என் மலர்
திருவண்ணாமலை
- ஊர்வலமாக வந்து புகார் அளித்த பொதுமக்கள்
- போலீசார் பேச்சுவார்த்தை
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறை தலைமை இடமாகக் கொண்ட தனியார் நிதி நிறுவனத்தை சேர்ந்தவர்கள் செய்யாறு, ஆரணி, காஞ்சீபுரம், செங்கல்பட்டு, சோழிங்கநல்லூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கிளை அலுவலகங்களை தொடங்கி பொதுமக்களிடம் ரூ.500 முதல் ரூ.25 ஆயிரம் வரை பல்வேறு குழுக்களாக பிரித்து தீபாவளி சீட்டு நடத்தி வந்தனர்.
சுமார் 2 ஆண்டு காலம் நடத்தி வந்த நிலையில் இதனை விரிவுபடுத்தி மளிகை பொருள், பட்டாசு, தங்க நாணயங்கள் உள்ளிட்டவற்றை வழங்கும் வகையில் சீட்டுகளையும் நடத்தி வந்தனர்.
அவர்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஏஜெண்டுகளை நியமனம் செய்து கவர்ச்சிகரமான அறிவிப்புகளை வெளியிட்டனர். அதனை நம்பி ஒவ்வொரு ஏஜெண்டும் தலா 200 முதல் 2ஆயிரம் உறுப்பினர்களை சீட்டு நிறுவனத்தில் இணைத்து உள்ளனர்.
இதன் மூலம் கிடைத்த பல கோடி ரூபாயை சுருட்டிக்கொண்டு அந்த நிதிநிறுவனத்தை சேர்ந்தவர்கள் தலைமறைவாகினர்.
இதனால் பாதிக்கப்பட்டவர்கள் செய்யாறு போலீஸ் நிலையம், சென்னை பொருளாதார குற்றப்பிரிவு, திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் என பல்வேறு இடங்களில் புகார் செய்தனர்.
இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்புடைய சீனிவாசன் என்பவரை கைது செய்தனர். ஆனால் முக்கிய குற்றவாளிகளை கைது செய்யப்படவில்லை.
இதனால் பாதிக்கப்பட்ட ஏஜெண்டுகள் மற்றும் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் என சுமார் 100-க்கும் மேற்பட்டவர்கள் நேற்று திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் காஞ்சி சாலை அருகே திரண்டனர். பின்னர் அங்கிருந்து அவர்கள் பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்துக்கு கோஷம் எழுப்பியவாறு ஊர்வலமாக வந்தனர்.
அங்கு அவர்கள் மோசடியில் ஈடுபட்டு தலைமறைவானவர்களை பிடிக்க நடவடிக்கை எடுக்கக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அதன்பின் ஒவ்வொருவரும் தாங்கள் இழந்த தொகை எவ்வளவு, ஏஜெண்டுகள் தாங்கள் சேர்த்தவர்கள், அவர்கள் இழந்த பணம் குறித்து ஆதாரங்களுடன் தனித்தனியாக பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் புகார் அளித்தனர்.
அந்த மனுக்களை போலீசார் பெற்று விசாரணை நடத்தி வருகின்றனர். நிதி நிறுவன மோசடியால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் ஊர்வலமாக வந்து போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
- வைக்கோல் ஏற்றி சென்றபோது மின் கம்பி உரசியதால் விபரீதம்
- போலீசார் விசாரணை
ஆரணி:
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியை அடுத்த ஜங்கல் பகுதியைச் சேர்ந்தவர் சபரி (வயது 36).
இவர் திருவண்ணா மலை மாவட்டம் ஆரணி அடுத்த காமக்கூர் கிராமத்தில் நெல் அறுவடை செய்துள்ள விவசாயிகளிடம் வைக்கோலை விலைக்கு வாங்கிக்கொண்டு மினி வேனில் ஏற்றிச் சென்று கொண்டிருந்தார்.
அளவுக்கு அதிகமாக வைக்கோல் ஏற்றி சென்றதாக தெரிகிறது. வேன் புறப்பட்டு சென்ற சிறிது தூரத்தில் மின் ஒயரில் வைக்கோல் உரசியுள்ளது.
அதனால் மின்க சிவு ஏற்பட்டு வைக்கோல் தீப்பற்றி மினிவேன் எரியத்தொடங் கியது.
