என் மலர்
வேலூர்
- வேலூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் பணிகள் தீவிரம்
- பழைய வீடுகள் இடிப்பு
வேலூர்:
தமிழகத்தில் 106 நிவாரண முகாம்களில் வசிக்கும் 19,046 இலங்கைத் தமிழர்களுக்கான இலவச வீட்டுத் திட்டத்தை நவம்பர் மாதம் வேலூரில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இதனைத் தொடர்ந்து இலங்கை தமிழர்கள் முகாம்களில் உள்ள மாற்றுத் தளங்கள் மற்றும் சரிசெய்ய முடியாத வீடுகள் கண்டறியபட்டது. இலங்கைத் தமிழர்கள் அற்ப வசதிகளுடன் பல ஆண்டுகளாக வாழ்ந்த பழைய தங்குமிடங்களை இடித்து அகற்றும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
வேலூர் திருவண்ணாமலை திருப்பத்தூர் ராணிப்பேட்டை ஆகிய 4 மாவட்டங்களிலும் 1990 முதல் 18 நிவாரண முகாம்களில் மொத்தம் 2,239 குடும்பங்கள் உள்ளன. திருவண்ணாமலையில் தான் அதிக அளவில் இலங்கை தமிழர்கள் உள்ளனர். 12 முகாம்களில் 1,111 குடும்பங்கள் உள்ளன, வேலூர், திருப்பத்தூர் மற்றும் ராணிப்பேட்டையில் தலா இரண்டு முகாம்கள் உள்ளன.
குடியாத்தம் (55 குடும்பங்கள்), வாலாஜா (289 குடும்பங்கள்), சோளிங்கர் (160 குடும்பங்கள்), ஆம்பூர் (310 குடும்பங்கள்), செய்யாறு (112 குடும்பங்கள்), ஆரணி (94 குடும்பங்கள்) மற்றும் செங்கம் (111 குடும்பங்கள்) ஆகியவை இந்த நிவாரண முகாம்களில் அடங்கும். திருவண்ணாமலை நகரம், வந்தவாசி, கலசபாக்கம் மற்றும் போளூர் ஆகிய இடங்களிலும் முகாம்கள் உள்ளன. இந்த திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வீடும் 300 சதுர அடி. ஒரு அறையுடன், கழிப்பறை மற்றும் ஒரு சமையலறை அமைக்கப்படுகிறது.
புதிய வீடுகளுக்கு இலவச குடிநீர் இணைப்பு மற்றும் மின்சாரம் வழங்கப்படும். மேலும், முகாம்களில் மேல்நிலைத் தொட்டிகளும்கட்டப்படும். ஒவ்வொரு வீட்டிற்கும் ரூ.5.85 லட்சம் அரசு கருவூலத்திற்கு செலவாகும்.
இந்த மாவட்டங்களில் முதற்கட்டமாக 933 வீடுகள் கட்டப்படுகின்றன. திருவண்ணாமலையில் அதிகபட்சமாக 255 வீடுகள் கட்டப்படும் அதைத் தொடர்ந்து திருப்பத்தூர் 236 வீடுகள், ராணிப்பேட்டை 222 வீடுகள் மற்றும் வேலூர் 220 வீடுகள் கட்டப்படும்.
வேலூர் அருகே உள்ள மேல்மொணவூர் இலங்கை தமிழர்கள் முகாமில் முதல் கட்டமாக 220 வீடுகள் கட்டப்பட உள்ளன.இதற்காக அங்குள்ள பழைய வீடுகளை இடிக்கும் பணி நடந்து வருகிறது. அங்கிருந்தவர்களுக்கு தற்காலிகமாக தங்குவதற்கு செட் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது.
புதிய வீடுகளுடன், ஒவ்வொரு முகாமிலும் ஒரு சமூக மையம், படிக்க மற்றும் கல்வி நோக்கங்களுக்காக ஒரு பொதுவான குழந்தைகள் மையம் மற்றும் ஒரு ரேசன் கடை ஆகியவையும் கட்டப்படுகின்றன.
வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலையில் உள்ள இலங்கைத் தமிழர்கள் முகாம் களில், சில நாட்களுக்கு முன்பு கட்டுமானப் பணிகள் தொடங்கியதால், 9 மாதங்களில் கான்கிரீட் வீடுகளில் இலங்கைத் தமிழர்கள் குடியேறுவார்கள் என தெரிவித்தனர்.
- ஆடி வெள்ளியையொட்டி சிறப்பு ஏற்பாடு
- ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்
வேலூர்:
ஆடி மாதத்தின் 2-வது வெள்ளியான இன்று அம்மன் கோவில்களில் சிறப்பு அலங்காரம், பூஜை நடந்தது. பக்தர்கள் கூட்டம் கூட்டமாக கோவில்களுக்குச் சென்று வழிபட்டனர்.
ஆடி மாதத்தில் வரும் வெள்ளிக்கிழமைகள் மிகவும் விசேஷமானது. ஆடி மாத 2-வது வெள்ளியான இன்று வேலூர், திருப்பத்தூர் ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து அம்மன் கோவில்களிலும் ஏராளமான பக்தர்கள் குவிந்து அம்மனை வழிபட்டனர்.
வேலூர் கோட்டை கோவிலில் இன்று அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடந்தது.
வெட்டுவாணம் எல்லையம்மன் கோவிலில் ஆடிவெள்ளியொட்டி சிறப்பு அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தார். பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
வேலூர் மாவட்டத்தில் ஆடி மாத வெள்ளிக் கிழமையையொட்டி, இன்று 100-க்கும் மேற்பட்ட அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. பெண்கள் விளக்கு ஏற்றி வழிபட்டனர்.
பக்தர்கள் காவடி கரகம் எடுத்து வந்து தரிசனம் செய்தனர். வேலூர் புதிய பஸ் நிலையம் அருகே பாலாற்றங் கரையோரத்தில் உள்ள செல்லியம்மன் கோவிலில் இன்று அதிகாலை சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. செல்லியம்மன் தங்க கவச அலங்காரத்தில் அருள்பாலித் தார். ஏராளமான பெண்கள் கோவிலில் விளக்கேற்றி அம்மனை வழிபட்டனர்.
காட்பாடி ரோட்டில் உள்ள விஷ்ணு துர்கையம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. தோட்டப்பாளையம் படவேட்டம்மன் மற்றும் டிட்டர்லைன் கருமாரி அம்மனும் சிறப்பு அலங்காரரூபத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
- பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தல்
- அதிகாரிகள் உடன் இருந்தனர்
வேலூர் :
வேலூர் புதிய பஸ் நிலையம் கடந்த மாதம் திறக்கப்பட்டது.அங்கிருந்து சென்னை மார்க்கமாக செல்லும் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. பஸ் நிலையத்தில் இறுதி கட்ட பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது. செல்லியம்மன் கோவில் பகுதியில் சிமெண்டு தரைதளம் மற்றும் கால்வாய் அமைக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளன.
இதனை கார்த்திகேயன் எம்.எல். ஏ., மேயர் சுஜாதா ஆகியோர் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
புதிய பஸ் நிலையத்தில் மறுபுறம் காட்பாடி செல்லும் சாலையில் பாதாள சாக்கடை பணிக்காக பெரிய பள்ளம் தோண்டப்பட்டுள்ளது.இதனால் அந்த சாலையில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது.
அந்த இடத்தில் கார்த்திகேயன் எம்.எல்.ஏ. மற்றும் மேயர் சுஜாதா பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது சாலையில் போக்குவரத்துக்கு இடையூறு இல்லாத வகையில் பணியை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும். பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.
ஆய்வின்போது மாநகராட்சி கமிஷனர் அசோக்குமார் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் உடனிருந்தனர்.
- பீர்பாட்டிலால் தாக்கினர்
- கண்காணிப்பு கேமராக்கள் ஆய்வு
வேலூர்:
வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா கானாறு தெருவை சேர்ந்தவர் தன்வீர் (வயது 20).இவர் நேற்று இரவு 10 மணி அளவில் பள்ளி கொண்டா தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தாபா அருகே பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது 3 பேர் கும்பல் அவரை வழி மடக்கினர்.
