என் மலர்tooltip icon

    திருவண்ணாமலை

    உலகம்பட்டு கிராமத்தில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது.
    சேத்துப்பட்டு:

    திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள உலகம்பட்டு கிராமத்தில் உலக தண்ணீர் தின விழாவை முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது.

    கிராம சபை கூட்டத்திற்கு உலகம்பட்டு ஊராட்சி மன்ற தலைவர் வேல்விழிஅறி தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி ரேணுகோபால் வட்டார வளர்ச்சி துணை அலுவலர் மகாலட்சுமி பணி மேற்பார்வையாளர் பாலாஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
     
    இதில் சிறப்பு அழைப்பாள ராக திருவண்ணாமலை மாவட்ட ஊராட்சிகளின் செயலர் அறவாழி கலந்து கொண்டு மத்திய அரசின் ஜல் ஜீவன்மிஷின் திட்டத்தின் அனைத்து கிராம பகுதிகளிலும் உள்ள வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டு வருகிறது.

    இதில் உலகம்பட்டு கிராமத்திள் 272 குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டு நபர் ஒன்றுக்கு நாளுக்கு 55 லிட்டர் வீதம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

    மேலும் உலக தண்ணீர் தினத்தின் அவசியம் குறித்து பேசுகையில்:-

    நீரின்றி அமையாது உலகு ஆகையால் நீரின் அத்தியாவசியம் குறித்து பொதுமக்கள் அனைவரும் விழிப்போடு செயல்பட்டு குடி நீரை வீணாக்காமல் முறையாக பயன்படுத்தி குடிநீர் சிக்கனத்தை பின்பற்ற வேண்டும்.

    மேலும் குடிநீரை முறையாக பயன்படுத்த வேண்டும் என்று தண்ணீரின் அவசியம் குறித்து பொதுமக்களிடையே விளக்கிப் பேசினார்.

    இதில் ஊர் பெரியவர்கள் பொதுமக்கள் ஆண்கள் பெண்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஊராட்சி மன்ற செயலாளர் சிவகுமார் நன்றி கூறினார்.
    திருவண்ணாமலையில் வளர்ச்சி திட்டப் பணிகள் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், கலெக்டர் பா.முருகேஷ், தலைமையில் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து அனைத்துறை அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் நேற்று நடைபெற்றது. 

    இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி, கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) மு.பிரதாப், மாவட்ட வன அலுவலர் அருண்லால், திட்ட இயக்குநர், மகளிர் திட்டம் சையத் சுலைமான், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) எஸ். கணேஷ், உதவியாளர் (நிலம்) கிருஷ்ணமூர்த்தி மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
    சேத்துப்பட்டு அருகே பைக் மீது கார் மோதி முதியவர் பரிதாபமாக இறந்தார்.
    சேத்துப்பட்டு:

    திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அருகே உள்ள சமத்துவபுரம் பகுதியை சேர்ந்தவர் முனுசாமி (வயது 60).

    இவர் மின்சார வாரியத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். அதே பகுதியை சேர்ந்த அரங்கநாதன் (65) விவசாயி இவர்கள் இருவரும் நண்பர்கள் நேற்று அருகிலுள்ள கெங்காபுரம்கிராமத்திற்கு சென்று மீண்டும் சமத்துவபுரத்திற்கு பைக்கில் வந்து கொண்டிருந்தனர்.

    அப்போது சேத்துப்பட்டில் இருந்து ஆரணி நோக்கி வந்த கார் இவர்கள் ஓட்டி வந்த பைக் மீது எதிர்பாராத விதமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட முனுசாமி மற்றும்  அரங்கநாதன் இருவரும் படுகாயமடைந்தனர். 

    உடனே அக்கம் பக்கம் உள்ளவர்கள் இருவரையும் மீட்டு ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி முனுசாமி பரிதாபமாக இறந்தார்.

    அரங்கநாதனுக்கு முதலுதவி சிகிச்சை செய்யப்பட்டு அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு அடுக்கம்பாறை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து முனுசாமியின் மகன் ராஜா சேத்துப்பட்டு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் சேத்துப்பட்டு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வரதராஜ், வேலு ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விபத்து ஏற்படுத்திய காரை பறிமுதல் செய்தனர். மேலும் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்
    ஆரணியில் பொதுமக்கள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    ஆரணி:

    ஆரணி அருகே வீட்டை காலி செய்ய மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியதை கண்டித்து 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பாடை கட்டி நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே பையூர் ஊராட்சிக்குபட்ட எம்.ஜி.ஆர் நகரில் சுமார் 400 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
    இந்த பகுதியில் நீர்பிடிப்பு பகுதியில் பல ஆண்டுகளாக வீடு கட்டி வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது.

