என் மலர்
திருவண்ணாமலை
வெம்பாக்கம் அருகே சமையல் செய்த போது சேலையில் தீப்பிடித்து மூதாட்டி பரிதாபமாக இறந்தார்.
செய்யாறு:
வெம்பாக்கம் அடுத்த மூஞ்சூர்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் பொன்னுசாமி. இவரது மனைவி காஞ்சனா (வயது 61). விவசாயக் கூலி வேலை செய்து வந்தார்.
இவர் கடந்த மாதம் 24-ந் தேதி மாலை வீட்டிற்கு வெளியில் உள்ள விறகு அடுப்பில் சமையல் செய்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக சேலையில் தீப்பிடித்து.
இதில் உடல் முழுவதும் தீ காயம் ஏற்பட்டு அலறி துடித்தார். இதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு செய்யாறு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி காஞ்சனா நேற்று பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து பிரம்மதேசம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் 1,366 குடும்பத்தினருக்கு கொரோனா நிவாரணம் வழங்கப்பட்டுள்ளதாக கலெக்டர் முருகேஷ் தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை கலெக்டர் முருகேஷ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் வாரிசுகளுக்கு கருணை தொகை வழங்குவதற்கு ஷ்ஷ்ஷ்.௴ஸீ.ரீஷீஸ்.வீஸீ என்ற இணையதளம் மூலம் மனுக்கள் பெறப்பட்டு மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள இறப்பை உறுதி செய்யும் குழுவின் மூலம் பரிசோதிக் கப்பட்டு வருகிறது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் இதுவரை 1,665 மனுக்கள் பெறப்பட்டு 1,366 மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு ரூ.50 ஆயிரம் வீதம் வழங்கப்பட்டு உள்ளது. மேலும் 115 மனு இருமுறை பெறப்பட்ட மனு என்ற அடிப்படையில் நிராகரிக் கப்பட்டது.
இந்த நிலையில் உச்ச நீதிமன்றம் கடந்த மார்ச் 20-ந் தேதிக்கு முன்னர் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு நிவாரணம் கோரும் மனுதாரர்கள் வரும் 60 நாட்களுக்குள் சமர்ப் பிக்க வேண்டும். அதாவது வருகிற மே மாதம் 18-ந் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
கடந்த மார்ச் 20-ந் தேதி முதல் ஏற்பட்ட இழப்புகளுக்கு நிவாரணம் கோரும் மனுதாரர்கள் இறப்பு நிகழ்ந்த 90 நாட்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும். சமர்ப்பிக்கப்பட்ட மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட நிர்வாகம் 30 நாட்களுக்குள் தீர்வு காண வேண்டும்.
இந்த கால கெடுவிற்குள் நிவாரணம் கோரி மனு சமர்ப்பிக்க இயலாதவர்கள் அது குறித்து மாவட்ட வருவாய் அலுவலரிடம் முறையீடு செய்து கொள்ளலாம்.
இவ்வாறு பெறப்படும் முறையீட்டு மனுவினை ஒவ்வொன்றாக தகுதியின் அடிப்படையில் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையிலான குழு பரிசீலனை செய்து தேர்வு செய்யும்.
எனவே கொரோனா தொற்று காரணமாக இறந்தவரின் குடும்பத்தினர் உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின்படி உரிய காலத்தில் மனு செய்து நிவாரணம் பெற்று பயன்பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
திருவண்ணாமலையில் 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்துறை நியமன அலுவலர்கள் திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலை:
தமிழ்நாடு வருவாய்த்துறை குரூப் - 2 நேரடி நியமன அலுவலர்கள் சங்கம் சார்பில் 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். 8.4.2009 முதல் அனைத்து மாவட்டங்களிலும் எந்தவித குழப்பங்களுக்கும் இடமளிக்காமல் ஒரே சீரான வடிவத்தில் துணை தாசில்தார் பட்டியல்கள் மறுவரையறை செய்து வெளியிடப்படுவதை உறுதி செய்திட வேண்டும். அதனடிப்படையில் திருத்திய தாசில்தார், துணை கலெக்டர் பட்டியல்களை வெளியிட வேண்டும்.
2019&ம் ஆண்டு முதல் 12.3.2019 நாளிட்ட தீர்ப்பின்படி தகுதியான நபர்களை இடம்பெறச் செய்து அனைத்து மாவட்டங்களிலும் துணை தாசில்தார் பதவி உயர்வு பட்டியலை வெளியிட்டு துணை தாசில்தார் பதவி உயர்வு வழங்கிட வேண்டும்.
