தேதியை உலக யோகா தினமாகக் கொண்டாட வேண்டும் என்ற கருத்தை ஐக்கிய நாடுகள் சபை மாநாட்டில் முன்வைத்து அதனை கொண்டாட ஏற்பாடு செய்தார்.

    பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னாள் இந்தியாவில் உதித்த யோகக்கலை இன்று உலகம் முழுவதும் பரவி, சென்ற ஆண்டு மட்டும் 199 நாடுகள் இந்த யோகா தினத்தை ஜூன் 21-ந் தேதி கொண்டாடினர்.

    இதில் 33 நாடுகள் இஸ்லாமிய நாடுகள். எல்லோரும் யோகக் கலையை ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். யோகக் கலை வாழ்வியலை செழுமைப்படுத்துகிறது, செம்மைப்படுத்துகிறது. நம்மை சுறுசுறுப்பாக வைக்கிறது. மன அமைதியை தருகிறது. உடலை வேகப்படுத்துகிறது. மனதை அமைதிப்படுத்துகிறது.

    இதுவே யோகாவின் தத்துவம். வாழ்க்கையில் சவாலையும் சந்திக்க வேண்டுமென்றால் உடல் வேகமாக இருக்க வேண்டும். மனம் அமைதியாக இருக்க வேண்டும். அதனை இந்த யோகா பயிற்சி தருகிறது. யோகா கலை வாழ்க்கையில் ஒரு புத்துணர்ச்சியை ஏற்படுத்துகிறது. யோகா செய்யும்போது உடலின் தசை நார்கள் பயிற்சி பெறுகிறது பலப்படுகிறது.

    ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் நமது முன்னோர்கள் விஞ்ஞானபூர்வமாக இதை அறிந்து பயிற்சி அளித்திருக்கிறார்கள். இந்தியா உலகத்தில் மற்ற நாடுகளுக்கு முன்னோடியாக இருக்கிறது என்பதற்கு யோகா கலை ஒன்றே சொல்லிக் கொடுக்கிறது. உணவும் உடற்பயிற்சியும் மட்டுமே உடலையும் மனதையும் சீராக வைக்கிறது.

    இயல்பான வாழ்க்கை முறையிலேயே இதனை யோகக் கலையில் போதித்துக் கொண்டிருக்கிறது. கடவுள் சிலைகளைப் பார்கக்கும் போது அவர்களும் ஏதோ ஒரு யோக முத்திரையில்தான் அமர்ந்திருக்கிறார்.

    யோகா தினம் ஜூன் 21-ந் தேதி கொண்டாடப்படுவதற்கு ஒரு காரணம் இருக்கிறது. 365 நாட்களில் மிக நீண்ட நாள் ஜூன் 21-ம் ஆண்டின் நீளமான நாளை யோகா தினமாக கொண்டாடினால் நமது ஆயுள் நீண்டு இருக்கும் என்பதால் இந்த நாளை பிரதமர் தேர்வு செய்துள்ளார்.

    அவருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். தான் ஆரோக்கியமாக இருப்பது மட்டுமல்லாமல் மற்றவர்களும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்று போதித்திருக்கிறார். ஜூன் 21-ந் தேதியை உலக யோகா தினமாக அறிவித்த பிறகு யோகக் கலையை அதிகமாக பயின்று வருகிறார்கள்.

    பெற்றோர்கள் அனைவரும் 5 வயதில் இருந்தே குழந்தைகளுக்கு யோக கலையை பயிற்றுவிக்க வேண்டும். யோகா சொல்லிக் கொடுத்தால் கட்டுப்பாட்டோடு அறிவா ளிகளாக பிள்ளைகள் வளர்வார்கள். படிக்கும் பருவத்தில் யோகா பயிற்சி நினைவாற்றலை கவனத்தை அதிகரிக்கும். இல்லத்தரசிகளுக்கு யோகக் கலை வாழ்வியலாக மாற வேண்டும்.

    பெண்கள் தங்கள் வேலைகளோடு யோகா பயிற்சி செய்வதற்கான வழிமுறைகளை யோகா வல்லுநர்கள் உருவாக்கித் தர வேண்டும். ஆண்களுக்கும் அலுவலர்களோடு யோக செய்வது பற்றி சொல்லிக் கொடுத்த வேண்டும்.

