என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Governor Tamilisai Desire"

    • யோகா கலை வாழ்வியலாக மாற வேண்டும் என்று கவர்னர் தமிழிசை பேசினார்.
    • கவர்னர் தமிழிசை நிகழ்ச்சியை தொடங்கி வைத்து யோகக்கலை வல்லுநர்கள் பயிற்சியா ளர்கள், பழகுநர்கள் ஆகியோருடன் இணைந்து யோகா பயிற்சியில் ஈடுபட்டார்.

    புதுச்சேரி:

    பாலாஜி வித்யாபீடத்தின், யோகா சிகிச்சைக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் மத்திய ஆயுஷ் அமைச்சகத்தின் மொரார்ஜி தேசாய் தேசிய யோகா நிறுவனம் ஆகியவை இணைந்து நடத்தும் சர்வதேச யோகா தின விழாவிற்கான முன்னோட்ட நிகழ்ச்சி புதுவை கடற்கரை சாலையில் இன்று நடைபெற்றது.

    கவர்னர் தமிழிசை நிகழ்ச்சியை தொடங்கி வைத்து யோகக்கலை வல்லுநர்கள் பயிற்சியா ளர்கள், பழகுநர்கள் ஆகியோருடன் இணைந்து யோகா பயிற்சியில் ஈடுபட்டார். அமைச்சர் சாய் சரவணன் குமார், பாலாஜி வித்யா பீடத்தின் துணைவேந்தர் பேராசிரியர் பரிஜா, இயக்குனர் பேராசிரியர் ஆனந்த பாலயோகி, பதிவாளர் ஸ்ரீனிவாசன், யோகக்கலை வல்லுநர்கள், பயிற்சியாளர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் கவர்னர் தமிழிசை பேசியதாவது:-

    பிரதமர் ஜூன் 21-ந் தேதியை உலக யோகா தினமாகக் கொண்டாட வேண்டும் என்ற கருத்தை ஐக்கிய நாடுகள் சபை மாநாட்டில் முன்வைத்து அதனை கொண்டாட ஏற்பாடு செய்தார்.

    பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னாள் இந்தியாவில் உதித்த யோகக்கலை இன்று உலகம் முழுவதும் பரவி, சென்ற ஆண்டு மட்டும் 199 நாடுகள் இந்த யோகா தினத்தை ஜூன் 21-ந் தேதி கொண்டாடினர்.

    இதில் 33 நாடுகள் இஸ்லாமிய நாடுகள். எல்லோரும் யோகக் கலையை ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். யோகக் கலை வாழ்வியலை செழுமைப்படுத்துகிறது, செம்மைப்படுத்துகிறது. நம்மை சுறுசுறுப்பாக வைக்கிறது. மன அமைதியை தருகிறது. உடலை வேகப்படுத்துகிறது. மனதை அமைதிப்படுத்துகிறது.

    இதுவே யோகாவின் தத்துவம். வாழ்க்கையில் சவாலையும் சந்திக்க வேண்டுமென்றால் உடல் வேகமாக இருக்க வேண்டும். மனம் அமைதியாக இருக்க வேண்டும். அதனை இந்த யோகா பயிற்சி தருகிறது. யோகா கலை வாழ்க்கையில் ஒரு புத்துணர்ச்சியை ஏற்படுத்துகிறது. யோகா செய்யும்போது உடலின் தசை நார்கள் பயிற்சி பெறுகிறது பலப்படுகிறது.

    ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் நமது முன்னோர்கள் விஞ்ஞானபூர்வமாக இதை அறிந்து பயிற்சி அளித்திருக்கிறார்கள். இந்தியா உலகத்தில் மற்ற நாடுகளுக்கு முன்னோடியாக இருக்கிறது என்பதற்கு யோகா கலை ஒன்றே சொல்லிக் கொடுக்கிறது. உணவும் உடற்பயிற்சியும் மட்டுமே உடலையும் மனதையும் சீராக வைக்கிறது.

    இயல்பான வாழ்க்கை முறையிலேயே இதனை யோகக் கலையில் போதித்துக் கொண்டிருக்கிறது. கடவுள் சிலைகளைப் பார்கக்கும் போது அவர்களும் ஏதோ ஒரு யோக முத்திரையில்தான் அமர்ந்திருக்கிறார்.

    யோகா தினம் ஜூன் 21-ந் தேதி கொண்டாடப்படுவதற்கு ஒரு காரணம் இருக்கிறது. 365 நாட்களில் மிக நீண்ட நாள் ஜூன் 21-ம் ஆண்டின் நீளமான நாளை யோகா தினமாக கொண்டாடினால் நமது ஆயுள் நீண்டு இருக்கும் என்பதால் இந்த நாளை பிரதமர் தேர்வு செய்துள்ளார்.

    அவருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். தான் ஆரோக்கியமாக இருப்பது மட்டுமல்லாமல் மற்றவர்களும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்று போதித்திருக்கிறார். ஜூன் 21-ந் தேதியை உலக யோகா தினமாக அறிவித்த பிறகு யோகக் கலையை அதிகமாக பயின்று வருகிறார்கள்.

    பெற்றோர்கள் அனைவரும் 5 வயதில் இருந்தே குழந்தைகளுக்கு யோக கலையை பயிற்றுவிக்க வேண்டும். யோகா சொல்லிக் கொடுத்தால் கட்டுப்பாட்டோடு அறிவா ளிகளாக பிள்ளைகள் வளர்வார்கள். படிக்கும் பருவத்தில் யோகா பயிற்சி நினைவாற்றலை கவனத்தை அதிகரிக்கும். இல்லத்தரசிகளுக்கு யோகக் கலை வாழ்வியலாக மாற வேண்டும்.

    பெண்கள் தங்கள் வேலைகளோடு யோகா பயிற்சி செய்வதற்கான வழிமுறைகளை யோகா வல்லுநர்கள் உருவாக்கித் தர வேண்டும். ஆண்களுக்கும் அலுவலர்களோடு யோக செய்வது பற்றி சொல்லிக் கொடுத்த வேண்டும்.

    தீபாவளி, பொங்கலை விழாக்களாக கொண்டாடி வருகிறோம். உடல்நலத்தைப் பாதுகாக்கும் யோகா தினமும் விழாவாக எல்லோரும் கொண்டாட வேண்டும் என்பதை வருங்கால சந்ததியினருக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும். பாரதம் உலகிற்கு வழிகாட்டும் என்று விவேகானந்தர் போன்றவர்கள் கண்ட கனவு இதன் மூலம் நனவாகிக் கொண்டிருக்கிறது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    பின்னர் கவர்னர் தமிழிசை நிருபர்களிடம் கூறும் போது:-

    புதுவையில் சுற்றுலாவை மேம்படுத்த வேண்டும் என்பது தான் மாநில அரசின் எண்ணம், ஆனால் அந்த சொகுசு கப்பலில் இருக்கும் அம்சங்களுக்கு பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்பு தெரிவிப்பதால் மாநில அரசு அனுமதி வழங்கவில்லை என்று தெரிவித்தார்.

    ×