வருவாய்த்துறையில் தற்போதைய அதிகமான பணிச்சுமை கருத்தில்கொண்டு அனைத்து சமூக பாதுகாப்புத் திட்ட தாசில்தார் அலுவலகங்களில் ஒரு துணை தாசில்தார் பணியிடமும் மற்றும் ஒவ்வொரு வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்களில் உள்ள பிறப்பு இறப்பு பதிவு மனுக்களுக்கு விரைந்து தீர்வு காணவும், பேரிடர் மேலாண்மை தொடர்பான பணிகளை செயல்படுத்தவும் துணை தாசில்தார் நிலையில் ஒரு பணியிடம் உருவாக்க நடவடிக்கை எடுத்திட வேண்டும்.
நேரடி நியமன உதவியாளருக்கு அமைச்சுப்பணி சிறப்பு நிதி வருவாய் ஆய்வாளர் பயிற்சி உள்ளிட்ட அனைத்து பயிற்சிகளையும் அடுத்தடுத்து 5ஆண்டுக்குள் முறையாக வழங்க வேண்டும்.
மேலும் 5 ஆண்டுகள் பயிற்சி முடித்த நேரடி நியமன உதவியாளருக்கு பயிற்சி முடிவுற்றவுடன் உயர்த்தப்பட்ட ஊதியம் வழங்கிட வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் சங்க மாவட்ட தலைவர், மாவட்ட செயலாளர், மாவட்ட பொருளாளர் மற்றும் நிர்வாகிகள், உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
விவசாய பாசனத்திற்காக சாத்தனூர் அணையில் நாளை தண்ணீர் திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை மாவட்டம் விவசாய மாவட்டமாக திகழ்கிறது. இங்கு சாத்தனூர் அணையை நம்பி திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் 50 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் உள்ளன.
அதோடு திருக்கோவிலூர் பழைய ஆயக்கட்டு பகுதியில் 5 ஆயிரம் ஏக்கர் பரப்பும், 105 ஏரிகளும், சாத்தனூர் அணையால் நேரடியாக பயன்பெறுகின்றன.
இந்நிலையில் கடந்த ஆண்டு தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை ஆண்டு சராசரியை விட அதிகமாக பெய்தது.ஆனாலும் சாத்தனூர் அணை 20 அடி உயரமுள்ள நீர்ப்போக்கி மதகுகள் சீரமைக்கும் பணி நடைபெறுவதால் அணையின் முழு கொள்ளளவு நீர் நிரப்ப முடியவில்லை.
எனவே அணையின் மொத்த நீர்மட்டம் உயரமான 119 அடியில் தற்போது 10.80 அடியும், மொத்த கொள்ளளவான 7,321 மில்லியன் கன அடியில் தற்போது 3,441மில்லியன் கன அடியும் மட்டுமே நீர் இருப்பு உள்ளது.
எனவே சாத்தனூர் அணையிலிருந்து நேரடி பாசனத்திற்கு இந்த ஆண்டும் தண்ணீர் திறக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் ஏரிகளுக்கு மட்டும் தண்ணீர் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி விவசாயிகளிடம் ஏற்கனவே நடத்தப்பட்ட கருத்துக் கேட்பு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி சாத்தனூர் அணையிலிருந்து நாளை (4-ந்தேதி) முதல் பாசனத்திற்கு தண்ணீர் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
அடுத்த மாதம் 19-ந் தேதி வரை தொடர்ந்து 45 நாட்களுக்கு அணையின் வலது மற்றும் இடது புற கால்வாய் வழியாக தண்ணீர் திறக்கப்படும்.
அணையில் தற்போது உள்ள நீர் இருப்பு 3,441மில்லியன் கன அடியில் திருக்கோவிலூர் பழைய ஆயக்கட்டு பரப்புக்கு 800 மில்லியன் கனஅடி, அணை குடியிருப்புகளுக்கு குடிநீர், பூங்கா பராமரிப்பு மற்றும் மீன் வளர்ப்பு ஆகியவற்றுக்கு 307.42 மில்லியன் கன அடி நீர் தேவைப்படுகிறது.
