என் மலர்
சிவகங்கை
இதை தொடர்ந்து தினமும் காலையில் சுவாமி வெள்ளி கேடகத்திலும், இரவு சிம்ம வாகனம், பூத வாகனம், கமல வாகனம், இடபவாகனம் என பல்வேறு வாகனங்களில் வீதி உலா நடைபெற உள்ளது.
6-ம் நாளான செப்டம்பர் 1-ந் தேதி மாலை 6 மணி அளவில் கஜமுகா சூரசம் காரமும், இரவு வீதி உலாவும். 7-ம் நாளன்று மயில் வாகனத்திலும் சுவாமி வீதி உலா நடைபெற உள்ளது.
3-ந் தேதி குதிரை வாகனத்திலும், 4-ந் தேதி காலை சுவாமி திருத்தேருக்கு எழுந்தருளல் நிகழ்ச்சியும் நடைபெறும். வருடத்துக்கு ஒருமுறை மட்டுமே நடைபெறும் சந்தனகாப்பு அலங்காரத்தில் கற்பக விநாயகர் அன்று மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை மூலவர் பக்தர்களுக்கு காட்சி அளிப்பார்.
அதே தினத்தன்று மாலை 4 மணிக்கு திருத்தேரோட்டம், இரவு யானைவாகனத்தில் சுவாமி வீதி உலா நடைபெறும்.
10-ம் நாளான 5-ந் தேதி கோவில் திருக்குளத்தில் விநாயகர் சதுர்த்தி தீர்ததவாரியும், பகல் 12 மணிக்கு மூலவருக்கு ராட்சஷ கொழுக்கட்டை படைத்து சிறப்பு அலங்கார தீபாராதனையும், இரவு 11 மணிக்கு ஐம்பெரும் மூர்த்திகள் வீதி உலாவும் நடைபெற உள்ளது.
விநாயகர் சதுர்த்தி விழா ஏற்பாடுகளை பிள்ளையார்பட்டி கோவில் பரம்பரை அறங்காவலர்கள் செய்து வருகிறார்கள்.
காரைக்குடி:
காரைக்குடி டி.டி.நகர் அம்பாள்புரத்தைச் சேர்ந்தவர் காளிமுத்து. இவர் தேவகோட்டையில் உள்ள எல்.ஐ.சி. கிளையில் அதிகாரியாக உள்ளார். இவருக்கு காந்திமதி (48) என்ற மனைவியும், கார்த்திகேயன் என்ற மகனும் உள்ளனர்.
சம்பவத்தன்று காளிமுத்து உள்பட 3 பேரும் வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்று விட்டனர். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்ட மர்ம மனிதர்கள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே இருந்த பீரோவை திறந்து அதில் இருந்த 5 பவுன் நகைகள், ரூ5 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை திருடிக்கொண்டு தப்பினர்.
இதுகுறித்த புகாரின் பேரில் காரைக்குடி வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருப்பத்தூர்:
தமிழக பள்ளி கல்வித்துறை உத்தரவின்பேரில் தேவகோட்டை கல்வி மாவட்ட சார்பிலும் திருப்பத்தூர் வட்டார விளையாட்டு போட்டிகள் எஸ்.எஸ்.கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
இதில் 14, 17 மற்றும் 19 வயதிற்குட்பட்ட கபடிப் போட்டியில் திருப்பத்தூர், குன்றக்குடி, வேலங்குடி, கீழச்சிவல்பட்டி, கண்டர மாணிக்கம், ஏரியூர், பூலாங் குறிச்சி, எஸ்.எஸ்.கோட்டை, திருக்கோஷ்டியூர், ஆகிய பள்ளிகளிலிருந்து விளையாட்டு வீரர்கள் பங்கு கொண்டனர்.