உடனடியாக ஆரணி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து ஆரணி தீயணைப்பு நிலைய அலுவலர் கோபால கிருஷ்ணன் தலைமையில் படை வீரர்கள் சென்று தீ மேலும் பரவாமல் தடுத்து அணைத்தனர். எனினும் வைக்கோல் முழுவதும் எரிந்ததோடு வேனும் சேதமானது.
இது சம்பந்தமாக களம்பூர் போலீசில் சபரி புகார் அளித்தார். அதன்பேரில் களம்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மேல் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி பரிதாபம்
- போலீசார் விசாரணை
வந்தவாசி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந் தூர்பேட்டை தாலுகா மல்லிகா கிராமம் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் வீரப்பன் (வயது 40). இவரது மனைவி சித்ரா.
இவர்களுக்கு 2 மகன்கள், 2 மகள்கள் உள்ள னர். இவர் கடந்த சனிக்கிழமை தொழில் நிமித்தமாக உறவினரான சரவணன் என்பவரது மகன் கார்த்திக்ராஜாவுடன் (26) காஞ்சீபுரம் நோக்கி வந்து கொண்டிருந்தார்.
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே மாலையிட்டான்குப்பம் கிராமம் அருகே காஞ்சீபுரம் சாலையில் வந்தபோது மோட்டார்சைக்கிளில் இருந்து வீரப்பன் தவறி கீழே விழுந்தார்.
இதில் பலத்த காயமடைந்த அவர் சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார்.
பின்னர் மேல்சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார்.
இதுகுறித்து வீரப்பனின் மனைவி சித்ரா அளித்த புகாரின் பேரில் வந்தவாசி வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- 3-ம் இடம் பிடித்தார்
- பள்ளி முதல்வர், ஆசிரியர்கள் பாராட்டு
போளூர்:
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் ஸ்ரீ ராமஜெயம் குளோபல் சீனியர் செகண்டரி சிபிஎஸ்இ பள்ளியில் 9-ம் வகுப்பு படிக்கும் மாணவி வி.கார்த்திகா ஈரோடு எக்ஸெல் பதிப்பகம் சார்பாக நடத்தப்பட்ட மாநில அளவிலான ராமாயணம், மகாபாரதம் ஆன்மீகம் பொது அறிவு போட்டியில் கலந்து கொண்டு 3-ம் இடத்தை பெற்றுள்ளார்.
பரிசு பெற்ற கார்த்திகாவை பள்ளியின் சேர்மன் ஏழுமலை மற்றும் துணை சேர்மன் ஸ்ரீதர் மற்றும் முதல்வர், ஆசிரியர் ஆகியோர் பாரட்டினர்.
- ஆஸ்பத்திரியில் சிகிச்சை
- போலீசார் விசாரணை
கண்ணமங்கலம்:
கண்ணமங்கலம் அருகே உள்ள பெரிய அய்யம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை (வயது 43). இவர் நேற்று முன்தினம் இரவு வாழியூர் கூட்ரோடில் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார்.
அப்போது அவரது பின்னால் கொளத்தூரை சேர்ந்த பாலு என்பவரது மகன் ராஜா (32) என்பவர் ஓட்டி வந்தமோட்டார் சைக்கிள், ஏழுமலையின் மோட்டார்சைக்கிள் மீது மோதியது.
இதில் இருவரும் படுகாயமடைந்தனர். அந்த வழியாக சென்றவர்கள் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக ஏழுமலை கண்ணமங்கலம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் சப்- இன்ஸ்பெக்டர் சங்கர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.
- திருவண்ணாமலை மாவட்டத்தில் 4 ஏ.டி.எம். உடைத்து ரூ.72 லட்சம் கொள்ளை
- கொள்ளைக்கு திட்டமிட்டது எப்படி என்பது குறித்து விசாரணை
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த மாதம் திருவண்ணாமலை, போளூர், கலசபாக்கம் ஆகிய பகுதிகளில் உள்ள 4 ஏ.டி.எம். மையங்களில் மர்ம நபர்கள் பணம் எடுக்கும் எந்திரங்களை வெல்டிங் எந்திரத்தின் மூலம் உடைத்து அதிலிருந்த ரூ.72 லட்சத்து 78 ஆயிரத்து 600-ஐ கொள்ளையடித்து சென்றனர்.
இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட ஹரியானா மாநிலத்தை சேர்ந்த அப்ரிடி (வயது 36), ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த சிராஜ்கான் (50) ஆகிய 2 பேர் நேற்று கோர்ட்டில் விசாரணைக்காக ஆஜர் படுத்தப்பட்டனர்.
அப்போது கலசப்பாக்கம் போலீசார் அந்த 2 பேரையும் ஒரு நாள் போலீஸ் காவலில் விசாரணை நடத்த அனுமதி கேட்டனர். கோர்ட்டு அனுமதி பெயரில் அவர்களிடம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
திருடப்பட்ட பணம் குறித்து கொள்ளைக்கு திட்டமிட்டது எப்படி என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஜவ்வாதுமலை பள்ளியில் நடந்தது
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
போளூர்:
ஜவ்வாது மலை ஒன்றியத்திற்கு உட்பட்ட பண்டிரேவ் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தமிழக அரசின் ஆணைக்கிணங்க பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடைபெற்றது. பள்ளி மேலாண்மை குழு தலைவர் கீதா தலைமை வகித்தார்.
தலைமை ஆசிரியர் மன்னர் சாமி முன்னிலை வகித்தார். கூட்டத்தில் பள்ளி மானியம் பராமரிப்பு செலவு செய்தது ஒப்புதல் பெறப்பட்டது.
உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். முடிவில் செல்வம நன்றி கூறினார்.
- கலெக்டர் தகவல்
- மே 31-ந் தேதி கடைசி நாள்
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை கலெக்டர் முருகேஷ் வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித்தொகை பெற விண்ணபிக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதன் விவரம் வருமாறு:-
வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித் தொகைத் திட்டத்தில் பள்ளி இறுதி வகுப்பு தேர்ச்சி பெறாதவர்கள், பள்ளியிறுதி வகுப்புத் தேர்ச்சி, மேல்நிலைக்கல்வி தேர்ச்சி, பட்டப்படிப்பு கல்வித்தகுதிகள் தேர்ச்சிப் பெற்று, வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து தொடர்ச்சியாக பதிவினை புதுப்பித்து வருபவர்கள் 31.03.2023 -ம் தேதியின் நிலவரப்படி ஐந்தாண்டுகளுக்கு மேல் காத்திருப்பவராக இருத்தல் வேண்டும்.
மாற்றுத்திறனாளி பதிவுதாரர்களாக இருப்பின் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஓராண்டு முடிந்திருக்க வேண்டும். ஆதிதிராவிடர், பழங்குடியினர் 45 வயதிற்கு மிகாமலும், பிற்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்பட்ட வகுப்பினர், இதர வகுப்பினர் 40 வயதிற்குள்ளும் இருத்தல் வேண்டும்.
குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72,000 க்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.மாற்றுத்திறாளிகளுக்கு வருமான உச்ச வரம்பு இல்லை ஒரு பதிவுதாரருக்கு ஒருமுறை மட்டுமே உதவித் தொகை வழங்கப்படும். 10-ம் வகுப்பு தவறியவர்களுக்கு மாதம் ரூ.200 -ம், 10 -ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.300 -ம், மேல்நிலைக்கல்வி முடித்தவர்களுக்கு மாதம் ரூ.400-ம் பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.600 எனவும்,
மாற்றுத்திறனாளி களுக்கு 10 ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் தேர்ச்சி பெறாதவர்களுக்கு மாதம் ரூ.600-ம், மேல்நிலை வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ 750 -ம், பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.1000 -ம் உதவித்தொகை வழங்கப்படும்.
மேற்குறிப்பிட்ட தகுதிகள் உள்ளவர்கள் திருவண்ணாமலை, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பெறப்பட்ட விண்ணப்பப்படிவத்திலோ அல்லது www.tnvelaivaaippu.gov.in என்ற வேலைவாய்ப்புத்துறை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்திலோ பூர்த்தி செய்து வருவாய்த்துறையில் வருவாய் ஆய்வாளர் அல்லது அதற்கு மேற்பட்ட அலுவலரிடமிருந்து பெறப்பட்ட சான்றும்,
தேசியமயமாக்கப்பட்ட வங்கிக் கணக்குப் புத்தகம், ஆதார் அட்டை மற்றும் அனைத்து கல்விச்சான்றுகள் அசல் மற்றும் நகல்களுடன் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 31.05.2023 - க்குள் விண்ணப்பிக்கலாம்.
