என் மலர்tooltip icon

    திருவண்ணாமலை

    பிரசன்ன ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
    சேத்துப்பட்டு:

    திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு தாலுகா மதுரை பெரூம்பட்டூர் பிரசன்ன ஆஞ்சநேயர் கோவில் புதிதாக புதுப்பிக்கப்பட்டு கோவில் முன்பு மண்டபம் கட்டப்பட்டு பஞ்சவர்ணம் தீட்டி இதன் மகா கும்பாபிஷேக விழா நடந்தது.

    கோவிலின் முன்பு யாகசாலை அமைத்து 108 கலசம் வைத்து பல்வேறு நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீரை வைத்து 3 யாக குண்டங்கள் அமைத்து நெய், பழங்கள், மற்றும் பல்வேறு மூலிகைகள், மூலம் 3 கால யாக பூஜைகள் செய்யப்பட்டது. 

    பின்னர் மேளதாளத்துடன் புனிதநீர் கலசத்தை கோவிலை சுற்றி வந்து கோவில் விமானம் கோபுரத்தின் மீது உள்ள கலசத்தின் புனித நீரை ஊற்றினர். பின்னர் அங்கு கூடியிருந்த பக்தர்கள் மீது புனித நீரைத் தெளித்தனர்.

    இதில் சுற்றுப்புற கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் அனை வருக்கும் அன்ன தானம் வழங்கப்பட்டது. 

    இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.
    போளூரில் கார்- லாரி மோதிய விபத்தில் கிரிவலம் சென்று திரும்பிய டிரைவர் பரிதாபமாக இறந்தார்.
    போளூர்:

    வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த மேலப்பட்டு பகுதி ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் சேகர் (வயது 68), காவேரி (65), ராம்பிரகாஷ் (28), மோகனப்பிரியா (26). இவர்கள் அனைவரும் திருவண்ணாமலைக்கு கிரிவலம் செல்ல காரில் சென்றனர். 

    காரை ரமேஷ் என்பவர் ஓட்டினார். கிரிவலம் சென்று விட்டு மீண்டும் திருவண்ணாமலையிலிருந்து வேலூர் நோக்கி வந்தனர். அப்போது வெண்மணி என்ற இடத்தில் வந்தபோது எதிரே வந்த சரக்கு லாரி மீது எதிர்பாராதவிதமாக கார் மோதி விபத்துக்குள்ளானது. 

    இதில் ரமேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். படுகாயமடைந்த 2 பேரை போளூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். 

    இதுகுறித்து போளூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருவண்ணாமலையில் தீர்த்த குளத்தில் மூழ்கி பலியானவர் உடல் மீட்கப்பட்டது.
    திருவண்ணாமலை:

    சென்னை ஈச்சம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் வீரமணி (வயது40) கார்டிரைவர். இவருக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.வீரமணிக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததால் அவரது மனைவி அவரை பிரிந்து சென்று விட்டார். 

    இதனைத் தொடர்ந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு வீரமணி புதுச்சேரி சென்று அங்கு வசித்து வந்தார். பின்னர் காவி ஆடைகள் அணிந்து சாமியார் போல இருந்து வந்துள்ளார்.

    நேற்று முன்தினம் சென்னையில் உள்ள தனது தம்பி நல்லையா என்பவரை சந்தித்து அவரையும் புதுச்சேரிக்கு அழைத்துச் சென்றுள்ளார். பின்னர் நேற்று காலை அண்ணனும் தம்பியும் திருவண்ணாமலைக்கு வந்துள்ளனர். 

    அவர்கள் செங்கம் சாலையில் உள்ள சிங்கமுக தீர்த்த குளக்கரைக்கு சென்றனர். காலை 10 மணி அளவில் தீர்த்தகுளத்தில் குளிக்க சென்ற வீரமணி தண்ணீரில் மூழ்கி விட்டார். 

