search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    10 மசோதாக்களை கவர்னர் நிறுத்தி வைத்துள்ளாரா? அல்லது நிராகரித்து விட்டாரா? பழனிசாமி கருத்துக்கு அமைச்சர்கள் பதில்
    X

    10 மசோதாக்களை கவர்னர் நிறுத்தி வைத்துள்ளாரா? அல்லது நிராகரித்து விட்டாரா? பழனிசாமி கருத்துக்கு அமைச்சர்கள் பதில்

    • சட்டசபையில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களை கவர்னர்களோ, குடியரசு தலைவரோ நிராகரிக்கும் போது திருப்பி அனுப்புகிறோம் என்ற வார்த்தையை குறிப்பிடுவதில்லை.
    • ‘வித்ஹோல்டு’ (நிறுத்தி வைப்பு) என்றே குறிப்பிடுவார்கள். தமிழக கவர்னரும் அது போன்ற வார்த்தையையே குறிப்பிட்டுள்ளார்.

    சென்னை:

    சட்டசபையில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த தனித்தீர்மானத்தின் மீது நடந்த விவாதத்தில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

    கவர்னர் மசோதாக்களை நிறுத்தி வைத்திருப்பது தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. தீர்ப்பு வருவதற்குள் இந்த அவசர கூட்டம் நடத்த வேண்டியதன் அவசியம் என்ன?

    கவர்னர் மசோதாக்களை நிறுத்தி வைத்திருப்பதாக தானே அர்த்தம் என்று கேள்வி எழுப்பினார்.

    இதற்கு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, அவை முன்னவர் துரைமுருகன், அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் பதிலளித்து பேசினார்கள். அவர்கள் கூறும்போது, சட்டசபையில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களை கவர்னர்களோ, குடியரசு தலைவரோ நிராகரிக்கும் போது திருப்பி அனுப்புகிறோம் என்ற வார்த்தையை குறிப்பிடுவதில்லை.

    'வித்ஹோல்டு' (நிறுத்தி வைப்பு) என்றே குறிப்பிடுவார்கள். தமிழக கவர்னரும் அது போன்ற வார்த்தையையே குறிப்பிட்டுள்ளார். எனவே அது நிராகரிக்கப்பட்டதாகவே அர்த்தம் என்றனர்.

    இதையடுத்து பேசிய எடப்பாடி பழனிசாமி, இந்த 10 மசோதாக்கள் தொடர்பாக மட்டும்தான் வழக்கு போடப்பட்டுள்ளதா? கவர்னரிடம் நிலுவையில் உள்ள மற்ற கோப்புகளுக்கு எதிராகவும் வழக்கு போடப்பட்டு உள்ளதா? என்றார்.

    இதற்கு பதிலளித்த சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, இந்த மசோதாக்கள் மற்றும் முன் விடுதலை தொடர்பாக நிலுவையில் உள்ள 50 கோரிக்கை தொடர்பாகவும் வழக்கு தொடரப்பட்டுள்ளது என்றார்.

    எடப்பாடி பழனிசாமி:-பல்கலைக்கழகங்களில் வேந்தராக முதலமைச்சர் இருக்க வேண்டும் என்ற தீர்மானத்தை நாங்கள் ஏற்கனவே கொண்டு வந்தோம். அப்போது ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தார். ஆனால் அப்போது தி.மு.க. சார்பில் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இல்லை என்றால் அப்போதே தீர்வு கிடைத்து இருக்கும்.

    முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்:-பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை நியமிக்கும் போது அரசிடம் கலந்து விவாதிக்கும் பழக்கம் அப்போது இருந்தது. தற்போது அது இல்லை என்பதே பிரச்சனை.

    இவ்வாறு விவாதம் நடந்தது.

    இதைத் தொடர்ந்து ஜெயலலிதா பெயரில் அமைக்கப்பட்டிருந்த மீன்வள பல்கலைக்கழகம் பெயரை மாற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் எடப்பாடி பழனிசாமி தலைமையில் வெளிநடப்பு செய்தனர்.

    ஆனால் அதன் பிறகு அமைச்சர் துரைமுருகன் கூறும்போது, ஜெயலலிதா பெயரை நீக்கியதாக உண்மைக்கு மாறான தகவலை கூறி வெளிநடப்பு செய்துள்ளார்கள். மீன்வள பல்கலைக்கழகத்தின் பெயர் மாற்றப்படவில்லை. நிலுவையில் உள்ளது" என்றார்.

    Next Story
    ×