என் மலர்tooltip icon

    வேலூர்

    பேரணாம்பட்டில் கால்நடை செயற்கை கருவூட்டல் குறித்து வேளாண்மை கல்லூரி மாணவிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
    பேரணாம்பட்டு:

    கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் பேரணாம் பட்டு அடுத்த சின்ன தாமஸ் தெருவில் வேளாண் கல்லூரி மாணவர்களுக்கு சிறப்பு கால்நடைசு காதாரம் மற்றும் சிறப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

    முகாமில் பாலாறு வேளாண்மை கல்லூரி மாணவிகளுக்கு கால்நடை செயற்கை கருவூட்டல் பற்றி விளக்கமாக சுரேந்தர் பயிற்சி அளித்தார். முகாமில் கல்லூரி மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.
    வேலூரில் அரசு ஊழியர்களுக்கு தமிழ்மொழி பயிற்சி வகுப்பு நடந்தது.
    வேலூர்:

    வேலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் அரசு ஊழியர்களுக்கு தமிழ்மொழி குறித்த பயிற்சி வகுப்பு இன்று நடந்தது.

    மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் பொது விஜயராகவன் தலைமை தாங்கி பயிற்சி வகுப்பை தொடங்கி வைத்தார். தமிழ் வளர்ச்சித் துறை துணை இயக்குனர் ராஜேஸ்வரி வரவேற்றார். இதில் தமிழ் மொழி குறித்து புலவர் வெற்றியழகன் பயிற்சி வழங்கினார்.

    இந்தப் பயிற்சி அரசின் பல்வேறு துறைகளை சேர்ந்த ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர். அவர்களுக்கு அலுவலகப் பணிகள் மேற்கொள்ளும்போது தமிழ் மொழியை எவ்வாறு பிழையின்றி பயன்படுத்த வேண்டும் என்பது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. 

    இதில் வாணியம்பாடி இஸ்லாமியக் கல்லூரி பேராசிரியர் சிவராஜன் கலந்துகொண்டு மொழிபெயர்ப்பு குறித்து விளக்கி கூறினார். இந்த பயிற்சி வகுப்பில் பல்வேறு துறைசார்ந்த ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.
    ஏழை மாணவர்களுக்கு ஆசிரியர்கள் உதவ வேண்டும் முதன்மை கல்வி அலுவலர் பேசினார்.
    வேலூர்:

    வேலூர் மாவட்ட ஜுனியர் ரெட்கிராஸ் அலுவலகத்தில் ஆசிரியர் களுக்கான பாராட்டு விழா இன்று நடந்தது. மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் முனுசாமி தலைமை தாங்கி சான்றிதழ்களை வழங்கினார்.அவர் பேசியதாவது:-

    கொரோனா ஊரடங்கு காலத்தில் மாவட்ட நிர்வாகத்தின் அழைப்பினை ஏற்று பள்ளிக்கல்வித்துறையின் ஜூனியர் ரெட் கிராஸ் நாட்டு நலப்பணித்திட்டம் பாரத சாரண சாரணியர் மற்றும் தேசிய மாணவர் படையின் அங்கம் வகிக்கும் ஆசிரியப் பெருமக்கள் தன்னார்வமாக கலந்துகொண்டு பல்வேறு உதவிகளை செய்து இருக்கிறார்கள்.
    அவர்களை நான் பாராட்டுகிறேன்.

    நாம் அனைவரும் முடிந்த வரையில் உதவிகளை செய்ய வேண்டும்.கொடுக்க வேண்டும் என்ற மனசு இருக்க வேண்டும் நம்முடைய வாழ்நாளில் நாம் உதவிகள் செய்தோம் என்ற ஒரு பதிவு இருக்க வேண்டும்.

    பள்ளியில் படிக்க கூடிய ஏழை மாணவர்களின் கல்வி நலனில் ஆசிரியர்கள் அக்கறை கொண்டு முடிந்த உதவிகளை செய்ய வேண்டும்.