    இதனைக்கண்ட தம்பி நல்லையா தீர்த்த குளத்தில் குதித்து அண்ணனைக் காப்பாற்ற முயன்றுள்ளார். குளத்தில் தண்ணீர் அதிகமாக இருந்ததால் அவரால் வீரமணியை காப்பாற்ற முடியவில்லை. 

    உடனே இதுபற்றி போலீசுக்கு தகவல் தெரிவித்தார். இதை தொடர்ந்து போலீசார் கொடுத்த தகவலின் பேரில் தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து குளத்தில் மூழ்கி பலியான வீரமணி உடலை நேற்று பல மணி நேரம் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. 

    இதை தொடர்ந்து இன்று காலை மீன்வள உதவியாளர்கள் சரவணன், சிவக்குமார் உள்ளிட்டோர் சிங்கமுக தீர்த்த குளத்தில் இறங்கி வீரமணி உடலை சுமார் 30 நிமிடங்களில் மீட்டனர்.

    பின்னர் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    இதுபற்றி பலியான வீரமணியின் தம்பி நல்லையா கூறும்போது, நேற்று காலை நாங்கள் சிங்கமுக தீர்த்த குளத்திற்கு வந்தோம் எனது அண்ணன் வீரமணி சாப்பிட்டுவிட்டு குளிக்கச் சென்றார் அவருக்கு நன்றாக நீச்சல் தெரியும்.இருந்தபோதிலும் அவர் குளத்தில் மூழ்கி விட்டார். 

    நானும் அவரை காப்பாற்ற முயற்சி செய்தேன் ஆனால் குளத்தில் தண்ணீர் அதிகமாக இருந்ததால் என்னால் அவரை காப்பாற்ற முடியவில்லை.24 மணி நேரத்திற்கு பின்னர் இன்று தான் அவரது உடலை மீட்டு உள்ளனர் என்றார்.

    திருவண்ணாமலையில் சித்ரா பவுர்ணமி முன்னிட்டு பக்தர்கள் வருகை அதிகமாக உள்ள நிலையில் தீர்த்த குளத்தில் ஒருவர் மூழ்கி பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    வெம்பாக்கம் அருகே தாய், மகளிடம் வழிப்பறி கும்பல் 6 பவுன் செயினை பறித்து சென்றனர்.
    செய்யாறு:

    வெம்பாக்கம் அடுத்த சுமங்கலி கிராமத்தைச் சேர்ந்தவர் தணிகை மலை. இவரது மனைவி எல்லம்மாள் (வயது 28). இவர் வெங்கட்ராம் பேட்டையில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை செய்து வருகிறார். 

    எல்லம்மாளின் தாயார் மகேஸ்வரி. இவர்கள் இருவரும் வேலூரில் நடந்த உறவினர் திருமண நிகழ்ச்சிக்கு சென்றனர். பின்னர் நிகழ்ச்சி முடிந்தபின் பஸ்ஸில் சுமங்கலி கூட்டு ரோட்டில் இறங்கி நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது இவர்கள் பின்னால் வாலிபர்கள் 3 பேர் பைக்கில் வந்தனர். 

    திடீரென அவர்களை வழி மடக்கி கத்தியை காட்டி அணிந்திருந்த செயினை கழற்றி தருமாறு மிரட்டினர். அப்போது அதிலிருந்த ஒரு வாலிபர் எல்லம்மாள் மற்றும் மகேஷ்வரி கழுத்தில் அணிந்திருந்த செயினை பறித்தார். பின்னர் பைக்கில் மின்னல் வேகத்தில் 3 வாலிபர்களும் தப்பிச்சென்றனர். 

