என் மலர்tooltip icon

    திருவண்ணாமலை

    ஆரணியில் ரூ.50 லட்சத்தில் கட்டப்பட்ட உடற் பயிற்சி மையத்தை நகர மன்ற தலைவர் ஆய்வு செய்தார்.
    ஆரணி:

    திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் நகராட்சி சாலையில் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக கட்டபட்ட உடற்பயிற்சி மையத்தை நகர மன்ற தலைவர் ஏ.சி.மணி நகராட்சி ஆணையர் தமிழ்செல்வி ஆகியோர் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.

    விரைவில் திறப்பு விழா செய்யப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வரும் என்று கூறி நகர மன்ற தலைவர் ஏ.சி.மணி உடற்பயிற்சி மையத்தில் உடற்பயிற்சி செய்து ஆய்வு மேற்கெண்டார்.

    அதனையடுத்து நகர ஓருங்கிணைந்த வளர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.2 கோடியே 71 லட்சமத்திப்பீட்டில் நடைபெற்று வரும் கால்வாய் பணிகளை நகர மன்ற தலைவர் ஆய்வு மேற்கொண்டு தரமாகவும் விரைவாகவும் பணியை முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வருவதற்கு பணியை விரைந்து முடிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

    இந்நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையர் தமிழ்ச்செல்வி பொறியாளர் ராஜ விஜய காமராஜ் கவுன்சிலர் பாபு உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.
    பூங்குணம் கிராமத்தில் ரேணுகாம்பாள் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
    சேத்துப்பட்டு:

    திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு தாலுகாவில் உள்ள பூங்குணம் கிராமத்தில் படைவீடு ரேணுகாம்பாள் கோவில் உள்ளது. 

    இங்கு விநாயகர் வள்ளி தெய்வானை சமேத முருகர் ஆகிய கோவில்கள்புதிதாக கட்டப்பட்டு பஞ்ச வர்ணம் பூசி இதன் கும்பாபிஷேக விழா நடந்தது. 

    கோவிலின் முன்பு யாகசாலை பந்தல் அமைக்கப்பட்டு 3 யாக குண்டங்கள் அமைத்து 108 கலசம் வைத்து பல்வேறு நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீர் கலசத்தை வைத்து பல்வேறு மூலிகைகள் மூலம் கோ பூஜை, தம்பதி பூஜை, நாடி சந்தனம் அங்குரார்ப்பணம் ஆகிய 3 கால பூஜைகள் செய்யப்பட்டு புனிதநீர் கலசத்தை மேளதாளத்துடன் சிவாச்சாரியார்கள் கோவிலை சுற்றி வந்து கோவில் மீது உள்ள விமான கோபுரத்தின் கலசத்தின் மீது புனித நீரை ஊற்றினர். 

    பின்னர் அங்கு கூடி இருந்த பக்தர்கள் மீது புனித நீர் தெளித்தனர். விழாவில்சிறப்பு அழைப்பாளர்களாக வந்தவாசி அம்பேத்குமார் எம்.எல்.ஏ. தி.மு.க. வடக்கு மாவட்ட செயலாளர் தரணி வேந்தன், முன்னாள் எம்.எல்.ஏ. பாண்டுரங்கன், 

    பெரணமல்லூர் ஒன்றிய குழு தலைவர் இந்திரா இளங்கோவன், ஒன்றிய செயலாளர் ராமசாமி, மாவட்ட இலக்கிய தி.மு.க. பொறுப்பாளர் ஏழுமலை மற்றும் முக்கிய பிரமுகர்கள் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கினர். 

    இதற்கான ஏற்பாடுகளை பூங்குணம் ஊராட்சி மன்ற தலைவர் முத்துவேணி கிருஷ்ணன் டாக்டர் விஜயகுமார் மற்றும் விழாக்குழுவினர் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.
    திருவண்ணாமலை:

    சிவனின் பஞ்சபூத திருத்தலங்களில் அக்னி திருத்தலமாக போற்றப்படுவது திருவண்ணாமலை அருணா சலேஸ்வரர் கோவில். 

