என் மலர்
உள்ளூர் செய்திகள்

திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்திற்கு காய்கறிகளை சீர்வரிசையாக கொண்டு வந்த கிராம மக்கள்.
திருவண்ணாமலையில் புதிதாக சிப்காட் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் நூதன போராட்டம்
திருவண்ணாமலையில் புதிதாக சிப்காட் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கலெக்டர் ஆபீசிற்கு சீர் வரிசை பொருட்கள் கொண்டு வந்து கிராம மக்கள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை அருகில் உள்ள பாலியப்பட்டு கிராமத்தில் புதிதாக சிப்காட் அமைப்பதற்காக நிலம் கையகப்படுத்த முடிவு செய்து அதற்கான இடத்தை அதிகாரிகள் குழுவினர் பார்வையிடப்பட்டனர்.
இதுபற்றி அறிந்த பாலியப்பட்டு கிராம மக்கள் சிப்காட் அமைக்க கடும் எதிர்ப்பு தெரிவித்து கடந்த 100நாட்களாக பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.
காத்திருப்பு போராட்டம், மனித சங்கிலி, கிரிவலம் சென்று மனு கொடுக்கும் போராட்டம் போன்று பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் பாலியப்பட்டு கிராம மக்கள் சார்பில் நேற்று 100-வது நாளாக காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. தொடர்ந்து 100 நாட்களாக தாங்கள் போராட்டம் நடத்தியும் அதிகாரிகள் யாரும் தங்களை நேரில் வந்து பார்க்கவில்லை என்பதால் வேதனை அடைந்த கிராம மக்கள் திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்துக்கு கோரிக்கை மனுவுடன் வந்து அதிகாரிகளுக்கு சீர்வரிசை பொருட்கள் வழங்கும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்திற்கு பா.ம.க. ஒன்றிய கவுன்சிலர் குட்டி தலைமை தாங்கினார். முன்னதாக கிராம மக்கள் கலெக்டர் அலுவலகம் அருகில் உள்ள அறிவியல் பூங்கா முன்பு இருந்து கலெக்டர் அலுவலகத்திற்கு ஊர்வலமாக வந்தனர். அப்போது அவர்கள் பாலியப்பட்டு பகுதியில் விளைந்த காய்கறி, பூ, நெல், மணிலா போன்றவற்றை தட்டில் சீர்வரிசை கொண்டு வருவது போன்று கொண்டுவந்தனர்.
இதையொட்டி கலெக்டர் அலுவலகம் நுழைவு வாயில் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு அண்ணாதுரை தலைமையிலான போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது கோரிக்கை மனுவை மட்டும் எடுத்து செல்லுங்கள்.மற்ற பொருட்கள் கொண்டு செல்ல கூடாது என்றும், குறிப்பிட்ட நபர்கள் மட்டும் செல்ல வேண்டும் என்றும் போலீசார் கண்டிப்புடன் கூறினர்.
இதையடுத்து பாலியப்பட்டு கிராம மக்கள் நுழைவு வாயில் முன்பு தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்களை போலீசார் கலெக்டர் அலுவலகத்திற்குள் செல்ல அனுமதித்தனர்.
பின்னர் மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி நேரில் வந்து கிராம மக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்று கொண்டார்.
அப்போது அவர்கள், 100 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றோம். அரசு அதிகாரிகள் யாரும் எங்களை வந்து பார்க்கவில்லை.
கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தும் எந்தவித பதிலும் வரவில்லை. இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். மேலும் விவசாயிகள் சீர்வரிசையாக கொண்டு வந்த காய்கறி, பூ, நெல் உள்ளிட்ட பொருட்களை அவரிடம் வழங்கினர். அதனை அவர் பெற்று கொண்டார்.
ஆனால் அவை கலெக்டர் அலுவலக வாசலிலேயே வைக்கப்பட்டது. இந்த போராட்டத்தினால் கலெக்டர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Next Story






