search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வெளியூர் செல்பவர்கள்  காவல் நிலையத்தில் தகவல் தெரிவிக்க  வேண்டும் -  பொதுமக்களுக்கு போலீசார் அறிவுறுத்தல்
    X

    கோப்புபடம். 

    வெளியூர் செல்பவர்கள் காவல் நிலையத்தில் தகவல் தெரிவிக்க வேண்டும் - பொதுமக்களுக்கு போலீசார் அறிவுறுத்தல்

    • கஞ்சா மற்றும் புகையிலை ஒழிப்பு நடவடிக்கை மேற்கொள்வது குறித்து விளக்கி கூறினர்.
    • நகர் மன்ற துணைத்தலைவர் விஜயலட்சுமி மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    வெள்ளகோவில்:

    வெள்ளகோவில் நகராட்சி அலுவலக கூட்ட அரங்கில் நகர் மன்ற தலைவர் மு.கனியரசி தலைமையில் கஞ்சா ஒழிப்பு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.கூட்டத்தில் காங்கேயம் போலீஸ் துணை சூப்பிரண்ட் பார்த்திபன், போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமாதேவி, சப் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் ஆகியோர் கலந்து கொண்டு கஞ்சா மற்றும் புகையிலை ஒழிப்பு நடவடிக்கை மேற்கொள்வது குறித்து விளக்கி கூறினர்.

    அப்போது காங்கேயம் போலீஸ் துணை சூப்பிரண்டு பார்த்திபன் கூறியதாவது:- தமிழக அரசு கஞ்சா இல்லாத மாநிலமாக மாற்ற நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அதனால் கஞ்சா மற்றும் உயிருக்கு தீங்கு விளைவிக்க கூடிய குட்கா புகையிலை போன்ற பொருட்களை விற்பனை செய்வது தெரிய வந்தால் உடனே எங்களுக்கு தகவல் கொடுக்க வேண்டும்.கஞ்சா புகையிலை போன்ற உயிருக்கு தீங்கு விளைவிக்க கூடிய பொருட்களை பயன்படுத்துவோர் பயமின்றி திருட்டு, கொலை, கொள்ளை, கற்பழிப்பு போன்ற குற்றச் சம்பவங்களில் ஈடுபடுகின்றனர். அதனால் நாம் கஞ்சா, புகையிலை இல்லா மாநிலமாக மாற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

    தற்போது தமிழ்நாட்டில் கஞ்சா பயிர் செய்வதில்லை. ஆந்திரா மாநிலங்களில் மலைப்பிரதேசங்களில் தான் அதிக அளவில் பயிர் செய்யப்படுகிறது. ஆந்திராவில் குற்றச் சம்பவங்களில் ஈடுபடுவோர் அதிகமாக உள்ளனர். அவர்களுக்கு ஆயுதம் வாங்க கோடிக்கணக்கில் பணம் தேவைப்படுகிறது. அதற்காக ஆந்திராவில் மலைப்பகுதியில் இதை பயிரிட்டு கஞ்சா விற்பனை செய்கின்றனர். தமிழகத்தை சேர்ந்தவர்கள் ஆந்திரா சென்று வாங்கி வருகின்றனர். அப்படி வாங்கி வரும் கஞ்சாவை சிகரெட் மூலம் பயன்படுத்துகின்றனர். ஆகவே இதை முதலில் முற்றிலுமாக ஒழிக்க வேண்டும். அதற்காக வெள்ளகோவிலில் உள்ள அனைத்து வார்டுகளுக்கும் தனியாக ஒரு காவலர் நியமிக்கப்படும். அவரிடம் தங்களது பகுதியில் உள்ள குற்றச்சம்பவங்கள் பற்றி தெரிவிக்கலாம் என கேட்டுக்கொண்டார்.

    அது மட்டுமின்றி வீட்டை பூட்டிவிட்டு பொதுமக்கள் வெளியூர் செல்லும்போது விலை மதிப்பு மிக்க நகை மற்றும் பணத்தை பீரோவில் வைத்து விட்டு செல்ல வேண்டாம். வங்கியிலோ அல்லது பாதுகாப்பான மறைவான இடத்திலேயே வைத்துச் செல்ல வேண்டும். அப்படி வெளியில் செல்லும்போது வெள்ளகோவில் காவல் நிலையத்திற்கு தகவல் சொல்லிவிட்டு சென்றால் நாங்கள் கண்காணிக்க ஏதுவாக இருக்கும் என கேட்டுக்கொண்டார்.

    நகர் மன்ற உறுப்பினர்களாகிய நீங்கள் தங்களது வார்டுகளில் கஞ்சா மற்றும் புகையிலை விற்பனை செய்தாலோ யாரேனும் குற்ற சம்பவத்தில் ஈடுபட்டாலோ புகார் தெரிவிக்கலாம். வீடு மற்றும் முக்கியமான இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்த ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்றார்.

    கூட்டத்தில் திருப்பூர் தெற்கு மாவட்ட தி.மு.க. துணை செயலாளர் கே. ஆர். முத்துக்குமார், நகர செயலாளர் சபரி எஸ்.முருகானந்தன், நகர் மன்ற துணைத்தலைவர் விஜயலட்சுமி மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×