    மேலும் கோர்ட்டு உத்தரவின் பேரில் மாவட்ட நிர்வாகம் எம்.ஜி.ஆர் நகரில் உள்ள குடியிருப்பு வாசிகளுக்கு வீடு காலி செய்ய நோட்டீஸ் அனுப்பபட்டுள்ளன.

    இதனை கண்டித்தும் பல ஆண்டுகளாக எம்.ஜி.ஆர் நகரில் வாழம் பொதுமக்களுக்கு பட்டா வழங்க கோரி பல முறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காத காரணத்தினாலும் சுமார் 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வீடு உருவம் கொண்ட அட்டைக்கு பாடை கட்டி ஆரணி ஓன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு கோஷங்கள் எழுப்பினர்.

    பின்னர் வட்டார வளர்ச்சி திட்ட அலுவலர் சீனிவாசனிடம் பட்டா  வழங்க கோரி பொதுமக்கள் மனு அளித்ததனர்.

    மேலும் எம்.ஜி.ஆர் நகர் பகுதியில் நீர்பிடிப்பு பகுதியாக உள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளன ஆனால் பல ஆண்டுகளாக வாழ்ந்து வருவதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.
     
    தற்போது எம்.ஜி.ஆர் பகுதியில் குடியிருப்பு வாசிகளை காலி செய்தால் சுடுகாட்டில் தான் சுமார் 350 குடும்பத்தினர் வாழ வேண்டும் எனவும் வேதனையுடன் தெரிவித்தனர்.

    இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
    வீரளூரில் சுடுகாட்டுப் பிரச்சினையால் இறந்தவர் உடல் போலீஸ் பாதுகாப்புடன் அடக்கம் செய்யப்பட்டது.
    திருவண்ணாமலை:

    கலசபாக்கம் தாலுகாவிற்கு உட்பட்ட வீரளூர் ஊராட்சி அருந்ததியர் காலனி பகுதி சுடுகாட்டு பாதை சரியில்லாத காரணத்தால் ஊரின் வழியாக செல்லும் மெயின் ரோடு வழியாக இறந்தவரின் உடலை எடுத்து அடக்கம் செய்ய அனுமதி பெற்று இருந்தனர். 

    இதனால் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டு சமரசம் செய்யப்பட்டு இருந்த நிலையில் தற்போது நேற்று முன்தினம் அருந்ததியர் காலனி பகுதியை சேர்ந்த கோவிந்தசாமி என்பவர் சென்னையில் விபத்தில் இறந்தார். 

    அவரின் உடலை அடக்கம் செய்ய நேற்று வீரளூர் கிராமத்திற்கு கொண்டு வரப்பட்டது. 

    இதனால் அப்பகுதியில் மீண்டும் பிரச்சினை ஏற்படுமா என்ற காரணத்தால் மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட் பவன்குமார் தலைமையில் ஏடிஎஸ்பி, 4 மாவட்ட துணை கண்காணிப்பாளர்கள் உட்பட 500க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர்.

    இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இந்தநிலையில் இறந்த கோவிந்தசாமி உடலை ஏற்கனவே அனுமதி பெற்றிருந்த வீரளூர் கிராமத்தின் வழியாக போலீஸ் பாதுகாப்புடன் எடுத்துச் சென்று சுடுகாட்டில் அடக்கம் செய்தனர். 

    இதனை தொடர்ந்து அக்கிராமத்தில் பிரச்சனை ஏற்படாத வண்ணம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
    கீழ்பென்னாத்தூர் அருகே நகை கடன் தள்ளுபடியில் முறைகேடு நடந்ததாக கூறி பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.
    கீழ்பெண்ணாத்தூர்:

    திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத் தூர் அடுத்த சோமாசிபாடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் திருவண்ணாமலை செல்லும் சாலையில் உள்ளது.

    தமிழக அரசு கடந்த 2021-ம் ஆண்டு மார்ச் 31-ந் தேதி வரை 5 பவுன் (40 கிராம்) வரையிலான தங்க நகைக் கடன் பெற்றவர்களுக்கு தள்ளுபடி செய்தது.

