என் மலர்
இந்தியா

மேற்குவங்க ரெயில் விபத்து: மோடி அரசின் அலட்சியம் - காங்கிரஸ் கட்சி கண்டனம்
- ரெயில்வே அமைச்சர் அவரின் பொறுப்பை விட்டுவிட்டு, ரீல்ஸ் பதிவிட்டு வெற்று விளம்பரங்களை செய்வதிலேயே மும்முரமாக இருக்கிறார்.
- ரெயில்வே துறையை அழிப்பதில் மோடி அரசு மும்முரமாக செயல்படுகிறது.
மேற்குவங்க மாநிலம் டார்ஜிலிங் மாவட்டத்தில் நின்றுகொண்டிருந்த விரைவு ரெயில் மீது சரக்கு ரெயில் மோதி விபத்துக்குள்ளான அதிர்ச்சி தகவல் இன்று காலை வெளியானது. இதில் முதலில் 5 பேர் உயிரிழந்ததாக கூறப்பட்ட நிலையில் தற்போது உயிரிழந்தோர் எண்ணிக்கை 15-ஆக அதிகரிப்பு. 60-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.
மேற்குவங்க ரெயில் விபத்து, மோடி அரசின் அலட்சியத்தை காட்டுகிறது என்று காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் காங்கிரஸ் கட்சி பதிவிட்டுள்ளது. அதில், "நாட்டில் ஒரு பக்கம் ரெயில் விபத்துகள் நடந்துகொண்டே இருக்கின்றன. மறுபக்கம் ரெயில்வே அமைச்சர் அவரின் பொறுப்பை விட்டுவிட்டு, ரீல்ஸ் பதிவிட்டு வெற்று விளம்பரங்களை செய்வதிலேயே மும்முரமாக இருக்கிறார்.
மோடி அரசு ரெயில்வே பாதுகாப்புக்காக பல திட்டங்கள் கொண்டு வரப்பட்டதாக அவர்கள் கூறினர். ஆனால், அதை வைத்து பணம் மட்டுமே சம்பாதித்துள்ளனர்.
பாதுகாப்புக்காக ஒதுக்கப்பட்ட நிதியை தவறான முறையிலும் பயன்படுத்தியதாக சிஏஜி அறிக்கை கூறுகிறது.
ரெயில்வே துறையை அழிப்பதில் மோடி அரசு மும்முரமாக செயல்படுகிறது. இதன்மூலம் இத்துறையை அவரின் நண்பர்களுக்கு விற்கப் பார்க்கிறது" என்று தெரிவித்துள்ளது.