    இங்கு ஒவ்வொரு மாதமும் பிரதோஷ தினங்களில் பெரிய நந்திக்கு உள்பட மூலவர் முன்பு ஒவ்வொரு பிரகாரத்திலும் அமைந்துள்ள நந்திகளுக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.

    நேற்று மாலை பங்குனி மாத பிரதோஷத்தை முன்னிட்டு அருணாசலேஸ்வரர் கோவில் இரண்டாம் பிரகாரத்தில் மூலவருக்கு முன்பு தங்கக் கொடிமரம் அருகில் உள்ள நந்திக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.

    பால், தயிர், சந்தனம், மஞ்சள், இளநீர் மற்றும் பல்வேறு வாசனை திரவியங்களை கொண்டு அபிஷேகங்கள் செய்யப்பட்டன.  இதேபோல் பெரிய நந்திக்கும் அனைத்து அபிஷேகங்களும் செய்யப் பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது.

    இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அப்போது அண்ணாமலைக்கு அரோகரா, உண்ணாமலை அம்மனுக்கு அரோகரா என்ற பக்தி கோஷம் எழுப்பினர். பின்னர் பக்தர்களுக்கு விபூதி மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது. 

    இதேபோல் திருவண்ணா மலை கிரிவலப் பாதையில் அமைந்துள்ள அஷ்டலிங்க சன்னதிகளில் உள்ள நந்திகளுக்கும் பிரதோஷ சிறப்பு வழிபாடுகள் நடை பெற்றன.

    அங்கும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். பிரதோஷ வழிபாடுகளை வெளியூர் பக்தர்களும் கண்டு மகிழ்ந்தனர்.
    போளூரில் குட்கா விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
    போளூர்:

    போளூர் பெரிய கரம் செல்லும் சாலையில் பெரியார் தெருவில் உள்ள மளிகை கடையில் போதை பொருட்கள் விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. 

    அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயப்பிரகாஷ், தலைமையில் சப் இன்ஸ்பெக்டர் சிவக்குமார், சதீஷ் சங்கர் தனிப்பிரிவு பாஷ்யம் ஆகியோர் தனிப்படை நேற்று கடை மற்றும் வீட்டிலும் சோதனை நடத்தினர்.

    அப்போது அங்கு மூட்டை மூட்டையாக குட்கா பான்மசாலா இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனே ரூ.4 லட்ச மதிப்பில் குட்கா பான்மசாலா பறிமுதல் செய்தனர். 

    இதனை தொடர்பாக மளிகை கடை உரிமையாளர் சர்தார் அலி (37) என்பவரை கைது செய்தனர். தொடர்ந்து புதிய மசூதி தெருவில் உள்ள ஒரு மளிகைக்கடையில் போலீசார் சோதனை நடத்தியபோது அங்கு மாடி வீட்டில் உள்ள ஒரு அறையில் குடோன் ஆக மாற்றி குட்கா பான்மசாலா பாக்கெட்டுகள் இருந்தது தெரியவந்தது. 

    அங்கிருந்து ஒரு லட்சம் குட்கா பான் மசாலா வகைகள் பறிமுதல்  செய்து மளிகை கடை உரிமையாளர் ரகுமான் என்கின்ற பாபு (44) என்பவரை கைது செய்தனர். மேலும் அவர்கள் மீது  போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருவண்ணாமலை அருகே ஆடுகள் திருடும் கும்பல் அட்டகாசத்தால் கிராம மக்கள் பாதிப்பு அடைந்துள்ளனர்.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்டத்தில் 75 சதவீத மக்கள் விவசாயத்தை நம்பியே வாழ்கின்றனர்.விவசாயம் மூலம் குறைந்த அளவு வருமானம் கிடைப்பதால் கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டு வருகின்றனர். 

