என் மலர்tooltip icon

    சிவகங்கை

    சிவகங்கை அருகே இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் வீடுகள் அடித்து நொறுக்கப்பட்டன. பாதுகாப்புக்காக அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    திருப்புவனம்:

    சிவகங்கை மாவட்டம் அரசனூரில் ஒரு தரப்பினர் சதுர்த்தியையொட்டி அப்பகுதியில் விநாயகர் சிலை வைத்து வழிபட முடிவு செய்தனர். இதற்கு மற்றொரு பிரிவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அரசனூர் பகுதியை சேர்ந்தவர்கள் போலீஸ் அனுமதியுடன் விநாயகர் சிலையை வைத்து திருவிழாவை நடத்தினார்கள்.

    நேற்று முன்தினம் விநாயகர் சிலையை ஆற்றில் கரைத்தனர். இதனால் இருதரப்பினருக்கும் பிரச்சினை ஏற்பட்டது.

    அரசனூரை சேர்ந்த கோமாளி என்பவரது மகன் பாலமுருகனுக்கு (25) நேற்று திருமணம் நடந்தது. இதற்காக வெளியூரில் இருந்து அவரது வீட்டுக்கு உறவினர்கள் வந்திருந்தனர்.

    இந்த நிலையில் இரவு 10 மணி அளவில் 30-க்கும் மேற்பட்ட நபர்கள் உருட்டுக்கட்டை உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் அரசனூருக்குள் புகுந்து தாக்குதல் நடத்தினார்கள். கோமாளி வீடு உள்ளிட்ட 40 வீடுகளை அடித்து நொறுக்கினர்.

    திருமணத்துக்கு வந்திருந்தவர்களின் கார்கள் ஆட்டோ மற்றும் மோட்டார் சைக்கிள்களை சேதப்படுத்திய அந்த கும்பல் பின்னர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது. இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டது.

    இது குறித்து பூவந்தி போலீசில் புகார் செய்யப் பட்டது. தகவல் அறிந்த சிவகங்கை மாவட்ட கலெக்டர் மலர்விழி, போலீஸ் சூப்பரண்டு மகேஸ்வரன், ஆர்.டி.ஓ. அரவிந்தன் ஆகியோர் அரசனூர் கிராமத்துக்கு விரைந்தனர். தாக்குதலுக்கு ஆளானவர்களிடம் கலெக் டர் விசாரணை நடத்தினார். இதை தொடர்ந்து அங்கு பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.

    காரைக்குடி அருகே மைனர் பெண்ணை கடத்தியதாக வாலிபர் மீது புகார் செய்யப் பட்டுள்ளது.

    காரைக்குடி:

    காரைக்குடி அருகே உள்ள சாக்கோட்டை திருகப்பட்டி பீர்களைக்காடு பகுதியை சேர்ந்த 16 வயது பெண் வீட்டிலிருந்தபோது திடீரென மாயமானார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் மகளை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். ஆனால் எங்கு தேடியும் அவர் கிடைக்க வில்லை.

    இது குறித்து அந்த பெண்ணின் தந்தை சாக்கோட்டை போலீசில் புகார் செய்தார். அதில் எனது மகளை பாண்டித்துரை என்ற வாலிபர் கடத்தி சென்றிருக்கிறார். அவரிடம் இருந்து மகளை மீட்டு தரும்படி கூறப்பட்டு இருந்தது.

    இதன்பேரில் சாக்கோட்டை இன்ஸ்பெக்டர் செல்வராஜ் வழக்குப்பதிவு செய்து மைனர் பெண்ணையும், அவரை கடத்தியதாக கூறப்படும் வாலிபரையும் தேடி வருகிறார்.

    நர்சு மற்றும் இளம்பெண் மாயமானதாக போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.
    சிவகங்கை:

    தேவகோட்டை நடராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் பாண்டி மீனாள் (வயது40). இவரது மகள் பிரதீபா (19). நர்சு பயிற்சி முடித்துள்ளார். கடந்த 1-ந்தேதி வேலைக்காக கோவை செல்வதாக கூறி வீட்டில் இருந்து பிரதீபா சென்றுள்ளார். ஆனால் அவர் கோவை சென்று சேரவில்லை. அதே நேரம் வீடும் திரும்பவில்லை.

    இதுகுறித்து தேவகோட்டை நகர் போலீசில் பாண்டி மீனாள் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் குமரன் வழக்குப்பதிவு செய்து மாயமான பிரதீபாவை தேடி வருகிறார்.

