என் மலர்
இந்தியா

பாபா சித்திக் கொலை: சல்மான் கான் பிஷ்னோய் சமூகத்திடம் மன்னிப்பு கேட்க வேண்டும் - பாஜக எம்.பி.
- சல்மானுக்கு உதவும் யாராக இருந்தாலும் அவர்களுக்கு பாபா சித்திக் கதிதான் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
- வேட்டையாடியது மட்டுமில்லாமல் அதை சமைத்து சாப்பிட்டுள்ளீர்கள்.
மகாராஷ்டிராவின் மூத்த அரசியல் தலைவரும் என்சிபியை சேர்ந்தவருமான பாபா சித்திக் கடந்த சனிக்கிழமை லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலால் சுட்டுக்கொல்லப்பட்டார். லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் பாலிவுட் நடிகர் சல்மான் கானை கொலை பல காலங்களாக முயற்சி செய்து வருகிறது. இந்நிலையில் சல்மானுக்கு உதவும் யாராக இருந்தாலும் அவர்களுக்கு பாபா சித்திக் கதிதான் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதனைத்தொடர்ந்து சல்மான் கானின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. கடந்த 1998 ஆம் ஆண்டு ராஜஸ்தான் மாநிலத்துக்கு சினிமா ஷூட்டிங் சென்ற சல்மான் கான் அங்கு கரும்புலி வகை மான்களை வேட்டையாடினார். இதுதொடர்பாக அவர் மீது பலவருடங்களாக வழக்கு நடந்தது. இதற்கிடையே பஞ்சாப். அரியானா, ராஜஸ்தான் பகுதிகளில் பரவலாக வாழும் பிஷ்னோய் சமூக மக்கள் கரும்புலி மான்களை புனிதமான விலங்காக பார்ப்பவர்கள் ஆவர். எனவே அந்த சமூகத்தை சேர்ந்த தாதா லாரன்ஸ் பிஷ்னோய் சல்மான் கானுக்கு தொடர்ந்து கொலை மிரட்டல் விடுத்து வந்தார்.
கடந்த ஏப்ரல் மாதம் சல்மான் கானின் வீட்டின் மீதும் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. தற்போது பாபா சித்திக் கொலைக்கு பின்னர் நிலைமை மோசமாகி வரும் நிலையில் சல்மான் கான் பிஷ்னோய் சமூகத்தினரின் புனித விலங்கை சுட்டதற்காக அவர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பாஜக மாநிலங்களவை எம்.பி ஹர்நாத் சிங் யாதவ் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக சல்மான் கானுக்கு அவர் விடுத்துள்ள அழைப்பில், அன்புள்ள சல்மான் கான், பிஷ்னோய் சமூகத்தினர் கரும்புலி மானை கடவுளாக வழிபடுகின்றனர். நீங்கள் அதை வேட்டையாடியது மட்டுமில்லாமல் அதை சமைத்து சாப்பிட்டுள்ளீர்கள்.
அவர்களது சமூகம் உங்கள் மேல் பல காலமாக கோபத்தில் உள்ளது. எனவே எனது அறிவுரையை ஏற்று அவர்களிடம் மன்னிப்பு கேட்டு அதற்கான பரிகாரத்தைச் செய்யுங்கள் என்று கேட்டுள்ளார். இதற்கிடையே லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலையே அளித்துவிடுவேன் என்று பாஜக எம்.எல்.ஏ ஒருவர் மேடையில் சூளுரைத்தது குறிப்பிடத்தக்கது.






