search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜனாதிபதி தேர்தல்: பா.ஜ.க. சார்பில் ஜார்க்கண்ட் கவர்னர் திரவுபதி முர்மு போட்டி
    X

    ஜனாதிபதி தேர்தல்: பா.ஜ.க. சார்பில் ஜார்க்கண்ட் கவர்னர் திரவுபதி முர்மு போட்டி

    ஜார்க்கண்ட் மாநில கவர்னர் திரவுபதி முர்முவை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கலாம் என்று பா.ஜ.க. தலைவர்கள் ஒருமித்த முடிவுக்கு வந்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
    புதுடெல்லி:

    ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் 5 ஆண்டுகள் பதவிக்காலம் அடுத்த மாதம் (ஜூலை) 24-ந் தேதியுடன் முடிகிறது. இதையடுத்து புதிய ஜனாதிபதியை தேர்வு செய்ய ஜூலை இரண்டாவது வாரம் தேர்தல் நடைபெற உள்ளது.

    ஜனாதிபதி தேர்தலில் மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சிக்கும், எதிர்க் கட்சிகளுக்கும் இடையே நேரடி போட்டி ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இரு தரப்பினரும் யாரை வேட்பாளராக நிறுத்துவது என்பது பற்றி ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.

    பாரதிய ஜனதா கட்சி நிறுத்தும் வேட்பாளர் யார் என்பது அதிகாரப்பூர்வமாக தெரிந்த பிறகு 17 கட்சிகள் சார்பில் யாரை நிறுத்தலாம் என்பதை முடிவு செய்ய காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. பா.ஜ.க. அறிவிக்கும் வேட்பாளர் ஒரு மனதாக தேர்வாகும் தகுதியுடன் இருந்தால், அப்போது எத்தகைய முடிவு எடுப்பது என்பது பற்றி ஆலோசிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. எனவே காங்கிரஸ் கட்சி, இந்த வி‌ஷயத்தில் என்ன முடிவை மேற்கொள்வது என்பது புரியாமல் உள்ளது.

    இந்த நிலையில் எதிர்க் கட்சிகளை தேர்தல் களத்துக்கு வரவிடாமல் ஒதுக்கி விலக வைக்கும் வகையில் அதிரடியாக ஒரு வேட்பாளரை தேர்வு செய்ய பா.ஜ.க. வியூகம் வகுத்துள்ளது. ஜனாதிபதி தேர்தலுக்கு நிறுத்தப்படும் வேட்பாளர் மூலம் நாடு முழுவதும் உள்ள பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களின் ஏகோபித்த ஆதரவை பெற வேண்டும் என்பதும் பா.ஜ.க.வின் திட்டமாக உள்ளது.

    அந்த வகையில் இதுவரை நடத்தப்பட்டுள்ள பல்வேறு சுற்று ஆலோசனைகளில் ஜார்க்கண்ட் மாநில கவர்னர் திரவுபதி முர்முவை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கலாம் என்று பா.ஜ.க. தலைவர்கள் ஒருமித்த முடிவுக்கு வந்து இருப்பதாக தெரியவந்துள்ளது. திரவுபதியை ஜனாதிபதி ஆக்குவதன் மூலம், ஒரே கல்லில் பல மாங்காய்களை பா.ஜ.க.வால் அடிக்க முடியும்.

    திரவுபதியை தேர்வு செய்தால், அவர் ஒரு பெண் என்ற ஆதரவு முதலில் கிடைக்கும். இரண்டாவது அவர் தலித்-பழங்குடி இனத்தவர் என்பதால், நாட்டின் முதன்மையான உயர் பதவிக்கு வரும் முதல் பழங்குடி இனத்தவர் என்ற சிறப்பை பெற முடியும்.

    நாடெங்கும் உள்ள தாழ்த்தப்பட்ட கட்சிகள் அவரை ஆதரிக்க வாய்ப்புள்ளது. குறிப்பாக திரவுபதி ஒடிசாவை சேர்ந்தவர் என்பதால் அம்மாநில ஆளும் கட்சியான பிஜூ ஜனதாதளத்தின் வாக்குகள் முழுமையாக கிடைக்கும்.

    எனவே ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகள் ஒன்று சேருவதையும் பா.ஜ.க.வால் தவிழு பொடியாக்க முடியும். இதனால் பா.ஜ.க.வின் உத்தேச பட்டியலில் திரவுபதி முர்மு முதலிடத்தில் உள்ளார்.



    இதற்கிடையே மத்திய சமூக நீதி அமைச்சர் தாவர் சந்த் கெலாட் பெயரும் இப்போது திடீரென ஜனாதிபதி வேட்பாளராக அடிபட தொடங்கியுள்ளது. சமீபத்தில் அமித்ஷா ஆர்.எஸ்.எஸ்.-சங் பரிவார் தலைவர்களை சந்தித்து பேசினார்.

    அப்போது கெலாட் பெயர் பரிசீலிக்கப்பட்டதாக தெரிகிறது. இந்த நிலையில் துணை ஜனாதிபதி பதவிக்கு வெங்கய்யா நாயுடு பெயர் அடிபடுகிறது. இன்னும் சில தினங்களில் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பது தெரிந்துவிடும்.
    Next Story
    ×