என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    • தவளக்குப்பம் அருகே நல்லவாடு தெற்கு தெருவை சேர்ந்தவர் பெருமாள். மீனவர். இவரது மகன் சுரேந்தர் (வயது23). அங்குள்ள கடற்கரை பகுதியில் வளை பின்னும் கட்டிடம் அருகில் அமர்ந்து தனது நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தார்.
    • அப்போது அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த பிரவீன் தன்னை பற்றித்தான் சுரேந்தர் பேசுவதாக கருதி அவரிடம் தகராறு செய்தார்.

    புதுச்சேரி:

    தவளக்குப்பம் அருகே நல்லவாடு தெற்கு தெருவை சேர்ந்தவர் பெருமாள். மீனவர். இவரது மகன் சுரேந்தர் (வயது23). அங்குள்ள கடற்கரை பகுதியில் வளை பின்னும் கட்டிடம் அருகில் அமர்ந்து தனது நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தார்.

    அப்போது அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த பிரவீன் தன்னை பற்றித்தான் சுரேந்தர் பேசுவதாக கருதி அவரிடம் தகராறு செய்தார். இதில் இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டு வாக்குவாதம் முற்றி மோதலாக மாறியது.

    அப்போது ஆத்திரமடைந்த பிரவீன் தகாத வார்த்தைகளால் திட்டி சுரேந்தரை கையால் தாக்கினார். இதையடுத்து சுரேந்தர் இதுபற்றி போலீசில் புகார் செய்யப்போவதாக தெரிவித்த போது உன்னை இங்கிருந்து உயிரோடு விட்டால்தானே போலீசில் புகார் செய்வாய் என கூறியப்படியே பிரவீன் அங்கிருந்த தடியை எடுத்து சுரேந்தரை தாக்கினார்.

    இந்த தாக்குதலில் காயமடைந்த சுரேந்தரை அவரது நண்பர்கள் மீட்டு சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

    இதுகுறித்து சுரேந்தரின் தந்தை பெருமாள் கொடுத்த புகாரின் பேரில் தவளக்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • திருக்கனூர் அருகே பெண் டாக்டரை தனியார் கல்லூரி பஸ் டிரைவர் கடத்தி சென்று விட்டதாக போலீசில் புகார் கூறப்பட்டுள்ளது.
    • இவர் மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகத்தில் வரி வசூல் செய்யும் வேலை செய்து வருகிறார்.

    புதுச்சேரி:

    திருக்கனூர் அருகே காட்டேரிக்குப்பம் வானொலி வீதியை சேர்ந்தவர் லட்சுமணன். இவர் மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகத்தில் வரி வசூல் செய்யும் வேலை செய்து வருகிறார்.

    இவரது மனைவி சிவகாமி. இவர்களது இளைய மகள் கனிமொழி (வயது24). இவர் புதுவை இந்திராகாந்தி அரசு மருத்துவ கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படித்து முடித்து கடந்த 8 மாதமாக தனியார் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் டாக்டராக பணிபுரிந்து வருகிறார்.

    இவர் தினமும் தான் பணிபுரியும் கல்லூரி பஸ்சிலேயே பணிக்கு சென்று வருவார். அப்போது அந்த கல்லூரி பஸ் டிரைவரான வாதானூரை சேர்ந்த செல்வம்(31) என்பவருடன் கனிமொழிக்கு பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அடிக்கடி செல்வத்திடம் கனிமொழி செல்போனில் பேசி வந்ததாக தெரிகிறது.

    இந்த நிலையில் லட்சுமணன் வழக்கம் போல் வேலைக்கு சென்று விட்டார். அவரது மனைவி சிவகாமி வீட்டில் சமையல் வேலை பார்த்துக்கொண்டிருந்தார். அப்போது வீட்டில் இருந்த கனிமொழி திடீரென மாயமானார். உறவினர்கள் மற்றும் தோழிகள் வீடுகள் உள்பட பல இடங்களில் தேடியும் எங்கும் கனிமொழி இல்லை.