மாற்றுத்திறனா ளிகளுக்கு வருமானசான்று தேவையில்லை என்பதால் மேற்குறிப்பிட்ட இதர ஆவணங்களுடன் நேரில் வருகைபுரிந்து விண்ணப்பம் அளித்து சேர்க்கைக்கான அனுமதி பெறலாம் என திருவண்ணாமலை கலெக்டர் முருகேஷ் தெரிவித்துள்ளார்.
- போலீசாரிடம் வாக்குவாதம்
- போக்குவரத்து பாதிக்கப்பட்டது
வந்தவாசி:
வந்தவாசி அருகே சுடுகாட்டுப் பாதை பிரச்சனையை தீர்க்கக் கோரியும், இது தொடர்பான பிரச்சனையில் முதியவரை கத்தியால் வெட்டியவர்களை கைது செய்யக் கோரியும் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
வந்தவாசியை அடுத்த தூக்குவாடி கிராமத்தில் உள்ள சுடுகாட்டுக்கு கடந்த பல ஆண்டுகளாக தனியார் விவசாய நிலம் வழியாக பிணங்களை அந்த கிராம பொதுமக்கள் எடுத்துச் சென்றதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் அந்த நிலத்தை வாங்கிய மற்றொரு நபர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பிணங்களை எடுத்துச் செல்லும் பாதையை பொக்லைன் எந்திரம் மூலம் அண்மையில் தோண்டினாராம். இதனால் அந்த நில உரிமையாளரின் ஆதரவாளர்களுக்கும் கிராம பொதுமக்களுக்கும் இடையே தகராறு இருந்து வந்துள்ளது.
இந்த நிலையில் இது தொடர்பான பிரச்சினையில், அந்த கிராமத்தைச் சேர்ந்த சீனிவாசன்(65) என்பவரை அந்த நில உரிமையாளரின் ஆதரவாளர்கள் ஞாயிற்றுக்கிழமை இரவு கத்தியால் வெட்டினராம்.
இதில் தலையில் பலத்த காயமடைந்த சீனிவாசன் உத்திரமேரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இதனால் ஆத்திரமடைந்த அந்த கிராம பொதுமக்கள் வந்தவாசி-காஞ்சிபுரம் சாலை, மேல்மா கூட்டுச்சாலையில் நேற்று மறியலில் ஈடுபட்டனர். சுடுகாட்டுப் பாதை பிரச்சினையை தீர்க்கக் கோரியும், சீனிவாசனை கத்தியால் வெட்டிய நபர்களை கைது செய்யக் கோரியும் அவர்கள் முழக்கங்களை எழுப்பினர்.
தகவலறிந்து அங்கு சென்ற வந்தவாசி டிஎஸ்பி கார்த்திக் தலைமையிலான வந்தவாசி வடக்கு போலீசார் பொதுமக்களை சமரசம் செய்ய முயன்றனர். அப்போது, ஏற்கனவே புகார் கொடுத்த போதே போலீஸார் உரிய நடவடிக்கை எடுத்திருந்தால் சீனிவாசனை வெட்டும் அளவுக்கு பிரச்சினை வளர்ந்திருக்காது என்று கோபமாக தெரிவித்த பொதுமக்கள் சிலர், போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனை போலீசார் தடுக்கவே அங்கு கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து, உரிய நடவடிக்கை எடுப்பதாக டிஎஸ்பி கார்த்திக் பொதுமக்களை சமரசப்படுத்தினார். இதையடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.
இந்த மறியல் போராட்டத்தால் வந்தவாசி-காஞ்சிபுரம் சாலையில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
- திருவண்ணாமலையில் திண்டிவனம் சாலையில் கட்டப்படுகிறது
- பிரமுகர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்
திருவண்ணாமலை:
திருவண்ணாமலையில் ரூ.30 கோடியே 15 லட்சம் மதிப்பில் புதிய பஸ் நிலையம் அமைக்க பூமி பூஜை நடைபெற்றது.