    தீபாவளி, பொங்கலை விழாக்களாக கொண்டாடி வருகிறோம். உடல்நலத்தைப் பாதுகாக்கும் யோகா தினமும் விழாவாக எல்லோரும் கொண்டாட வேண்டும் என்பதை வருங்கால சந்ததியினருக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும். பாரதம் உலகிற்கு வழிகாட்டும் என்று விவேகானந்தர் போன்றவர்கள் கண்ட கனவு இதன் மூலம் நனவாகிக் கொண்டிருக்கிறது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    பின்னர் கவர்னர் தமிழிசை நிருபர்களிடம் கூறும் போது:-

    புதுவையில் சுற்றுலாவை மேம்படுத்த வேண்டும் என்பது தான் மாநில அரசின் எண்ணம், ஆனால் அந்த சொகுசு கப்பலில் இருக்கும் அம்சங்களுக்கு பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்பு தெரிவிப்பதால் மாநில அரசு அனுமதி வழங்கவில்லை என்று தெரிவித்தார்.

    • பஸ்சில் கைக் குழந்தையுடன் பெண்கள் ஏறி மாணிக்கம் மற்றும் அவரது மனைவி அமர்ந்திருந்த இருக்கை அருகே நின்று பயணம்.
    • வீட்டுக்கு சென்றதும் நகை வைத்திருந்த கைப் பையை பார்த்தனர்.

    புதுச்சேரி:

    புதுவை தர்மாபுரி கலைமகள் நகர் 6-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் மாணிக்கம் (வயது62). இவர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.

    சம்பவத்தன்று இவரும் இவரது மனைவியும் சென்னை ஆதம்பாக்கத்தில் உள்ள தங்களது மகள் வீட்டுக்கு செல்ல புதுவை ராஜீவ்காந்தி சிலை சதுக்கத்தில் இருந்து சென்னைக்கு செல்லும் அரசு பஸ்சில் ஏறினர்.

    கிழக்கு கடற்கரை சாலை லதா ஸ்டீல் அருகே அதே பஸ்சில் கைக் குழந்தையுடன் 2 டிப்-டாப் பெண்கள் ஏறி மாணிக்கம் மற்றும் அவரது மனைவி அமர்ந்திருந்த இருக்கை அருகே நின்று பயணம் செய்தனர். பஸ் கிண்டியை அடைந்ததும் மாணிக்கமும் அவரது மனைவியும் பஸ்சை விட்டு இறங்கி ஆதம்பாக்கம் செல்லும் டவுன் பஸ்சில் ஏறி மகள் வீட்டுக்கு சென்றனர்.

    அங்கு வீட்டுக்கு சென்றதும் நகை வைத்திருந்த கைப் பையை பார்த்தனர். அப்போது கை பையில் வைத்திருந்த 15 பவுன் நகையை காணாமல் அதிர்ச்சியடைந்தனர். இந்த நகையின் மொத்த மதிப்பு ரூ.6 லட்சம் ஆகும்.

    புதுவையில் இருந்து பஸ் சென்னைக்கு செல்லும் இடையில் கைக் குழந்தையுடன் ஏறிய 2 டிப்-டாப் பெண்கள் சில்லறை காசுகளை கீழே வீசி மாணிக்கத்தின் கவனத்தை திசை திருப்பி சில்லறை காசுகளை மாணிக்கம் எடுக்க முயன்ற போது பையில் வைத்திருந்த நகையை அந்த பெண்கள் திருடி சென்றிருப்பது தெரியவந்தது.

    இதையடுத்து நகையை பறி கொடுத்த மாணிக்கம் லாஸ்பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகிறார்கள்.

    மேலும் லதா ஸ்டீல் அருகே பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்து மாணிக்கம் சென்ற பஸ்சில் ஏறிய டிப்-டாப் பெண்களை அடையாளம் காணும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    • கைப்பந்து போட்டில் வெற்றி பெற்றவர்களுக்கு அமைச்சர் நமச்சிவாயம் பரிசுகளை வழங்கினார்
    • கொம்பாக்கத்தில் பிரதர்ஸ் விளையாட்டு கழகம் நடத்திய கைப்பந்து போட்டியில் ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகள் என மொத்தம் 35 அணிகள் விளையாடினர்.

