என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புப்படம்
திருவண்ணாமலையில் மேம்பாலத்தை உடனே திறக்காவிட்டால் போராட்டம்- பா.ஜ.க. அறிவிப்பால் பரபரப்பு
திருவண்ணாமலையில் ரூ.38 கோடி செலவில் கட்டி முடிக்கப்பட்ட மேம்பாலத்தை உடனே திறக்காவிட்டால் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்ற பா.ஜ.க. அறிவிப்பால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பா.ஜ.க.தலைவர் ஜீவானந்தம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
திருவண்ணாமலை அண்ணாசாலையில் ரெயில்வே மேம்பாலம் அமைக்க கடந்த 2019&ஆம் ஆண்டு ரூ.38 கோடி நிதி ஒதுக்கப்பட்டு அதே ஆண்டு பிப்ரவரி மாதம் பாலம் கட்டும் பணி துவங்கியது.
தற்போது மேம்பால பணிகள் முடிக்கப்பட்டு 2 மாதமாகியும் பாலம் திறக்கப்படாமல் உள்ளது. இதனால் வாகன போக்குவரத்து நெரிசலில் சிக்கி பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
கடந்த மூன்று ஆண்டுகளாக அண்ணாசாலையில் மேம்பால பணிகள் நடப் பதால் திருவண்ணாமலை நகருக்கு வரும் வாகனங்கள் மற்றும் திருவண்ணா மலைக்கு வெளியே செல்லும் வாகனங்கள் அனைத்தும் அவலூர்பேட்டை சாலை வழியாக சென்று வருகின்றன.
அந்த சாலையில் ரெயில்கள் செல்லும் பாதை அமைந்துள்ளதால் அடிக்கடி ரெயில்வே கேட் மூடப்படுகிறது. இருபுறங்களிலும் வாகனங்கள் நிற்கிறது.
அப்போது அவசர வேலையாக செல்பவர்கள் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டு வருகிறது. இந்த நேரத்தில் மணிக்கணக்கில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
பள்ளிகள் திறந்து செயல்பட்டு வரும் சூழ்நிலையில் பள்ளிக்கு வரும் மாணவர்களும், மருத்துவமனைக்கு செல்லும் ஆம்புலன்ஸ் வாகனங்களும் பாதிக்கப்படுகின்றனர்.
மேம்பாலம் கட்டி முடிக்கப்பட்ட நிலையில் திறக்கப்படாமல் இருப்பதால் சுமார் 3 முதல் 4 கிலோ மீட்டர் தூரம் வரை வாகனங்கள் சுற்றி செல்வதால் பெட்ரோல் மற்றும் டீசல் செலவு அதிகமாக ஏற்படுவதோடு கால விரயத்தால் பொதுமக்கள் மிகவும் இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர்.
திருவண்ணாமலையில் 2ஆண்டுகளுக்கு பிறகு பக்தர்கள் பவுர்ணமி கிரிவலம் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளதால் கிரிவலம் செல்ல வரும் பக்தர்கள் மிகவும் அல்லல்பட வேண்டிய சூழ்நிலை உள்ளது.
எனவே பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள், ஆன்மீக பக்தர்கள் நலன் கருதி மாவட்ட நிர்வாகம் உடனடியாக இந்த பிரச்சனையில் தலையிட்டு மேம்பாலத்தை உடனடியாக திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் பாரதிய ஜனதா கட்சி சார்பில் மேம்பாலத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Next Story