மேலும் கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்து செல்போன் மற்றும் பணத்தை பறிமுதல் செய்ய முயன்றனர்.
தன்வீர் பணம் செல்போன் தர மறுத்ததால் அவர்கள் பீர் பாட்டிலால் பலமாக தாக்கி விட்டு தப்பி சென்று விட்டனர்.
பலத்த காயமடைந்த வாலிபர் உடனடியாக ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். பின்னர் பள்ளிகொண்டா போலீசில் புகார் அளித்தார்.
போலீசார் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.பள்ளிகொண்டா தாபா அருகே மது போதையில் இருந்த கும்பல் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். அதில் கண்டிப்பாக வழிப்பறி கும்பல் பதிவாகி இருப்பார்கள். இதன் மூலம் அவர்கள் பிடிபடுவார்கள் என போலீசார் தெரிவித்தனர்.
தேசிய நெடுஞ்சாலையில் நடந்த இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
- பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்தது
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
குடியாத்தம்:
குடியாத்தம் பழைய பஸ் நிலையம் அருகில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் குடியாத்தம் நகர, தாலுகா குழுக்கள் பேர்ணாம்பட்டு தாலுகா குழுக்கள் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசு கொண்டுவந்த ஜிஎஸ்டி வரி உயர்வை கண்டித்தும், தமிழக அரசு அறிவித்துள்ள உத்தேச மின்சார கட்டண உயர்வு அறிவிப்பை வாபஸ் பெற வலியுறுத்தியும் கோஷம் எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் குடியாத்தம் நகர செயலாளர் காத்தவராயன், தாலுகா செயலாளர் சிலம்பரசன், பேரணாம்பட்டு செயலாளர் சரவணன் ஆகியோர் தலைமை தாங்கினார்கள்.
நிர்வாகிகள் பாபு, குமாரி, ராமமூர்த்தி, சுரேஷ் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில குழு உறுப்பினர் எஸ்.டி.சங்கரி, மாவட்ட செயற்குழு சீனிவாசன், சாமிநாதன், மாவட்ட குழு குணசேகரன், குபேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்
- கலெக்டர் குமாரவேல் பாண்டியன் வழங்கினார்
- பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்
குடியாத்தம்:
வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டம் சீவூர் ஊராட்சியைச் சேர்ந்த வீடு இல்லாத ஏழை எளியோருக்கு ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் வீட்டுமனை பட்டா வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு குடியாத்தம் உதவி கலெக்டர் எஸ். தனஞ்செயன் தலைமை தாங்கினார்.ஒன்றிய குழு உறுப்பினர்கள் தீபிகாபரத், அமுதாலிங்கம், ஊராட்சி மன்ற தலைவர் கே.ஆர்.உமாபதி, துணைத்தலைவர் டி, அஜீஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தாசில்தார் லலிதா அனைவரையும் வரவேற்றார்.குடியாத்தம் ஒன்றிய குழு தலைவர் என்.இ.சத்யானந்தம் வாழ்த்துரை வழங்கினார்.
சிறப்பு அழைப்பாளர்களாக வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன், குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் அமலுவிஜயன் ஆகியோர் கலந்து கொண்டு 42 பேருக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கினார்கள்.
இந்நிகழ்ச்சியில் வட்ட வழங்கல் அலுவலர் தேவி, கிராம நிர்வாக அலுவலர் உஷா, குடியாத்தம் நகர மன்ற உறுப்பினர்கள் ம.மனோஜ், சி.என்.பாபு உள்பட வருவாய்த்துறையினர், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.
- கண்காணிப்பு கேமராவில் பதிவான நபர்களுக்கு வலைவீச்சு
- கைரேகை பதிவாகாமல் நூதனமாக திருடிய கும்பல்
வேலூர்:
வேலூர் வேலப்பாடி பூந்தோட்டம் பகுதியை சேர்ந்தவர் மணிகண்ணன் (வயது 52), வேலூர் அரசு மருத்துவமனையில் டாக்டராக பணிபுரிந்து வருகிறார். இவருடைய மனைவி சுப்ரியா. இவர் வேலப்பாடியில் கிளினிக் நடத்தி வருகிறார்.
