என் மலர்
வேலூர்
வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் பலியான வாலிபர் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் மறியலில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வேலூர்:
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் சாமியார் மடத்தை சேர்ந்தவர் ராஜாமணி (வயது 34). இவருக்கும் ஓசூரை சேர்ந்த முரளி என்பவரது மகள் நந்தினி (26) என்பவருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.ஒரு ஆண் குழந்தை உள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு கணவன்- மனைவியிடையே தகராறு ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த நந்தினி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
நந்தினியின் சாவில் சந்தேகம் இருப்பதாக அவரது தந்தை முரளி ஆம்பூர் டவுன் போலீசில் புகார் அளித்தார்.மேலும் அவரது உறவினர்கள் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போலீசார் இளம்பெண்ணை தற்கொலைக்கு தூண்டியதாக ராஜாமணி மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். நேற்று முன்தினம் ராஜாமணி வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.
வேலூர் ஜெயிலில் இருந்த ராஜாமணிக்கு திடீர் மூச்சுத்திணறல் ஏற்பட்டது. ஜெயில் டாக்டர்கள் அவருக்கு முதலுதவி அளித்தனர். உடனடியாக அவரை அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
ஆனால் செல்லும் வழியிலேயே ராஜாமணி இறந்துவிட்டார்.
அவரது உடல் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டுள்ளது. இதனை அறிந்த ராஜாமணியின் உறவினர்கள் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் குவிந்தனர். ராஜாமணியின் சாவில் மர்மம் உள்ளது. இது குறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.
இந்த கோரிக்கையை வலியுறுத்தி அவர்கள் உடலை வாங்க மறுத்தனர்.இன்று காலை 30-க்கும் மேற்பட்டோர் அரசு ஆஸ்பத்திரி முன்பு வேலூர்- ஆரணி சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்தால் 30 நிமிடத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்த வேலூர் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) அருண்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அப்புறப்படுத்த முயன்றனர். அப்போது போலீசாருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டவர் களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து போலீசார் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர்.
ராஜாமணியின் சாவில் மர்மம் உள்ளது. இது பற்றி விசாரணை நடத்த வேண்டும். அவரது குழந்தையை ஒப்படைக்க வேண்டும் என அவர்கள் தொடர்ந்து வலியுறுத்தினர்.
போலீசார் பேச்சுவார்த்தையை தொடர்ந்து மறியலை கைவிட்டு ஆஸ்பத்திரி வளாகத்திற்குள் சென்றனர். போக்குவரத்து சீரானது. தொடர்ந்து ராஜாமணியின் உறவினர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆஸ்பத்திரி வளாகத்தில் 20-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர்.
இந்த சம்பவத்தால் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி குடியாத்தத்தில் தேர்தல் பார்வையாளர் ஆய்வு செய்தார்.
குடியாத்தம்:
நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முன்னிட்டு தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து குடியாத்தம் நகராட்சி அலுவலகத்தில் வேலூர் மாவட்ட மேலிட தேர்தல் பார்வையாளர் எம்.பிரதாப் திடீர் ஆய்வு செய்தார்.
குடியாத்தம் நகராட்சி அலுவலகத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறையை வேலூர் மாவட்ட மேலிட தேர்தல் பார்வையாளர் எம்.பிரதாப் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மேலும் 91 வாக்குச் சாவடிகளுக்கு வாக்குப் பதிவை முன்னிட்டு அனுப்பி வைக்கப்படும் பொருட்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார், வாக்குச்சாவடி மையங்களுக்கு கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை பொருட்கள் முகக் கவசங்கள், கையுறைகள் கிருமிநாசினி உள்ளிட்ட பொருட்கள் குறித்தும் ஆய்வு செய்தார்.
தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை மையம் உள்ள ராஜகோபால் பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணிக்கை மையத்தையும் வேலூர் மாவட்ட மேலிட தேர்தல் பார்வையாளர் பிரதாப் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
வேலூர் மாநகராட்சியில் சுயேட்சை வேட்பாளர்கள் தீவிரமாக பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
வேலூர்:
வேலூர் மாநகராட்சி மேயர் கவுன்சிலர் பதவிக்கான தேர்தல் வருகிற 19&ந்தேதி நடக்கிறது. 22-ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடை பெறுகிறது. தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது.
2-வது முறையாக மாநகராட்சி தேர்தல் நடப்பதால் தேர்தல் பிரச்சாரம் களைகட்டி உள்ளது.
2 வார்டுகளில் போட்டியின்றி தி.மு.க. வினர் வெற்றி பெற்றுள்ளனர். மீதமுள்ள 58 வார்டுகளில் 354 பேர் காத்தில் உள்ளனர். இதில் சுயேட்சை வேட்பாளர்கள் மட்டும் 82 பேர் உள்ளனர்.
நாளை மாலையுடன் பிரச்சாரம் முடிவடைவதால் அனைத்து வேட்பாளர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதில் பல வார்டுகளில் சுயேச்சைகள் ஆட்டோ மற்றும் ஒலி பெருக்கி மூலம் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.
மேலும் வீடு வீடாகச் சென்று அரசியல் கட்சி வேட்பாளர்களை மிஞ்சும் அளவுக்கு பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
ஒரு சில வார்டு களில் சுயேச்சை வேட்பாளர் களுக்கு வெற்றி வாய்ப்பு இருப்பதாகவும் கூறப் படுகிறது. அந்த வார்டுகளில் பிரச்சாரம் களைகட்டி உள்ளது.
பிரசாரத்தில் முந்தும் சுயேட்சை வேட்பாளர் களால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது.
குடியாத்தத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு போலீசார் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து ஆலோசனை நடந்தது.
குடியாத்தம்:
வேலூர் சரக காவல்துறை துணைத் தலைவர் ஆனிவிஜயா, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் ஆகியோர் உத்தரவின் பேரில் குடியாத்தம் துணை கோட்ட காவல்துறையினருக்கு நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின்போது காவல்துறையினர் கடைபிடிக்கவேண்டிய விதிமுறைகள் அவர்களுக் கான அறிவுரைகள் மற்றும் ஆலோசனைகள் வழங்கும் கூட்டம் நேற்று நடைபெற்றது.
கூட்டத்திற்கு குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி தலைமை தாங்கினார். இன்ஸ்பெக்டர்கள் லட்சுமி, கணபதி, நிர்மலா, ராஜன்பாபு, செந்தில்குமாரி, சுந்தரமூர்த்தி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளராக வேலூர் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சுந்தரமூர்த்தி கலந்து கொண்டு பேசினார்.
அப்போது உள்ளாட்சி தேர்தல் பாதுகாப்பு பணியில் போது ஈடுபட்டுள்ள காவல்துறையினர் அனைவரும் சுறுசுறுப் பாகவும் புத்துணர்ச்சியுடனும் விருப்பு வெறுப்பு இன்றி பொதுமக்களுக்கு ஒத்துழைப்பு தரும் வகையில் பணியில் உறுதியாகவும், சாந்தமாகவும் இருக்க வேண்டும்.
வாக்குப்பதிவின் போது யாருக்கும் சாதகமாகவோ அல்லது பாதகமாகவோ செயல்படக் கூடாது. தேர்தல் பணியில் எவரும் வாக்கு பதிவு முறையை ரகசியங்களை வெளியிடுவது தண்டனைக்குரிய செயலாகும்.
வாக்குச் சாவடியில் இருந்து 200 மீட்டர் தூரத்திற்குள் வாக்கு சேகரிக்க அனுமதிக்கக்கூடாது, எவ்வித சுவரொட்டிகள் சின்னங்களோ அல்லது வேட்பாளர்கள் அலுவலகங்களோ மேற்குறிப் பிட்ட எல்லைக்குள் இருக்கக்கூடாது வாக்குச் சாவடியில் இருந்து 100 மீட்டர் தூரத்திற்குள் எந்த தனியார் வாகனங்களை நிறுத்த அனுமதி கூடாது.
