என் மலர்tooltip icon

    சிவகங்கை

    சிவகங்கை அருகே எம்.பி.பி.எஸ். படிக்காமல் கிளினிக் நடத்தி வந்த 2 போலி டாக்டர்கள் கைது செய்யப்பட்டனர்.
    சிவகங்கை:

    சிவகங்கையை அடுத்த ஒக்கூர் மற்றும் மதகுபட்டி பகுதிகளில் எம்.பி.பி.எஸ். படிக்காமல் சிலர் ஆஸ்பத்திரி நடத்துவதாக சுகாதாரத்துறை இணை இயக்குநர் டாக்டர் விஜயன் மதமடக்கிக்கு புகார்கள் வந்தன.

    இதனை தொடர்ந்து டாக்டர் விஜயன் மதமடக்கி தலைமையிலான அதிகாரிகள் குழுவினர் ஒக்கூரில் உள்ள நிர்மலா (வயது43) என்பவரது கிளினிக்கில் சோதனை நடத்தினர். அப்போது அவர் பி.எஸ்.சி. நர்சிங் மட்டும் படித்துவிட்டு அங்கு கிளினிக் நடத்தி வந்தது தெரியவந்தது.

    இதேபோல் மதகுபட்டியில் பாலசுப்பிரமணியன் (64) என்பவர் பி.யூ.சி. படித்துவிட்டு ஆஸ்பத்திரி நடத்தி வந்ததும் கண்டு பிடிக்கப்பட்டது.

    இதனை தொடர்ந்து அவர்கள் 2 பேர் மீதும் மதகுபட்டி போலீஸ் நிலையத்தில் விஜயன் மதமடக்கி புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாசிலாமணி வழக்குப்பதிவு செய்து நிர்மலா, பாலசுப்பிரமணியன் ஆகிய 2 பேரையும் கைது செய்தார்.
    மொபைல் கடைக்கு வேலைக்கு சென்ற இளம்பெண் மாயமானார். இது குறித்து அவரது கணவர் போலீசில் புகார் கொடுத்துள்ளார்.

    சிவகங்கை:

    திருப்புவனம் தாலுகா பி.வேலாங்குளத்தை சேர்ந்தவர் வீரகுமார் (வயது30). இவரது மனைவி நாகலட்சுமி (22). இவர் திருப்புவனம் பகுதியில் உள்ள தனியார் மொபைல் கடையில் வேலைபார்த்து வந்தார். கடந்த 26-ந்தேதி வீட்டில் இருந்து வழக்கம்போல் நாகலட்சுமி வேலைக்கு சென்றார்.

    அதன்பிறகு மாலையில் அவர் வீடு திரும்பவில்லை. அவரை பல இடங்களில் தேடியும் எந்த தகவலும் கிடைக்கவில்லை.

    இது குறித்து திருப்புவனம் போலீசில் வீரகுமார் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் சுந்தரமாணிக்கம் வழக்குப்பதிவு செய்து மாயமான நாகலட்சுமியை தேடி வருகிறார்.

    சிவகங்கையில் வயிற்றுவலியால் அவதிப்பட்ட பிளஸ்-1 மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சிவகங்கை:

    சிவகங்கை தாலுகா புதுப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் லட்சுமணன், விவசாயி. இவரது மகன் ஆதிக்ராஜா (வயது17).

    சிவகங்கையில் உள்ள தனியார் மேல்நிலைப் பள்ளியில் ஆதிக்ராஜா பிளஸ்-1 படித்து வந்தார். சமீப காலமாக இவர் வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்தார்.

    இதற்காக பல இடங்களில் சிகிச்சை பெற்றும் பலன் கிடைக்கவில்லை என தெரிகிறது. இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த ஆதிக்ராஜா தூக்குப்போட்டு தற்கொலை செய்தார்.

    இது குறித்த புகாரின் பேரில் சிவகங்கை டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் மோகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தேவக்கோட்டையில் அண்ணன்-தம்பி வீடுகளை உடைத்து நகை- பணத்தை கொள்ளையடித்து சென்ற கொள்ளையர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

    சிவகங்கை:

    சிவகங்கை மாவட்டம் தேவக்கோட்டை ஜீவாநகர் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன். இவரது தம்பி பாண்டி. 2 பேரும் சிங்கப்பூரில் வேலைபார்த்து வருகிறார்கள். 2 பேரின் வீடுகளும் ஜீவாநகரில் அடுத்தடுத்து உள்ளது. மணிகண்டனின் மனைவி செந்தாமரை மற்றும் பாண்டியன் மனைவி மலையரசி ஆகியோர் வீடுகளை பூட்டிவிட்டு நேற்று முன் தினம் மன்னி கோவில் திருவிழாவுக்கு சென்று விட்டனர்.

