search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காரைக்குடியில் வெண்ணிலா கபடி குழு படம் காட்சி போல் புரோட்டா சவால் போட்டி
    X

    காரைக்குடியில் வெண்ணிலா கபடி குழு படம் காட்சி போல் புரோட்டா சவால் போட்டி

    காரைக்குடியில் புரோட்டா சவால் போட்டி நடத்தப்பட 10 பேர் பங்கேற்றனர். ஆனால் யாரும் வெற்றி இலக்கான 30 புரோட்டாவை சாப்பிட முடியவில்லை.
    காரைக்குடி:

    தமிழ் சினிமாவில் இன்று நகைச்சுவை நடிகர்களில் முன்னணியில் இருப்பவர் புரோட்டா சூரி. இவர் தனது தொடக்க கால படமான வெண்ணிலா கபடி குழுவில் புரோட்டா சாப்பிடும் போட்டியில் 50 புரோட்டா சாப்பிடுபவராக நடித்தார்.

    இதன் மூலம் அவர் மட்டுமின்றி புரோட்டா சவாலும் பிரபலமானது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் காரைக்குடியில் புரோட்டா சவால் போட்டி நடத்தப்பட்டது. அங்குள்ள பர்மா பஜார் விநாயகர் சதுர்த்திக்குழு சார்பாக 2-வது பீட்டில் உள்ள பிரசிடெண்ட் கார்னர் ஓட்டலில் இந்த போட்டி நடைபெற்றது.

    30 புரோட்டா சாப்பிட்டால் ரூ.5001 பரிசு என அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து 10 பேர் இதில் பங்கேற்றனர். ஆர்வத்துடன் சாப்பிட தொடங்கிய அவர்கள் 5 புரோட்டாவை தாண்டியதும் திணறத் தொடங்கினர்.

    இதனால் ஒவ்வொருவராக போட்டியில் இருந்து கழன்று கொண்டனர். கடைசியாக முத்துக்குமார் என்ற வாலிபர் அதிக பட்சமாக 10 புரோட்டாவுடன் போட்டியை முடிவுக்கு கொண்டு வந்தார்.

    அவர் கூறுகையில், பல இடங்களில் புரோட்டா சாப்பிடும் போட்டியில் பங்கேற்று உள்ளேன். மதுரையில் நடைபெற்ற போட்டியில் 35 புரோட்டா வரை சாப்பிட்டுள்ளேன். ஆனால் இங்கு 10-க்கும் மேல் சாப்பிட முடியவில்லை. இதற்கு காரணம் புரோட்டாவின் அளவு பெரிது என நினைக்கிறேன் என்றார். எது எப்படியோ வெண்ணிலா கபடி குழுவில் புரோட்டாவில் அளவை பெரிதாக்கியபோதும் சூரி 50 புரோட்டா சாப்பிட்டு முடிப்பதுபோல் காமெடி அமைந்திருக்கும். ஆனால் காரைக்குடி போட்டியில் புரோட்டா சாப்பிட முடியாதது காமெடியாக அமைந்தது.

    போட்டி ஏற்பாடுகளை பர்மா பஜார் விநாயகர் சதுர்த்திக்குழு தலைவர் அக்னிபாலா செய்திருந்தார்.
    Next Story
    ×