டாக்டர் வீட்டில் கொள்ளை
இந்த தம்பதியினருக்கு 16 வயதில் பிளஸ்-1 படிக்கும் மகள் உள்ளார். கேரள மாநிலம் கொச்சியில் நடந்த டாக்டர்கள் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக கடந்த 22-ந் தேதி கணவன்-மனைவியும் வீட்டை பூட்டி விட்டு சென்றனர். இதையொட்டி அவர்களின் மகளை அதே பகுதியில் உள்ள உறவினர் வீட்டில் தங்க வைத்தனர். அந்த நேரத்தை பயன்படுத்தி மர்மநபர்கள் வீடு புகுந்து 24 பவுன் நகை ரூ.15 லட்சத்தை கொள்ளையடித்துச் சென்று விட்டனர். இந்த சம்பவம் குறித்து வேலூர் தெற்கு போலீசில் புகார் அளித்தனர்.
அதன்பேரில் வேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு திருநாவுக்கரசு, தெற்கு குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ஷியாமளா, பாகாயம் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் அங்கு சென்று உறவினருடன் வீட்டிற்குள் சென்று பார்வையிட்டனர். போலீஸ் மோப்பநாய் டாக்டர் தம்பதி வீட்டில் மோப்பம் பிடித்து விட்டு வேலப்பாடி பஸ்நிறுத்தம் வரை ஓடிச்சென்று நின்று விட்டது.
நூதனமாக திருடிய கும்பல்
வீட்டில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்ய முயன்றனர். ஆனால் மர்மநபர்கள் கண்காணிப்பு கேமராக்களின் அனைத்து காட்சிகளும் சேகரித்து வைக்கப்படும் டிஸ்க்கையும் எடுத்து சென்றிருந்தனர். இதையடுத்து போலீசார் எதிர் வீட்டில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில், அதிகாலை 2 மணியளவில் 2 வாலிபர்கள் டாக்டர் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே செல்லும் காட்சிகள் பதிவாகியிருந்தன. அந்த வாலிபர்கள் குறித்து வேலப்பாடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் போலீசார் விசாரணை நடத்தினர்.
டாக்டர் வீட்டில் கொளை நடந்த பகுதிகளில் கைரேகை நிபுணர்கள் சோதனை செய்தபோது அதில் எந்த கைரேகையும் சிக்கவில்லை கொள்ளையர்கள் கையுறை அணிந்து திருட்டில் ஈடுபட்டு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது அதனால் தான் கைரேகை எதுவும் சிக்கவில்லை. கண்காணிப்பு கேமராவில் பதிவான மர்ம நபர்கள் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மாநகராட்சி கமிஷனர் ஆய்வு
- பணிகள் குறித்து ஆலோசனைகள் வழங்கினார்
வேலூர்:
வேலூர் மாநகராட்சி பகுதியில் அம்ரூத் திட்டத்தின் கீழ் குடிநீர் திட்ட பணிகள் நடந்து வருகிறது.
பல்வேறு இடங்களில் குடிநீர் தொட்டி, குழாய்கள் அமைக்கும் பணிகள் துரிதப்படுத்த ப்பட்டுள்ளன. காட்பாடி காந்தி நகர், கழிஞ்சூர் பகுதிகளில் அம்ரூத் திட்டத்தில் குடிநீர் தொட்டி குழாய் அமைக்கும் பணிகள் வேகமாக நடந்து வருகிறது.
இன்று காலை வேலூர் மாநகராட்சி கமிஷனர் அசோக்குமார் அந்த பகுதியில் குடிநீர் திட்ட பணிகள் குறித்து ஆய்வு செய்தார். அப்போது பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டார்.
காட்பாடியில் அம்ரூத் திட்டத்தின் குழாய்கள் மற்றும் புதிதாக குடிநீர் தொட்டி அமைக்கும் பணிகள் 50 சதவீதம் நிறைவடைந்துள்ளன.
இந்த பணிகள் குறித்து சில ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளது. அனைத்து பகுதிகளுக்கும் சீரான அளவில் குடிநீர் கிடைக்கும் வகையில் பணிகள் நடந்து வருகிறது என்றார்.