இதில் 19 வயதிற்குட்பட்ட பிரிவுகளில் குன்றக்குடி டி.கே.ஜி பள்ளி முதலிடத்தையும், கீழச்சிவல்பட்டி மீனாட்சி சுந்தரேசுவரர் பள்ளி 2-ம் இடத்தையும் பிடித்தது. 17 வயதிற்குட்பட்ட பிரிவில் வேலங்குடி அரசு மேல்நிலைப்பள்ளி முதலிடத்தையும், கீழச் சிவல்பட்டி 2-ம் இடத்தையும் பிடித்தது. 14 வயதிற்குட்பட்ட பிரிவில் கண்டரமாணிக்கம் எஸ்.டி.உயர்நிலைப்பள்ளி முதலிடத்தையும் பூலாங்குறிச்சி அரசு மேல்நிலைப் பள்ளி 2-ம் இடத்தையும் பிடித்தது.
மொத்தம் 38 அணிகள் இப்போட்டியில் பங்கு கொண்டன. உடற்கல்வி ஆசிரியர்கள் முருகப்பராஜா, வின்னரசி, முருகேசன், சிவக்குமார், வாசு, சரவணன், உள்ளிட்ட உடற்கல்வி ஆசிரியர்கள் இப்போட்டியினை நடத்தினர்.
கபடி போட்டியில் தோல்வியடைந்ததால் விரக்தி அடைந்த என்ஜினீயரிங் மாணவர் விஷம் குடித்து தற்கொலை செய்தார்.
தர்மபுரி மாவட்டம் அரூரை சேர்ந்தவர் ஞானசேகரன். இவரது மகன் கோபிநாத் (வயது23). இவர் அங்குள்ள என்ஜினீயரிங் கல்லூரியில் 4-ம் ஆண்டு மெக்கானிக்கல் பிரிவில் படித்து வந்தார்.
கபடி வீரரான கோபிநாத் தனது அணியுடன் ராமேசுவரத்தில் நடைபெற்ற ஒரு கபடி போட்டியில் பங்கேற்பதற்காக வந்திருந்தார். இங்கு நடைபெற்ற போட்டியில் அவரது அணி தோல்வியடைந்தது.
இதனால் மனவேதனை அடைந்த கோபிநாத் அணியினரிடம் சொல்லிக் கொள்ளாமல் தனியாக ஊருக்கு புறப்பட்டு விட்டார். தோல்வியின் விரக்தியில் இருந்த அவர் வாழ்க்கையில் வெறுப்பு அடைந்து விஷம் குடித்த நிலையில் பஸ்சில் பயணம் செய்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி புதிய பஸ் நிலையத்தில் இறங்கிய அவர் அங்கேயே மயங்கி விழுந்தார். இதனை பார்த்த செக்காலைக்கோட்டை கிராம நிர்வாக அதிகாரி வீராச்சாமி, அவரது உதவியாளர் பானுமதி ஆகியோர் கோபிநாத்தை மீட்டு காரைக்குடி அரசு ஆஸ்பத்திரி கொண்டு சென்றனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக சிவகங்கை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் கோபிநாத் பரிதாபமாக இறந்தார். இது குறித்து காரைக்குடி வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் பிச்சைப்பாண்டியன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
தமிழகம் முழுவதும் கடந்த 4 நாட்களாக வெயில் சுட்டெரித்து வருகிறது. இந்த நிலையில் மானாமதுரை தாலுகாவுக்குட்பட்ட அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ– மாணவிகளுக்குகான தடகள விளையாட்டு போட்டிகள் கடந்த 2 நாட்களாக மானாமதுரையில் நடைபெற்று வருகிறது.
இந்த விளையாட்டு போட்டிகளில் அரசு பள்ளிகளைச் சேர்ந்த மாணவ–மாணவிகள் சிலர் காலில் செருப்பு அணியாமலும், போதிய பாதுகாப்பு சாதனங்கள் இல்லாமலும் விளையாடி வருகின்றனர். நேற்று 10 மற்றும் 12–ம் வகுப்பு மாணவிகளுக்கான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன.
