search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வெள்ள நிவாரணத்துக்கு வெளிநாடுகளிடம் கையேந்த வேண்டாம் -  கேரள காங்கிரஸ் அறிவுரை
    X

    வெள்ள நிவாரணத்துக்கு வெளிநாடுகளிடம் கையேந்த வேண்டாம் - கேரள காங்கிரஸ் அறிவுரை

    வெள்ள பாதிப்புகளை சரிசெய்ய வெளிநாடுகள் மற்றும் வெளிநாட்டு வாழ் கேரள மக்களிடம் நிதி திரட்டும் யோசனையை கைவிட வேண்டும் என அரசுக்கு கேரள மாநில காங்கிரஸ் அறிவுறுத்தியுள்ளது. #KeralaFlood #KVThomas
    திருவனந்தபுரம்:

    கேரளாவில் பெய்த கனமழை காரணமாக மாநிலத்தின் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. சுமார் 483 பேர் இந்த வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தனர். மேலும் பலர் தங்கள் வீடு, உடமைகளை இழந்து நிவாரண முகாம்களில் தங்கியுள்ளனர்.

    கேரள மாநிலத்தின் இந்த நூறாண்டு காணாத மிகப்பெரிய துயரில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களும், பன்மொழி பேசும் மக்களும் பங்கெடுத்தனர். அவர்கள் அழித்த நிவாரணத்தொகை மட்டும் ஆயிரம் கோடியை எட்டியது. மேலும், பல கோடி மதிப்பிலான நிவாரண பொருட்களும் கேரளாவுக்கு வழங்கப்பட்டது.



    இந்த கனமழையால் சுமார் 20 ஆயிரம் கோடி ரூபாய் வரை சேதம் ஏற்பட்டுள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. இந்த சேதத்தை சரிசெய்ய நிதி திரட்டும் முனைப்பில் தற்போது கேரள அரசு உள்ளது. முன்னதாக கேரள மாநிலத்துக்கு நிவாரணமாக ஐக்கிய அரபு அமீரகம் 700 கோடி ரூபாய் அளிக்க முன்வந்தது. ஆனால் அதை மத்திய அரசு வாங்க மறுத்துவிட்டது.

    இதையடுத்து, கேரளாவில் ஏற்பட்ட சேதத்தை சரிசெய்ய வெளிநாடுகளிடமும், வெளிநாட்டு வாழ் கேரள மக்களிடமும் நிதி திரட்ட கேரள அரசு முடிவு செய்தது. இதற்காக அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் அடங்கிய குழு வெளிநாடுகளுக்கு சென்று நிதி திரட்டும் என தெரிவிக்கப்பட்டது.



    இந்நிலையில், அரசின் இந்த முடிவை கைவிடுமாறு கேரள காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.வி. தாமஸ் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், வெளிநாடுகளுக்கு அமைச்சர்களை அனுப்பி கையேந்தும் திட்டத்தை அரசு கைவிட வேண்டும் எனவும், இதனால், இந்தியா மற்றும் கேரள மக்களின் சுயமரியாதை பாதிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

    இதேபோல், கேரள மந்திரிகள் நிதி திரட்டுவதாக வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்வதை கைவிட்டு, பாதிக்கப்பட்ட பகுதிகளை விரைந்து புணரமைக்க பாடுபட வேண்டும் என கேரள மாநிலத்தின் முன்னாள் முதல்மந்திரி உம்மன்சாண்டி கூறியுள்ளார். #KeralaFlood #KVThomas
    Next Story
    ×