என் மலர்tooltip icon

    இந்தியா

    சினிமாவுக்கு OK... நிஜத்தில்... காதலியின் குடும்பத்தினரை கவர இப்படியா செய்வது! - போலீசில் சிக்கிய இளைஞர்
    X

    சினிமாவுக்கு OK... நிஜத்தில்... காதலியின் குடும்பத்தினரை கவர இப்படியா செய்வது! - போலீசில் சிக்கிய இளைஞர்

    • கடந்த மாதம் 23-ந்தேதி இருவரும் வெவ்வேறு கார்களில் சென்றனர்.
    • விபத்தை ஏற்படுத்திய காரை கண்டுபிடித்து, அதனை ஓட்டியது அஜாஸ் என்பதை போலீசார் கண்டு பிடித்தனர்.

    காதலில் விழுந்தவர்கள் அதில் வெற்றி பெற பல்வேறு யுக்திகளை கையாளுவது சகஜமான விஷயம் தான். அதிலும் ஆண்களை எடுத்துக் கொண்டால் காதலிக்கும் பெண்ணை மட்டுமின்றி, அவர்களது குடும்பத்தினரின் மனதையும் கவர வேண்டும் என்று நினைப்பர்.

    அப்படி நினைத்த ஒருவர், தான் காதலித்த பெண்ணின் மீது நண்பன் மூலமாக மோதச்செய்து விபத்தை ஏற்படுத்தி உள்ளார். போலீசார் நடத்திய தீவிர விசாரணையால், விபத்தை வாலிபர் திட்டமிட்டு அரங்கேற்றிய விவரம் வெளிச்சத்துக்கு வந்துவிட்டது. அது பற்றிய விவரம் வருமாறு:-

    கேரள மாநிலம் பத்தினம்திட்டா மாவட்டம் கோன்னி மம்மூத்து பகுதியை சேர்ந்தவர் ரஞ்சித் ராஜன்(வயது24). இவர் ஒரு இளம்பெண்ணை காதலித்துள்ளார். அதுகுறித்து அந்த பெண்ணிடம் ரஞ்சித்ராஜன் தெரிவித்திருக்கிறார். ஆனால் அந்த பெண்ணோ பெரிய அளவில் விருப்பம் காட்டாமல் இருந்ததாக தெரிகிறது.

    இதனால் அந்த பெண்ணின் குடும்பத்தினரின் மனதை கவர்ந்து, அதன் மூலமாக இளம்பெண்ணை காதலிக்க வைத்துவிடலாம் என்று நினைத்தார். தான் காதலிக்கும் பெண்ணின் குடும்பத்தினரை கவர, விபத்து நாடகத்தை சினிமா பாணியில் அரங்கேற்ற திட்டமிட்டார்.

    அதாவது தான் காதலிக்கும் பெண்ணை ஏதாவது ஒரு வாகனத்தை விட்டு மோதச்செய்து, அவரை காப்பாற்றி ஆஸ்பத்திரியில் சேர்ப்பதன் மூலம் பெண்ணின் குடும்பத்தினரிடம் நல்ல பெயர் வாங்குவதே அவரது திட்டம் ஆகும்.

    கைதானவர்கள்

    இதுகுறித்து தனது நண்பரான கோன்னி பையனமான் பகுதியை சேர்ந்த அஜாஸ்(19) என்பவரிடம் தெரிவித்தார். அதற்கு அவரும் சம்மதித்தார். இதையடுத்து விபத்தை எங்கு வைத்து நடத்துவது? எப்படி அரங்கேற்றுவது? என்று இருவரும் திட்டமிட்டனர்.

    ரஞ்சித் ராஜன் மற்றும் அஜாஸ் வெவ்வேறு கார்களில் செல்வதும், அஜாஸ் தனது காரால் ரஞ்சித் ராஜன் காதலிக்கும் பெண்ணின் மீது மோதி விபத்தை ஏற்படுத்துவதுமே அவர்களது திட்டமாகும். அதன்படி கடந்த மாதம் 23-ந்தேதி இருவரும் வெவ்வேறு கார்களில் சென்றனர். பின்பு இருசக்கர வாகனத்தில் சென்ற ரஞ்சித்ராஜன் காதலிக்கும் பெண்ணை, அஜாஸ் தனது காரில் பின்தொடர்ந்து சென்றார். பத்தினம்திட்டா அருகே உள்ள வாழமுட்டம் பகுதிக்கு சென்றதும் அந்த பெண்ணின் இருசக்கர வாகனத்தின் மீது காரால் அஜாஸ் மோதினார்.

    பின்பு அவர் சம்பவ இடத்தில் காரை நிறுத்தாமல் வேகமாக சென்றுவிட்டார். கார் மோதிய வேகத்தில் அந்த பெண் தூக்கிவீசப்பட்டார். அதில் அவரது கை உள்ளிட்ட பல இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டது. அந்த நேரத்தில் மற்றொரு காரில் ரஞ்சித் ராஜன் விபத்து நடந்த இடத்துக்கு வந்தார்.

    அவர் காயமடைந்து கிடந்த தான் காதலிக்கும் பெண்ணை மீட்டு, தனது காரில் கொண்டு சென்று ஆஸ்பத்திரியில் சேர்த்தார். இந்நிலையில் இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர். விபத்தை ஏற்படுத்திய காரை கண்டுபிடித்து, அதனை ஓட்டியது அஜாஸ் என்பதை போலீசார் கண்டு பிடித்தனர்.

    அவரிடம் நடத்திய விசாரணையில், அவர் விபத்தில் சிக்கி காயமடைந்த பெண்ணை காப்பாற்றிய ரஞ்சித்ராஜனின் நண்பர் என்பது தெரியவந்தது. மேலும் விபத்து நடந்தவுடன் சம்பவ இடத்துக்கு ரஞ்சித் ராஜன் உடனடியாக வந்தது எப்படி? என்ற கேள்வி போலீசாருக்கு எழுந்தது.

    இதனால் இந்த விபத்து தற்செயலாக நடந்திருக்காதோ? என்ற சந்தேகம் போலீசாருக்கு ஏற்பட்டது. இதையடுத்து அஜாஸ் மற்றும் ரஞ்சித் ராஜன் ஆகியோரிடம் தனித்தனியாக கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தப்பட்டது. அப்போது அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்தனர்.

    இறுதியில் ரஞ்சித்ராஜன் தனது நண்பருடன் சேர்ந்து விபத்தை திட்டமிட்டு அரங்கேற்றியதை ஒப்புக்கொண்டார். இதையடுத்து ரஞ்சித்ராஜன் மற்றும் அஜாஸ் ஆகிய இருவரையும் போலிசார் கைது செய்தனர். காதலித்த பெண்ணின் குடும்பத்தினரை கவருவதற்காக, திட்டமிட்டு விபத்தை ஏற்படுத்தி இளம் பெண்ணின் மீது காரால் மோதச்செய்த சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×