    திருப்பத்தூர் தாலுகா நாச்சியார்புரம் அருகே உள்ள இளங்குடியை சேர்ந்தவர் பவானி (42). இவரது மகள் புனிதவள்ளி (20). இவர் காரைக்குடியில் உள்ள ஒரு தனியார் மருத்துமனையில் ஊழியராக பணியாற்றி வந்தார்.

    சம்பவத்தன்று காலை வேலைக்கு சென்ற புனித வள்ளி, அதன்பிறகு வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் அவரை பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை.

    இதுகுறித்து நாச்சியார்ரம் போலீசில், பவானி புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் செங்குட்டுவன் வழக்குப்பதிவு செய்து மாயமான புனிதவளள்ளியை தேடி வருகிறார்.
    மானாமதுரையில் கூடுதல் வரதட்சணை கேட்பதாக பெண் அளித்த புகாரின் பேரில் 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
    சிவகங்கை:

    மானாமதுரை அருகே உள்ள மூங்கில்ஊரணியை சேர்ந்தவர் ஜான்சிராணி. இவருக்கும், திருப்புவனம் அருகே உள்ள மாரநாடு பகுதியைச் சேர்ந்த குமார் என்பவருக்கும் 2002-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.

    அதன் பிறகு கணவன்- மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் ஜான்சிராணி, தாய்வீடு வந்து விட்டார். அதன் பின்னர் அவரை கணவருடன் சேர்த்து வைக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால் அது தோல்வியில் முடிந்தது.

    இந்த நிலையில் மானாமதுரை அனைத்து மகளிர் போலீசில் ஜான்சிராணி ஒரு புகார் கொடுத்துள்ளார். அதில், சேர்ந்து வாழ வேண்டும் என்றால், கூடுதல் வரதட்சணை வேண்டும் என கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் தெரிவிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

    இதுகுறித்து சப்-இன்ஸ்பெக்டர் அமிர்தம் விசாரணை நடத்தி குமார், அவரது பெற்றோர் பிச்சை -ஜெயா, உறவினர்கள் உஷா, இளமாறன், மீனாள், இளையராஜா, சுபா ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளார்.
    கூடுதல் வரதட்சணை கேட்டு பெண்ணை சித்ரவதை செய்ததாக கணவர் உள்பட 3 பேர் மீது போலீசார் வழகுப்பதிவு செய்துள்ளனர்.
    சிவகங்கை:

    இளையான்குடி தாலுகா அதிகாரை பகுதியை சேர்ந்த செல்வி (வயது33) என்பவருக்கும், ராஜ புளியேந்தலை சேர்ந்த கண்ணதாசன் என்பவருக்கும் 2010-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. அப்போது 21 பவுன் நகையும், பணமும் வரதட்சணையாக கொடுக்கப்பட்டதாம்.

    இந்த நிலையில் கூடுதல் வரதட்சணை கேட்டு கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் சித்ரவதை செய்வதாக சிவகங்கை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் செல்வி புகார் செய்தார்.

    இது குறித்து சப்-இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி விசாரணை நடத்தி கண்ணதாசன் அவரது தாய் கருப்பாயி, உறவினர் ராதிகா ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளார்.
    சிங்கம்புணரியில் இன்று காலை நடைபயிற்சிக்கு சென்ற பெண்ணிடம் நகையை பறித்த கொள்ளையர்களை பொதுமக்கள் மடக்கி பிடித்தனர்.
    சிங்கம்புணரி:

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி மாதவன் நகரைச் சேர்ந்தவர் விஜயா (வயது23). இவர் தினமும் அதிகாலையில் நடைபயிற்சிக்கு செல்வது வழக்கம்.

    அதன்படி இன்று காலை தனது தந்தையுடன் விஜயா நடைபயிற்சி மேற்கொண்டிருந்தார். அப்போது கர்ச்சிப்பால் முகத்தை மூடிக்கொண்டு ஒரு மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் திடீரென விஜயா கழுத்தில் கிடந்த 3 பவுன் நகையை பறித்தனர்.

    தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் தப்பினர். அப்போது விஜயா திருடன்.. திருடன்... என கூச்சலிட்டார். அப்போது அங்கு நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்த இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் தங்களது மோட்டார் சைக்கிளில் கொள்ளையர்களை விரட்டினர்.

    சிங்கம்புணரி-மதுரை சாலையில் சென்றபோது கொள்ளையர்களை மடக்கி பிடித்து சிங்கம்புணரி போலீசில் ஒப்படைத்தனர்.