இதில் மதியம் கடும் வெயிலில் 100 மீட்டர் மற்றும் 400 மீட்டர் உயரம் தாண்டுதல் போட்டியும், நீளம் தாண்டுதல் போட்டியும் நடத்தப்பட்டது. இதில் பங்கேற்ற மாணவிகள் சிலர் கடும் வெயிலில் மயங்கி விழுந்து தரையில் சுருண்டு விழுந்தனர்.
உடனடியாக அதிகாரிகள் அந்த மாணவிகளை மீட்டு சிகிச்சை அளித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
சிவகங்கை மாவட்டத்தில் ஆசிரியர்களின் இடமாறுதலுக்கான கலந்தாய்வு சமீபத்தில் நடைபெற்றது. இதில் திருப்புவனம் ஒன்றியம் கலுவன்குளம் நடுநிலைப்பள்ளி இடைநிலை ஆசிரியர் பாரதிதாசன் என்பவரை பணி நிரவலில் சிவகங்கை ஒன்றியத்திற்கு இடமாறுதல் செய்தார்களாம். மாற்றப்பட்ட பாரதிதாசன் மாற்றுதிறனாளி ஆவார். மாற்றுத்திறனாளி ஆசிரியரை மாறுதல் செய்யக்கூடாது என்று அரசாணை விதிமுறை உள்ளதாம்.
இந்த விதிமுறையை மீறி பாரதிதாசன் மாற்றம் செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்தும், அவரை அதே இடத்தில் பணி செய்ய அனுமதிக்க வேண்டும் என்று கூறி தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநிலத்துணைத்தலைவர் ஜோசப்ரோஸ் தலைமையில் மாவட்ட தலைவர் தாமஸ்அமலநாதன், மாவட்ட செயலாளர் முத்துப்பாண்டியன் உள்பட அந்த அமைப்பைச் சேர்ந்த ஆசிரியர்கள் நேற்று சிவகங்கையில் உள்ள மாவட்ட தொடக்க கல்வி அலுவலகம் முன்பு காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது தொடர்பாக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட செயலாளர் முத்துப்பாண்டியன் கூறியதாவது:– தற்போது அரசு பிறப்பித்த ஆணையில் பணிநிரவல் செய்யும்போது கண்பார்வையற்ற மற்றும் மாற்றுத்திறனாளி ஆசிரியர்களை பணிநிரவல் மற்றும் மாறுதல் செய்யக்கூடாது என்று உத்தரவிட்டுள்ளது.
ஆனால் அதையும் மீறி மாற்றுத்திறனாளி ஆசிரியர் பாரதிதாசனை அவர் பணி செய்யும் இடத்தில் இருந்து 60 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள சிவகங்கை ஒன்றியம் தமறாக்கி வடக்கு நடுநிலைப்பள்ளிக்கு கடந்த 13–ந்தேதி மாறுதல் செய்துள்ளனர். அவருக்கு பணிமாறுதலுக்கான ஆணை வழங்கப்படாத நிலையிலேயே அவர் பணிபுரிந்த பணிக்கு வேறு ஒரு ஆசிரியர் பணியில் சேர்ந்துள்ளார். எனவே மாற்றுத்திறனாளி ஆசிரியர் பாரதிதாசனை அதே இடத்தில் பணிபுரிய அனுமதிக்கும் வரை நாங்கள் காத்திருப்பு போராட்டம் செய்ய முடிவு செய்துள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதைத்தொடர்ந்து சிவகங்கை நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மோகன் தலைமையிலான போலீசார், முதன்மை கல்வி அதிகாரி செந்திவேல்முருகன், மாவட்ட கல்வி அதிகாரி பார்த்தசாரதி ஆகியோர் ஆசிரியர் சங்க நிர்வாகிகளுடன் பேசி சமரசம் செய்தனர். அதன்பின்னர் ஆசிரியர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.
சிவகங்கை:
சிவகங்கை மாவட்டம் நாட்டரசன்கோட்டையைச் சேர்ந்தவர் கருப்பையா. இவரது மகன் ரமேஷ் (வயது29), கட்டிட தொழிலாளி.