திருவண்ணாமலை நகரம் ஆன்மிக நகரம் மட்டுமின்றி சுற்றலா நகரமாகவும் உள்ளது. திருவண்ணாமலையில் உள்ள அருணாசலேஸ்வரர் கோவில், கிரிவலப்பாதையில் உள்ள கோவில்கள், ஆசிரமங்களை காண வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்கள் மட்டுமின்றி வெளி நாடுகளில் இருந்தும் ஏராளமானோர் தினமும் வந்து செல்கின்றனர்.
இதனால் நாளுக்கு நாள் திருவண்ணாமலையில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகின்றது. மேலும் திருவண்ணாமலை நகரின் மையப் பகுதியில் உள்ள மத்திய பஸ் நிலையத்தில் இருந்து வெளியே வரும் பஸ்கள் இடையூறுகளால் போக்குவரத்து பாதிப்புகள் ஏற்படுகிறது.
இதனால் திருவண்ணாமலை புதியதாக பஸ் நிலையம் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து புதிய பஸ் நிலையம் அமைத்திட திருவண்ணாமலை திண்டிவனம் சாலையில் கடந்த பல ஆண்டுகளாக செயல்படாமல் உள்ள வேளாண்மைத் துறையின் கீழ் உள்ள டான்காப் நிறுவனத்திற்கு சொந்தமான 6.83 ஏக்கர் இடம் தேர்வு செய்யப்பட்டது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருவண்ணாமலை யில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தமிழக முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் புதிய பஸ் நிலையம் அமைப்பதற்கு பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு முன்னிலையில் அடிக்கல் நாட்டினார். பின்னர் அந்த இடம் நகராட்சி நிர்வாகத்தின் கீழ் கொண்டு வரப்பட்டு அங்கிருந்த பழைய கட்டிடங்கள் அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து பழைய கட்டிடங்கள் இடிக்கப்பட்ட நிலையில் அந்த இடத்தில் ரூ.30 கோடியே 15 லட்சம் மதிப்பில் புதிய பஸ் நிலையம் அமைப்பதற்கான பூமி பூஜை போடும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு
நகர மன்றத் தலைவர் நிர்மலா வேல்மாறன் தலைமை தாங்கினார். நகராட்சி ஆணையாளர் முருகேசன் முன்னிலை வகித்தார்.
இதில் சிறப்பு அழைப்பாளராக மாநில தடகள சங்க துணைத் தலைவர் டாக்டர் எ.வ.வே.கம்பன் கலந்து கொண்டார்.
- மாவட்டச் செயலாளர் தொடங்கி வைத்தார்
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
ஆரணி:
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் அண்ணா சிலை அருகில் நகர தி.மு.க. சார்பில் நகர செயலாளரும் நகர மன்ற தலைவருமான ஏ.சி மணி தலைமையில் புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக வடக்கு மாவட்ட செயலாளர் தரணிவேந்தன், தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர் வேளச்சேரி மணிமாறன் ஆகியோர் பங்கேற்றனர்
முன்னதாக மாவட்டச் செயலாளர் தரணி வேந்தன் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து முகாமினை தொடங்கி வைத்தார்.
மேலும் ஆரணி சட்டமன்ற தொகுதியில் திமுகவில் அதிகளவில் புதிய உறுப்பினர்களை சேர்க்க நிர்வாகிகள் ஈடுபட்டு வருகின்றனர். இதனை தொடர்ந்து மாவட்ட செயலாளர் தரணிவேந்தன் மற்றும் தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர் மணிமாறன் முன்னிலையில் இளைஞர்கள் இளம்பெண்கள் ஆர்வத்துடன் இணைந்தனர்.
நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ. சிவானந்தம், தயாநிதி, மாவட்ட பொருளாளர் தட்சிணாமூர்த்தி, பொதுக்குழு உறுப்பினர் வெள்ளை கணேசன், மாவட்ட துணை செயலாளர் ஜெயராணி ரவி, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பார்வதி சீனிவாசன், ஒன்றிய செயலாளர்கள் எஸ்.எஸ். அன்பழகன், சுந்தர், துரைமாமது, மோகன், மேற்கு ஆரணி சேர்மன் பச்சையம்மாள் சீனிவாசன், ஒன்றிய குழு துணை தலைவர் ராஜேந்திரன், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் ரஞ்சித், மாவட்ட பிரதிநிதி பாலமுருகன், நகரப் பொருளாளர் அக்பர், மற்றும் திமுக நிர்வாகிகள் பங்கேற்றனர்.