    இந்த நிலையில் திருவண்ணாமலை அடுத்த கலசப்பாக்கம் பகுதியில் ஆடுகள் திருடும் கும்பல் அட்டகாசம் அதிகரித்து வருகிறது.இதனால் கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    கலசபாக்கம் தொகுதிக்குட்பட்ட மஷார் கிராமத்தில் நேற்று முன்தினம் இரவு 1 மணி அளவில் ஒரு மோட்டார் சைக்கிள், ஒரு காரில் வந்த மர்ம நபர்கள் சுரேஷ் என்பவருக்கு சொந்தமான 2 ஆடுகளை திருடி சென்றுள்ளனர்.

    அப்போது ஆடுகள் போட்ட சத்தத்தால் விழித்தெழுந்த சுரேஷ் வெளியே வந்து பார்த்தபோது அவர் வளர்த்து வந்த ஒரு ஆடு மட்டும் நின்றது. மற்ற 2 ஆடுகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. மர்ம நபர்கள் மோட்டார் சைக்கிள் மற்றும் காரில் செல்வதை கண்ட அவர் அதிர்ச்சியடைந்தார்.

    பின்னர் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் இது பற்றி தெரிவித்துள்ளார்.இதைத்தொடர்ந்து கிராம மக்கள் அனைவரும் மர்ம நபர்களை தேடி சென்றுள்ளனர்.அதற்குள் ஆடு திருடும் கும்பல் தப்பிச் சென்றுவிட்டது.

    இதுபற்றி அறிந்த விவசாயிகள் விடிய விடிய விழித்திருந்து திருடர்களை தேடியுள்ளனர். திருட்டு போன 2 ஆடுகளின் மதிப்பு ரூ.25 ஆயிரம் இருக்கும் என்று கூறப்படுகிறது.

    இதுபோன்ற சம்பவங்கள் குறித்து பாதிக்கப்பட்ட நபர்கள் போலீசில் புகார் செய்யாததால் தொடர்ந்து ஆடு திருடும் கும்பல் அட்டகாசம் செய்து வருவதாக கூறப்படுகிறது.இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் திருடர்களைப் பிடித்து ஆடுகளை மீட்டுத் தரவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
    சேத்துப்பட்டு அருகே கஞ்சா விற்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.
    சேத்துப்பட்டு:

    திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அருகே உள்ள தேவிகாபுரத்தில் கஞ்சா விற்பனை செய்வதாக சேத்துப்பட்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபாவதிக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து சேத்துப்பட்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபாவதி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அங்கு கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வாலிபரை கைது செய்தனர். 

    அவரிடம் இருந்து 50 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
    வணிகர்களின் சங்கமம் 3-ம் ஆண்டு விழாவை சிறப்பாக கொண்டாட வேண்டும் என திருவண்ணாமலையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
    திருவண்ணாமலை:

     தமிழ்நாடு வணிகர்களின் சங்கமம் மூன்றாம் ஆண்டு தொடக்கவிழாவை சிறப்பாக கொண்டாடுவது தொடர்பான நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் திருவண்ணாமலையை அடுத்த வேங்கிக்காலில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. 

    கூட்டத்திற்கு திருவண்ணாமலை மண்டல தலைவர் ஆர்.சிவராமன் தலைமை தாங்கினார். 

    கூட்டத்தில் வருகிற மே மாதம் 5-ந்தேதி சென்னை கொட்டிவாக்கம் ஒய்.எம்.சி.ஏ.மைதானத்தில் தமிழ்நாடு வணிகர்களின் சங்கமம் 3&ம் ஆண்டு விழாவை எழுச்சி மாநில மாநாடு போல் நடத்துவது குறித்து விரிவாக ஆலோசனை செய்யப்பட்டது.