இவர், இன்று (வியாழக்கிழமை) காலை ஊரில் இருந்து வேலைக்காக சிவகங்கைக்கு புறப்பட்டார். மோட்டார் சைக்கிளில் சென்ற ரமேஷ், பையூர் விலக்கு பகுதியில் முன்னால் சென்ற காரை முந்திச் செல்ல முயன்றார்.
அப்போது எதிர்பாராத விதமாக கார் மீது மோட்டார் சைக்கிள் மோதியது. இந்த விபத்தில் நிலைதடுமாறி கீழே விழுந்த ரமேஷ் பலத்த காயம் அடைந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் கிடந்த அவரை ஆஸ்பத்திரி கொண்டு செல்ல 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுக்கப்பட்டது
ஆனால் ஆம்புலன்சு வர தாமதமானதால், சரக்கு ஆட்டோ மூலம் அவரை ஆஸ்பத்திரி கொண்டு செல்ல முயன்றனர். அந்த நேரத்தில் 108 ஆம்புலன்ஸ் வந்துவிட, ரமேசை அதில் ஏற்றினர். ஆனால் அதற்குள் அவர் பரிதாபமாக இறந்து விட்டார்.
பலியான ரமேசுக்கு புவனேசுவரி (22) என்ற மனைவி உள்ளார். அவர் தற்போது நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
விபத்து குறித்து சிவகங்கை நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிவகங்கை:
சிவகங்கை மாவட்டம், கந்துபட்டி கிராமத்தை சேர்ந்தவர் கரு.பாக்கியம் (வயது51). சிவகங்கை மாவட்ட அ.தி.மு.க. வக்கீல் பிரிவு இணைச் செயலாளரான இவர், அரசு கூடுதல் வக்கீலாகவும் பணிபுரிந்து வந்தார்.
நேற்று மாலை கரு.பாக்கியம், தனது நண்பரான வக்கீல் முத்துக்குமாருடன் (41) சுந்தரநடப்பு கிராமத்தில் நடந்த கோவில் திரு விழாவில் பங்கேற்க மோட்டார் சைக்கிளில் சென்றார்.
பின்னர் இரவு 11 மணி அளவில் இருவரும் ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர். முத்துக்குமார் மோட்டார் சைக்கிளை ஓட்டினார்.
சிவகங்கை அருகே சாமியார்பட்டி என்ற இடத்தில் தேசிய நெடுஞ்சாலையில் சாலை விரிவாக்கப் பணிகள் நடந்து வருகிறது.
அந்த இடத்தில் வந்தபோது மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக விபத்தில் சிக்கி சாலையோர கிணற்றில் பாய்ந்தது. இதில் முத்துக்குமார் கிணற்றில் இருந்து வந்து மேலே வந்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். தண்ணீர் உள்ள கிணற்றின் சகதியில் சிக்கி கரு.பாக்கியம் இறந்து விட்டார்.
அக்கம்பக்கத்தினர் 3 மணிநேரம் போராடி உடலை மீட்டனர். பின்னர் பிரேத பரிசோதனைக்காக சிவகங்கை அரசு ஆஸ்பத்திரிக்கு உடல் கொண்டு செல்லப்பட்டது.
இந்த விபத்து குறித்து சிவகங்கை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பலியான கரு.பாக்கியத்துக்கு மனைவி மற்றும் மகனும், மகளும் உள்ளனர். இவர் முன்னாள் எம்.எல்.ஏ. கரு.முருகானந்தத்தின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.
சிங்கம்புணரி பேரூராட்சி அலுவலகத்தில் தலைவர் லட்சுமிபிரியா ஜெயந்தன் தேசியக்கொடியேற்றினார். செயல் அலுவலர் ரவிச்சந்திரன் மற்றும் பேரூராட்சி கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.
அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் அமிர்தலிங்கம் கொடியேற்றினார். தலைமையாசிரியர் ரவிச்சந்திரன் உள்ளிட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தலைமையாசிரியர் சங்கு முத்தையா தேசியக்கொடியேற்றினார். மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
எஸ்.எஸ்.மெட்ரிக்பள்ளியில் பள்ளி தாளாளர் செந்தில்குமார் கொடியேற்றினார். ஆ.தெக்கூர் எஸ்.எஸ்.கலை அறிவியல் கல்லூரியில் கல்லூரி செயலர் சந்திரசேகர் கொடியேற்றினார். முதல்வர் ஹேமமாலினி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
ஆ.தெக்கூர் எஸ்.எஸ்.கலை அறிவியல் கல்லூரியில் கல்லூரி செயலர் சந்திரசேகர் கொடியேற்றினார். முதல்வர் ஹேமமாலினி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
சிங்கம்புணரி காவல் நிலையத்தில் போக்குவரத்து காவல் ஆய்வாளர் ஞானசந்திரன் கொடியேற்றினார். சார்பு ஆய்வாளர்கள் முனுசாமி, ராமன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். எஸ்.வி.மங்கலம் காவல் நிலையத்தில் ஆய்வாளர் முகமது நசீர் கொடியேற்றினார்.
மானாமதுரை அருகே உள்ள ராஜகம்பீரம் கோஸ்.எம்.பாலிடெக்னிக் கல்லூரியில் சுதந்திர தினவிழா மாணவர்களின் கொடி அணிவகுப்பு நடந்தது. கல்லூரி முதல்வர் செந்தில்வேல் தேசிய கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
கேப்பர்பட்டணம் கிராமத்தில் நல்லாசிரியர் விருது பெற்ற தலைமை ஆசிரியர் மோகனசுந்தரம் முன்னிலையில் கிராம தலைவர் ஜோசப் ஜெயசீலன் தேசிய கொடி ஏற்றி வைத்தார்.
சிப்காட் வளாகத்தில் உள்ள செவன்த்டே மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பள்ளி முதல்வர் அலெக்ஸ் பிரபாகர் முன்னிலையில் டாக்டர் பாஸ்கரன் தேசிய கொடி ஏற்றி வைத்தார்.
இதேபோல் செய்களத்தூர் காமாட்சி அம்மன் பாலிடெக்னிக் கல்லூரி, ஜெயின்ட் ஜோசப் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, பாபா மெட்ரிக் பள்ளி, பாபா நர்சரி பள்ளி, மெலிண்டன் சி.பி.எஸ். பள்ளி, அரசு மருத்துவமனை, பேரூராட்சி, ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மற்றும் பல இடங்களில் 70-வது சுதந்திர தினவிழா நடந்தது.
காரைக்குடி மத்திய மின் வேதியியல் ஆய்வகத்தில் ஆய்வக இயக்குநர் விஜயமோகனன் பிள்ளை தேசியக் கொடி ஏற்றி வைத்து பேசினார். 70-ம் ஆண்டு சுந்தர தினவிழாவினை கொண்டாடும் வகையில் சிக்ரி மருத்துவமனை வளாகத்தில் 70 மரக் கன்றுகள் நடப்பட்டன. மேலும் ஆய்வக வளாகத்தில் இயங்கும் கேந்திரிய வித்யாலயா பள்ளி மற்றும் சிசு வித்யாலயா பள்ளிகளில் தேசியக் கொடியேற்றப்பட்டது.
காரைக்குடி கிட் அண்டு கிம் பொறியியல் மற்றும் மேலாண்மை கல்லூரியில் கல்லூரிகளின் தலைவர் அய்யப்பன் தேசியக் கொடியை ஏற்றி வைத்து பேசினார். தொடர்ந்து அண்ணா பல்கலைக்கழக தேர்வுகளில் எம்.பி.ஏ. பிரிவில் 100 சதவீதம் மற்றும் பி.ஈ பிரிவில் 95 சதவீதம் தேர்ச்சி பெற்றமைக்காக பேராசிரியர்களையும், மாணவர்களையும் பாராட்டினார்.
