என் மலர்
திருவண்ணாமலை
செங்கத்தில் 8 வழி சாலை எதிர்ப்பு இயக்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
செங்கம்:
சென்னை &சேலம் எட்டு வழி சாலை திட்டம் ரத்து செய்ய சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என 8 வழி சாலை எதிர்ப்பு இயக்கத்தினர் செங்கம் அருகே ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தி.மு.க. தேர்தல் அறிக்கையில் எட்டு வழிச்சாலை ரத்து செய்யப்படும் என்று வாக்குறுதி அளித்ததாகவும் ஆனால் தற்போது அமைச்சர் மற்றும் எம்.பி உள்ளிட்டோர் யாருக்கும் தீர்வு ஏற்படாத வண்ணம் முதல்வரின் ஆலோசனைப்படி எட்டு வழிச்சாலை திட்டம் நிறைவேற்றப்படும் என கூறிவருகின்றனர்.
இது விவசாயிகளிடையே மனவேதனையும், குழப்பத்தையும் ஏற்படுத்துவதாக 8 வழி சாலை எதிர்ப்பு இயக்கத்தினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தற்போது நடைபெற்றுவரும் சட்டமன்ற கூட்டத்தொடரில் 8 வழி சாலை திட்டத்தை ரத்து செய்யப்படும் என தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என கோரி 8 வழி சாலை எதிர்ப்பு இயக்கத்தினர் செங்கம் அருகே உள்ள பெரும்பட்டம் கிராமத்தில் பசமாடுகளுடன் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதில் எட்டு வழி சாலை திட்டத்தை ரத்து செய்ய தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோஷங்கள் எழுப்பப்பட்டது.
ஆரணி டவுன் கோட்டை மைதானத்தில் நடந்த சிலம்பாட்டம் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
ஆரணி:
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் கோட்டை மைதானத்தில் ஆரணி சிலம்பாட்டம் அணி சார்பில் மாவட்ட அளவில் சிலம்பாட்டம் போட்டி நடைபெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சரும் ஆரணி எம்.எல்.ஏவுமான சேவூர் ராமசந்திரன் பங்கேற்று குத்து விளக்கு ஏற்றி வைத்து சிலம்பாட்டம் போட்டியை தொடங்கி வைத்தார்.
சென்னை வேலூர் திருவண்ணாமலை விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள், மாணவ& மாணவிகள் போட்டியில் பங்கேற்று சிலம்பம் சுற்றி தங்களின் தனி திறமையை வெளிபடுத்தினார்கள்.
இதனை கண்ட சிலம்பம் ரசிகர்கள் பொதுமக்கள் ஆரவாரத்துடன் கைதட்டி குழந்தைகளுக்கும் மாணவர்களுக்கு உற்சாகபடுத்தினார்கள்.
இதில் வெற்றி பெற்றவர்களுக்கு முன்னால் அமைச்சர் சேவூர் ராமசந்திரன் நினைவு பரிசுகளை வழங்கினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட ஆவின் தலைவரும் நகரமன்ற துணை சேர்மன் பாரிபாபு ஒன்றிய செயலாளர்கள் திருமால் வக்கீல் சங்கர் மாவட்ட ஐ.டி விங் சரவணன் கவுன்சிலர்கள் பானு பாரதிராஜா சுதா குமார் உள்ளிட்டோர் இருந்தனர்.
கீழ்பென்னாத்தூர் பகுதியில் பள்ளி மேலாண்மைக்குழு மறுசீரமைப்பு கூட்டம் பெற்றோர்கள் முன்னிலையில் நடந்தது.
கீழ்பென்னாத்தூர்:
கீழ் பென்னாத்தூரில் உள்ள அரசு பள்ளிகளில் பள்ளி மேலாண்மை குழு மறுசீரமைப்பு கூட்டம் நடந்தது. கீழ்பென்னாத்தூர் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்த பள்ளி மேலாண்மை குழு மறுசீரமைப்பு கூட்டத்திற்கு பேரூராட்சி தலைவர் சரவணன் தலைமை தாங்கினார்.