    நேற்று வீடு திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தன. செந்தாமரை வீட்டில் பீரோவில் இருந்த லேப்-டாப், செல்போன், 150 மலேசிய டாலர் மற்றும் மலையரசி வீட்டு பீரோவில் இருந்த 2¼ பவுன் நகை, ரூ.40 ஆயிரம் ரொக்கம் ஆகியவை கொள்ளை போனது.

    இது குறித்து தேவக்கோட்டை நகர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கைரேகை நிபுணர்களும் சம்பவ இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    சிறுமிகளை வைத்து பாலியல் தொழிலில் ஈடுபட்ட தாய்-மகளை போலீசார் கைது செய்தனர்.
    காரைக்குடி:

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடி போலீசில் 14 வயது சிறுமி புகார் கொடுத்தார். அதில் ஒரு கும்பல் தாயிடம் இருந்து தன்னை விலைக்கு வாங்கி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக தெரிவித்தார்.

    இதை தொடர்ந்து குற்றவாளிகளை பிடிக்க டி.எஸ்.பி. கார்த்திகேயன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. காரைக்குடி செக்காலை முதல் வீதியில் ஒரு கும்பல் வீடு எடுத்து பாலியல் தொழில் நடத்தி வருவதாக ரகசிய தகவல் கிடைத்தது.

    போலீசார் அப்பகுதியில் அதிரடி சோதனை நடத்தினார்கள். அப்போது அங்கு இருந்த மங்கலம் கிராமத்தை சேர்ந்த பூமயில், அவரது மகள் சொர்ணலதா ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

    மேலும் அந்த வீட்டில் இருந்த 13, 14 வயதுடைய 2 சிறுமிகளையும் மீட்டனர். விசாரணையில் தாய், மகள் இருவரும் காரைக்குடியின் பல்வேறு பகுதிகளில் சிறுமிகளை வைத்து விபசாரம் செய்து வந்தது தெரியவந்தது. இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    தேவகோட்டையில் நண்பர் வீட்டு முன்பு கோவில் பூசாரி மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
    தேவகோட்டை:

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சரசுவதி வாசக சாலை தெருவை சேர்ந்தவர் சுப்பையா. இவரது மகன் கணேசன் (வயது45). இவர் அங்குள்ள முனியய்யா கோவிலில் பூசாரியாக இருந்து வந்தார்.

    நேற்று இரவு 7 மணியளவில் கணேசன் வீட்டில் இருந்தபோது அதே பகுதியில் வசிக்கும் அவரது நண்பர் சுல்தான் வந்து அழைத்துள்ளார். பின்னர் இருவரும் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.

    அதன்பிறகு நீண்ட நேரமாகியும் கணேசன் வீடு திரும்பவில்லை. இந்த நிலையில் சுல்தான் வீட்டு முன்பு அவர் மயங்கி கிடப்பதாக உறவினர்களுக்கு தகவல் கிடைத்தது.

    அவர்கள் விரைந்து சென்று பார்த்தபோது கணேசன் பேச்சு மூச்சற்று கிடந்தார். அவரை உடனடியாக தேவகோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், கணேசன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். அவர் எப்படி இறந்தார்? என்பது மர்மமாக உள்ளது.

    இது குறித்து கணேசனின் மகள் காளியம்மாள் தேவகோட்டை நகர் போலீசில் புகார் செய்தார். அதில் தனது தந்தை சாவில் மர்மம் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ரமேஷ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். கணேசனின் நண்பர் சுல்தானிடமும் போலீசார் விசாரணை நடத்தினர்.
    காரைக்குடி அருகே அரசு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்ததாக 68 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    காரைக்குடி:

    காரைக்குடி அருகே உள்ள கழனிவாசல் கிராம நிர்வாக அதிகாரி அருள்ராஜ் (வயது27), இவர் குன்றக்குடி போலீசில் ஒரு புகார் செய்துள்ளார்.