கமிஷனர் ஆய்வின்போது உதவி கமிஷனர் செந்தில்குமரன் மாநகராட்சி மற்றும் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் உடனிருந்தனர்.
- லட்சுமி தியேட்டர் அருகே திணறும் வாகனங்கள்
- அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வாகன ஓட்டிகள் வலியுறுத்தல்
வேலூர்:
வேலூரில் பள்ளி கல்லூரி செல்லும் நேரங்களில் கடுமையான போக்குவரத்து ஏற்பட்டு வருகிறது.
அதிக அளவில் பள்ளி வாகனங்கள் மற்றும் மாணவ மாணவர்கள் சென்று வருவதால் அண்ணா சாலையில் அந்த நேரத்தில் வாகன போக்குவரத்து அதிகரிக்கிறது. குறிப்பாக லட்சுமி தியேட்டர் பஸ் நிறுத்தம் அருகே காலை 8.30 மணி முதல் 9 மணி வரை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
அந்த பகுதியில் உள்ள பள்ளி வாகனங்கள் சாலையின் குறுக்காக செல்வதால் போக்குவரத்து நெரிசல் தொடர்ந்து நீடிக்கிறது.
தினமும் காலையில் இதே நிலை தொடர்வதால் அந்த வழியாக அலுவலகம் மற்றும் பள்ளி கல்லூரிகளுக்கு செல்லகூடிய மாணவ மாணவிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.
குறைந்த அளவில் போக்குவரத்து போலீசார் நின்று சிரமைத்து வருகின்றனர்.
ஆனாலும் நெரிசல் தீர்ந்தபாடில்லை அந்த பகுதியில் கூடுதலாக போக்குவரத்து போலீசார் நிறுத்தி குறிப்பிட்ட நேரங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை தவிர்க்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர்.
- தேசிய நெடுஞ்சாலையோரம் குப்பை கொட்டியதால் நடவடிக்கை
- அதிகாரிகள் எச்சரிக்கை
வேலூர்:
சென்னை -பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையோரம் வேலூர் பகுதிகளில் பல்வேறு இடங்களில் பலர் குப்பைகளை கொட்டி க வருகின்றனர். குறிப்பாக கொணவட்டம், சதுப்பேரி பகுதிகளில் சர்வீஸ் சாலையோரம் கோழிக்கழிவுகள் அதிகமாக கொட்டப்பட்டு வருகிறது. இதனால் அந்தப் பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. குப்பை கொட்டுபவர்களை கண்காணித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.
அந்த குழுவினர் பல்வேறு இடங்களில் கண்காணித்து வருகின்றனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் கொணவட்டம் பகுதியில் சர்வீஸ் சாலையோரம் ஒருவர் மோட்டார்சைக்கிளில் வந்து குப்பைகளை கொட்டினார். அதை பார்த்த கண்காணிப்பு குழுவினர் அவர் மீது வேலூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
புகாரின் பேரில் போலீசார் அந்த நபரை அழைத்து விசா ரித்தனர். விசாரணையில், அவர் கொணவட்டம் பகுதியில் கோழி இறைச்சி வியாபாரம் செய்வது தெரியவந்தது. அந்த நபரிடம் கொட்டிய குப்பைகளை அகற்ற வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து கொட்டிய குப்பைகளை அந்த நபர் அகற்றினார்.
இதுகுறித்து தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் கூறுகையில், தேசிய நெடுஞ்சாலையோரம் குப்பை கொட்டுவது கண்காணிக்கப்பட்டு வருகிறது. யாராவது குப்பைகள் கொட் டினால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.
- ரூ.1.80 லட்சத்தை பறித்து சென்றனர்
- போலீசார் விசாரணை
குடியாத்தம்:
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த ராஜாக்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் துரைசாமி இவரது மனைவி ராஜகுமாரி பூ வியாபாரம் செய்து வருகிறார்.
நேற்று மதியம் ராஜகுமாரி தனது மகளுடன் நகை உள்ளிட்ட பொருட்களை வாங்க பணத்துடன் குடியாத்தம் நேதாஜி சவுக் பகுதிக்கு வந்துள்ளார் அங்கிருந்து ஆட்டோவில் ஏறி உறவினர்களை பார்க்க மகளுடன் லிங்குன்றம் கிராமத்திற்கு செல்ல பயணம் செய்துள்ளார்.
