search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    2-வது சுரங்க விரிவாக்கத்துக்கு எதிர்ப்பு: என்.எல்.சி.யை பா.ம.க. முற்றுகையிட்டு போராட்டம்

    • ஆர்ப்பாட்டத்தையொட்டி ஐ.ஜி. கண்ணன் தலைமையில் வெளிமாவட்டங்களில் இருந்து 2 ஆயிரம் போலீசார் நெய்வேலிக்கு வரவழைக்கப்பட்டு உள்ளனர்.
    • பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

    நெய்வேலி:

    கடலூர் மாவட்டம் நெய்வேலியில் என்.எல்.சி. இந்தியா நிறுவனம் இயங்கி வருகிறது. இங்குள்ள 3 திறந்த வெளிசுரங்கங்களை அமைத்து நிலக்கரி வெட்டி எடுத்து, அனல் மின் நிலையங்கள் மூலமாக மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

    இந்த மின்சாரம் தமிழகம், புதுச்சேரி, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களுக்கு வினியோகம் செய்யப்படுகிறது.

    இதனிடையே நிலக்கரி எடுக்க போதிய இடமில்லை எனவும், நிலக்கரி தட்டுப்பாட்டால் அடுத்த மாதம் (ஆகஸ்டு) முதல் 1,000 மெகாவாட் மின் உற்பத்தியை நிறுத்தப்போவதாக என்.எல்.சி. நிறுவனம் அறிவித்துள்ளது.

    எனவே 2-வது சுரங்கத்தை விரிவாக்கம் செய்வதற்காக கரிவெட்டி, கத்தாழை, மும்முடிசோழகன், வளையமாதேவி உள்ளிட்ட பகுதியில் ஏற்கனவே என்.எல்.சி.யால் கையகப்படுத்தப்பட்ட நிலத்தில் நேற்று முன்தினம் முதல் முதற்கட்ட பணியை தொடங்கியது.

    அந்த நிலத்தில் சாகுபடி செய்திருந்த பயிர்கள் அனைத்தும் பொக்லைன் எந்திரங்கள் மூலம் அழிக்கப்பட்டது. பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நேற்றும் இந்த பணி 2-வது நாளாக தொடர்ந்தது.

    மேலும் என்.எல்.சி. சுரங்க நீரை வெளியேற்றுவதற்காக பரவனாறுக்கு பதிலாக புதிய பரவனாறு அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது.

    இதற்காக நேற்று காலை ராட்சத பொக்லைன் எந்திரங்கள் மூலம் வளையமாதேவியில் இருந்து கரிவெட்டிக்கு செல்லும் சாலையில் பள்ளம் தோண்டப்பட்டு, 10 ராட்சத குழாய்கள் பதிக்கப்பட்டது.

    மேலும் தர்மநல்லூரில் இருந்து வளையமாதேவி வரை 1½ கிலோ மீட்டர் தூரத்துக்கு புதிய பரவனாறு வெட்டப்பட்டது. இதற்கு விவசாயிகள் மற்றும் பா.ம.க.வினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாய்க்கால் வெட்டும் பணி நடைபெற்றது.

    இதனை கண்டித்து பா.ம.க.வினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் பல்வேறு இடங்களில் பஸ்களின் கண்ணாடியும் உடைக்கப்பட்டன.

    இந்த சம்பவத்தில் ஈடுபட்ட பா.ம.க.வினரை போலீசார் கைது செய்தனர்.

    என்.எல்.சி. நிர்வாகத்தை கண்டித்து ஏற்கனவே பா.ம.க. சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது. கடையடைப்பு போராட்டமும் நடத்தினர். தமிழகத்தை விட்டு என்.எல்.சி. வெளியேற வேண்டும் என பா.ம.க.வினர் கூறி வருகின்றனர்.

    இந்த நிலையில் வளையமாதேவியில் விவசாய விளைநிலங்களை அழித்து வாய்க்கால் வெட்டும் பணிக்கு பா.ம.க.வினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். என்.எல்.சி. நிர்வாகத்தை கண்டித்து போராட்டம் நடத்தப்படும் என பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. நேற்று அறிவித்தார். கும்பகோணம்-பண்ருட்டி சாலையில் என்.எல்.சி. ஆர்ச் கேட் அருகே இந்த போராட்டம் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டது.

    அதன்படி இன்று முற்றுகை போராட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்க பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் நண்பகல் 12.05 மணியளவில் நெய்வேலி வந்தார்.

    நெய்வேலி ஆர்ச் கேட் அருகே நடைபெற்ற முற்றுகையில் அவர் பங்கேற்றார். இதில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

    ஆர்ப்பாட்டத்தில் வெளியேறு வெளியேறு என்.எல்.சி.யே வெளியேறு, வெளியேற்று... வெளியேற்று... மத்திய-மாநில அரசுகளே என்.எல்.சி. நிர்வாகத்தை உடனடியாக வெளியேற்று. விட மாட்டோம்... விடமாட்டோம்... ஒருபிடி மண்ணை கூட விடமாட்டோம் என்பது உள்ளிட்ட பல்வேறு கோஷங்களை எழுப்பினர்.

    பா.ம.க. ஆர்ப்பாட்டத்தையொட்டி கடலூர் மாவட்டத்தில் 27 டாஸ்மாக் மதுக்கடைகள் இன்று மாலை 6 மணி வரை மூடப்படுகிறது.

    ஆர்ப்பாட்டத்தையொட்டி ஐ.ஜி. கண்ணன் தலைமையில் வெளிமாவட்டங்களில் இருந்து 2 ஆயிரம் போலீசார் நெய்வேலிக்கு வரவழைக்கப்பட்டு உள்ளனர். விழுப்புரம் சரக டி.ஐ.ஜி. ஜியாவுல்ஹக், கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம், விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங்சாய், கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ் மேற்பார்வையில் 5 கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள், 17 டி.எஸ்.பி.க்கள் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

    இதுமட்டுமின்றி கடலூர் மாவட்ட போலீசார் ஆயிரம் பேரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பா.ம.க.வினரின் ஆர்ப்பாட்டம் காரணமாக நெய்வேலியில் பரப்பான சூழ்நிலை நிலவியது.

    Next Story
    ×