மேலும் ஆவியாதல் போன்றவற்றால் 344.10 மில்லியன் கனஅடி நீர் இழப்பு ஏற்படும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. திருவண்ணாமலை, தானிப்பாடி, சாத்தனூர் கூட்டு குடிநீர் திட்டம் மற்றும் புதுப்பாளையம் நகராட்சி மற்றும் கூட்டு குடிநீர் திட்டம் ஆகியவற்றுக்கு அடுத்த 11 மாதங்களுக்கு 322.24 மில்லியன் கன அடி நீர் தேவைப்படுகிறது.
மேலும் அணையில் தூர் வாரினால் நீரிழப்பு 500 மில்லியன் கனஅடி என கணக்கிடப்பட்டுள்ளது.
எனவே இது போன்ற தேவைகளுக்காக நீரை இருப்பு வைத்து போக மீதமுள்ள நீர் மட்டுமே விவசாய பாசனத்திற்கு தற்போது திறந்து விடப்படும்.அதன் பின்னர் வலது புற கால்வாய் வழியாக வினாடிக்கு 622.80 மில்லியன் கன அடியும், இடதுபுற கால்வாய் வழியாக விநாடிக்கு 544.32 மில்லியன் கன அடியும் நாளை முதல் திறக்கப்படும்.
அதன்மூலம் திருவண்ணாமலை மாவட்டத்தில் 34 ஏரிகள், விழுப்புரம் மாவட்டத்தில் 56 ஏரிகள் மற்றும் விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் பழைய ஆயக்கட்டு மூலம் 15 ஏரிகள் உள்பட மொத்தம் 105 ஏரிகளுக்கு தண்ணீர் கிடைக்கும்.
மேலும் இரண்டு மாவட்டங்களிலும் 12 ஆயிரத்து 543 ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆரணியில் பஸ் படிக்கட்டில் தொங்கும் மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.
ஆரணி:
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் பகுதியில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகள் இயங்கி வருகின்றன.
மேலும் இந்த பள்ளிகளில் ஆரணி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான மாணவ மாணவிகள் அரசு பஸ்கள் மற்றும் தனியார் பஸ்கள் மூலம் தினமும் பள்ளிக்கு வந்து செல்கின்றனர்.
இந்நிலையில் பள்ளி நேரங்களில் அரசு பஸ்கள் போதிய அளவு இயக்கபடுவதில்லை என்று தெரிகின்றன.
இதனால் மாணவ மாணவிகள் அரசு பஸ்களில் இலவசமாக பயணம் செய்வதற்கு நீண்ட நேரம் காத்திருந்து படியில் தொங்கியபடியும் பயணம் செய்கின்ற சூழ்நிலை ஏற்படுகின்றன.
மாணவர்கள் அரசு பேருந்து மற்றும் தனியார் பேருந்துகளில் படியில் தொங்கியபடியும் பஸ்சின் கம்பியில் தொங்கியவாறு செல்லும் காட்சி சமூக வளைதலங்களில் வைரலாக பரவியதையடுத்து ஆரணி ஆர்.டி.ஒ சரவணன் தலைமையில் காவல்துறை மற்றும் பஸ் பணிமனை மேலாளர்கள் கூட்டம் ஆரணி போக்குவரத்து ஆர்.டி.ஒ அலுவலத்தில் ஆரணி டி.எஸ்.பி கோட்டீஸ்வரன் முன்னிலை யில் நடைபெற்றது.
இதில் பஸ்களில் ஆபத்தான முறையில் படியில் தொங்கி செல்லும் மாணவர்களை கண்டறிந்து பள்ளி மூலம் டி.சி வழங்கி ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கபடும் என்று ஆரணி டி.எஸ்.பி கோட்டீஸ்வரன் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் ஆரணி வந்தவாசி சேத்பட் உள்ளிட்ட பகுதியில் உள்ள போக்குவரத்து பணிமனை மேலாளர்கள் பங்கேற்றனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் யூரியா தட்டுப்பாட்டை உருவாக்குவதாக விவசாயிகள் கண்களைக் கட்டிக்கொண்டு நூதனப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த 2 மாத காலமாக யூரியா தட்டுப்பாடு தொடர்ந்து நீடித்து வருகிறது. இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் யூரியா தட்டுப் பாடு பிரச்சினைக்கு தீர்வுகாண வலியுறுத்தி திருவண்ணாமலை வேளாண்மை இணை இயக்குனர் அலுவலகம் முன்பு நேற்று விவசாயிகள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்திற்கு என்.ஆர்.உழவர் பேரவை மாவட்டத் தலைவர் வாக்கடை புருஷோத்தமன் தலைமை தாங்கினார்.