பள்ளி தலைமையாசிரியர் ராமச்சந்திரன் அனை வரையும் வரவேற்றார். ஒருங்கிணைந்த கல்வி மாவட்ட உதவி திட்ட ஒருங்கிணைப் பாளர்மலர்விழி கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். மாணவர்களின் ஒழுக்கத்தை குறித்தும், பெற்றோர்கள் அடிக்கடி பள்ளி ஆசிரியர்களுடன் தொடர்பு கொண்டு மாணவர்களின் நடவடிக்கைகளை கண்காணிக்க வேண்டும் என்றும் பள்ளி தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்கும் வகையிலும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் அறிவுரையும், ஆலோசனைகளும் கூறினார்.
பேரூராட்சி கவுன்சிலர் பாக்யராஜ், கனகா பார்த்திபன், உதவி தலைமை ஆசிரியர்கள் பிரசன்னா, கேசவன், சக்திபாலா, ஆசிரியர் சங்க செயலாளர் முருகன், சீனிவாசன், திமுக நிர்வாகிகள் வினோத், மணி, ராஜேஷ் மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற கூட்டத்திற்கு பேரூராட்சி தலைவர் சரவணன் தலைமை தாங்கினார். துணை தலைவர் தமிழரசி சுந்தரமூர்த்தி, வார்டு கவுன்சிலர்கள் பாக்யராஜ், கவிதா ஏழுமலை முன்னிலை வகித்தனர்.
பள்ளி வளர்ச்சி குறித்தும் பள்ளி மாணவிகளின் நலன்கள் குறித்தும், கல்வி வளர்ச்சி குறித்தும் பள்ளி தலைமை ஆசிரியை சுமதி பெற்றோர்களுக்கு அறிவுரையும், ஆலோசனைகளும் கூறி சிறப்புரை ஆற்றினார்.
பேரூராட்சி கவுன்சிலர்கள் ஜீவா, மல்லிகா மயில்வாகனன், பி.கா. ஏழுமலை, அம்பிகாராமதாஸ், உதவி தலைமையாசிரியர்கள் குமரேசன், ஏழுமலை மற்றும் ஆசிரியர்கள் பெற்றோர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர். மேக்களூர் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் நடந்த பள்ளி மேலாண்மை குழு கூட்டத்திற்கு பள்ளி தலைமை ஆசிரியை வளர்மதி தலைமை தாங்கினார்.
உள்ளாட்சி பிரதிநிதிகளும் பெற்றோர்களும் ஆசிரியர்களும் கலந்து கொண்டனர். இதேபோல், பள்ளி மேலாண்மை குழு மறுசீரமைப்பு கூட்டங்கள் பெற்றோர்களுடன் கீழ்பென்னாத்தூர் பேரூராட்சி ராஜாதோப்பு கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக் கப்பள்ளியில் பேரூராட்சி கவுன்சிலர் பலராமன் தலைமையில், தலைமை ஆசிரியர் பானுமதி முன்னிலையிலும், கீழ்பென்னாத்தூர் ஒன்றியம் ஆராஞ்சி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஒன்றியக்குழு துணை தலைவர் வாசுகி ஆறுமுகம் தலைமையிலும், தலைமை ஆசிரியர் அமுதா முன்னிலையிலும், காட்டுமலையனூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஊராட்சி மன்ற தலைவர் ரங்கநாயகி அருணாசலம் தலைமையிலும், தலைமை ஆசிரியர் பால் தங்கம் முன்னிலையிலும் நடந்தது.
கீழ்பென்னாத்தூர் ஒன்றியம், நீலந்தாங்கல் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில், பள்ளி மேலாண்மைக்குழு& மறுசீரமைப்பு கூட்டம் ஒன்றியக்குழு கவுன்சிலர் அனுராதா சுகுமார் தலைமையில் நடந்தது.
