search icon
என் மலர்tooltip icon

    இந்தியா (National)

    இறுதிக்கட்ட பாராளுமன்ற தேர்தல்... வாக்கினை செலுத்திய ஜே.பி.நட்டா, யோகி ஆதித்யநாத்
    X

    இறுதிக்கட்ட பாராளுமன்ற தேர்தல்... வாக்கினை செலுத்திய ஜே.பி.நட்டா, யோகி ஆதித்யநாத்

    • வாக்குப்பதிவு தொடங்கியதில் இருந்தே பொதுமக்கள் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.
    • அரசியல் கட்சி தலைவர்களும் தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றி வருகின்றனர்.

    இந்திய திருநாட்டின் பாராளுமன்ற 18-வது மக்களவைக்கான தேர்தல் அட்டவணை கடந்த மார்ச் மாதம் 16-ந்தேதி அறிவிக்கப்பட்டது. அப்போது இந்த தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் என்று தேர்தல் கமிஷன் அறிவித்தது.

    அதன்படி முதல் கட்ட தேர்தல் கடந்த ஏப்ரல் 19-ந்தேதி 102 தொகுதிகளுக்கு நடைபெற்றது. இதில் தமிழ்நாடு, புதுச்சேரியை சேர்ந்த 40 தொகுதிகளும் அடங்கும்.

    இதையடுத்து ஏப்ரல் 19, 26, மே 7, 13, 20 மற்றும் 25-ந்தேதிகளில் தொடர்ச்சியாக 6 கட்ட தேர்தல்கள் நடந்து முடிந்தன. மேற்குவங்காளம், ஆந்திர மாநிலங்களை தவிர மற்ற இடங்களில் அமைதியாக தேர்தல் நடந்து முடிந்தன.

    இந்த நிலையில் 7-வது மற்றும் இறுதிக்கட்டமாக 8 மாநிலங்களை சேர்ந்த 57 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு தொடங்கியது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்குப்பதிவு தொடங்கியதில் இருந்தே பொதுமக்கள் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். அரசியல் கட்சி தலைவர்களும் தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றி வருகின்றனர்.

    அந்த வகையில், பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி. நட்டா இமாச்சல பிரதேச மாநிலம் பிலாஸ்பூரில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார். அவரது மனைவி மல்லிகா நட்டாவும் தனது வாக்கினை செலுத்தினார்.


    உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கோரக்பூரில் உள்ள கோரக்நாத்தில் உள்ள வாக்குச் சாவடியில் வாக்களித்தார்.


    சமாஜ்வாதி கட்சியின் காஜிபூர் மக்களவை வேட்பாளர் அப்சல் அன்சாரியின் சகோதரரும், முன்னாள் எம்எல்ஏவுமான சிப்கதுல்லா அன்சாரி உத்தரபிரதேச மாநிலம் காஜிபூரில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.

    பஞ்சாப்பில் ஆனந்த்பூர் சாஹிப் தொகுதிக்கு உட்பட்ட லக்னூரில் உள்ள வாக்குச்சாவடியில் ஆம் ஆத்மி எம்பி ராகவ் சதா பொதுமக்களுடன் வரிசையில் நின்று தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றினார்.

    எஸ்பிஎஸ்பி தலைவரும், உ.பி., அமைச்சருமான ஓம் பிரகாஷ் ராஜ்பர் பல்லியாவில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.

    Next Story
    ×