இந்த போராட்டத்தின் போது, புருஷோத்தமன் தனது கண்களை துணியால் கட்டி மறைத்து கொண்டு யூரியா எங்கே? என்று தேடுவது போன்றும், மற்ற விவசாயிகள் யூரியா கிடைக்காது என்று தெரிவித்து புருஷோத்தமன் மீது வண்ண பொடிகளை வீசி நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து விவசாயிகள் கூறுகையில், திருவண்ணா மலை மாவட்டத்தில் 4 லட்சம் ஏக்கரில் விவசாயபயிர்கள் சாகுபடி செய்யப்படுகிறது. இதற்காக ஏக்கருக்கு இரண்டு மூட்டை யூரியா வீதம் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.
ஆனால் உர விற்பனை கடைகளில் ரூ 300 க்கும் விற்பனை செய்யவேண்டிய யூரியாவை ரூ 700 முதல் ரூ 800 வரை விற்பனை செய்கின்றனர்.
குறைந்த விலையில் கிடைக்க வேண்டிய யூரியா தங்களுக்கு கிடைக்காத நிலையில் விவசாயிகள் மிகவும் பாதிக்கப் பட்டுள்ளனர். ஆனால் யூரியாவை தனியார் நிறுவனங்கள் வாங்கி கலப்படம் செய்து விற்பனை செய்து வருகின்றன.
யூரியா உரத்துக்கு செயற் கையான தட்டுப்பாட்டை உருவாக்கி உள்ளனர்.இதுபற்றி கேட்டால் விவசாயிகள் தங்கள் வேலைக்கு இடையூறு செய்வதாக வேளாண் அலுவலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
எனவே இந்த பிரச்சினையில் உரிய நடவடிக்கை எடுத்து யூரியாவை அதிக விலைக்கு விற்பனை செய்யும் கடைகளின் உரிமத்தை நிரந்தரமாக ரத்து செய்ய வேண்டும். தற்காலிக உரிமம் ரத்து என்பது கண்துடைப்பு நடவடிக்கை ஆகும்.
மேலும் ஒவ்வொரு உரகடையிலும் இருப்பு விவரங்களை எழுதி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
செங்கம் அருகே பல ஆண்டுகளாக சீரமைக்காத சாலையால் கிராம மக்கள் அவதிடைந்துள்ளனர்.
செங்கம்:
செங்கம் ஒன்றியத்திற் குட்பட்ட கரியமங்கலம் ஊராட்சிக் குட்பட்ட கரியமங்கலம், மேல்கரிய மங்கலம், அண்டப்பேட்டை வழியாக பேயாளம்பட்டு, அம்மனூர் வரை செல்லும் சாலை பல வருடங்களாக பழுதடைந்து போக்கு வரத்திற்கு பயன்படுத்த முடியாத சூழல் நிலவி வருகிறது.
கரியமங்கலம் ஊராட்சிக் குட்பட்ட மேல்கரியமங்கலம், அண்டப்பேட்டை பகுதி மக்கள் தங்கள் அன்றாட தேவைகளுக்காகவும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் உள்பட விவசாயம் சார்ந்த பொருட்களை சந்தைப்படுத்த அப்பகுதி மக்கள் கிராமத்தில் இருந்து வெளியே செல்ல வேண்டும் என்றால் இந்த சாலையை பயன்படுத்தி செல்ல வேண்டிய சூழல் உள்ளது.
கடந்த சில வருடங்களாக அவசர தேவைக்கு கூட வேகமாக கடந்து செல்ல முடியாத சூழல் நிலவுகிறது. கரியமங்கலம் தொடங்கி மேல்கரியமங்கலம், அண்டப் பேட்டை, பேயாளம்பட்டு மற்றும் அம்மனூர் கூட்ரோடு செல்லும் சாலையை சீரமைத்து தரமான புதிய சாலைகள் அமைத்து தர வேண்டும் என அப்பகுதி கோரிக்கை வடுத்து வருகின்றனர். ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் மற்றும் சம்பந்தப்பட்ட துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அப்பகுதி மக்கள் தரப்பில் கூறப்படுகிறது.