தலைமை ஆசிரியர் சுமதி, உதவி தலைமை ஆசிரியர் பொற்கொடி, ஊராட்சி செயலாளர் சங்க மாவட்ட தலைவர் சுகுமார், பெற்றோர்கள், ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
வந்தவாசியில் நிவாரண தொகை கேட்டு மின் கோபுரத்தில் ஏறி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர் போராட்டத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சேத்துப்பட்டு:
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி பாஞ்சரை. வெடால். ஆச்சமங்கலம். குணகம்பூண்டி. அகரம். ஆகிய கிராமங்களில் உள்ள விவசாய நிலத்தின் வழியாக உயர் மின் கோபுரங்கள் அமைக்கப்பட்டது.
மின் கோபுரங்கள் அமைக்கப்பட்ட விளைநிலத்திற்கு கடந்த 2 ஆண்டுகளாக இதுவரை நிவாரண தொகை வழங்கபடவில்லை. பல முறை விவசாயிகள் கேட்டும் நிவாரண தொகை கிடைக்கவில்லை.
இதனால் விரக்தியடைந்த விவசாயிகள் தெள்ளார் அருகே உள்ள பாஞ்சரை கிராமத்தில் உள்ள விவசாய நிலத்தில் குடியேறினர். தொடர்ந்து அங்கு 3-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று மாலை மின் கோபுரத்தில் ஏறி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர் போராட்டத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே 4-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தது தொடர்பாக ஆசிரியரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
செய்யாறு:
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு, பருதிபுரத்தை சேர்ந்தவர் ராமலிங்கம் (வயது 57).
இவர் வெம்பாக்கம், அருகே உள்ள சட்டுவன்தாங்கல் கிராமத்தில் உள்ள அரசு ஆரம்பப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
அந்தப் பள்ளியில் இவர் ஒருவர் மட்டுமே பணி செய்கிறார். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்புதான் அந்த பள்ளியில் ஆசிரியராகப் பணியில் சேர்ந்தார்.
இவர் 4-ம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவியை கடந்த சில நாட்களாக மிரட்டி பாலியல் தொந்தரவு செய்து வந்ததாக கூறப்படுகிறது.
ஒருநாள் வீட்டிற்கு அழுது கொண்டே சென்ற சிறுமியிடம் அவரது தந்தை கேட்டபோது பள்ளியில் நடந்தவற்றை கூறி சிறுமி அழுதுள்ளார்.
இதுகுறித்து சிறுமியின் தந்தை செய்யாறு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
இன்ஸ்பெக்டர் நந்தினி தேவி ஆசிரியர் ராமலிங்கம் மீது பாலியல் தொந்தரவு மற்றும் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தார். இதையடுத்து போலீசார் ஆசிரியர் ராமலிங்கத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு, பருதிபுரத்தை சேர்ந்தவர் ராமலிங்கம் (வயது 57).
இவர் வெம்பாக்கம், அருகே உள்ள சட்டுவன்தாங்கல் கிராமத்தில் உள்ள அரசு ஆரம்பப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
அந்தப் பள்ளியில் இவர் ஒருவர் மட்டுமே பணி செய்கிறார். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்புதான் அந்த பள்ளியில் ஆசிரியராகப் பணியில் சேர்ந்தார்.
இவர் 4-ம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவியை கடந்த சில நாட்களாக மிரட்டி பாலியல் தொந்தரவு செய்து வந்ததாக கூறப்படுகிறது.
ஒருநாள் வீட்டிற்கு அழுது கொண்டே சென்ற சிறுமியிடம் அவரது தந்தை கேட்டபோது பள்ளியில் நடந்தவற்றை கூறி சிறுமி அழுதுள்ளார்.
இதுகுறித்து சிறுமியின் தந்தை செய்யாறு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
இன்ஸ்பெக்டர் நந்தினி தேவி ஆசிரியர் ராமலிங்கம் மீது பாலியல் தொந்தரவு மற்றும் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தார். இதையடுத்து போலீசார் ஆசிரியர் ராமலிங்கத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கீழ்பென்னாத்தூர் கூட்டுறவு வங்கியில் 382 பேருக்கு நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டது.
கீழ்பென்னாத்தூர்:
தமிழகத்தில் கடந்த 2021-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலின்போது, தேர்தலில் திமுக வெற்றிபெற்று ஆட்சி அமைத்தால் கூட்டுறவு சங்க வங்கிகளில் அடமானம் வைத்துள்ள 5 பவுன் தங்க நகைகளுக்கான கடன் தள்ளுபடி செய்யப்படும் என திமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டு இருந்தனர்.