வழியில் 2 பெண்கள் அந்த ஆட்டோவில் ஏறி உள்ளனர் நெல்லூர்பேட்டையில் உள்ள மாசுபாடு அம்மன் கோவில் அருகே ஆட்டோ சென்றபோது ராஜகுமாரின் மகள் கோவிலுக்கு சென்று வருவதாக ஆட்டோவில் இருந்து இறங்கி கோவிலுக்கு சென்று உள்ளார் அப்போது ஆட்டோவில் இருந்த 2 பெண்கள் ராஜகுமாரியுடன் பேச்சு கொடுத்துள்ளனர்.
அப்போது கீழ சில்லறை காசுகள் உள்ளது என கூறியுள்ளனர்.அப்போது 2 பெண்களும் ராஜகுமாரியின் கவனத்தை திசை திருப்பி பையில் இருந்த ரூ.1 லட்சத்து 80 ஆயிரத்தை திருடி உள்ளனர்.
சிறிது நேரத்தில் ஆட்டோவில் இறங்கி அந்த 2 பெண்களும் சென்று விட்டனர்.
மகளுடன் தொடர்ந்து ஆட்டோவில் பயணம் செய்த ராஜகுமாரி லிங்குன்றம் கிராமம் அருகே சென்றபோது பையை பார்த்தார் அதில் இருந்த ரூ.1 லட்சத்து 80 ஆயிரம் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
அப்போது பெண்கள் இருவரும் ராஜகுமாரியின் கவனத்தை திசை திருப்பி ஒரு லட்சத்து 80 ஆயிரம் திருடி சென்றது தெரிய வந்தது.
ராஜகுமாரி உடனடியாக குடியாத்தம் டவுன் போலீசில் புகார் செய்தார் இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட பெண்கள் குறித்து டவுன் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
- 87 பேருக்கு நலத்திட்ட உதவி
- கலெக்டர் வழங்கினார்
குடியாத்தம்:
வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டம் சேங்குன்றம் கிராமத்தில் சிறப்பு மனு நீதிநாள் முகாம் நடைபெற்றது.
இம் முகாமிற்கு தாசில்தார்கள் நெடுமாறன், கலைவாணி, வட்டார வளர்ச்சி அலுவலர் கார்த்திகேயன், ஒன்றிய குழு உறுப்பினர் கவுரப்பன், ஊராட்சி மன்ற தலைவர் குமரன், துணைத் தலைவர் ஹேமலதாதியாகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.தாசில்தார் லலிதா வரவேற்றார்.
குடியாத்தம் உதவி கலெக்டர் தனஞ்செயன், குடியாத்தம் ஒன்றிய குழு தலைவர் என்.இ.சத்யானந்தம், சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் புண்ணியகோட்டி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
சிறப்பு மனு நீதி நாள் முகாமிற்கு வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தலைமை தாங்கி 87 பயனாளிகளுக்கு வீட்டு மனை பட்டா, நில பட்டா, வாரிசு சான்று சலவைப் பெட்டிகள், தையல் எந்திரங்கள், விதவை உதவித்தொகை, கணவனால் கைவிடப்பட்டவர் சான்று, சொட்டு நீர் பாசன கருவிகள், வேளாண் கருவிகள், விதைகள், மாற்றுத்திறனாளி களுக்கான 3 சக்கர வாகனம் என ரூ.16 லட்சத்து 70 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் வேளாண்மை இணை இயக்குனர் பொறுப்பு ஸ்டீபன் ஜெயக்குமார், வேளாண்மை உதவி இயக்குனர் உமாசங்கர், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட மாவட்ட அலுவலர் கோமதி, மேற்கு ஒன்றிய திமுக பொறுப்பாளர் முரளிதரன், வட்டார மருத்துவ அலுவலர் விமல் குமார், துணை தாசில்தார் சந்தர், வட்ட வழங்கல் அலுவலர் தேவி உள்பட பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
முடிவில் கிராம நிர்வாக அலுவலர் காந்தி நன்றி கூறினார்.