இது குறித்து மாவட்ட நிர்வாகம் தலையிட்டு உடனடியாக சம்பந்தப்பட்ட ஊராட்சிக் குட்பட்ட சாலைகளை சீரமைத்து புதிய தரமான சாலைகள் அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
திருவண்ணாமலையில் புதிதாக சிப்காட் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கலெக்டர் ஆபீசிற்கு சீர் வரிசை பொருட்கள் கொண்டு வந்து கிராம மக்கள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை அருகில் உள்ள பாலியப்பட்டு கிராமத்தில் புதிதாக சிப்காட் அமைப்பதற்காக நிலம் கையகப்படுத்த முடிவு செய்து அதற்கான இடத்தை அதிகாரிகள் குழுவினர் பார்வையிடப்பட்டனர்.
இதுபற்றி அறிந்த பாலியப்பட்டு கிராம மக்கள் சிப்காட் அமைக்க கடும் எதிர்ப்பு தெரிவித்து கடந்த 100நாட்களாக பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.
காத்திருப்பு போராட்டம், மனித சங்கிலி, கிரிவலம் சென்று மனு கொடுக்கும் போராட்டம் போன்று பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் பாலியப்பட்டு கிராம மக்கள் சார்பில் நேற்று 100-வது நாளாக காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. தொடர்ந்து 100 நாட்களாக தாங்கள் போராட்டம் நடத்தியும் அதிகாரிகள் யாரும் தங்களை நேரில் வந்து பார்க்கவில்லை என்பதால் வேதனை அடைந்த கிராம மக்கள் திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்துக்கு கோரிக்கை மனுவுடன் வந்து அதிகாரிகளுக்கு சீர்வரிசை பொருட்கள் வழங்கும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்திற்கு பா.ம.க. ஒன்றிய கவுன்சிலர் குட்டி தலைமை தாங்கினார். முன்னதாக கிராம மக்கள் கலெக்டர் அலுவலகம் அருகில் உள்ள அறிவியல் பூங்கா முன்பு இருந்து கலெக்டர் அலுவலகத்திற்கு ஊர்வலமாக வந்தனர். அப்போது அவர்கள் பாலியப்பட்டு பகுதியில் விளைந்த காய்கறி, பூ, நெல், மணிலா போன்றவற்றை தட்டில் சீர்வரிசை கொண்டு வருவது போன்று கொண்டுவந்தனர்.
இதையொட்டி கலெக்டர் அலுவலகம் நுழைவு வாயில் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு அண்ணாதுரை தலைமையிலான போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது கோரிக்கை மனுவை மட்டும் எடுத்து செல்லுங்கள்.மற்ற பொருட்கள் கொண்டு செல்ல கூடாது என்றும், குறிப்பிட்ட நபர்கள் மட்டும் செல்ல வேண்டும் என்றும் போலீசார் கண்டிப்புடன் கூறினர்.
இதையடுத்து பாலியப்பட்டு கிராம மக்கள் நுழைவு வாயில் முன்பு தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்களை போலீசார் கலெக்டர் அலுவலகத்திற்குள் செல்ல அனுமதித்தனர்.
பின்னர் மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி நேரில் வந்து கிராம மக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்று கொண்டார்.
அப்போது அவர்கள், 100 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றோம். அரசு அதிகாரிகள் யாரும் எங்களை வந்து பார்க்கவில்லை.
கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தும் எந்தவித பதிலும் வரவில்லை. இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். மேலும் விவசாயிகள் சீர்வரிசையாக கொண்டு வந்த காய்கறி, பூ, நெல் உள்ளிட்ட பொருட்களை அவரிடம் வழங்கினர். அதனை அவர் பெற்று கொண்டார்.
ஆனால் அவை கலெக்டர் அலுவலக வாசலிலேயே வைக்கப்பட்டது. இந்த போராட்டத்தினால் கலெக்டர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
திருவண்ணாமலை நகராட்சி பகுதியில் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் வலியுறுத்தினர்.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை நகராட்சி அலுவலகத்தில் முதல் நகர்மன்றக் கூட்டம் நடைபெற்றது. நகர்மன்றத் தலைவர் நிர்மலா வேல்மாறன் தலைமை தாங்கினார். நகராட்சி ஆணையர் பார்த்தசாரதி, துணைத் தலைவர் ராஜாங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகராட்சி பொறியாளர் நீலேஸ்வர் வரவேற்றுப் பேசினார்.
