search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிவகங்கை அருகே கோஷ்டி மோதலில் 40 வீடுகள் சூறை: கார்கள் உடைப்பு
    X

    சிவகங்கை அருகே கோஷ்டி மோதலில் 40 வீடுகள் சூறை: கார்கள் உடைப்பு

    சிவகங்கை அருகே இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் வீடுகள் அடித்து நொறுக்கப்பட்டன. பாதுகாப்புக்காக அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    திருப்புவனம்:

    சிவகங்கை மாவட்டம் அரசனூரில் ஒரு தரப்பினர் சதுர்த்தியையொட்டி அப்பகுதியில் விநாயகர் சிலை வைத்து வழிபட முடிவு செய்தனர். இதற்கு மற்றொரு பிரிவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அரசனூர் பகுதியை சேர்ந்தவர்கள் போலீஸ் அனுமதியுடன் விநாயகர் சிலையை வைத்து திருவிழாவை நடத்தினார்கள்.

    நேற்று முன்தினம் விநாயகர் சிலையை ஆற்றில் கரைத்தனர். இதனால் இருதரப்பினருக்கும் பிரச்சினை ஏற்பட்டது.

    அரசனூரை சேர்ந்த கோமாளி என்பவரது மகன் பாலமுருகனுக்கு (25) நேற்று திருமணம் நடந்தது. இதற்காக வெளியூரில் இருந்து அவரது வீட்டுக்கு உறவினர்கள் வந்திருந்தனர்.

    இந்த நிலையில் இரவு 10 மணி அளவில் 30-க்கும் மேற்பட்ட நபர்கள் உருட்டுக்கட்டை உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் அரசனூருக்குள் புகுந்து தாக்குதல் நடத்தினார்கள். கோமாளி வீடு உள்ளிட்ட 40 வீடுகளை அடித்து நொறுக்கினர்.

    திருமணத்துக்கு வந்திருந்தவர்களின் கார்கள் ஆட்டோ மற்றும் மோட்டார் சைக்கிள்களை சேதப்படுத்திய அந்த கும்பல் பின்னர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது. இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டது.

    இது குறித்து பூவந்தி போலீசில் புகார் செய்யப் பட்டது. தகவல் அறிந்த சிவகங்கை மாவட்ட கலெக்டர் மலர்விழி, போலீஸ் சூப்பரண்டு மகேஸ்வரன், ஆர்.டி.ஓ. அரவிந்தன் ஆகியோர் அரசனூர் கிராமத்துக்கு விரைந்தனர். தாக்குதலுக்கு ஆளானவர்களிடம் கலெக் டர் விசாரணை நடத்தினார். இதை தொடர்ந்து அங்கு பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.

    Next Story
    ×