தேர்தலில் திமுக வெற்றிபெற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமைத்த பிறகு நகைக்கடன் தள்ளுபடி செய்வதற்கான நடவடிக் கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.
இந்நிலையில், கீழ்பென்னாத்தூரில் உள்ள திருவண்ணாமலை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கிளையில் நகைக்கடன் பெற்றுள்ளவர்களில் 382 நபர்கள் தமிழக அரசின் பொது நகைக்கடன் தள்ளுபடி பெற தகுதி உடையவர்கள் என வங்கி அறிவிப்பு பலகையில் பெயர் பட்டியல் வெளியிட்டனர்.
இதனை அறிந்த, வங்கி வாடிக்கையாளர்கள் பட்டியலை பார்த்தும், வங்கி மேலாளர் அறிவுரையின்படியும் நகைக்கடன் தள்ளுபடிக்கான சான்றிதழ் பெற நடவடிக்கை மேற்கொண்டனர்.
நகைக்கடன் தள்ளுபடி பெற தேவையான ஆவணங் கள் என நகைக்கடன் பெற்றதற் கான வங்கி ரசீது, நகைக்கடன் தாரரின் குடும்ப அட்டை நகல் சான்று, நகைக்கடன்தாரர் குடும்ப உறுப்பினர்களின் ஆதார் கார்டு நகல்கள் தேவை என வங்கி மேலாளர் தெரிவித்தார்.
தேவையான ஆவணங்களுடன் வந்த சம்மந்தபட்ட நபர்களுக்கு வங்கிமுறைப்படி பதிவு செய்து, நகைகளையும், நகைக்கடன் சான்றிதழையும் சம்மந்தப்பட்ட நபருக்கு கூட்டுறவுவங்கி மேலாளர் சிவாஜி வழங்கினார்.
காசாளர் சண்முகம், நகை மதிப்பீட்டாளர் ரவிச்சந்திரன் உடன் இருந்தனர். தள்ளுபடி செய்து, தமிழக அரசின் பொது நகைக்கடன் வாயிலாக, தள்ளுபடி செய்து மீட்கப்பட்ட நகைகளுடன் பொது மக்கள் மகிழ்ச்சியுடன் சென்றனர்.
சேத்துப்பட்டில் டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து மது பாட்டில்களை திருடி சென்றனர்.
சேத்துப்பட்டு:
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு ஆரணி சாலையில் டாஸ்மாக் மதுபான கடை இயங்கி வருகிறது.
இந்த கடையில் பாண்டியன் (வயது 44) மேற்பார்வையாளராக வேலை செய்து வருகிறார்.
வழக்கம் போல் பாண்டியன் கடந்த 17&ந் தேதி இரவு டாஸ்மாக் மதுபான கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார். மறுநாள் 18&ந் தேதி கடையை திறப்பதற்காக வந்தார்.
அப்போது டாஸ்மாக் கடையின் பூட்டு உடைக்கப் பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
உள்ளே சென்று பார்த்த போது மது பாட்டில்கள் திருடபட்டு இருந்தது தெரியவந்தது. இது குறித்து சேத்துப்பட்டு போலீசுக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் திருட்டு குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருடப்பட்ட மது மதிப்பு சுமார் ரூ.25 ஆயிரம்வரை இருக்கும் என கூறப்படுகிறது.
போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபாவதி வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
திருவண்ணாமலை அருகே பைக் மீது கார் மோதியதில் 2 வாலிபர்கள் பரிதாபமாக இறந்தனர்.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை தாலுகா கீழ்பென்னாத்தூரை அடுத்த வெளுங்கனந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் தினேஷ் (வயது 26), சொர கொளத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துக்குமார் (37) இவர்கள் இருவரும் தங்கள் விவசாய நிலத்தில் பயிரிடப்பட்டுள்ள தர்பூசணி செடிக்கு பூச்சிக்கொல்லி மருந்து வாங்குவதற்காக நேற்று மதியம் ஒரே பைக்கில் கீழ்பென்னாத்தூருக்கு சென்றனர்.
