search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தேர்தல் ஆணைய கூட்டத்தில் அ.தி.மு.க.-தே.மு.தி.க. மோதல்
    X

    தேர்தல் ஆணைய கூட்டத்தில் அ.தி.மு.க.-தே.மு.தி.க. மோதல்

    டெல்லியில் இன்று நடைபெற்று வரும் தேர்தல் ஆணைய கூட்டத்தில் வாக்காளர்களுக்கு தேர்தலில் பணப்பட்டுவாடா குறித்து அ.தி.மு.க. மற்றும் தே.மு.தி.க. இடையே மோதல் ஏற்பட்டது. #ParliamentElection #ElectionCommission #DMDK #ADMK
    புதுடெல்லி:

    தலைமை தேர்தல் கமி‌ஷன் சார்பில் டெல்லியில் இன்று அனைத்து கட்சிகளும் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடந்தது.

    7 தேசியக் கட்சிகள், 51 மாநில கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர்.

    தேர்தலில் பெண்களை அதிக அளவில் பங்கு பெறச்செய்வது பற்றி கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது. அப்போது தேர்தல் ஆணையர்கள் கூறுகையில், ‘‘அரசியல் கட்சிகள் தேர்தலில் போட்டியிட அதிக பெண்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும்’’ என்றனர்.

    இதையடுத்து வேட்பாளர்கள் செலவை குறைப்பது பற்றி கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. தேர்தலின் போது அரசியல் கட்சிகள் செய்யும் செலவுகளுக்கு உச்சவரம்பு நிர்ணயம் செய்யலாமா என்றும் கூட்டத்தில் கருத்து கேட்கப்பட்டது.

    மாநில கட்சிகளின் பிரதிநிதிகள், தேர்தல் கால செலவு பற்றி பல்வேறு விதமான கருத்துக்களை தெரிவித்தனர். அந்த சமயத்தில் தே.மு.தி.க. சார்பில் பங்கேற்ற ஜி.எஸ்.மணி கூறுகையில், ‘‘கடந்த தேர்தலில் தமிழகத்தில் ஆளும் கட்சியான அ.தி.மு.க. அதிக அளவில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்தது’’ என்றார்.


    இதற்கு அ.தி.மு.க. சார்பில் பங்கேற்றிருந்த துணை சபாநாயகர் தம்பித்துரை கடும் எதிர்ப்பு தெரிவித்தார். அ.தி.மு.க.வை குறிப்பிட்டு எப்படி குற்றம் சாட்ட முடியும் என்று கேள்வி எழுப்பினார். இதன் தொடர்ச்சியாக தம்பிதுரைக்கும் ஜி.எஸ். மணிக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

    அப்போது தேர்தல் ஆணைய அதிகாரிகள் குறுக்கிட்டு தே.மு.தி.க. பிரதிநிதி ஜி.எஸ்.மணிக்கு கண்டனம் தெரிவித்தனர். அனைத்துக் கட்சிகளும் கலந்து கொள்ளும் ஆலோசனைக் கூட்டத்தில் தனிப்பட்ட முறையில் குற்றச்சாட்டை சுமத்தக் கூடாது என்று அறிவுறுத்தினார்கள்.

    இதைத் தொடர்ந்து ஓட்டுப்பதிவு எந்திரம் தொடர்பான சர்ச்சை பற்றி விவாதிக்கப்பட்டது. அதன் மீதான விவாதத்தில் தி.மு.க. பிரதிநிதி டி.கே.எஸ். இளங்கோவன் கலந்து கொண்டு பேசுகையில், ‘‘ஓட்டுப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பான வகையில் இருப்பதை தேர்தல் ஆணையம் உறுதிபடுத்த வேண்டும்’’ என்று கூறினார்.

    காங்கிரஸ் சார்பில், ‘‘மின்னணு எந்திரத்தை கைவிட்டு விட்டு, மீண்டும் ஓட்டுச்சீட்டு முறையில் தேர்தலை நடத்த வேண்டும்’’ என்று கோரிக்கை விடப்பட்டது.

    மதியம் உணவுக்காக சற்று நேரம் இடைவேளை விடப்பட்டது. அப்போது வெளியில் வந்த தம்பிதுரை எம்.பி. நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:-

    வாக்காளர் பட்டியலில் யார் பெயரும் விடுபட்டு விடக்கூடாது. அதற்கு ஏற்ப அனைத்து வாக்காளர்களையும் கொண்ட பட்டியல் தயாரிக்கும்படி கூட்டத்தில் வலியுறுத்தினோம்.

    ஒரே நபரின் பெயர் பல இடங்களில் இருக்கக்கூடாது. அப்படிபட்ட வாக்காளர்களை நீக்கும் போது தகுதியான நபர்களின் பெயர்கள் விடுபட்டு விடக் கூடாது.

    வாக்குச்சீட்டு முறையை மீண்டும் கொண்டு வர வேண்டும் என்று சில கட்சிகள் கருத்து தெரிவித்துள்ளன. அனைத்து கட்சிகளும் ஏற்றுக்கொண்டால் வாக்குச்சீட்டு முறையை மீண்டும் கொண்டு வருவதற்கு எங்களுக்கு எந்த வித ஆட்சேபனையும் இல்லை.

    இவ்வாறு தம்பிதுரை கூறினார். #ParliamentElection #ElectionCommission #DMDK #ADMK
    Next Story
    ×