என் மலர்tooltip icon

    இந்தியா

    போர்க்கால பாதுகாப்பு ஒத்திகையில் மேற்கொள்ளப்படும் முக்கிய நடவடிக்கைகள்
    X

    போர்க்கால பாதுகாப்பு ஒத்திகையில் மேற்கொள்ளப்படும் முக்கிய நடவடிக்கைகள்

    • போர்க்காலங்களில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்து சிறப்பு பயிற்சிகளை வழங்க வேண்டும்.
    • அகல்விளக்கு ஒளியில் அன்றாட பணிகளை மேற்கொள்வது குறித்து மக்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும்

    அனைத்து மாநிலங்களும் பாதுகாப்பு ஒத்திகையை நடத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அறிவுறுத்தல்கள் வழங்கப் பட்டுள்ளன. அவை வருமாறு:-

    போர்க்காலங்களின் போது இந்திய எல்லைப் பகுதிகளில் அன்னிய போர் விமானங்கள் நுழைந்தால் அபாய ஒலி எழுப்பப்படுவது வழக்கம். நாளை நடைபெற உள்ள ஒத்திகையின்போது இதுபோன்ற அபாய சைரன் ஒலியை எழுப்ப வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பாதுகாப்பான இடங்கள் குறித்து பொதுமக்களுக்கு முன்கூட்டியே தகவல் தெரிவிக்க வேண்டும். சைரன் ஒலியின்போது அந்த இடங்களுக்கு மக்கள் பாதுகாப்பாக செல்வது குறித்த அறிவுரைகளை வழங்க வேண்டும்.

    அண்டை நாட்டில் இருந்து தாக்குதல் நடந்தால் பொதுமக்களை பாதுகாப்பது எப்படி என சிவில் பாதுகாப்பு அமைப்புகள், பொதுமக்கள், மாணவா்கள், தனியாா் நிறுவனங்களின் பாதுகாவலா்கள் மற்றும் ஊழியா்கள் உள்ளிட்டோருக்கு உரிய பயிற்சி அளிக்க வேண்டும்.

    போர்க்காலங்களில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்து தன்னார்வலர்கள் மற்றும் மாணவ, மாணவிகளுக்கு சிறப்பு பயிற்சிகளை வழங்க வேண்டும்.

    குறிப்பாக போரில் காயமடைந்தவர்களை மீட்பது, எதிரிகளின் தாக்குதல்களில் இருந்து பொதுமக்களை பத்திரமாக பாதுகாப்பது குறித்து அவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்க வேண்டும்.

    இரவில் மின்சாரத்தை துண்டித்து வெளியே தெரியாத வகையில் அகல்விளக்கு ஒளியில் அன்றாட பணிகளை மேற்கொள்வது குறித்து மக்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும். குறிப்பாக அணு மின் நிலையங்கள் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் வசிப்போர் போர்க்காலங்களில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்து சிறப்பு பயிற்சி வழங்க வேண்டும்.

    எதிரிகள் தாக்குதல் நடத்தும் பகுதிகளில் இருந்து பாதுகாப்பாக வெளியேறுவது, பதுங்கு குழிகள் மற்றும் சுரங்கப்பாதைகளில் பாதுகாப்பாக தங்கியிருப்பது குறித்து மக்களிடையே போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

    ராணுவம், பாதுகாப்பு தளவாடங்கள் உள்ள இடங்கள், ஆராய்ச்சி நிலையங்கள், அணுஉலை மற்றும் ஈனுலை மையங்கள், உள்ளிட்ட முக்கிய இடங்கள் இலக்காகலாம் என்பதால் அவை அன்னிய ராடாரில் இருந்து தெரியாமல் தடுக்க தொழில்நுட்ப வசதிகளைப் பயன்படுத்தி மறைத்தல், தாக்குதல் நடப்பதாகவோ தாக்குதல் நடந்தாலோ அங்குள்ளவா்களை பாதுகாப்பாக வெளியேற்றும் திட்டங்களை தயாரித்தல், மக்களை பத்திரமான இடத்துக்கு அழைத்துச்செல்லுதல், அதற்கு தேவையான தளவாட வசதிகள், மருத்துவமனை வசதிகள் உள்ளிட்டவற்றை தயாா்நிலையில் வைத்திருத்தல் போன்ற நடவடிக்கைகளை பாதுகாப்பு ஒத்திகையின் அங்கமாக செயல்படுத்துமாறு மாநிலங்களை உள்துறை அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.

    மேலும் கட்டுப்பாட்டு அறைகள் அமைத்தல், தாக்குதல் காரணமாக மின்சாரம், இணையதளம் ஆகியவை முழுமையாக முடங்கினால் என்னென்ன நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்ற அறிவுறுத்தல்கள் வழங்கப் பட்டுள்ளன.

    Next Story
    ×