    வேலூர் மாவட்டத்தில் சிறந்த மாணவர்களை உருவாக்க அவர்கள் கல்வி நலன் மேம்பட நாம் அனைவரும் இணைந்து செயலாற்றுவோம்.
    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த நிகழ்வில் 120 ஆசிரியருக்கு சால்வை அணிவித்து சான்றிதழ் வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.

    ஜூனியர் ரெட் கிராஸ் மாவட்ட அமைப்பாளர் செ.நா.ஜனார்த்தனன் வரவேற்றுப் பேசினார். பாரத சாரண சாரணிய மாவட்ட செயலாளர் அ.சிவக்குமார் இணை அமைப்பாளர் எஸ்.ரகுபதி இந்தியன் ரெட் கிராஸ் காட்பாடி வட்ட கிளை துணைத்தலைவர் ஆர்.சீனிவாசன் துணைக் குழு தலைவர் எஸ்.எஸ்.சிவவடிவு தலைமை ஆசிரியர் டி.திருநாவுக்கரசு பள்ளி துணை ஆய்வாளர் அ.மணிவாசகம் கலந்து கொண்டனர்.
    முடிவில் ஜூனியர் ரெட் கிராஸ் மாவட்ட பொருளாளர் க.குணசேகரன் நன்றி கூறினார்.
    வேலூர் மாநகராட்சியில் வெற்றி பெற்ற 60 வார்டு கவுன்சிலர்கள் பதவி ஏற்பு விழா இன்று நடந்தது.
    வேலூர்:

    தமிழகத்தில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் கடந்த 22-ந் தேதி வெளியிடப்பட்டது. தேர்தலில் வெற்றிபெற்றவர்கள் கவுன்சிலர்களாக பதவியேற்பு நிகழ்ச்சி அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளில் இன்று நடந்தது.

    வேலூர் மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளில் 44 வார்டுகளில் தி.மு.க. வெற்றிபெற்று தனிப்பெரும்பான்மையுடன் கைப்பற்றியுள்ளது. தி.மு.க.கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் ஒரு இடத்திலும், அ.தி.மு.க.7, சுயேச்சை வேட்பாளர்கள் 6 இடங்களிலும் பா.ம.க., பா.ஜ.க.தலா ஓரிடத்திலும் வெற்றி பெற்றுள்ளனர்.

    கவுன்சிலர் பதவி ஏற்பு விழாவை ஒட்டி மாநகராட்சி அலுவலகம் விழாக்கோலம் பூண்டிருந்தது.

    புதிய வண்ணத்துடன் அலங்காரங்களுடன் புதுப்பொலிவுடன் காட்சி அளித்தது. பதவியேற்பு விழாவிற்கு மாநகராட்சி கவுன்சிலர்கள் தங்கள் குழந்தைகள் மற்றும் உறவினர்களுடன் வந்திருந்தனர்.இதனால் மாநகராட்சி கூட்ட அரங்கு நிரம்பி வழிந்தது.

    வேலூர் மாநகராட்சியில் தற்போது 30 பெண் கவுன்சிலர்கள் தேர்ந்தெ டுக்கப்பட்டுள்ளனர். இதனால் பெண்கள் ஒருபுறமும் ஆண்கள் ஒரு புறமும் வரிசையாக அமர வைக்கப்பட்டிருந்தனர்.
    1&வது வார்டு முதல் வரிசையாக. கவுன்சிலர்கள் மேடைக்கு அழைக்கப்பட்டனர்.

    அவர்களுக்கு மாநகராட்சி கமிஷனர் அசோக்குமார் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். நிகழ்ச்சியில் கார்த்திகேயன் எம்.எல்.ஏ. மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    தி.மு.க. கவுன்சிலர்கள் பதவி ஏற்கும்போது கலைஞர் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பேரிலும் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் எம்.ஜி.ஆர். ஜெயலலிதா பெயரில் ஆணையிட்டு பதவி ஏற்றுக்கொண்டனர்.