    3-ம் ஆண்டு தொடக்க விழாவில்  வணிகர்களின் சங்கமம் மண்டல நிர்வாகிகள்,மாவட்ட நிர்வாகிகள், தொகுதி நிர்வாகிகள் உள்ளிட்ட  அனைத்து நிர்வாகிகள், உறுப்பினர்கள் தவறாமல் கலந்து கொண்டு விழாவை சிறப்பிக்க வேண்டும் என்று கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
    திருவண்ணாமலையில் ரூ.38 கோடி செலவில் கட்டி முடிக்கப்பட்ட மேம்பாலத்தை உடனே திறக்காவிட்டால் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்ற பா.ஜ.க. அறிவிப்பால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பா.ஜ.க.தலைவர் ஜீவானந்தம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    திருவண்ணாமலை அண்ணாசாலையில் ரெயில்வே மேம்பாலம் அமைக்க கடந்த 2019&ஆம் ஆண்டு ரூ.38 கோடி நிதி ஒதுக்கப்பட்டு அதே ஆண்டு பிப்ரவரி மாதம் பாலம் கட்டும் பணி துவங்கியது. 

    தற்போது மேம்பால பணிகள் முடிக்கப்பட்டு 2 மாதமாகியும் பாலம் திறக்கப்படாமல் உள்ளது. இதனால் வாகன போக்குவரத்து நெரிசலில் சிக்கி பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

    கடந்த மூன்று ஆண்டுகளாக அண்ணாசாலையில் மேம்பால பணிகள் நடப் பதால் திருவண்ணாமலை நகருக்கு வரும் வாகனங்கள் மற்றும் திருவண்ணா மலைக்கு வெளியே செல்லும் வாகனங்கள் அனைத்தும் அவலூர்பேட்டை சாலை வழியாக சென்று வருகின்றன. 

    அந்த சாலையில் ரெயில்கள் செல்லும் பாதை அமைந்துள்ளதால் அடிக்கடி ரெயில்வே கேட் மூடப்படுகிறது. இருபுறங்களிலும் வாகனங்கள் நிற்கிறது.

    அப்போது அவசர வேலையாக செல்பவர்கள் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டு வருகிறது. இந்த நேரத்தில் மணிக்கணக்கில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

    பள்ளிகள் திறந்து செயல்பட்டு வரும் சூழ்நிலையில் பள்ளிக்கு வரும் மாணவர்களும், மருத்துவமனைக்கு செல்லும் ஆம்புலன்ஸ் வாகனங்களும் பாதிக்கப்படுகின்றனர்.

    மேம்பாலம் கட்டி முடிக்கப்பட்ட நிலையில் திறக்கப்படாமல் இருப்பதால் சுமார் 3 முதல் 4 கிலோ மீட்டர் தூரம் வரை வாகனங்கள் சுற்றி செல்வதால் பெட்ரோல் மற்றும் டீசல் செலவு அதிகமாக ஏற்படுவதோடு கால விரயத்தால் பொதுமக்கள் மிகவும் இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர்.

    திருவண்ணாமலையில் 2ஆண்டுகளுக்கு பிறகு பக்தர்கள் பவுர்ணமி கிரிவலம் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளதால் கிரிவலம் செல்ல வரும் பக்தர்கள் மிகவும் அல்லல்பட வேண்டிய சூழ்நிலை உள்ளது.

    எனவே பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள், ஆன்மீக பக்தர்கள் நலன் கருதி மாவட்ட நிர்வாகம் உடனடியாக இந்த பிரச்சனையில் தலையிட்டு மேம்பாலத்தை உடனடியாக திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் பாரதிய ஜனதா கட்சி சார்பில் மேம்பாலத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    துரிஞ்சாபுரத்தில் ரூ.2.10 கோடியில் உணவு பொருள் பதப்படுத்தும் நவீன மையம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
    கலசப்பாக்கம்:

    திருவண்ணாமலை மாவட்டம் துரிஞ்சாபும் ஒன்றியத்தில் சர்வதேச அளவில் தரமான மணிலா எண்ணெய் உற்பத்தி செய்ய ரூ.2 கோடியே 10 லட்சம் மதிப்பீட்டில் உணவு பொருள் பதப்படுத்தும் நவீன மையம் கட்டுவதற்கும் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

    திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆண்டு ஒன்றிற்கு சுமார் 75 ஹெக்டரில் நிலக்கடலை பயிர் சாகுபடி செய்யப்பட்டு நிலக்கடலையிலிருந்து சமையல் எண்ணெய் உற்பத்தி செய்யப்படும் திட்டத்தில் மாவட்ட, மாநில அளவில் முதலிடமும், அகில இந்திய அளவில் மூன்றாவது இடத்திலும் திருவண்ணாமலை மாவட்டம் இருந்து வருகின்றன. 

    திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சுமார் 20 ஆயிரம் விவசாயிகளை கொண்ட 35 உழவர் உற்பத்தியாளர்கள் குழுக்களை ஒருங்கிணைத்து திருவண்ணாமலை உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களின் கூட்டமைப்பு நிறுவனம் துவக்கப்பட்டுள்ளது. 

    இதன் மூலம் திருவண்ணாமலை மாவட்டத்தில் உற்பத்தியாகும் மணிலாவை கொண்டு மரசெக்கு நிலக்கடலை எண்ணெய் சர்வதேச அளவில் உயர்ந்த தரத்துடன் மத்திய அரசின் கீழ் நியாயமான விலையில் நுகர்வோர்கள் பயனடையும் வகையில் மத்திய அரசின் சார்பில் ரூ.2 கோடியே 10 லட்சம் மதிப்பீட்டில் திருவண்ணாமலை அடுத்த துரிஞ்சாபுரம் வள்ளி வாகை ஊராட்சிக்கு உட்பட்ட தெள்ளானந்தல் கிராமத்தில் நவீன இயந்திரங்களை கொண்டு மணிலா எண்ணெய் உற்பத்தி செய்யவும் மற்றும் சந்தைப்படுத்தும் மையம் கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

    இதைத்தொடர்ந்து. இப்பணிக்கான துவக்க விழா நடைபெற்றது.

    விழாவில் துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி கலந்து கொண்டு பூமி பூஜையை தொடங்கி வைத்தார். சரவணன் எம்.எல்.ஏ, ஒன்றிய குழு தலைவர் தமயழேந்தி, ஊராட்சி மன்ற தலைவர் சசிகலாகுமார் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
    ஆரணியில் அரசு பஸ்கள் ஓடாததால் மாணவ, மாணவிகள் கடும் அவதியடைந்துள்ளனர்.
    ஆரணி:

    ஆரணி போக்குவரத்து பணிமனையில் 78 பஸ்கள் இயங்குகின்றன. இதில் மேலாளர் உட்பட 456 பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

    வேலை நிறுத்தத்தால் 78 பஸ்களில் வெறும் 5 பஸ்கள் மட்டும் ஓடியது. இதனால் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ& மாணவிகள், வேலைக்கு செல்பவர்கள், வெளி ஊர்களுக்கு செல்லும் பொதுமக்களும் கடும் அவதிகுள்ளாயினர்.

    இதனால் வேறுவழியின்றி தனியார் பஸ்களில் மக்கள் கூட்டம் அதிகளவில் பயணம் செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

    கண்ணமங்கலம் ரெயில் நிலையத்தில் மறியல் போராட்டம் வட்டார தலைவர் ரவிசந்திரன் தலைமையில் நடைபெற்றது.

    இதில் 50க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர். ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கோடை காலத்தையொட்டி பக்தர்களுக்கு நீர்மோர் வழங்கப்பட்டது.
    திருவண்ணாமலை:

    நினைத்தாலே முக்தி தரும் திருத்தலம் என்று போற்றப்படுவது திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில்.

    இக் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருவது வழக்கம். 