    போலீசார் அவர்களிடம் நடத்திய விசாரணையில் மதுரை திருநகரைச் சேர்ந்த சுப்பையா மகன் சுரேஷ் (19), திருப்பரங்குன்றத்தைச் சேர்ந்த மாசாணம் மகன் கார்த்திக் என தெரியவந்தது. இவர்கள் இருவரும் பல்வேறு இடங்களில் நகை பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் 2 பேரையும் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    தேவகோட்டை அருகே போலீஸ் அதிகாரியின் மனைவியை அரிவாளால் வெட்டி நகை கொள்ளையடிக்கப்பட்டது.
    தேவகோட்டை:

    தேவகோட்டை அருகே போலீஸ் அதிகாரியின் மனைவியை அரிவாளால் வெட்டி நகை கொள்ளையடிக்கப்பட்டது.

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள முள்ளிக்குண்டு கிராமத்தை சேர்ந்தவர் அகஸ்டின். இவர் சத்தீஸ்கர் மாநிலத்தில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் அதிகாரியாக பணியாற்றி வருகிறார்.

    இவருடைய மனைவி எலிசபெத் ராணி. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். எலிசபெத் ராணி தனது மகள்களுடன் முள்ளிக்குண்டுவில் வசித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அகஸ்டின் விடுமுறையில் ஊருக்கு வந்திருந்தார்.

    இந்த நிலையில் நேற்று எலிசபெத் ராணி மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். அகஸ்டின் வேலை வி‌ஷயமாக வெளியில் சென்றிருந்தார். அப்போது அவரது வீட்டினுள் நுழைந்த 2 மர்ம ஆசாமிகள் எலிசபெத் ராணியை தாக்கினர்.

    பின்னர் அரிவாளால் வெட்டிவிட்டு அவர் அணிந்திருந்த 3 பவுன் நகையை பறித்து கொண்டு தப்பியோடிவிட்டனர். பின்னர் வீடு திரும்பிய அகஸ்டின், மனைவி ரத்தக் காயங்களுடன் கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

    உடனடியாக அவரை மீட்டு தேவகோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்ந்தார். பின்னர் மேல் சிகிச்சைக்காக அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். இது குறித்து அவர் அளித்த புகாரின்பேரில் ஆராவயல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    காரைக்குடியில் புரோட்டா சவால் போட்டி நடத்தப்பட 10 பேர் பங்கேற்றனர். ஆனால் யாரும் வெற்றி இலக்கான 30 புரோட்டாவை சாப்பிட முடியவில்லை.
    காரைக்குடி:

    தமிழ் சினிமாவில் இன்று நகைச்சுவை நடிகர்களில் முன்னணியில் இருப்பவர் புரோட்டா சூரி. இவர் தனது தொடக்க கால படமான வெண்ணிலா கபடி குழுவில் புரோட்டா சாப்பிடும் போட்டியில் 50 புரோட்டா சாப்பிடுபவராக நடித்தார்.

    இதன் மூலம் அவர் மட்டுமின்றி புரோட்டா சவாலும் பிரபலமானது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் காரைக்குடியில் புரோட்டா சவால் போட்டி நடத்தப்பட்டது. அங்குள்ள பர்மா பஜார் விநாயகர் சதுர்த்திக்குழு சார்பாக 2-வது பீட்டில் உள்ள பிரசிடெண்ட் கார்னர் ஓட்டலில் இந்த போட்டி நடைபெற்றது.

    30 புரோட்டா சாப்பிட்டால் ரூ.5001 பரிசு என அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து 10 பேர் இதில் பங்கேற்றனர். ஆர்வத்துடன் சாப்பிட தொடங்கிய அவர்கள் 5 புரோட்டாவை தாண்டியதும் திணறத் தொடங்கினர்.

    இதனால் ஒவ்வொருவராக போட்டியில் இருந்து கழன்று கொண்டனர். கடைசியாக முத்துக்குமார் என்ற வாலிபர் அதிக பட்சமாக 10 புரோட்டாவுடன் போட்டியை முடிவுக்கு கொண்டு வந்தார்.

    அவர் கூறுகையில், பல இடங்களில் புரோட்டா சாப்பிடும் போட்டியில் பங்கேற்று உள்ளேன். மதுரையில் நடைபெற்ற போட்டியில் 35 புரோட்டா வரை சாப்பிட்டுள்ளேன். ஆனால் இங்கு 10-க்கும் மேல் சாப்பிட முடியவில்லை. இதற்கு காரணம் புரோட்டாவின் அளவு பெரிது என நினைக்கிறேன் என்றார். எது எப்படியோ வெண்ணிலா கபடி குழுவில் புரோட்டாவில் அளவை பெரிதாக்கியபோதும் சூரி 50 புரோட்டா சாப்பிட்டு முடிப்பதுபோல் காமெடி அமைந்திருக்கும். ஆனால் காரைக்குடி போட்டியில் புரோட்டா சாப்பிட முடியாதது காமெடியாக அமைந்தது.