    இதையடுத்து கனிமொழியின் தாய் சிவகாமி தனது மகள் மாயமானது குறித்து காட்டேரிக்குப்பம் போலீசில் புகார் செய்தார். புகாரில் தனது மகளை கல்லூரி பஸ் டிரைவர் செல்வம் கடத்தி சென்றிருக்கலாம் என சந்தேகப்படுவதாக தெரிவித்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    வில்லியனூர் அருகே கீழ்சாத்த மங்கலம் பகுதியை சேர்ந்தவர் பாவாடை. இவரது மனைவி தேவி. இவர்களது மகள் சுவித்ரா (வயது16). இவர் ஏம்பலத்தில் உள்ள அரசு மேல் நிலைப்பள்ளியில் பிளஸ்-1 படித்து தேர்வு எழுதி விட்டு வீட்டில் இருந்து வந்தார்.

    இதற்கிடையே சுவித்ராவும் அப்பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்த விழுப்புரம் அருகே அய்யனம்பாளைத்தை சேர்ந்த வேதகிரி(25) என்பவரும் பழகி வந்ததாக கூறப்படுகிறது.

    இதனையறிந்த தேவி தனது மகளை பலமுறை கண்டித்து வந்தார். இந்த நிலையில் சம்பவத்தன்று காலை கட்டிட வேலைக்கு சென்றார்.

    பின்னர் மாலையில் வேலை முடிந்து வீட்டுக்கு வந்த போது வீட்டில் சுவித்ரா இல்லாததை கண்டு தேவி அதிர்ச்சியடைந்தார்.

    அப்போது தேவியின செல்போனில் தொடர்பு கொண்டு வேதகிரியின் தாயார் பார்வதி பேசும் போது உனது மகள் சுவித்ரா எனது மகன் வேதகிரியுடன் வெளியூர் செல்வதாக தெரிவித்தார். அதன்பிறகு பார்வதி செல்போனை சுவிட்ச்ஆப் செய்து விட்டார்.

    இதையடுத்து தேவி மங்கலம் போலீசில் புகார் செய்தார். அதில் தனது மகளை கடத்தி சென்ற வேதகிரி மற்றும் அவரது தாய் பார்வதி ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி இருந்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • பின்தங்கிய கிராமங்கள் மற்றும் குழந்தைகளை தொழிற்சாலைகள் தத்தெடுக்க வேண்டும்
    • குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு வார விழிப்புணர்வு கருத்தரங்கம்

    புதுச்சேரி:

    புதுவை அரசு தொழிலாளர் துறை சார்பில் குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு வார விழிப்புணர்வு கருத்தரங்கம் தொழிலாளர் துறை கருத்தரங்கு கூடத்தில் நடந்தது.

    தொழிலாளர் துறை அமைச்சர் சந்திர–பிரியங்கா தலைமை தாங்கி குத்துவிளக்கேற்றி கருத்தரங்கை தொடங்கி வைத்து பேசினார். அவர் பேசியதாவது:-

    ஆண்டுதோறும் ஜூன் 12-ந்தேதி குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினமாக கடைபிடிக்கிறோம். எதிர்ப்பு தினமாக மட்டும் கடை பிடிக்காமல் குழந்தை தொழிலாளர்கள் இல்லாத நிலையை உருவாக்க வேண்டும்.

    புதுவையில் குழந்தை தொழிலாளர்கள் மிகவும் குறைவு. உலகம் முழு–வதும் எடுக்கப்பட்ட ஆய்வில் கொரோனா காலத்தில் மீண்டும் குழந்தை தொழிலாளர்கள் அதிக–ரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

    புதுவையை பிற மாநிலங்களோடு ஒப்பிட முடியாது. ஏனெனில் முதல்-அமைச்சர் ரங்கசாமி தாழ்த்தப்பட்டோருக்கு இலவச கல்வி திட்டத்தை அமல்படுத்தியுள்ளார். அதேபோல தனியார் பள்ளிகளில் 25 சதவீதம் ஏழை மாணவர்களுக்கு இடஒதுக்கீடு அளிக்க வேண்டும். எத்தனை பள்ளிகள் இடஒதுக்கீடு அளிக்கிறது என்பது கேள்விக்குறிதான்.

    அனைத்து சமுதாயத்தி–லும் ஏழைகள் உள்ளனர். இதில் ஜாதி, மத வித்தியாசம் இல்லை. என்னை பொறுத்தவரை வசதியானவர்கள், வசதியற்றவர்கள் என 2 பேர் தான் உள்ளனர்.