    இங்கு போது நகை கடனாக மேற்கண்ட தேதி வரை மொத்தம் 2 ஆயிரத்து 389 பேர் பெற்றுள்ளனர். இதில் தகுதி உள்ள பயணாளிகளுக்கு 333 பேருக்கு தள்ளுபடி செய்து இருப்பதாக கூட்டுறவு கடன் சங்கத்தில் அறிவிப்புப் பலகையில் விவரங்கள் அடங்கிய பட்டியல் ஒட்டப்பட்டிருந்தது.

    நிலமற்ற உறுப்பினர்களுக்கு நகை கடன் தள்ளுபடி பட்டியலில் பயிர் கடன் தள்ளுபடி வந்ததாக குறிப்பிடப்பட்டிருந்தது. 

    மேலும் 5 பவுனுக்கும் குறைவாக நகை கடன் பெற்றவர்களுக்கு கடன் தள்ளுபடி வராததாலும் 200க்கும் மேற்பட்டவர்கள் நேற்று அந்த பகுதியில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். 

    போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது நகை கடன் தள்ளுபடியில் முறைகேடு நடந்ததாக பொதுமக்கள் குற்றம்சாட்டினர். நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதியளித்ததை அடுத்து மறியலை கைவிட்டனர். 

    இதனால் அந்தப் பகுதியில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    ஆரணி அருகே விடுதியில் இருந்து வெளியே வரமறுத்து மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.
    ஆரணி:

    திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே ஆண்கள் அரசு நிதி உதவி பெறும் பள்ளியின் விடுதி செயல்பட்டு வருகிறது.

    இந்த பள்ளியில் சுமார் 2000க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த பள்ளி அருகாமையில் பள்ளிக்கான விடுதி இயங்கி வருகிறது. 

    இந்த விடுதியில் வெளியூரிலிருந்து வந்த 88 மாணவர்கள் தங்கி படித்து வருகின்றனர். 

    இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு விடுதியில் தங்கி படித்து வரும் 9,10,11,12ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் திருவண்ணாமலை சமூக நலத்துறைக்கு இணையதளம் மூலம் புகார்  அளித்தனர் 

    மாணவர்களை ஓரின சேர்க்கையில் ஈடுபட கட்டாயப்படுத்தி பாலியல் துன்புறுத்தியதாக விடுதி துணை காப்பாளர், ஊழியர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

    இதன் எதிரொலியாக விடுதியில் உள்ள மாணவர்களின் நலன் கருதி திருவண்ணாமலை மாவட்ட சமூக பாதுகாப்பு துறை அதிகாரி செல்வி மற்றும் அதிகாரிகள்  மாணவர்களை மாற்று விடுதிக்கு அழைத்து செல்ல முயன்றனர்.

    மேலும் இந்த விடுதியில் உள்ள மாணவர்கள் மாற்று விடுதிக்கு செல்ல மாட்டோம் என்று ஆரணி தேவிகாபுரம் சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

    தகவலறிந்த வந்த சேத்துப்பட்டு போலீசார் மாணவர்களிடம் சமரசம் பேச்சில் ஈடுபட்டு மாணவர்களை விடுதியில் அழைத்து பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வந்தனர்.

    பேச்சுவார்த்தை தோல் வியடைந்தை யொடுத்து மாணவர்கள் விடுதியில் சுமார் 7 மணி நேரம் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். 

    அதன் பின்னர் சமூக பாதுகாப்பு துறை மற்றும் வருவாய் துறை காவல்துறை ஆகியோர் பேச்சுவார்த்தையில் 88மாணவர்களில் 25 மாணவர்கள் மட்டுமே திருவண்ணாமலை விடுதிக்கு செல்ல சம்மதம் தெரிவித்து வேன் மூலம் திருவண்ணாமலைக்கு அழைத்து செல்லப்பட்டனர். மற்ற மாணவர்கள் அங்கேயே தங்க வைக்கபட்டுள்ளனர்.

    இதனால் மாணவர்களின் 7 மணி  நேரம் போராட்டம் முடிவுக்கு வந்தது.
    போளூரில் மனுநீதிநாள் முகாம் நடைபெற்றது.
    போளூர்;

    திருவண்ணாமலை மாவட்டம் போளூர் தாலுகா இரண்டே பட்டு கிராமத்தில் மனுநீதிநாள் முகாம் நடைபெற்றது.