    புதுச்சேரி:

    வில்லியனூர் தொகுதி கொம்பாக்கத்தில் பிரதர்ஸ் விளையாட்டு கழகம் நடத்திய கைப்பந்து போட்டியில் ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகள் என மொத்தம் 35 அணிகள் விளையாடினர்.

    இதன் இறுதி போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் கோப்பைகள் மற்றும் பரிசுகளை வழங்கினார். ஆண்கள் பிரிவில் முதல்பரிசை கருவாடிகுப்பம் ஸ்பைடர் அணியும், 2-ம் பரிசை அரியாங்குப்பம் பாரதிதாசன் அணியும், 3-ம் பரிசை கொம் பாக்கம் பிரதர்ஸ் அணியும், 4-ம் பரிசை தர்மாபுரி ஜாலி பிரன்ட்ஸ் அணியும் பெற்றன.

    பெண்கள் பிரிவில் முதல் பரிசை புதுவை நரேந்திரா அணியும், 2-ம் பரிசை கருவடிக்குப்பம் ஸ்பைடர் அணியும், 3-ம் பரிசை சிவந்தி கிளப் அணியும், 4-ம் பரிசை கொம்பாக்கம் பிரதர்ஸ் அணியும் பெற்றன.

    விழா ஏற்பாடுகளை விளையாட்டு கழக செயலாளர் காந்தி, கழக தலைவர் சிவசங்கரன், துணை செயலாளர் வினோத், பொருளாளர் திரவியராஜ், ஒருங்கிணைப்பாளர் தேஸ், உறுப்பினர் சராசந்திரன் ஆகியோர் செய்திருந்தனர்.

    • புதுவை பி.ஆர்.டி.சி. ஊழியர்களிடையே மோதல் ஏற்பட்டது.
    • வில்லியனூர் மெயின் ரோடு நாதன் நகரை சேர்ந்தவர் நடராஜன் (வயது54). இவர் புதுவை சாலை போக்குவரத்து கழகத்தில் (பி.ஆர்.டி.சி.) டிக்கெட் புக்கிங் கவுண்டரில் வேலை செய்து வருகிறார்.

    புதுச்சேரி:

    வில்லியனூர் மெயின் ரோடு நாதன் நகரை சேர்ந்தவர் நடராஜன் (வயது54). இவர் புதுவை சாலை போக்குவரத்து கழகத்தில் (பி.ஆர்.டி.சி.) டிக்கெட் புக்கிங் கவுண்டரில் வேலை செய்து வருகிறார்.

    இந்த நிலையில் நடராஜன் டிக்கெட் புக்கிங் பணிகளை முடித்து கணக்கு வழக்குகளை பார்த்து கொண்டிருந்தார்.

    அப்போது பி.ஆர்.டிசி.யில் டிரைவராக பணிபுரியும் மோகன்ராஜ் என்பவர் தன்னுடன் ஒருவரை அழைத்து வந்து தனக்கு பெங்களூர் செல்ல 2 டோக்கன் வேண்டும் என கேட்டார்.

    அதற்கு நடராஜன் கணக்கை முடித்து விட்டதாக தெரிவித்தார். இதனால் ஆத்திரமடைந்த மோகன்ராஜ் தகாத வார்த்தைகளால் திட்டி, நடராஜன் கணக்கு முடித்து வைத்திருந்த பணத்தை பறித்து கீழே வீசினார்.

    மேலும் நடராஜனை நெட்டி தள்ளி மார்பில் கையால் தாக்கினார். இதையடுத்து நடராஜன் தனது மேல் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து பின்னர் இதுகுறித்து உருளையன்பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • லாஸ்பேட்டையில் பா.ஜனதா சார்பில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.
    • மருத்துவ முகாமை பா.ஜனதா மாநிலத் தலைவர் சாமிநாதன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.