    போட்டி ஏற்பாடுகளை பர்மா பஜார் விநாயகர் சதுர்த்திக்குழு தலைவர் அக்னிபாலா செய்திருந்தார்.
    பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தி நாளான இன்று லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

    திருப்பத்தூர்:

    குடவரை கோவில்களில் முக்கிய ஸ்தலமாக விளங்கும் சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலில் சதுர்த்தி பெருவிழா ஆண்டு தோறும் விமரிசையாக கொண்டாடப்படுவது வழக் கம்.

    இந்த ஆண்டு கடந்த 27 -ந் தேதி கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. காலை மூஷிக வாகனத்தில் வெள்ளி கேடகத்தில் சாமி திருவீதி உலாவும், இரவு பல்வேறு வாகனங்களில் சுவாமி திருவீதி உலாவும் தினமும் நடைபெற்று வந்தன.

    நேற்று 9-ம் நாள் திருவிழாவில் தேரோட்டம் நடைபெற்றது. இதை யொட்டி சுவாமி காலையில் திருத்தேர் எழுந்தருளல் நடைபெற்றது. மாலை 4.30 மணிக்கு பிச்சைக்குருக்கள் தலைமையில் சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க, தீபாராதனை நடைபெற்றது.

    பின்னர் திருத்தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டது. தேரின் முன்பு கைலாசநாதம் முழங்கப்பட்டது. 2 தேர்கள் உள்ள இத்திருத்தலத்தில் உற்சவர் ஒரு தேரிலும், சண்டிகேஸ்வரர் ஒரு தேரிலும் எழுந்தருளினர்.

    சண்டிகேஸ்வரர் தேரினை பெண்கள் மட்டுமே இழுத்தனர். மூலவர் கற்பக விநாயகர் வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே சார்த்தப்படும் சந்தன காப்பு அலங்காரத்தில் மாலை 4.30 மணி முதல் இரவு 10 மணி வரை பக்தர்களுக்கு தரிசனம் அளித்தார். இதனால் கோவிலில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

    தொடர்ந்து இரவு 8.30 மணிக்கு யானை வாகனத்தில் சுவாமி திருவீதி உலா நடைபெற்றது. திருவீதி உலாவின் போது துரை.பாரதிதாசன், தங்க மணி, குழுவினரின் நாதஸ்வர இன்னிசையும் நடைபெற்றது.

    இன்று (திங்கள்கிழமை) விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு அதிகாலை 4 மணிக்கே கோவில் நடை திறக்கப்பட் டது. அப்போது முதல் பக்தர்கள் திரண்டு வந்து நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

    இன்றைய சிறப்பு நிகழ்ச்சியான தீர்த்தவாரி விழா காலை நடைபெற்றது. கோவில் எதிரே உள்ள திருக்குளத்தில் நடைபெற்ற இந்த தீர்த்தவாரி உற்சவத்தில் பிள்ளையார்பட்டி பிச்சை குருக்கள் தலைமை யில் பல்வேறு அபிஷேகங்கள் சுவாமிக்கு செய்யப்பட்டன. இதனை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

    இன்று மதியம் 12 மணியளவில் மூலவரான கற்பக விநாயகருக்கு உச்சிக் கால பூஜை நடைபெற்றது. அப்போது விநாயகருக்கு ராட்சத கொழுக்கட்டை படைக்கப்பட்டு சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றன. இரவு 11 மணி அளவில் பஞ்சமூர்த்தி சுவாமிகள் வீதி உலா நடைபெறுகிறது.

    இன்று முழுவதும் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. சுமார் 2 லட்சம் பேர் பிள்ளையார்பட்டி கற்பக விநாயகரை தரிசனம் செய்தனர். பக்தர்கள் கூட்டத்தை முன்னிட்டு பிள்ளையார்பட்டியில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. கோவிலுக்குள் அவர்கள் பாதுகாப்பாக செல்ல கம்புகள் மூலம் பாதை அமைக்கப்பட்டு இருந்தது. மேலும் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது.