    அதில். காரைக்குடி அருகே உள்ள ஓ.சிறுவயல் கிராமத்தில் உள்ள ராஜீவ் காந்தி நகரில் அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலங்களை (புல எண்கள் 253, 254, 258) 2 வருடமாக ஆக்கிரமிப்பு செய்த அதே பகுதியை சேர்ந்த தேவா, தினகரபாண்டியன், செல்வம் உள்பட 68 பேர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டு உள்ளார்.

    இந்த புகாரின்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவீந்திரன் விசாரணை நடத்தி 68 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்துள்ளார்.

    திருப்பத்தூர் அருகேயுள்ள மவுன்ட்சியோன் சில்வர் ஜூப்ளி மெட்ரிக் பள்ளியில் வட்டார அளவிலான சதுரங்க போட்டி நடைபெற்றது. இதில் 82 பள்ளிகள் கலந்து கொண்டன.

    திருப்பத்தூர்:

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகேயுள்ள மவுன்ட்சியோன் சில்வர் ஜூப்ளி மெட்ரிக் பள்ளியில் வட்டார அளவிலான சதுரங்க போட்டி நடைபெற்றது.

    பள்ளி தாளாளர் ஜெய்சன் ஜெயபாரதன் தலைமை வகித்து தொடங்கி வைத்தார். ஒருங்கிணைப்பாளர் லால் வரவேற்றார். போட்டி ஏற்பாடுகளை உடற்கல்வி ஆசிரியை வின்னரசி செய்திருந்தார்.

    இப்போட்டியில் திருப்பத்தூர் பகுதிகளைச் சேர்ந்த 82 பள்ளிகள் பங்கு கொண்டன. இதில் 19 வயதிற்கான ஆண்கள் பிரிவில் தினேஷ் திருக்கோஷ்டியூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவனும், பாரதி ஏரியூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவனும், பாண்டிச்செல்வம் திருப்பத்தூர் அரசு மேல் நிலைப்பள்ளி மாணவனும் முதல் 3 இடங்களைப் பிடித்தனர்.

    பெண்கள் பிரிவில் முதலிடத்தை செவ்வூர் ஏ.வி.எம். மேல்நிலைபள்ளி மாணவி பூங்கொடியும், 2 ஆம் இடத்தை திருப்பத்தூர் நாகப்பா மருதப்பா அரசு பெண்கள் பள்ளி மாணவி மணிமேகலையும், அதே பள்ளி மாணவி காவியா 3-ம் இடத்தையும் பிடித்தனர்.

    17 வயதிற்கான ஆண்கள் பிரிவில் ஏரியூர் அரசு பள்ளி மாணவன் பிரபாத்ரசன் முதலிடமும், திருப்பத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவன் ரியாத்அகமது 2-ம் இடத்தையும் பிடித்தனர்.

    பெண்களுக்கான பிரிவில் புதுப்பட்டி பள்ளி மாணவி இலக்கியா, பட்டமங்கலம் பள்ளி மாணவி கீர்த்திலட்சுமி, புதுப்பட்டி பள்ளி மாணவி வினிதா ஆகியோர் முறையே முதல் 3 இடத்தைப் பிடித்தனர்.

    14 வயதிற்குட்பட்ட ஆண்கள் பிரிவில் கவியரசன், பழனிச்சாமி, தனுஷ்ராஜ், ஆகியோர் முதல் 2 மற்றும் 3-ம் இடங்களையும் பிடித்தனர்.

    பெண்கள் பிரிவில் சேவினிப்பட்டி ராசுமீனா, திருப்பத்தூர் சிவகாமி, மவுன்ட்சியோன் பள்ளி மாணவி சஷ்மிதா ஆகியோர் முதல் 3 இடங்களையும் வென்றனர்.

    11 வயதிற்குட்பட்ட ஆண்கள் பிரிவில் இளையான்குடி பள்ளி மாணவன் முதலிடத்தையும், திருக்கோளக்குடி பள்ளி மாணவன் மனோஜ் 2-ம் இடத்தையும், மவுன்ட் சியோன் மெட்ரிக் பள்ளி மாணவன், வென்டிரா போஸ், பெண்கள் பிரிவில் புதூர் பள்ளி மாணவி ஆர்த்தி முதலிடத்தையும் வஞ்சினிப்பட்டி பள்ளி மாணவி நர்மதா 2 ஆம் இடத்தையும், நெடுமறம் பள்ளி மாணவி ரேவதர்சினி 3-ம் இடத்தையும் பிடித்தனர்.