    பதவி ஏற்பு விழா நடந்த அரங்கத்தில் அனைவரும் செல்ல முடியாது என்பதால் மாநகராட்சி அலுவலகத்திற்கு வெளியே பந்தல் அமைக்கப்பட்டு 2 இடங்களில் பெரிய திரைகளில் பதவி ஏற்பு விழா நேரடியாக ஒளிபரப்பப்பட்டது.
    இதன் மூலம் வெளியே இருந்தவர்கள் பதவியேற்பு விழாவை கண்டு களித்தனர்.

    மேலும் பதவி ஏற்பு விழா நடந்த கூட்ட அரங்கில் அரசியல் கட்சியினர் ஏராளமானோர் குவிந்தனர்.

    இதனால் அரங்கம் முழுவதும் சலசலப்பு கேட்டுக்கொண்டே இருந்தது.இந்த சத்தத்திற்கு இடையில் கவுன்சிலர்கள் பதவி ஏற்றுக்கொண்டனர்.
    பெண் கவுன்சிலர்கள் பதவி ஏற்கும்போது அவரது கணவர் மற்றும் குழந்தைகளுடன் சென்று பதவி ஏற்றுக் கொண்டனர். மாநகராட்சி கூட்ட அரங்கில் நின்று போட்டோ எடுத்துக் கொண்டனர். 

    தேவியக்கா கொண்ட கவுன்சிலர்கள் உற்சாகத்துடன் காணப்பட்டனர். அவர்களுக்கு நண்பர்கள் உறவினர்கள் மாநகராட்சி அலுவலகம் வந்து வாழ்த்து தெரிவித்தனர் இதனால் மாநகராட்சி அலுவலகம் கோலாகலமாக காட்சி அளித்தது.

    வேலூர் மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் மற்றும் துணை மேயர் அறைகள் தயார் செய்துள்ளனர். 4-ந்தேதி அனைத்து நகராட்சி, பேரூராட்சிகளில் தலைவர், துணைத் தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் நடைபெற உள்ளதால் அதற்கான ஏற்பாடுகளும் தீவிரப்படுத்தியுள்ளனர்.

    சட்டத்தை "சட்டை 'என்று உச்சரித்த கவுன்சிலர்கள்
    வேலூர் மாநகராட்சி அலுவலகத்தில் வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் இன்று பதவியேற்றுக் கொண்டனர். அப்போது இந்திய அரசியலமைப்பு சட்டப்படி என்று வாசிக்கும்போது சட்டத்தை சட்டை என்றே கவுன்சிலர்கள் சிலர் வாசித்தனர். இதனால் கூட்டரங்கில் சிரிப்பலை எழுந்தது.
    வேலூரில் மயான கொள்ளை விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
    வேலூர்:

    வேலூர் மற்றும் சுற்றுப்புறங்களில் மயான கொள்ளை திருவிழா நேற்று நடந்தது. இதில் கடவுள் வேடமிட்டு பக்தர்கள் ஊர்வலமாக சென்றனர்.

    வேலூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் மயான கொள்ளை திருவிழா ஆண்டுதோறும் கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான மயான கொள்ளை திருவிழா நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

    விழாவையொட்டி வேலூர், சைதாப்பேட்டை, தோட்டப்பாளையம், மக்கான், சத்துவாச்சாரி, விருதம்பட்டு மற்றும் நகரின் பல பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள், அங்காளபரமேஸ்வரி அம்மனை அலங்கரித்து கோவிலில் இருந்து ஊர்வலமாக எடுத்து சென்றனர். 

    பல இடங்களில் சாமியை சப்பரத்தில் வைத்து எடுத்து சென்றனர்.
    ஊர்வலத்தின் பின்னே பக்தர்கள் தங்களுடைய நேர்த்திக்கடனை செலுத்தும் வகையில் கடவுள் போல வேடமிட்டு சென்றனர். காளியம்மன் போல வேடமிட்டு சென்றதும், கையில் சூலாயுதம் ஏந்திச்சென்றதும் தத்ரூபமாக இருந்தது.

