search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தமிழக சட்டமன்ற கூட்டங்களில் எதிர்க்கட்சியின் கேள்விகள் மறைக்கப்படுகிறது- எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
    X

    தமிழக சட்டமன்ற கூட்டங்களில் எதிர்க்கட்சியின் கேள்விகள் மறைக்கப்படுகிறது- எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

    • மாணவர்கள் பயன்பெறும் பல நல்ல திட்டங்களை காழ்ப்புணர்ச்சியால் தி.மு.க அரசு முடக்கியுள்ளது.
    • ஆட்சிக்கு வந்தவுடன் முதல் கையெழுத்து நீட் தேர்வு ரத்து குறித்ததாக இருக்கும் என்று தி.மு.கவின் தேர்தல் அறிக்கை இன்று வரை கேள்விக்குறியாகவே உள்ளது.

    எடப்பாடி:

    எடப்பாடி ஒன்றியத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் அ.தி.மு.க சார்பில் கொடியேற்று விழா நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு கட்சி கொடியை ஏற்றிவைத்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

    அ.தி.மு.க ஆட்சி காலத்தில் எடப்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தொகுதி மக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு திட்ட பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளது. குறிப்பாக மாணவ சமுதாயம் பயன்பெறும் வகையில், எடப்பாடி அருகே அரசு கலைக்கல்லூரி, அரசு பாலிடெக்னிக் கல்லூரி, அரசு பி.எட் கல்லூரி உள்ளிட்டவை ஏற்படுத்தப்பட்டு அதில் தற்போது அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். தொகுதியின் பல்வேறு பகுதிகளில் உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாகவும், நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாகவும் தரம் உயர்த்தப்பட்டு, அப்பள்ளி வளாகத்தில் கூடுதல் வகுப்பறைகள் கட்டிக் கொடுக்கப்பட்டது.

    அரசு பள்ளி மாணவர்கள் பயன்பெறும் வகையில் இலவச மடிக்கணினி உள்ளிட்ட பல்வேறு மாணவர்கள் பயன்பெறும் பல நல்ல திட்டங்களை காழ்ப்புணர்ச்சியால் தி.மு.க அரசு முடக்கியுள்ளது. அ.தி.மு.க ஆட்சி காலத்தில் அரசு பள்ளி மாணவர்கள் பயன்பெறும் வகையில் 7.5சதவீத இட ஒதுக்கீடு ஏற்படுத்தப்பட்டதால், மாநில முழுவதும் அதிக எண்ணிக்கையிலான அரசு பள்ளி மாணவர்கள் எந்த கட்டணமும் இன்றி மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட உயர் படிப்புகளில் தற்போது பயின்று வருகின்றனர். ஆட்சிக்கு வந்தவுடன் முதல் கையெழுத்து நீட் தேர்வு ரத்து குறித்ததாக இருக்கும் என்று தி.மு.கவின் தேர்தல் அறிக்கை இன்று வரை கேள்விக்குறியாகவே உள்ளது.

    சேலம் மாவட்ட விவசாயிகள் பயன்பெறும் வகையில் மேட்டூர் அணையில் இருந்து வீணாக காவிரி ஆற்றில் பாய்ந்து, கடலில் கலக்கும் உபரி நீரை கொண்டு இப்பகுதியில் உள்ள 100 வறண்ட ஏரிகளை நிரப்புவதற்கான புதிய பாசன திட்டம் அ.தி.மு.க ஆட்சி காலத்தில் ஏற்படுத்தப்பட்டது. இதை தற்போதைய தி.மு.க அரசு கிடப்பில் போட்டதால், இப்பகுதி விவசாயிகள் பயன்பெறும் வகையிலான மகத்தான திட்டம், விவசாயிகளுக்கு பயனளிக்காத அவல நிலை தொடர்ந்து வருகிறது.

    இதேபோல் குடிமராமத்து பணி, அம்மா மினிக்கிளினிக் போன்ற அ.தி.மு.க அரசின் நல்ல பல மக்கள் நல திட்டங்களை தி.மு.க அரசு வேண்டுமென்று முடக்கி உள்ளது. கடந்த 2-ஆண்டுகளாக தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அ.தி.மு.க ஆட்சியில் கொண்டுவரப்பட்ட நிறைவுற்ற திட்ட பணிகளை மட்டுமே திறந்து வைத்து பொம்மை முதல்வராக செயல்பட்டு வருகிறார். தமிழக முழுவதும் தற்போது கள்ளச்சாராயம், போலி மது, கஞ்சா உள்ளிட்ட சட்ட விரோத போதை பொருட்களின் விற்பனை அதிகரித்து உள்ளது.

    இது குறித்து தமிழக சட்டமன்றத்தில் காவல்துறை மாணியக் கோரிக்கை விவாதத்தில் நான் உள்பட அ.தி.மு.கவினர் எழுப்பும் கேள்விகள், தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பு செய்யப்படாமல் தி.மு.க அரசால் மறைக்கப்பட்டு, இருட்டடிப்பு செய்யப்பட்டு வருகிறது. விரைவில் இதற்கான நீதிமன்ற ஆணை பெறப்பட்டு தமிழக சட்டமன்றத்தில் மக்கள் பிரச்சனை குறித்து அ.தி.மு.க.வினர் எழுப்பும் நியாயமான கேள்விகள் வெளிச்சத்திற்கு வரும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    தொடர்ந்து எடப்பாடி ஒன்றியத்திற்குட்பட்ட இருப்பாளி, ஆடையூர், பக்க நாடு, பூலாம்பட்டி, சித்தூர் கள்ளுக்கடை உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்ற அ.தி.மு.க கொடியேற்று விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கட்சிக்கொடியை ஏற்றி வைத்த அவர் அப்பகுதியில்லிருந்து புதிதாக அ.தி.மு.கவில் இணைந்த மாற்று கட்சியினருக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். நிகழ்ச்சியில் எடப்பாடி ஒன்றிய பகுதியைச் சேர்ந்த பெரும் திரளான அ.தி.மு.க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    செட்டிமாங்குறிச்சி பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் மாதேஸ் வரவேற்று பேசினார்.

    Next Story
    ×