    போட்டி நடுவர்களாக உடற்கல்வி ஆசிரியர்கள் முருகப்பராஜா, முருகேசன், வாசு, ஜோசப்நாதன், சிவக்குமார், இளஞ்சூரியன், செல்லப்பா ஆகியோர் செயல்பட்டனர்.

    சிவகங்கை மாவட்ட ரேசன் கடைகளில் ஸ்மார்ட் கார்டு திட்டம் குறித்து உயர் அதிகாரி ஆய்வுக்கூட்டம் கலெக்டர் மலர்விழி பங்கேற்பு

    சிவகங்கை:

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை ஆணையாளர் கோபாலகிருஷ்ணன் தலைமையிலும், மாவட்ட கலெக்டர் மலர்விழி முன்னிலையிலும் பொது விநியோக திட்டம் தொடர்பாக ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

    இந்த ஆய்வில் பொது விநியோகத் திட்டம் தொடர்பாக முழுக்கணினி மயமாக்கல் அனைத்து பொருட்கள் பற்றி ஆணையரால் விரிவாக விளக்கம் அளிக்கப்பட்டது. சிவகங்கை மாவட்டத்தில் அனைத்து நியாய விலைக் கடைகளிலும் விற்பனை எந்திரம் பொருத்தப்பட்டது தொடர்பான பணி முன்னேற்ற விவரம் பற்றி விவாதிக்கப்பட்டது. வரும் செப்டம்பர் முதல் ஆணையர் அலுவலகம் மூலம் அனைத்து கடை களுக்கும் ஒதுக்கீடு செய்யப்படுவது மற்றும் பொதுமக்களிடம் ஆதார் எண் சேகரிப்பது மற்றும் அலைபேசி எண் கட்டாயம் பெற வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

    ஜனவரி 2017-ம் ஆண்டு முதல் ஸ்மார்ட் கார்டு வழங்கப்பட உள்ளதால் ஆதார் எண் வழங்கிட வேண்டும் என்பதை பொது மக்களுக்கு வலியுறுத்தி அனைத்து அலுவலர்களுக்கும் அறிவுரை வழங்கப்பட்டது. ஸ்மார்ட் கார்டு திட்டம் பொதுமக்கள் வசதிக்காகவே ஏற்படுத்தப்படுகிறது. எனவே, இப் பணிக்கு பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என ஆய்வில் தெரிவிக்கப்பட்டது.

    இந்த ஆய்வுக் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் இளங்கோ, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர், தனி வட்டாட்சியர்கள் (கு.பொ), வட்ட வழங்கல் அலுவலர்கள், கூட்டுறவு சார் பதிவாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    திருக்கோஷ்டியூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியது. இதில் தொழிலாளி ஒருவர் பலியானார்.

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் அருகே திருக்கோஷ்டியூர் பக்கமுள்ள பிள்ளையார்பட்டியை சேர்ந்தவர் பெரியகருப்பன் (வயது40), கூலி தொழிலாளி. இவர் நேற்றிரவு தனது மோட்டார் சைக்கிளில் திருக்கோஷ்டியூரில் இருந்து ஊருக்கு திரும்பினார்.

    தானிபட்டி விலக்கு அருகே சென்று கொண்டிருந்தபோது திருப்பத்தூரில் இருந்து சிவகங்கை சென்ற லாரி, மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இதில் தூக்கி வீசப்பட்ட பெரியகருப்பன் அதே இடத்தில் பலியானார். மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்து இருந்த ராம கண்ணன் (30) என்பவர் படுகாயம் அடைந்தார். அவரை திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

    இவ்விபத்து குறித்து திருக்கோஷ்டியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    திருப்பத்தூர் அருகே அரசு வேலை வாங்கி தருவதாக கூறி போலி பணி நியமன ஆணை வழங்கி ரூ.85 லட்சம் மோசடி செய்த பணத்தில் பெண்களுடன் உல்லாசமாக இருந்ததாக கூறியுள்ளான்.
    திருப்பத்தூர்:

    பேரணாம்பட்டு தாலுகா வளத்தூர் பகுதியை சேர்ந்தவர் ராமமூர்த்தி மகன் பாலசந்தர் (வயது 41), கோவிந்தராஜ் மகன் வெங்கடேசன் (21), அருண் (20). இவர்கள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருப்பத்தூர் அருகே உள்ள சந்திரபுரம் கொட்டாவூரை சேர்ந்தவர் செல்வராஜ் மகன் ஜெயராஜ் (37) என்பவரை சந்தித்தனர். அப்போது தங்களுக்கு அரசுத்துறை அதிகாரிகளுடன் பழக்கம் இருப்பதாகவும், ரூ.2½ லட்சம் கொடுத்தால் அரசு வேலை வாங்கி தருவதாகவும் ஆசை வார்த்தை கூறினர்.

    அதனை நம்பி அவர்களிடம் ரூ.2½ லட்சத்தை ஜெயராஜ் கொடுத்தார். மேலும் சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்தவர்கள் 51 பேர் பாலசந்தர், வெங்கடேசன், அருண் ஆகியோரை நம்பி மொத்தம் ரூ.84 லட்சத்து 95 ஆயிரம் வழங்கியிருந்தனர்.

    பின்னர் பணம் கொடுத்தவர்களிடம் உங்களுக்கான பணி நியமன ஆணை அரசுத்துறைகள் மூலமாக பதிவு தபாலில் வரும் என தெரிவித்தனர். அதன்படி சில மாதங்கள் கழித்து பணம் கொடுத்தவர்கள் அனைவருக்கும் பதிவுத்தபால் ஒன்று வந்தது. அதில் அரசு பணி நியமனம் வழங்கப்பட்டதற்கான ஆணை பிறப்பிக்கப்பட்டிருந்தது. அதன்பிறகு அந்த பணி நியமன ஆணையை வைத்து விசாரித்தபோது, அவை போலியான பணி நியமன ஆணை என தெரியவந்தது.

    இது குறித்து பாதிக்கப்பட்டவர்கள் கந்திலி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

    அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பாலசந்தர், வெங்கடேசன், அருண் ஆகிய 3 பேரையும் கைது செய்து, அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதில் பாலசந்திரன் முக்கிய குற்றவாளியாக செயல்பட்டுள்ளார். இவர்களிடம் இருந்து பணம், ஆவணங்கள் எதுவும் சிக்கவில்லை. மோசடி செய்த பணத்தில் பெண்களுடன் உல்லாசமாக இருந்ததாக தெரிவித்துள்ளான். நேற்று மாலை கோர்ட்டில் ஆஜர்படுத்தி 3 பேரும் வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.
    ஓடும் பஸ்சில் மாணவியிடம் செல்போன் அபேஸ் செய்த என்ஜினீயரிங் பட்டதாரி வாலிபர் கைது செய்யப் பட்டார்.

    காரைக்குடி:

    காரைக்குடி அருகே உள்ள பள்ளத்தூரை சேர்ந்தவர் அழகர் (வயது63). இவரது பேத்தி நமீதா (20) என்ஜினீயரிங் கல்லூரி மாணவி.

    இவர் தனது தாத்தாவுடன் பஸ்சில் காரைக்குடிக்கு சென்றார். பஸ் நிலையத்தில் இறங்கிய நமீதா தனது கைப்பை திறந்து கிடப்பதை பார்த்தார். அதன் உள்ளே இருந்த விலை உயர்ந்த செல்போன் திருட்டு போய் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் பஸ்சில் தனது பின்னால் இருந்த வாலிபர் மீது சந்தேகம் அடைந்தார்.

    அந்த வாலிபரும் அங்கே நிற்க அவரை பிடித்து சக பயணிகள் சோதனை செய்தனர். அப்போது நமீதாவின் செல்போனை அவர் அபேஸ் செய்திருப்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அழகப்பாபுரம் போலீசில் அவர் ஒப் படைக்கப்பட்டார்.

    சப்-இன்ஸ்பெக்டர் சேகர் வழக்குப்பதிவு செய்து அந்த வாலிபரை கைது செய்தார். விசாரணையில் அவரது பெயர் தமிழ்வாணன் (31) என்பதும் பள்ளத்தூர் வடசேரியை சேர்ந்த என்ஜினீயரிங் பட்டதாரி என்பதும் தெரியவந்தது.

    ×