    ஆண்கள் பலர் பெண்கள் போல வேடமிட்டும் சென்றனர். சில பக்தர்கள் எலும்பு துண்டுகளை வாயில் கவ்வியபடியும், ஆட்டுக்குடலை மாலையாக அணிந்த படியும் ஊர்வலத்தில் கலந்து கொண்டனர். இந்த ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாகச் சென்று ஆங்காங்கே உள்ள மயானத்தை அடைந்தது. இளைஞர்கள் பல இடங்களில் ஆரவாரம் செய்தனர்.

    வேலூர்& காட்பாடியை சேர்ந்த பக்தர்கள் பாலாற்றங்கரைக்கு தேரில் சாமியை வைத்து ஊர்வலமாக சென்றனர். அங்கு அம்மனுக்கு சிறப்பு பூஜையும், வழிபாடும் நடந்தது. அதுபோல பக்தர்கள் தங்கள் முன்னோர் சமாதிகளுக்கும் சென்று கும்பிட்டனர். அம்மனை தரிசனம் செய்த பக்தர்கள் பின்னர் உப்பு, மிளகு, சுண்டல், கொழுக்கட்டை போன்றவற்றை சூறையிட்டு நேர்த்திக்கடனை செலுத்தினார்கள்.

    பின்னர் தாங்கள் கொண்டு சென்ற சாமியுடன் அங்கிருந்து புறப்பட்டு மீண்டும் ஊர்வலமாக திரும்பினார்கள். அப்போது வழியில் இருந்த பொதுமக்கள் அம்மனை வழிபட்டனர்.

    மயானக்கொள்ளை திருவிழாவையொட்டி நகரின் முக்கிய பகுதிகளில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். வேலூர் நகரப் பகுதியில் மட்டும் 500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். சாதாரண உடையிலும் ஏராளமான போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அதுபோல மயானக் கொள்ளை ஊர்வலத்திலும் போலீசார் சென்றனர்.
    வேலூர் மாநகராட்சியில் 3 சுயேட்சை கவுன்சிலர்கள் தி.மு.க.வுக்கு ஆதரவு தெரிவித்தனர்.
    வேலூர்:

    வேலூர் மாநகராட்சியில் தேர்தலில் 44 வார்டுகளில் தி.மு.க. வெற்றி பெற்றது அந்த கூட்டணியில் இருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒரு வார்டில் வெற்றி பெற்றுள்ளது.

    இந்த நிலையில் சுயேட்சையாக நின்று வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் 3 பேர் தி.மு.க.வுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
     6-வது வார்டில் சுயேட்சையாக நின்று வெற்றி பெற்ற சீனிவாசன் தி.மு.க.வில் இணைந்தார்.

    இதேபோல 19-வது வார்டில் வெற்றிபெற்ற சுயேட்சை வேட்பாளர் மாலதி 48-வது வார்டில் வெற்றிபெற்ற சுயேட்சை கவுன்சிலர் கோகிலா ஆகியோர் தி.மு.க.வுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். 

    இதன்மூலம் வேலூர் மாநகராட்சியில் தி.மு.க.வின் பலம் 48 ஆக உயர்ந்துள்ளது.
    உக்ரைனில் தவிக்கும் வேலூர் மாணவி விரைவில் தமிழகம் வந்து விடுவதாக தெரிவித்துள்ளார்.
    வேலூர்:

    வேலு£ர் மாவட்டம் அணைக்கட்டு அருகே உள்ள ஆசனாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த ஞான சேகரன் மகன் ராகவன், வேலு£ர் தோட்டப்பாளை யத்தை சேர்ந்த ஜெய்சங்கர் மகள் தீபா உட்பட 10&க்கும் மேற்பட்ட மாணவர்கள் உக்ரைனில் சிக்கியுள்ளனர்.