    இதுகுறித்து எல்லம்மாள் மோரணம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதே இடத்தில் நேற்று முன்தினம் டாஸ்மாக் ஊழியர்களை மறித்து திருட்டு கும்பல் ரூ.3 லட்சத்தை பறித்துச் சென்றது. மீண்டும் அதே இடத்தில் தாய், மகளிடம் கும்பல் செயின் பறித்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
    வெளிநாட்டுப் பெண் மண்பானையில் மோரை வைத்து ஒரு டம்ளர் மோர் ரூ.10-க்கு விற்பனை செய்தார். அவருக்கு கணவர் மற்றும் உறவினர்கள் உதவி செய்தனர்.
    திருவண்ணாமலை:

    இன்றைய தலைமுறையினரிடம் பாரம்பரிய இயற்கை பானங்களின் நன்மைகள் பற்றி தெரியவில்லை. இதனால் கண்ட கண்ட குளிர்பானங்களை வாங்கி அருந்தி பல்வேறு உடல் உபாதைகளுக்கு ஆளாகின்றனர்.

    இந்த நிலையில் திருவண்ணாமலையில் தமிழக பாரம்பரிய இயற்கை பானமான மோர் உடலுக்கு நன்மை தரும். வெயிலுக்கு குளிர்ச்சி தரும் என்பதால் அது பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வெளிநாட்டு பெண் ஒருவர் பக்தர்களுக்கு இன்று மோர் விற்பனை செய்தார்.

    திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் சித்ரா பவுர்ணமி விழாவை முன்னிட்டு மோர் விற்பனை செய்த வெளிநாட்டு பெண் கூறும்போது, திருவண்ணாமலையின் இயற்கை அழகை ரசிக்க வந்துள்ள நான் தமிழர்களின் உணவு பழக்கங்கள் பற்றி அறிந்துகொண்டேன்.

    தமிழகத்தில் இயற்கை பானமாக மோர் கருதப்படுகிறது. அதனை குடிப்பதைத் தவிர்த்து இன்றைய பொதுமக்கள் குளிர் பானங்களை குடித்து தங்களது உடல் நலத்தை கெடுத்துக் கொள்கின்றனர்.

    எனவே இயற்கை பானமான மோர் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பக்தர்களுக்கு மோர் விற்பனை செய்து வருகிறேன். குறைந்த விலையில் கிடைக்கும் மோர் உடல் சூட்டைத் தணித்து ஆரோக்கியம் அளிக்கும் சக்தி கொண்டது.

    எனவே மக்கள் மோரை புறக்கணிக்காமல் அதனை கோடைக்காலங்களில் அருந்தி பயனடைய வேண்டும் என்றார். வெளிநாட்டுப் பெண் மண்பானையில் மோரை வைத்து ஒரு டம்ளர் மோர் ரூ.10-க்கு விற்பனை செய்தார். அவருக்கு கணவர் மற்றும் உறவினர்கள் உதவி செய்தனர்.
    தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கடந்த 2 ஆண்டுகளாக சித்ரா பவுர்ணமி நாட்களில் பக்தர்கள் கிரிவலம் செல்ல அனுமதி வழங்கப்படவில்லை.
    சித்ரா பவுர்ணமியையொட்டி திருவண்ணாமலையில் இன்று லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர். 12 மாதங்களில் வரும் பவுர்ணமிகளில் சித்ரா பவுர்ணமி முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

    அன்றைய தினம் அக்னி திருத்தலமான திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் சென்று சாமி தரிசனம் செய்து கிரிவலம் செல்வது வாழ்வில் பல நல்ல பலன்களைத் தரும் என்று கூறப்படுகிறது. மேலும் சித்ரா பவுர்ணமி தினத்தில் சித்தர்கள் ஆசியும் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.

    தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கடந்த 2 ஆண்டுகளாக சித்ரா பவுர்ணமி நாட்களில் பக்தர்கள் கிரிவலம் செல்ல அனுமதி வழங்கப்படவில்லை.

    இந்த ஆண்டு தான் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் வழக்கத்துக்கு அதிகமான பக்தர்கள் வருகை தருவார்கள் என்பதால் பல்வேறு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.