நேற்று நடைபெற்றது நகராட்சியின் முதல் கூட்டம் என்பதால் கலந்துகொண்ட வார்டு உறுப்பினர்கள் முதலில் தங்களை அறிமுகம் செய்துகொண்டு தங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்தனர்.
மேலும் கூட்டத்தில் வார்டு உறுப்பினர்கள் பேசும்போது:-
தங்கள் பகுதிகளில் அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும். குடிநீர், சாலை வசதிக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதைத்தொடர்ந்து நகராட்சி தலைவர் நிர்மலா வேல்மாறன் பேசும்போது:-
நகராட்சி உறுப்பினர்கள் விடுத்த அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும் என்று உறுதி அளித்தார்.
கூட்டத்தில் நகராட்சி கடைகளை ஒட்டி உள்ள தனியார் கடைகளின் வாடகை அளவிற்கு நகராட்சி கடைகளின் வாடகை குறைத்து நிர்ணயம் செய்ய வேண்டும்.
நகராட்சி வருமானம் உயரவும், வியாபாரிகளின் வாழ்வாதாரம் பாதிக்காமல் இருக்கவும் கடைவாடகையை முறைப்படுத்தி தரவேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுப்பது, காலியாக உள்ள 95 கடைகளை பொதுஏலம் விடுவது, போதிய அளவு குடிநீர் குழாய்கள், ஆழ்துளை கிணறுகள் சீரமைப்பது, குடிநீர் தொட்டி, கால்வாய், சிறுபாலங்கள் அமைப்பது உள்ளிட்ட பணிகளுக்கு நிதி ஒதுக்குவது என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
இந்த கூட்டத்தில் அ.தி.மு.க. வார்டு உறுப்பினர் மருத்துவர் பழனி பேசும் போது, தி.மு.க. உறுப்பினர்களின் வார்டு பகுதிகளில் செயல்படுத்தும் திட்டப்பணிகளை அ.தி.மு.க.வார்டு உறுப்பினர் பகுதிகளிலும் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எனது வார்டு பகுதியில் ஒரு நாள் விட்டு ஒரு நாள் குடிநீர் சப்ளை செய்யப்பட்டது.ஆனால் தற்போது மூன்று அல்லது நான்கு நாட்களுக்கு ஒரு முறைதான் குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது.
இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.எனவே மக்களின் குடிநீர் தேவையை தீர்த்து வைக்கும் வகையில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அமைச்சர் எ.வ.வேலு, தெரிவித்தது போல அனைத்து வார்டுபகுதிகளிலும் சமமாக திட்ட பணிகளை நிறைவேற்றி நகராட்சி பகுதியில் வசிக்கும் மக்கள் பயன்பெற செய்ய வேண்டும் என்றார்.
இந்த கூட்டத்தில் தி.மு.க., அ.தி.மு.க. வார்டு உறுப்பினர்கள், சுயேச்சை உறுப்பினர் ஸ்ரீதேவி பழனி உள்பட அனைத்து வார்டு உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
கோடை வெயில் அதிகரித்து வருவதால் திருவண்ணாமலை வனப்பகுதியில் குடிநீர் தொட்டிகளில் தண்ணீர் நிரப்பப்படுகிறது.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலை அடுத்து அண்ணாமலை அமைந்துள்ள பகுதி வனப் பகுதியாக விளங்குகிறது. இந்த வனப்பகுதியில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மான்கள் மற்றும் காட்டுப்பன்றிகள், பாம்புகள், குரங்குகள், செந்நாய் உள்ளிட்ட பல்வேறு விலங்குகள் வசித்து வருகின்றன.
இந்த வனவிலங்குகளை பாதுகாக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். காலை, மாலை நேரங்களில் வந்து சேர்ந்தது வனவிலங்கு வேட்டை ஈடுபடுபவர்களை பிடித்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மேலும் அத்துமீறி வனப்பகுதியில் நுழைப்பவர்களுக்கு ரூ.25 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் தற்போது கோடை காலம் தொடங்கியுள்ளதால் 100 டிகிரி வரை வெயில் கொளுத்தி வருகிறது.இதனால் வனப்பகுதியில் உள்ள குளம் ,குட்டைகள் வறண்டு வருகின்றன. இதன்காரணமாக சில மான்கள் தண்ணீர் தேடி வனப்பகுதியை விட்டு வெளியில் வருவதாக கூறப்படுகிறது.