    உக்ரைன், ரஷியா போரால் மாணவிகளின் பெற்றோர் அங்கிருந்து அவர்களை மீட்டு தரும்படி கலெக்டர் குமாரவேல் பாண்டியனி டம் கோரிக்கை வைத்தனர். 

    தொடர்ந்து, மாவட்ட நிர்வாகம் அவர்களை தொடர்பு கொண்டபோது, தாங்கள் பாதுகாப்பாக உள்ளதாகவும், இந்திய தூதர கம் இங்கிருந்து மீட்கும் வரையில் பாதுகாப்பாக இங்கே இருக்க அறிவுறுத் தியுள்ளதாக தெரிவித்தனர்.

    ஓல் மாநிலத்தில் டோவா இருந்து நேற்று ஒரு பஸ் மூலமாக அங்கு தங்கியி ருந்த தீபா உட்பட 40 பேர் பத்திரமாக அழைத்து வரப் படுவதாக தகவல் தெரிவிக் கப்பட்டது.

    இதுகுறித்து, தீபா கூறியிருப்பதாவது:-

    ஓல்டோவா மருத்துவ பல்கலைக்கழ கத்தில் இருந்து என்னுடன் 40 மாணவர்கள் ஹங்கே ரிக்கு பஸ்சில் அழைத்து செல்லப்படுகி றார்கள். தொடர்ந்து, இன்று மாலைக்குள் ஹங்கேரிக்கு வந்து விடுவோம். 

    அங்கிருந்து தமிழகத்துக்கு அழைத்து செல்வதற்கான ஏற்பாடுகள் நடந்து வருவ தாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் தமிழகம் திரும்புவோம் என தெரிவித்தார்.
    குடியாத்தம் அருகே ஆட்டோவில் வெல்லம் சாராயம் கடத்தியவர் கைது செய்யப்பட்டார்.
    குடியாத்தம்:

    வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த அக்ராவரம், பூங்குளம், ஏரிப்பட்டரை உள்ளிட்ட பகுதிகளில் கள்ளச்சாராயம் காய்ச்சுவது, விற்பதாக வந்த தொடர் புகார்களின் பேரில் குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி உத்தரவின் பேரில் குடியாத்தம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் கணபதி, சப்-இன்ஸ்பெக்டர் சிவச்சந்திரன் உள்ளிட்ட போலீசார் நேற்று குடியாத்தம் அடுத்த அக்ராவரம் ஏரிப்பட்டரை கூட்ரோடு பகுதியில் ரோந்து சென்றனர்.

    அப்போது அந்த வழியாக வந்த ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்தபோது 60 லிட்டர் கள்ளச்சாராயமும், சாராயம் காய்ச்சுவதற்காக 100 கிலோ வெல்லம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக ஒருவரை கைது செய்தனர்.
    தந்தை பெரியார் கல்லூரியில் முதல்-அமைச்சர் நிகழ்ச்சி காணொளியில் ஒளிபரப்பு செய்யப்பட்டது.
    வேலூர்:

    தமிழக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பள்ளி மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கான திறன் மேம்பாட்டுக்கான திட்டம் தொடக்க விழா இன்று சென்னையில் நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சி காணொலி காட்சி வாயிலாக வேலூர் தந்தை பெரியார் பொறியியல் கல்லூரியில் ஒளிபரப்பப்பட்டது. இதில் ஏராளமான மாணவ& மாணவிகள் கலந்து கொண்டு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் பேசியதை மாணவர்கள் கல்லூரியில் அமைக்கப்பட்டிருந்த பெரிய திரையில் பார்த்தனர். 

    நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் அருளரசு, துணை முதல்வர் ஸ்ரீராம்பாபு, ஒருங்கிணைப்பாளர்கள் முருகன், பிரவீன் ராஜ், பாரதிராஜா, ஜான் மற்றும் பேராசிரியர்கள் பலர் இதில் கலந்து கொண்டனர்.
    பென்னாத்தூர் அரசு பள்ளிக்கு பூட்டு போட்டு பெற்றோர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    வேலூர்:

    வேலூர் அருகே உள்ள பென்னாத்தூர் கேசவபுரம் அரசு தொடக்கப்பள்ளியில் 300&க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றனர்.