அங்கு பூச்சிக் கொல்லி மருந்து வாங்கி கொண்டு மீண்டும் பைக்கில் ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.
அவர்கள் அரசம்பட்டு அரச மரம் அருகில் வந்த போது எதிரில் திருவண்ணாமலையில் இருந்து வேகமாக வந்த ஒரு கார், பைக் மீது மோதியது.இதில் தினேஷ், முத்துக்குமார் ஆகியோர் தூக்கிவீசப்பட்டு படுகாயமடைந்தனர்.
இதனை கண்ட பொதுமக்கள் அவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் இருவரும் அடுத்தடுத்து பரிதாபமாக இறந்தனர்.
இது குறித்து கீழ்பென்னாத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோவிந்தசாமி வழக்கு பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திவிட்டு சென்ற கடம்பை கிராமத்தைச் சேர்ந்த கார் டிரைவர் உஸ்மான் என்பவரை தேடி வருகின்றனர்.
தெள்ளார் அருகில் 8-ம் நூற்றாண்டை சேர்ந்த கொற்றவை சிலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை மரபுசார் அமைப்பைச் சேர்ந்த வரலாற்று ஆய்வாளர் ராஜ் பன்னீர் செல்வம், உதயராஜா மற்றும் வெடால் விஜயன் ஆகியோர் இணைந்து தெள்ளார் பகுதியில் கள ஆய்வு மேற்கொண்ட பொழுது கீழ்நமண்டி கிராமத்தில் பலகை கல்லில் இரண்டு சிலைகள் இருப்பதைக் கண்டு ஆய்வு மேற்கொண்டனர்.
அவ்வூரின் வயல்வெளி அருகே சுமார் 5 அடி உயரம் 2 அடி அகலம் கொண்ட பலகை கல்லில் எட்டு கரங்களுடன் புடைப்பு சிற்பமாக இருப்பது கொற்றவை சிலை என்பது கண்டறியப்பட்டது.
தலையை கரண்ட மகுடம் அலங்கரிக்க, நீள் வட்ட முகத்தில், இருகாதுகளிலும் பனையோலை குண்டலமும், கழுத்தில் ஆரம் போன்ற பட்டையான அணிகலனும், மார்பின் குறுக்குவாட்டில் சன்னவீரமும், அனைத்து தோள் மற்றும் கைகளிலும் வளைகள் அணிந்து இடை ஆடை தொடைவரை நீண்டு காட்சி தருகிறது.
தோளின் இருபுறமும் அம்பை தாங்கும் கூடையான அம்புரா தூளியுடன் காட்சி தருகிறது.
தனது மேல் வலது கரத்தில் பிரயோக சக்கரமும் முறையே மற்ற வலது கரங்களில் வாள் மற்றும் மான் கொம்பு ஏந்தியபடி மற்றொரு கை இடை மீது ஊரு முத்திரையிலும் உள்ளது.
மேல் இடது கரம் சங்கு தாங்கியும் முறையே மற்ற கைகள் வில், கேடயமும் ஏந்தி கீழ் இடது கரம் இடையின் மீது ஊரு முத்திரையிலும் காட்சி தருகிறது.
கொற்றவையின் பின்புறம் வாகனமாக நீண்ட கொம்புகளுடன் கலைமானுடன் கம்பீரமாக எருமை தலையின் மீது நின்றவாறு காட்சி தருகிறது.
அணிகலன்கள் மற்றும் சிற்ப அமைதியை வைத்து இச்சிற்பம் 8 ம் நூற்றாண்டைச் சேர்ந்த பல்லவர் கால கொற்றவையாகக் கருதலாம்.
மேலும் இவ்வூரில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அருகே பலகை கல்லில் புடைப்பு சிற்பமாகத் தவ்வை சிற்பம் காணப்படுகிறது.