கிரிவலப்பாதையில் குடிநீர் தொட்டிகளை தேடிவரும் மான்களை கிரிவலம் வரும் பக்தர்கள் கண்டு மகிழ்கின்றனர்.
இந்த நிலையில் தண்ணீர் தேடி வெளியில் வரும் மான்களை நாய்கள் கடித்து கொல்லும் சூழ்நிலை நிலவுவதால் வனப்பகுதியில் உள்ள 25 குடிநீர் தொட்டிகளில் வாகனங்கள் மூலம் தண்ணீர் கொண்டு சென்று நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வன ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுதொடர்பாக வனச்சரக அலுவலர் சீனுவாசனிடம் கேட்டபோது, கோடை காலம் தொடங்கி உள்ள நிலையில் பல குளம் குட்டைகளில் தண்ணீர் இருந்த போதும் சில இடங்களில் வனவிலங்குகளுக்கு தண்ணீர் கிடைக்காத சூழ்நிலை நிலவுகிறது. அதனை கருத்தில் கொண்டு வனவிலங்குகளுக்கு அமைக்கப்பட்ட 25 குடிநீர் தொட்டிகளில் தண்ணீர் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் .
தற்போது வேலூர் வனபாதுகாவலர் சுஜாதா அறிவுரையின் பேரில் திருவண்ணாமலை மாவட்ட வன அலுவலர் அருண்லால் ஆலோசனைப் படி வனப்பகுதியில் 2000 பழம் தரும் மரக்கன்றுகள் நடப்பட்டு அவைகளுக்கு தண்ணீர் பாய்ச்சி பாதுகாக்கும் பணிகள் நடந்து வருகிறது.
வனப்பகுதியில் உள்ள பழமரங்கள் கனிகளைத் தரும் காலம் வரும்போது குரங்குகள் தங்களுக்கு தேவையான இரைகளை வனப் பகுதியிலேயே தேடிக் கொள்ளும். இரைக்காக சாலைகளுக்கு வரும் அவசியம் இருக்காது என்றார்.
வந்தவாசி அருகே ஸ்ரீ தவளகிரி ஈஸ்வரர் மலையில் பற்றி எரிந்த தீயில் அரிய வகை மூலிகை செடிகள், மரங்கள் கருகியது.
வந்தவாசி:
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த வெண்குன்றம் கிராமத்தில் உள்ள ஸ்ரீ தவளகிரி ஈஸ்வரர் மலையில் மர்ம நபர்கள் தீ வைத்ததால் அரிய வகை மூலிகைச் செடிகள் மரங்கள் தீயில் எரிந்து நாசமானது.
வந்தவாசி அடுத்த வெண்குன்றம் கிராமத்தில் 1440 அடி உயரத்தில் ஸ்ரீ தவளகிரி ஈஸ்வரர் மலை உள்ளது. இந்த மலையில் அரியவகை மூலிகைச் செடிகள் மரங்கள் உள்ளன.
இந்த நிலையில் மர்ம நபர்கள் சிலர் மலையில் தீ வைத்துள்ளனர். இதனால் மாலையின் ஒரு பகுதி மளமளவென தீ கொழுந்து விட்டு எரிந்தது.
மலையில் உள்ள அரிய வகை மூலிகைச் செடிகள், மரங்கள் தீயில் எரிந்து கருகியது. மலையில் தீ பற்றியது குறித்து வனக் காவலர்களுக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர்.
தீயணைப்பு துறை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்தபோது மலை முழுவதும் கொழுந்து விட்டு எரிந்ததால் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க முடியாமல் தவித்து நின்றனர்.
கோடை காலங்களில் மலை மீது தீ வைக்கும் இது போன்ற சம்பவங்கள் தொடர்கதையாகி வருகிறது. போலீசார் மலை மீது தீ வைத்த மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
வெம்பாக்கம் அருகே வாகனம் மோதி பெண் பரிதாபமாக இறந்தார்.
வெம்பாக்கம்:
திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் தாலுகா மாங்கால் கிராமம் குளக்கரை தெருவை சேர்ந்தவர் சுந்தரம். இவரத மனைவி சாந்தி (வயது 34) இன்று அதிகாலை மாங்கால் மெயின் ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தனர்.
அப்போது அடையாளம் தெரியாத வாகனம் அவர் மீது எதிர்பாராத விதமாக மோதி இவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
தகவல் அறிந்த தூசி போலீசார் உடலை மீட்டு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