    புதுச்சேரி:

    புதுவை மாநில பாரதீய ஜனதா கட்சி சார்பில் பிரதமர் மோடியின் 8 ஆண்டுகால சாதனைகளை மக்களுக்கு தெரிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருப்பதை தொடர்ந்து லாஸ்பேட்டை தொகுதி பா.ஜனதா சார்பில் பெத்துசெட்டிப்பேட்டில் உள்ள சித்தானந்தா உயர்நிலைப்பள்ளியில் இலவச மருத்துவ முகாம் டாக்டர் முரளி கிருஷ்ணன் மேற்பார்வையில் நடைபெற்றது.

    மருத்துவ முகாமை பா.ஜனதா மாநிலத் தலைவர் சாமிநாதன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.

    மருத்துவ முகாமில் 200-க்கும் மேற்பட்டவர்கள் நேரடியாக வந்து மருத்துவரிடம் ஆலோசனை பெற்று பயன் பெற்றனர்.

    நிகழ்ச்சியில் பா.ஜனதா லாஸ்பேட் தொகுதி பொதுச் செயலாளர் ரமேஷ், மாநில மகளிர் அணி பொதுச் செயலாளர் கனகவல்லி, மாநில செயலாளர் லதா, உழவர்கரை மாவட்ட மகளிர் அணி தலைவி வள்ளி, வல்லுநர் பிரிவு மாநில இணை அமைப்பாளர் ஆசீர்வாத ரமேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    மருத்துவ முகாம் ஏற்பாட்டினை பா.ஜனதா மாநில பொருளாதார பிரிவு இணை அமைப்பாளர் நமச்சிவாயம் செய்திருந்தார்.

    • கரிக்கலாம்பாக்கத்தில் முன் விரோதத்தில் தொழிலாளிக்கு செல்போனில் கொலை மிரட்டல் விடப்பட்டது.
    • இதுதொடர்பாக இரு தரப்பினரும் போலீசில் புகார் செய்தனர். போலீசார் இரு தரப்பினர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    புதுச்சேரி:

    கரிக்கலாம்பாக்கத்தில் முன் விரோதத்தில் தொழிலாளிக்கு செல்போனில் கொலை மிரட்டல் விடுத்தவர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கரிக்கலாம்பாக்கம் மேற்கு வீதியை சேர்ந்தவர் முருகன். (வயது43). தொழிலாளி. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ஜெகநாதன் என்பவருக்கும் கடந்த மாதம் அப்பகுதியில் நடந்த கோவில் திருவிழாவில் மோதல் ஏற்பட்டது.

    இதுதொடர்பாக இரு தரப்பினரும் போலீசில் புகார் செய்தனர். போலீசார் இரு தரப்பினர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்த நிலையில் முருகனின் செல்போனில் பேசிய அரங்கனூரை சேர்ந்த பிரதாப் என்பவர் இனிமேல் ஜெகநாதன் மற்றும் அவரது மகன் வாஞ்சிநாதன் ஆகியோர் விவகாரத்தில் தலையிட்டால் உயிரோடு விடமாட்டேன் என்று தகாத வார்த்தைகளால் திட்டி கழுத்தை அறுத்து கொலை செய்து விடுவேன் என்று மிரட்டினார்.

    அப்போது அவருடன் இருந்த வாஞ்சிநாதனும் செல்போனில் முருகனை தகாத வார்த்தைகளால் திட்டினார்.

    இதுகுறித்து முருகன் கரிக்கலாம்பாக்கம் புறக்காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • பாகூர் அருகே மணல் கடத்தி வந்த மினி லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர்.
    • அப்போது அந்த வழியாக வந்த மினி லாரியை நிறுத்தி சோதனை செய்தனர்.

    புதுச்சேரி:

    பாகூர் அருகே மணல் கடத்தி வந்த மினி லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    பாகூர் போலிஸ் சப்-இன்ஸ்பெக்டர் நந்தகுமார், ஏட்டு ஹமீத் உசேன் மற்றும் போலீசார் குருவிநத்தம் தூக்கு பாலம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த மினி லாரியை நிறுத்தி சோதனை செய்தனர்.

    சோதனையில் அந்த மினி லாரியில் தென்பெண்ணை ஆற்றில் இருந்து மணல் கடத்தி வந்தது தெரியவந்தது.

