என் மலர்
செய்திகள்

எனது கேள்விகளை பிரதமரிடம் ஒவ்வொருவரும் கேளுங்கள்- ராகுல் கோரிக்கை
ரபேல் ஒப்பந்தம் விவகாரத்தில் நான் எழுப்பும் கேள்விகளை பிரதமர் மற்றும் மந்திரிகளிடம் ஒவ்வொருவரும் கேளுங்கள் என மக்களுக்கு ராகுல் காந்தி கோரிக்கை விடுத்துள்ளார். #rahulgandhi #pmmodi #bjp
ரபேல் ஒப்பந்தத்தில் ஊழல் என குற்றம் சாட்டும் காங்கிரஸ் இதுதொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக்குழு அமைத்து விசாரிக்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறது. காங்கிரஸ் ஆட்சியின்போது நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிக விலைக்கு விமானங்கள் வாங்கப்படுவதாகவும், ரபேல் ஒப்பந்தத்தின் இந்திய பங்குதாரர் நிறுவனமாக அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் தேர்வு செய்யப்பட்டதன் பின்னணியிலும் மத்திய அரசு இருப்பதாகவும் காங்கிரஸ் குற்றம் சாட்டுகிறது.
இதுதொடர்பான விவாதம் பாராளுமன்றத்தில் நடைபெற்றபோது காரசாரமான வாக்குவாதம் நடந்தது. கமிஷன் பணம் கிடைக்காததால்தான் ‘ரபேல்’ விமான பேரத்தை காங்கிரஸ் கைவிட்டது, பொதுத்துறை நிறுவனத்துக்காக அது முதலை கண்ணீர் வடிக்கிறது என்று நிர்மலா சீதாராமன் குற்றம் சாட்டினார். இருப்பினும் என்னுடைய கேள்விகளுக்கு பதில் அளிக்கவில்லை என்று ராகுல் காந்தி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இதுதொடர்பாக டுவிட்டரில் வெளியிட்டுள்ள தகவலில், “ரபேல் விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் ராணுவ மந்திரி 2 மணி நேரம் பேசினார். ஆனால் நான் கேட்ட 2 சாதாரண கேள்விகளுக்கு அவரால் பதிலளிக்க முடியவில்லை” என்று குற்றம் சாட்டியுள்ளார்.

தன்னுடைய இரு கேள்விகள் அடங்கிய வீடியோவையும் பதிவு செய்துள்ளார். ரபேல் விவகாரத்தில் இந்திய பங்குதாரர் ஒப்பந்தத்தை அனில் அம்பானிக்கு கொடுத்தது யார்? ரபேல் ஒப்பந்தத்தில் பிரதமர் மோடி பைபாஸ் அறுவை சிகிச்சை செய்தபோது ராணுவ அமைச்சக அதிகாரிகள் ஏதேனும் அதிருப்தி தெரிவித்தனரா? ஆகிய கேள்விகளை அவர் எழுப்பியுள்ளார். இந்த கேள்விகளுக்கு ஆம் அல்லது இல்லை என பதிலளிக்குமாறு ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமனிடம், ராகுல் காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்த கேள்விகளை பிரதமர் மற்றும் மந்திரிகளிடம் ஒவ்வொருவரும் கேளுங்கள் என மக்களுக்கு ராகுல் காந்தி கோரிக்கை விடுத்துள்ளார். #rahulgandhi #pmmodi #bjp
Next Story