    தொழிற்சாலைகள் சமூகபங்களிப்பு திட்டத்தின் கீழ் குழந்தை–களை தத்தெடுக்க வேண்டும். பின்தங்கிய கிராமங்களையும் தத்தெ–டுக்க வேண்டும். சிறுவர்கள் வேலைக்கு வர அவர்களின் குடும்ப சூழலும், ஏழ்மையும்–தான் காரணம். இந்த சூழலை நாம் மாற்ற வேண்டும்.

    இதற்கு அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும். அடுத்த ஆண்டு எவ்வளவு குழந்தை தொழிலாளர்களை மீட்டுள்ளோம், தடுத்து உள்ளோம் என்ற புள்ளி விபரங்களோடு தெரிவிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தொழிலாளர் துறை செயலாளர் சுந்தரேசன் வரவேற்றார். அரசு கொறடா ஏ.கே.டி. ஆறுமுகம் சிறப்புரையாற்றினார். புதுவை சட்டப்பணிகள் ஆணைய மாவட்ட நீதிபதி செந்தில்குமார் கருத்துரை வழங்கினார்.

    சமூகநலத்துறை இயக்குனர் ஸ்ரீமதிபத்மாவதி, மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை இயக்குனர் முத்துமீனா, குழந்தைகள் நல குழும தலைவர் சிவசாமி ஆகி–யோர் வாழ்த்தி பேசினர். தொழிலாளர் அதிகாரி மரிஜோஸ்பின் சித்ரா நன்றி கூறினார்.

    தொடர்ந்து எஸ்.ஆர்.எம். சட்டப்பள்ளி பேராசிரியர் வின்சென்ட்கொம்புராஜ், அரசு சட்டக்கல்லூரி துணை பேராசிரியர் அனிதா ஆகியோர் குழந்தை தொழிலாளர் முறையின் சமூக தீமையும், சட்ட ஒழுங்குமுறையும் என்ற தலைப்பில் விழிப்புணர்வு உரையாற்றினார்.

    • பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா விற்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்
    • புதுவை-கடலூர் மெயின் ரோட்டில் அந்தோணியார்கோவில் பஸ் நிறுத்தம் பகுதியில்

    புதுச்சேரி:

    பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா விற்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

    புதுவை-கடலூர் மெயின் ரோட்டில் அந்தோணியார்கோவில் பஸ் நிறுத்தம் பகுதியில் பள்ளி மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக உருளையன்பேட்டை போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.

    இதையடுத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்தில் சாதாரண உடையில் நின்று கண்காணித்தனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படியாக நின்ற ஒரு வாலிபரை பிடித்து அவரது சட்டை பையில் சோதனை நடத்தினர்.

    சோதனையில் அவரது சட்டை பையில் சிறு சிறு பொட்டலங்களாக கஞ்சா வைத்திருந்தார். மொத்தம் 300 கிராம் கஞ்சா அவர் வைத்திருந்தார். கஞ்சாவை பறிமுதல் செய்து அவரிடம் விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர் ஆட்டுப்பட்டி அம்பேத்கர் நகரை சேர்ந்த சுனில் என்ற கிஷோர்குமார் (வயது22) என்பது தெரியவந்தது. இதையடுத்து கிஷோர்குமாரை போலீசார் கைது செய்தனர்.

    • திருபுவனை கூட்டுறவு நூற்பாலையில் மூலப்பொருட்கள் இல்லாத காரணத்தினால் உற்பத்தி முடங்கியது.
    • இந்த முடிவை ஆலை நிர்வாகம் எடுத்துள்ளது.

    புதுச்சேரி:

    திருபுவனை கூட்டுறவு நூற்பாலையில் மூலப்பொருட்கள் இல்லாத காரணத்தினால் உற்பத்தி முடங்கியது. மறு தேதி அறிவிக்கும் வரை ஆலை மூடப்பட்டுள்ளது.

    திருபுவனையில் இயங்கிவரும் புதுவை கூட்டுறவு நூற்பாலை ஷிப்ட்டில் இருந்து தொழிலாளருக்கு லே-ஆப் விடப்பட்டுள்ளது.

    நூற்பாலை உற்பத்திக்கு தேவையான பஞ்சு கொள்முதல் தாமதமாக கிடைப்பதால் இந்த முடிவை ஆலை நிர்வாகம் எடுத்துள்ளது.

