என் மலர்tooltip icon

    இந்தியா

    NDA-வின் புதிய எம்.பி.க்கள் கூட்டம் தொடங்கியது... ஆட்சி அமைக்க உரிமை கோருகிறார் மோடி

    • சந்திரபாபு நாயுடு, நிதிஷ்குமார் உள்ளிட்ட கூட்டணியின் மூத்த தலைவர்களுடன் பிரதமர் மோடி ஜனாதிபதி திரவுபதி முர்முவை சந்திக்கிறார்.
    • தன்னை ஆதரிக்கும் எம்.பி.க்களின் பட்டியலை ஜனாதிபதியிடம் மோடி வழங்குகிறார்.

    புதுடெல்லி:

    நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்ற பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் கடந்த 4-ந்தேதி வெளியாகின. இதில் மத்தியில் ஆளும் பா.ஜ.க. உள்பட எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. மொத்தமுள்ள 543 இடங்களில் 240 தொகுதிகளை மட்டுமே அந்த கட்சியால் கைப்பற்ற முடிந்தது.

    அதேநேரம் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 293 இடங்களில் வெற்றியை பதிவு செய்தது. ஆட்சியமைக்க தேவையான 272-க்கு அதிகமான உறுப்பினர்களை இந்த அணி பெற்றதால் அடுத்த 5 ஆண்டுகளுக்கு கூட்டணி ஆட்சி நடைபெறுவது உறுதியாகி இருக்கிறது.

    பா.ஜ.க. கூட்டணி கட்சிகளின் தலைவர்கள், பிரதமர் மோடியே 3-வது முறையாக ஆட்சியமைக்க தங்கள் ஆதரவை அளித்தனர். அத்துடன் தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவராக பிரதமர் மோடியை ஒரு மனதாக அவர்கள் தேர்வு செய்தனர்.

    இதற்கிடையே புதிய மந்திரி சபையில் யார் யாருக்கு இடமளிப்பது குறித்து கட்சி தலைவர்களிடையே பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. தேசிய ஜனநாயக கூட்டணியில் முக்கிய கட்சிகளாக கருதப்படும் தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதாதளம் ஆகிய 2 கட்சிகளும் முறையே 16 மற்றும் 12 எம்.பி.க்களை வைத்திருக்கின்றன. எனவே கூட்டணி ஆட்சியை சுமுகமாக தொடர்வதற்கு இந்த இரு கட்சிகளின் ஆதரவும் பா.ஜ.க.வுக்கு முக்கியமானதாகும்.


    இந்த பரபரப்பான சூழலில் பா.ஜ.க. உள்ளிட்ட தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் புதிய எம்.பி.க்கள் கூட்டம் டெல்லியில் இன்று தொடங்கியது.பழைய பாராளுமன்ற கட்டிடத்தின் மத்திய அரங்கில் தொடங்கிய கூட்டத்தில் 293 இடங்களில் வெற்றி பெற்றுள்ளவர்கள் பங்கேற்றுள்ளனர். இதில் தங்கள் தலைவராக (பிரதமர்) மோடி தேர்வு செய்யப்படுகிறார். அதைத்தொடர்ந்து சந்திரபாபு நாயுடு, நிதிஷ்குமார் உள்ளிட்ட கூட்டணியின் மூத்த தலைவர்களுடன் பிரதமர் மோடி ஜனாதிபதி திரவுபதி முர்முவை சந்திக்கிறார்.

    அப்போது, தன்னை ஆதரிக்கும் எம்.பி.க்களின் பட்டியலை ஜனாதிபதியிடம் மோடி வழங்குகிறார். அத்துடன் புதிய அரசு அமைப்பதற்காக உரிமையும் கோருகிறார். அதை ஏற்றுக்கொண்டு பிரதமர் மோடியை புதிய அரசு அமைக்க ஜனாதிபதி அழைப்பு விடுப்பார். அதைத்தொடர்ந்து பிரதமர் மோடி தலைமையிலான புதிய அரசு பதவியேற்கிறது.



    Next Story
    ×