என் மலர்tooltip icon

    இந்தியா

    காஷ்மீரின் வளர்ச்சி பொறுக்கவில்லை: பஹல்காம் தாக்குதலுக்கு கடுமையான பதிலடி உறுதி - மோடி
    X

    காஷ்மீரின் வளர்ச்சி பொறுக்கவில்லை: பஹல்காம் தாக்குதலுக்கு கடுமையான பதிலடி உறுதி - மோடி

    • அப்பாவிகளின் உயிர்களை குடித்தவர்களை பழிதீர்க்காமல் இந்தியா ஓயாது
    • பயங்கரவாதத்திற்கு எதிராக 140 கோடி இந்தியர்களுடன் உலக நாடுகள் கரம் கோர்த்துள்ளன

    காஷ்மீரின் சுற்றுலா தலமான பஹல்காமில் கடந்த 22-ந்தேதி பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டனர்.

    இந்த கொடூர தாக்குதல் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று பிரதமர் மோடி தெரிவித்தார். பயங்கரவாதிகளை தேடிப்பிடித்து தண்டிப் போம் என்று சூளுரைத்தார்.

    இந்நிலையில், இன்று மனதின் குரல் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, "இன்று நான் உங்களிடம் பேசும்போது என் இதயத்தில் ஒரு ஆழமான வேதனை உள்ளது. கடந்த 22-ந்தேதி அன்று நடந்த பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் ஒவ்வொரு குடிமகனின் மனதையும் உடைத்து விட்டது. பயங்கரவாத தாக்குதலின் படங்களைப் பார்த்த பிறகு ஒவ்வொரு குடிமகனும் கோபத்தால் கொதிப்பதை நான் புரிந்து கொள்கிறேன். ஒவ்வொரு இந்தியரின் ரத்தம் கொதிக்கிறது.

    ஒருவர் எந்த மாநிலத்தில் வாழ்கிறார். எந்த மொழியைப் பேசுகிறார் என்பதைப் பொருட்படுத்தாமல், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு அனைவரிடத்திலும் ஆழ்ந்த அனுதாபம் உள்ளது.

    இந்த தாக்குதல் பயங்கரவாதத்தை ஆதரிப்பவர்களின் விரக்தியை பிரதிபலிக்கிறது. இந்த தாக்குதல் தீவிரவாதத்தின் ஆதரவாளர்களின் மனசோர்வையும் அவர்களின் கோழைத்தனத்தையும் வெளிப்படுத்துகிறது.

    காஷ்மீரில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் உயிரோட்டம் இருந்தது. கட்டுமானப்பணிகள் வரலாற்று வேகத்தில் முன்னேறிக் கொண்டு இருந்தன.

    ஜனநாயகம் வலுப்பெற்றுக் கொண்டு இருந்தது. மக்களின் வருமானம் உயர்ந்து கொண்டு இருந்தது. இளைஞர்களுக்கு புதிய வாய்ப்புகள் உருவாக்கப்பட்டன.

    இதை நாட்டின் எதிரிகள், ஜம்மு காஷ்மீரின் எதிரிகள் விரும்பவில்லை. பயங்கரவாதிகளும் அவர்களின் எஜமானர்களும் காஷ்மீர் மீண்டும் அழிக்கப்பட வேண்டும் என்று விரும்புகிறார்கள். அதனால்தான் இவ்வளவு பெரிய சதித் திட்டத்தை நிறைவேற்றி இருக்கிறார்கள்.

    பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தப் போரில், நாட்டின் ஒற்றுமை நமது மிகப்பெரிய பலம் ஆகும். இந்த சவாலை எதிர் கொள்ளும் நமது உறுதியை நாம் வலுப்படுத்த வேண்டும். ஒரு தேசமாக வலுவான உறுதியை நாம் நிரூபிக்க வேண்டும். இந்திய மக்கள் உணரும் கோபம் உலகம் முழுவதும் எதிரொலித்து உள்ளது.

    இந்த கொடூரமான பயங்கரவாதத் தாக்குதலை அனைவரும் கடுமையாக கண்டித்துள்ளனர். உலகத் தலைவர்கள் தொலை பேசியில் என்னிடம் பேசினார்கள்.கடிதங்கள் எழுதியுள்ளனர், செய்திகளை அனுப்பி உள்ளனர். பயங்கரவாதத்திற்கு எதிரான நமது போராட்டத்தில் 140 கோடி இந்தியர்களுடன் முழு உலகமும் நிற்கிறது.

    தாக்குதலுக்கு எதிராக இந்தியா ஒரே குரலில் பேசுவதை உலகம் கவனித்துக் கொண்டிருக்கிறது. இந்த ஒற்றுமைதான் பயங்கரவாதத்திற்கு எதிரான தீர்க்கமான போரின் மிகப்பெரிய அடித்தளம் ஆகும். பாதிக்கப் பட்டவர்களின் குடும்பங்களுக்கு நீதி கிடைக்கும் என்று மீண்டும் ஒருமுறை நான் உறுதி அளிக்கிறேன்.

    இந்தத் தாக்குதலுக்கு சதித்திட்டம் தீட்டியவர்கள் மற்றும் குற்றவாளிகளுக்கு கடுமையான பதிலடி கொடுக்கப்படும்" என்று பேசினார்.

    மேலும், பேசிய அவர், "மறைந்த விஞ்ஞானியும் இஸ்ரோவின் முன்னாள் தலைவருமான கே. கஸ்தூரி ரங்கனுக்கு அஞ்சலி செலுத்துகிறேன். நாட்டிற்கு அவர் ஆற்றிய தன்னலமற்ற சேவையும், தேசத்தைக் கட்டியெழுப்புவதில் அவர் ஆற்றிய பங்களிப்பும் எப்போதும் நினைவுகூரப்படும்.

    கடந்த மாதம் பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட மியான்மருக்கு இந்தியா ஆபரேஷன் பிரம்மா திட்டத்தை தொடங்கி உதவிகளை செய்தது. நெருக்கடி காலங்களில், உலகளாவிய நண்பராக இந்தியாவின் விரைவான பதிலும், மனிதகுலத்திற்கான இந்தியாவின் அர்ப்பணிப்பும் நமது அடையாளமாக மாறி வருகின்றன.

    ஆப்கானிஸ்தான், நேபாளத்துக்கு தடுப்பூசிகள் அனுப்பப்பட்டன. பீகார், மேற்கு வங்கம் அல்லது ஜார்க்கண்டில் லிச்சி மரம் வளர்கிறது என்று கேள்விப்பட்டிருக்கிறோம். தற்போது தென்னிந்தியா மற்றும் ராஜஸ்தானிலும் லிச்சி வளர்க்கப்படுகிறது.

    தமிழ்நாட்டைச் சேர்ந்த வீர அரசு காபி பயிரிட்டார். அவர் கொடைக்கானலில் லிச்சி மரங்களை நட்டார். 7 வருட கடின உழைப்புக்குப் பிறகு, அந்த மரங்கள் காய்க்கத் தொடங்கியுள்ளன. லிச்சி வளர்ப்பில் கிடைத்த வெற்றி அப்பகுதியில் உள்ள மற்ற விவசாயிகளுக்கு உத்வேகம் அளித்துள்ளது என்றார்.

    Next Story
    ×