    ஆலைக்கு வர வேண்டிய பஞ்சு தற்போது ஒப்பந்ததாரர்கள் மூலம் கிடைப்பது தாமதமாகி உள்ளதால் தொழிற்சாலைக்கு தேவையான மூலப் பொருட்கள் கிடைக்காமல் நூல் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

    பஞ்சு வரத்து வர உள்ளதாகவும், அதற்குப்பின் ஆலை வழக்கம்போல் இயங்கும் என்று தொழிலாளர்களுக்கு தெரிவிக்கும் வகையில் நோட்டீஸ் ஒட்டப்பட்டு உள்ளது.

    புதுவை மாநில அளவில் தொழிலாளர்களின் வாழ்வாதாரமாக இருக்கின்ற பஞ்சாலைகள் மூடப்பட்டு வரும் சூழ்நிலையில், தற்போது திருபுவனை கூட்டுறவு நூற்பாலை மூலப்பொருள்கள் வராததால் உற்பத்தி பாதிப்பு என்ற காரணத்தைக் காட்டி, தற்போது ஆலையின் நிர்வாகம் ஆலையை மூடியுள்ளது. இதனால் தொழிலாளர்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தி உள்ளது.

    • புதுவை மக்களுக்கு எதிரான மின்துறை தனியார்மயப்படுத்தும் முடிவினை கைவிட வலியுறுத்தி
    • ஆர்ப்பாட்டம் தட்டாஞ்சாவடி அரசு அச்சகம் எதிரே நடந்தது.

    புதுச்சேரி:

    புதுவை மக்களுக்கு எதிரான மின்துறை தனியார்மயப்படுத்தும் முடிவினை கைவிட வலியுறுத்தியும், கார்ப்பரேட் முதலாளிகளுக்கு ஆதரவாக செயல்படும் மத்திய- மாநில அரசுகளின் கொள்கை முடிவினை விளக்கியும், தெருமுனை கூட்டம், ஆர்ப்பாட்டம் தட்டாஞ்சாவடி அரசு அச்சகம் எதிரே நடந்தது.

    போராட்டத்திற்கு ஏ.ஐ.டி.யூ.சி. மாநில பொதுச் செயலாளர் சேதுசெல்வம் தலைமை வகித்தார். மாநில தலைவர் தினேஷ் பொன்னையா முன்னிலை வகித்தார்.

    சி.ஐ.டி.யூ. பிரதேச செயலாளர் சீனுவாசன், ஐ.என்.டி.யூ.சி. பொதுச் செயலாளர் ஞானசேகரன், அரசு ஊழியர் சம்மேளனம் பொதுச் செயலாளர் ராதா–கிருஷ்ணன், ஏ.ஐ.சி.சி.

    டி.யூ. தலைவர் மோதிலால், எல்.எல்.எப்.செயலாளர் செந்தில், எம்.எல்.எப். செய–லாளர் வேதா வேணுகோபால் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

    • விரைவில் கடல் வழி போக்குவரத்து நடைமுறைக்கு வரும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
    • காரைக்காலில் இருந்து 3 மணி நேரத்தில் இலங்கை சென்றடையலாம்.

    புதுச்சேரி:

    யாழ்ப்பாணம் காரைக்கால் இடையே விரைவில் கப்பல் போக்கு வரத்து தொடங்கும் என இலங்கை மந்திரி அறிவித்துள்ளார்.

    புதுவையில் பிரெஞ்சு ஆட்சி காலத்தில் கடற்கரை காந்தி சிலை அருகே துறைமுகம் செயல்பட்டது. அப்போது கப்பல் போக்குவரத்து நடைபெற்றது. அதன் பின்னர் துறைமுகம் செயல்படவில்லை. புதுவையில் தற்போது தேங்காய் திட்டில் மீன் பிடி துறைமுகமும் வம்பா கீரபாளையத்தில் மீனவர்களின் படகுகளை நிறுத்தும் துறைமுகம் அமைந்துள்ளது. புதுவை மாநிலம் காரைக்காலில் துறைமுகம் உள்ளது. இங்கு தற்போது சரக்கு கப்பல்கள் வந்து செல்கிறது.