    இந்த ஆண்டுக்கான சித்ரா பவுர்ணமி இன்று அதிகாலை 2.33 மணிக்கு தொடங்கியது. அதற்கு முன்னதாகவே ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் குவிந்து கிரிவலம் செல்ல தொடங்கிவிட்டனர்.

    நள்ளிரவு 12 மணிக்கு மேல் பஸ்கள் மற்றும் வாகனங்கள் நகருக்குள் வர அனுமதி வழங்கப்படவில்லை.அவைகள் நகர எல்லையில் நிறுத்தப்பட்டன. அங்கிருந்து பக்தர்கள் கோவிலுக்கு நடந்து சென்றனர் ஆட்டோக்களும் இயக்கப்பட்டன. நகரமெங்கும் சிறு சிறு வியாபாரிகள் கடை அமைத்து பல்வேறு பொருட்களை விற்பனை செய்து வருகின்றனர். கற்பூரம் மற்றும் தண்ணீர் பாட்டில் வியாபாரம் சூடுபிடித்துள்ளது.

    அருணாசலேஸ்வரர் கோவில் முன்பு இன்று காலை குவிந்த பக்தர்கள் கூட்டம்.

    மேலும் பக்தர்களுக்கு இலவச தண்ணீர் பந்தல் மற்றும் நீர்மோர் பந்தல் அமைக்கப்பட்டு அவர்களின் தாகம் தணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 40 இடங்களில் அன்னதானம் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இன்று காலை திருவண்ணாமலை நகரம் பக்தர்களின் கூட்டத்தால் திணறியது. அலைகடல் புகுந்தது போல் பக்தர்கள் கூட்டம் கண் கொள்ளா காட்சியாக இருந்தது. கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். கிரிவலப் பாதையில் இடைவெளியின்றி பக்தர்கள் சென்று வருகின்றனர்.

    சில பக்தர்கள் "அண்ணாமலையாருக்கு அரோகரா, உண்ணாமலை அம்மனுக்கு அரோகரா "என்ற பக்தி கோ‌ஷம் முழங்கி செல்கின்றனர். சிறப்பு பஸ்கள் மற்றும் சிறப்பு ரெயில்கள் மூலம் பக்தர்கள் வந்து குவிந்த வண்ணம் உள்ளனர். பக்தர்கள் பாதுகாப்புக்காக 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    பக்தர்கள் திருவண்ணாமலை நகருக்குள் வந்ததும் பரவசநிலையில் அண்ணாமலையாரை வணங்கியபடி செல்கின்றனர். கொளுத்தும் கோடை வெயிலையும் பொருட்படுத்தாமல் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.

    2 ஆண்டுக்கு பின்னர் சித்ரா பவுர்ணமி விழா களை கட்டி உள்ளதால் பக்தர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். அதேபோல் வியாபாரமும் களை கட்டியுள்ளதால் வியாபாரிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

    இதையும் படிக்கலாம்...சனி பகவானின் நல்லருளை பெறுவதற்கான சிறந்த பரிகாரங்கள்
    ஆரணி அருகே கண்ணாடி மாளிகையை சீரமைக்க ரூ.11 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
    ஆரணி:

    திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே பூசிமலைக்குப்பம் கிராமத்தில் அமைந்துள்ள 1806-ம் ஆண்டு திருமலை ராவ் தன்னுடைய காதல் மனைவிக்காக கட்டபட்ட இந்த கண்ணாடி மாளிகை தற்போது 215 ஆண்டுகளுக்கு மேலாக உள்ளன.

    மேலும் கடந்த 70ஆண்டுக்கு மேலாக வருவாய் துறை மற்றும் ஊரக வளர்ச்சி துறையினர் கட்டுபாட்டில் இருந்ததை தற்போது வனத்துறை கட்டுபாட்டில் இருப்பதால் கண்ணாடி மாளிகைக்கு சுற்றி வேலி அமைத்து வனத்துறைக்கு சொந்தமான இடமாக அறிவிப்பு பலகை வைத்துள்ளனர்.