    அதைத்தொடர்ந்து போலீசார் மணலுடன் மினி லாரியை பறிமுதல் செய்தனர். இதுகுறித்த பாகூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மணல் கடத்தி வந்த. விழுப்புரம் மாவட்டம் ராம்பாக்கம் புதுநகர் காலனி பகுதியை சேர்ந்த டிரைவர் அய்யனார் (வயது 35) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஏ.சி.மெக்கானிக் தற்கொலை செய்து கொண்டதற்கு காரணமான பெண் மீது நடவடிக்கை எடுக்க கோரி பெற்றோர்-உறவினர்கள் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர்.
    • குடும்பத்தினர் அவரை மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    புதுச்சேரி, ஜூன். 12-

    ஏ.சி.மெக்கானிக் தற்கொலை செய்து கொண்டதற்கு காரணமான பெண் மீது நடவடிக்கை எடுக்க கோரி பெற்றோர்-உறவினர்கள் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர்.

    புதுவை பிச்சைவீரன் பேட் புது நகரை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகன் லோக சந்தர் (வயது 27). இவர் அப்பகுதியில் உள்ள ராதாகிருஷ்ணன் நகரில் ஏ.சி. மெக்கானிக் கடை நடத்தி வந்தார். சம்பவத்தன்று இவர் எலி மருந்து தின்று தற்கொலைக்கு முயன்றார். உடனே குடும்பத்தினர் அவரை மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டேன்லி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட லோக சந்தர் சிகிச்சை பலனின்றி இறந்து போனார். இது குறித்த புகாரின் பேரில் ரெட்டியார் பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவந்தனர்.

    இந்த நிலையில் லோக சந்தரின் பெற்றோர் மற்றும் உறவினர்கள், நண்பர்கள் என சுமார் 150-க்கும் மேற்பட்டோர் ரெட்டியார் பாளையம் போலீஸ் நிலையத்துக்கு திரண்டு வந்தனர். அவர்கள் போலீஸ் நிலையத்தை திடீரென முற்றுகையிட்டனர். தற்கொலை செய்து கொண்ட லோக சந்தர் அப்பகுதியில் அரசியல் பிரமுகரின் மனைவியிடம் பழகி வந்ததாகவும். லோக சந்தருக்கு திருமணம் செய்து வைக்க பெண் பார்த்து வந்த நிலையில் அரசியல் பிரமுகரின் மனைவி இதற்கு எதிர்ப்பு தெரிவித்து லோகசந்தரை மிரட்டியதால் அவர் தற்கொலை செய்து கொண்டதாகவும். எனவே தற்கொலைக்கு தூண்டிய அரசியல் பிரமுகரின் மனைவி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் போலீசாரிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.

    இதையடுத்து போலீசார் அவர்களை சமாதானம் செய்து புகார் கொடுத்தால் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதனை ஏற்று லோக சந்திரனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கலைந்து சென்றனர்.

    • புதுவை ரெயில் நிலையம் அருகில் உள்ள கவுசிக பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் வைகாசி விசாக விழா விநாயகர் பூஜையுடன் தொடங்கியது.
    • தொடர்ந்து சண்முகாஅர்ச்சனையும், சுவாமி உள்புறப்பாடும் நடைபெற்றது.

    புதுச்சேரி:

    புதுவை ரெயில் நிலையம் அருகில் உள்ள கவுசிக பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் வைகாசி விசாக விழா விநாயகர் பூஜையுடன் தொடங்கியது.  லட்சார்ச்சனை நடைபெற்றது. தொடர்ந்து சண்முகாஅர்ச்சனையும், சுவாமி உள்புறப்பாடும் நடைபெற்றது.

    முக்கிய நிகழ்ச்சியான வைகாசி விசாக பெருவிழா நடைபெற்றது. இதனையொட்டி பக்தர்கள் 108 பால்குடங்களை சுமந்து ஊர்வலமாக சென்றனர். அந்த பால் சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் சுவாமிக்கு மகாஅபிஷேகம் செய்யப்பட்டு, சிறப்பு அலங்காரத்தில் மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    விழாவிற்கான ஏற்பாடுகளை பரிபாலகர் காதர், ஆலய அர்ச்சகர்கள் ஞானசேகர், ராஜேஷ்குமார் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.

    ×