    காரைக்கால்- இலங்கை யாழ்பாணம் இடையே கப்பல் போக்குவரத்தை தொடங்க புதுவை அரசு முடிவு செய்தது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு கவர்னர் தமிழிசை காரைக்கால்- யாழ்பாணம் இடையே கப்பல் போக்குவரத்து தொடங்கப்படும் என்றும் இதற்காக மத்திய கப்பல் போக்கு வரத்து ஆணையத்திடம் அனுமதி பெற உள்ளதாகவும் தெரிவித்தார்.

    இந்த நிலையில் யாழ்ப்பாணம்-காரைக்கால் இடையே விரைவில் கப்பல் போக்குவரத்து தொடங்கும் என இலங்கை மந்திரி டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம்-காரைக்கால் இடையே பயணிகள் மற்றும் சரக்கு கப்பல் போக்குவரத்துக்கு இலங்கை அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது என அவர் தெரிவித்துள்ளார். இதனால் விரைவில் கடல் வழி போக்குவரத்து நடைமுறைக்கு வரும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

    இது நடைமுறை படுத்தப்பட்டால் காரைக்காலில் இருந்து 3 மணி நேரத்தில் இலங்கை சென்றடையலாம். ஏற்கனவே கடந்த ஆண்டு தமிழகம் வந்து இருந்த இலங்கை பிரதமரின் இணைப்பு செயலாளர் செந்தில் தொண்டை மான், இலங்கை கிராம அபிவிருத்தி ராஜாங்க மந்திரி வியாழேந்திரன் ஆகியோர், இந்தியா-இலங்கை இடையிடையிலான கப்பல் போக்குவரத்து தொடங்க ஆயத்த பணிகள் நடைபெற்றுவருவதாக கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

    • புதுவை கலிதீர்த்தாள் குப்பத்தில் உள்ள மணக்குள விநாயகர் தொழில் நுட்பக்கல்லூரி மற்றும் திருபுவனை வேல் பிஸ்கட்ஸ் லிமிடெட் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது
    • ஒப்பந்தத்தின் நோக்கம் மணக்குள விநாயகர் தொழில்நுட்பக்கல்லூரியில் உள்ள உணவு தொழில் நுட்பத்துறையின் மாணவ-மாணவிகளுக்குதொழிற் சாலை பார்வையிடல், உணவு சார்ந்த தொழில் மற்றும் திறன் மேம்பாட்டுபயிற்சிகளை கல்லூரியுடன் இணைந்து வழங்குவதாகும்

    புதுச்சேரி:

    புதுவை கலிதீர்த்தாள் குப்பத்தில் உள்ள மணக்குள விநாயகர் தொழில் நுட்பக்கல்லூரி மற்றும் திருபுவனை வேல் பிஸ்கட்ஸ் லிமிடெட் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. இந்த ஒப்பந்தத்தின் நோக்கம் மணக்குள விநாயகர் தொழில்நுட்பக்கல்லூரியில் உள்ள உணவு தொழில் நுட்பத்துறையின் மாணவ-மாணவிகளுக்குதொழிற் சாலை பார்வையிடல், உணவு சார்ந்த தொழில் மற்றும் திறன் மேம்பாட்டுபயிற்சிகளை கல்லூரியுடன் இணைந்து வழங்குவதாகும்.

    புரிந்துணர்வு ஒப்பந்தம் கையொப்பமிடும் நிகழ்ச்சியில் மணக்குள விநாயகர் கல்விக்குழுமத்தின் தலைவரும், நிர்வாக இயக்குனருமான தனசேகரன், துணைத்தலைவர் சுகுமாறன், செயலாளர் டாக்டர் நாராயணசாமி கேசவன் ஆகியோர் தலைமை தாங்கினர்.

    புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கல்லூரியின் சார்பில் முதல்வர் மலர்க்கண் மற்றும் வேல் பிஸ்கட்ஸ் சார்பில் அதன் பொது மேலாளர் சந்தோஷ்குமார் கையொப்பமிட்டு ஒப்பந்த பரிமாற்றம் செய்துகொண்டனர்.

    இந்நிகழ்ச்சியில்உ ணவு தொழில் நுட்பத்துறைத் தலைவர் திருச்செல்வம், வேலை வாய்ப்புத்துறை அதிகாரி ஜெயக்குமார் மற்றும் அனைத்து துறைத்தலைவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

    நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை உணவு தொழில் நுட்பத்துறையின் உதவிப்பேராசிரியர்கள் சாந்தலட்சுமி மற்றும் பாக்யா நிஷா ஆகியோர் செய்திருந்தனர்.