    இந்த நிலையில் சட்ட சபையில் நேற்று முன்தினம் பொதுப்பணி துறை மானிய கோரிக்கையில் அமைச்சர் எ.வ.வேலு சுமார் ரூ.11 கோடியே 30 லட்சம் மதிபீட்டில் புனரமைத்து பாதுகாக்கப்படும் என்று அறிவித்தார்.

    இதனையடுத்து முதல்- அமைச்சரும், எ.வ.வேலு அமைச்சருக்கும் மிக்க நன்றி எனவும் படவேடு உள்ளிட்ட பகுதிகளில் கண்டெடுக்கப் படும் நினைவு சின்னங்கள் இந்த கண்ணாடி மாளிகையில் வைத்து பாதுகாத்து வரலாற்று சுற்றுளா தலமாக மாற்ற கோரி கோரிக்கை விடுத்துள்ளனர்.
    செய்யாறில் புனித வியாகுல அன்னை ஆலயத்தில் திருச்சிலுவை பாதை நிகழ்ச்சி நடந்தது.
    செய்யாறு:

    செய்யாறு டவுன், ஆற்காடு சாலையில் அமைந்துள்ள புனித வியாகுல அன்னை ஆலயத்தின் சார்பில் கிறிஸ்தவர்கள் இன்று காலை புனித வெள்ளி முன்னிட்டு ஆலயத்தை சுற்றி திருச்சிலுவைப் பாதை நிகழ்ச்சி நடைபெற்றது. 

    நிகழ்ச்சியில் இயேசுவை சிலுவையில் அறைந்தது நினைவூட்டி சிலுவை சுமந்த படி ஆலயத்தை சுற்றி திருச்சிலுவைப் பாதை நிகழ்ச்சி நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சியில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
    சேத்துப்பட்டு திரவுபதி அம்மன் கோவிலில் துரியோதனன் படுகளம் நடந்தது.
    சேத்துப்பட்டு:

    திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு கிளுவாநத்தம் அடுத்த  சாமந்திபுரம் கிராமத்தில் உள்ள திரவுபதி அம்மன் கோவில் அமைந்துள்ளது. கடந்த மாதம் 28-ந்தேதி அலகு நிறுத்தி அக்னி வசந்த விழா தொடங்கியது. 

    இதைத்தொடர்ந்து வில்வளைப்பு, ராஜசூய யாகம், பகடை துகில் அர்ஜுனன் தபசு விராட பருவம், கீசகன் கதை, கிருஷ்ணன் தூது, போத்தராஜாசங்கதி, திருமணம் கர்ணமோட்சம் ஆகிய நாடகங்கள் நடந்தது.
     
    இதை தொடர்ந்து நேற்று காலையில் திரவுபதி அம்மனுக்கு பல்வேறு அபிஷேகம் செய்யப்பட்டு அலங்காரம் செய்து கோவிலின் முன்பு 60 அடி துரியோதனன் களிமண்ணால் செய்து வைத்து, பஞ்சவர்ணம் பூசி துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நடந்தது. மாலையில் கோவிலின் முன்பு தீக்குண்டம் அமைக்கப்பட்டு தீமிதி திருவிழாந டைப்பெற்றது.

    அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதை தொடர்ந்து இன்று வெள்ளிக்கிழமை தர்மர் பட்டாபிஷேகமும் நடந்தது. சுற்றுப்புற கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர், ஊர் பொதுமக்கள் செய்து இருந்தனர்.
    சித்ரா பவுர்ணமியையொட்டி திருவண்ணாமலை நகரம் மற்றும் கிரிவலப்பாதை உள்ளிட்ட இடங்களில் பக்தர்கள் கற்பூரம் ஏற்றுவதற்கும், மலை மீது ஏறுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
    திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பவன்குமார்  வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    திருவண்ணாமலையில் மலையையே சிவனாக வழிபடுவதால் அருணாசலேஸ்வரர் கோவிலின் பின்புறம் உள்ள மலையை சுற்றி பவுர்ணமி நாட்கள் மட்டுமின்றி விஷேச நாட்களில் பக்தர்கள் கிரிவலம் வருகின்றனர்.

