என் மலர்
இந்தியா

நகைகளை திருடி விட்டு கோவிலுக்குள் தூங்கிய கொள்ளையன்- தட்டி எழுப்பி கைது செய்த போலீஸ்
- கொஞ்ச நேரத்தில் அவன் நன்றாக அசந்து தூங்கினான்.
- காளி தேவியே அவனுக்கு தக்க தண்டனை கொடுத்ததாக பக்தர்கள் தெரிவித்தனர்.
ஜார்க்கண்ட் மாநிலம் மேற்கு சிங்பூமின் சந்தை பகுதியில் காளி கோவில் உள்ளது. சம்பவத்தன்று இரவு வழக்கமான பூஜை முடிந்ததும் பூசாரி கோவிலை பூட்டி விட்டு சென்றார்.
நள்ளிரவு நேரம் மர்மநபர் ஒருவன் கோவிலின் பின்பக்க கதவை உடைத்து கொண்டு கோவிலுக்குள் புகுந்தான். பின்னர் அங்கிருந்த தங்கம் மற்றும் வெள்ளி நகைகள், கீரிடம் உள்ளிட்டவைகளை திருடினான்.
அப்போது அவனுக்கு தூக்கம் கண்ணை கட்டியது. இதனால் சிறிது நேரம் தூங்கி விட்டு செல்லலாம் என நினைத்து அவன் கோவில் கருவறைக்குள் தரையில் படுத்தான். கொஞ்ச நேரத்தில் அவன் நன்றாக அசந்து தூங்கினான்.
அதிகாலை கோவிலுக்கு வந்த பூசாரி கருவறையில் ஒருவன் தூங்கி கொண்டு இருந்ததையும், அவன் அருகே நகைகள் சிதறி கிடப்பதையும் பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
இது பற்றி அவர் ஊருக்குள் ஓடோடி சென்று விஷயத்தை சொன்னார். இதையடுத்து ஊர் மக்கள் கோவிலுக்கு திரண்டு வந்தனர். போலீசாருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது.
அப்போதும் அந்த மர்மநபர் எழுந்திரிக்கவில்லை. போலீசாரும், பொதுமக்களும் அவனை தட்டி எழுப்பினார்கள், இதனால் திடுக்கிட்டு எழுந்த மர்மநபர் தன் முன் போலீசார் நிற்பதை பார்த்து அங்கிருந்து ஓட முயன்றான்.
உடனே போலீசார் அவனை மடக்கி பிடித்து கைது செய்தனர். விசாரணையில் அவனது பெயர் வீர் நாயக் என்பது தெரியவந்தது. கோவிலுக்குள் திருடுவதற்காக நுழைந்ததாக அவன் போலீசாரிடம் தெரிவித்தான். அவன் தூங்கியதால் திருடு போக இருந்த நகைகள் தப்பியது.
காளி தேவியே அவனுக்கு தக்க தண்டனை கொடுத்ததாக பக்தர்கள் தெரிவித்தனர்.