    • புதுவை உப்பளம் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. அனிபால் கென்னடி சுற்றுலாத்துறை இயக்குனர் பிரியதர்ஷினியை சந்தித்து மனு அளித்தார்.
    • தாங்கள் இந்த இடத்தை நேரில் வந்து ஆய்வு செய்து சுனாமி நினைவு சின்னம் விரைவில் அமைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

    புதுச்சேரி:

    புதுவை உப்பளம் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. அனிபால் கென்னடி சுற்றுலாத்துறை இயக்குனர் பிரியதர்ஷினியை சந்தித்து மனு அளித்தார். அதில் கூறியிருப்பதாவது:-

    உப்பளம் தொகுதிக்குட்பட்ட வம்பா கீரப்பாளையம், திப்புராயப்பேட்டையில் அமைந்துள்ள பாண்டி மெரினா பீச் அருகில் சுற்றுலா வரும் பொது மக்களை கவரும் வண்ணமும் அப்பகுதியை சேர்ந்த மீனவ சமுதாய மக்கள் ஆண்டு தோறும் பிரார்த்தனை செய்யவும் சுனாமி நினைவு சின்னம் அமைத்து தரவேண்டும்.

    சுனாமி நினைவு சின்னம் அமைப்பது சம்பந்தமாக முதல்-அமைச்சரிடமும், அமைச்சரிடமும் மனு அளிக்கப்பட்டுள்ளது. அதற்கு அவர்கள் ஆவண செய்வதாக உறுதி அளித்துள்ளனர். எனவே சுனாமி நினைவு சின்னம் அமைப்பதில் அதிக அளவில் முக்கியத்துவம் செலுத்தி மிக விரைவாக அதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும். சுனாமி நினைவு சின்னம் அமைக்க பாண்டி மெரினா பீச் அருகில் இடம் பார்த்துள்ளோம். தாங்கள் இந்த இடத்தை நேரில் வந்து ஆய்வு செய்து சுனாமி நினைவு சின்னம் விரைவில் அமைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    அப்போது தி.மு.க. மாநில இளைஞர் அணி துணை அமைப்பாளர் ஆரோக்கிய ராஜ், மாநில மீனவர் அணி துணை அமைப்பாளர் விநாயக மூர்த்தி, தி.மு.க. பிரமுகர் பிராங்கிளின், ஹரிகிருஷ்ணன், செல்லப்பன், லாரன்ஸ், மோரீஸ் ஆகியோர் உடனிருந்தனர்.

    • அரசு முத்திரையை பயன்படுத்தி போலி சான்றிதழ் வழங்கியவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
    • இந்த நிலையில் பயனாளிகளுக்கு ரமேஷ் போலி சான்றிதழ் வழங்கப்பட்டதை ஆதாரத்துடன் அங்காளன் எம்.எல்.ஏ. திருபுவனை போலீசில் புகார் செய்தார்.

    புதுச்சேரி:

    அரசு முத்திரையை பயன்படுத்தி போலி சான்றிதழ் வழங்கியவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    திருபுவனை தொகுதியில் முதியோர், விதவைகள் மற்றும் கணவனால் கைவிடப்பட்டோர் ஆகியோருக்கு உதவித்தொகை பெறும் விண்ணப்பத்தில் குடியிருப்பு மற்றும் வருமான சான்றிதழ்கள் அரசு முத்திரையை பயன்படுத்தி பயனாளிகளிடம் பணத்தை பெற்றுக்கொண்டு கலிதீர்த்தாள்குப்பம் மேயர் தெருவை சேர்ந்த ரமேஷ் என்பவர் போலியாக தாசில்தார் மற்றும் துணை தாசில்தார் அளிக்கும் சான்றிதழ்களை வழங்குவதாக ஏற்கனவே தொகுதி எம்.எல்.ஏ.வான அங்காளன் குற்றம் சாட்டியிருந்தார்.

    இந்த நிலையில் பயனாளிகளுக்கு ரமேஷ் போலி சான்றிதழ் வழங்கப்பட்டதை ஆதாரத்துடன் அங்காளன் எம்.எல்.ஏ. திருபுவனை போலீசில் புகார் செய்தார். போலீசார் ரமேஷ் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • திடீர் பிரேக் பிடித்ததால் மோட்டார் சைக்கிளில் இருந்து தடுமாறி விழுந்த அரசு ஆஸ்பத்திரி ஊழியர் பரிதாபமாக இறந்து போனார்.
    • இவர் தவளக்குப்பத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்தார்.