வாக்காளர்களை வாக்குப் பதிவு செய்ய ஊர்திகளில் அழைத்து வர அனுமதிக்கக் கூடாது.
காவல்துறை அதிகாரிகளும், காவலர் களும் வாக்குச்சாவடி அலுவலர்கள் அழைக்காமல் வாக்குச்சாவடிக்கு உள்ளே நுழையக் கூடாது.
வாக்குப்பதிவு பெட்டிகளை வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இடத்திற்கு எடுத்துச் செல்லும் போது காவல்துறையினர் கவனத்துடன் திறமையுடன் பெட்டிகளுக்கு சேதம் ஏற்படாமல் கொண்டு போய் சேர்க்க வேண்டும்.
பணியில் இருக்கும் காவலர்கள் கட்டாயம் முக கவசம் அணிந்து இருப்பதுடன் வாக்குச் சாவடிக்குள் பிரவேசிக்கும் அனைவரும் கட்டாயம் முக கவசம் அணிந்து இருப்பதை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும் உள்ளிட்ட அறிவுரைகள் காவல்துறையினருக்கு வழங்கப்பட்டன
மேலும் பல்வேறு ஆலோசனைகளும் சந்தேகங்களுக்கு உரிய விளக்கம் இக் கூட்டத்தில் விரிவாக வழங்கப்பட்டது இக்கூட்டத்தில் 200-க்கும் மேற்பட்ட போலீஸ்£ர் கலந்து கொண்டனர்.
வேலூர் மாநகராட்சியில் இந்தி, உருது மொழிகளில் வேட்பாளர்கள் பிரசாரம் செய்து வருகின்றனர்.
வேலூர்:
வேலூர் மாநகராட்சி பகுதியில் தேர்தல் பிரசாரம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. அனைத்துக் கட்சி வேட்பாளர்கள் வீடு வீடாகச் சென்று பிரசாரம் செய்து வருகின்றனர்.
இது ஒருபுறமிருக்க ஆட்டோ பைக் உள்ளிட்ட வாகனங்களில் ஒலிபெருக்கி மூலமும் பிரசாரம் செய்து வருகின்றனர்.
அந்தந்த பகுதிகளில் உள்ள குறைகளை சுட்டிக்காட்டி வாக்குறுதிகளை அள்ளி வீசி வருகின்றனர். வேலூர் கஸ்பா பகுதிகளில் இந்தி மற்றும் உருது மொழிகளில் பிரசாரம் செய்கின்றனர்.
இதற்காக இந்தி உருது பேச தெரிந்தவர்கள் மூலம் ஒலிபெருக்கியில் பிரசாரத்தில் ஈடுபட் டுள்ளனர்.
மாநகராட்சியின் சில பகுதிகளில் இந்தி உருது தெரிந்தவர்கள் அதிகம் பேர் வசித்து வருகின்றனர்.
அவர்களுக்கு எளிதில் புரியும் வகையில் இந்தி மற்றும் உருது மொழிகளில் பிரசாரம் செய்வதாக வேட்பாளர்கள் தெரிவித்தனர்.
குடியாத்தம் அருகே சாராயம் கடத்திச்சென்ற வாலிபர் பைக் விபத்தில் இறந்தார்.
குடியாத்தம்:
வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் இருந்து பரவக்கல் செல்லும் சாலையில் செட்டி குப்பம் கிராமம் சுடுகாடு அருகே சாலையின் வளைவில் இன்று விடியற்காலை மோட்டார் சைக்கிளில் லாரி டியூப்பில் சாராயத்தை வைத்து வேகமாக சென்ற வாலிபர் ஒருவர் நிலை தடுமாறி சாலை ஓரத்தில் இருந்த வீட்டின் சுவற்றில் வேகமாக மோதி உள்ளார்.
இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே அந்த வாலிபர் பலத்த காயங்களுடன் பரிதாபமாக இறந்தார்.
இந்த விபத்து குறித்து அப்பகுதி பொதுமக்கள் உடனடியாக குடியாத்தம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர் தகவல் அறிந்து விரைந்து வந்த குடியாத்தம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் கணபதி, சப்-இன்ஸ்பெக்டர் சிவச்சந்திரன் ஆகியோர் விபத்தில் இறந்த வாலிபரின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் தீவிர விசாரணை நடத்தியதில் பேர்ணாம்பட்டு அடுத்த சாத்கர் கள்ளிச்சேரி பகுதியைச் சேர்ந்த ரமேஷ் மகன் சகாயம் வயது 22 என்பது தெரியவந்தது.
வேலூரில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
வேலூர்:
வேலூர் சைதாப்பேட்டை பி.டி.சி. ரோடு பகுதியில் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக குடிநீர் சப்ளை செய்யப்படவில்லை.காவிரி கூட்டு குடிநீர் குழாய்கள் சேதம் ஏற்பட்டதால் குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என கூறப்படுகிறது.
இந்தநிலையில் இன்று காலை அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் எஸ்டிபிஐ கட்சியினர் பிடிசி ரோட்டில் சாலை மறியல் செய்தனர்.
இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்த மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர்.
ஒரு மாதத்திற்கு மேலாக குடிநீர் சப்ளை செய்யப்படவில்லை. இதுபற்றி மாநகராட்சியில் புகார் தெரிவித்த பிறகும் நடவடிக்கை எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டினர். உடனடியாக லாரிகள் மூலம் அந்த பகுதியில் குடிநீர் சப்ளை செய்யப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் உறுதி அளித்தனர்.இதனை தொடர்ந்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.
பிறகு பிடிசி ரோடு பகுதியில் லாரிகள் மூலம் குடிநீர் சப்ளை செய்யப்பட்டது.
வேலூர் மாநகராட்சியில் பதற்றமான வாக்குச்சாவடிகளில் பாதுகாப்பு குறித்து கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு செய்தார்.
வேலூர்:
வேலூர் மாவட்டத்தில் நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை ஒட்டி வாக்குச்சாவடிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. அனைத்து வாக்குச்சாவடி களிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தப் படுகிறது. இதுதவிர 91 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளது.
இந்த வாக்குச்சாவடிகளில் வெப் கேமரா பொருத்தப்பட்டு கண்காணிக்க நடவடிக்கை எடுத்துள்ளனர். மேலும் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்படுகிறது.
வேலூரில் பதட்டமான வாக்குச்சாவடிகள் என கண்டறியப்பட்டுள்ள கொணவட்டம் அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் காகிதப்பட்டறை அரசு நடுநிலைப்பள்ளி வாக்குச்சாவடி மையங்களில் இன்று காலை கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சுந்தரமூர்த்தி ஆய்வு செய்தார்.
இந்த வாக்குச் சாவடிகளில் கேமராக்கள் பொருத்தும் பணி நடைபெற்றது. அதனைப் பார்வையிட்டார்.மேலும் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்வது குறித்து அவர் ஆலோசனை நடத்தினார்.
அனைத்து வாக்குச்சாவடிகளிலும் தேர்தல் அமைதியான முறையில் நடைபெற பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்தனர்.
மறைமுக தேர்தல் பண பேரத்திற்கு வழிவகுக்கும் மாநகராட்சி மேயரை மக்கள் நேரடியாக தேர்வு செய்ய வேண்டும் என வேலூரில் சீமான் கூறினார்.
வேலூர்:
வேலூர் பாகாயம் தனியார் திருமண மண்டபத்தில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அறிமுக கூட்டம் இன்று நடந்தது. இதில் சீமான் கலந்து கொண்டு வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து பேசினார்.