    இந்த பள்ளியில் தலைமை ஆசிரியர் உட்பட 4 ஆசிரியர்கள் உள்ளனர். போதுமான ஆசிரியர்கள் இல்லாததால் மாணவர்களின் கல்வித்தரம் பாதிக்கப்படுவதாக பெற்றோர்கள் புகார் தெரிவித்தனர்.

    இந்த பள்ளியில் சேதம் அடைந்ததாக 2 கட்டிடங்கள் இடிக்கப்பட்டன. அதற்கு பதிலாக புதிய கட்டிடங்கள் எதுவும் கட்டப்படவில்லை.

    தற்போது 2 வகுப்பறைகள் மட்டுமே உள்ளன. மாணவர்களை மரத்தடியில் அமர வைத்து பாடம் சொல்லிக் கொடுக்கின்றனர். பள்ளிக்கு சுற்றுச்சுவர் இல்லை. அருகில் கழிவுநீர் தேங்கி உள்ளதால் பள்ளி குழந்தைகளுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலை உள்ளது.

    இந்த நிலையில் இன்று காலை பள்ளிக்கு குழந்தைகளை அனுப்ப மறுத்து பெற்றோர்கள் பள்ளிக்கு பூட்டு போட்டனர்.

    மேலும் பென்னாத்தூர் ஸ்ரீபுரம் சாலையில் பள்ளி குழந்தைகளுடன் பெற்றோர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இதுபற்றி தகவல் அறிந்த வேலூர் தாலுகா போலீசார் மற்றும் வருவாய் துறையினர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    கேசவபுரம் அரசு தொடக்கப்பள்ளியில் சுற்றுச் சுவர் கட்ட வேண்டும். போதுமான வகுப்பறைகள் கட்டித் தரவேண்டும். மாணவர்களுக்கு ஏற்ப ஆசிரியர்கள் நியமிக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர். இந்த மறியல் போராட்டத்தால் பென்னாத்தூர்&ஸ்ரீ¢புரம் சாலையில் இன்று காலை போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    குடியாத்தம் நெல்லூர்பேட்டை பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற அறிவிப்பு பதாகைகளை கட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.
    குடியாத்தம்:

    குடியாத்தம் நகரின் நடுவே செல்லும் கவுண்டன்யமகாநதி ஆற்றின் இருபுறமும் சுண்ணாம்புபேட்டை ஆற்றோரம், காமராஜர் பாலம் ஆற்றோரம், பச்சையம்மன் கோவில் ஆற்றோரம், கெங்கையம்மன் கோவில் ஆற்றோரம், நாராயணதோப்பு, நெல்லூர் பேட்டை என்.எஸ்.கே.நகர், பாவோடும் தோப்பு உள்ளிட்ட பகுதிகளில் ஆற்றின் இருபுறமும் 1500க்கும் அதிகமான வீடுகள் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்தது.

    இந்த வீடுகளில் பெரும்பாலும் கூலி தொழிலாளர்கள் பல ஆண்டுகளாக வசித்து வந்தனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக கவுண்டன்ய மகாநதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பல ஆயிரம் கன அடி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் மாவட்ட நிர்வாகம் ஆக்கிரமிப்பு வீடுகளை கணக்கெடுத்து அகற்ற முடிவு செய்திருந்தது. 

    இந்நிலையில் உயர்நீதிமன்றம் நீர்நிலைப் பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டது.

    இதனை தொடர்ந்து கடந்த மூன்று மாதங்களாக கவுண்டன்யமகாநதி ஆற்றுப் பகுதியில் உள்ள ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகளை நீர்வள ஆதார துறை அதிகாரிகள் மேற்பார்வையில் பொக்லைன் எந்திரங்கள் கொண்டு அகற்றப்பட்டு வருகிறது. தற்போது பெரும்பாலான வீடுகள் அகற்றப்பட்டன. 