    இதில் சித்ரா பவுர்ணமி மிகவும் விஷேசமாக கருதப்படுகிறது. இந்த ஆண்டிற்கான சித்ரா பவுர்ணமி நாளை (சனிக்கிழமை) அதிகாலை 2.33 மணிக்கு தொடங்கி நள்ளிரவு 1.17 மணிக்கு நிறைவடைகிறது.

    விடுமுறை தினத்தில் சித்ரா பவுர்ணமி வருவதால் 15 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கிரிவலம் செல்ல திருவண்ணாமலைக்கு வருவார்கள் என்று எதிர்பாக்கப்படுகிறது.

    திருவண்ணாமலையில் சித்ரா பவுர்ணமியன்று 3 ஆயிரத்து 242 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

    மேலும் கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட உள்ளது. திருவண்ணாமலை நகரை சுற்றி 9 தற்காலிக பஸ் நிலையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. 37 இடங்களில் கார் பார்க்கிங் வசதி செய்யப்பட்டு உள்ளது.

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் மற்றும் கிரிவலப்பாதையில் 15 சிறப்பு மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

    அருணாசலேவரர் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வரும் வயது முதிர்ந்த பக்தர்களை அழைத்து செல்ல 3 பேட்டரி கார்களும், மாற்றுத்திறனாளிகளுக்கு சக்கர நாற்காலிகளும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    கிரிவலம் செல்லும் பக்தர்களின் பாதுகாப்பிற்காக 39 இருசக்கர வாகன பேட்ரோல் போலீசார் கிரிவலப்பாதையில் ரோந்து பணியில் ஈடுபடுவார்கள். மருத்துவ உதவிக்காக இரு சக்கர வாகன ஆம்புலன்சு வாகனமும் ரோந்து பணியில் இருக்கும்.

    திருவண்ணாமலை நகரம் மற்றும் கிரிவலப்பாதை உள்ளிட்ட இடங்களில் பக்தர்கள் கற்பூரம் ஏற்றுவதற்கும், மலை மீது ஏறுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

    திருவண்ணாமலை நகருக்கு வரும் 9 சாலைகளின் முகப்பு பகுதிகளில் வேளாண்துறை சார்பில் 42 விவசாய பம்பு செட்டுகளில் பக்தர்கள் குளிப்பதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

    தனிநபர் மற்றும் தொண்டு நிறுவனங்கள், தொண்டு அமைப்புகள் சார்பில் கிரிவல பக்தர்களுக்கு அன்னதானம் செய்ய 40 இடங்களில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

    திருவண்ணாமலை நகரைச்சுற்றி அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பஸ் நிலையங்களில் அன்னதானம் செய்ய விரும்பபுவர்களுக்கு உரிய அனுமதியும், இடமும் அளிக்கப்படும்.

    தற்காலிக பஸ் நிலையம் மற்றும் வாகன நிறுத்தும் இடத்தில் இருந்து திருவண்ணாமலை கிரிவலப்பாதை மற்றும் முக்கிய பகுதிகளுக்கு செல்ல இலவச பஸ் வசதி செய்யப்பட்டுள்ளது.

    தற்காலிக பஸ் நிலையத்திலிருந்து கிரிவலப்பாதை மற்றும் நகருக்குள் உள்ள பகுதிகளுக்கு வர தனிநபர் ஆட்டோ கட்டணமாக ரூ.30 முதல் ரூ.50 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    கிரிவலத்திற்கு வரும் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் அனைத்து அரசு துறைகளின் சார்பில் செய்யப்பட்டுள்ள வசதிகளை பயன்படுத்தி பாதுகாப்புடன் கிரிவலம் சென்று வரலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
    திருவண்ணாமலையில் கார் மீது வேன் நேருக்கு நேர் மோதிய விபத்தில் டிரைவர் மற்றும் பெண் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருவண்ணாமலை:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் ஏமத்தூர் பகுதியைச் சேர்ந்த வனஜா என்ற பெண் உள்பட 3 பேரும், 2 ஆண்கள் என 5 பேர் சிங்காரபேட்டையில் நடைபெறும் உறவினர் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஒரு காரில் புறப்பட்டு சென்றனர்.

