search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பயிர் கடன்களுக்கு வட்டி முற்றிலும் தள்ளுபடி - புத்தாண்டு பரிசாக அறிவிக்க மத்திய அரசு பரிசீலனை
    X

    பயிர் கடன்களுக்கு வட்டி முற்றிலும் தள்ளுபடி - புத்தாண்டு பரிசாக அறிவிக்க மத்திய அரசு பரிசீலனை

    உரிய நேரத்துக்குள் பயிர் கடனை திருப்பி செலுத்தும் விவசாயிகளுக்கு வட்டியை முற்றிலுமாக தள்ளுபடி செய்வது பற்றி மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. #centralgovernment
    புதுடெல்லி:

    சமீபத்தில் நடந்த 5 மாநில சட்டசபை தேர்தல்களில், மத்தியபிரதேசம், ராஜஸ்தான், சத்தீஷ்கார் ஆகிய 3 மாநிலங்களில் பா.ஜனதா ஆட்சியை பறிகொடுத்தது. அங்கு ஆட்சியை பிடித்த காங்கிரஸ் கட்சி, விவசாய கடன்களை தள்ளுபடி செய்வதாக அறிவித்துள்ளது.

    இதனால், விவசாயிகள், காங்கிரசுக்கு ஆதரவாக திரும்பும் நிலை ஏற்படும் என்று பா.ஜனதா கருதுகிறது. 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில், விவசாயிகள் பிரச்சினை முக்கிய இடத்தை பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, விவசாயிகளை கவரும் வகையிலான அறிவிப்புகளை வெளியிட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

    அதன்படி, விவசாயிகளின் பயிர் கடன்களுக்கு வட்டியை முற்றிலுமாக தள்ளுபடி செய்யும் திட்டத்தை அறிவிப்பது பற்றி பரிசீலித்து வருகிறது. தற்போது, விவசாயிகளுக்கு 7 சதவீத வட்டியில் ரூ.3 லட்சம்வரை குறுகிய கால பயிர் கடன் அளிக்கப்படுகிறது. உரிய நேரத்தில் கடனை திருப்பி செலுத்தினால், 3 சதவீத வட்டி தள்ளுபடி செய்யப்படுகிறது.

    இந்நிலையில், உரிய தேதிக் குள் பயிர் கடனை திருப்பி செலுத்தும் விவசாயிகளுக்கு மீதி 4 சதவீத வட்டியையும் தள்ளுபடி செய்யும் திட்டத்தை அறிவிக்கலாமா? என்று மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.

    ஏற்கனவே, வட்டி தள்ளுபடி மூலம் மத்திய அரசுக்கு ஓராண்டுக்கு ரூ.15 ஆயிரம் கோடி சுமை ஏற்பட்டு வருகிறது. வட்டியை முற்றிலுமாக தள்ளுபடி செய்தால், இந்த சுமை ரூ.30 ஆயிரம் கோடியாக உயரும் அபாயம் உள்ளது.

    விவசாயிகளுக்கு மற்றொரு சலுகையாக, உணவு தானிய பயிர்களின் காப்பீட்டுக்கு அவர்கள் செலுத்தி வரும் பிரிமியம் தொகையை தள்ளுபடி செய்யவும் மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.



    இயற்கை காரணிகளால் பாதிக்கப்படும் பயிர்களுக்கு காப்பீடு வழங்கும்வகையில், ‘பிரதம மந்திரி பசல் பீமா யோஜனா’ என்ற பயிர் காப்பீட்டு திட்டம், 2016-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்கப்பட்டது. இதில், விவசாயிகளிடம் இருந்து 2 சதவீதம், 1.5 சதவீதம், 5 சதவீதம் என பயிர்களுக்கு ஏற்ப குறைவான பிரிமியம் தொகையே வசூலிக்கப்பட்டு வருகிறது. மீதி பிரிமியத்தை மத்திய-மாநில அரசுகள் ஏற்று வருகின்றன.

    இனிமேல், விவசாயிகள் செலுத்தும் சொற்ப பிரிமியத்தையும் தள்ளுபடி செய்ய மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. இதனால், அவர்கள் ஓராண்டுக்கு செலுத்தும் ரூ.5 ஆயிரம் கோடி பிரிமியத்தை மத்திய அரசே ஏற்க வேண்டி இருக்கும்.

    அத்துடன், நடப்பு நிதியாண்டில், விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய கடன் அளவை ரூ.11 லட்சம் கோடியாக மத்திய அரசு நிர்ணயித்துள்ளது.

    விவசாயிகளுக்கான சலுகைகளை வகுப்பது பற்றி உயர்மட்ட அளவில் ஆலோசனை கூட்டங்களை மத்திய அரசு நடத்தி வருகிறது. புத்தாண்டு பரிசாக இத்திட்டங்கள் அறிவிக்கப்படலாம் என்று தெரிகிறது.#centralgovernment
    Next Story
    ×