மூன்றடுக்கு கரண்ட மகுடம் தரித்துப் பருத்த இடையுடன் நின்ற கோலத்தில், வலது கை அருள்பாலிக்கும் அபய முத்திரையிலும் இடது கை தொங்கவிடப்பட்ட நிலையிலும், இடையாடை பாதம் வரை பரவி அழகுற வடிக்கப்பட்டுள்ளது.
தவ்வையின் தலையருகே வலது புறம் காக்கை கொடியும், இடது புறம் துடைப்பமும் காட்டப்பட்டுள்ள நிலையில், காலருகே தனது மகன் மாந்தன் மற்றும் மகள் மாந்தியுடன் காட்சி தருகிறது.
இது போல நின்ற நிலையில் காணப்படும் கொற்றவை சிற்பம் மிகவும் அரிதாகும். இதே போன்ற நின்ற கோலத்திலான கொற்றவைசிலை தொண்டூரில் காணப்படுவது குறிப்பிடத் தகுந்தது. இச்சிற்பமைதியை வைத்து இச்சிற்பமும் 8 ம் நூற்றாண்டைச் சேர்ந்த சிற்பமாகக் கருதலாம்.
இத்தவ்வை சிற்பத்தின் அருகே சிறு கொட்டகையில் சதுர வடிவிலான ஆவுடையுடன் கூடிய சிவலிங்கமும், பிற்கால அம்மன் சிலையும் காணப்படுகிறது.
இச்சிவலிங்கம் மண்ணில் புதைந்து கிடந்ததாகவும், அதனை மீட்டு சில வருடங்களாக ஊர் மக்கள் வழிபாடு செய்து வருவதோடு கோவில் கட்ட முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
இவ்வூரில் ஏராளமான பெருங்கற்கால சின்னம் காணப்படுவதோடு, பல்லவர் கால தடயங்களும் காணக்கிடைக்கிறது. இச்சிவலிங்கம் மற்றும் சிற்பங்களை வைத்துப் பார்க்கையில் இவ்வூரில் பல்லவர் கால கோவிலிருந்து கால ஓட்டத்தில் அழிந்துள்ளதை அறியமுடிகிறது.
திருவண்ணாமலையில் விழிப்புணர்வு மினி மாரத்தான் போட்டி நடந்தது.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை மாவட்டத்தில் போதைப் பொருட்களை ஒழிப்பதற்காக மாவட்ட காவல் துறை மூலம் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளபட்டு வருகின்றது.
அதன்படி தனிப்படைகள் அமைத்தும், ரோந்து போலீசார்கள் நியமித்தும் தொடர் கண்காணிப்பு பணிகள் நடந்து வருகிறது. மேலும் குறும்படம், வரைபட போட்டிகள் நடத்தப்பட்டு பள்ளி, கல்லூரி மற்றும் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
போலீசார் மூலம் பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்களும், சமூக வலைதளங்களின் மூலமாகவும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகின்றது. அதனை தொடர்ந்து நேற்று மாவட்ட காவல் துறை, அருணை மருத்துவ கல்லூரி மருத்துவமனை, அபூர்வா புட்ஸ் மற்றும் அமோகா ஓட்டல் ஆகியவை இணைந்து போதை பொருட்கள் ஒழிப்பு குறித்து “say no to drugs” என்ற விழிப்புணர்வு மினி மாரத்தான் போட்டியை நடந்தினர்.
இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பவன்குமார் தலைமை தாங்கினார். இதில் சிறப்பு அழைப்பாளராக கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) பிரதாப், சி.என். அண்ணாதுரை எம்.பி., அருணை மருத்துவக்கல்லூரி இயக்குனர் எ.வ.வே.கம்பன் ஆகியோர் கலந்து கொண்டு போட்டியை கொடியசைத்து தொடங்கி வைத்தனர். இந்த போட்டி திருவண்ணாமலை கிரிவலப்பாதை செங்கம் சாலை இணையும் பகுதியில் தொடங்கி அபய மண்டபம் அருகில் நிறைவடைந்தது.
இதில் ஆண்கள், பெண்கள் என திருவண்ணாமலை, வேலூர், கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த சுமார் 1500 பேர் கலந்து கொண்டனர். போட்டியில் முதல் 3 இடங்களை பிடித்த ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவுக்கு தனித்தனியாக பரிசுகள் வழங்கப்பட்டது.