    புதுச்சேரி:

    திடீர் பிரேக் பிடித்ததால் மோட்டார் சைக்கிளில் இருந்து தடுமாறி விழுந்த அரசு ஆஸ்பத்திரி ஊழியர் பரிதாபமாக இறந்து போனார்.

    புதுவை குரும்பாப்பேட் வீட்டு வசதி குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் பழனிவேல் (வயது57). இவர் தவளக்குப்பத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்தார்.

    பழனிவேல் வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் வேலைக்கு சென்று கொண்டிருந்தார்.

    புதுவை-விழுப்புரம் சாலையில் ரெட்டியார்பாளையத்தில் ஒரு தனியார் வீட்டு உபயோக பொருட்கள் விற்கும் கடை அருகே வந்த போது திடீரென ஒருவர் குறுக்கு பாய்ந்ததால் அவர் மீது மோதாமல் இருக்க பழனிவேல் திடீரென பிரேக் போட்டார்.

    இதனால் நிலை தடுமாறி மோட்டார் சைக்கிளில் இருந்து பழனிவேல் கீழே விழுந்தார். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

    இதுபற்றி பழனிவேல் உடனடியாக தனது மகன் சிவராமகிருஷ்ணனுக்கு போன் மூலம் தகவல் தெரிவித்தார். அவர் விரைந்து வந்து தனது நண்பர் உதவியுடன் தந்தையை கதிர்காமம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார்.

    அங்கு முதலுதவி சிகிச்சை பெற்ற பின்னர் மேல் சிகிச்சைக்காக பழனிவேல் ஜிப்மர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

    அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்து போனார்.

    புதுவை உழவர்கரை நண்பர்கள் நகர் பகுதியை சேர்ந்தவர் ஜெயபிரகாசம் (67). வயது முதிர்ச்சி காரணமாக இவர் வேலைக்கு எதுவும் செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார். ஜெயபிரகாசத்துக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்தது.

    இவர் மோட்டார் சைக்கிளில் மது கடைக்கு சென்று மது குடித்து விட்டு வீடு திரும்பி கொண்டிருந்தார். புதுவை-விழுப்புரம் சாலையில் திருமலை தாயார்நகரில் ஒரு தனியார் ஆஸ்பத்திரி அருகே வந்த போது திடீரென நிலை தடுமாறி மோட்டார் சைக்கிளில் இருந்து ஜெயபிரகாசம் கீழே விழுந்தார்.

    இதில் தலையில் பலத்த காயமடைந்த ஜெயபிரகாசத்தை அங்கிருந்தவர்கள் மீட்டு ஆட்டோவில் கதிர்காமம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக ஜெயபிரகாசம் ஜிப்மர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி ஜெயபிரகாசம் பரிதாபமாக இறந்து போனார்.

    இந்த 2 விபத்துக்கள் குறித்த புகாரின் பேரில் கோரிமேடு போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • வில்லியனூர் அருகே மூதாட்டி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ராஜாமணி இறந்து போனார். இதனால் செங்குலத்தாள் தனிமையில் வசித்து வந்தார்.

    புதுச்சேரி:

    வில்லியனூர் அருகே மூதாட்டி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    வில்லியனூர் அருகே அகரம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜாமணி. இவரது மனைவி செங்குலத்தாள்(வயது73). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். 2 பேருக்கும் திருமணமாகி விட்டது.

    கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ராஜாமணி இறந்து போனார். இதனால் செங்குலத்தாள் தனிமையில் வசித்து வந்தார். அவரை அதே பகுதியில் வசிக்கும் இளைய மகள் லட்சுமி அவ்வப்போது வந்து பார்த்து விட்டு செல்வார்.

    தனிமையில் வசித்து வந்ததால் செங்குலத்தாள் மனஉளைச்சலில் இருந்து வந்தாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த செங்குலத்தாள் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். தனது கூரை வீட்டில் சேலையால் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து அவரது இளைமகள் லட்சுமி கொடுத்த புகாரின் பேரில் வில்லியனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகிறார்கள்.

    ×