    காரை டிரைவர் பாலன் என்பவர் ஓட்டிச் சென்றார். அந்த கார் இன்று காலை 7.30மணி அளவில் திருவண்ணாமலை- செங்கம் சாலையில் கிரிவலப்பாதை பிரிவு அருகில் சென்றபோது, செங்கம் சாலை வழியாக திருவண்ணாமலை நோக்கி வேகமாக வந்த ஒருவேன் கார் மீது நேருக்கு நேர் மோதியது.

    கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த இந்த விபத்தில் கார் அப்பளம் போல் நொறுங்கியது. இதில் கார் டிரைவர் பாலன் மற்றும் வனஜா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். மேலும் காரில் இருந்த 2 பெண்கள் மற்றும் 2 ஆண்கள் காயமடைந்தனர்.இதனைக் கண்ட வேன் டிரைவர் தப்பி ஓடிவிட்டார்.

    இந்த விபத்து காரணமாக திருவண்ணாமலை செங்கம் சாலையில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.

    இந்த விபத்து பற்றி தகவல் கிடைத்ததும் திருவண்ணாமலை தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் காயமடைந்த 4 பேரையும் மீட்டு திருவண்ணாமலை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். மேலும் பலியான 2 பேர் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

    இது தொடர்பாக தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
    கீழ்பென்னாத்தூர் அருகே குடும்பம் நடத்த வரமறுத்ததால் மனைவி, மாமியாரை வெட்டி வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார்.
    கீழ்பென்னாத்தூர்:

    திருவண்ணாமலை அடுத்த கோடி குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் ராமசாமி (வயது 28). கூலி தொழிலாளி. இவரது மனைவி சசிகலா (25). இவர்களுக்கு 4 வயதில் மகன் மற்றும் 8 மாத பெண் குழந்தை ஒன்று உள்ளது. 

    கர்ப்பிணியாக இருந்த போது சசிகலா கடந்த 10 மாதங்களுக்கு முன்பு தனது தாயார் வீட்டிற்கு பிரசவத்திற்காக சென்றார். பின்னர் 8 மாத கைக்குழந்தையுடன் தனது தாயார் வீட்டிலேயே தங்கினார். சசிகலாவை தொடர்புகொண்டு ராமசாமி தனது வீட்டுக்கு வருமாறு அழைத்துள்ளார். அவர் வர மறுத்ததால் நேற்று இரவு தனது மாமியார் வீடான சோ நம்மியந்தலுக்கு நேற்று இரவு சென்றார்.

    அப்போது சசிகலாவை தனது வீட்டுக்கு வருமாறு அழைத்தார். இதனால் கணவன் மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த ராமசாமி சசிகலாவை தாக்கி அரிவாளால் வெட்டியுள் ளார்.

    தடுக்க வந்த மாமியார் ஞானாம்பாளுக்கும் வெட்டு விழுந்துள்ளது. இதில் 2 பேரும் படுகாயமடைந்தனர். படுகாயம் அடைந் தவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

    இதுகுறித்து கீழ்பென்னாத்தூர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த போலீசார் அப்பகுதியில் விசாரணை நடத்தினர். விசாரணைக் காக ராமசாமியை தேடி போலீசார் வட்ரா புதூர் கிராமத்திற்கு இன்று காலை சென்றனர். அப்போது ராமசாமி அங்கு தூக்கில் பிணமாக தொங்கி நிலையில் கிடந்தார். 

    இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

    விசாரணைக்கு பயந்து தொழிலாளி தூக்கில் தொங்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    ×