    குடியாத்தம் நெல்லூர் பேட்டை பாவோடும் தோப்பு பகுதியில் உள்ள திருவள்ளுவர் தெரு, வா.உ.சி.தெரு, முருகசாமி தெரு, செல்லியம்மன் கோவில் தெரு, பெரியார்தெரு, அன்னை சத்யா தெரு உள்ளிட்ட பகுதிகளில் 500க்கும் அதிகமான வீடுகள் உள்ளன இந்த வீடுகளை அகற்ற உள்ளதால் நீர்வள ஆதார துறை யினர் வருவாய்த்துறையினர் உள்ளிட்ட துறை அதிகாரிகள் 21 நாள் கால அவகாசம் கொண்ட நோட்டீசை வழங்க அப்பகுதிக்கு சென்றனர். 

    அப்பகுதி பொதுமக்கள் நோட்டீஸ் வாங்க மறுத்துவிட்டனர். இதனை தொடர்ந்து அதிகாரிகள் நோட்டீஸ் பதாகைகளாக அப்பகுதியில் ஆங்காங்கே கட்டி வைத்துள்ளனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
    வேலூரில் மயான கொள்ளை விழாவில் அன்னதானம், இசைக் கச்சேரிக்கு தடை விதித்கப்பட்டுள்ளது.
    வேலூர்:

    வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களில் மயானக் கொள்ளை திருவிழா நாளை கொண்டாடப்பட உள்ளது. இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக மாவட்ட நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. 

    அதன்படி, வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சுந்தரமூர்த்தி மற்றும் பல்வேறு துறைகளின் அதிகாரிகள் பங்கேற்றனர்.

    வேலூர் மாவட்டத்தில் மயானக்கொள்ளை திருவிழாவில் செல்ல உள்ள தேரின் உயரம் 10 அடிக்கு மிகாமல் இருக்க வேண்டும். ஊரடங்கு கட்டுப்பாடுகள் மார்ச் 2-ம் தேதி வரை உள்ளதால் இசைக்கச்சேரி நடத்தவும் அன்னதானங்கள் வழங்கவும் தடை செய்யப்பட்டுள்ளது.

    போலீசார் அனுமதி அளித்த இடங்களில் பிற மதத்தினர் வழிபாட்டு தலங்களுக்கு எந்தவித இடையூறும் இல்லாமல் பகல் 12 மணிக்கு முன்பாக தொடங்கி இரவு 7 மணிக்குள் முடிக்க வேண்டும். மயானக்கொள்ளை திருவிழாவில் பட்டாசு, வெடிபொருட்கள் எதுவும் வெடிக்கக்கூடாது.

    விழா முடிந்த 24 மணி நேரத்துக்குள் சிலைகள் வைக்கப்பட்ட இடத்தில் குவிக்கப் பட்டுள்ள கழிவுகளை அப்புறப்படுத்த வேண்டும். மயானக்கொள்ளை திருவிழாவை வருவாய் கோட்ட அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும்.

    காட்பாடி-வேலூர் புதிய பாலம் வழியாக ஊர்வலம் செல்லும் என்பதால் நாளை பழைய பாலத்தின் வழியாகவே இருவழிப்பாதையாக போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.

    விழா நடைபெறும் பகுதிகளில் டாஸ்மாக் மதுபானக் கடைகளை மூடி வைக்கவேண்டும். வேலூர் பாலாற்றங்கரை பகுதியில் 108 ஆம்புலன்ஸ் வாகனங்களையும் முதலுதவி சிகிச்சை குழுக்களையும் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். 

    விழா நடைபெறும் பகுதிகளில் மின்சாரம் துண்டிப்பு மற்றும் மீண்டும் மின் இணைப்பு வழங்கும் பணியை முறையாக கண்காணிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
    ×