    முகாமிற்கு தாசில்தார் சண்முகம் தலைமை தாங்கினார். சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் செந்தில்குமார், ஊராட்சி மன்ற தலைவர் கருணாநிதி ஆகியோர் முன்னிலை வகித்தனர், மண்டல துணை தாசில்தார் சிவலிங்கம் வரவேற்றார். 

    சிறப்பு அழைப்பாளராக பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நல அதிகாரி கீதாலட்சுமி கலந்து கொண்டார்.

    இந்த மனு நீதி நாள் முகாமில் 14 பேருக்கு முதியோர் உதவித் தொகையும், 7 பேருக்கு மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகையும், பட்டா மாறுதல் விவசாயி ஒருவருக்கும், மருந்து அடிக்கும் கருவி ஒருவருக்கும் என மொத்தம் 720 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    இதில் ஆதிதிராவிடர் நல தாசில்தார் வெங்கடேசன், தாலுக்கா விநியோக அதிகாரி மஞ்சுளா, ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் பத்மஜோதி ராஜசேகர், வருவாய் ஆய்வாளர் கலைச்செல்வன் மற்றும் கிராம மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். 

    முடிவில் கிராம நிர்வாக அதிகாரி செந்தில்குமார் நன்றி கூறினார்.
    ஆரணி அருகே ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து பொது மக்கள் கிராம சபை கூட்டத்தை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே ஏரிக்குப்பம் கிராமத்தில் சுமார் 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர் ஊராட்சி மன்ற தலைவராக கிளியம்மாள் கலாமணி மற்றும் 6 உறுப்பினர்கள் உள்ளனர்.

    ஊராட்சி செயலாளராக முருகன் என்பவர் இருந்து வருகின்றார்.

    இந்நிலையில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு  சிறப்பு கிராம சபை கூட்டம் அதிகாரி சீனிவாசன் தலைமையில் ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில்  இன்று நடந்தது. இதில் பொது மக்கள் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

    இந்த சிறப்பு கிராமசபை கூட்டத்தில் ஊராட்சி செயலாளர் முருகன் தீர்மானத்தை வாசித்தார். இதில் கிராமத்தில் உள்ள 456 வீடுகளுக்கு குழாய் இணைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளதகவும் ஒரு நபருக்கு 55 லிட்டர் தண்ணீர்  வழங்கப் பட்டுள்ளதாக தீர்மானத்தில் வாசிக்கப்பட்டது.

    அப்போது குறுக்கிட்ட பொதுமக்கள் ஜல் ஜுவன் திட்டத்தில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக கூறி சிறப்பு கிராம சபை கூட்டத்தை புறக்கணித்து முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சீனிவாசன் தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

    இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
    திருவண்ணாமலை மாவட்டத்தில் விபத்து மரணங்கள் குறைக்கப்பட்டுள்ளது என போலீஸ் சூப்பிரண்டு பவன்குமார் தெரிவித்துள்ளார்.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெறும் சாலை விபத்துகளை தடுக்கும் நோக்கத்திலும், சாலை விபத்துகளில் உயிரிழப்புகளை குறைக்கும் வகையிலும் காவல் துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

    அதன் ஒரு பகுதியாக திருவண்ணா மலை சந்திப்பு பகுதியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பவன்குமார் தலைமையிலும்,திருவண்ணாமலை உட்கோட்ட உதவி போலீஸ் சூப்பிரண்டு கிரண் ஸ்ருதி மற்றும் காவல்துறை அதிகாரிகள், தியாகி அண்ணாமலை அரசினர் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் தலை கவசம் அணியாமல் வரும் இருசக்கர வாகன ஓட்டிகளிடம் முகம் பார்க்கும் கண்ணாடியை காட்டியும், முக கவசம் அணிவதன் அவசியம் குறித்து எடுத்துக்கூறியும், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு வாசகங்களை ஏந்தியபடியும் ,முக கவசம் அணிந்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். 

    மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பவன்குமார் நேரடியாக இருசக்கர வாகன ஓட்டிகள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தினார். 