    திருவிழாவிற்கு வந்த பக்தர்கள் வசதிக்காக பிள்ளையார்பட்டி பகுதிகளில் கூடுதல் கழிப்பறைகள், குளியல் அறை வசதிகள் போன்றவையும் ஏற்படுத்தப்பட்டு இருந்தன. இதேபோல் மதுரை, காரைக்குடி, புதுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சிறப்பு பஸ்களும் இயக்கப்பட்டன.

    விழா ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர்கள் பூலாங்குறிச்சி ராமநாதன் செட்டியார், காரைக்குடி தண்ணீர்மலை செட்டியார் ஆகியோர் செய்திருந்தனர்.

    மானாமதுரையில் இளம்பெண் மாயமானதாக போலீசில் தாய் புகார் செய்துள்ளார்.

    சிவகங்கை:

    மானாமதுரை தாலுகா அரிமண்டபம் பகுதியை சேர்ந்தவர் சேதுராமன். இவரது மகள் விஜய பிரியா (வயது21). பிளஸ்-2 முடித்துவிட்டு வீட்டில் இருந்து வந்தார்.

    கடந்த 1-ந்தேதி தோழி களை பார்த்து வருவதாக வீட்டில் இருந்து விஜயபிரியா வெளியே சென்றுள்ளார். அதன்பிறகு மாலையில் அவர் வீடு திரும்பவில்லை.

    அவரை பல இடங்களில் தேடியும் எந்தவித தகவலும் கிடைக்கவில்லை. இது குறித்து மானாமதுரை போலீ சில் விஜயபிரியாவின் தாய் முத்துச்செல்வி புகார் செய்தார்.

    இன்ஸ்பெக்டர் பரக்கத் துல்லா வழக்குப்பதிவு செய்து மாயமான விஜய பிரியாவை தேடி வருகிறார்.

    கூடுதல் வரதட்சணை கேட்டு பெண்ணை சித்ரவதை செய்ததாக கணவர் மற்றும் மாமியார் மீது போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.
    சிவகங்கை:

    காரைக்குடி தியாகராஜன் செட்டியார் தெருவை சேர்ந்தவர் லாவண்யா (வயது34). இவருக்கும் திருக்கோஷ்டியூர் அருகே உள்ள பி.கருங்குளத்தை சேர்ந்த நாச்சியப்பன் (44) என்பவருக்கும் கடந்த 2002-ம் ஆண்டு அக்டோபர் மாதம் திருமணம் நடைபெற்றது.

    இவர்களுக்கு தற்போது 2 குழந்தைகள் உள்ளனர். காரைக்குடியில் செக்யூரிட்டி தலைமை காவலராக நாச்சியப்பன் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் கணவர் மற்றும் மாமியார் கூடுதல் வரதட்சணை கேட்டு சித்ரவதை செய்வதாக காரைக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் லாவண்யா புகார் செய்துள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:-

    திருமணத்தின்போது 71 பவுன் நகை, ரூ.2¼ லட்சம் போன்றவை வரதட்சணையாக வழங்கப்பட்டது. ஆனால் தற்போது தொழில் தொடங்க வேண்டி, கூடுதலாக ரூ.40 லட்சம் கேட்டு கணவர் நாச்சியப்பன் துன்புறுத்துகிறார். அவரது செயலுக்கு மாமியார் சகுந்தலாவும் உடந்தையாக உள்ளார். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இது குறித்து காரைக்குடி அனைத்து மகளிர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சீதாலட்சுமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் மாணவியை தாக்கியதாக ஆசிரியை மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
    சிவகங்கை:

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை கண்ணார் தெருவை சேர்ந்தவர் சக்கரபாணி. இவரது மகள் மஞ்சுஸ்ரீ (வயது6). இவள் அங்குள்ள தனியார் நர்சரி பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    இவர் வகுப்பில் பாடம் சரியாக படிக்கவில்லை எனக்கூறி ஆசிரியை மோகனப்பிரியா கம்பால் அடித்தாராம். இதனை பெற்றோரிடம் மஞ்சுஸ்ரீ கூறியுள்ளார்.

    அவர்கள் பள்ளி நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றதன்பேரில் ஆசிரியையை நிர்வாகம் கண்டித்துள்ளது. அதன் பிறகு பள்ளிக்கு சென்ற மஞ்சுஸ்ரீயை வகுப்பறையின் வெளியே ஆசிரியை மோகனப்பிரியா நிற்க வைத்தாராம்.

    இது குறித்து தெரிய வந்ததும் மஞ்சுஸ்ரீயின் தாய் ஆர்த்தி, மானாமதுரை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    ×