- செய்யாறை புதிய மாவட்டமாக அறிவிக்க கோரி நடந்தது
- சப்-கலெக்டரிடம் 2,300 மனுக்கள் வழங்கினர்
செய்யாறு:
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு மக்கள் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் செய்யாறு தலைமை இடமாகக் கொண்டு புதிய மாவட்டம் அறிவிக்க கோரி பைக் பேரணி திருவத்தூர் வேதபுரீஸ்வரர் கோயில் அருகில் தொடங்கியது.
பேரணி காந்தி சாலை, மார்க்கெட், பஸ் ஸ்டாண்ட், ஆற்காடு சாலை வழியாக சப் கலெக்டர் அலுவலகத்திடம் நிறைவடைந்தது.
தொடர்ந்து சப் கலெக்டர் அலுவலகம் எதிரில் வேண்டும் வேண்டும் செய்யாறு மாவட்டம் அறிவிக்க வேண்டும் என கோஷங்கள் எழுப்பினர்.
பைக் பேரணியில் அனைத்து கட்சி பிரமுகர்கள், வியாபாரிகள், தன்னார்வலர்கள், மாணவர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். தொடர்ந்து வியாபாரிகள் அனைத்து கட்சியினர், பல்வேறு சமூக அமைப்புகள் மூலமும், செய்யாறு மக்கள் முன்னேற்ற சங்கத்தின் மூலமும் 2300 மனுக்கள் செய்யாறு தலைமை இடமாகக் கொண்டு புதிய வருவாய் மாவட்டம் கோரி சப் கலெக்டர் அனாமிகாவிடம் மனுக்கள் வழங்கப்பட்டது. செய்யாறு மக்கள் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் வழங்கப்பட்ட கோரிக்கை மனுவில் கூறியதாவது:-
01.04.1959ம் ஆண்டி ல் செய்யாறு, திருவ ண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய வருவாய் கோட்டங்கள் உருவாக்கப்பட்டன. செய்யாறு கோட்டம் தவிர அனைத்தும் வருவாய் கோட்டங்களும் மாவட்டங்களாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன.
அதன் அடிப்படையில் 64 வருடங்களாக செய்யாறில் செயல்பட்டு வரும் வருவாய் கோட்டத்தினை தலைமை இடமாகக் கொண்டு புதிய வருவாய் மாவட்டம் உருவாக்க வேண்டும்.
செய்யாறு, வெம்பாக்கம், வந்தவாசி தாலுக்காகளில் உள்ள கிராமங்கள் சுமார் 150 கிலோமீட்டர் தூரம் பயணித்து தலைமை இடமான திருவண்ணாமலைக்கு செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளதால் கால விரயமும் பண விரயமும் ஆகிறது. செய்யாறு தலைமை இடமாகக் கொண்டு புதிய மாவட்டம் அமைக்கப்பெற்றால் கிராம மக்கள், விவசாயிகள், மாணவர்கள், அரசு அலுவலர்கள் ஆகியோர் உடனுக்குடன் அருகில் உள்ள செய்யாறு பகுதிக்கு எளிதாக வந்து செல்லவும் அரசு அலுவலர்களை தொடர்பு கொள்ளவும் வசதியாக இருக்கும்.
மேலும் வளர்ச்சி திட்டங்கள், அரசு நலத்திட்டங்கள் பேரிடர் காலத்திட்டங்கள் அனைத்தும் விரைவாக செயல்படுத்திட முடியும். மேலும் சட்டம் ஒழுங்கு ஏற்படும் அவசர காலங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகள் உடனடியாக காவல்துறையினரால் எடுக்க பேரூதவியாக இருக்கும்.
இதனை கருத்தில் கொண்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் 2016-ம் ஆண்டு திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் செய்யாறு தலைமை இடமாகக் கொண்டு புதிய வருவாய் மாவட்டம் உருவாக்கப்படும் என தெரிவித்த வாக்குறுதியினை குறிப்பிட்டிருந்தனர்.
தமிழக முதல்வர் கூறிய வாக்குறுதிணை நிறைவேற்றிடும் வகையில் அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பைக் பேரணியாக சென்று மனுவினை வழங்கினர்.






