search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கன்னியாகுமரியில் பலவீனமான வேட்பாளரை நிறுத்த சொன்னேனா?- தினகரனுக்கு பொன்.ராதாகிருஷ்ணன் பதில்
    X

    கன்னியாகுமரியில் பலவீனமான வேட்பாளரை நிறுத்த சொன்னேனா?- தினகரனுக்கு பொன்.ராதாகிருஷ்ணன் பதில்

    கன்னியாகுமரி தொகுதியில் பலவீனமான வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்று தான் தினகரனிடம் கூறியதாக சொல்வது உண்மை இல்லை என்று பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். #LokSabhaElections2019 #PonRadhakrishnan
    நாகர்கோவில்:

    கன்னியாகுமரி தொகுதியின் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன் இன்று குலசேகரம் அருகே உள்ள திருநந்திக்கரையில் இருந்து பிரசாரத்தை தொடங்கினார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கன்னியாகுமரி தொகுதியில் பலவீனமான வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்று நான் தினகரனிடம் கூறியதாக சொல்வது உண்மை இல்லை. தேர்தல் நெருங்கும் போது தனது கட்சி வேட்பாளர்களை வெற்றி பெற வைக்க அந்த கட்சிகளின் தலைவர்கள் பரபரப்பு கிளப்புவது வாடிக்கை. அம்மா மக்கள் முன்னேற்ற கழக தலைவர் தினகரனும் அப்படி பரபரப்பு கிளப்பி உள்ளார்.

    கருப்பு முருகானந்தம் அந்த ஊரைச் சேர்ந்தவர். அவருக்கு தினகரனுடன் நல்ல நட்பு உண்டு. பல வி‌ஷயங்களுக்கு அவரிடம் பேசி இருக்கலாம். எனக்கு தெரிந்து இது ஒரு நாள் செய்திக்கு பயன்படலாம். மற்றபடி எந்த மாற்றமும் ஏற்படப்போவது இல்லை.


    குமரி மாவட்ட அரசியல் பற்றி தினகரனுக்கு தெரியாது. என்னிடம் கேட்டிருந்தால், கன்னியாகுமரி தொகுதியில் பலமான வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்று கூறி இருப்பேன்.

    தினகரனுக்கு பிரச்சனை ஏற்பட்ட போது அவர் மத்திய மந்திரிகளை சந்திக்க முயற்சித்ததாகவும், அது நடக்காத விரக்தியில் இப்படி பேசி இருக்கலாம் என கருப்பு முருகானந்தம் கூறியுள்ளார்.

    தனிப்பட்ட முறையில் பல அரசியல் கட்சிகளின் தலைவர்களுடன் நாங்கள் பழகுவது உண்டு. சமீபத்தில் அவர் கட்சி தொடங்கிய பின்பு நான் சந்திக்கவில்லை. தனிப்பட்ட முறையில் பேசுவதை வெளியே கொண்டு வருவது அநாகரீகம் என்பதை தினகரன் உணர்ந்து கொள்ள வேண்டும்.

    கன்னியாகுமரி தொகுதியில் கடந்த முறை காங்கிரஸ் வேட்பாளர் டோக்கன் கொடுத்தார். நான் கடை வைக்கவில்லை. கடை வைத்திருப்பவர்கள் டோக்கன் கொடுப்பார்கள்.

    மீனவ கிராமங்களில் வாக்கு சேகரிக்க சென்ற போது அங்குள்ள மக்கள் என்னை வரவேற்றனர். நாங்கள் 1998 -க்கு பிறகு அனைத்து மத தலைவர்களையும் சந்தித்து ஆசி பெற்று இருக்கிறோம்.

    வடகிழக்கு மாகாணத்தில் 90 சதவீதம் கிறிஸ்தவர்கள் இருக்கிறார்கள். காங்கிரஸ் ஆட்சியில் அவர்களுக்கு எதுவும் செய்யவில்லை. அங்கு இப்போது பாரதிய ஜனதா ஆட்சி நடக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார். #LokSabhaElections2019 #PonRadhakrishnan #TTVDhinakaran
    Next Story
    ×