என் மலர்
இந்தியா

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மூலம் ராமர் காட்டிய வழியில் பாகிஸ்தானின் அநீதி அழிக்கப்பட்டது- பிரதமர் மோடி
- பகவான் ராமர் நமக்கு நேர்மையாக வாழவும், அநீதியை தட்டிக் கேட்கும் துணிச்சலுடன் இருக்கவும் கற்றுக் கொடுத்துள்ளார்.
- ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது இந்தியா நீதியை நிலைநாட்டியது.
புதுடெல்லி:
பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார். அந்த கடிதத்தில் அவர் கூறி இருப்பதாவது:-
தீபாவளி பண்டிகையை உற்சாகமாக கொண்டாடி வரும் உங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்ட பிறகு கொண்டாடப்படும் 2-வது தீபாவளி இதுவாகும்.
பகல்காமில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை மேற்கொண்டது. அந்த நடவடிக்கையை இந்தியா நேர்மையான முறையில் மட்டுமின்றி அநீதிக்கு பழிக்கு பழி வாங்கும் வகையில் அதிரடியாக மேற்கொண்டது.
பகவான் ராமர் நமக்கு நேர்மையாக வாழவும், அநீதியை தட்டிக் கேட்கும் துணிச்சலுடன் இருக்கவும் கற்றுக் கொடுத்துள்ளார். அதன் அடிப்படையில்தான் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை எடுக்கப்பட்டதை சில மாதங்களுக்கு முன்பு நீங்கள் பார்த்தீர்கள்.
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது இந்தியா நீதியை நிலைநாட்டியது. அதோடு அநீதி அழிக்கப்பட்டது.
நமக்கெல்லாம் இந்த ஆண்டு தீபாவளி சிறப்பு வாய்ந்த ஒன்றாகும். வரலாற்றில் முதல் முறையாக நாடு முழுவதும் பல மாவட்டங்களில் தீப ஒளி ஏற்றப்பட்டது. குறிப்பாக தொலைதூர பகுதிகளில் இந்த ஆண்டு உற்சாகமாக தீபாவளி கொண்டாடப்பட்டதை காண முடிகிறது.
இந்த மாவட்டங்களில் எல்லாம் மாவோயிஸ்டு தீவிரவாதம் இருந்தது. இன்று அவை அனைத்தும் வேரோடு அழிக்கப்பட்டுள்ளது. சமீப காலமாக பலரும் வன்முறை பாதையை கைவிட்டு வளர்ச்சி பாதைக்கு திரும்புவதை நாம் காண முடிகிறது.
நாட்டின் அரசியல் கட்டமைப்பு மீது அவர்கள் நம்பிக்கை கொண்டு போராட்டத்தை கைவிட்டு வளர்ச்சி பாதைக்கு திரும்பி உள்ளனர். இது நமது நாடு செய்துள்ள மிகப்பெரிய சாதனையாகும்.
அடுத்து மத்திய அரசு அடுத்த தலைமுறைக்கான சீர்திருத்தங்களை மேற்கொண்டு வருகிறது. ஜி.எஸ்.டி. வரிஅடுக்கு 4-ல் இருந்து 2-ஆக குறைக்கப்பட்டது. அந்த ஜி.எஸ.டி. சீர்திருத்தம் கடந்த மாதம் 22-ந் தேதி நவராத்திரி தொடங்கிய தினத்தன்று நாடு முழுவதும் அமல்படுதுதப்பட்டது.
ஜி.எஸ்.டி. வரி குறைக்கப்பட்டதால் அத்தியாவசிய பொருட்களின் விலை கணிசமாக குறைந்தது. மக்களின் வாங்கும் திறன் நாடு முழுவதும் அதிகரித்து இருப்பதை கண்கூடாக காண முடிகிறது. இது நமது நாட்டின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தி உள்ளது.
ஜி.எஸ்.டி. வரி குறைப்பு நாட்டு மக்களுக்கு தீபாவளி பரிசாக இருக்கும் என்று நான் தெரிவித்தேன். அதை உறுதிப்படுத்தும் வகையில் பண்டிகை நாளில் மக்கள் முக்கிய பொருட்களை குறைந்த விலைக்கு பெற்றனர். இதனால் மக்கள் பல ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்களை சேமித்து உள்ளனர்.
தற்போது உலகம் முழுவதும் பொருளாதார நிலையற்ற தன்மை நிலவுகிறது. பல நாடுகள் நெருக்கடியை சந்தித்துள்ளன. ஆனால் இந்திய பொருளாதாரம் வலுவாக, சிறப்பானதாக உள்ளது.
இந்திய பொருளாதாரத்தில் நிலையான தன்மையும், வளர்ச்சியும் இணைந்து காணப்படுகிறது. இதன் காரணமாக உலகின் 3-வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா மாற உள்ளது. இந்த பயணத்தில் நாம் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.
வளர்ச்சியடைந்த, சுய சார்பு கொண்ட இந்தியாவை உருவாக்க ஒவ்வொரு குடிமகனும் முதன்மை இலக்காக கொண்டு பணியாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். தற்போதைய வரலாற்று சாதனைகளுடன் அடுத்த கட்ட சீர்திருத்தங்களையும் நாம் தொடர்ந்து செய்ய வேண்டும்.
ஒரே பாரதம் என்று உணர்வுடன் நாம் செயல்பட வேண்டும். அனைத்து மாநில மொழிகளுக்கும் நாம் உரிய மரியாதை கொடுக்க வேண்டும். சுகாதாரத்தை பேண வேண்டும். நமது உடல் நலத்தை கவனிப்பதில் முன்னுரிமை கொடுக்க வேண்டும்.
உணவில் எண்ணை பயன்படுத்துவதை 10 சதவீதம் குறைக்க வேண்டும். தினமும் யோகா பயிற்சி மேற்கொள்ள வேண்டும். இவை அனைத்தும் ஒருங்கிணைந்து செயல்பாட்டுக்கு வரும்போது மிகப்பெரிய வளர்ச்சியடைந்த பாரதத்தை நோக்கி நாம் பயணிக்க முடியும்.
இன்றைய தீப ஒளியை ஏற்றி நாம் பிரகாசமாக்கும்போது அது மற்றொரு விளக்கில் ஏற்றப்படும்போது அதன் ஒளி குறையாது. மேலும் அதிகரிக்கவே செய்யும்.
அதே உணர்வுடன் நாட்டு மக்கள் அனைவரும் நல்லிணக்கம், அமைதி, ஒத்துழைப்பு, நேர்மறையான எண்ணங்கள் ஆகியவற்றை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.