இதில் ஆண்கள் பிரிவில் செங்கத்தை சேர்ந்த டி.ரவிக்குமார் முதலிடமும், டி.சக்திவேல் இரண்டாம் இடத்தையும், வேட்டவலத்தை சேர்ந்த ஆர்.ராஜா 3-ம்இடத்தையும் பிடித்தனர்.
அதேபோல் பெண்கள் பிரிவில் திருவண்ணாமலை வி.டி.எஸ். ஜெயின் பள்ளியை சேர்ந்த ஆர்.அபிராமி முதலிடத்தையும், சென்னையை சேர்ந்த நிபியா ஜோசப் 2-ம் இடத்தையும், திருவண்ணாமலையை சேர்ந்த பி.ரூபிகா 3-ம் இடத்தையும் பிடித்தனர்.
பின்னர் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் வெற்றி பெற்றவர்கள் பரிசு தொகை மற்றும் கோப்பை வழங்கப்பட்டது. மேலும் போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது.
திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகம் முன்பு உரங்களில் மணல், மரத்தூள் கலப்பதை கண்டித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
திருவண்ணாமலை:
என்.எம்.ஆர். உழவர் பேரவை மாவட்டத் தலைவர் புருஷோத்தமன் தலைமையில் திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகம் முன்பு உரங்களில் கலப்படம் செய்து செயற்கையாக யூரியா தட்டுப்பாட்டை ஏற்படுத்துவதை கண்டித்தும், செயல்முறை விளக்கம் அளித்தும் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் கூறும்போது, திருவண்ணாமலை மாவட்டத்தில் 4 லட்சம் ஏக்கரில் நெல் சாகுபடியும், 50 ஆயிரம் ஏக்கரில் கரும்பு சாகுபடியும் நடைபெற்று வருகிறது. இந்தப் பயிர்களுக்கு தேவையான யூரியா உரம் கிடைப்பதில்லை.
அதனை தனியார் தயாரிக்கும் கலப்பு உரங்களில் அதிக அளவில் பயன்படுத்துகின்றனர். கலப்பு உரங்களில் யூரியா கலந்து இருப்பது தெரியாமல் இருப்பதற்காக சாயம் பயன்படுத்துகின்றனர்.
மேலும் எடையை அதிகரித்து காட்டுவதற்காக மரத்தூள், மணல் ஆகியவற்றை சேர்க்கின்றனர். எனவே அதில் தண்ணீர் கலந்து விவசாயிகளுக்கு உண்மை நிலையை அனைவருக்கும் தெரிவித்து இந்த போராட்டத்தை நடத்தியுள்ளோம்.
மாவட்டத்தில் இதுபோன்ற போலிகலப்பட உரங்களை தயார் செய்து அதிக விலைக்கு விற்பனை செய்து விவசாயிகள் வயிற்றில் அடிக்கும் உரக்கடைகளின் உரிமையை ரத்து செய்ய வேண்டும்.
போலி உர ஆலைகளை மூட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து யூரியா உரம் விவசாயிகளுக்கு தடையின்றி கிடைக்க செய்ய வேண்டும் என்றனர்.
செய்யாறு அருகே பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய டிரைவர் கைது செய்யப்பட்டார்.
செய்யாறு:
செய்யாறு பகுதியை சேர்ந்தவர் முருகன் (வயது 33). டிரைவர். இவர் அதே பகுதியை சேர்ந்த 16 வயதுடைய பள்ளி மாணவியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி அடிக்கடி பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டுள்ளார்.
இதனால் அந்த மாணவிக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ளது. மாணவியின் பெற்றோர் செய்யாறு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர்.
டாக்டர் பரிசோதனை செய்தபோது மாணவி 3 மாதம் கர்ப்பமாக இருப்பது தெரிந்தது. இதுகுறித்து அவரது தாயார் செய்யார் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய முருகனை போக்சோவில் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முருகனுக்கு ஏற்கனவே திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.