    அவர் பேசும்போது கூறியதாவது:-

    திருவண்ணாமலை மாவட்டத்தில் சாலை விபத்துகளை தடுக்கும் நோக்கில் நடப்பாண்டில் மட்டும் இதுவரை தலைக்கவசம் மற்றும் சீட் பெல்ட் அணியாமல் வாகனத்தை இயக்கியவர்கள் மீது 2 லட்சத்து 8 ஆயிரத்து  285 வழக்குகளும், 

    மது அருந்திவிட்டு வாகனத்தை ஏற்றுதல், செல்போன் பேசிக் கொண்டு வாகனத்தை இயக்குதல், அதிவேகமாக வாகனத்தை இயக்குதல், 

    அதிக பாரம் ஏற்றுதல், சரக்கு வாகனத்தில் பயணிகளை ஏற்றுதல், சிக்னல்களை மீறுபவர்கள் போன்ற செயல்களில் ஈடுபட்டவர்களின் ஓட்டுனர் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்தல் தொடர்பாக 18 ஆயிரத்து 822 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    கடந்த ஆண்டு 20.3.2021 வரை 133 பேர் விபத்தில் மரணமடைந்துள்ளனர்.நடப்பாண்டு 27.2 சதவீதம் விபத்து குறைந்து 95 பேர் விபத்தில் மரணமடைந்துள்ளனர். 

    திருவண்ணாமலை மாவட்டத்தில் விபத்துகள் ஏற்படாமல் இருக்க அனைவரும் ஒன்றுபட்டு செயல்படுவோம்.

     இவ்வாறு அவர் கூறினார்.
    விவசாய நிலங்களில் அமைத்த உயர்மின் கோபுரங்களுக்கு நஷ்டஈடு கேட்டு 3-வது நாளாக விவசாயிகள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    சேத்துப்பட்டு:

    திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியை அடுத்த பாஞ்சரை கூட்டுச் சாலையில், விவசாய நிலங்களில் உயர்மின் கோபுரங்கள் அமைத்ததற்காக நஷ்டஈடு வழங்கக் கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர்  3-வது நாளாக நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். 

    இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. நேற்று முன்தினம் காத்திருப்பு போராட்டத்தை தொடங்கிய விவசாயிகள் 3--வது நாளாக தொடர்ந்து போராட்டம் மேற்கொண்டுள்ளனர்.

    இன்று அவர்கள் மேற் கொண்ட போராட்டத்தின் போது, ஏர்கலப்பை, நுகத்தடி,  மண்வெட்டி உள்ளிட்ட விவசாய கருவிகளுக்கு மாலை அணிவித்து பூஜை செய்து விவசாயிகள் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர். 

    தங்களின் வாழ்வாதாரத்தை பறிப்பது இப்படியே  தொடர்ந்தால், விவசாய கருவிகளுக்கு பூஜை மட்டுமே தங்களால் செய்ய இயலும் என்பதையும், விவசாயம் செய்ய இயலாது என்பதையும் உணர்த்துவதற்காகவே இந்த நூதன போராட்டத்தை மேற்கொண்டதாக விவசாயிகள் தெரிவித்தனர்.
    சேத்துப்பட்டில் மின்சார திருத்த சட்டத்தை வாபஸ் பெற வலியுறுத்தி விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    சேத்துப்பட்டு:

    திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு போளுர் சாலையில் உள்ள தாலுகா அலுவலகம் முன்பு அகில இந்திய விவசாயிகள் சங்கம் சார்பில் மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

    விவசாயிகள்  தொழிலாளர் சங்க தாலுகா அமைப்பாளர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். விவசாயிகள் தொழிலாளர்சங்க தாலுக்கா பொருளாளர் சேகர் விவசாய தொழிலாளர் சங்க பொறுப்பாளர் அண்ணாமலை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் மத்திய அரசின் 2020 மின்சார திருத்த சட்டத்தை வாபஸ் பெற வேண்டும்.

    மேலும் விவசாயிகளின் விளைபொருட்களை விலை நிர்ணயம் செய்ய குழுக்கள் அமைக்க வேண்டும்.

    மேலும் டெல்லியில் 381 நாட்கள் விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தினார்கள். இதில் 715 விவசாயிகள் உயிர்த்தியாகம் செய்தனர்.

    இவர்களது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கியும் நிவாரணத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும். மேலும் மத்திய அரசு விவசாயிகளுக்கு அளித்த வாக்குறுதிகளை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தினர். 

    அகில இந்திய விவசாயிகள் சங்க மாவட்ட பொருளாளர்  உதயகுமார் அகில இந்திய விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர்  வெங்கடேசன் உள்பட 30-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    முடிவில் சிபிஎம் சேத்துப்பட்டு வட்டார கமிட்டி பொறுப்பாளர் ஆனந்தன் நன்றி கூறினார்.
    ×