தொடர்ந்து அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-
எல்.ஐ.சி தனியார் மயமாக்கப்படும் என அறிவித்ததை எதிர்த்து நாங்கள் போராடி வருகிறோம். அதை முதல்வர் இன்று பேசியுள்ளார். எல்.ஐ.சி. தனியார் மயக்காலை மத்திய அரசு கைவிட வேண்டும் என முதல்வர் கூறியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.
மத்திய அரசு லாபத்தில் இயங்கும் அனைத்து பொது நிறுவனங்களையும் விற்கிறோம் என்கிறார்கள். இழப்பில் போகும் தனியார் நிறுவனங்களை அரசே ஏற்கும் என்கிறார்கள். இது எந்த மாதிரியான ஆட்சி முறை என்றே தெரியவில்லை.
எல்.ஐ.சி. தனியார் மயமாக்குவதை அனுமதிக்க கூடாது. இதில் எங்களை போலவே போராட்டம், ஆர்ப்பாட்டம் செய்யாமல் 39 எம்.பிக்களை வைத்துள்ளவர்கள் பாராளுமன்றத்தில் தீவிரமாக எதிர்க்க வேண்டும்.
அ.தி.மு.க., தி.மு.க. என 2 கட்சியுமே உள்ளாட்சி தேர்தலை நியாயமாக நடத்துவதில்லை.
ஆட்சி அதிகாரத்தில் மற்ற வேட்பாளர்களை அச்சுறுத்தி திரும்ப பெற செய்கிறார்கள். இப்போதே ஆள்கடத்தல் அச்சுறுதல் உள்ளது ஆட்சிக்கு வந்துவிட்டால் என்ன ஆகும்.
நகர்புற தேர்தலில் மறைமுக தேர்தல் அவசியமற்றது நேரடியாக மேயரை தேர்தெடுக்க வேண்டும். மறைமுக தேர்தல் பேரத்துக்கே வழிவகுக்கும். இது ஜனநாயகம் அல்ல பண நாயகம் தான்.
தேர்தல் நேரம் என்பதால் தான் அ.தி.மு..க- தி.மு.க. நீட் விவகாரம் குறித்து பேசுகிறார்கள். தேர்தல் நேரத்தில் பா.ஜ.க கார் எரியும், அலுவலகத்தில் குண்டு போடுவார்கள், தேர்தல் நேரத்தில் காவி துணி அணிந்து கல்லூரிக்கு செல்வார்கள்.இவ்வாறு அவர் கூறினார்.
வேலூர் மாநகராட்சி அலுவலகம் புதுப்பொலிவு பெறுகிறது.
வேலூர்:
வேலூர் மாநகராட்சி மேயர் கவுன்சிலர் பதவிக்கான தேர்தல் வருகிற 19-ந்தேதி நடக்கிறது. 22-ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது.
இரண்டாவது முறையாக மாநகராட்சி தேர்தல் நடப்பதால் தேர்தல் பிரசாரம் களைகட்டி உள்ளது.
வேலூர் மாநகராட்சி அலுவலகம் புதுப்பொலிவுடன் மாற்றும் பணிகள் இன்று தொடங்கப்பட்டுள்ளது.மாநகராட்சி அலுவலகம் முழுவதும் புதிய வண்ணம் தீட்டப்படுகிறது. மேலும் கண்ணாடி ஜன்னல்கள் போன்றவை சுத்தம் செய்யப்படுகின்றன.
வேலூர் மாநகராட்சி அலுவலகம் வர்ணம் தீட்டப்பட்டு 8 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. அதனால் தற்போது புதிதாக சுத்தம் செய்யப்பட்டு வர்ணம் தீட்டப்படுகிறது.
விரைவில் இந்த பணிகள் முடிவடையும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
வேலூர் சத்துவாச்சாரியில் பறக்கும் படை சோதனையில் ரூ.1 லட்சம் பறிமுதல் செய்தனர்.
வேலூர்:
வேலூர் மாநகராட்சி தேர்தலை ஒட்டி பணம் பரிசுப் பொருட்கள் கொண்டு செல்வதை தடுக்க பறக்கும் படையினர் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.