சிறப்பு விருந்தினராக காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக மேலாண்மைத்துறை இயக்குநர் கலியமூர்த்தி கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தார். கல்லூரிகளின் பொருளாளர் ராமசுப்பிர மணியன், இயக்குநர் அண்ணாமலை, முதல்வர் முத்துப்பாண்டி மற்றும் அனைத்து பேராசிரியர்களும், மாணவ-மாணவிகளும், கல்லூரி அலுவலர்களும் கலந்து கொண்டனர்.
காரைக்குடி செல்லப்பன் வித்யா மந்திர் சர்வதேச பள்ளியில் சிறப்பு விருந்தினராக நீதிபதி சரவண செந்தில்குமார் கலந்து கொண்டு தேசியக் கொடி யேற்றினார்.
பள்ளியின் தாளாளர் சத்யன், துணை முதல்வர்கள் வெங்கடரமணன், அருள் பிரபாகர் உள்பட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் நடந்தன.
சிவகங்கை:
இந்நிகழ்ச்சியில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் சுதந்திரப் போராட்ட தியாகிகளை கவுரவிக்கும் வகையில் சால்வை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
விழாவில் அரசின் பல்வேறு துறைகளின் சார்பில் 624 நபர்களுக்கு ரூ.92 லட்சத்து 50 ஆயிரத்து 199 மதிப்பிலான நலத் திட்ட உதவிகளையும், சிறப்பாக பணியாற்றிய அலுவலர்கள் மற்றும் 120 பணியாளர்களுக்கு நற்சான்றிதழ்களும், மாவட்ட கலெக்டர் மலர்விழி வழங்கினார். பின்னர் மாணவ - மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயச்சந்திரன், மாவட்ட வருவாய் அலுவலர் இளங்கோ, சிவகங்கை வருவாய் கோட்டாட்சியர் அரவிந்தன், சிவகங்கை வட்டாட்சியர் நாகநாதன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ளாட்சி தேர்தல் குறித்து காங்கிரஸ் கட்சி சார்பில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் கலந்து கொண்டு பேசியதாவது:-
மக்களிடம் அதிக தொடர்பு உள்ளவர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மட்டுமே. எனவே நாம் எம்.பி., எம்.எல்.ஏ.க்களை விட உள்ளாட்சி தேர்தலில் அதிக பிரதிநிதிகளை பெற வேண்டும்.
வருகிற உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணி நீடிப்பது சந்தேகமாக உள்ளது. தமிழக சட்டசபையில் திட்டங்களை யார் கொண்டு வந்தது என்பது குறித்து மட்டுமே விவாதம் செய்கிறார்கள். தமிழக அரசு அறிவித்துள்ள பல்வேறு நலத்திட்டங்களை மக்களுக்கு வழங்கிய பிறகுதான் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என்று நினைக்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் ராமசாமி எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ. சுந்தரம், மாவட்ட தலைவர் சத்தியமூர்த்தி, சங்கராபுரம் பஞ்சாயத்து தலைவர் மாங்குடி உள்பட பலர் கலந்து கொண்டனர்
சிவகங்கை:
சிவகங்கை மாவட்டத்தில் நாளை அம்மா திட்ட முகாம்கள் நடக்கிறது.
இதுகுறித்து மாவட்ட கலெக்டர் மலர்விழி விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
சிவகங்கை மாவட்டத்தில் நாளை கீழ்கண்ட இடங்களில் அம்மா திட்ட முகாம் நடக்கிறது.
காரைக்குடி வட்டத்தில் கற்பக விநாயகர்நகர், தேவகோட்டை வட்டத்தில் நல்லாங்குடி, திருப்பத்தூர் வட்டத்தில் அரிபுரம், சிவகங்கை வட்டத்தில் அழகிச்சிபட்டி இளையான்குடி வட்டத்தில் சபரியார்புரம், காளையார் கோவில் வட்டத்தில் கருதுப்பட்டி ஆகிய இடங்களில் அம்மா திட்ட முகாம் நடக்கிறது.
கிராம பொதுமக்கள் ஆவணங்களுடன் மனு செய்து தகுதி அடிப்படையில் உத்தரவு பெற்று பயன் அடையுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