    இந்த நிலையில் தற்போது கோடை வெயில் காரணமாக பக்தர்கள் அவதிப்படக்கூடாது என்று அருணாச்சலேஸ்வரர் கோவில் வரும் பக்தர்களுக்கு கோவில் இளவரசு பட்டம் ரமேஷ் குருக்கள் இன்று காலை பக்தர்களுக்கு நீர்மோர் வழங்கினார்.அதனை ஏராளமான பக்தர்கள் வாங்கி பருகி தாகம் தணிந்து மகிழ்ச்சியுடன் சென்றனர்.
    திருவண்ணாமலை மாவட்டத்தில் 317 ஹெக்டேர் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளது.
    திருவண்ணாமலை:

    தமிழகத்தில் நீர்தேக்கம் மற்றும் நீர்வரீ பாதைகளில் ஆக்கிரமிப்பு அதிகளவில் உள்ளன. இதனால் மழைநீரை முழுமையாக தேக்கி வைத்து கோடை காலங்களில் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதன் எதிரொலியாக நீர்நிலைகள் மற்றும் நீர்வழி பாதைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற ஐகோர்ட்டு அதிரடி உத்தரவிட்டுள்ளது.

    மேலும் இந்த உத்தரவில் ஆக்கிரமிப்பு குறித்து ஆய்வு செய்து அதனை அகற்ற மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை தொடர்பாக மாவட்ட வாரியாக அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதையடுத்து திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகள் மற்றும் அரசுக்கு சொந்தமான இடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகள் குறித்து வருவாய்துறை, இந்து சமய அறநிலையத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புதுறையினர் ஆய்வு நடத்தினர்.

    அதில் 1,426 ஹெக்டேர் அளவுக்கு ஆக்கிரமிப்புகள் உள்ளது கண்டறியப்பட்டது. இதையடுத்து கலெக்டர் முருகேஷ் பார்வையிட்டு போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணியில் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

    திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று முன்தினம் மட்டும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த 25.39 ஹெக்டேர் இடம் மீட்கப்பட்டுள்ளது.

    கலசப்பாக்கம், செங்கம், சேத்துப்பட்டு, செய்யாறு, வந்தவாசி, போளூர், வெம்பாக்கம் ஆகிய 7 வட்டங்களில் 97 தனிநபர்களால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த 10 நீர்நிலைகள், ஒரு மேய்கால் நிலப்பரப்பு, ஒரு கிராம நத்தம், ஒருசாலை என அரசுக்கு சொந்தமான 13 இடங்கள் மீட்கப்பட்டன.

    இதில் 30 ஆண்டுகளுக்கு மேலாக ஆக்கிரமிப்பு பிடியில் இருந்த இடங்களும் மீட்கப்பட்டுள்ளதாக வருவாய்த்துறை தெரிவித்துள்ளது.

    ஏற்கனவே 292 ஹெக்டேர் நிலங்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில் மொத்தம் 317.44 ஹெக்டேர் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து கலெக்டர் முருகேஷ் வெளியிட்டுள்ள  செய்திக்குறிப்பில் கூறியதாவது:&

    சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுபடி திருவண்ணாமலை மாவட்டத்தில் நீர்ப்பிடிப்பு உள்ளிட்ட பகுதிகளில் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த 317.44 ஹெக்டேர் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளது.

    ஆக்கிரமிப்பு மீட்கும் பணி தொடர்கிறது. நீர்நிலைகள் மற்றும் அரசுக்கு சொந்தமான இடங்களில் ஆக்கிரமிப்பு செய்துள்ளவர்கள், தாங்களாகவே முன்வந்து ஆக்கிரமிப்புகளை அகற்றி கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது. 

    இல்லையெனில் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவுபடி அனைத்து ஆக்கிரமிப்புகளும் விரைவில் அகற்றப்படும் என தெரிவித்துள்ளார்.வலர் உட்பட 3 பேர் காயம் அரக்கோணம் அருகே சலசலப்பு
    ×