சத்துவாச்சாரி ஆர்டிஓ சாலையில் இன்று காலை பறக்கும் படை அதிகாரி செரீப் என்பவர் தலைமையில் சோதனை நடத்தினர்.
அப்போது தனியார் டிக்கெட் ஏஜென்சி யில் வேலை பார்த்து வரும் ஊழியர் ஒருவர் பைக்கில் வந்தார். அவரிடம் சோதனை நடத்தியதில் ஆவணம் இல்லாமல் ரூ.1 லட்சம் இருந்தது. உடனடியாக பணத்தை பறிமுதல் செய்து மாநகராட்சி கமிஷனர் அசோக்குமாரிடம் ஒப்படைத்தனர்.
உரிய ஆவணங்கள் காட்டினால் பணம் திரும்ப ஒப்படைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
தேர்தல் பணியில் ஈடுபடும் போலீசாருக்கு புதிய கட்டுப்பாடுகளை டி.ஐ.ஜி ஆனி விஜயா தெரிவித்துள்ளார்.
வேலூர்:
வேலூர் மாவட்டத்தில் தேர்தல் பணியின் போது போலீசார் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்த ஆலோசனை கூட்டம் வேலூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று நடந்தது.
நிகழ்ச்சியில் வேலூர் சரக டிஐஜி ஆனி விஜயா கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது;-
தொடர்ந்து பல்வேறு பணிகளின் காரணமாக போலீசார் மன அழுத்தத்தில் உள்ளனர். தேர்தல் பணி என்பது போலீசாருக்கு புதிதல்ல. அதில் சிறப்பாக செயல்பட வேண்டும்.
வாக்குப் பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கையின் போது போலீசாருக்கு தேவையான உணவு உள்ளிட்டவை நேரடியாக வழங்கப்படும்.
வாக்குச்சாவடிகளில் பணியில் ஈடுபட்டிருக்கும் போலீசார் அவர்களுக்கு தெரிந்தவர்கள் யாராவது வந்தால் அவரிடம் பேசக்கூடாது. கைகள் மூலம் சைகை காட்ட கூடாது. செல்போனில் எந்த காரணத்தைக் கொண்டும் தேவையில்லாமல் பேசக்கூடாது.
சில போலீசார் தவறுகளில் ஈடுபடுகின்றனர்.அது ஏன் என்று தெரியவில்லை. போலீஸ்காரர் ஒருவர் செய்யும் தவறு ஒட்டுமொத்த காவல்துறையை பாதிக்கும்.நமக்கு குடும்பம் முக்கியம். பணியில் கவனக் குறைவு அலட்சியமாக இருக்கக்கூடாது.
இவர் அவர் பேசினார்.
கூட்டத்தில் டி.ஐ.ஜி. பேசிக்கொண்டிருக்கும் போது போலீசார் ஒருவருக்கொருவர் தனியாக பேச ஆரம்பித்தனர். இதனால் அதிக சத்தம் கேட்டது.
அப்போது டிஐஜி ஆனி விஜயா ஆவேசம் அடைந்தார். கூட்டத்தில் பேசியது யார் எழுந்து நிற்க வேண்டும் என உத்தரவிட்டார். அப்போது போலீசார் யாரும் எழுந்திருக்கவில்லை. இதனையடுத்து அனைத்து போலீசாரையும் எழுந்து நிற்குமாறு கூறினார்.உடனடியாக அனைவரும் எழுந்து நின்றனர்.
அவர்களுக்கு அறிவுரை கூறி அமர வைத்தார். இதனால் கூட்டத்தில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.
கூட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் கூறுகையில்:&
தேர்தல் பணியில் ஈடுபடும் போலீசார் அரசியல்வாதிகளிடம் எந்தக் காரணத்தைக் கொண்டும் உணவு வாங்கி சாப்பிடக்கூடாது தேவை இல்லாமல் பேசக் கூடாது என்றார்.






