என் மலர்
இந்தியா

"பயங்கரவாதிகளின் சகோதரி.." கர்னல் சோபியா குரேஷி பற்றி பாஜக அமைச்சர் சர்ச்சைப் பேச்சு - காங்கிரஸ் சீற்றம்
- நரேந்திர மோடிக்கு மிகவும் நெருக்கமான விஜய் ஷா ராஜினாமாவை பாஜக ஏற்குமா?.
- விஜய் ஷா இந்த மோசமான சிந்தனைக்காக பதவி உயர்வு பெறுவார்.
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் நடத்திய ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் விளக்கமளித்து கவனம் ஈர்த்தவர் கர்னல் சோபியா குரேஷி. இந்நிலையில் அவரின் இஸ்லாமிய மத அடையாளத்தை வைத்து மத்தியப் பிரதேச பாஜக அமைச்சர் குன்வார் விஜய் ஷா தரம் தாழ்ந்த கருத்து ஒன்றை தெரிவித்தார்.
நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமைச்சர் குன்வார் விஜய் ஷா, "பஹல்காமில் நமது மகள்களின் நெற்றிக் குங்குமத்தை அழித்தவர்களை அழிக்க, அவர்களது சகோதரியை அனுப்பி வைத்தோம். எங்களின் விமானத்தில் அவர்களின் சகோதரியை அனுப்பி வைத்து, அவர்களை அழிக்க வைத்தார் மோடி. எங்கள் சகோதரிகளை நீங்கள் விதவைகளாக்கினால், உங்களின் சகோதரிகளை கொண்டு உங்களை அழிக்க வைப்போம்" என்று பேசினார்.
அவர் பேசிய வீடியோ வைரலான நிலையில் பாஜக அமைச்சர் ஆயுதப்படைகளை அவமதித்ததாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.
பீகார் காங்கிரஸ் எக்ஸ் பதிவில் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மத்தியப் பிரதேச பாஜக அரசாங்கத்தில் அமைச்சராக இருக்கும் விஜய் ஷா, கர்னல் சோபியா குரேஷி பயங்கரவாதிகளின் மகள் என்று அவமானகரமான கருத்தை தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் மகள் கர்னல் சோபியா குரேஷி நமது பெருமை, ஆனாலும் அவரைப் பற்றி இதுபோன்ற ஒரு அவமானகரமான கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது. இது நமது துணிச்சலான ஆயுதப் படைகளுக்கு அவமானம்.
இப்படிப்பட்ட சூழ்நிலையில், நரேந்திர மோடிக்கு மிகவும் நெருக்கமானவர் என்று தன்னை அழைத்துக் கொள்ளும் விஜய் ஷா, ராஜினாமாவை பாஜக ஏற்குமா?.
இந்த அற்ப சிந்தனைக்கு பிரதமர் மோடியும் பாஜக தலைவர்களும் மன்னிப்பு கேட்பார்களா?. அல்லது, எப்போதும் போல, விஜய் ஷாவும் இந்த மோசமான சிந்தனைக்காக பதவி உயர்வு பெற்று, அவருக்கு ஆதரவாக பேரணிகள் நடத்தப்படுமா? என்று கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.






